புதன், 22 மே, 2019

பொதுவுடைமை போராளி, தியாகி தோழர் என்.வெங்கடாசலம் கொடும்புறார்




பொதுவுடைமை (கம்யூனிஸ்ட்) போராளி; கொண்ட கொள்கைக்காக உயிரைநீர்த்த உண்மையான தியாகி :-








மறைந்த. தியாகி தோழர் என்.வெங்கடாசலம் கொடும்புறார் அவர்களின் நினைவு தூண்:-

இடம்:- இராயமுண்டான்பட்டி (இராயமுண்டார்), பூதலூர் தாலுக்கா, தஞ்சை மாவட்டம்.

தோழர் தியாகி.என்.வெங்கடாச்சலம் அவர்கள் தஞ்சைவளநாட்டு கள்ளர் நாடுகளில் ஒன்றான ஏரிமங்கலநாட்டில் கொடும்புறார் பட்டந்தாங்கிய ஈசநாட்டுக்கள்ளர் குடும்பவழி தோன்றல்.

சிறுவயதிலேயே கம்யூனிச கொள்கையின்பால் ஈர்க்கப்பட்டு சாதி ஒழிப்பு, தீண்டாமை,ஏழை,எளிய தொழிலாளர்களுக்கான போராட்டம் என்று பொதுவுடைமைக்காக தன் வாழ்வை அர்பணித்தவர்.

1925ம் ஆண்டு தோன்றி 1977ம் ஆண்டில் தான்சார்ந்த கள்ளர் சமூகத்தினாராலேயே படுகொலை செய்யப்பட்டுள்ளார் எனில் எந்த அளவு கொள்கை பிடிப்போடு வாழ்ந்து மறைந்திருப்பார் என்பதை சிந்தித்துப் பார்க்க வேண்டும். இன்றும் தியாகியின் குடும்பம் ஆலமரமாய் பரந்து விரிந்து வாழ்கிறது



கால் நூற்றாண்டு காலம் தஞ்சைமண்ணில்மார்க்சிய லட்சியத்திற்காகதன்னை முற்றிலும் அர்ப்பணித்துக் கொண்டமகத்தான மக்கள் தலைவர் தியாகி என்.வெங்கடாசலம் கொடும்புறார்.

விவசாயிகள் சங்கம், விவசாயத் தொழிலாளர் சங்கம், நகரப்பகுதிகளில் தொழிற்சங்கம் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அமைப்புகளை உருவாக்கிசெயல்பட்டதுடன் பல தலைசிறந்த ஊழியர்களையும் உருவாக்கிய தலைவர் தோழர் என்.வி. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டசெயற்குழு உறுப்பினராக தஞ்சை மாவட்ட விவசாயி சங்க தலைவராக ஆற்றிய அரும்பணிகள் மிகச்சிறப்பானவைகளாகும்

தஞ்சைநகரில் கட்சிக்கு அலுவலகம் உருவாக்கியது, ஓட்டல் தொழிலாளர் சங்கத்தை உருவாக்கியது, டான்டெக்ஸ், தஞ்சை நூற்பாலை, அறிஞர் அண்ணா சர்க்கரை ஆலை போன்றஇடங்களில் தொழிற்சங்கத்தை உருவாக்கியதிலும், செயல்படுத்தியதிலும் அவரது பங்கு சிறப்பானவைகளாகும்

அவர் நடத்திய வர்க்கப் போராட்டங்களும், ஆதிக்க சாதிக்கு எதிரான ஒடுக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவான போராட்டங்களும் இன்றும் மக்கள் மனதில் நீங்கா இடம் பெற்றுள்ளன.

இரட்டை கிளாஸ் முறைக்கு முடிவு

நில உச்சவரம்பு சட்டத்திருத்தம் கோரி 1961ஆம் ஆண்டு நடைபெற்ற நாடு தழுவிய அறப்போரில் பங்கேற்று திருச்சி சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். நாடு முழுவதும் 1965-66 ஆம் ஆண்டுகளில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்கள் காங்கிரஸ் அரசால்தேசிய பாதுகாப்புச் சட்டம் என்ற பெயரில் கைது செய்யப்பட்டார்கள். அப்போது தோழர்என்.வி. அவர்களும் கடலூர் மத்திய சிறையில் இருந்தார்

அதன் பிறகு அவசர காலநிலையின் போதும் மிசா கைதியாக ஓராண்டுகாலம் திருச்சி மத்திய சிறையில் இருந்தார்.தலைமறைவாக இருந்தும் கட்சி பணியாற்றினார்

இளம் வயதிலேயே கம்யூனிஸ்ட் ஊழியராக தன் பணியைத் தொடங்கிய என். வெங்கடாசலம் தன் வாழ்நாள் முழுவதையும் ஏழை, எளிய மக்களுக்காகவே குறிப்பாக அடித்தளத்தில் சமூகக் கொடுமையினால் மிதியுண்டு கிடந்த தாழ்த்தப்பட்ட மக்களை தலைநிமிர வைப்பதற்காகவே தன் வாழ்நாளை அர்ப்பணித்தார்.

அவர்களுக்கு சமூக நீதி கிடைப்பதற்கும் தீண்டாமைக் கொடுமைகளை ஒழிப்பதற்கும், அவர்களின் கூலி உயர்விற்கும் கட்சியின் வழிகாட்டுதலுடன் ஏராளமான போராட்டங்களை நடத்தி வெற்றிகண்டவர்.தான் வாழ்ந்த மண்ணிலிருந்தே சமூகநீதிக்கான போராட்டத்தை தொடங்கினார் என்.வி.

அவரது ஊரான இராயமுண்டான்பட்டியில் ஒரே டீக்கடைதான் இருந்தது. அதிலும் தாழ்த்தப்பட்ட மக்கள் கடைக்குள் சமமாக அமர்ந்து எல்லோரையும் போல் டீ குடிக்க முடியாது. கடையில் ஓட்டை வழியாக அவர்களுக்கென வைக்கப்பட்டிருக்கும் குவளையில்தான் டீ குடிக்க வேண்டும்.

இக்கொடுமைக்கு முடிவுகட்டி அனைவரையும் சமமாக அமர்ந்து டீ குடிக்க வைத்தவர் தோழர் என்.வி. சாதி இந்துக்கள் தெருவில் செருப்பு அணியக்கூடாது என்ற வழக்கத்தை முறியடித்தவர். சுடுகாட்டில் கூட வேற்றுமையை அனுசரித்த கொடுமைக்கும் முற்றுப் புள்ளி வைத்தவர்.

சிறையில் இருந்தபடியே பஞ்சாயத்து தலைவர்

அவர் வாழ்ந்த இராயமுண்டான்பட்டி, வெண்டயம்பட்டி, சொரக்குடிப்பட்டி என்ற மூன்று வருவாய் கிராமங்கள் சேர்ந்தது வெண்டயம்பட்டி ஊராட்சி. இவ்வூராட்சியில் மூன்றுமுறை அவரை மக்கள் பஞ்சாயத்து தலைவராக தேர்ந்தெடுத்தார்கள். ஒரு முறை சிறையில் இருந்தபடியே பஞ்சாயத்து தலைவரானார்.

அந்தக்கிராமப் பஞ்சாயத்தில் அவர் தலைவரான பின்தான்பல மாற்றங்கள் நடந்தன. சுத்தமானகுடிநீர், நடுநிலைப்பள்ளி, கால்நடை மருத்துவமனை, நூலகம், நிலமற்ற ஏழைகளுக்கு தரிசு நிலங்களை பகிர்ந்தளித்தது போன்ற ஆக்கப்பூர்வ பணிகள் நடைபெற்றன.

இது போன்ற நடவடிக்கைகள் அங்கிருந்த ஆதிக்கசாதியினருக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது.தாழ்த்தப்பட்ட மக்கள், புழு பூச்சிகளைப் போல் நடத்தப்பட்டு அடக்கி வைக்கப்பட்டிருந்தவர்கள் தலை நிமிர்ந்து நடப்பதையும் ஆதிக்கவாதிகளால் சகித்துக்கொள்ளமுடியவில்லை

அதுவும் தங்களுடைய சமூகத்தை சேர்ந்த ஒருவரே இந்தமாற்றங்கள் செய்வதை ஏற்றுக் கொள்ளத்தயாராய் இல்லை. தோழர் வெங்கடாசலத்தின் மீது ஆத்திரத்தை மட்டுமல்ல வெறுப்பையும் ஏற்படுத்தியது. இவரை தீர்த்துகட்டவேண்டுமென்ற வெறித்தனம் அவர்களிடம் உருக்கொள்ள ஆரம்பித்தது.

தஞ்சையின் சகாப்தம்

வெங்கடாசலம் மிகவும் துணிவு மிக்கவர்.ஏழை எளிய மக்களை கொடுமைப்படுத்துவதைக் கண்டு ஆத்திரப்படுவார். எதிர்த்துநின்று போராடும்படி கூறுவார். தானும் அதற்கு உதவுவார். மக்களின் பிரச்சனைகளை தீர்க்காத அதிகாரிகளுடன் நேரடியாகமோதுவார். இயக்க ரீதியான நடவடிக்கைகளை எடுப்பார். சிறந்த பேச்சாளர். 

பிரச்சனைகளை தீர்வுகாணும்போது எதிரியின் வலிமையைப் பற்றி அறிந்து கொண்டு அதனை அச்சமின்றி எதிர்கொள்வார். தவறு செய்தவர்களை கடுமையாக சாடுவார். தோழர்களிடம் மென்மையாக நடந்து கொள்வார். 

தோழர் என்.வி தஞ்சை மாவட்டத்தின் ஓர் சகாப்தம்.தஞ்சைத்தரணி விவசாயிகள் விவசாயத் தொழிலாளர்களின் எழுச்சி நாயகன் தோழர் பி.சீனிவாசராவ் போல் மேற்கு தஞ்சை மாவட்ட மக்களின் மகத்தான தலைவராக செயல்பட்டவர் 

தோழர் என்.வி.1977 செப்டம்பர் 21 ஆம் தேதியன்று செந்தலை கட்சி கிளையின் மாநாட்டை நடத்திவிட்டு வந்தவரை காணவில்லை என்கிற செய்தி காட்டுத் தீயாய் பரவியது. ஆயிரக்கணக்கானோர் பதறி அடித்து ஆவேசமாகத் தேடினர். ஈரமான இடத்தை எல்லாம் தோண்டிப்பார்த்தனர். எங்கு தேடியும் அவரது உடலைக்கூட காணமுடியவில்லை.

இரக்கமற்ற ஆதிக்கக் கூட்டம் கடத்திச் சென்று அவரைக் கொலை செய்து உடலைக்கூட பார்க்க முடியாமல் செய்தது என்பது தெரிந்தது. அரசும், காவல்துறையும் வழக்கம்போல் மெத்தனம் காட்டின. வெங்கடாசலத்தைக் கண்டுபிடிக்க உடனடி நடவடிக்கைக் கோரி தஞ்சையில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்ட ஆவேச ஊர்வலமும் திலகர் திடலில் பொதுக் கூட்டமும் நடைபெற்றது.

தோழர் என்.வி.யின் உடலைத்தான் அவர்களால் அழிக்க முடிந்தது; அவரது உணர்வுகளை ஆயிரமாயிரம் தோழர்கள் ஏந்தி நடைபோடுகின்றனர். தியாகிகள் புதைக்கப்படுவதில்லை; விதைக்கப்படுகிறார்கள் என்பதற்கு எடுத்துக்காட்டானார் என்.வி

.தோழர் என்.வியின் வீர காவியம் மக்களின் மனங்களில் மென்மேலும் விதைக்கப்பட வேண்டும். ஆதிக்க சக்திகளும் ஆளும் அரசுகளும் கூட்டுக் களவாணிகள் என்பதை உணர்த்திட தோழர் என்.வி.யின் வாழ்க்கை வரலாற்றை ‘வீரவேங்கை வெங்கடாசலம்’ என்ற புத்தகத்தை தோழர் என். ராமகிருஷ்ணன் அவர்கள் எழுதியுள்ளார். 

தோழர்என்.வி.யுடன் இயக்கப்பணிகளில் ஈடுபட்ட தோழர்கள் இன்றளவிலும் அவரின் நினைவுகளை எண்ணி பெருமிதத்துடன் பேசி வருகிறார்கள். 

தோழர் என்.வி. மண்ணை விட்டு மறைந்தாலும் மக்கள் மனங்களில் என்றென்றும் வாழ்கிறார்.

தோழர் என்.வி.யின் தியாகத்தைப் போற்றுவோம். அவர் விட்டுச் சென்ற இலட்சியப் பயணத்தை தொடர்வோம்.


கட்டுரையாளர் : சிபிஎம், மாவட்டச் செயலாளர், தஞ்சை ஆர்.மனோகரன்

களஆய்வு :திரு. பரத் கூழாக்கியார்

வரலாற்று பக்கங்கள் - II

வளரி வரலாறு   👈 Click above திருமங்கையாழ்வார் வரலாறு 👈 Click above அம்பலகாரர் / அம்பலம் வரலாறு 👈 Click above வாண்டையார் வரலாறு 👈 Click a...

இந்த வலைப்பதிவில் தேடு

என்னைப் பற்றி

எனது படம்
Contact: info.kallarkulavaralaru@gmail.com, தமிழகத்தில் வாழும் கள்ளர் மரபினர் முக்குலத்தோரில் ஒரு பிரிவினர் ஆவர். கள்ளர், மறவர், அகமுடையார் ஆகிய முக்குலங்களும் போர்த் தொழிலை அடிப்படையாக கொண்டு வாழ்ந்து வந்ததால் இந்த மூன்று சாதியினரும் முக்குலத்தோர் என்று அறியப்படுகின்றனர். இந்த மூன்று குலத்தினரும் "தேவர்" என்ற பொதுவான பெயரோடு அறியப்படுகிறார்கள். கள்ளர் மரபில் அறந்தாங்கி தொண்டைமான், புதுக்கோட்டை பல்லவராயர், புதுக்கோட்டை தொண்டைமான் மற்றும் பல சமீன்தார்களும், பெரு நிலவுரிமையாளர்களும் இருக்கின்றனர். (கள்ளர் படைப்பற்று - கள்ளர் நாடு - கள்ளர்த்தடி). கள்ளர் வரலாறு : வரலாறு என்றால் வந்த வழி என்று பொருள். வந்த வழி தெரியாதவர்களுக்குப் போகும் வழி புரியாது. வரலாற்றை நாம் நினைவு கூர்வதற்குக் காரணம் கடந்து போன ஈகங்களை எண்ணிக் கண்ணீர் விடுவதற்காகவும், நிகழ்த்தி விட்ட வீரங்களைச் சொல்லிப் பெருமை பேசுவதற்காகவும் அல்ல. வருங்காலத்திற்கு வழி சமைப்பதற்கு அந்த ஈகமும் வீரமும் வழிகாட்ட வேண்டும் என்பதற்காகத்தான். கள்ளர்களின் நான்கு முக்கிய பிரிவுகள் - ஈசநாட்டுக்கள்ளர் (திருச்சி, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை) : கிளைவழிக்கள்ளர் (சிவகங்கை) : அம்பல கள்ளர் / நாட்டார் கள்ளர் (சிவகங்கை, மதுரை) : பிறமலை கள்ளர் (மதுரை, உசிலமபட்டி, தேனி, கம்பம், திண்டுக்கல்)

வலைப்பதிவு காப்பகம்

பின்பற்றுபவர்கள்