புதன், 9 ஜனவரி, 2019

நேமம் ஐராவதீஸ்வரர் கோவில்


தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே நேமம் கிராமத்தில் ஐராவதீஸ்வரர் கோவில் உள்ளது. இங்கு அலங்காரவல்லி அம்மன் தனி சன்னதியில் அருள்பாலித்து வருகிறார். 

இக்கோவிலில் கள்ளர்களே முதல் மரியாதை பெறுகின்றனர். அறங்காவலர் பொறுப்பும் கள்ளர்களுக்கே. பின்வரும் பட்டங்களில் உள்ள கள்ளர்கள் மரியாதை பெறுகிறார்கள்

1) களத்தில்வென்றார்
2) நாட்டார்
3) சேதிராயர்
4) சோழகர்


பூம்புகாரிலிருந்து மதுரை நோக்கி கவுந்தியடிகளுடன் சென்ற கோவலனும் கண்ணகியும் காவிரியின் வடகரை வழியே பயணம் செய்து திருவரங்கத்தை ஒட்டியுள்ள சோலையொன்றில் (திருவானைக்கா) தங்கியிருந்து காவிரி நதியைக் கடந்து தென்கரையை (தற்போதை மலைக்கோட்டைப் பகுதியை) அடைந்தனராம். தென்கரையில் அவர்கள் அடைந்த இடத்தைக் குறிப்பிடும் இளங்கோ அடிகள் ‘‘தீதுதீர் நியமத்து தென்கரைனாகி’’- என்று குறிப்பிட்டுள்ளார். நியமம் என்று குறிக்கப் பெறுகின்ற இடம் எந்த தீமையும் இல்லாத புனிதமான இடம் என்பதைக் குறிப்பதாகும்.



அதே காவிரியின் தென்கரையில் கல்லணைக்குக் கிழக்காக நியமம் என்றதோர் புனிதமான திருவூர் அமைந்துள்ளது. பல்லவர், முத்தரையர், சோழர், பாண்டியர் என நான்கு மரபு மன்னர்களும் போற்றி வழிபட்ட காளாபிடாரியும், ஆயிரம் சிவலிங்கங்களும், ஐராவதீஸ்வரரும், உஞ்சேனை மாகாளத்து ஈசனாரும் கோயில் கொண்டு அருள்பாலித்தமையால்தான் அவ்வூர் தீதுதீர் நியமமாகவே திகழ்ந்தது என்பதை கல்வெட்டுகள் எடுத்துரைக்கின்றன

தஞ்சாவூர் மாவட்டத்துத் திருக்காட்டுப்பள்ளியிலிருந்து கல்லணை செல்லும் சாலையில் திருக்காட்டுப்பள்ளியிலிருந்து 3 கல் தொலைவில் நியமம் திகழ்கின்றது. பண்டைய நியமம் என்னும் கோநகரம் தற்போது நியமம், இளங்காடு, உஞ்ஜினி என்ற மூன்று சிற்றூர்களாகப் பிரிந்து பழமைச் சுவடுகளைத் தாங்கி நிற்கின்றன. அந்த பண்டைய நகரத்தில் திகழ்ந்த கோயில்களில் இன்று முழுமையாக எஞ்சி நிற்பவை நியமத்து ஐராவதீஸ்வரர் கோயிலும், இளங்காட்டு சிவாலயமுமேயாகும். ஐராவதீஸ்வரர் திருக்கோயில் காவிரிக்கரையிலேயே அமைந்துள்ளது.

பரிவாரங்களாக கணபதி, வள்ளி தேவசேனா சகிதரான முருகர், சண்டீசர், பைரவர், சூரியன் ஆகிய திருமேனிகள் பழமைச் சுவடுகளோடு காட்சி நல்குகின்றன. கோஷ்ட தெய்வங்களான திருமால், பிரமன் ஆகியவை பண்டைய திருமேனிகளாகும். பல்லவர்கால இடபம் தற்போது தொட்டி போன்ற பள்ளத்தில் காணப்பெறுகின்றது. இத்தலத்திற்கு உரிய தலபுராணம் இவ்வூரினைப் பாரிஜாதவனம் எனக் குறிக்கின்றது. பிரமன், விருத்திராசுரன், அரம்பை, இந்திரன், அவன் யானை ஐராவதம் எனப்பெறும் வெள்ளையானையாலும் வழிப்பட்ட தலம் எனவும் அப்புராணம் கூறுகின்றது. அந்த யானை பற்றி அப்புராணம் பின்வருமாறு விவரிக்கின்றது.

நாரதர் தனக்கு இட்ட சாபத்தைப் போக்கிக் கொள்ளத் தேவலோகத்து அரம்பை மானுட வடிவெடுத்து இவ்விடத்தில் தவம் செய்து கொண்டு இருந்தாள். இந்திரன் அவளை அழைத்து வரத் தன் வாகனமான ஐராவதம் என்ற வெள்ளை யானையை அனுப்பினான். பாரிஜாத வனத்துப் பெருமானைப் பூசித்து வந்த அரம்பையை அழைத்துச் செல்ல ஐராவதத்தால் இயலவில்லை. பின் ஐராவதம் அவளை வலியக் கவர்ந்து செல்ல முயன்றும் தோல்வியுற்றதை அறிந்த இந்திரன் நேராகப் பாரிஜாத வனத்திற்கு வந்து பெருமானை வணங்கி அவன் அருளால் ஐராவதத்தையும் மன்னிக்கச் செய்து அரம்பையை மீட்டுச் சென்றான். 

ஐராவதத்தை மன்னித்த இப்பெருமானுடைய பெயர் ஐராவதீஸ்வரர் என்று ஆயிற்று என்பதே அத்தலபுராணம் கூறும் தலவரலாறாகும். ஐராவதீஸ்வரர் ஆலயத்திலிருந்து அரசு கல்வெட்டுத் துறையினர் இரண்டு கல்வெட்டுகளைப் படி எடுத்துள்ளனர். முதல் ஆதித்தசோழனின் 24 ம் ஆண்டினைக் குறிப்பிடும் முதல் கல்வெட்டில் மூன்றாம் நந்திவர்மபல்லவனின் தேவியான கண்டன் மாறன்பாவை என்பாள் 5 கழஞ்சு மாற்றுக்குறையா பொன்னை இக்கோயிலுக்கென முதலீடு செய்து அதில் கிடைக்கும் வட்டித்தொகையிலிருந்து இரண்டு விஷு புண்ணிய
காலங்களிலும், இறைவனுக்குச் செய்யப் பெற வேண்டிய ஆராதனங்களுக்கு வேண்டிய நெய், பால், தயிர், ஆகியவை களுக்கும், பரிவார தெய்வங்களுக்குரிய அபிஷேக - ஆராதனங்களுக்கும், அந்த நாட்களில் கோயிலில் 20 பேருக்கு உணவிடவும் பயன்படுத்திக் கொள்ள அத்தேவி உத்தரவிட்டுள்ளாள் என்பதை, இச்சாசனம் விவரிக்கின்றது.

ஈசுவர காரணி வாசுதேவன் பட்டுடையான் என்பான் அதனை நிறைவேற்றும் பொறுப்பை ஏற்றுக் கொண்டான் என்ற செய்தியும் அக்கல்வெட்டில் பொறிக்கப் பெற்றுள்ளது. இது போன்றே முதல் பராந்தகசோழனின் 18ம் ஆட்சியாண்டில் ஈசனார் முன்பு திருவிளக்கு எரிக்க அளிக்கப்பெற்ற நன்கொடை பற்றி மற்றொரு சாசனம் எடுத்துக் கூறுகின்றது. இந்த ஐராவதீஸ்வரர் கோயிலுக்கு தென்மேற்காக அமைந்த திடலில் தான் பல்லவர்காலத்து ஆயிரத்தளி என்ற சிவாலயம் இருந்துள்ளது. பல்லவப்பேரரசனின் குறுநில அரசனாக விளங்கிய பெரும்பிடுகு - முத்தரையன் காலத்தில் தான் இவ்வாலயம் தோற்றுவிக்கப் பெற்றிருக்க வேண்டும் என்பது வரலாற்று ஆய்வுகளால் உறுதி செய்யப் பெற்ற தகவலாகும்.

நியமத்து ஆயிரத்தளியில் பணிபுரிந்த நாட்டிய நங்கையர்களைப் பற்றி குறிப்பிடும் தஞ்சாவூர் பெரிய கோயிலில் உள்ள ராஜராஜசோழனின் கல்வெட்டில் நியமத்திலிருந்த பிற கோயில்களிலிருந்து தஞ்சைக்கு அழைத்து வரப்பெற்ற நாட்டியப் பெண் களின் பெயர்களும், அவர்கள் பணிபுரிந்த கோயில்களின் பெயர்களும் குறிக்கப் பெற்றுள்ளன. அதில் அரிகுலகேசரி ஈஸ்வரம், நிருபகேசரி ஈஸ்வரம், சந்திரமல்லி ஈஸ்வரம் என்ற மூன்று நியமத்து சிவாலயங்களைப் பற்றி அறிய முடிகிறது. இதில் குறிக்கப்பெற்றுள்ள அரிகுலகேசரி ஈஸ்வரம் தான் பின்னாளில் ஐராவதீஸ்வரம் எனப் பெயர்மாற்றம் பெற்றிருக்க வேண்டும் எனக் கொள்ளலாம்.

ஆயிரந்தளியும், பிற சிவாலயங்களும் பின்னாளில் தரைமட்டமாக அழிந்தவை போன்றே புகழ்பெற்ற ‘‘நியமத்து மாகாளம்’’ எனப்பெறும் தேவி கோயிலொன்றும் அழிந்துபட்டது. அக்கோயிலின் எச்சங்களாக விளங்கிய நான்கு கல்வெட்டுத்தூண்களை பிற்காலத்தில் செந்தலை சுந்தரேஸ்வரர் கோயில் திருப்பணிக்காக எடுத்துச் சென்று அங்கு மண்டபமொன்றில் வைத்து கட்டிடம் எழுப்பியுள்ளனர். நான்கு புலவர்கள் பெரும்பிடுகு முத்தரையனைப் புகழ்ந்து பாடிய பாடல்கள் அத்தூண்களில் காணப்பெறுகின்றன. கோயில் அழிந்தும் தமிழ் அழியாமல் நிலை பெற்றது ஆறுதலான தகவலாகும்.

அந்த நியமத்து காளாபிடாரிக்கு பெரும்பிடுகு முத்தரையன், மூன்றாம் நந்திவர்மபல்லவன், பாண்டியன் மாறஞ்சடையன், முதல் ஆதித்த சோழன் ஆகிய நான்கு மரபு மன்னர்கள் காலத்தில் அளிக்கப்பெற்ற கொடைகள் பற்றிய செய்திகளும் அந்த தூண்களிலேயே காணப்பெறுகின்றன. குறிப்பிடத்தக்க சிறப்பாக மூன்றாம் நந்திவர்ம பல்லவனின் தேவி கண்டன் - மாறன் பாவை ஐராவதீஸ்வரர் கோயிலுக்கு மாற்று குறையாமல் அளித்த 5 கழஞ்சு பொன் போன்றே நியமத்து காளாபிடாரிக்கு (தேவிக்கு) முன் நந்தாவிளக்கு எரிப்பதற்காக 12 கழஞ்சு பொன்னை முதலீடு செய்தான் என்பது நோக்கத்தக்கதாகும்.

நியமத்தோடு இணைந்து திகழும் சிற்றூரான உஞ்சினி என்ற சிற்றூரின் பழம்பெயர் உஞ்சேனை மாகாளம் என்பதாகும். பல்லவ பேரரசன் ஐயடிகள் காடவர்கோன் இந்த உஞ்சேனை மாகாளம் பற்றி ஒரு பாடல் பாடியுள்ளார். அது பன்னிரு திருமுறைகளில் ஒன்றான பதினொன்றாம் திருமுறையில் திருக்ஷேத்திர வெண்பாவில் இடம் பெற்றுள்ளது. பல்லவர், முத்தரையர் வரலாற்றில் நியமம் தனி இடம் பெற்று திகழ்கின்றது. 

பல்லவர் சோழர் கலையின் சங்கமமாகவே இக்கோயில் திகழ்கின்றது. சிறிய ராஜகோபுரம், சிறிய திருச்சுற்று, அதில் பரிவாராலயங்கள் சூழ, மூலவர் திருக்கோயில் இருதளக்கற்றளியாக விளங்குகின்றது. அர்த்த மண்டபத்திற்கு முன்புள்ள மகாமண்டபத்தில் தெற்கு நோக்கியவண்ணம் இரண்டு அம்மன் கருவறைகள் தனித்தனியே இணைந்து காணப்பெறுகின்றன. மூலவர் சிறிய லிங்கத் திருமேனியாக ஐராவதீஸ்வரர் என்ற பெயரில் அருள்பாலிக்கின்றார். 

இந்த கோவிலில் ஐராவதீஸ்வரர் சன்னதிக்கு எதிரே உள்ள நந்தியின் சிலை பள்ளத்தில் உள்ளது. இந்த பள்ளத்தில் நந்தி மூழ்கும் அளவுக்கு தண்ணீர் நிரப்பி வழிபாடு செய்தால் மழை பொழிந்து, வறட்சி நீங்கும் என்பது ஐதீகம்.



நியமத்து ஐராவதீஸ்வரரை வணங்கி பேரருள் பெற்றுய்வோம்.

நன்றி :  முனைவர் குடவாயில் பாலசுப்ரமணியன்

ஆய்வு : திரு. பரத் கூழாக்கியார்



வரலாற்று பக்கங்கள் - I

          கள்ளர்   மரபினர் Kallar History வரலாற்றை   அறிய   கீழே    உள்ள   தலைப்பின்   மீது   சொடுக்கவும்  (click here)  👇👇👇👇 ✍ ️ வளரி  ...

இந்த வலைப்பதிவில் தேடு

என்னைப் பற்றி

எனது படம்
Contact: info.kallarkulavaralaru@gmail.com, தமிழகத்தில் வாழும் கள்ளர் மரபினர் முக்குலத்தோரில் ஒரு பிரிவினர் ஆவர். கள்ளர், மறவர், அகமுடையார் ஆகிய முக்குலங்களும் போர்த் தொழிலை அடிப்படையாக கொண்டு வாழ்ந்து வந்ததால் இந்த மூன்று சாதியினரும் முக்குலத்தோர் என்று அறியப்படுகின்றனர். இந்த மூன்று குலத்தினரும் "தேவர்" என்ற பொதுவான பெயரோடு அறியப்படுகிறார்கள். கள்ளர் மரபில் அறந்தாங்கி தொண்டைமான், புதுக்கோட்டை பல்லவராயர், புதுக்கோட்டை தொண்டைமான் மற்றும் பல சமீன்தார்களும், பெரு நிலவுரிமையாளர்களும் இருக்கின்றனர். (கள்ளர் படைப்பற்று - கள்ளர் நாடு - கள்ளர்த்தடி). கள்ளர் வரலாறு : வரலாறு என்றால் வந்த வழி என்று பொருள். வந்த வழி தெரியாதவர்களுக்குப் போகும் வழி புரியாது. வரலாற்றை நாம் நினைவு கூர்வதற்குக் காரணம் கடந்து போன ஈகங்களை எண்ணிக் கண்ணீர் விடுவதற்காகவும், நிகழ்த்தி விட்ட வீரங்களைச் சொல்லிப் பெருமை பேசுவதற்காகவும் அல்ல. வருங்காலத்திற்கு வழி சமைப்பதற்கு அந்த ஈகமும் வீரமும் வழிகாட்ட வேண்டும் என்பதற்காகத்தான். கள்ளர்களின் நான்கு முக்கிய பிரிவுகள் - ஈசநாட்டுக்கள்ளர் (திருச்சி, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை) : கிளைவழிக்கள்ளர் (சிவகங்கை) : அம்பல கள்ளர் / நாட்டார் கள்ளர் (சிவகங்கை, மதுரை) : பிறமலை கள்ளர் (மதுரை, உசிலமபட்டி, தேனி, கம்பம், திண்டுக்கல்)

வலைப்பதிவு காப்பகம்

பின்பற்றுபவர்கள்