அடிமைகள் / கிரயம் / ஒத்தி
அடிமை முறை என்பது, ஒரு மனிதனை இன்னொரு மனிதன் அடிமைப்படுத்துவது என்பது, அவனை ஒரு விலங்காக நடத்துவது, வேலை வாங்குவது, விலைக்கு விற்பது, வாங்குவது, அடிப்பது, உதைப்பது, சாகடிப்பது என்பதையெல்லாம் இன்றைக்கு நாம் சீர்தூக்கிப் பார்க்கும் போது அருவருப்பானதாகத் தோன்றலாம், கசப்பாக இருக்கலாம். ஆனால் மனிதச் சமூக வரலாற்றில் அடிமைச் சமூகம் என்பது ஒரு பெரிய முன்னோக்கியப் பாய்ச்சலைக் குறித்தது.
அமிஞ்சி,
அடிமை,
அடியான்,
மூப்படியான்,
படியான்,
பண்புசாலியான்,
குடிப்பறையன்,
கொத்தடிமை
என பல்வேறு பெயர்களில் தமிழர்களில் ஒரு பிரிவினர் அடிமைகளாய் அல்லல்பட்டு ஆற்றாது அழுது மடிந்த துயர நிகழ்ச்சிகள் மறக்க முடியாத வரலாற்றுண்மைகளாகும்
விலைக்கு விற்கப்பட்டார்கள், விலைக்கு வாங்கப் பட்டார்கள், ஒற்றி (ஒத்தி) வைக்கப் பட்டார்கள்.
நகை நட்டு அலமாரி, ஆட்டுக்கல், அம்மி, குழவி குந்தானி, சட்டிமுட்டி, ஆடுமாடுகளை சீதனமாகக் கொடுப்பதைப் போல அடிமைகளும், பிறந்த வீட்டிலிருந்து புகுந்த வீட்டுக்கு அனுப்பப் பட்டிருக்கிறார்கள்.
நிலத்தின் சொந்தக்காரர் அரசுக்கு நிலவரி கட்டுவதைப் போல அடிமைகளின் சொந்தக்காரர் அரசுக்கு அடிமைவரி கட்டினார்.
நிலத்தை வாங்கும்போதும், விற்கும்போதும் அரசுத்துறையில் பதிவு செய்வதைப் போல, அடிமைகளை வாங்கும்போதும் விற்கும்போதும் கிரையப் பதிவு செய்திருக்கிறார்கள். அவைகள் ஓலை ஆவணங்கள்.
வாங்கிய கடனுக்காக மகனையோ மகளையோ அல்லது தன்னையோ ஒத்தி வைத்த, கிரையம் செய்த ஆதாரங்கள் நிறையவே உள்ளன.
சங்ககால போர் நடவடிக்கைகளிலே பகைமன்னர்களின் அந்தப்புரப் பெண்களைக் கைப்பற்றி ஏவல் மகளிராக ஆக்கிக்கொள்வதும் வழக்கமாகக் காணப்பட்டிருக்கின்றது. இவ்வாறு பகையரசிரிடமிருந்து கவர்ந்து கொண்டுவரப்பட்ட மகளிர் கொண்டிமகளிர் என்றே அழைக்கப்பட்டுள்ளனர்.
யாருக்காவது ஒரு பகுதியையோ நிலத்தையோ தானமாக வழங்கும் போது அதற்கு ஒரு அளவீடு எல்லை வகுப்பர். அதாவது கிழக்கிலிருந்து மேற்காக, தெற்கிலிருந்து வடக்காக இந்த இடைப்பட்ட நிலப்பரப்பில் உள்ள நஞ்சை, புஞ்சை, வயல்-வரப்பு, குளம் குட்டை, ஆறு ஏரி கிணறு இதோடு அந்நிலத்தில் வாழும் பள்ளர்களும் பறையர்களும் சேர்த்தே பட்டயமாக எழுதும் அடிமை முறை இருந்ததை நாம் செப்பேடுகள் மூலம் அறிய முடிகிறது. சிலவற்றைப் பார்ப்போம்.
அடிமைமுறை சோழர் காலத்தில் நிலை பெற்றிருந்தது. மன்னர்களும், வளம் படைத்தவர்களும் ஆண்களையும், பெண்களையும் விலைக்கு வாங்கிக் கோவில்களுக்கும், மடங்களுக்கும் தானமாக வழங்கினர். அடிமை விற்பனை, ஓலையில் பத்திரம் போல் பதிவு செய்யப்பட்டது.
இது
ஆளோலை,
ஆள்விலைப் பிரமாண இசைவுத் தீட்டு,
அடிமை விற்பனைப் பத்திரம்
எனப் பெயர் பெற்றது.
இடைக்குடி மக்களை அடிமைகளாக வழங்கும்போது முத்திரைகள் இட்டு வழங்கி உள்ளனர் "திருவிலச்சனை செய்து சந்த்ராதித்தவரை இவ்விடையரை நாம் கொள்ள" என்று குறிக்கும் கல்வெட்டுகள் காணப்படுகின்றன. முத்திரை என்பது அவர்கள் உடம்பின் மேல் இடப்படும் இலக்கமாகும். இதனை சூட்டுகோல் கொண்டோ அல்லது வேறு எப்படியோ இட்டு வந்தனர். கோவில் அடிமைகளுக்கு ஒரு விதமாகவும் அரண்மனை அடிமைகளுக்கு வேறு விதமாகவும் முத்திரை பதித்துள்ளனர்.
வறுமையின் காரணமாகத் தம் குடும்ப உறுப்பினர்களை விற்பதும் தம்மைத்தாமே விற்றுக் கொள்வதும் நிகழ்ந்துள்ளன. ஒடுக்கப்பட்ட சாதியைச் சேர்ந்த அடிமை தீண்டா அடிமை என்றழைக்கப்பட்டார். இவ்வாறு அடிமைகளானவர் மீது மாடுகளுக்கு இடுவது போல் இலச்சினை பொறிக்கப்பட்டது.
அரண்மனை அடிமைகளுக்குப் புலிச்சின்னமும்,
சிவன் கோவில் அடிமைகளுக்குத் திரிசூலச் சின்னமும்,
வைணவ கோவில் அடிமைகளுக்குச் சங்குச் சின்னமும்,
இலட்சினையாக இடப்பட்டன.
நெற்குற்றுதல், வேளாண் பணிகள், கோவிற் பணிகள் ஆகியன அடிமைகளின் முக்கியப் பணிகளாகும். தங்களை மட்டுமின்றி தங்கள் பரம்பரையினரையும் அடிமைகளாக விற்றுக் கொண்டதை இவர்களையும் இவர்கள் வர்க்கத்தாரையும் பரம்பரை பரம்பரையாக, வழியடிமை, யானும் எம் வம்சத்தாரும் என்று கல்வெட்டுக்களில் காணப்படும் தொடர்கள் உணர்த்துகின்றன.
சோழர்கள் காலத்தில் அடிமை முறை இருந்தது. இதை கே.கே.பிள்ளை அவர்கள் தமது நூலில் தெளிவாகக் குறிப்பிட்டு உள்ளார் . சதாசிவப் பண்டாரத்தாரும் குறிப்பிட்டுள்ளார்.
தஞ்சை மாவட்டம் மயிலாடுதுறைக்கு அருகில் உள்ள கொறுக்கை என்ற ஊரில் இரண்டாம் ராசாதிராசன் முதல் குலோத்துங்கன் காலத்தில் இப்படி பரிசிலாகவும் விலைக்கும் வாங்கப்பட்ட அடிமைகள் நூற்றுக்கணக்கானோர் இருந்தனர். தனிப்பட்ட மாந்தர்களுக்கு கொடுக்கப்பட்ட பரிசுகளிலும் வேளாண் அடியார், புலையர் அடியார் பெண்டுகளும் உண்டு என்பதை திருப்பராய்த்துறைக் கல்வெட்டுகள் பறைசாற்றுகின்றன.
பிரம்மதேய மத்தியஸ்தர்கள் பல அடிமைகளை தங்களுடைய ஆட்சியின் கீழ்க் கொண்டவர்களாகத் தெரிகிறது. அதாவது வெறும் சோற்றுக்கு வேலைசெய்யும் அடிமைகள். இவர்களை விற்பதற்கும் அவர்களுக்கு உரிமை உண்டு. வயலூர்க் கோவில் கல்வெட்டு ஒன்று இதைத் தெளிவாகத் தெரிவிக்கிறது. காவேரிக்குத் தென்கரையிலிருந்த நந்திவர்ம மங்கலத்து மத்தியஸ்தர் நாலாயிரத்து முன்னூற்றுவரான சந்திரசேகர அரசமைந்தன் கி பி 941 இல் தம்மிடம் கூழுக்குப் பணி செய்யும் தம் அடியாள் ஊரன் சோலை, அவ்வம்மையின் மகள் வேளான் பிராட்டி, அவ்வம்மையின் மகள் அமைந்தன்கண்டி ஆகிய மூன்று தலைமுறையினரை வயலூர்த் திருக்கற்றளிப் பரமேஸ்வரர் கோவில் சாமரம் வீசவும் [கவரிப் பிணா] திருப்பதியம் பாடவும் தானமாகத் தந்தார் [காண்க தளிச்சேரி கல்வெட்டுகள் இரா கலைக்கோவன் பக் 108] இது முதலாம் பராந்தகன் காலத்தைச் சேர்ந்த கல்வெட்டு என்று கருதப்படுகிறது.
15 வகை அடிமைகள் இருந்ததாகக் கருதப்படுகிறது.
1. தாசியின் மக்கள்
2.விலைக்கு வாங்கப்பட்டோர்
3.கொடையாக வழங்கப்பட்டோர்
4.பெற்றோரால் விற்கப்பட்டோர்
5.வெள்ளத்தின்போது பாதுகாக்கப்பட்டோர்
6.பிரமாணத்தின் மூலம் அடிமையானோர்
7.கடன் காரணமாக அடிமையானோர்
8.போரில் பிடிபட்டோர்
9.சூதில் வெல்லப்பட்டோர்
10.தாமே வழிய வந்து அடிமையானோர்
11.வறுமையினால் அடிமையானோர்
12.தன்னைத்தானே விற்றுக்கொண்டோர்
13.இறைவனுக்கு அடிமையானோர்
14.அடிமைப் பெண்ணைத் திருமணம் செய்து அதன்வழி அடிமை ஆனோர்
15.குறிப்பிட்ட கால அடிமைகள்
இவ்வாறு 15 வகையான அடிமைகள் இருந்தனர்.
சமூகத்தில் இழிவானதாகக் கருதப்படும் காரியங்களை இவர்கள் செய்தனர், இவர்கள் தாசர், தாசன், தாசி என்று அழைக்கப்படுவர். அடிமைகளை ஒருவருக்கு ஒருவர் பரிமாறிக்கொண்டதும் உண்டு. நாங்கூர் அந்தணனொருவன் தன்னுடைய அடிமைகளில் பெண்கள் உள்பட 7 பேரை ஒருமுறையும் 15 பேரை மற்றும் ஒரு முறையும் விற்றுள்ளான்.
சாதியில் இருந்து நீக்கம் செய்யப்பட்ட கள்ளரை 'புழுக்கைக் கள்ளர் 'என்று தனிச்சாதி ஆக்கியிருக்கிறார்கள் அதைப் போலவே மற்ற சாதியினரும் செய்திருக்கிறார்கள்!
கல்குளம், விளவங்கோடு வட்டங்களில் 'புழுக்கை நாயர்கள் 'அடிமைகளாக விற்கப்பட்டிருக்கிறார்கள்! நாஞ்சில் நாட்டில் புழுக்கை வெள்ளாளர்கள் அடிமைகளாக விற்கப்பட்டிருக்கிறார்கள்! புழுக்கை நாடர்கள் ஐந்து பேரை ஐரோப்பிய வியாபாரி ஒருவர் விலைக்கு வாங்கியிருக்கிறார்!
வெள்ளாளன் :
கி.பி.1201-ல் பஞ்சம் ஏற்பட்டபோது வாழ வழியின்றி வெள்ளாளன் ஒருவன் தன்னையும், தன் மனைவியையும். துன் மக்களையும் 110 காசுகளுக்கு விற்றுக்கொண்டுள்ளான். கி.பி.1219-ல் 5 பெண்களும், 5 ஆண்களும் வழிவழி அடிமையாக 1000 காசுகளுக்கு விற்றுக்கொண்டுள்ளனா;. கி.பி.1210-ல் வெள்ளாளன் ஒருவரும் அவன் மனைவியும் 110 காசுகளுக்கு மடத்திற்கு அடிமைகளாக விற்கப்பட்டுள்ளனார். நாங்கூர் அந்தணன் ஒருவன் தன்னுடைய அடிமைகளில் பெண்கள் உட்பட 7 பேரை ஒருமுறையும் 15 பேரை மற்றொரு முறையும் விற்றுள்ளான். அத்துடன் 2 பெண்களும், 5 ஆண்களும் 30 காசுகளுக்கும் அடிமைகளாக விற்கப்பட்ட செய்தி கல்வெட்டுகளில் காணப்படுகின்றன
துவாக்குடிச் செப்பேடு, காலம்: கி். பி. 1478.
கார் காத்த வேளாளரில் கொளும் பிச்சர் என்பாருடைய மகள் முருகாயி என்பவள் சேதுபதி அரசர் ஊருக்கு ஒரு சிறை எடுத்த போது சிறை எடுக்கப்பட்டாள். அவள் சிறைப்பிடிக்கப்பட்டமைக்காக சீய சோழ கெம்பீர வள நாடு கோனாடு பிறமலை சூழ்ந்த பொன்னமராவதி நாட்டில் வடபத்தில் ஆயிரமங்கல ஊரவராகிய அஞ்சகரைப்புரையர் உள்ளிட்டாரும் சிறை அளித்த கொழும்பிச்சருக்குக் கொடுத்த காணி பற்றி இச் செப்பேடு கூறுகிறது. அதில், "........... ...................... நஞ்சையில் துவாக்குடி ஏந்தலும் நஞ்சை கண்டதும் வள்ளி வயலில் அஞ்சுரெண்டு பங்கும் பிஞ்சையில் மந்தைக்காடு கோட்டைக்கரைப் பிஞ்சையில் யிருகல விரையடிக் காடும் சறுவ மானியம்தள்ளி ஊரது புரவில் அஞ்சில் ஒரு கரையும் மன்னு மனை கோவில் குளம் வறையிடை பள்ளு பரை சகலமும் ஆண்டு கொள்ளுவது...............". என்று குறிப்பிடப்படுகிறது.
பறையர்
கன்னியாகுமரி மாவட்டத்தில் 1459 ஆண்டு, பஞ்சமோ பஞ்சம். பெருங்குடலைச் சிறுங்குடல் மென்னு விழுங்கிய பஞ்சம் நிலமுள்ள வசதியுள்ள விவசாயிகளையே திணறடித்த பஞ்சம். காய்த்து வடுவேறிய உடலையும் உடல் உழைப்பையும் தவிர வேறு ஏதுமற்ற, அப்படி ஒடுக்கப் பட்டிருந்த பறையர்களை அந்தப் பஞ்சம் என்னபாடு படுத்தியிருக்கும்.
முன்னி நாட்டு சேரவன்மாதேவிப் புறஞ்சேரியில் கிடந்த பறையர்களில் ஒருவரான அவையன் சோம கேரளச் சாம்பனின் மகன் அவையன் என்பவர் தன்னையும் தன் தங்கை நல்லியையும் தங்கைமகன் தடியனையும், நற்பள்ளியைச் சேர்ந்த இராமன் ஐயப்பன் என்ற நயினாருக்கு அடிமைக் கிரையம் செய்து கொடுத்திருக்கிறார் அந்தக் கிரைய ஆவணத்தில்....
"பஞ்சத்தில் கஞ்சிக்கு அலைந்தலைந்து காலும் கண் கெண்டையும் வீங்கிவிட்டது! எங்கள் நாயன் எங்களை கைவிட்டதால் நயினாருக்கு எங்கனை நாங்களே அடிமை விலைப் பிரமாணம் செய்து குடுத்தோம்!......"
பண்ணையாரிடம் வாங்கிய கடனைத் திருப்பிக் கொடுக்கமுடியாத நிலையில், தன் மகளை பண்ணையாரிடம் ஒத்தி வைத்திருக்கிறார் ஒருவர். அந்த மகளுக்கு உடல்நலம் பாதிக்கப் பட்டுவிட்டது! வேலை செய்ய முடியவில்லை! அதனால் ஒத்தி வைத்தவரின் ஆடுமாடுகளை ஜப்தி செய்து கொண்டார் பண்ணையார்! இது சட்டப்படி நடந்துள்ளது.
தாழக்குடி பூதப்பாண்டி ஆகிய ஊர்களில் கிடைத்த ஆவணங்களின் வாயிலாக மந்தைகளில் அடிமைகள் எப்படி வாங்கப்பட்டார்கள், எப்படி விற்கப்பட்டார்கள் என்பதற்கான, தெளிவான விபரம் இருக்கிறது!
"ஆரைவாய்மொழி மன்றத்தில் (பொது இடத்தில்) நடுவர்கள் முன்னிலையில், பாலபொய்கை புறஞ்சேரியில் கிடந்த தீண்டாதாரில் பறையர் சாதி 1 இசக்கி புலமாடத்தி, 2 மேற்படியார் மகள் உண்ணி 3 பறை அரவுக்காணி 4 இளையமகன் சின்னக்காணி ஆகிய நால்வரையும் நிறுத்தினோம்!
"இவர்களை விலை கொடுத்து வாங்குவார் இருக்கிறீர்களா? "என்று நாங்கள் கேட்டோம். "ஆமாம்! நாங்கள் வாங்கிக் கொள்கிறோம்! "என்று இவர் சொன்னார். விலை சொன்னோம். நாங்கள் சொல்ல இவர் கேட்க கடைசியில் நால்வரையும், நெல்மேனி கலியுக ராமன் பணம் நூற்றம்பதுக்கு நடுவர் மூலமாக விலை திகைந்து பொருளை விற்று பணம் பெற்றோம்! என்று இந்தப் பிரமாணம் செய்து குடுத்தோம்! "இது தான் அந்த ஆவணச் சுருக்கம்.
பள்ளர்களும் பறையர்களும் நிலத்தோடு அடிமையாக்கப்பட்டார்கள் என்பதற்கான செப்பேடுகள்
1)ஆனாந்தூர்ச் செப்பேடு. காலம்: 16-5-1667,
2)சென்னீலக்குடி செப்பேடு: காலம் 18-3-1668,
3)கொத்தங்குளம் செப்பேடு: காலம் 19-1-1671,
4)நல்லுக்குறிச்சி செப்பேடு: காலம் 13-7-1691,
5)மேலச்சீத்தை செப்பேடு: காலம் 15-1-1694,
6)கோட்டக்குடிச் செப்பேடு: காலம் 16-11-1711,
7)அத்தியூத்துச் செப்பேடு: காலம் 11-6-1713,
8)பால்குளம் செப்பேடு: காலம் 15-4-1722,
9)பனையங்கால் செப்பேடு: காலம் 9-6-1729,
10)ஈசா பள்ளிவாசல் செப்பேடு: காலம் 30-12-1734
இன்னும் நிறைய செப்பேடுகளிலே கிழக்கிலிருந்து மேற்காக, தெற்கிலிருந்து வடக்காக இந்த இடைப்பட்ட நிலப்பரப்பில் உள்ள நஞ்சை, புஞ்சை, வயல்-வரப்பு, குளம் குட்டை, ஆறு ஏரி கிணறு இதோடு அந்நிலத்தில் வாழும் பள்ளர்களும் பறையர்களும் சேர்த்தே பட்டயமாக எழுதும் அடிமை முறையும், எந்த அளவிற்கு சமூக உரிமைகள் மறுக்கப்பட்டு ஒடுக்கப்பட்டு வந்தார்கள் என்பதை பல செப்பேடுகள் மூலமாக அறிய முடிகிறது.
மேலும் நிலத்தோடு அடிமையாக வாழ்ந்த பள்ளர்களும் பறையர்களும் தப்ப முயன்றால் கொடுந் தண்டனைகளும் உண்டு.
'தென்னிந்திய மானிட இன இயல்' என்ற நூலில் எட்கர் தர்ஸ்டன் அன்றைய அடிமைகள் பற்றி எழுதுகிறார்," 1871 இல் சென்னை மாநில மக்கள் கணக்கெடுப்பு கமிசனர் அடிமைத்தனம் பற்றிய தனது குறிப்பில் பின்வருமாறு கூறியுள்ளார். ஆங்கிலேயர் ஆட்சி தொடங்கும் முன் பறையர்கள் அனைவரும் மேல்சாதியினரின் அடிமைகளாயிருந்தனர். அவர்கள் மட்டுமின்றி உழவுத் தொழிலில் வயலில் இறங்கி உழைக்கும் கீழ்ச்சாதியினர் அனைவரும் அடிமைகளாகவே இருந்தனர். பள்ளர்கள் பண்ணை வேலை மட்டுமே பார்ப்பவர்கள். இவர்கள் குடியிருப்புக்காக எங்கும் தனியிடம் ஒதுக்கப்பட்டுப் பள்ளிச்சேரி என வழங்கப்படுகிறது. பள்ளர் சாதிப் பெண்கள் இடுப்புக்கு மேல் உடலை மறைப்பதில்லை என்றிருந்த அடிமைக் காலத்தின் வழக்கம் இன்று வழக்கொழிந்தாகி விட்டது." என்ற பல செய்திகளை எட்கர் தர்ஸ்டன் பதிவு செய்கிறார். தஞ்சை மாவட்டத்தில் பள்ளர் இனப் பெண்கள் மேலாடை அணியும் உரிமை இல்லை என்பதையும் தர்ஸ்டன் பதிவு செய்கிறார்.
தமிழக ஆய்வரண் பெங்களூர் குணா தனது இந்திய தேசியமும் திராவிட தேசியமும் என்ற நூலில் எழுதுகிறார்,
" 1843 ஆம் ஆண்டில் வெள்ளையராட்சி பண்ணையடிமை ஒழிப்புச் சட்டத்தைக் கொண்டு வந்தது. இதனால் பள்ளரும் பறையரும் 'பண்ணையடிமைகள்' என்றழைக்கப்படுவது போய் பண்ணையாட்கள் என்று பெயர் சூட்டப்பெற்றனர். வேலையும் கூலியும் முன் போலத்தான் இருந்தன. ஆனால் முந்திய பண்ணையடிமை முறையில் கீழிருந்த வேலைப் பாதுகாப்பு இல்லாமல் போனது. அடிமைக்கும் படியாளுக்கும் எல்சோறிட்டுப் பேண வேண்டும் என்ற கட்டுபாடு பண்ணையாருக்கு இனி இல்லை என்றாகியது. பண்ணையடிமை ஒழிப்புச் சட்டத்தால் விடுதலை பெற்ற அடிமை, சோற்றுக்காக கடன்பட்டு பண்ணையாரிடமே கொத்தடிமையாகி ஒரு வழியாக ஒரு 'புது வாழ்க்கை'யைத் தேடிக் கொண்டான். தஞ்சை மாவட்டம் கும்பாப்பேட்டையில் இருந்த நான்கு கால்வழிப் பார்ப்பனர் குடும்பங்களுக்குப் பணி புரிந்து வந்த பள்ளர்கள் 1860 ஆம் ஆண்டில் கூலி உயர்வு கேட்டனர். அதற்கு எதிராக பண்ணையார்கள் அந்தப் பள்ளர் அனைவரையும் வேலையை விட்டு துரத்தி விட்டு,' தெற்கத்தியப் பள்ளர்' என்னும் கிளைச் சாதியினரைக் குடந்தையிலிருந்து கொண்டு வந்து ஊர் நெடுந்தெருவில் அமர்த்தினர். சோற்றுக்கு வழியற்ற பழைய பள்ளர்கள் மன்னிப்பு கேட்க, மீண்டும் வேலை கிடைத்தது." அதுமட்டுமல்ல தோழர்களே அடிமையாக இவர்கள் பட்ட பாடுகள் ஏராளமாக இலக்கியங்களிலும் கல்வெட்டுகளிலும் செப்பேடுகளிலும் பதியப் பெற்றுள்ளன.
"தமிழகத்தில் காலனியமும் வேளாண் குடிகளும்" என்ற நூலில் அடிமை விவசாயக் கூலிகள்" (Agrestic Servidute) பற்றி ஏ.கே. காளிமுத்து சுட்டுகிறார், "பொதுவாக தமிழகச் சாதியக் கட்டமைப்பில் தாழ்த்தப்பட்ட சாதியினரான பள்ளா், பறையா்கள் அடிமை விவசாயக் கூலிகளாக இருந்தனா். இவ்வடிமைகள் 'பண்ணையாட்கள்' அல்லது 'படியாட்கள்' என்றழைகப்பட்டனா். கிராமங்களில் உள்ள நிலங்கள் 'மிராசி' என்ற நிலப்பிரப்புக்களின் கூட்டுக்குழுவிற்குச் சொந்தமாக இருந்தமையால் அந்நிலங்களில் பயிா் செய்யும் பள்ளா் பறையா் என்ற அடிமைச் சாதியினா் அக்குழுவிற்கே சொந்தமாவா்.
1819 ஆம் ஆண்டு அறிக்கை.
தஞ்சை மாவட்ட ஆட்சியா் அவரது மாவட்டத்தில் அடிமைகள் நிலப்பிரப்புக்களால் கடுமையாக நடத்தப்படவில்லை என்கிறாா்.
நெல்லை மாவட்டத்தில் நிலப்பிரபுக்களின் கட்டுப்பாடுகள் அடிமைகள் மீது இருந்தாலும் அவா்களுடைய வாழ்வாதாரங்களை நன்றாக கவனிப்பதாக அம்மாவட்ட ஆட்சியா் அறிக்கை கூறுகிறது.
தென்னாற்காடு மாவட்டத்தில் 'பள்ளிகள்' தான் அடிமைகளாக உள்ளனா் என்றும் மொத்த மக்கள் தொகையில் 17000 போ் என்றும் அம்மாவட்ட ஆட்சியா் அறிக்கை தருகிறாா்.
திருச்சி மாவட்ட ஆட்சியா் மற்றைய மாவட்டங்களில் 'பள்ளா்கள்' கடுமையாக நடத்தப்படுவதைப்போல் தனது மாவட்டத்தில் இல்லையென்றும் மொத்த மக்கள் தொகையில் 10000 போ் உள்ளனா் என்றும் கூறுகிறாா். ஆனால் 1830 ல் மொத்த மக்களில் அடிமைச் சாதியினா் 20.8 சதவீதம் உள்ளனா் என்று கூறுகிறது.
1841 ஆம் ஆண்டு மதுரை மாவட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி மொத்த மக்கள் தொகையில் 16% மாகவும்
நெல்லை மாவட்டத்தில் 16.2% அடிமைகளும்
சேலத்தில் 12.8% அடிமைகளும் இருந்தனா்.
வடஆற்காடு மாவட்டத்தில் 699 அடிமைகள் என்று மாவட்ட ஆட்சியா் கூறினாலும் புக்கானன் அம்மாவட்டத்தில் நிலப்பிரபுக்கள் ஒவ்வொருவரும் ஏராளமான அடிமைகளை வைத்திருந்ததாகக் கூறுகிறாா்.
1832 ஆம் ஆண்டு செலக்ட் கமிட்டி அறிக்கை," தமிழகத்தில் அடிமைச் சாதியினா் சமூகப் பொருளாதார ரீதியாக மிகக்
கேவலமாக நடத்தப்படுகின்றனா் என்றும் மற்றைய சாதியினரைவிட ஊருக்குள் அப்பால் சோிகளில் வாழ்கின்றனா். நிலப்பிரபுவின் வீட்டில் உள்ள கடினமான வேலைகளையும் செய்ய வேண்டும். கோயில் திருவிழாக்களில் தோ் இழுக்கவும் இவா்கள் பயன்படுத்தப்பட்டனா். தஞ்சை மாவட்டத்தில் பெண் அடிமைகள் மேலாடை இல்லாமல் உடம்பு வெளியே தொியும்படி வேலைசெய்ய வேண்டும்.
வேளாண் துறையில் உற்பத்தியில் ஈடுபடும் அடித்தள விவசாயிகளில் அடிமை விவசாயக் கூலிகள் சமூக ரீதியிலும் பொருளாதார ரீதியிலும் பின்னடைந்தவா்களாவா்.
1819ம் ஆண்டு கோயமுத்தூா் மாவட்டத்தில் ஒரு அடிமை 50 ரூபாய்க்கு விற்கப்பட்டாா் என்றும் திருச்சி மாவட்டத்தில் அடிமைகள் நிலத்தோடும் நிலத்தை விட்டுத் தனியாகவும் விற்கப்படுகின்றனா் என்றும் அங்கு ஒரு பள்ளாின் விலை 5 பகோடா முதல் 100 பகோடா வரை உள்ளது என்று கூறுகிறது. இதனைப் போன்று மதுரை திண்டுக்கல் நெல்லை மாவட்டங்களில் அடிமைகள் தனித்தும் நிலத்தோடும் சோ்க்கப்பட்டும விற்கப்படுகின்றனா் என்று அரசு ஆவணம் ஒன்று கூறுகிறது."
திருநெல்வேலி மாவட்டத்தில் வேளாண்மைக்குப் பயன்படும் நீா்நிலைகளைப் பராமாிக்கும் பணியில் பண்ணையடிமைகள் நிலவுடைமையாளா்களால் ஈடுபடுத்தப்பட்டனா். இது குறித்து அம்மாவட்டத்தின் ஆட்சித்தலைவா் 1830 ஆம் ஆண்டில் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளாா்,
மிராசுதாரா்களின் அடிமைகளாகிய பள்ளா்களே பெரும்பாலும் இந்த வேலைக்கு அமா்த்தப்பட்டனா்".
திருநெல்வேலியில் 1835-36ல் நிலவுடையாளருக்கு 500 அடிமைகள் இருந்தாா்கள்.
பண்ணையடிமைகள் தங்களை விடுவித்துக் கொள்ள விரும்பினால் அப்போதைய நிலவரப்படி உள்ள அடிமையின் விலையைவிட இரண்டு மடங்கு கொடுக்க வேண்டும்.
1800 ல் தஞ்சை மாவட்ட கலெக்டா் பள்ளா்,பறையா் குல அடிமைகள் அம்மாவட்டத்திலிருந்து வெளியேறி வேறு நிலவுடைமையாளா்களிடம் பணிபுாிவதைத் தடுத்து உத்தரவிட்டுள்ளனா்.
1828 ல் பிராமண நிலவுடைமையாளாிடம் பணிபுாிந்த சில பள்ளா்குல அடிமைகள் திருச்சி மாவட்டத்திலிருந்து கோவை மாவட்டத்திற்கு வந்துவிட்டனா். அவா்கள் அப்பிராமண நிலக்கிழாாிடம் திருப்பி வருவதற்கு கட்டுப்பட்டவா்கள் என திருச்சி கலெக்டா் கோவை கலெக்டருக்கு கடிதம் எழுதியுள்ளாா்.
1830 திருச்சி மாவட்ட கலெக்டா் தன் மாவட்டத்தில் இருந்து ஓடிப்போன பத்து அடிமைகளை பிடித்தனுப்பும்படி சேலம் கலெக்டருக்கு கடிதம் எழுதுகிறாா்.
1818 இல் எப்.டபிள்யூ.எல்லீஸ் என்னும் பிரித் தானிய அதிகாரியால் உருவாக்கப்பட்ட "மிராசு - உரிமை"குறித்த17கேள்விகளுக்கான பதில்களும் அவை தொடர்பான இரண்டு இணைப்புகளும் என்னும் ஆவணம். 1860 - 70களில் மேற்குறித்த "பதினேழு கேள்வி களுக்கான பதிலாக" அமையும் மிராசு உரிமை என்னும் ஆவணத்திற்கு மறுப்பாகவும், செங்கற் பட்டு மாவட்ட வன்னியர்களின் நிலப்பறிப்புக்கு எதிராகவும் 'மிராசு பாத்தியதை" எனும் பெயரில் அத்திப்பாக்கம் அ.வெங்கடாசல நாயகர், ஆங்கிலம் மற்றும் தமிழில் உருவாக்கிய ஆவணம். "பாயக்காரிகளுக்கும் மிராசுதாரர்களுக்கும் உண்டாயிருக்கிற விவாதம்" என்பது அதன் பெயர்.
இப்பகுதி மூலம் மிராசு என்பது அனாதிகாலமாக நடைமுறையில் இருந்து வருவதாகப் பதிவாகியுள்ளது. அரசர்கள் காலத்தில் பார்ப்பனர்கள் "பிரம்ம தேயம்" எனும் பெயரில் நிலங்களைத் தானமாகப் பெற்றார்கள். இதன்மூலம் குறிப்பிட்ட ஊர் அவர்களின் உரிமை யாக்கப்பட்டது. மேலும் வெள்ளாளர்கள் நிலத்துக்கு உரிமை உடையவர்களாக இருந்தனர்.
பாயக் காரி, உட்குடி, புறக்குடி என்னும் சொற்கள் நிலத்தோடு உறவுடையவர்களைக் குறிப்பதாகும். பாய்க்காரி என்பதை பாயக்காரி என்றும், அது இந்துஸ்தானி சொல்லாகவும் வின்சுலோ அகராதி குறிப்பிடுகிறது. நிலத்தைக் குத்தகைக்கு எடுத்துச் சாகுபடி செய்பவர் என்பது வின்சுலோவின் விளக்கம் ஆகும். பிற இடங்களிலிருந்து வந்து குடியேறுபவர் என்றும் குறிப்பு உள்ளது. உட்குடி என்பது குறிப்பிட்ட கிராமத்தில் வசிப்பவர்; புறக்குடி என்பவர் அக்கிராமத்திற்கு வந்து குடியேறியவர் என்னும் பொருளில் வழங்கப்படுகிறது. இச்சொற்கள் அனைத்தும் மிராசு பாக்கியதை இல்லாதவர் களைக் குறிப்பதாகும். இவர்கள் நிலத்தில் உழைத்து உற்பத்தி செய்பவர்கள். ஆனால், அந்த நிலம் அவர் களுக்கு உரிமை உடையது இல்லை. வெறும் குத்தகைக் காரர்களே. மிராசுதார் நினைத்த மாத்திரத்தில் அவர்களை வெளியேற்றலாம்.
உழைப்பவருக்கு உரிமை இல்லை என்பதே ஆவணத்தின் சாரம். இந்த ஆவணத்தை நடைமுறைப்படுத்த எல்லீஸ் முயன்றார். இந்த ஆவணத்தில் வெள்ளாளருக்கு அடிமையாகச் சில குடிகள் இருந்தது குறித்த பதிவும் இடம்பெற்றுள்ளது. எத்தனை உழுகிற குடிகளுண்டு? என்ற ஒன்பதாவது கேள்விக்குப் பதிலாகப் பின்வரும் பகுதி அமைந்துள்ளது.
"....... அந்த கிராமங்கள் வேளாளருடையதாயும் அகமுடையருடைய தாயுமிருந்தால் அவர்களுக்கு அடிமைகளிருக்கிறதுண்டு. அந்த அடிமைகளுக்கு உழுகிற ஏர் - ஒன்றுக்கு - ஒரு ஆள் விழுக்காடு வைத்துக் கொண்டு சாகுபடி செய்துகொண்டு வருவார்கள். அடிமைகள் குறைச்சலாயிருந்தாற் படியாளை வைத்துக் கொள்ளுவார்கள். பிராமணாளிருக்கிற அக்கிராரங்களாயிருந்தாற் படியாள்கள் விசேஷமாயும் அடிமைகள் கொஞ்ச மாயுஞ் சில கிராமங்களிலேயேயில்லாமலு மிப்படியிருக்கும்" (குறிப்பு: புள்ளி இட்டு எழுதப்பட்டுள்ளது. மூலத்தில் புள்ளி இருக்காது)
இந்தப் பகுதி மூலம் வேளாளர் மற்றும் அக முடையர்களுக்கு அடிமைகள் இருந்ததை அறிகிறோம். அடிமைகள் இல்லாதபோது படியாள் வைத்துக் கொண்டனர். பார்ப்பனர்கள் படியாள், அடிமைகள் ஆகியோரை வைத்திருந்தது குறித்து அறிகிறோம். இந்த ஆவணத்தின் இணைப்பு 25இல், 16ஆம் நூற்றாண்டு வாக்கில் பறையர்கள், வெள்ளாளருக்கு, தங்களுடைய தங்கை, தன் மகள் மற்றும் பேத்தி ஆகிய மூவரையும் அடிமையாக விற்றது தொடர்பான குறிப்பு உள்ளது. இதே குறிப்பு வெள்ளாளரின் பெருமை பேசும் 'வருண சிந்தாமணி' எனும் நூலில் வேளாளருக்குப் பறையர் எழுதிக் கொடுத்த சாசனம் என்று பதிவாகியுள்ளது. அப்பகுதி வருமாறு:
"................ 1512க்கு மேற் செல்லா நின்ற விளம்பி வார அற்பிசி மீ 52 செயல்கொண்ட சோழமண்டலத்துக் குலோத்துங்க சோழவள நாட்டுப் புழல்கோட்டத்து எழும்பூர் நாட்டில் தண்டையார் பேட்டை யிலிருக்குங் கொட்டி பெரியான் மகன் பெரிய திம்மன் சின்ன திம்மன் உள்ளிட்டாரும் அடிமை விலைப் பிரமாணம் பண்ணிக்கொடுத்தபடி எங்களுடன் பிறந்தபெண் வெள்ளச்சியையும், அவன் மகள் பெரியாளையும் மேற்படியாள் மகள் சோலைக்கிளியையும் ஆக, இந்த 3 பேரையும் கொத்தடிமையாகக் கொள்ளு வாருளரோ வென்று முற்கூற, இம்மொழிகேட்டு இதற்கு எதிர்மொழி கொடுத்தோன், இம்மண்டலத்து இக்கோட்டத்து இந்நாட்டில் வல்லூரிலிருக்கும் வேளாளரில் வாண்டராய உலகநாதமுதலியார் மகனான ஒற்றியப்ப முதலியார் விலை கூறித்தரில் நானே கொள்வே னென்று பிற்கூற.... இந்த மூன்று பேரையும் விற்று விலைப் பிரமாணம் பண்ணிக் கொடுத்தோம்....... இவை பெரியதிம்மன் சின்ன திம்மன் உள்ளிட்டார் கைநாட்டு. (வருணசிந்தா மணி : திராவிட காண்டம். பக் 451-52)
சங்கரய்யா உருவாக்கிய ஆவணத்தின் மூலம் மிராசு உரிமை என்பது எவ்வகையில் நிலவுடைமை சமூக அமைப் போடு நெருங்கிய தொடர்புடையது என்பதை அறிய முடிகிறது. எல்லீஸ் அறிவுறுத்தலின்படி சங்கரய்யா பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் உருவாக்கிய இவ்வாவணம் பிற்காலச் சோழர் காலத்திற்குப் பிற்பட்ட சமூகத்தில் நிலஉறவுகள் நடைமுறையில் (கி.பி.13-18 நூற்றாண்டுகள்) இருந்தமை குறித்துப் புரிந்துகொள்ள உதவுகிறது. இதனை நடைமுறைப் படுத்தும் செயல்பாடுகளுக்கு எதிராகவே அத்திப்பாக்கம் அ.வெங்கடாசலனார் செயல்பட்டார். அதுவே 'பாயக்காரிகளுக்கும் மிராசுதாரர்களுக்கும் உண்டா யிருக்கிற விவாதம்' என்பதாக அமைகிறது. அந்த ஆவணம்
மிராசுகளிடமிருந்து நிலங்களை எடுத்து பாயக்காரி, உட்குடி, புறக்குடிகளிடம் கொடுக்க வேண்டும் ஆகிய பிற கோரிக்கைகளை முன்வைத்து வெங்கடாசலனார் இந்த ஆவணத்தை உருவாக்கி யுள்ளார். மிராசுதார்கள் நிலத்தைக் கையகப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். இது தொடர்பாக அவரது ஆவணம் பின்வருமாறு பதிவு செய்திருப்பதைக் காண்கிறோம்.
"........ பாரம்பரியமாக வாசஞ் செய்வதினால் நிலபாத்திய முண்டெண்று இங்கிலாண்டு தேசத்தில் குடித்தனக்காரர்களுக்கு எவ்வளவு பாத்தியமில்லையோ அவ்வளவு இந்தியாவில் நிலங்களைக் கைவசப்படுத்திக் கொண்டிருக் கிறவர்களுக்கும் பாத்தியமில்லையென்று கவர்ன் மெண்டாரால் தீர்மானிக்கப்பட்டது. ஆகையால் கிராமத்தின் மிராசுயென்கிறது பரம்பரையாய் குடியிருப்பதனால் பாத்தியப்பட்ட தென்று சொல்லப்பட்டிருக்கின்றது. ஆனால் கவர்ன் மெண்டாரே நிலத்தின் முக்கியமான சுதந்திர கர்த்தாக்களாயிருக்கிறார்கள்..... (பத்தி: 6)
எனவே, அரசாங்கமே நிலவுரிமையைப் பெற்றிருக்க வேண்டும். நிலத்தில் குடிகள் உழுதொழில் செய்து தீர்வை செலுத்த வேண்டும். இம்முறைக்கு மாறாக மிராசு களுக்கு நிலவுரிமை என்பதும் அவர்களுக்குத் தீர்வை என்பதும் ஏற்புடையது அன்று என்பதே வெங்கடாசலனார் வாதமாக இருக்கிறது. மிராசுதார்களுக்கு நிலத்தில் எவ்வளவு பாத்தியமுண்டோ அவ்வளவு பாத்தியம் பாயக் காரிகளுக்கும் உண்டென்று தாம் நிரூபிக்கப் போவதாகவும் கூறுகிறார். (பத்தி, 12) இவ்வகையில் பாயக்காரிகளின் நிலவுரிமைக்கான ஆவணமாக வெங்கடாசலனார் ஆவணம் அமைந்துள்ளது.
தமது பந்துக்களாக வன்னியர்களைக் கருதி, அவர்களில் பள்ளிகள் எனப்படும் வன்னியர்கள் பார்ப்பனர்களுக்கு அடிமையாகச் செயல்பட்டார்கள் என்ற கூற்றையும் மறுக்கின்றார்.
"பள்ளிகள் பிராமணாளுடைய ஊழியக்காரர்களாயிருந்தாகளென்று கலெக்டர் பிளேசுதுரை சொல்லுகிறார். இதற்கு மிகுந்த பெரிய பொய் கிடையாது.... (பத்தி. 17)
ஆனால் வெள்ளாளர் பெருமை பேசும் வருண சிந்தாமணி நூல், பார்ப்பனர்களுக்குப் பள்ளிகள் அடிமை களாயிருந்தது தொடர்பான பின்வரும் செய்தியைப் பதிவுசெய்திருப்பதைக் காண்கிறோம்.
"............. 1668 வரைக்கு மேற்செல்லா நின்ற பிரபவ... ஆனி மீ 14உ சனிவார நாள் துதிகை திருவோண நட்சத்திரமுங் கூடின சுபதினத்தில் தொண்டமண்டலத்தைச் சேர்ந்த செஞ்சி ராஜ்யம் வழுதிலம்பட்டுக் காவடிக்கு வடக்கு வக்கரைக்குத் தெற்கு..... நோட்டப்பட்டிலிருக்கும் பாரிவாக்கம் மாரியப்ப முதலியாரவர்களுக்கு கருக்களாம் பாக்கத்திலிருக்கும் பள்ளிகளில், சின்னப்பயல் என்பெண்சாதி சேவி நாங்களிருவருந் நிறைய சாசன முறிகொடுத்தபடி......... இந்த வராகன் ஒன்றும், நாங்கள் பற்றிக்கொண்டு எங்கள் மகள் குழந்தையைக் கிறையமாகக் கொடுத்த படியினாலே... அநுபவித்துக் கொள்ளக் கடவீராகவும்....... சாசனமுறி கொடுத்தோம். (வருணசிந்தாமணி:453)
இவ்வகையில் பறையரின மக்களைப் போலவே பள்ளி இன மக்களும் அடிமைகளாக விற்கப்பட்டிருப் பதைக் காண்கிறோம். இதனை வெங்கடாசலனார் மறுத்து எழுதுகிறார். ஒடுக்கப்பட்ட மக்களுக்கான குரலாக இவரது குரல் இருப்பதைக் காண்கிறோம். அதன் வெளிப்பாடே இந்த ஆவணம். மிராசுதார்களுக்கு எதிரான அவரது குரல் பின்வருமாறு பதிவாகியுள்ளது.
"....... 1859ஆம் வருஷத்தில் பாயக்காரிகளுடைய வசத்திலிருக்கப்பட்ட கைபற்று நிலங்கள் அவர்கள் வசத்திலேயே இருக்க வேண்டுமென்று கவர்ன் மெண்டார் ஒரு கட்டளையிட்டார்கள். மிராசு தாரர் என்ன ஆட்சேபனைகள் சொன்ன போதிலும் பாயக்காரிகள் தங்களுடைய நிலங்களை அனாதி காலமாய் சாகுபடி செய்து கொண்டு வருகிற படியால் அந்த நிலங்களை அவர்களுக்குக் கொடுக்கக் கூடாது என்று மிராசுதாரர்கள் ஏன் ஆட்சேபிக்கிறார்கள். அனேக வருஷ காலமாய் கரம்பாய் விடப்பட்டிருக்கிற நிலங்களைக் குறித்து அவர்களேன் முன்வருகிறார்கள்... (பத்தி.97)
தமது ஆவணத்தின் மூலம் வெங்கடாசலனார் முன் வைக்கும் செய்திகளைப் பின்வருமாறு தொகுக்கலாம்.
சாதாரண குடிமக்களாகிய பாயக்காரிகள் எனப்படும் நிலத்துச் சொந்தக்காரர்களே உழவுத் தொழிலில் ஈடுபட வேண்டும். அவர்களுக்கே நிலவுரிமை வழங்க வேண்டும்.
பாரம்பரியமாகப் பயன்படுத்தினார்கள் என்பதினால், மிராசுதாரர்கள் நிலத்தின் மீது உரிமை கொண்டாட முடியாது.
பறையர்கள் "படியாள் முறை" என்பதன் மூலம் அடிமைப்படுத்தப் பட்டார்கள். தந்தை வாங்கிய கடனுக்காக, அக்குடும்பம் தொடர்ந்து காலம் காலமாக அடிமையாகப் பண்ணையாருக்கு உழைக்க வேண்டும். "அடமானம்" வைத்துக் கொள்ளும் முறையாக அது செயல்பட்டது. மிராசுதாரர்களிடம் இவர்கள் செய்து கொள்ளும் ஒப்பந்தங்கள் மூலம் வாழ்நாள் முழுவதும் அடிமையாக வாழ நிர்ப்பந்திக்கப்படுகிறார்கள். தாங்கள் அடிமையாக வாழுகிறோம் என்ற உணர்வற்றவர் களாகவே அந்த மக்கள் வாழ்ந்தனர். இத்தன்மையை மிராசுதாரர்கள் பயன்படுத்திக் கொண்டார்கள்.
பறையர்கள் மீது கடைப்பிடிக்கப்பட்ட தீண்டாமைக் கொடுமை அவர்கள் எவ்விதம் உரிமை அற்றவர்களாக வாழ்ந்தார்கள் என்பதைக் காட்டுகிறது. பறச்சேரி பகுதிகளுக்கு அரசு அலுவலர்கள் செல்வதில்லை. இதன் மூலம் அவர்களைப் பற்றிய குறிப்புகள் என்பவை அரசாங்கப் பதிவேடுகளில் வெறும் ஊகங்களாகவே பதிவு செய்யப்பட்டன. அவர்கள் வாழும் இடம் அவர் களுக்கு உரிமை இல்லாது இருந்தது. மிராசுதாரர்கள் தங்களுடைய நிலத்தை இன்னொருவருக்கு விற்பனை செய்யும்போது பறச்சேரியையும் சேர்த்து எழுதிக் கொடுத்திருப்பதை ஆவணங்களில் காண முடிகிறது. வழக்குமன்றம் செயல்படுவது குறித்தோ, அதில் தாங்கள் வழக்கு தொடுக்க இயலும் என்பது குறித்தோ எவ் விதமான அடிப்படைப் புரிதலும் பறையரின மக்களுக்கு இல்லை. இவர்கள் வழக்குப் பதிவு செய்யாமல் இருக்கும் முறையைப் பண்பாட்டு ரீதியாகவே மிராசுதார்கள் நடைமுறைப்படுத்தினார்கள். இவ்வகையில் நிலம், வீடு என்ற எவ்வித அடிப்படைச் சொத்தும் இல்லாதவர் களாகவே பறையர் மக்கள் வாழ்ந்ததைக் காணமுடிகிறது.
சொத்து அற்ற மனநிலையில், குடிபெயர்தல் என்பதை இம்மக்கள் இயல்பாகவே மேற்கொண்டனர். தென் மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளில் பிரித்தானி யர்கள் புதிதாக உருவாக்கிய தோட்டத் தொழிலுக்கு இம்மக்களை அழைத்துச் செல்லும் முறை உருவானது. அடிப்படைச் சொத்தற்ற மனநிலை மற்றும் தீண்டாமைக் கொடுமை ஆகியவற்றைக் கொண்டிருந்த மக்கள் குடி பெயர்தல் என்பதை உளவியல் ரீதியாக ஏற்றுக்கொண்டு செயல்பட்டனர். கூலி - ஒப்பந்த அடிமைகளாக, இரப்பர் தோட்டங்கள் தேயிலை - காபி தோட்டங்கள் என்று இலங்கை, மலேசியா, பர்மா, தாய்லாந்து, இந்தோனேசியா, தென்ஆப்பிரிக்கா ஆகிய நாடு களுக்கும் பல்வேறு தீவுகளுக்கும் அழைத்துச் செல்லப் பட்டனர். ஒப்பந்தக் கூலிகளாகக் குடிபெயர்ந்தோரில் 95 விழுக்காடு பறையரின மக்களே என்பதைக் கவனத்தில் கொள்வது அவசியம்.
திரமென்ஹீர் ஆவணத்தின்படி, செங்கற்பட்டு பறையரின மக்கள் நிலமற்ற கூலித் தொழிலாளர்களாக வாழ்வதும், அதன் விளைவாகக் குடிபெயர்வதும், நடை முறையில் இருந்ததை அறிகிறோம். இம்மக்களுக்கு நிலங்களைப் பட்டா போட்டுத் தரவேண்டும் என்று அவரது கோரிக்கையாக இருந்தது. இந்தப் பின்புலத்தில் ஒடுக்கப்பட்டோருக்கான நில ஒதுக்கீடு (Depressed class land) என்பதும் பிரித்தானிய ஆட்சியாளர்களால் செய்யப்பட்டது. இது பஞ்சமி நிலம் என்று இன்று அழைக்கப்படுகிறது. இவ்விதம் ஒதுக்கப்பட்டவற்றையும் அவர்கள் தொடர்ந்து அநுபவிக்கவில்லை என்பதும் வரலாறு. அந்த நிலங்களும் பிற்காலங்களில் மிராசு தாரர்களாலும் அரசு அதிகாரிகளாலும் பறிக்கப் பட்டதை அறிகிறோம்.
மேற்குறித்த மூன்று ஆவணங்களும் ஒரு குறிப் பிட்ட பகுதியில் இருந்த நிலஉறவு தொடர்பான தன்மை களை வெளிப்படுத்துகின்றன. இவற்றின் மூலம் பெறக் கூடிய கருத்துநிலைகளைப் பின்வரும் வகையில் தொகுத்துக் கொள்ள முடியும்.
பிரித்தானியர்கள் ஆட்சி அதிகாரத்தைக் கையில் எடுத்துக்கொண்டதும், நிலத்தின் மூலம் கிடைக்கும் வருவாய் குறித்த ஆய்வில் ஈடுபடத் தொடங்கினர். நிலம் யாருக்கு உரிமை என்பதை வரையறை செய்வதின் மூலம், வருவாய் எப்படிப் பெறமுடியும்? என்பதை விவாதத்திற்கு உட் படுத்தினர். இதன் விளைவாகவே காலம் காலமாக நடைமுறையில் இருந்து வந்த "மிராசு" எனும் நில உரிமை குறித்த ஆவணத்தை உருவாக்கினர். இந்த ஆவணம், வெள்ளாளர், அகமுடையர், பார்ப்பனர் என்னும் ஆதிக்க சாதியினருக்கே நிலம் உரிமை உடையது. அவர்களே மிராசு உரிமை பெற்ற அல்லது நிலஉரிமை பெற்ற மிராசுதாரர்கள் என்ற முடிவுக்கு வந்தனர். மிராசு மரபோடு தொடர் புடைய ரயத்துவாரி, ஜெமீன்தாரி ஆகிய பிற தொடர்பான விவாதங்களும் உருவாயின. பிரித்தானிய அதிகாரிகள் நிலஉறவு குறித்த பல் வேறு கருத்துநிலைகளை முன்வைத்தனர். "பதினேழு கேள்விகளுக்கான பதில்" எனும் சங்கரய்யா உதவியுடன் எல்லீஸ் தயாரித்த ஆவணம் மேற்குறித்தப் பல்வேறு உரையாடல் களுக்கு வழிவகுக்கும் போக்கில் அமைந்திருப் பதைக் காண்கிறோம்.
அத்திப்பாக்கம் அ.வெங்கடசலனார் உருவாக்கிய "மிராசு பாக்கியதை" குறித்து உரையாடும் "மிராசு தார்களுக்கும் பாயக்காரிகளுக்கும் உண்டா யிருக்கிற விவாதம்" எனும் ஆவணம், மேற்குறித்த சங்கரய்யா எல்லீஸ் ஆவணத்தை மறுதலிக்கிறது. "பாயக்காரிகள்" எனப்படும் நிலத்தில் உழுதொழில் செய்யும் உழுகுடிகளுக்கே நிலம் உரியது என்னும் விவாதத்தை முன்வைக்கிறார். "பாயக் காரிகள்" என்பவர்கள் வன்னியர் அல்லது பள்ளிகள் என்னும் சாதியைச் சேர்ந்த மக்கள் என்றும் வரை யறை செய்கிறார்கள். அவர்களுக்குரிய நிலம் பார்ப்பார் மற்றும் வெள்ளாளர் ஆதிக்கத்தில் இருப் பதாகக் கருதுகிறார். இந்த நிலங்களை ஆளும் அரசாங்கமே எடுத்துக்கொண்டு, பாயக்காரிகள் உழுதொழில் செய்ய அனுமதிக்க வேண்டும். இதன் மூலம் அரசாங்கத்திற்கு மிகுதியான தீர்வை வருவாய் கிடைக்கும் என்கிறார்.
அரசாங்கத்திடம் முறையிடுவதன் மூலம் ஏழை வன்னிய மக்களுக்கு உரிய நிலம் கிடைக்கும் என்று நம்புகிறார். காலம் காலமாக அந்த நிலங்கள் அவர்களுக்கே உரியது என்கிறார். பள்ளிகள் என்போர் ஒடுக்கப்பட்ட அடிமைகளாக வாழ்ந்தனர் என்பதை மறுக்கிறார். அரச பரம்பரையினராக வன்னிய சாதியை மேல் நிலை ஆக்க மன நிலையில், இவர் உரையாடுவதைக் காண முடிகிறது. ஒடுக்கப்பட்ட வன்னிய மக்களுக்கான போராளியாக இவர் செயல்பட்டிருப்பதைக் காண்கிறோம்.
குமரி மாவட்டத்தில் அடிமைமுறை இருந்த காலக்கட்டத்தில் கிழக்கிந்தியக் கம்பெனியின் ஆட்சியின் கீழிருந்த இந்தியாவின் பல மாகாணங்களிலும் அடிமைமுறை இருந்தது.
அடிமை முறையை விட கொடுமையான வரிகள் விதிக்கப்பட்ட ராஜ்யம் கடவுளின் தேசம் என்றழைக்கப்பட்ட திருவாங்கூர் சமஸ்தானம் தான். தலைவரி என்று 16 வயது முதல் 60 வயது வரை ஆட்களின் தலைகளை எண்ணி ஈழவர்களிமிருந்தும் சாணார்களிடமிருந்தும் வசூலிக்கப்பட்ட ஓராண்டு வரித்தொகை சற்றொப்ப ரூபாய் 88, 044/
தீண்டத்தகாத தாழ்த்தப்பட்ட சாதிப்பெண்கள்மீது திணிக்கப் பட்ட உடை பற்றிய கட்டுப்பாடுகள் பெண்களுக்கு எதிரான மனித உரிமை மீறலாகயிருந்தது. கடுமையான ஆணாதிக்க மரபானது அவர்ண சாதிப்பெண்களை ஆபாசப்படுத்தி அவர்களை இடுப்பிலிருந்து முழங்கால்வரை மறைக்கும் "முண்டு” என்ற முரட்டுத் துணியைத்தான் சுற்றியிருக்க வேண்டும் எனக் கட்டுப்படுத்தியிருந்தது. அவர்களை அரை நிர்வாணிகளாக்கியது.
தாழ்த்தப்பட்ட சாதிப்பெண்கள் தாங்கள் அடிமைப் பெண்கள் என்று அடையாளப்படுத்த கல், கண்ணாடி, இரும்பு, தகரத்திலான அணிகலன்களையே அணிய நேரிட்டது. (அடிமைகளின் தலைவர் அய்யன்காளி, பக்கம்:96)
வட இந்தியாவில் அடிமைகளின் விடுதலைக்கு டாக்டர் வில்லியம் கேரி குரல் கொடுத்தார்! இவரும் பிற பாதிரியார்களும் செய்த முயற்சியால் கிழக்கிந்தியக் கம்பெனியின் ஆட்சிக்கு உட்பட்ட இடங்களில் 1843 இல் அடிமைமுறை ஒழிந்தது!
ஆனால் திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் அடிமைமுறை தொடர்ந்தது. திருவிதாங்கூர் அரசர் 'உத்திரம் திருநாள் 'என்பவர் கொண்டுவந்த சட்டத்தின்படி டி15-10-1853 அன்று அடிமைகளுக்கு விடுதலை கிடைத்திருக்கிறது.
சென்னை அரசின் அறிவுரைப்படி 18-06-1855அன்று அரசர் உத்தரம் திருநாள் ஒரு ஆணை வெளியிட்டார் அதன்படி ...எல்லா அடிமைகளும் விடுதலை செய்யப்பட்டார்கள்! அடிமை வரியும் நீக்கப்பட்டது!
சமூக அடிமைகளாக மக்கள் துன்பப்பட்டதை நாம் அறிய நோ்கிறது.
மருதுபாண்டியன்,
சோசலிச மையம்
நூல் :தென்குமரியின் கதை
ஆசிரியர் :அ.கா. பெருமாள்
ஆறாவயல் பெரியய்யா