சனி, 25 ஏப்ரல், 2020

நடிகர் வினுச்சக்கரவர்த்தி தேவர்




வினு சக்ரவர்த்தி (டிசம்பர் 15, 1945 - ஏப்ரல் 27, 2017) மதுரை மாவட்டம், உசிலம்பட்டியில் பிறந்தார்.

இவர் மதுரை மாவட்டத்திலுள்ள உசிலம்பட்டியில் மேல்புதூரில் ஆதிமூல தேவருக்கும் மஞ்சுவாணி அம்மாளுக்கும் மூத்த மகனாக பிறந்தார். இவருக்கு பிரேமகாந்தன் என்ற இளைய சகோதரரும், குண்டலகேசி என்ற இளைய சகோதரியும் உள்ளனர். இவரின் மனைவி கர்ண பூ ஆவார். இவரின் மகள் சண்முக பிரியா பேராசிரியையாக அமெரிக்காவில் உள்ளார். மகன் சரவண பிரியன் இலண்டனில் மருத்துவராக உள்ளார். இவர் இராயப்பேட்டை வெஸ்லே பள்ளியிலும் மீனம்பாக்கம் ஜெயின் கல்லூரியிலும் படிப்பை மேற்கொண்டார். வணிகத்தில் இளங்கலை பட்டம் பெற்றார். இவர் பள்ளி கல்லூரி நாட்களில் நாடகம் எழுதி நடித்து, இயக்கி உள்ளார்.



இவர் தமிழ் நடிகரும், எழுத்தாளரும் ஆவார்.தமிழ், மலையாளம், தெலுங்குமொழி படங்களில் 1000–க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இவர் வில்லன், நகைச்சுவை, குணசித்திர வேடங்களில் நடித்து புகழ் பெற்றார். கோபுரங்கள் சாய்வதில்லை, ராஜாத்தி ராஜா, குரு சிஷ்யன் உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்தவர். இறுதியாக 2014-ம் ஆண்டு வெளியான வாயை மூடி பேசவும் படத்தில் நடித்து இருந்தார். பள்ளி, கல்லூரி நாட்களில் நாடகம் எழுதி, இயக்கி நடித்துள்ளார். பின்னர் ரெயில்வேயில் துணை ஆய்வாளராக 4 ஆண்டுகள் பணியாற்றி உள்ளார்.

இவர் கன்னட இயக்குனர் புட்டண்ணாகனகலிடம் கதையாசிரியராக சினிமா வாழ்க்கையை தொடங்கினார். இவர் கதை எழுதிய பரசக்கே கண்டதின்மா என்ற படம் ரோசாப்பு ரவிக்கைகாரி என்று தமிழில் எடுக்கப்பட்டது. . பெரும்பாலும் நகைச்சுவை, குணசித்திர,  எதிர்நாயகன் வேடங்களிலுமே நடித்துள்ளார். இவர் தமிழிலேயே மிகப்பெரும்பாலான படங்களில் நடித்துள்ளார்.

இவர் இருப்பு துணை ஆய்வாளராக 6 மாதம் ஐஸ் அவுஸ் பகுதியில் பணியாற்றிவிட்டு தென்னக இருப்புப்பாதையில் 4 ஆண்டுகள் பணிபுரிந்தார். இவர் கன்னட இயக்குனர் புட்டண்ணா கனகலிடம் கதையாசிரியாராக பணிபுரிந்தார். அவருடன் இணைந்து பணியாற்றிய பரசக்கே கண்ட தின்மா என்ற படம் வெற்றிபெற்றதையடுத்து அதை திருப்பூர் மணி தமிழில் தயாரிக்கத் திட்டமிட்டார். அதன் பொருட்டு இவர் தமிழ் திரையுலகுக்கு வந்தார். பரசக்கே கண்ட தின்மா என்ற படம் ரோசாப்பூ ரவிக்கைக்காரி என்று தமிழில் சிவகுமாரை கொண்டு எடுக்கப்பட்டது.

குணச்சித்திரம், வில்லன், நகைச்சுவை நடிகர்... என எல்லா கேரக்டர்களிலும் ஜொலித்தவர். வினுசக்கரவர்த்தியின் நடிப்புக்கு நிகராக இவரது குரலும் மிகப் பிரபலம். யாராவது ஒரு மிமிக்ரி கலைஞர் இடுப்பில் கையை ஊன்றிக்கொண்டு அல்லது விசிறிக்கொண்டு, `ஆங்...’ என கட்டைக் குரல் எடுத்து உறுமலாக ஒரு வசனத்தைப் பேச ஆரம்பித்தால், நிச்சயம் அவர் வினுசக்கரவர்த்தி வாய்ஸைப் பேசப் போகிறார் என்று சத்தியம் செய்துவிடலாம். அவ்வளவு புகழ்பெற்றது அவரது குரல் கீர்த்தி.

வெள்ளி விழா கண்ட `ரோசாப்பூ ரவிக்கைக்காரி’ படம். இந்தப் படத்தின் மூலமாகத் தமிழ்த் திரைக்கு வந்தவர் வினுசக்கரவர்த்தி. அதற்குப் பிறகு ஆயிரம் படங்கள் தாண்டி திரைத்துறையில் நின்றார். அவரது 1000-வது படம் `முனி’.

`வண்டிச்சக்கரம்’ படத்தின் மூலம் விஜயலட்சுமி என்கிற பெண்ணை சில்க் ஸ்மிதாவாக அறிமுகப்படுத்தியவர் வினுசக்கரவர்த்திதான்.

இயல்பிலே நகைச்சுவை உணர்வு அதிகம் கொண்டவர் வினுசக்கரவர்த்தி என்பதை அவரது டிவி பேட்டிகளில் காண முடியும்.

ஒரு பேட்டியில், `தூங்காதே தம்பி தூங்காதே’ படத்தில் கமலோடு வினுசக்கரவர்த்தி நடிக்கும்போது, அவரது தொந்தியைக் குறைப்பதற்கு கமல் ஒரு வைத்தியம் சொல்லியிருக்கிறார். 

அது இதுதான்... ```காலையில் படுக்கையைவிட்டு எந்திரிக்கிறதுக்கு முன்னாடி உங்க கைகள் ரெண்டையும் படுக்கையில் ஊனி, கால்களையும் உடலையும் தலையையும் தரையில் படாமல் எழும்பி பத்து நொடிக்கு நில்லுங்க. அப்படிச் செஞ்சிவந்தீங்கன்னா கொஞ்ச காலத்துக்குள் உங்கள் தொந்தி குறைஞ்சு நீங்க ஸ்லிம் ஆகிடுவீங்க. இந்த யோகாசனத்துக்குப் பெயர் மயிலாசனம்’ என்று கமல் சொன்னார். அவ்வளவு கவனமா கேட்டுக்கிட்டேன். ஆனா, ஒருநாள்கூட அதைச் செய்யவே இல்லை’’ எனச் சொல்லிவிட்டு கட்டைக்குரலில் வெடித்துச் சிரித்திருக்கிறார். 

``அதே நேரத்தில் கொஞ்சம் முரட்டுத்தனம் கொண்டவர்தான். `நல்லா இருக்கீங்களாணே?’ன்னு கேட்டா, `ஏன் நல்லா இல்லைன்னா நீ நல்லா வைக்கப்போறீயா?’னு கேட்பார். ஆனா, அவரோடு பழகிய என்னைப் போன்றவர்களுக்குத்தான் தெரியும். அவர் எத்தனை கனிவானவர் என்று’’ என்கிறார் நடிகர் ராதாரவி.

``நான் அப்போ அதிமுக பேச்சாளர். கிருஷ்ணகிரியில் ஒரு கூட்டத்தில் பேசுறதுக்காக ஒரு ஹோட்டல் அறையில் தங்கியிருந்தேன். பக்கத்துல வினுசக்கரவர்த்தி தங்கியிருந்திருக்கார். அது எனக்குத் தெரியாது. அறையைவிட்டு வெளியே வந்து பார்த்தேன். ஒரே கூட்டம். சண்டைச் சச்சரவு. இடையில் நின்னுகிட்டு வினுசக்கரவர்த்தி அண்ணன் சத்தம் போட்டுக்கிட்டு இருந்தார். அப்புறம் விசாரிச்சப்போதான் தெரிஞ்சது. அவரோடு பேசவந்தவங்கிட்ட ஏதோ தவறா வார்த்தையை விட்டுட்டார். அப்புறம் நான் புகுந்து பேச சண்டை சமாதானம் ஆச்சு’’ என்கிற ராதாரவி, வினுசக்கரவர்த்தியும் தானும் ரஜினியின் சிவா படத்தில் நடித்தபோது நடந்த நகைச்சுவை நிகழ்ச்சியைப் பகிர்ந்துகொண்டார்.

``வினுசக்கரவர்த்தி அண்ணன் எப்போதும் நல்லா டிப்டாப்பா ட்ரெஸ் பண்ணுவார். வீட்டிலிருந்து வெள்ளைப் பேன்ட், வெள்ளை சட்டை எல்லாம் போட்டுக்கிட்டு இன் பண்ணி, கூலிங் க்ளாஸ் மாட்டிக்கிட்டு வந்தார். பம்பாய்ல் ஃபைட் சீன் ஷூட்டிங். `ஏன்ணே இப்படி வேஷம் கட்டி வந்திருக்கீங்க? அங்க ஃபைட் சீன்ல வில்லனான உங்களை ஹீரோ கீழே போட்டு புரட்டி எடுக்கப்போறார். அதுக்கா இப்படி?’னு கேட்டேன். `இல்லை ரவி, ஷூட்டிங் முடிஞ்சதும், குளிச்சிட்டு ஃபிளைட்ல ஏறி உக்கார்ந்தா ச்சும்மா ஜம்முன்னு தூங்கிட்டு வீட்டுக்கு போகணும். அதுக்குத்தான் இப்படி’ன்னு சொன்னார். ஆனா, சண்டைக் காட்சி முடிய நேரமாகி அப்படியே அழுக்குத்துணியோடு ஃபிளைட் பிடிக்க ஓடினார் வினுசக்கரவர்த்தி அண்ணன். இதை எல்லாம் பார்த்த ரஜினி அன்னிக்கு விழுந்து விழுந்து சிரிச்சார். இதுதான் வினுசக்கரவர்த்தி அண்ணன். இன்னொரு சம்பவம் சொன்னால் ஆச்சர்யமாக இருக்கும். அவர் ஒரு படம் எடுக்க ஆரம்பித்து ஒரே நாள் ஷூட்டிங்கோடு நிறுத்திக்கொண்டார். `ஏன்ணே?’னு கேட்டேன். `இல்லை... இந்தப் படம் சரியா வந்தாலும், போட்ட காசுகூட கைக்கு வராதுன்னு தோணுது. அதான் நிறுத்திக்கிடேன்’னு சொன்னார். அந்தப் படத்துல நடிக்க நடிகர் நடிகையருக்கு அட்வான்ஸாகக் கொடுத்திருந்த பணத்தைக்கூட அவர் திரும்பக் கேட்கவில்லை’’ என்கிறார்.

வினுசக்கரவர்த்தி வாழ்வின் இன்னொரு கோணத்தைச் சொல்கிறார், அவரோடு மிகவும் நெருங்கிப் பழகிய நடிகர் சிவகுமார்...

``அந்தக் காலத்தில் இருந்துவந்த நீள நீள வசன பாணியை `வண்டிச்சக்கரம்’, `ரோசாப்பூ ரவிக்கைக்காரி...’ போன்ற படங்களில் உடைத்திருப்பார் வினுசக்கரவர்த்தி. எனக்குத் தெரிந்தவரை சினிமா வாழ்க்கையையும் குடும்ப வாழ்க்கையையும் பேலன்ஸ் செய்து நடத்திக்கொண்டு போனவர்களில் வினுசக்கரவர்த்தி முக்கியமானவர். கரடுமுரடானவர், கண்டிப்பானவர் என்றெல்லாம் அவரைப் பற்றிச் சொல்வார்கள். இவையெல்லாம் ஒழுக்கமாக இருக்க அவர் எடுத்துக்கொண்ட மெனக்கெடல்களாகத்தான் இருக்கும். அதனால்தான் அவரது பிள்ளைகளை நல்லவிதமாக வளர்த்து ஆளாக்கினார். ஒரு மகன்; ஒரு மகள். மகன் சரவணபிரியன் லண்டனில் மருத்துவர். மகள் சண்முகபிரியா அமெரிக்காவில் பேராசிரியர். பரபரப்பான சினிமா வாழ்வையும் அமைதியான குடும்ப வாழ்க்கையும் பெற்ற, எனது நண்பர் வினுசக்கரவர்த்தி ஆன்மா சாந்தியடைய வேண்டும்’’ என்றார் சிவகுமார்.

உயர் ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை அளவு அதிகரிப்பு காரணமாக அவதிப்பட்டு வந்த நிலையில் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலன் அளிக்காததால் ஏப்ரல் 27, 2017 அன்று மாலை 7 மணியளவில் விண்ணுலகை அடைந்தார்.













நன்றி : 
கள்ளர் முரசு மாத இதழ் நிறுவனர் ,ஆசிரியர் ந.சுரேஷ்குமார்

வரலாற்று பக்கங்கள் - I

வளரி வரலாறு   👈 Click above திருமங்கையாழ்வார் வரலாறு 👈 Click above அம்பலகாரர் / அம்பலம் வரலாறு 👈 Click above வாண்டையார் வரலாறு 👈 Click a...

இந்த வலைப்பதிவில் தேடு

என்னைப் பற்றி

எனது படம்
Contact: info.kallarkulavaralaru@gmail.com, தமிழகத்தில் வாழும் கள்ளர் மரபினர் முக்குலத்தோரில் ஒரு பிரிவினர் ஆவர். கள்ளர், மறவர், அகமுடையார் ஆகிய முக்குலங்களும் போர்த் தொழிலை அடிப்படையாக கொண்டு வாழ்ந்து வந்ததால் இந்த மூன்று சாதியினரும் முக்குலத்தோர் என்று அறியப்படுகின்றனர். இந்த மூன்று குலத்தினரும் "தேவர்" என்ற பொதுவான பெயரோடு அறியப்படுகிறார்கள். கள்ளர் மரபில் அறந்தாங்கி தொண்டைமான், புதுக்கோட்டை பல்லவராயர், புதுக்கோட்டை தொண்டைமான் மற்றும் பல சமீன்தார்களும், பெரு நிலவுரிமையாளர்களும் இருக்கின்றனர். (கள்ளர் படைப்பற்று - கள்ளர் நாடு - கள்ளர்த்தடி). கள்ளர் வரலாறு : வரலாறு என்றால் வந்த வழி என்று பொருள். வந்த வழி தெரியாதவர்களுக்குப் போகும் வழி புரியாது. வரலாற்றை நாம் நினைவு கூர்வதற்குக் காரணம் கடந்து போன ஈகங்களை எண்ணிக் கண்ணீர் விடுவதற்காகவும், நிகழ்த்தி விட்ட வீரங்களைச் சொல்லிப் பெருமை பேசுவதற்காகவும் அல்ல. வருங்காலத்திற்கு வழி சமைப்பதற்கு அந்த ஈகமும் வீரமும் வழிகாட்ட வேண்டும் என்பதற்காகத்தான். கள்ளர்களின் நான்கு முக்கிய பிரிவுகள் - ஈசநாட்டுக்கள்ளர் (திருச்சி, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை) : கிளைவழிக்கள்ளர் (சிவகங்கை) : அம்பல கள்ளர் / நாட்டார் கள்ளர் (சிவகங்கை, மதுரை) : பிறமலை கள்ளர் (மதுரை, உசிலமபட்டி, தேனி, கம்பம், திண்டுக்கல்)

வலைப்பதிவு காப்பகம்

பின்பற்றுபவர்கள்