தமிழகத்தில் இருந்த சமஸ்தானங்களில், தொண்டைமான் மன்னர்களின் ஆட்சியில் புதுக்கோட்டையில் எல்லா வளங்களும் நிரம்பியிருந்தன. இதன் நகர் அமைப்பும், நீர் நிலைகளும், மிக மேலானவைகளாகப் போற்றப்பட்டன. நகரின் சாலைகள் நன்கு விசாலமாக வகுக்கப்பட்டிருக்கின்றன.
இந்த நகரின் நடுவில் அரண்மனை, சுற்றிலும் ராஜவீதிகள், ஒவ்வொரு ராஜவீதிக்குப் பின்னர் வரிசையாக மற்ற வீதிகள், ஆங்காங்கே குளங்கள், ஒரு குளம் நிரம்பியதும் நீர் அடுத்த குளம் செல்வதும், பின்னர் ஒவ்வொன்றும் நிரம்பியபின் புதுக்குளம் நிரம்புவதும், அந்த குளநீர் குடி நீராகப் பயன்படுவதும் இவ்வூரின் அழகு.
கி.பி.1686-1730 ல் புதுக்கோட்டை சமஸ்தானத்தை ஆண்ட ரகுநாதராய தொண்டைமான், புதிய கோட்டை கொத்தளங்களுடன் புதியதோர் நகரை நிர்மானித்து “புதுக்கோட்டை” எனப் பெயரிட்டார். ஆனால் அக்கால ஆங்கிலேய பதிவேடுகளில் “தொண்டைமான் நாடு” என்றே அழைக்கப்பட்டிருக்கிறது. தற்போதுள்ள புதுக்கோட்டை 18ம் நூற்றாண்டில் வளர்ச்சி பெற்றது.
புதுக்கோட்டை பேருந்து நிலையத்திலிருந்து 3 கி.மீ. தொலைவில் இருக்கிறது இந்த திருக்கோகர்ணம் அருங்காட்சியகம். 1910 ஆம் ஆண்டில் புதுக்கோட்டையை ஆண்ட மார்த்தாண்ட பைரவ தொண்டைமான் மன்னரால் தொடங்கப்பெற்ற பழமையான அருங்காட்சியகம்.
இந்த அருங்காட்சியகத்தில் புதுக்கோட்டையை ஆண்ட தொண்டைமான் மன்னர்கள் குறித்த செப்பேடுகள், மன்னர்களின் புகைப்படங்கள், அவர்களின் ஆட்சிக்காலங்கள், போரில் பயன்படுத்திய யுத்த தளவாடங்கள், மற்றும் காணற்கரிய பொக்கிஷங்களும் சிறப்பாக தொகுக்கப்பட்டிருக்கிறது.
ஏறத்தாழ 2000 வருடத்திற்கு மேற்பட்ட நாகரிக பண்பாட்டு வரலாற்று காட்சிகளை இங்கே காணலாம்.
கொக்கு வகைகள்கொக்கு வகைகள்
கழுகுகள்கழுகுகள்
விலங்குகளின் மண்டை ஓடுகள்விலங்குகளின் மண்டை ஓடுகள்
இசைக் கருவிகள்இசைக் கருவிகள்
வர்ணப்பூச்சிட்ட வேலைவர்ணப்பூச்சிட்ட வேலை
நடன வகைகள்நடன வகைகள்
கி.பி. 17ஆம் நூற்றாண்டு கோவில் மரச்சிற்பங்கள்கி.பி. 17ஆம் நூற்றாண்டு கோவில் மரச்சிற்பங்கள்
விவசாயக் கருவிகள்விவசாயக் கருவிகள்
ஒரே மரத்தில் இணைப்புகளில்லாமல் செதுக்கப்பட்ட சங்கிலிஒரே மரத்தில் இணைப்புகளில்லாமல் செதுக்கப்பட்ட சங்கிலி
ஜாவானியர் போர்க்குல்லாய்ஜாவானியர் போர்க்குல்லாய்
பீரங்கிகள்பீரங்கிகள்
வாட்கள், பீரங்கி இரும்புக் குண்டுகள்வாட்கள், பீரங்கி இரும்புக் குண்டுகள்
வனவிலங்குகள் எலும்புக் கூடுகள்வனவிலங்குகள் எலும்புக் கூடுகள்
கி.பி. 1728புதுக்கோட்டை தொண்டைமான் கல்வெட்டு, கி.பி. 1728
புதுக்கோட்டை அருங்காட்சியகம்புதுக்கோட்டை அருங்காட்சியகம்
புதுக்கோட்டையில் உள்ள இயற்கை வளங்கள் (ஆறுகள், குன்றுகள்), சுற்றுலாத்தலங்கள் (திருமயம் கோட்டை, சித்தன்னவாசல், குடுமியான்மலை, ஆவுடையார் கோவில், நார்த்தாமலை, குன்னாண்டார் கோவில், கொடும்பாளூர், திருக்கோகர்ணம்), கனிம வளங்கள் ஆகியவை பற்றிய தகவல்கள் இந்த அருங்காட்சியகத்தில் குறிக்கப்பட்டிருக்கின்றன.
சித்தன்னவாசலின் 2ம் நூற்றாண்டின் “பிராமி” கல்வெட்டு இங்கே காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது. பழங்கால கல்வெட்டுக்கள், கற்சிலைகள், செப்பு பட்டயங்கள், புதையல் வெண்கலப்பானை, குடிநீர் பாத்திரங்கள், தாம்பாளங்கள், குத்து விளக்குகள், சைவ வைணவ பூஜை பொருட்கள், அரக்கு வேலைப்பாடுகள், சித்தன்னவாசல் ஓவியங்கள் (இன்றும் வண்ணம் மாறாமல் இருக்கிறதாம்) சில இங்கே காட்சிப்படுத்தப்பட்டிருக்கின்றன. ஒரே மரத்தால் இணைப்புகள் இல்லாமல் செய்யப்பட்ட சங்கிலி, கோட்டைகளில் பயன்படுத்திய பூட்டுகள் என அனைத்தும் சிறப்பாக காட்சிப்படுத்தப்பட்டிருக்கின்றன.
அக்காலத்தில் பயன்படுத்திய கற்கால கருவிகள், பலவகையான விலங்குகள், பறவைகள், பூச்சிகள், வண்டுகள், மீன்கள், தானியங்கள், கடல்வாழ் உயிரினங்கள், நவீன இசையால் பயன்பாட்டில் இருந்து அழிந்துபோன இசைக்கருவிகள், அக்கால மன்னர்கள் பயன்படுத்திய போர் தளவாடங்கள், நாணயங்கள் என அற்புதமான காட்சிகளுடன் ஒரு அசையும் டைனோசரும் நம்மை பயமுறுத்துகிறது. நிச்சயம் செல்ஃபி எடுக்க விரும்புவீர்கள்.
புதுக்கோட்டையில் இருந்து, 30 நிமிட பயணத் தொலைவில் உள்ள சுற்றுலாத்தலம் இந்த திருமயம் கோட்டை. கி.பி. 17ஆம் (கிபி 1671–1710) நூற்றாண்டில் விஜயரகுநாத சேதுபதி என்னும் இராமநாதபுரம் மன்னர் காலத்தில் கட்டப்பட்டது. இன்றும் இக்கோட்டை ஒரு வரலாற்றுச் சின்னமாக இந்திய அரசின் தொல்லியல் துறையால் பாதுகாக்கப்படுகின்றது. இதன் உச்சியில் ஒரு பீரங்கி நிறுவப்பட்டுள்ளது.
இந்த அருங்காட்சியத்தின் சிறப்பு என்னவென்றால், தமிழ் நாட்டின் இரண்டாவது பெரிய அருங்காட்சியகம் இந்த திருக்கோகர்ணம் அருங்காட்சியகம் தான், சென்னைக்கு அடுத்த இடம். பள்ளிக்குழந்தைகள் தவறாமல் காணவேண்டிய இடம். 2-3 மணி நேரம் இங்கே தாராளமாக செலவிடலாம். கட்டணம் 5 ரூபாய் தான். புகைப்படக் கருவி எடுத்துச்செல்ல 20 ரூபாய்.
திரைப்படத்திற்கு சென்றால் ஆகும் நேரத்தை விட 30 நிமிடம் ஒதுக்கினால் போதும். இங்குள்ள அனைத்தையும் தாராளமாக கண்டுகளிக்கலாம். மாலை 4:30 மணியளவில் அசையும் டைனோசர் நம்மை அச்சுறுத்தும். நிச்சயம் சென்று பிரமிப்படையுங்கள். பெரும்பாலும் நாம் அனைவருக்குமே பணக்காரர் ஆகவேண்டும் என்ற ஆசை இருக்கும். இங்கே “பணக்கார குருவி” என்றே ஒரு குருவி இருக்கிறது.