இராஜாதி ராஜ சதுர்வேதிமங்கலம்:
மன்னை என்ற இவ்வூர் பற்றி அறிய சோழமன்னர்களுது கல்வெட்டுச்சாசனங்களை தவிற பிற தொன்மையான சான்றுகளான சங்க இலக்கியங்களோ, பிற்கால இலக்கியங்களோ துணைபுரியவில்லை. சோழநாட்டு வரலாற்றை பல்வேறு கோணங்களில், நிலவியல் துணைகொண்டு ஆராயும்போது சோழராட்சியின் மத்திய காலம்வரை மன்னார்குடிக்குத் தெற்கே காட்டுப்பகுதிகளாக (முல்லைநிலம்) இருந்துள்ளதை அறிகிறோம். பஞ்ச ஆரண்யதலங்கள் இவ்வூருக்கு மிக அருகாமையில் இருப்பது, திருமறைக்காடு (வேதாரண்யம்) அணித்தே உள்ளது போன்ற காரணங்களும் இதனை வலியுறுத்திகின்றன.
காடு நீக்கி நாடு கொள்ளும் முயற்சியில் சோழ மன்னர்கள் முயற்சித்தபோது உருவான திருவூரே மன்னை நகரமாகும். இவ்வூரின் பழம்பெயர் இராஜாதி ராஜ சதுர்வேதிமங்கலம் என்பதனை
(கிபி.1070-1125) வரை ஆட்சிசெய்த முதல் குலோத்துங்கசோழனின் மன்னார்குடி இராஜகோபாலசாமி கோயில் கல்வெட்டே உறுதிசெய்கிறது. "சுத்தவல்லி வளநாட்டு பிரமதேயம் தனியூர் ஶ்ரீ ராஜாதிராஜ சதுர்வேதிமங்கலம் என்ற இக்குறிப்பே மன்னார்குடி நகரம் பற்றிய தொன்மைக்குறிப்பாகும்.
இராஜாதிராஜன் என்ற சோழ மன்னன் ஒருவன் பெயரால் பிரமதேய ஊராகவும் (அந்தணர்களுக்காக அளிக்கப்பெறும் ஊர்) நான்கு வேதங்கள் படித்த அந்தணர்கள் வாழ்ந்ததால் சதுர்வேதிமங்கலம் என்ற மங்கலம் எனும் பகுப்புடைய ஊராகவும், தனியூர் என்ற சிறப்பு உரிமைகள் பெற்ற ஊராகவும் திகழ்ந்தது என்பதை இக்கல்வெட்டு வரிகள் எடுத்துக்காட்டுகின்றன.
ஶ்ரீ இராஜாதிராஜ தேவர் சோழனால்
(கிபி.1018-1054) காலத்தில் உருவாக்கப்பட்ட மன்னார்குடி:-
ஒவ்வொரு சோழமன்னனும் தங்களது ஆட்சிக்காலத்தில் தன்பெயரில் பல சதுர்வேதிமங்கலங்கள் உருவாக்குவதை மரபாக கொண்டு திகழ்ந்தனர். கிபி 1118ல் வெட்டப்பட்ட மன்னார்குடி கல்வெட்டு இராஜாதிராஜன் எனும் சோழன் பெயரில் இவ்வூர் இருந்தது என்று சொல்வதாலும்,
கிபி - 1118க்கு முன்பு இப்பெயரில் வாழ்ந்த சோழ மன்னர் முதலாம் இராஜாதிராஜன் என்ற ஒருவனே எனபதாலும், கங்கை கொண்ட சோழன் எனும் முதலாம் இராஜேந்திர சோழனின் மகனான இராஜாதிராஜ சோழனால் தான் இவ்வூர் தோன்றியது என்பதை தெள்ளத்தெளிவாக அறியமுடிகிறது.
தஞ்சை பெரியகோவிலை தோற்றுவித்த முதலாம் இராஜராஜனின் பெயரனும், கங்கை, கடாரம் போன்ற நாடுகளை வென்று கங்கைகொண்ட சோழபுரத்தை உருவாக்கியவனுமான முதலாம் இராஜேந்திர சோழனின் முதல் மகனுமான இராஜாதிராஜன் பெயரால் இவ்வூர் அவனாலேயே தோற்றுவிக்கப்பெற்றது என்பதுதான் இவ்வூரின் தலையாயப் பெருமையாகும்.
இவ்வூரைத்தோற்றுவித்த அந்தப்பேரரசனின் வரலாற்றுப்பெருமைகளை ஓரளவு அறிந்தால்தான் மன்னார்குடி நகரின் பெயர்ப் பெருமையை நாம் அறிந்தவர்களாவோம். சென்னையிலிருந்து மகாபலிபுரம் செல்லும் சாலையில் திருவிடந்தை என்னும் திருமங்கை ஆழ்வார் மங்களாசாசனம் செய்த பூவராகஸ்வாமி திருக்கோவில் உள்ளது. அத்திருக்கோயிலில் ஒவ்வோர் மாதமும் பூரநாளில் இராஜாதிராஜ சோழனின் பிறந்தநாள் சிறப்புவழிபாடு முட்டாமல் இன்றளவும் நடைபெற்று வருகின்றது.
இக்கோயில்கல்வெட்டில் அப்பேரரசன் தான் பிறந்த நட்சத்திர நாளில் மாதந்தோறும் சிறப்பு வழிபாடு நடத்த நிலக்கொடை அளித்துச்சென்றுள்ளதை கூறுகின்றது. அப்பெருமன்னனின் பக்திக்கு இக்கல்வெட்டும் இன்றளவும் தொடரும் வழிபாடும் சிறந்த எடுத்துக்காட்டுகளாகும்.
யானைமேல் துஞ்சியதேவர் எனும் இராஜாதிராஜ தேவரின் சிறப்புகள்:-
போர்க்களத்திற்கு அஞ்சாத தேவர்! பாண்டியர், சேரர், சிங்களர், மேலைச்சாளுக்கியர் போன்ற பலமன்னர்களை வென்று புகழ்பெற்றவன்.
" ஜெயங்கொண்ட சோழன் " என்பது இவனது விருதுப்பெயராகும்.
"ஜெயங்கொண்ட சோழன் உயர்ந்த பெரும்புகழ்க் கோவி ராஜகேசரி வர்மரான ஶ்ரீராஜாதி ராஜதேவர்" - என்று கல்வெட்டுக்கள் இவனது புகழை குறிக்கின்றன.
மாமன்னன் இராஜராஜன், இராஜேந்திரன் ஆகிய இருவரும் சோழசிம்மாசனத்தில் அமர்ந்து அரசாளும் போது பல போர்க்களங்களில் வெற்றி வாகை சூடியவன். இவனது வெற்றியின் புகழைப்பாடும் மிக அழகிய துவாரபாலகர் சிற்பம் ஒன்று இன்றும் தஞ்சையில் உள்ளதை நாம் காணலாம். பழையாறையில் இருந்த இச்சிலை தற்பொழுது தஞ்சைக்கலைக்கூடத்தில் உள்ளது.
(மேலைச்சாளுக்கியர்களின் தலைநகரான கல்யாணபுரத்தை - தற்போது மராட்டிய மாநிலம் முப்பைக்கு அருகிலுள்ள கல்யாண் எனும் நகரம்) வென்று அங்கிருந்து இந்த துவாரபாலகர் சிற்பத்தை வெற்றிச்சின்னமாக எடுத்துவந்து சோழநாட்டில் காட்சியாக வைத்தான். அதன் பீடத்தில் கல்யாணபுரத்தை வென்று தான் எடுத்தவந்த துவாரபாலகர் என்று தமிழில் கல்வெட்டாகவும் பொறித்துள்ளான்.
ஜெயங்கொண்ட சோழன் எனும் யானைமேல் துஞ்சிய தேவர்:-
கிபி.1054 ல் தம் தம்பியுடன் மேலைச்சாளுக்கிய நாட்டின் மீது படையெடுத்தான்.கிருஷ்ணா நதிக்கரையில் உள்ள கொப்பம் என்னும் இடத்தில் நடந்த கடும்போரில் யானைமீது அமர்ந்து போர்புரிந்து கொண்டிருக்கையில் பகைவர்களது அம்பு மார்பில் பாய்ந்து வீர மரணம் அடைந்தான்.இதில் ஆச்சர்யம் என்னவெனில் தான் இறந்தாலும் , அவனது தம்பியின் ஆற்றலால் அப்பெரும்போரில் சோழர்படையே வெற்றிவாகை சூடியது.தம்பிவுடையான் படைக்கு அஞ்சான்.
இம்மாவீரன் தன்பெயரால் இராஜாதிராஜ சதுர்வேதிமங்கலம் ( மன்னார்குடியை) உருவாக்கியுள்ளான் என்பது எத்துனை பெருமிதம். (தமிழனின் வீரத்திற்கு இலக்கணமாய் வாழ்ந்து காட்டியவன் இப்பேரரசன். போர்க்களத்திலேயே உயிர்துறந்து வீரசமர்புரிந்துள்ளான், வாழ்ந்தான் என்பது சரித்திர உண்மை).
இராஜாதி ராஜ சோழர்காலத்திற்குபின்பும் இக்கற்றளி போசளர் மற்றும் பிற்காலப்பாண்டியர் காலங்களில் புதுப்பிக்கப்பட்டபொழுது சோழர்கால கல்வெட்டுக்கள் மீண்டும் இடம்பெறாமல் போனதால் பழைய சாசனங்களை பற்றி அறியமுடியவில்லை.
சோழர்களுக்கு பிறகு ஆட்சிப்பொறுப்பேற்ற வீரராமநாதன் எனும் போசள அரசன் கிபி 1258- ல் இக்கோயிலுக்கென நில வருவாயினை அமைத்துத்தந்தான் சோழமண்டலத்தில் போசளரின் ஆதிக்கத்தை பாண்டியர்கள் முறியடித்தனர்.
இப்பணியைச்சிறப்புற செய்தவர்கள் இரண்டாம் மாறவர்மன் விக்கிரபாண்டியனும் (1250-1276) மற்றும் அவனது தம்பி முதலாம் சடையவர்மன் சுந்தரபாண்டியனும் (1250-1263) ஆவர். கிபி 1303ல் முடிசூடிய நான்காம் சுந்தரபாண்டியனின் ஆடசிக்காலத்தில் சாரிகைக்கோட்டையின் வணிகர்கள் வரியின் ஒருபகுதியை செயங்கொண்ட நாதர் ஆலயத்திற்கு அளிக்க உத்தரவிட்டான்.
சோழனால் உருவாக்கப்பட்ட கற்றளியை பிற்காலப்பாண்டியர்களும் போற்றி வளரத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
(கிபி 15-16 )ஆம் நூற்றாண்டுகளில் விஜயநகர மன்னர்களின் ஆக்கத்தாலும் செயங்கொண்ட சோழீச்சரம் சிறப்புடன் திகழ்ந்துள்ளது.
கள்ளர்குல பாப்பாநாடு, சிங்கவனம் சமீன்களால் போற்றப்பட்ட செயங்கொண்ட நாதர் ஆலயம்:-
(கி.பி.1757) இராசராசவளநாடு ராஜேந்திர சோழவளநாடு பொய்யூர்கூற்றத்துப் பாப்பாகுடி, சிறுநெல்லிக்கோட்டை,நெமேலி இருக்கும் நல்லவன் விசையாத்தேவர் மகன் இராமலிங்க விசையாத்தேவர் தம் காளியாக இருக்கும் மன்னார்குடி ஜெயங்கொண்ட நாதர் கோவிலுக்கு 46 இராஜ கோபால பொன் சக்கரங்களை அளித்துள்ளார்.
இதுபோக பாப்பாநாடு மேல்கரை, கீழ்கரையைச்சேர்ந்த 16 கரை கள்ளர் பெருமக்களும் 45 இராஜ கோபால சக்கரங்களை அளித்துள்ளனர்.
சிங்கவனம் ஜமீன்தார் ஶ்ரீ செவ்வாயி விசைய ரகுநாத வாளோசி மெய்க்கன் கோபாலர் 1758-ல் 91 இராஜகோபால பொன் சக்கரங்களை வாரி வழங்கியுள்ளார்.
இதன் பின்பு1934 ம் ஆண்டு கோயில் நிதிகொண்டும் பாப்பாநாட்டு ஜமீன்தார் அளித்த பெருந்தொகை கொண்டும் இடிபாடுற்று கிடந்தகோவிலை முற்றிலுமாக புதுப்பித்தனர்.
பின்னர் 1940ல் திரு.சோமசுந்தர சக்கரநாட்டார் அவர்கள் எடுத்த முயற்சியின் காரணமாக கோயில் நிதியிலிருந்தும் முன்மண்டபம் திருப்பணி செய்யப்பெற்றது.
கிபி 2002-ல் செங்கமலத்தாயார் கல்வி அறக்கட்டளை தாளாளர் திரு. திவாகரன் சாளுவர் எடுத்த முயற்சியின் காரணமாக புதுப்பொலிவு பெற்று அப்போது திருப்பணி கமிட்டி தலைவராக திகழ்ந்தவர் தெய்வத்திரு.V. G.ராமமூர்த்தி கிளாக்குடையார் அவர்கள்.
மேலும் 2004 ஏப்ரல் 7 ஆம் நாள் நன்னீராட்டு பெருவிழா நடைபெற்று கடவுள் மங்கலம் பெற்றது.
இவ்வாறு 11 ஆம் நூற்றாண்டு முதல் சோழர், பாண்டிய பேரரசர்களாலும், ஜமீன்களாலும், ஆன்மீகச்செம்மல்களாலும், பேருள்ளம் கொண்ட நிலக்கிழார்களாலும் காலந்தோறும் திருப்பணி செய்யப்பெற்று எழில்கொஞ்சும் திருக்கோவிலாக தனது கடந்த கால நினைவுகளை அசைபோட்டுக்
கொண்டிருக்கிறது ஜெயங்கொண்ட சோழனாம் ஶ்ரீ ராஜாதிராஜ தேவரால் உருவாக்கப்பட்ட செயங்கொண்ட சோழீச்சரம்.
நன்றி :
உயர்திரு.Dr.குடவாயில் பாலசுப்பிரமணியன் அவர்கள்,
செங்கமலத்தாயார் கல்வி அறக்கட்டளை, மன்னார்குடி.
தல வரலாறு ,செயங்கொண்ட நாதர் ஆலயம்.
கட்டுரை : திரு. பரத் கூழாக்கியார்