ஆர்காடு நவாபான முகமது அலி, தனது உரிமையை மீட்க வெள்ளையர்களின் உதவியை நாடினான். வெள்ளையர்கள் 1751ல் ஆர்காடு நவாபாக பொறுப்பேற்ற முகமது அலிக்கு ஆதரவாக கர்னல் ஹரான் தலைமையில் படையனுப்பி உதவினர். இவரது படையில் முகமது அலியின் அண்ணன் மாபூஸ் கான், கான்சாகிப் ஆகியோர் இருந்தனர்.
பெரும்படையுடன் வந்த கர்னல் ஹரான், சந்தா சாகிப் வசமிருந்த மதுரையை கைப்பற்றினான். பிறகு தென்திசை பாளையக்காரர்களை நோக்கி வரி கேட்டு படையெடுத்தான். திருநெல்வேலி சீமையில் இருந்த கீழ்திசை பாளையங்களுக்கு தலைமை தாங்கியவர், பாஞ்சாலங்குறிச்சி பாளையக்காரரான பொல்லாப்பாண்டிய நாயக்கர்( வீரப்பாண்டிய கட்டபொம்மு நாயக்கரின் பாட்டனார்). மேற்கு திசை பாளையங்களுக்கு தலைமை தாங்கியவர் பூலித்தேவர். இவர் வாழ்ந்த ஊர் நெற்கட்டுஞ் செவ்வல் என அழைக்கப்பட்டது. தற்போது இவ்வூர் ஆவுடையாபுரம் என அழைக்கப்படுகிறது.
(Political History of tinnevelly : caldwell 1891 pg 96)
மறவர் குலத்தில் உதித்தவர் பூலித்தேவர். பதினெட்டாம் நூற்றாண்டை சேர்ந்த இலக்கியமான திங்களூர் நொண்டி நாடகம் , பூலித்தேவர் பற்றியும் கள்ளர்- மறவர் உறவு பற்றியும் கூறுகிறது.
"வல்லாள கண்ட னென் தகப்பன்- அர்க்கும் வலுத்த
அவன் கள்ள மறவர் குலத்தில் உதித்தோன் மாயப் பூனைப்
புலித்தேவன் தம்பி - சின்னான மறவன் வளவில் நாங்கள் உறவு கொண்டாடிக் காயக்கமும் கற்ற சின்னாத்தேவன் - தந்த கண்ணியை கல்யாணம் பண்ணியே கொடுத்தார்"
பகலெத்தி எனும் கள்ளர் குல வீரன், பூலித்தேவன் தம்பியான சின்னாத்தேவர் எனும் மறவரை தனது உறவு என்றும், அவரது வீட்டில் மகளை திருமணம் செய்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
பூலித்தேவருக்கு வலது கரமாக விலங்கிய செம்புலி சின்னனஞ்சான்தேவரே இங்கு சின்னாத்தேவன் என குறிப்பிடப்பட்டுள்ளார்.
" நாட்டிலுள்ள கவுண்டர்கள் நாட்டிமை செய்வோரும்
தண்மையாய்த் தியாகமது தந்து - நல்ல
தாரமும் பண்ணிக்கோவென்றுத் தாரமுஞ் சொன்னாரே
வன்மையுள்ள புலித்தேவன் தம்பி- சின்னா
மறவன் வளவில்நாங்கள் விவாகமது செய்ய
உறவு கொண்டாடியே வந்து"
புலித்தேவரை மறவர் என்றும், அவரது தம்பியான சின்னனஞ்சான்தேவர் வீட்டில் கள்ளமறவர் குலத்தில் உதித்த பகலெத்தி என்பவர் திருமண உறவு கொண்டதை இப்பாடலும் தெரிவிக்கிறது. பதினெட்டாம் நூற்றாண்டிலேயே கள்ளர் மறவர் இடையே நிலவிய உறவினை மேல குறிப்பிடப்பபட்ட பாடல்கள் குறிப்பிடுகிறது.
1755,May 5: கர்னல் ஹரானுக்கு திருச்சிக்கு விரைந்து வர, தலைமையிடம் இருந்து அழைப்பு வந்தது. அவர் திருச்சி நோக்கி திரும்பும்போது, மாபூஸ்கானின் வேண்டுதலை ஏற்று, படையை நெற்கட்டுச்செவ்வல் நோக்கி திருப்பினார். பிரிட்டீஷ் படை பூலித்தேவரின் கோட்டையை முற்றுகையிட்டது. தனது ஒற்றர் படையின் மூலம், ஆங்கிலேயரிடம் போதுமான பீரங்கிகள் இல்லை என்பதை உணர்ந்த பூலித்தேவர் அதற்கேற்ப வியூகங்களை அமைத்து போரிட தயார் என அறிவித்தார். கர்னல் ஹரான் ஒரு இருபதாயிரம் ரூபாயாவது தரச் சொன்னான். பூலித்தேவரோ ஒரு ரூபாய் கூட கட்டமுடியாது என கூறிவிட்டார். ஆனாலும் போதிய படைபலம் மற்றும் உணவுப்பொருட்கள் இல்லாத காரணத்தால் ஹரான் படை வெறுங்கையுடன் திருச்சி நோக்கி செல்ல ஆரம்பித்தனர். (Yusuf khan : the rebel commendant 1914/ pg 39)
1755, நவம்பர் மாதம் களக்காடு கோட்டையை இழந்த மாபூஸ்கான், பூலித்தேவரை வீழ்த்த நெற்கட்டுஞ்செவ்வலை தாக்கினான். ஆனால் பூலித்தேவரின் மறவர் படை தாக்குதலை சமாளிக்க இயலாத மாபூஸ்கான் தோல்வியோடு திரும்பினான்.
மாபூஸ்கானை வீழ்த்தியபின் கிடைத்த உத்வேகத்தை சரியான திசையில் பூலித்தேவர் பயன்படுத்தினார். வடகரை முதலிய மேற்படாகைப் பாளையங்களையும், சந்தா சாகிப்பின் பிரநிதியான மூடேமியாவையும் தனது கூட்டணியில் இணைத்தார். கீழ்திசை பாளையக்காரர்களுக்கு தலைவரான பொல்லாப்பாண்டியன் கட்டபொம்மு இந்த கூட்டணியில் சேர மறுத்துவிட்டார். தனது பிணையாட்கள் வெள்ளையர் வசம் இருப்பதால் கூட்டணியில் சேர முடியாது என கூறிவிட்டார். மதுரைப் பகுதியில் இருந்த சில பாளையக்கார்களும் பூலித்தேவர் அணியில் இணைந்தனர். தங்களுக்கு எதிராக பூலித்தேவர் உருவாக்கும் கூட்டணி பற்றிய தகவல் ஆர்காடு நவாப் மற்றும் கும்பினியாரை சென்றடைந்தது.
மாபூஸ்கானின் மேல் நம்பிக்கையை இழந்த கும்பினியார், கான்சாகிப் தலைமையில் ஒரு பெரும்படையை திரட்டி அனுப்பினர்.
கான்சாகிப் படைதிரட்டி வந்துகொண்டிருக்கும் போதே, பூலித்தேவர் நவாப் வசமிருந்த ஸ்ரீவில்லிபுத்தூர் கோட்டையை தாக்கினார். கோட்டையை பாதுகாத்து வந்த நவாபின் உடன்பிறந்த அப்துல் ரஹீம் மற்றும் அப்துல் மசூலி, மாபூஸ்கானுடன் சேர்ந்து பூலித்தேவரை எதிர்த்தனர். ஆனால் பூலித்தேவர் தலைமையிலான படையின் தாக்குதலை சமாளிக்க இயலாத நவாபின் படையினர், ஸ்ரீவில்லிபுத்தூர் கோட்டையை இழந்தனர். பூலித்தேவர் பெற்ற இந்த வெற்றி பாளையக்காரர்களுக்கு புதிய நம்பிக்கையை அளித்தது. இந்த சமயத்தில் பூலித்தேவர் வசம் ஆயிரம் பேர்க்கொண்ட குதிரைப்படையும், இருபத்து ஐயாயிரம் பேர் கொண்ட காலாட்படையும் இருந்தது.
மார்ச் 21,1756 அன்று கட்டபொம்மன்- மாபூஸ்கான் கூட்டணியினரை பூலித்தேவர் மீண்டும் தாக்கினார். போரின் முடிவு பூலித்தேவருக்கு பாதகமாக அமைந்தது. மூடேமியா போரில் கொல்லப்பட்டான். தாக்குதல் தோல்வியில் முடிந்ததால் பூலித்தேவர் தனது கோட்டைக்கு பின்வாங்கினார்.
திருவிதாங்கூர் மன்னர், சந்தா சாகிப்பின் பிரதிநிதிகள், மாபூஸ்கான், மற்ற பாளையக்காரர்கள் பூலித்தேவர் தலைமையில் ஒன்றிணைந்தனர்.
பூலித்தேவர் தலைமையிலான பதினாராயிரம் பேர் கொண்ட படை திரண்டு கும்பினியாரிடம் இருந்து திருநெல்வேலியை மீட்டனர். ஆனாலும் கங்கைகொண்டான் எனும் இடத்தில் நடைபெற்ற போரில் கான்சாகிப் தலைமையிலான கும்பினியார் படை வெற்றி பெற்றது.
தங்களிடம் போதிய படை பலம் இல்லாததை உணர்ந்த பூலித்தேவர் திண்டுக்கல்லில் ஆட்சி புரிந்து வந்த ஐதர் அலியுடன் கூட்டணி வைத்தார். தனக்கு உதவினால் ஐந்து லட்ச ரூபாயை தருவதாக பூலித்தேவர் கூறினார். சோழவந்தான் பகுதியை ஐதருக்கு அளிக்கவும் உடன்பாடு ஏற்பட்டது. ஆயினும் கேப்டன் காலியாட் தலைமையிலான ஆங்கிலேய படை, நெல்லையில் முகாமிட்டு இந்த திட்டத்தை முறியடித்தனர்.
1759 ஆம் ஆண்டு, ஜூலை மாதம் நெல்லை நோக்கி படையெடுத்தார் கான்சாகிப். நெல்லையில் பூலித்தேவர் வசமிருந்த கொல்லங்கொண்டான் கான்சாகிப்பால் கைப்பற்றப்பட்டது. மூன்று நாட்களில் கோலார்ப்பட்டி கைப்பற்றப்பட்டது. கீழ்திசை பாளையங்கள் யாவும் கான்சாகிபிடம் சரணடைந்தன. பூலித்தேவர் பக்கம் இருந்த மாபூஸ் கான் , தன்னை கான் சாகிப் அணியில் சேர்த்துக் கொள்ளுமாறு தூது விட்டு துரோகியானான். தந்திரமாக திருவிதாங்கூரையும் பூலித்தேவர் கூட்டணியில் இருந்து பிரித்து தங்களது கூட்டணியில் இணைத்தான் கான் சாகிப்.
வடகரை பாளையக்காரர் கள்ளர்களைக் கொண்டு திருவிதாங்கூர் மீது தாக்குதல்களை நடத்தினார். இதனால் திருவிதாவகூரார் கான்சாகிப்பிடம் உதவியை வேண்டினார்.(Yusuf khan the rebel commendant SC hill pg pg 100)
கான்சாகிப் பக்கம் சாய்ந்த திருவிதாங்கூர் அரசர்,1759, செப்டம்பர் மாதம், வடகரைப் பாளையத்தின் மேல் படையெடுத்தார். செங்கோட்டையருகே கூடுதலாக கும்பினியாரின் படையும் சேர்ந்து மொத்தம் பத்தாயிரம் பேர்க் கொண்ட மிகப்பெரிய படை வடகரை பாளையத்தை தாக்கியது. போரின் விளைவு மோசமடைந்ததால் வடகரையார் கோட்டையிலிருந்து வெளியேறி பூலித்தேவரிடம் சரணடைந்தார். திருவிதாங்கூர் அரசருக்கு களக்காட்டை யூசுப் கான் அளித்தார்.
(History of Millitary transactions of the british nation in hindustan 1861: Robert orme pg 565)
தென்திசையில் ஆங்கிலேயர் கை ஒங்கியதை கண்ட ப்ரெஞ்சு காரர்கள் பூலித்தேவரை தங்களுடன் சேருமாறு தூது அனுப்பினர். இந்த அழைப்பை ஏற்ற பூலித்தேவர், ப்ரஞ்சு காரர்கள் எழுதிய கடிதத்தை திருவிதாங்கூருக்கு அனுப்பி தங்களுடன் இணையுமாறு வலியுறுத்தினார். எனினும் திருவாங்கூரார் தொடர்ந்து கான் சாகிப் பக்கமே இருந்தார்.
பூலித்தேவரின் கோட்டைகளில் ஒன்றான வாசுதேவநல்லூர் கோட்டையை கான்சாகிப் முற்றுகையிட்டான். வாசுதேவநல்லூரைக் காக்க ஆயிரக்கணக்கான வீரர்கள் திரண்டாலும் அவர்களில் வலுவான 800-900 பேரே கோட்டையைக் காக்க நியமிக்கப்பட்டனர்.மற்றவர்கள் காட்டுக்குள்ளேயே தங்கி இரவில் தீடீர் தாக்குதல்களை நடத்தினர்.
கான்சாகிப்பின் பீரங்கிகளின் தாக்குதல்களை வீரமறவர்கள் பலமாக எதிர்த்து போரிட்டனர். பூலித்தேவர் நெற்கட்டுஞ் செவ்வலில் இருந்து வந்து 3000 கள்ளர்களின் உதவியுடன் இரவு நேர தாக்குதல்களை, வாசுதேவநல்லூர் கோட்டைக்கு எதிர்திசையில் இருந்து நடத்தினார். கான்சாகிப்பிடம் 18 பவுண்ட் பலமுள்ள ஒரே ஒரு பீரங்கி மட்டுமே இருந்தது. மற்றவை அனைத்து 6 பவுண்ட் பலமுள்ள சிறிய பீரங்கிகள். 18 பவுண்ட பலமுள்ள பீரங்கி பழுதடைந்தது. போதுமான வெடிமருந்துகள் இல்லாமல் கான் சாகிப் திணறினான். கான்சாகிப் படையில் இருநூறு பேரும், பூலித்தேவர் படையில் இன்னும் அதிகமாகவும் உயிரிழப்புகள் ஏற்பட்டது. இரண்டு மாதங்கள் நடந்த தொடர்ச்சியான போரின் இறுதியில், இருமுனை தாக்குதலை சமாளிக்க இயலாத கும்பினிப்படை பூலித்தேவரின் மறவர் மற்றும் கள்ளர்களின் தாக்குதலை தாக்குபிடிக்க இயலாமல், வாசுதேவநல்லூர் கோட்டை முற்றுகையை விட்டுவிட்டு ஒட்டம் பிடித்தனர்.
(History of Millitary transactions of the british nation in hindustan 1861: Robert orme pg 565-570)
1761 ஆம் ஆண்டு, மே மாதம் கான்சாகிப் கும்பினியாருக்கு எழுதிய கடிதத்தில் தான் பூலித்தேவரின் மூன்று கோட்டைகளையும் கைப்பற்றியதாக கூறியுள்ளான். எனவே எனவே 1759ல் இருந்து கிட்டதட்ட ஒன்றரை வருடங்கள் பூலித்தேவர் கான்சாகிப்புடன் போரிட்டுள்ளதை அறியமுடிகிறது.(Yusuf khan the rebel commendant SC hill pg pg 104) 1764ஆம் ஆண்டு மதுரையில் தன்னாட்சி நிறுவ முயன்ற கான்சாகிப் வெள்ளையர்களால் கொல்லப்பட்டான்.
வாசுதேவநல்லூர் கோட்டை 1766 வரை நவாப் வசமிருந்தது. 1766ல் இந்தக் கோட்டை பூலித்தேவரால் மீண்டும் கைப்பற்றப்பட்டது. 1767ல் இந்தக் கோட்டையை கைப்பற்ற கும்பினியார் கர்னல் காம்பெல் தலைமையில் ஆங்கிலேயரின் படை வந்தது. ஒரு வாரம் முழுவதும் இந்தக்கோட்டை பீரங்கி குண்டுகளால் துளைக்கப்பட்டது. இச்சமயங்களில் கோட்டைக்குள் இருந்த மறவர்கள் சாதுரியமாக தங்களை தற்காத்துக் கொண்டனர். சாவுக்கு அஞ்சாது கோட்டையை காக்க மறவர்கள் போராடிய விதத்தை கண்டு ஆங்கிலேயரே வியந்து போயினர். நெருப்பு மழையையும் பொருட்படுத்தாது, கோட்டையில் ஏற்பட்ட பிளவுகளை, வைக்கோல் போரையும், பனைமரத்துண்டையும் கொண்டு சரி செய்தனர். ஒரு வார காலத்திற்கு பிறகு கடும் மழையின் காரணமாக கோட்டையை காத்த வீரர்கள், அங்கிருந்து வெளியேறி அருகிலிருந்த காட்டில் நுழைந்தனர்.
கர்னல் 1767ல் நடத்தப்பட்ட கர்னல் காம்பெலின் முற்றுகைக்கு பிறகு வாசுதேவநல்லூர் கோட்டை ஆங்கிலேயர் வசம் சென்றுள்ளதை உறுதியாகக் கூறலாம். வீரத்தமிழ் போர்குடியில் உதித்த பூலித்தேவரின் கடைசி போராக வாசுதேவநல்லூர் போர் இருந்திருக்கலாம். இதற்கு பிறகு பூலித்தேவர் பற்றிய வரலாற்று குறிப்புகள் கிடைக்கவில்லை. கடைசி வரையிலும் எந்த சமரசமும் இன்றி, கும்பினியாரின் ஆதிக்கத்தை எதிர்த்து உயிர்நீத்த தமிழர் பூலித்தேவர் புகழ் உலகில் என்றும் நிலைத்திருக்கும்.
பூலித்தேவருக்கு எதிராக புதுக்கோட்டை, சிவகங்கை, இராமநாதபுரம் மன்னர்கள் செயல்பட்டனர்.
(Kallan, formerly spelled as Colleries) COLLERIES என்று ஆங்கிலேய குறிப்புகள் கள்ளர் மரபினரை மட்டுமே குறிக்கும். சிலர் மறவர்கள், பழங்குடியினர் போன்றவர்களையும் குறிப்பதற்காக தவறாகவும் எழுதிவருகின்றனர். உதாரணமாக கீழே கள்ளர்களை Colleries என்றும், அதே பகுதியில் மறவர்களை மறவர் என்றே குறிப்பிடுகிறார்.
தொகுப்பு: சியாம் சுந்தர் சம்பட்டியார்