வெள்ளி, 1 பிப்ரவரி, 2019

பொ. ஆ 1752 இல் ஆலம்கான் மதுரை கள்ளர்களுடன் சேர்ந்து மதுரை மற்றும் திருநெல்வேலியை வென்றான்


சந்தா சாஹேப் சதாராவிலிருந்து ராஸ்த் மொகிதீன் கான், நிஜாமின் பேரன் முஸாஃபர் ஜங், ஆகியோரோடு சேர்ந்து கொண்டு 25000 வீரர்கள் கொண்ட ஒரு படையை நிறுவினான். இந்தப் படைக்குத் தேவையான பீரங்கிகள், துப்பாக்கிகள் இவற்றோடு படையை நடத்திக் கொண்டு தெற்கு நோக்கிப் புறப்பட்டான்.

வழியில் புதுச்சேரியில் இருந்த பிரெஞ்சுக் காரர்களுக்கு தூது அனுப்பி அவர்களுடைய உதவிகளையும் பெற்றுக் கொண்டு ஆற்காடு வந்தான். ஆற்காட்டு மற்றும் திருச்சி  ஆட்சியில் இருந்த அன்வதீர்கானை போருக்கு அழைத்து அவனோடு போரிட்டு அவனைத் தோற்கடித்தான் சந்தா சாஹேப். இந்த சண்டை ஆம்பூர் எனும் இடத்தில் நடந்தது. ஆற்காடு சந்தா சாஹேப் வசம் போயிற்று.

இப்படி அன்வதீர்கானுக்கும் சந்தா சாஹேபுக்கும் ஆம்பூரில் சண்டை நடந்து கொண்டிருந்த போது ஆற்காட்டில் இருந்த அன்வதீர்கானின் மகன் முகமது அலி அங்கிருந்து தப்பி ஒருவரும் அறியாமல் நாகப்பட்டினம் வந்தடைந்தான். அங்கு வந்து சந்தா சாஹேபுக்குத் தெரியாமல் தஞ்சை மன்னருக்கு ஒரு தூதுவனை கடிதம் கொடுத்து அனுப்பி வைத்தான்.

தஞ்சைக்கு வந்த முகமது அலியை மரியாதையுடன் வரவேற்று மகாராஜா தன்னுடைய தோட்டத்திலேயே அவனுக்குத் தங்க இடம் கொடுத்து அவனுக்கு வேண்டிய உபசரணைகளைச் செய்தார். (அந்த தோட்டம் இப்போதைய தஞ்சாவூர் கீழ ராஜ வீதியில் அரசினர் ஆசிரியர் பயிற்சி பள்ளி இருக்குமிடம்).

ஓடிவந்த ஆற்காட்டு முகம்மது அலி மூன்று மாத காலம் தஞ்சையில் ராஜாவின் ஆதரவில் தங்கினான். இங்கிருந்தபடியே முகம்மது அலி ஸ்ரீரங்கப்பட்டணத்தில் இருந்த தளவாய் தேவராஜனுக்கும், தென்பகுதி பாளையக்காரர்கள் அனைவருக்கும் கடிதம் எழுதினான். இவர்கள் தவிர காளஹஸ்தி, வேங்கடகிரி பொம்மராஜா முதலானவர்களுக்கும் கடிதம் எழுதினான். இப்படி சில ஏற்பாடுகளைச் செய்துவிட்டு, பிரதாபசிம்ம ராஜாவிடம் சொல்லிவிட்டுத் திருச்சினாப்பள்ளிக்குப் போய்ச் சேர்ந்தான்.


சந்தா சாஹேப் புதுச்சேரி சென்று அங்கு பிரெஞ்சுக்காரர்களிடம் ஒரு ஒப்பந்தம் செய்து கொண்டான். ஆற்காட்டிலிருந்து ஓடிப்போய் திருச்சினாப்பள்ளியில் பதுங்கியிருக்கும் முகமது அலியைப் பிடித்துத் துரத்த வேண்டும் அதற்கு அவர்களிடம் உதவி கேட்டுப் பெற்றுக் கொண்டான். பிறகு அங்கிருந்து புறப்பட்டுப் பெரும் படையுடன் திருச்சினாப்பள்ளியை நோக்கி வந்தான்.

வரும் வழியில் தஞ்சாவூர் ராஜா பிரதாபசிம்மருக்கு ஒரு தூது விட்டான். தான் ஒரு பெரும் படையுடன் திருச்சிக்குப் போவதாகவும், தனது படைகளின் வழிச்செலவுக்குக் கணிசமான பண உதவி செய்ய வேண்டும் என்று மன்னரிடம் கேட்டு அனுப்பினான். அவனைத் தட்டிக் கழிக்கும் விதமாக திருச்சி முகமது அலி நம்முடைய உதவி நாடி வந்திருப்பவர், அவருக்கு எதிரியான உங்களுக்கு உதவுவது முறையல்ல என்று சொல்லி அனுப்பினார்.

இந்த பதில் சந்தா சாஹேபுக்குக் கோபத்தை உண்டு பண்ணியது. தனது படைகளைத் திருச்சிக்குப் போகாமல் தஞ்சையின் பக்கம் திருப்பினான். அவனும் ராசத் மோதிகானும் படைகளைக் கொண்டு வந்து தஞ்சாவூர் கோட்டையை முற்றுகை இட்டார்கள்.

பிரதாபசிம்ம ராஜா தனது படைகளோடு கோட்டைக்கு வெளியே வந்து சந்தா சாஹேப் படைகளுடன் இரண்டு மூன்று முறை சண்டை செய்தார். சந்தர்ப்பம் கிடைத்த போதெல்லாம் சந்தா சாஹேபின் படைகள் தஞ்சாவூர் கோட்டைக்குள் புகுந்து கொள்ளை அடித்தார்கள். மகாராஜா பிரதாபசிம்மரும் அவ்வப்போது அவன் கூட்டத்தை அடித்து விரட்டிவிட்டு கோட்டையை சீரமைத்து, அவர்கள் ஊருக்குள் புகமுடியாதபடி பாதுகாப்புக்களை பலப்படுத்தினார்கள். இப்படி வெற்றியும் இல்லாமல் தோல்வியும் இல்லாமல் இவனுடன் போராட வேண்டியிருப்பது குறித்து மன்னர் வருத்தமடைந்தார்.

இப்படி இந்த யுத்தம் இரண்டரை மாத காலம் நடைபெற்றது. இதனால் கோட்டைக்குள் இருந்த மக்கள் மிகவும் சிரமத்துக்கு ஆளாயினர். அந்த சமயம் ஐதராபாத்திலிருந்து நிஜாமின் இரண்டாவது மகனான நாசிர் ஜங் பெரும் படையொன்றுடன் ஆற்காட்டுக்கு வந்தான். அங்கு நிஜாமின் படைகளை எதிர்த்துப் போரிட்ட ஆற்காடு படையின் சர்தார் சேஷராயர் என்பவர் கொல்லப்பட்டார். இந்த செய்தி தஞ்சையில் முற்றுகையில் ஈடுபட்டிருந்த சந்தா சாஹேபுக்குத் தெரிய வந்தது. அவன் உடனே தஞ்சை முற்றுகையை நீக்கிக் கொண்டான்.

நாம் போய் திருச்சியைப் பிடித்துக் கொள்ளலாம் எனும் நோக்கத்தில் கிளம்பிப் போனது. போகும் வழியில் அவர்கள் படை ஸ்ரீரங்கத்தில் முகாமிட்டது.

அப்போது தஞ்சாவூரில் மராத்திய ராஜாவின் படையில் ஜமேதார் (சுபேதாருக்கு அடுத்தது) ஆலம்கான் எனும் பட்டாணிய முஸ்லீம் (ஆப்கானிய முஸ்லீம்) 100 குதிரைப் படைக்குத் தலைவனாக இருந்தான். இவன் மதுரையிலிருந்து வந்து இங்கு வேலைக்குச் சேர்ந்தவன். இவனுக்கு ஏதோ காரணமாக ராஜா பிரதாபசிம்மரிடம் மனஸ்தாபம் ஏற்பட்டது. உடனே அவன் ராஜாவிடம் சென்று தனக்குச் சேர வேண்டிய சம்பள பாக்கியை வாங்கிக் கொண்டு வேலையைவிட்டுப் போகிறேன் என்று சொல்லிவிட்டு, நேரே போய் சந்தா சாஹேபின் படையில் சந்தா சாஹேபின் படைத்தலைவனா  சேர்ந்து கொண்டான்.

சேர்ந்து சிறுது பட்டாளங்களை சேர்த்துக் கொண்டு அந்த ஆலம்கானுட மச்சினன் மதிரை சீமையிலே துறும்பூர் சாகிர்' காறன் அவனையும் நாட்டிலே கள்ளரையும் சேர்த்துக் கொண்டு மதுரைமேலே போயிறங்கி மதுரைக் கோட்டையிலேயிருக்கும் அன்வதீர்கானின் மகன்  மபூஸ்கானுடனே' சண்டைபோட்டு அவனை திருச்சிராப்பள்ளி க்கு துரத்திவிட்டு மதுரை திருநல்வேலி பகுதிகளை வெற்றிகொண்டு கொஞ்சநாளைக்குள்ளே மூவாயிரம் நாலாயிரஞ் சேனைகளை சேகரம் பண்ணிக்கொண்டு அந்த சேனை களுடனே கூட சந்தாசாயபுக்கு கும்மக்காக வந்தான்." 

அன்வதீர்கானின் மற்றொரு  மகன் முகமது அழியும் திருச்சிக்கு வந்திருந்தான். அந்த நேரத்தில் சந்தா சாஹேப் திருச்சி மீது படையெடுக்கும் செய்தி அறிந்து அவன் தஞ்சை பிரதாப சிம்மரிடம் உதவி கேட்டு தூது அனுப்பினான். தஞ்சை ராஜா 15000 வீரர்களையும், 1000 குதிரை வீரர்களையும், பெரிய பீரங்கிகள், நிறைய உணவுப் பொருட்கள் அனைத்தையும் மானோஜி ராவ் தலைமையில் அனுப்பி வைத்தார். புதுக்கோட்டை விஜயரகுநாத தொண்டைமானும் படைகளும் உணவுப் பொருட்களும் அனுப்பி வைத்தார். ராமநாதபுரம் சேதுபதி ராஜாவான உடையத் தேவரும் தனது படைகளை உதவிக்கு அனுப்பி வைத்தார். மைசூர் ஸ்ரீரங்கப்பட்டணம் தளவாய் நந்தராஜ் எனும் சர்தாருடன் பெரும் படை உதவிக்கு வந்தது. ஏற்கனவே திருச்சியை ஆண்ட முரார்ஜி கோர்படேயும் முகமது அலிக்குத் துணையாக நின்றான். இப்படி பல ராஜ்யத்துப் படைகளோடு சந்தா சாஹேபை எதிர்க்க முகமது அலி தயாராக ஆனார்.

ஒரு புறம் முகமது அலியின் ஆதரவுப் படைகள்; மறுபுறம் சந்தா சாஹேபும் அவனது ஆதரவுக்கு பிரெஞ்சுப் படைகளும் போருக்கு ஆயத்தமாக நின்றன. முகமது அலிக்கு ஆதரவாக தஞ்சையின் மானோஜி ராவ் ஒரு வீரம் செறிந்த போரைச் செய்தார். பீரங்கிகளின் முழக்கம் வெகு தூரம் கேட்டுக் கொண்டிருந்தது. யுத்தம் மிகக் கடுமையாக நடைபெற்றது. ஏராளமான யானைகள், குதிரைகள், வீரர்கள் செத்து விழுந்தனர். யுத்த களத்தில் கழுகுகள் பிணங்களைக் கொத்தித் தின்றன.

அப்போது ஆங்கிலக் கிழக்கிந்தியக் கம்பெனியாரின் படையொன்று வந்து சேர்ந்தது. சந்தா சாஹேப் மீது ஆத்திரமடைந்த அந்த ஆங்கில மேஜர் உடனே ஓடிப்போய் ஒரு பீரங்கியை இயக்கி நாலைந்து முறை சந்தா சாஹேப் படையை நோக்கிச் சுட்டார். அப்போது கூடாரமொன்றில் இருந்த சந்தா சாஹேபின் படைத்தலைவன் ஆலம்கானின் தலை சுக்குநூறாக உடைந்து போயிற்று.

அந்த சமயம் பார்த்து தஞ்சை மராத்திய படைகள் ஆலம்கானின் படைகளின் மீது விழுந்து தாக்கினார்கள். ஆலம்கான் படை சின்னாபின்னமடைந்தது. உயிர் இழந்தவர் போக எஞ்சியிருந்தவர்கள் சிறை பிடிக்கப்பட்டனர். இப்பையாக ஆற்காட்டு நவாப் முகமது அலியின் வெற்றி தஞ்சாவூர் மராத்திய படையினரால் சாதிக்கப்பட்டது.

வரலாற்று பக்கங்கள் - I

          கள்ளர்   மரபினர் Kallar History வரலாற்றை   அறிய   கீழே    உள்ள   தலைப்பின்   மீது   சொடுக்கவும்  (click here)  👇👇👇👇 ✍ ️ வளரி  ...

இந்த வலைப்பதிவில் தேடு

என்னைப் பற்றி

எனது படம்
Contact: info.kallarkulavaralaru@gmail.com, தமிழகத்தில் வாழும் கள்ளர் மரபினர் முக்குலத்தோரில் ஒரு பிரிவினர் ஆவர். கள்ளர், மறவர், அகமுடையார் ஆகிய முக்குலங்களும் போர்த் தொழிலை அடிப்படையாக கொண்டு வாழ்ந்து வந்ததால் இந்த மூன்று சாதியினரும் முக்குலத்தோர் என்று அறியப்படுகின்றனர். இந்த மூன்று குலத்தினரும் "தேவர்" என்ற பொதுவான பெயரோடு அறியப்படுகிறார்கள். கள்ளர் மரபில் அறந்தாங்கி தொண்டைமான், புதுக்கோட்டை பல்லவராயர், புதுக்கோட்டை தொண்டைமான் மற்றும் பல சமீன்தார்களும், பெரு நிலவுரிமையாளர்களும் இருக்கின்றனர். (கள்ளர் படைப்பற்று - கள்ளர் நாடு - கள்ளர்த்தடி). கள்ளர் வரலாறு : வரலாறு என்றால் வந்த வழி என்று பொருள். வந்த வழி தெரியாதவர்களுக்குப் போகும் வழி புரியாது. வரலாற்றை நாம் நினைவு கூர்வதற்குக் காரணம் கடந்து போன ஈகங்களை எண்ணிக் கண்ணீர் விடுவதற்காகவும், நிகழ்த்தி விட்ட வீரங்களைச் சொல்லிப் பெருமை பேசுவதற்காகவும் அல்ல. வருங்காலத்திற்கு வழி சமைப்பதற்கு அந்த ஈகமும் வீரமும் வழிகாட்ட வேண்டும் என்பதற்காகத்தான். கள்ளர்களின் நான்கு முக்கிய பிரிவுகள் - ஈசநாட்டுக்கள்ளர் (திருச்சி, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை) : கிளைவழிக்கள்ளர் (சிவகங்கை) : அம்பல கள்ளர் / நாட்டார் கள்ளர் (சிவகங்கை, மதுரை) : பிறமலை கள்ளர் (மதுரை, உசிலமபட்டி, தேனி, கம்பம், திண்டுக்கல்)

வலைப்பதிவு காப்பகம்

பின்பற்றுபவர்கள்