திங்கள், 11 மே, 2020

சம்பட்டியார் / சம்பட்டியார் மரபினர்



சம்மட்டியார்கள் எனும் வம்சத்தினர் கள்ளர்களில் உள்ள பல பிரிவுகளில் ஒருவராவர். 


சம்மட்டிகுடிகாடு :-திருவாரூர் மாவட்டம்,மன்னார்குடி வட்டம், உள்ளிக்கோட்டை ஊராட்சியில் உள்ள சம்பட்டியார் பட்டம் கொண்ட கள்ளர் மரபினர் வாழும் சிற்றூர்

சம்மட்டிவிடுதி:- புதுக்கோட்டை மாவட்டம், புதுக்கோட்டை  வட்டத்தில் சம்பட்டியார் பட்டம் கொண்ட கள்ளர் மரபினர் வாழும் பகுதி

சம்பட்டிப்பட்டி :- புதுக்கோட்டை மாவட்டம், புதுக்கோட்டை  வட்டத்தில்  கல்லுக்காரன்பட்டி ஊராட்சியில் சம்பட்டியார் பட்டம் கொண்ட கள்ளர் மரபினர் வாழும் சிற்றூர்

மதுரை வெள்ளலூர் நாட்டில் உள்ள கரைகளில் சம்மட்டி மக்கள் கரையும் ஒன்றாக உள்ளது.

இவர்கள் புதுக்கோட்டை மாவட்டத்தில் மேலவிடுதி, பாப்பான்விடுதி, தென்தெரு(அம்புநாடு), வடக்கலூர்( அம்புநாடு) மற்றும் திருவாரூர் ஆகிய ஊர்களில் மிகுந்து வாழ்கின்றனர்.  

சம்மட்டியார்கள் பற்றிய பெயர் காரணம் மற்றும் வரலாற்று சான்றுகளை காணலாம்.


வரலாற்று சான்றுகளில்:-

சம்மட்டியார் எனும் பெயரின் மூலம் சம்மட்டி என படைக்கலமாகும். பண்டைய காலத்தில் எழுதப்பட்ட நூலான அர்த்த சாஸ்திரத்தில் ஆயுத சாலையில் இருக்க வேண்டிய ஆயுதங்களின் பட்டியல் தரப்பட்டுள்ளது. இவற்றில் 16 வகையான இயங்கும் ஆயுத வகையில் சம்மட்டியும் குறிப்பிடப்பட்டுள்ளது.
( அர்த்த சாஸ்திரம் / கௌடில்யர்/ S கிருஷ்ணன்)



கிபி 8 ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட சேந்தன் திவாகர நிகண்டில், மட்டி எனும் படைக்கலம் , சம்மட்டி வடிவில் ஒர் ஆயுதம் என்றும் இது முற்கரம், முசுண்டி போன்ற பெயர்களிலும் வழங்கி வந்ததாக குறிப்பிடப்படப்படுகிறது.
போர்கவசங்கள் பிரிவில் மத்திகை சம்மட்டி எனும் ஆயுதமும் குறிப்பிடப்பட்டுள்ளது. (சேந்தன் திவாகரம் பகுதி 7 )



முற்கரம் என்பது சம்மட்டி போன்றதொரு படைக்கல ஆயுதம் என Jaffna book society 1842 ல் வெளியிட்ட Manual of dictionary in tamil language ல் குறிப்பிடப்பட்டுள்ளது.


பழமையான ஒலைச்சுவடிகளைக் கொண்டு எழுதப்பட்ட சிற்ப சாஸ்திர நூலான சிற்பச் செந்நூலில் 16 வகை போர்க்கருவிகளின் பட்டியல் தரப்பட்டுள்ளது.  இதில் சம்மட்டியும் ஒர் போர் ஆயுதமாக குறிப்பிடப்பட்டுள்ளது.
( சிற்ப செந்நூல் பக் 120 / தமிழக தொழில் நுட்ப கல்வி இயக்ககம் வெளியீடு)



நாலாயிர திவ்ய பிரபந்தத்தில்:-

ஸ்ரீ வேதாந்த தேசிகாசாரியர் சுவாமிகள் இயற்றிய பாசுரத்தில் "என்னிடிகேஷன் என் இறை கீழ் இடக் கழுத்து என்று இவற்றில் நல் நிலை மின் உருவாய் நாலு முற்கரம் கொண்டு அளிக்கும் பொன் அகில் சேர்ந்து அலைக்கும் புனல் வேகை வட கரையில் தென்னன் உகந்து தொழும் தேனை வேதியர் தெய்வம் ஒன்றே"என திருமாலின் வடிவங்களில் ஒன்றான இரண்டீகேசன் நான்கு திவ்ய சம்மட்டிகளை தனது ஆயுதங்களாக கொண்டுள்ளதாக பாடப்படுகிறார்.



கம்பராமாயணத்தில்:-

"சக்கரம்,உலக்கை, தண்டு, தாரை, வாள், பரிகம், சங்கு,
முற்கரம் முசுண்டி,பிண்டிபாலம், வேல், சூலம்,முட்கோல்,
பொன் கரக்குலிசம், பாசம், புகர் மழு, எழு பொன்,குந்தம்,
வில், கருங் கணை, விட்டேறு, கழுக்கடை, எழுக்கள் மின்ன"

(5496, சுந்தர காண்டம்)
அனுமரைப் பிடிக்க ராவணன் செய்த போரில் பயன்படுத்த ஆயுதங்கள் வரிசையில் முற்கரம் எனும் சம்மட்டி ஆயுதமும் பயன்படுத்தப்பட்டுள்ளதை கம்பராமாயணம் தெரிவிக்கிறது.


"இட்டார் கடு வல் விடம்; எண்ணுடையான்
தொட்டான் நுகரா, ஒரு சோர்வு இலனால்;
கட்டு ஆர் கடு மத்திகை, கண் கொடியோன்,
விட்டான்; அவன்மேல் அவர் வீசினரால்"
(யுத்தகாண்டம் 6303)

விளக்கம்:- கடவுளை எண்ணி தியானத்தில் ஈடுபட்டுருந்த பிரகலாதன் மீது இரணியன் கடும் மத்திகை எனும் ஆயுதங்களை கொண்டு தாக்கினார். இங்கு மத்திகை சம்மட்டி போர் ஆயுதமாக பயன்படுத்தப்பட்டுள்ளதை அறியலாம். 





சோழர் போர்க்களத்தில்:-
 
"வரிவிற் கதைசக் கரமுற் கரம்வாள்
சுரிகைப் படைசத் திகழுக் கடைவேல்
எரிமுத் தலைகப் பணம்எல் பயில்கோல்
முரிவுற் றனதுற் றனமொய்க் களமே"
(புகழ் சோழ நாயனார் புராணம் பாடல் 26)

பெரிய புராணத்தில், சோழ நாயனார் புராணத்தில் சோழ மன்னன் போரிட்ட காட்சி விவரிக்கப்பட்டுள்ளது. அந்த  போர்க்களத்தில், இழுத்துக் கட்டப்பட்ட வில், கதை, சக்கரம், முற்கரம், வாள், சுரிகைப் படை, சத்தி, கழுக்கடை, வேல், எரிமுத்தலை, கப்பணம், ஒளிமிக்க அம்பு என்னும் இவை ஒன்றுடன் ஒன்று தாக்கி முறிவுற்றன என போர் நிகழ்ச்சி விவரிக்கப்பட்டுள்ளது.


போர் ஆயுதங்களில் முற்கரம் எனும் சம்மட்டியும் பயன்படுத்தப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இரண்டாம் இராஜேந்திர சோழர் போர்க்களத்தில்:-


கிபி 1058 ல் இரண்டாம் இராஜேந்திர சோழர் வெளியிட்ட திருவிந்தலூர் செப்பேட்டில்,   மேலை சாளுக்கியருடன் நிகழ்த்தப்பட்ட போர் நிகழ்ச்சிகள் விவரிக்கப்பட்டுள்ளது. இராசாதிராச தேவர் கொப்பத்துப் போரில்,  யானை மேல் இருந்தபோது எதிரிகளின் அம்புகள் தைத்து கொல்லப்பட்டார். இதனையடுத்து அவரது தம்பியான இரண்டாம் இராஜேந்திரன் போர்க்களத்திலேயே முடிசூட்டிக் கொண்டார்.
படையை ஒருங்கிணைத்து சாளுக்கிய படையை விரட்டியடித்தார். சாளுக்கிய மன்னன் ஆகவமல்லனை நேருக்கு நேராக சந்தித்த சோழ மன்னர் அவனை தாக்கினார்.  சாளுக்கிய மன்னர் அந்த சமயத்தில் முற்கரம் போன்ற மரத்தால் செய்யப்பட்ட கைப்பிடியையும்,  கூர்மையான முனையையும் கொண்ட ஒர் ஆயுதத்தை கொண்டு சோழ மன்னரின் வலது தொடையில் தாக்கியதாகவும் , இதற்கு பிறகு சோழ மன்னர் சக்தி(வேல்) என ஆயுதம் கொண்டு தாக்கியதையடுத்து சாளுக்கிய மன்னர் தப்பியோடியதாகவும் போர் நிகழ்ச்சிகள் விளக்கப்பட்டுள்ளது. ( திருவிந்தலூர் செப்பேடுகள் வரி:-117-122)


வில்லிபாரதத்தில்:-
"சக்கரம் சூலம் பாசம் தண்டம் வேல் கப்பணம் வாள் முற்கரம் கணையம் விட்டேறு எழு கொழு முசுண்டி குந்தம் எ கரங்களினும் ஏந்தி யாவரும் இவன் மேல் ஏவி அ கணம்-தன்னில் மீண்டும் அகங்கரித்து ஆர்த்த காலை"
(ஆரணிப பருவம்/சூதுபோர்ப்படலம்-105)




கிபி 16 ஆம் நூற்றாண்டில் மகாபாரதத்தை தழுவி எழுதப்பட்ட வில்லிபாரதம் எனும் நூலில் பாண்டவர்களுக்கும் கௌரவர்களுக்கும் நடைபெற்ற போரில் முற்கரம்,  முசுண்டி போன்ற சம்மட்டி வகை ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதை அறியமுடிகிறது.

கல்வெட்டு மற்றும் செப்பேடுகளில்:-

கிபி 1567 ஆம் ஆண்டை சேர்ந்த பரமக்குடி கல்வெட்டில் (392 of 1914) சம்பட்டியார் குடும்பத்தை சேர்ந்தவர் மாவிலங்கை செம்பிநாடு எனும் ஊரை திருகயிலாய நாயனார் எனும் கடவுளுக்கு தானமாக அளித்துள்ளார்.

கிபி 1620 ல் நமணக்குறிச்சியில் சொக்கநாதசாமி கோயிலுக்கு தானம் அளித்த வீர பூச்சிய நாயக்கர் என்பவர் தன்னைப்பற்றிய பட்டங்களில் ' சம்மட்டி நாராயணன்'  என்றும் குறித்துள்ளார். இதன் பொருள் சம்மட்டி எனும் ஆயுதத்தை உபயோகிப்பதில் நாராயணனை போன்றவர் எனும் அடைமொழி ஆகும்.( புதுக்கோட்டை கல்வெட்டுகள் 760)


கிபி 1732 ல் விஜயரகுநாதராய தொண்டைமானார் வெளியிட்ட துறுமாச் செப்பேட்டில் "  தன்னை சம்மட்டி நாராயணன்"  என்று குறித்துள்ளார்.( புதுக்கோட்டை தொண்டைமான் செப்பேடுகள்: ராஜா முகமது)


கிபி 18 ஆம் நூற்றாண்டில் சிவகங்கை சமஸ்தானம் சார்பாக வெளியிட்ட செப்பேட்டிலும் மன்னர்களின் அடைமொழியில் '  சம்மட்டி நாராயணன்' என இடம்பெற்றுள்ளது.( இரணியூர் செப்பேடு:- சீர்மிகு சிவகங்கை)

சம்மட்டி எனும் ஆயுதத்தை பயன்படுத்துவதில் வல்லவராக திகழ்ந்ததை குறிக்கும் வண்ணம்,  மன்னர்கள் தங்களை " சம்மட்டி நாராயணன்"  என கல்வெட்டுகளிலும் செப்பேடுகளிலும் குறிப்பிட்டுள்ளனர். இதுபோன்று கட்டாரி எனும் கத்தியை உபயோகிப்பதில் வல்லவர் என்பதை குறிப்பிடும் வண்ணம் கட்டாரி சாளுவன் என்றும் அடைமொழிகள் காணப்படுகிறது.

இங்கனம் சம்மட்டி படை பிரிவில் பணிபுரிந்த கள்ளர் குல சம்மட்டியார் அடிவரிசை முதலான தற்காப்பு கலைகளில் சிறந்து விளங்கினர். புதுக்கோட்டை முதல் மன்னர் இரகுநாதராய தொண்டைமானின் சகோதரர் நமண தொண்டைமான் 17 ஆம் நூற்றாண்டில் குளத்தூர் பகுதியை ஆட்சி செய்தார். அவர் அம்பு நாட்டு சம்பட்டியாரில் திருமணம் செய்திருந்தார்.( General history of pudukkottai state 1916)


வாராப்பூர் நாட்டின் மிராசுதாராக சம்பட்டியார்களே இருந்து வருகின்றனர். வாராப்பூர் நாட்டு கருப்பர் கோயிலில் சம்பட்டியார்கள் முதல் மரியாதை பெறுகின்றனர்.  அம்பு நாட்டு சிவன் கோயில் மற்றும் காளி கோயிலில் , வடக்களூர் குப்பத்திற்கான மரியாதையை சம்பட்டியார்கள் பெறுகின்றனர்.


அம்புநாட்டில் இருந்து குன்றக்குடி முருகன் கோயில் காவல் பொறுப்புக்காக 18 ஆம் நூற்றாண்டில் அங்கு குடிபெயர்ந்த சம்பட்டியார்களுக்கு கோவில் திருவிழாவின்போது மரியாதைகள் அளிக்கப்படுகிறது.
மதுரை வெள்ளளூர் நாட்டு  கள்ளர் பிரிவுகளில் சம்மட்டி கரையும் ஒன்றாகும்.கோட்டநத்தம்பட்டியை சேர்ந்த சம்மட்டி கரை அம்பலக்காரர்களான கந்தசாமி அம்பலக்காரர் மற்றும் வீரணன் அம்பலக்காரர் ஆகியோர் வெள்ளளூர் நாட்டின் பெரிய அம்பலக்காரராக இருந்த பெருமைக்குரியவர்கள்.


படைக்களத்தோடு தொடர்புடைய பிற கள்ளர் பட்டங்களாக செம்படையார், சேனையாண்டார்,சேனைத்தலைவர், சேனைநாட்டார், வாளுடையார்,வாள்வெட்டியார், வாள்கொண்டார், வாளுக்குவலியர், வாளாளர், வாற்பிரியர் , வெட்டுவார், படைத்தலையார்,  போரிற்சுற்றியார், போரிற்கொளுத்தியார், அம்பர்கொண்டார்(அம்பு), தானாதியார், தானைத்தலைவர், படையெழுச்சியார், ஆரம்கொண்டார்( ஆரம்- மார்பு கவசம்), சேனாதிபதியார், போரக்காட்டியார், போர்பொறுக்கியார், போர் முட்டியார், யுத்தப்பிரியர், ஏனாதியார்,  கட்டவெட்டியார் Etc முதலியவை உள்ளது குறிப்பிடத்தக்கது.


தொகுப்பு:- சியாம் சுந்தர் சம்பட்டியார்- வாரைவளர் வாராப்பூர் நாடு

வரலாற்று பக்கங்கள் - I

          கள்ளர்   மரபினர் Kallar History வரலாற்றை   அறிய   கீழே    உள்ள   தலைப்பின்   மீது   சொடுக்கவும்  (click here)  👇👇👇👇 ✍ ️ வளரி  ...

இந்த வலைப்பதிவில் தேடு

என்னைப் பற்றி

எனது படம்
Contact: info.kallarkulavaralaru@gmail.com, தமிழகத்தில் வாழும் கள்ளர் மரபினர் முக்குலத்தோரில் ஒரு பிரிவினர் ஆவர். கள்ளர், மறவர், அகமுடையார் ஆகிய முக்குலங்களும் போர்த் தொழிலை அடிப்படையாக கொண்டு வாழ்ந்து வந்ததால் இந்த மூன்று சாதியினரும் முக்குலத்தோர் என்று அறியப்படுகின்றனர். இந்த மூன்று குலத்தினரும் "தேவர்" என்ற பொதுவான பெயரோடு அறியப்படுகிறார்கள். கள்ளர் மரபில் அறந்தாங்கி தொண்டைமான், புதுக்கோட்டை பல்லவராயர், புதுக்கோட்டை தொண்டைமான் மற்றும் பல சமீன்தார்களும், பெரு நிலவுரிமையாளர்களும் இருக்கின்றனர். (கள்ளர் படைப்பற்று - கள்ளர் நாடு - கள்ளர்த்தடி). கள்ளர் வரலாறு : வரலாறு என்றால் வந்த வழி என்று பொருள். வந்த வழி தெரியாதவர்களுக்குப் போகும் வழி புரியாது. வரலாற்றை நாம் நினைவு கூர்வதற்குக் காரணம் கடந்து போன ஈகங்களை எண்ணிக் கண்ணீர் விடுவதற்காகவும், நிகழ்த்தி விட்ட வீரங்களைச் சொல்லிப் பெருமை பேசுவதற்காகவும் அல்ல. வருங்காலத்திற்கு வழி சமைப்பதற்கு அந்த ஈகமும் வீரமும் வழிகாட்ட வேண்டும் என்பதற்காகத்தான். கள்ளர்களின் நான்கு முக்கிய பிரிவுகள் - ஈசநாட்டுக்கள்ளர் (திருச்சி, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை) : கிளைவழிக்கள்ளர் (சிவகங்கை) : அம்பல கள்ளர் / நாட்டார் கள்ளர் (சிவகங்கை, மதுரை) : பிறமலை கள்ளர் (மதுரை, உசிலமபட்டி, தேனி, கம்பம், திண்டுக்கல்)

வலைப்பதிவு காப்பகம்

பின்பற்றுபவர்கள்