இறந்தோர் எல்லாரும் சிறந்தோரே!
போன காலமெல்லாம் பொற்காலமே!
என்ற விமர்சனத்தில்
எனக்கு உடன்பாடில்லை!
நான்பிறந்த ஆறாவயலில்
வானம்பார்த்த இரண்டு
மானாவாரிக் கண்மாய்கள்!
பேய்ந்து அழுகினாலும்
காய்ந்து சாவியறுத்தாலும்
நெரித்து வரிவாங்கிய அரசாங்கம்!
1957 இல் இருந்து 1967 வரை
பத்தாண்டுகளில் நானறிந்து
என் வீட்டில்
மூன்றுமுறை ஜப்தி செய்தார்கள்!
ஒருமுறை
கட்டுத்துறையில் கட்டியிருந்த
உழவு மாடுகளை
அவிழ்த்து ஓட்டிப் போனார்கள்!
இன்னொருமுறை,
நல்லதண்ணீரை
மாட்டுக் குழிதாழியில் கொட்டிவிட்டு
இரண்டு பித்தளைத் தவலைகளை
எடுத்துச் சென்றார்கள்!
அடுத்தொருமுறை,
புதிதாக வாங்கிவந்து
கசாலையில் வைத்திருந்த
போஸ்கலப்பையை, நுகத்தை,
பூண்கணை போட்ட
டாடா மண்வெட்டியை
கொண்டு போனார்கள்!
அய்யோ ஜப்தி செய்துவிட்டார்களே
குடும்ப மரியாதையெல்லாம்
போயேபோச்சே!
பங்காளி பகுத்தாளி துப்புவார்களே
என்று கூனிக்குறுகி
பானையில் சோறிருந்தும் எனையீன்றோர்
பட்டினி கிடந்த நாட்கள் பலப்பல!
ஏழையர் வீடுகளில் தான்
ஜமாபந்திகளின் ஜப்திகள் நடந்தன!
சுட்டசெங்கல் சுவர்வைத்த
ஓட்டு வீடுகள்,
கரண்ட் இழுத்த வீடுகள்
ரேடியோ பெட்டி உள்ள வீடுகள்,
சங்கிலித் தாலி அணிந்த
தலைவியர் வீடுகள்,
வில் வண்டியும், அதை ஓட்டுவதற்கு
பண்ணையாளும்
இருந்த வீடுகள், இவைகள்
பணக்கார வீடுகள்!
பல வருட வரிப்பாக்கி இருந்தாலும்
பணக்கார வீடுகளுக்குள்
ஜப்தி என்று
தலையாரி நுழைந்ததில்லை!
அன்றைய அரசு காங்கிரஸ் அரசு!
அன்றைய காலம் காமராஜர் காலம்!
அதைத் தான் பொற்காலம் என்றும்
புண்ணியவான்கள் ஆட்சி என்றும்
இன்றைக்குப்
போற்றிக் கொண்டிருக்கிறார்கள்!
கட்டுரை: ஆறாவயல் பெரியய்யா