சனி, 12 ஜனவரி, 2019

சோழ பாண்டிய மன்னர்களின் "ஆனையூர்" கள்ளர் நாடு



மதுரை மாவட்டம், உசிலம்பட்டி வட்டம் கட்டக்கருப்பன்பட்டி வருவாய் கிராமத்தின் பிடாகையாக ஆனையூர் அமைந்துள்ளது. காட்டு யானையாகப் பிறந்த இந்திரனின் ஐராவதம், கடம்பவனமாகிய திருக்குறுமுல்லூர் வந்து, ஸ்ரீஅக்னீஸ்வர முடையாரை வழிபட்டு சாப விமோசனம் பெற்றது. இப்படி, வெள்ளை யானையாகிய ஐராவதம் வழிபட்டதால் இங்குள்ள ஈசன், ஸ்ரீஐராவதீஸ்வரர் என்று திருநாமம் கொண்டார், தலமும் 'ஆனையூர்' ஆனது.


ஆனையூர் மூன்று புறங்களிலும் கண்மாய்களால் சூழப்பட்ட அமைப்பினைக் கொண்டதாகும். இவ்வூரின் மேற்கில் ஆனையூர் கண்மாய், வடக்கில் கட்டக்கருப்பன்பட்டி கண்மாய் மற்றும் தெற்கில் பொட்டலுப்பட்டி கண்மாயும் அமைந்துள்ளன. இதே போன்று, மேற்கில் தொம்பரைமலை, வடக்கில் நாகமலைத்தொடர், தெற்கில் புத்தூர்மலை என இயற்கை அரணாக இம்மலைகள் அமைந்துள்ளன.



இப்பகுதியில், திடியன் மலையில் பழங்கற்கால மக்கள் வாழ்ந்ததற்கான கற்கருவிகளும், புத்தூர்மலை மற்றும் ஆனையூர் போன்ற இடங்களில் இரும்புக்கால மக்கள் வாழ்ந்தமைக்கான முக்கியத் தடயமான கருப்பு சிவப்பு நிற பானைகளும், முதுமக்கள் தாழிகளும் கண்டிபிடிக்கப்பட்டுள்ளமை இவ்வூரின் தொன்மை வரலாற்றுச் சிறப்புகளைக் காட்டுவதாகும். சோதி மாணிக்கம் என்ற கிராமத்தில் ஆதிமனிதனின் மரபணுவை (எம் 130) கொண்டிருக்கும் விருமாண்டி தேவர் இப்பொழுது வாழ்கின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


சோழர்களின் ஆட்சிக் காலத்தில் பாண்டி நாட்டில் ஆனையூர் ஒரு முக்கியப் படைத்தளமாக விளங்கியமை குறிப்பிடத்தக்கதாகும். கல்வெட்டுகளில் சோழன் தலைகொண்ட வீரபாண்டியனின் 10-வது ஆட்சியாண்டில் வெளியிடப்பட்ட கல்வெட்டே மிகவும் பழமையானதாகும். இக்கல்வெட்டு கோயில் கருவறை நுழைவாயிலின் நிலையில் காணப்படுகின்றது.








ஆனையூர் ஐராவதேசுவரர் கோயில் பல உறுப்பினர்களைக் கொண்ட ஒரு சபையினால் நிர்வகிக்கப்பட்டு வந்தது. பாண்டி நாட்டில் சோழர்களின் உச்சநிலை ஆட்சிக் காலத்தின் போது கோயில் நிர்வாகத்தில் படைத்தலைவர்கள் ஒரு முக்கிய இடத்தைப் பெற்றிருந்தனர்.


முதலாம் இராஜராஜனின் 26-வது ஆட்சியாண்டுக் கல்வெட்டு ஒன்றில் ஆனையூர் கோயிலுக்கு ஆடுகள் தானமாக வழங்கப்பட்டது. அந்த ஆடுகளை இவ்வூரில் இருந்த வேலன் சேந்தன் மற்றும் அறையன் பல்லவன் ஆகிய படைத் தலைவர்களால் பெற்றுக் கொள்ளப்பட்டதுடன், கோயிலின் ஒரு விளக்கினை எரிக்க 1 உழக்கு நெய் வழங்கவும் ஒப்புக்கொண்டுள்ளனர்.


பாண்டிய மன்னனின் கி.பி 956 ஆம் ஆண்டுக் கல்வெட்டு, இவ்வூரைத் திருக்குறுமுள்ளூர் எனக் குறிப்பிடுகிறது (ARE:336/1961-62). இம்மன்னன் இவ்வூரிலுள்ள கடவுளர் திருவக்வீசுவரரின் உதவியால் மீண்டு பாண்டிய அரியணையைப் பெற்றதாகக் கல்வெட்டுக் குறிப்பிடுவதிலிருந்து. அக்காலத்தில் இவ்வூரின் மதிப்பும் புகழும் கோயிலின் சிறப்பால் பாண்டிய அரசில் புனிதத்துடன் நன்கு மிளிர்ந்திருந்ததைக் காட்டுகிறது.


சோழர் ஆட்சி பாண்டிய நாட்டில் நிலவிய போதும் திருக்குறுமுள்ளூர் என்ற பெயரே தொடர்ந்து வழங்கி வந்துள்ளது என்பதை இவ்வூரில் கிடைக்கப்பெற்ற முதலாம் இராஜராஜன் மற்றும் முதலாம் இராஜேந்திரன் கல்வெட்டுகளின் வாயிலாக அறிய முடிகிறது. அப்போது இவ்வூர் இராஜராஜ பாண்டிய நாட்டின் முக்கிய வருவாய்ப் பிரிவுகளுள் ஒன்றான மதுராந்தகவளநாட்டிலிருந்த தென்கல்லக நாட்டுப் பிரிவில் அமைந்திருந்தது.










திருக்குறுமுள்ளூர் என்ற பெயர் கி.பி 13 ஆம் நூற்றாண்டு வரை பயன்பாட்டிலிருந்து பின்னர் ஆனையூர் என பெயர் மாற்றம் பெற்றிருப்பதை அறியமுடிகிறது. இப்பெயரே தற்பொழுதும் வருவாய் ஆவணங்களில் காணப்படுகிறது. விஜயநகர் ஆட்சிக் காலத்தில் வெளியிடப்பட்டதாகக் கருதக்கூடிய கல்வெட்டு ஒன்று முதன்முதலில் இவ்வூரின் பெயரை ஆனையூர் எனக் குறிப்பிடுகிறது. ஆனையூர் பிற்காலங்களில் கோட்டையூர் என்றும் அழைக்கப்பட்டதாக அறியப்படுகிறது.


பாண்டியர் மற்றும் சோழர் காலத்தில் இவ்வூரில் நிலைப்படை (Standing Army) இருந்ததைச் சான்றுகளின் மூலம் அறியமுடிகிறது. இவ்வூரில் முகமதியர்களின் தாக்கம் இருந்ததற்கான எச்சங்களும் காணப்படுகின்றன. விஜயநகர் கல்வெட்டு ஒன்று இவ்வூரை ‘தென்னாட்டு ராயர் மடமான ஆனையூர்’ எனக் குறிப்பிடுகிறது. பாண்டிய மன்னர்களின்கீழ் சிற்றரசாக விளங்கிய வாணாதிராயர்களின் அரசு சார்ந்த செயல்பாடுகளும் இங்கு காணப்படுவது குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு, அரசு மரபுகளின் காலங்களில் தொடர்ச்சியாக முக்கிய இடத்தைப் பெற்றிருந்த ஆனையூர் ஆங்கிலேயர் ஆதிக்கத்தின் கீழும் முக்கிய இடத்தைப் பெற்றிருந்ததை அக்காலத்தைச் சேர்ந்த ஆவணங்களில் இப்பகுதியின் பெரும்பான்மை சமூகத்தினரைக் குறிப்பிடும் இடங்களில் “ஆனையூர் கள்ளர்கள்” என அழைப்பதிலிருந்து இவ்வூருக்கு இருந்த தலைமைப் பண்பு நன்கு வெளிப்படுவதைக் காணலாம்.

'தென்கல்லக நாடு' என்ற குறிப்புடன் வாடிப்பட்டி, விக்கிரமங்கலம், ஆனையூர், மேலத்திருமாணிக்கம், திடியன் பகுதிகளில் கல்வெட்டுக்கள் கிடைக்கின்றன. முக்கியமாக ஆனையூர் கோயிலில் சோழன் தலைகொண்ட வீரபாண்டியன், ராஜராஜசோழன், ராஜேந்திரசோழன் ஆகியோர்கள் காலத்திய வட்டெழுத்து கல்வெட்டுகளில் 'தென்கல்லகநாடு' குறிப்பிடப்படுகிறது.









தென் கல்லகநாடு என்ற பெயர் ஒரு கல்வெட்டில் தென்கல்ல நாடு எனக் குறிப்பிடப்படுகிறது.


இது கள்ளர் பெரும் பான்மையாக உள்ள தற்போதைய நிலப்பகுதியையே குறித்துநிற்கின்றது. ஆணையூரில் காணப்படும் கல்வெட்டு ஒன்றில் தன் மாமனைக் கொன்ற தோஷத்திலே போகக் கடவதாக எனக்குறிப்பிடுவது பிற கல்வெட்டுகளிலிருந்து சற்று மாறு பட்டதாகக் காணப்படுவதோடு மாமானுக்கு முக்கியத்துவம் இருந்ததையும் இதன்வழி அறிய முடிகிறது. குறிப்பா கள்ளர் சமூகத்தில் தாய்மாமனுக்குக் கொடுக்கப்படும் மரியாதை என்பது இச்சமூக மரபில் காணப்படும் சிறப்பான கூறாக இன்றுவரை கடைபிடிக்கப்பட்டு வருவதை நாம் காணலாம்

கல்லகநாட்டின் நிலப்பரப்பே இன்றும் பிறமலை நாட்டுக் கள்ளர்களின் எட்டு நாடு 24 உப கிராமமாக உள்ளது.

இந்த ஐராவர் கோவிலை ராசராச சோழன், இவர்மகன் ராசேந்திர சோழன், இவர்களுக்குப் பிறகு சோழ மன்னர்கள் வாரிசுகளான பாதுகாத்து தங்கி வணங்கி வந்த முதல் கோவில் தென் தமிழ்நாட்டில் இந்த ஆனையூர் தான். இவர்கள் இங்கு கோட்டை கட்டி வாழ்ந்து வந்ததால் கோட்டையூர் என்றும் சொல்வதும் உண்டு. இந்த ஆணையூர் தான் மதுரையின் முதல் தாலுகா 1754ம் ஆண்டு வரை. (ஆர்.கே. கண்ணனின் ஆய்வு நூலில் இருந்து)

கிபி1311ல் பாண்டியர்களை வீழ்த்த டெல்லி சுல்தானாகிய அலவுதீன் கில்ஜியின் தளபதி மாலிக்கபூர் மதுரைக்கு பெரும்படையுடன் வருகிறார். அப்படி மாலிக்கபூர் மதுரைக்குள் நுழையும் முன் எல்லையில் கள்ளர் குடியின் தளபதிகளான வீரத்தேவர், கழுவத்தேவர் இருவரும் மாலிக்கபூர் படையுடன் சண்டையிட்டு உயிர் தியாகம் செய்துள்ளனர்.

அப்படி உயிர் தியாகம் செய்த இருவருக்கும், போரில் பட்டு இறந்ததால் பட்டவன் என்கிற பெயரில் அந்த வட்டாரத்தை சேர்ந்த அனைத்து சமூக மக்களும் நடுகல் எடுத்து கடவுளாக வணங்கி வருகின்றனர்.

அந்த நடுகல்லில் வீரத்தேவர், கழுவத்தேவருக்கு வலது கையில் வாளும்,இடது கையில் வளரியும் வைத்துள்ளனர். இன்றும் மதுரை கீழக்குயில்குடி சென்றால் அங்குள்ள மலையடி அய்யனார்,கருப்பு கோவிலில் இவர்களுடைய நடுகல்லை பார்க்கலாம்.

இதில் இன்னொரு கவனிக்ககூடிய விடையம் என்னவென்றால் கோவிலில் பாண்டிய மன்னனின் பழமையான சிலையை அந்த ஊரில் உள்ள கள்ளர் பெருமக்கள் பாண்டியராஜன் சாமி என்று பூஜை செய்து வணங்கி வருகின்றனர்.

கிபி1650 வாக்களில் திருமலை நாயக்கர் பாண்டியமன்னர்கள் முற்றிலும் அழிந்த காலத்தில் மதுரையை தனது முழுகட்டுப்பாட்டில் கொண்டு வர நினைக்கும் போது. மதுரை எல்லை அரணில் வாழ்ந்த கள்ளர்கள் நாயக்கருக்கு எதிராக கலகம் செய்தனர். அப்போது திருமலை நாயக்கரால் அவர்களை கட்டுப்படுத்தமுடியாத போது திருச்சி நாயக்கரிடம் உதவி கேட்டு வீரையன் சேர்வை மூலமாக ஒழிக்க நினைக்கிறார்.


இதனை பற்றி மதுரை வீரன் அம்பானை விளக்கும் போது வீரையன் சேர்வையை ஆனையூர் பத்து நாட்டு தனிக்காட்டு தன்னரசு கள்ளர் படைகள் வளரியும், வேலையும் வைத்து சண்டையிட்டனர் என்று குறிக்கப்பட்டுள்ளது.

மதுரை வீரன் அம்பானையில் “ஆனையூர் கள்ளர்கள்” என்றே குறிப்பிட்டுள்ளனர். கிபி1881வரை ஆனையூர் கள்ளர்கள் என்றே குறிப்பிட்டுள்ளனர்.

தென்னிந்திய புரட்சியின் தமிழ் நாட்டின் தலைமை இடமாக திகழ்ந்தது ஆனையூர் (கருமாத்தூர்) கள்ளர் நாடு என்பதை பிரிட்ஸார் மிகவும் ஆணித்தனமாக குறித்துள்ளனர். சிவகங்கை கள்ளர் நாட்டு தலைவர்கள், நெல்லை நாயக்க, மறவர் தலைவர்கள், இராமநாத மறவர் தலைவர்கள், திண்டுக்கல் நாயக்க தலைவர்கள் அனைவரும் ஆங்கிலேயருக்கெதிராக திட்டம் தீட்டி,செயல்பட்ட இடம் தான் ஆனையூர் (கருமாத்தூர்) கள்ளர் நாடு.

கிபி1750வாக்களில் மதுரையை தங்களுக்கு கீழ் கொண்டுவர எண்ணிய போது அந்த மண்ணின் பூர்வீக போர் பழங்குடியினரான கள்ளர்கள் அதற்கு பெரும் தடையாக இருந்தனர். மதுரையை கைப்பற்ற வேண்டும்மென்றால், கள்ளர்களை கருவருத்தால் மட்டுமே முடியும் என நினைத்த பிரிட்டீஸ் ஏகாதிபத்தியம் மதுரை மண்டலத்தில் உள்ள வெள்ளலூர் நாடு, மேலூர் நாடு, ஆனையூர் நாட்டில் உள்ள கள்ளர்களில் பெரும் பகுதி மக்களை கருவறுத்த பின்பே அவர்களால் மதுரையில் ஆட்சி செலுத்த முடிந்தது.

1750களில் நடந்த வரலாற்று சம்பவங்களை பல புத்தங்களாக எழுதியுள்ள பிரிட்டீஸ் இந்தியாவின் முன்னால் கல்வித்துறை மற்றும் அரசு ஆவணக்காப்பாளுருமான S.C.Hill யூசப்கானை பற்று தனது புத்தகமான YUSUF KHAN (THE REBEL COMMADANT) என்கிற புத்தகத்தில் மதுரையை பற்றி விளக்கும் போது அங்கே வாழும் கள்ளர் பழங்குடியினரை பற்றி விளக்கியுள்ளார்.
அதாவது கள்ளர் இனம் என்பது மதுரையில் பூர்வீக போர் பழங்குடியினர் என்றும் மதுரை சுற்றியுள்ள குறிஞ்சி (மலை), முல்லை (காடு) நிலப்பரப்பை வைத்திருக்கும் நிலவுடைமையாளர்கள் என்றும் குறிக்கிறார். காடு, மலைகளில் தனக்கென்று ஒரு ரகசிய பாதையை வைத்து பிரிட்டீஸாரை பயமுறுத்தியும் உள்ளனர்.

மேலும் கள்ளர்களின் ஆயுதமான வளரியை திறம்பட பயன்படுத்துதல், எப்போதும் தங்களது இருப்பிடத்தை சுற்றி கோட்டையை கட்டமைத்தல், வழித்தடங்களில் கோட்டை போன்ற தடையை ஏற்படுத்துதல் என குறிக்கிறார்.

இந்த தென்னிந்திய புரட்சியை மேற்கோள் காட்டும் ஆங்கில வரலாற்று ஆய்வாளர்கள் “கள்ளர் பழங்குடிகளை ஆங்கிலேயரின் பரம்பரை எதிரிகள் என்றும் கள்ளர்களின் சுயாட்சி கொள்கையாலும்,வீரியத்துடன் மார்பை காட்டி எதிர்த்து நிற்கும் குணத்தாலும், இடைவிடாத தாக்குதல் பண்பாலும் கள்ளர் பழங்குடிகளை கண்முடித்தனமாக ஆங்கிலேய தளபதிகள் கொலை செய்துள்ளனர் என குறிக்கின்றனர்.


 கிபி1795ஆம் ஆண்டு நிலக்கோட்டையை ஆங்கிலேயர்கள் கைப்பற்றி, அதன் பாளையக்காரராக இருந்த கூளப்ப நாயக்கரை விரட்டுகின்றனர். இதனால் கூளப்ப நாயக்கர் பிரிட்டீஸ் படையை எதிர் தாக்குதல் நடத்த திட்டமிடுகிறார். அதற்காக ஆனையூர் நாட்டு கள்ளர்களிடம் உதவியை பெருகிறார்.



அதன்பின்பு சுமார் 6000 முதல் 8000 ஆனையூர் கள்ளர் படைபற்று வீரர்கள் பிரிட்டீஸ் படையை எதிர் தாக்குதல் நடத்த மலபார் கைத்துப்பாக்கி,மேட்ச்லாக் நீள துப்பாக்கி,வளரி தடி,ஈட்டி,வாள் போண்ற ஆயுதங்களோடு நிலக்கோட்டையில் பிரிட்டீஸ் படையுடன் தாக்குதல் நடத்துகிறார்கள்.

ஆனையூர் கள்ளர்களின் இந்த தாக்குதலால், மிகவும் வலிமையான நிலக்கோட்டையில் இருந்த பிரிட்டீஸ் படையும்,அங்கிருந்த சுபேதாரும் நிலைத் தடுமாறுகின்றனர்.

இதனால் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 3க்கும் மேற்பட்ட பிரிட்டீஸின் கம்பெனி (இராணுவ குழுக்கள்) படைகள் நிலக்கோட்டைக்கு வருகிறது.

இத்தனை பிரிட்டீஸ் படைகள் சேர்ந்தும் ஆனையூர் கள்ளர்களின் வீரமிக்க தாக்குதலை சமாளிக்க முடியாமல் நிலைகுலைகிறது. இந்த போரில் கொரில்லா போர் முறையை பின்பற்றினார். இதனை உணர்ந்த அன்றைய மதுரை கலெக்டர் மதுரையிலிருந்த ஒட்டுமொத்த பிரிட்டீஸ் படையையும் கூட்டிக்கொண்டு திண்டுக்கல்லை அடைகிறார்.

ஆனால் அப்போதும் அவர்களால் கூளப்ப நாயக்கரையோ, கள்ளர் படைகளையோ பிடிக்கவோ, அழிக்கவோ முடியவில்லை. இறுதியாக கூளப்ப நாயக்கரின் தலைக்கு ரூபாய்1000 நிர்ணயம் செய்கிறது, அன்றைய ஆங்கிலேய அரசு. இந்த தாக்குதலுக்கு பிறகு கூளப்ப நாயக்கர் ஆனையூர் கள்ளர் நாட்டிலே தஞ்சம் அடைகிறார். தொடர்ந்து 3வருடங்கள் ஆகியும் கூளப்ப நாயக்கரை ஆனையூர் கள்ளர்கள் பாதுகாத்தனர். இறுதிவரை ஆனையூர் நாட்டுக்குள் புகுந்து ஆங்கிலேயர்களால் தாக்குதல் நடத்தி கூளப்ப நாயக்கரை பிடிக்கமுடியவில்லை. தானாகவே முன் வந்து திண்டுக்கல் கலெட்டர் முன்பு சரண் அடைகிறார்.


மருது பாண்டியர்களின் தென்னிந்திய புரட்சியில் நாம் கடந்து செல்ல முடியாத ஊர்களில் மேலூர் கள்ளர் நாடும் மற்றும் திருமங்கலம்(ஆனையூர் நாட்டு பிரிவு) ஏனென்றால் இங்கு தான் மருது பாண்டியர்களின் ஆயுத தொழிற்சாலை உருவாக்கப்பட்டது.

மேலும் இந்த ஆயுத தொழிற்சாலையில் உருவாக்கப்பட்ட ஆயுதங்களை மேலூர் கள்ளர் நாட்டு காடுகளில் மண்ணில் புதைத்து வைத்து ஆங்கிலேயர்கள் வரும் போது திடீரென புதைத்து வைத்த ஆயுதங்களை எடுத்து கொரில்லா தாக்குதல் நடத்தியுள்ளனர்.



இந்த மேலூர் கள்ளர் நாட்டின் ஆயுத தொழிற்சாலையை புரட்சியின் இறுதிகாலத்தில் ஆங்கிலேயர்களால் முற்றிலுமாக தரைமட்டமாக்கப்பட்டது.



இந்த தென்னிந்திய புரட்சியில் மிகவும் வீரியத்துடன் சண்டையிட்ட கருமாத்தூர் கள்ளர் தலைவர்கள் மூவரை பின்னாங் தீவிற்கு நாடு கடத்தப்பட்டு சொந்த நாட்டிற்காக போர் புரிந்த வீரர்கள் அன்னிய தேசத்தில் அடக்கமாயினர்

1.ஆண்டியப்ப தேவர்
2.சடை மாயன்
3.கொன்றி மாயத் தேவர்

மேலும் புரட்சி மேலோங்கி இருந்த காரணத்தாலும், திண்டுக்கல்லை பிரிட்டிசார் கைப்பற்றியதாலும். கோபால நாயக்கர் ஆனையூர் கள்ளர் நாட்டுக்கு பொன்னித்தேவர் ("கள்ளப்பட்டி" செல்லம்பட்டிக்கு அருகில்) உதவியால் தப்பிச்செல்கிறார், இந்த சம்பத்தில் பொன்னித்தேவர் பிரிட்டிஸ் படையால் கொல்லப்படுகிறார்.

பிறகு கோபால நாயக்கர் ஆரிப்பட்டி, கருமாத்தூர், நமணூர் நாட்டில் உள்ள கள்ளர் தலைவர்களுடன் சேர்ந்து மறு தாக்குதல் செய்கிறார்.

ஆங்கிலேயர்கள் முதலில் ஆனையூர் நாட்டு பிறமலைக்கள்ளர்களை தொடர் தாக்குதல் நடத்தி அவர்களின் ஆயுதங்களை முற்றிலுமாக அழிக்கின்றனர்.




ஒட்டு மொத்த பிரிட்டீஸ் படைகள் சேர்ந்தும் ஆனையூர் கள்ளர் படையை ஒன்றும் செய்ய முடியவில்லை, அவர்களுடைய அஞ்சா குணம் அவர்களை நிலைகுலையச் செய்தது.

இதுபோக கிபி1877ல் ஆனையூர் கோவிலில் பழைய யானை தந்தங்கள் ஆங்கிலேயர்களால் கைப்பற்றப்பட்டுள்ளது. பிரிட்டீஸ் ஆய்வாளர் இந்த ஆனையூர் என்பது மேற்கு கள்ளர்களின் தலைமை இடம் என்றே குறித்துள்ளனர்.

அனைத்து கள்ளர்களுக்கும் குற்றப்பரம்பரை சட்டம் போட்டு பிற்காலத்தில் பல கள்ளர்களுக்கு விலக்கு அளித்தாலும், இந்த ஆனையூர் கள்ளர்களுக்கு மட்டும் எங்களால் விலக்கு கொடுக்க முடியாதென்று மறுத்துவிட்டது ஆங்கிலேய அரசு. அதற்கு காரணம் இவர்கள் மட்டுமே இறுதிவரை ஆங்கிலேய அரசுக்கு எதிராக தொடர்ந்து போராடி வந்தனர்.




நன்றி:
முனைவர் பா.ஜெயக்குமார்.
திரு. ராஜேஷ் வல்லாளதேவர் - கள்ளர் நாடு அறக்கட்டளை
திரு. சோழபாண்டியன்

வரலாற்று பக்கங்கள் - I

          கள்ளர்   மரபினர் Kallar History வரலாற்றை   அறிய   கீழே    உள்ள   தலைப்பின்   மீது   சொடுக்கவும்  (click here)  👇👇👇👇 ✍ ️ வளரி  ...

இந்த வலைப்பதிவில் தேடு

என்னைப் பற்றி

எனது படம்
Contact: info.kallarkulavaralaru@gmail.com, தமிழகத்தில் வாழும் கள்ளர் மரபினர் முக்குலத்தோரில் ஒரு பிரிவினர் ஆவர். கள்ளர், மறவர், அகமுடையார் ஆகிய முக்குலங்களும் போர்த் தொழிலை அடிப்படையாக கொண்டு வாழ்ந்து வந்ததால் இந்த மூன்று சாதியினரும் முக்குலத்தோர் என்று அறியப்படுகின்றனர். இந்த மூன்று குலத்தினரும் "தேவர்" என்ற பொதுவான பெயரோடு அறியப்படுகிறார்கள். கள்ளர் மரபில் அறந்தாங்கி தொண்டைமான், புதுக்கோட்டை பல்லவராயர், புதுக்கோட்டை தொண்டைமான் மற்றும் பல சமீன்தார்களும், பெரு நிலவுரிமையாளர்களும் இருக்கின்றனர். (கள்ளர் படைப்பற்று - கள்ளர் நாடு - கள்ளர்த்தடி). கள்ளர் வரலாறு : வரலாறு என்றால் வந்த வழி என்று பொருள். வந்த வழி தெரியாதவர்களுக்குப் போகும் வழி புரியாது. வரலாற்றை நாம் நினைவு கூர்வதற்குக் காரணம் கடந்து போன ஈகங்களை எண்ணிக் கண்ணீர் விடுவதற்காகவும், நிகழ்த்தி விட்ட வீரங்களைச் சொல்லிப் பெருமை பேசுவதற்காகவும் அல்ல. வருங்காலத்திற்கு வழி சமைப்பதற்கு அந்த ஈகமும் வீரமும் வழிகாட்ட வேண்டும் என்பதற்காகத்தான். கள்ளர்களின் நான்கு முக்கிய பிரிவுகள் - ஈசநாட்டுக்கள்ளர் (திருச்சி, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை) : கிளைவழிக்கள்ளர் (சிவகங்கை) : அம்பல கள்ளர் / நாட்டார் கள்ளர் (சிவகங்கை, மதுரை) : பிறமலை கள்ளர் (மதுரை, உசிலமபட்டி, தேனி, கம்பம், திண்டுக்கல்)

வலைப்பதிவு காப்பகம்

பின்பற்றுபவர்கள்