செவ்வாய், 3 ஏப்ரல், 2018

ஏடு எடுத்து தந்த ஏந்தல், முத்தமிழ் வளர்த்த வள்ளல் கோபாலசாமி இரகுநாத ராசாளியார் F.T.S





திருஞானசமந்தரால் பாடப்பட்ட அரதைப் பெருப்பாழி எனப்படும் அரித்துவாரமங்கலம் தஞ்சை மாவட்டத்தில் உள்ளது. இத்தகைய புகழ்மிக்க ஊரில், வல்லமை மிக்க இராசாளியார் வம்சத்தில் கார்த்திகை திங்கள் 17 ஆம் நாள் 1870 ஆம் ஆண்டு உதித்தவர் தான் கோபாலசாமி இரகுநாத இராசாளியார்.



தந்தையார் வாசுதேவ இரகுநாத இராசாளியார், தாய் ஆயி அம்மாள். அரித்துவாரமங்கலத்தில் பெரும் நிலக்கிழராக விளங்கிய இவரது குடும்பத்தார் வசம் 300 ஏக்கர் நிலம் இருந்தது. ஊர் மக்கள் இவர்களை பெரிய பண்ணை என அன்போடு அழைத்தனர். இராசாளியார் தனது இளமை காலத்தில், பச்சைக்கோட்டையில் விஞ்சிராயர் என்பவரிடம் 8 ஆண்டுகள் குருகுலவாசம் இருந்து பயின்றார். கும்பகோணத்தில் மெட்ரிக்குலேசன் படிப்பை முடித்தார். தஞ்சையில் இருந்த எஸ் பி ஜி கல்லூரியில் சேரந்து படித்து வந்தார். தந்தையின் உடல்நலக்குறைவு காரணமாக , படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு குடும்ப பொறுப்பை ஏற்றார். தனது சொந்த முயற்சியால் தமிழ், ஆங்கிலம், வடமொழி ஆகியவற்றில் புலமை பெற்றார்.


இவரது தாய்மாமனான வடுவக்குடி வேலு வாண்டையார் மகளான பெரியநாயகி அம்மையாரை மணந்தார். இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தையும், இரு பெண் குழந்தைகளும் பிறந்தது. ஆண் குழந்தை 12 வயதில் உயிரிழந்தது. முதல் மகள் ருக்மணிம்மாளை சீராளூர் இராஜ மன்னார்சாமி நாட்டாருக்கு மணமுடித்தார். இரண்டாவது மகள் ஆண்டாளம்மாளை வடுகக்குடி சிவகாமி வாண்டையாருக்கு மணம் முடித்தார். இவர்களின் திருமணத்திற்கு பல தமிழ் புலவர்களும், ஜமீன்களும் அழைக்கப்பட்டு பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.தமிழுக்காக வாழந்த இவர் 06.04.1920 அன்று விண்ணுலகை அடைந்தார்.






தான் இறப்பதற்கு முன் தன் மனைவியாரையும் மற்றவரையும் அழைத்து தான் மறைந்தபின் யாரும் அழக்கூடாது என்றும் மாறாக இறைவனை துதித்து செந்தமிழ் பாடல்கள் பாடவேண்டும் என கேட்டுக்கொண்டார். அவ்வாறே அவரது இறப்பிற்கு பின் யாரும் அழவில்லை. தேவாரம், பிரபந்தங்கள் பாடப்பட்டது. இறைவனின் நாமம் போற்றும் பாடல்கள் ஒலித்தன. சங்கொலிகள் தொடர்ந்தது. இவரது உடல் எரியூட்டப்படவில்லை. அமர்ந்த நிலையில் கல்லறையில் வைக்கப்பட்டு முற்றிய தேங்காய்களால் தலையில் அடிக்கப்பட்டு கபாலம் தெரிந்த பிறகு அடக்கம் செய்யப்பட்டார்.





கோபாலசாமி புத்தகச்சாலை:-



இராசாளியாருக்கு தமிழ் நூல்களை சேகரிப்பதில் ஆர்வம் அதிகம் இருந்ததால் அரித்துவாரமங்கலத்தில் கோபாலசாமி புத்தகசாலை ஒன்றை நிறுவினார். ஏழை குழந்தைகளின் கல்வி அறிவை வளர்த்தார்.


உ.வே.சா புறநானூறு பதிப்பித்த போது அவரிடம் இல்லாத பிரதிகள் ராசாளியாரிடம் நூலகத்தில் இருக்கவே, அவர் உவேசாவுக்கு கொடுத்து உதவினார்.இந்த அற்புத தகவலை ஐயரே புறநானூறு பதிப்பின் முன்னுரையில் தெரிவித்துள்ளார்.

பள்ளியூர் தமிழாசிரியர் கிருட்டிணசாமி சேனைநாட்டார் திரு. இராசாளியார் பால் புறநானூற்று ஏடு ஒன்று இருந்ததை திருத்தமாகப் படியெடுத்து அதனை அழகாக எழுதிவைத்திருந்தார்.

1912 ல் மறைமலையடிகள் அரித்துவாரமங்கலத்திற்கு வந்தபோது இராசாளியாரின் நூலகத்தை கண்டு வியந்தார்.பின்பு பிரணவம் எனும் தலைப்பில் உரையாற்றினார். அடிகள் மறுத்தும் அவரிடம் ரு 250 ஜ அன்பளிப்பாக அளித்தார் இராசாளியார். மறைமலையடிகள் முதன்முதலாகவும், இறுதியாகவும் ஒருவரிடம் அன்பளிப்பாக பணம்பெற்றது ராசாளியாரிடம் மட்டுமே.

*திருவாடுதுறை ஆதீன தலைவர், குரு மகாசந்திதானம் அவர்கள் கோபாலசாமி நூலகத்தை கண்டு களித்தார். அதன் சிறப்பை உணர்ந்து நூலகத்துக்கு சரசுவதி மகால் என பெயர் சூட்டி ராசாளியாருக்கு பச்சைக்கல் மாலை ஒன்றை பரிசளித்தார்.

வீரசோழியம் எனும் இலக்கியத்தின் மூல சுவடிகள் கோபாலசாமி நூலகத்தில் இருந்து பெறப்பட்ட பின்பே அச்சுநூலாக வெளிவந்தது.
தொல்காப்பிய தெய்வச்சிலையார் மூலச்சுவடி ராசாளியாரின் நூலகத்தில் இருந்து பெறப்பட்டு அச்சிடப்பட்டது.
இராசாளியாரின் நூலகத்தில் நற்றிணையும், புறநானூறும், வீரசோழிய இலக்கண நூலும் சிறப்பு வாய்ந்தது என புலவர் வெள்ளை வாரணனார் கூறியுள்ளார்.

கோபாலசாமி இலவச மருத்துவச்சாலை:-

சித்த மருத்துவத்தில் இருந்த ஆர்வத்தால் பல சித்த மருத்துவ நூல்களை படித்து தெளித்தார். கோபாலசாமி மருத்துவச்சாலை ஒன்றை தொடங்கி இலவச மருத்துவம் அளித்தார்.

சிறு வயது முதலே யோக நூல், சோதிட நூல்,மருத்துவ நூல் முதலியவற்றை கற்று தேர்ந்தார்.திருமந்திரம் முதலிய நூல்களில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை மனப்பாடம் செய்திருந்தார்.

இராசாளியாரின் திருப்பணிகள் மற்றும் கல்விப்பணிகள்:-

அரித்துவாரமங்கலத்தில் பள்ளிக்கூடம் ஒன்றை கட்டி ஏழைகளின் கல்வி கண்ணை திறந்தார்


ஶ்ரீமான் ராசாளியாரால் (7.6.1909) அன்று  அரித்துவாரமங்கலத்தில் உள்ள பெருமாள் கோவிலில் உருவாக்கப்பட்ட கோபுரம் அவருடைய பெயரையே இன்றும் சுமந்து நிற்கிறது!

#ஶ்ரீகோபாலசாமிகோபுரம்



வைணவ மரபை பின்பற்றிய இராசாளியார், அரித்துவாரமங்கலத்தில் வரதராஜ பெருமாளுக்கு ஒரு கோயிலை எழுப்பினார்.அங்குள்ள சிவன், விஷ்ணு கோயிலுகளுக்கு பல ஏக்கர் நிலங்களை அளித்தார். திருவிழாக்களை சீரும் சிறப்புமாக நடத்தினார்.

அரித்துவாரமங்கலத்தில் உள்ள வள்ளல் ராசாளியாரின் இல்லத்தில் அவருடைய அரிய புகைப்படம்:-





தஞ்சை கள்ளர்களின் கலங்கம் துடைத்த வள்ளல் :-

தஞ்சை கள்ளர்கள் குற்றப்பரம்பரை சட்டத்தில் பாதிக்கப்பட்டபோது, ஆங்கில மன்னரை சந்தித்து, தஞ்சை கள்ளர்களை கொடிய குற்ற பரம்பரை சட்டத்தில் இருந்து மீட்டார்.

இங்கிலாந்து மன்னர் ஐந்தாம் ஜார்ஜ் 1912ல் டெல்லி வந்தபோது 
முடிசூட்டு நிகழ்ச்சியில் ஏற்ற விருந்தனர்களில் ராசாளியாரும் ஒருவர்.ஐந்தாம் ஜார்ஜ் மன்னரும், ராணி மேரி அம்மையாரும் ராசாளியாருக்கு சிறப்பு பேட்டி தந்து விருந்தளித்தனர். இதன்மூலம் இவரது அரசியல் பலம் விளங்கும்.

மறைந்த முன்னாள் அமைச்சர் திரு ஆர் வி சாமிநாதன் தஞ்சை கூட்டுறவு சங்கத்தில் பேசும்போது வாண்டையாரும் ராசாளியாரும் சமூகத்தின் இருகண்கள் என்றும், இழிவான குற்றப்பரம்பரையை நீக்கிய பெருமை இவ்விருவரையே சேரும் என குறிப்பிட்டார்.

மதுரை தமிழ்ச்சங்கமும் ராசாளியாரும்:-




மதுரை தமிழ்சங்கத்தின் ஆண்டு விழாவை தஞ்சையில் தலைமை தாங்கி நடத்தினார். மேடையில் பாண்டித்துரை தேவர் ராசாளியாரை மணம் உருகி பாராட்டினார். தேவரின் வேண்டுகோளுக்கு இணங்க தஞ்சையில் கரந்தை தமிழ் சங்கத்தை தோற்றுவித்து அதற்கு முழு ஆதரவு அளித்தார் இராசாளியார்.மதுரை தமிழ்சங்கத்தின் நிர்வாக குழு உறுப்பினராகவும் விளங்கினார்.

வள்ளல் பாண்டித்துரை தேவரின் இறப்பிற்கு பிறகு, இராசாளியார் தலைமையேற்று இரங்கல் கூட்டத்தை நடத்தினார். மதுரை தமிழ் சங்கத்துக்கு தனது முழு ஆதரவை அளித்தார்.
மதுரை தமிழ் சங்கத்தின் 9 ஆம் ஆண்டு விழாவை தஞ்சையில் 7 நாட்கள் நடத்தினார் இராசாளியார். விழாவில் பேசிய பாண்டி துரை தேவர்" மதுரை தமிழ்சங்கம் பாண்டி மண்டலத்தின் பரம்பரை சொத்து அந்த பாண்டிய மன்னனின் பைங்கொடியாளை தமிழ்கன்னியினை காக்க, சோழன் ராசாளியாரை விட சிறந்த ஒருவரை காண்பது அரிது" என ஆனந்த கண்ணீர் மல்க கூறினார்.மன்னர் பாண்டியனின் மாப்பிள்ளை ராசாளியார் எனவும் புகழ்ந்துரைத்தார்.
மதுரை புலவர் கல்லூரியை தோற்றுவித்த பெருமையும் இராசாளியாரையே சேரும்.

இராசாளியார் காத்த புலவர்கள்:-

புலவர் சோழவந்தான் அரசஞ்சணமுகனாரை இராசாளியார் தமது இல்லத்தில் அழைத்து ஆதரித்தார். இவரது ஆதரவால் புலவர் தொல்காப்பிய பாயிரத்திற்கு சண்முக விருத்தியை எழுதினார்.

நற்றிணைக்கு தமிழ் இலக்கண உரை எழுதிய புலவர் பின்னத்தூர் நாராயணசாமி ஐயர் அவர்களை போற்றி பொருளுதவி அளித்து காத்து வந்தார். நற்றிணை உரை நூலில் இராசாளியாருக்கு அவர் நன்றி கூறி குறிப்பிட்ட செய்தி இன்றும் உள்ளது.
இராசாளியார் இறந்த பின்பு அவரது அரிய நூல்கள் தருமபுரம் ஆதீனத்திற்கு நன்கொடையாக வழங்கப்பட்டது.
இராசாளியார் ஆதரித்த புலவர்கள் :-அரசன் சண்முகனார், பின்னத்தூர் நாராயணசாமி ஐயர்,உவேசா,விஞ்சைராயர்,சர்க்கரை ராமசாமி புலவர், அருணாசலக் கவிராயர் கோபாலகிருஷ்ணன்,சேதுராம பாரதியார்,தூத்துக்குடி முத்தையா பிள்ளை, சாமிநாத பிள்ளை,வேங்கடேசப்பிள்ளை, முத்துசாமி ஐயர், வேங்கடசாமி நாட்டார், கந்தசாமிப்பிள்ளை,பரிதிமாற் கலைஞர்,இராகவ ஐயங்கார்.
உவேசா அவர்களுக்கு வெள்ளிப்பேழையில் வைத்து ரூ 1000 நன்கொடை வழங்கினார்.மறைமலை அடிகளுக்கு உதவினார்.புலவர் அரசன் சண்முகம் அவர்களுக்கு ரு 300 அன்பளிப்பாக அளித்தார்.கரந்தை தமிழ் சங்க கட்டட நிதிக்கு ரு 1000 முதல் நன்கொடையாக வழங்கினார்.
நாவலர் வேங்கடசாமி நாட்டார் திருச்சியில் பணியாற்றிய போது, அவரை நேரில் சந்தித்து அவருக்கு அரிசி மூட்டைகளையும், பரிசுகளையும் அளித்தார்.
முதன்முதலில் தமிழ் புலவனுக்கு சிலை வைத்தவர் ராசாளியார்:-

முதன்முதலில் தமிழ் புலவனுக்கு சிலை வைத்தவர் இராசாளியாரே. தொல்காப்பியனுக்கு நீலகிரி குன்னூரில் சிலையினை சொந்த பொறுப்பில் நிறுவி 10.09.1911 ல் திறந்து வைத்தார்.குன்னூரில் நூலகம் ஒன்றை நிறுவி, அதன் மேம்பாட்டிற்காக ரூ 10,000 நன்கொடையாக வழங்கினார். இன்றைய மதிப்பில் இது ரூ 75 லட்சத்திற்கும் மேல்.








ராசாளியாரின் அரசியல் பலம்:-

ராசாளியார் மாவட்ட கழக உறுப்பினராகவும், தாலுகா போர்டு தலைவராகவும் பணியாற்றினார். தாலுகா போர்டு தலைவர் பதவிக்கு இவர் போட்டியிட்ட போது ஒரு கட்டத்தில் வாக்குகள் சமமாக இருந்தது.இந்த இக்கட்டான சமயத்தில் கலக்டர் ஆஸ்டின் துரை தனது வாக்கை ராசாளியாருக்கு செலுத்தி வெற்றி பெறச் செய்தார்.
18.07.1911 அன்று சென்னை கவர்னர் ஆஸ்டின் துரையையும், அவரின் சீப் செக்ரட்ரி மற்றும் ப்ரேவேட் செக்ரட்ரியையும் சந்தித்து விருந்தளித்தார் ராசாளியார்.
தஞ்சை சங்கீத வித்திதா மகாஜன சங்கத்தின் முக்கிய ஆதரவாளராக விளங்கினார் ராசாளியார்.
1914ல் வெளியான Indian national congress கமிட்டி உறுப்பினர்களின் பட்டியலில் இராசாளியாரும் ஒருவராவார்.
அன்னிபெசன்ட் அம்மையார் இவரது சமூக சேவையை பாராட்டி F.T.S ( Fellowship thiyasipical society)என்ற பட்டத்தினை வழங்கினார்.

ஹாம்ரூல் இயக்கம், தியாசிப்பிக்கல் சொசைட்டி ஆகியவற்றில் பங்கேற்று சிறப்பித்தார். அன்னிபெசன்ட் அம்மையாரும், ராசாளியாரும் உற்ற நண்பர்களாக இருந்தனர்.தஞ்சை வந்திருந்த அன்னிபெசன்ட் அம்மையாரை அழைத்து மூன்று நாட்கள் தன் செலவில் சொற்பொழிவாற்ற செய்தார் ராசாளியார்.

சப் கலக்டர் ஆஸ்டின் துரையின் உற்ற நண்பராக விளங்கிய ராசாளியார், அரித்துவாரமங்கலத்தில் காரனேசன் நினைவு கட்டிடம் ஒன்றை உருவாக்கினார். இது கலக்டர் ஆஸ்டின் துரையால் திறக்கப்பட்டது.

கவர்னர் லாலியுடனான நெருங்கிய நட்பின் காரணமாக சென்னை பல்கலைகழகத்தில் தமிழ் துறை தோற்றுவிக்க உதவினார்.

கரந்தை தமிழ் சங்கம்:-

கரந்தை தமிழ்சங்க கட்டடம் வழங்க சொந்த நிதியை செலவு செய்தார். தனது மரணம் வரை கரந்தை தமிழ் சங்கத்தின் முதன்மை ஆதரவாளராக, புரவலராக விளங்கினார். கரந்தை தமிழ் சங்கத்தின் ஆண்டு அறிக்கைகளில் முதன்மை ஆதரவாளராக ராசாளியார் குறிப்பிடப்பட்டிருந்தார். தனது நூற்றுக்கணக்கான நூல்களை கரந்தை தமிழ் சங்க நூலகத்துக்கு அளித்தார்.





தமிழை செம்மொழியாக அறிவிக்கவும், சென்னை தமிழ் பல்கலைக்கழகத்தில் தமிழ் துறையினை ஏற்படுத்தவும் முதன்முதலாக இராசாளியாரால் கரந்தை தமிழ் சங்கத்தில் தீர்மானம் இயற்றப்பட்டது.
1920 ஆம் ஆண்டு வெளிவந்ந கரந்தை தமிழ் சங்க ஆண்டு அறிக்கையில் இராசாளியார் மறைவு பற்றி தெரிவிக்கப்பட்ட செய்தி:- " கரந்தை தமிழ் சங்கத்தின் முதல் புரவலரும், வரையாவீகைப் பேரிசையண்ணனும், காட்சிக்கெளிமையும், கடுஞ்சொல் இல்லா வகையில் ஒழுக்கமும், மாசில் பேரறிவும் கொண்ட சீமான் கோபால சாமி இராசாளியார் விண்ணுலகை அடைந்ததால் இச்சங்கம் கையறு நிலையை அடைந்துள்ளது"




தன் வாழ்நாள் முழுவதும் தமிழுக்காகவே வாழ்ந்த தமிழ் வளர்ச்சிப் புரவலர், ராசாளியாரின் புகழ் இன்று மறக்கடிக்கப்பட்டுள்ளது.ராசாளியாரால் கட்டப்பட்ட குன்னூர் நூலகம் இன்று மூடப்பட்டு, அவர் அமைத்த தொல்காப்பியர் சிலை பரமாரிப்பின்றி உள்ளது. இராசாளியாரால் வளரக்கப்பட்ட கரந்தை தமிழ் சங்கத்தில் இன்று ராசாளியார் பெயர் சொல்ல இவரது புகைப்படம் கூட இல்லை என்பது வருத்தத்திற்குரியதாகும். தமிழ் இனி மெல்லச்சாகும் என்றனர், தமிழ் வளர்த்த வள்ளல்களின் புகழும் கூட மெல்லச்சாகுமோ!!


வள்ளல் ராசாளியாரின் 99ம் ஆண்டு புகழ்அஞ்சலி நிகழ்ச்சியில் (06.04.2019 ) அரித்துவாரமங்கலம் பள்ளியில் 10,12 ம் ஆண்டு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவிகளுக்கு பரிசுகள்வழங்கி சிறப்பிக்கபட்டனர். இடம்:- தஞ்சை, கணேஷ் வித்யாலயா பள்ளி



நிலந்தனிலே ராசாளி, நிதிதனந்தினலே ராசாளி;
குலம் தனிலே ராசாளி கோபாலசாமி ரகுநாத ராசாளி

என்று நீலலோசனி இதழ் ஆசிரியர் சதாசிவ விஞ்சிராயர் ராசாளியாரை இவ்வாறு புகழ்கிறார்.

அமெரிக்காவில் மருத்துவராக உள்ள ராசாளியாரின் பேரன் வந்திருந்தார். மூன்றுமாதம் அமெரிக்காவும், ஒருமாதம் தாய் மண்ணிலும் வசிக்கிறார். ராசாளியாரின் 100ஆம் ஆண்டு நினைவு தினத்தை சிறப்பாக கொண்டாட அரித்துவாரமங்கலத்தில் ராசாளியார் Arch, மருத்துவ முகாம், ராசாளியார் நினைவு தினத்தை அரசு விழாவாக அறிவிக்க கோரிக்கை விடுத்தல். ராசாளியார் சமாதியை மேம்படுத்தலில் உள்ள முட்டுக்கட்டைகளை நீக்குதல் உள்ளிட்டவற்றை பற்றி ஆலோசனை செய்தார்கள்.




ராஜாளியார் அவர்களின் நூற்றி ஐம்பதாவது பிறந்த நாள் விழாவில், இராஜாளியார் திருவுருவப்படம்




ஆய்வு 
திரு . சியாம் சுந்தர் சம்பட்டியார்
திரு . பரத்  இராமகிருஷ்ணன் கூழாக்கியார்
தகவல்: 
கரந்தை தமிழ் சங்க ஆண்டு அறிக்கைகள் (1913-1920)
முத்தமிழ் வளர்த்த முக்குலத்தோர்: மூமுக வெளியீடு : மதுரை தமிழ் சங்க அறிக்கைகள்

வரலாற்று பக்கங்கள் - I

வளரி வரலாறு   👈 Click above திருமங்கையாழ்வார் வரலாறு 👈 Click above அம்பலகாரர் / அம்பலம் வரலாறு 👈 Click above வாண்டையார் வரலாறு 👈 Click a...

இந்த வலைப்பதிவில் தேடு

என்னைப் பற்றி

எனது படம்
Contact: info.kallarkulavaralaru@gmail.com, தமிழகத்தில் வாழும் கள்ளர் மரபினர் முக்குலத்தோரில் ஒரு பிரிவினர் ஆவர். கள்ளர், மறவர், அகமுடையார் ஆகிய முக்குலங்களும் போர்த் தொழிலை அடிப்படையாக கொண்டு வாழ்ந்து வந்ததால் இந்த மூன்று சாதியினரும் முக்குலத்தோர் என்று அறியப்படுகின்றனர். இந்த மூன்று குலத்தினரும் "தேவர்" என்ற பொதுவான பெயரோடு அறியப்படுகிறார்கள். கள்ளர் மரபில் அறந்தாங்கி தொண்டைமான், புதுக்கோட்டை பல்லவராயர், புதுக்கோட்டை தொண்டைமான் மற்றும் பல சமீன்தார்களும், பெரு நிலவுரிமையாளர்களும் இருக்கின்றனர். (கள்ளர் படைப்பற்று - கள்ளர் நாடு - கள்ளர்த்தடி). கள்ளர் வரலாறு : வரலாறு என்றால் வந்த வழி என்று பொருள். வந்த வழி தெரியாதவர்களுக்குப் போகும் வழி புரியாது. வரலாற்றை நாம் நினைவு கூர்வதற்குக் காரணம் கடந்து போன ஈகங்களை எண்ணிக் கண்ணீர் விடுவதற்காகவும், நிகழ்த்தி விட்ட வீரங்களைச் சொல்லிப் பெருமை பேசுவதற்காகவும் அல்ல. வருங்காலத்திற்கு வழி சமைப்பதற்கு அந்த ஈகமும் வீரமும் வழிகாட்ட வேண்டும் என்பதற்காகத்தான். கள்ளர்களின் நான்கு முக்கிய பிரிவுகள் - ஈசநாட்டுக்கள்ளர் (திருச்சி, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை) : கிளைவழிக்கள்ளர் (சிவகங்கை) : அம்பல கள்ளர் / நாட்டார் கள்ளர் (சிவகங்கை, மதுரை) : பிறமலை கள்ளர் (மதுரை, உசிலமபட்டி, தேனி, கம்பம், திண்டுக்கல்)

வலைப்பதிவு காப்பகம்

பின்பற்றுபவர்கள்