திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகே உள்ளது ஆலங்குடி. இங்கு சிவன், ஆபத்சகாயேஸ்வரராக அருள்பாலித்து வருகிறார். நவக்கிரக தலங்களில் குருபகவானுக்கு உரிய தலமாக இக்கோவில் வழிபடப்பட்டு வருகிறது. இங்கு குருபகவான், ரிஷிகளுடன் வீற்றிருப்பது சிறப்பம்சம் ஆகும்.
பிரசித்தி பெற்ற இக்கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை திருவிழாவும், தேரோட்டமும் விமரிசையாக நடைபெறும். பொதுவாக சிவன் கோவில்களில் சிவனும், அம்மனும் மட்டுமே தேரில் எழுந்தருளி அருள்பாலிப்பார்கள்.
ஆனால் நவக்கிரகங்களில் குருபகவானுக்குரிய தலமான ஆபத்சகாயேஸ்வரர் கோவிலில் சிவனுக்கு பதிலாக குருபகவான் என அழைக்கப்படும் குருதெட்சிணாமூர்த்தியே தேரில் எழுந்தருளி அருள்பாலிப்பது சிறப்பம்சம் ஆகும்.
சித்திரை திருவிழா நாட்களில் பல்வேறு விதமான அலங்காரத்தில் சாமி வீதி உலா செல்லும் நிகழ்ச்சிகள் நடைபெற்று வந்தன. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று நடைபெற்றது. கோவிலின் அனைத்து சன்னதிகளிலும் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெறும்.
அதைதொடர்ந்து உற்சவர் குருதெட்சிணாமூர்த்தி (குருபகவான்) தேரில் சிறப்பு அலங்காரத்துடன் எழுந்தருளினார். தேரை கல்விக்குடி சின்னதுரை மழவராயர் குடும்பத்தினர் வடம் பிடித்து தொடங்கி வைத்தனர். பின்னர் தேர் 4 வீதிகளிலும் வலம் வந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம்பிடித்து இழுத்தனர்.