ஞாயிறு, 29 ஏப்ரல், 2018

'உறங்காப்புலி' பி.கே.மூக்கையாத்தேவர்




மதுரை மாவட்டத்தில் உசிலம்பட்டிக்கு அருகிலுள்ள பாப்பாப்பட்டி எனும் கிராமத்தில் 1923ம் வருடம் ஏப்ரல் மாதம் 4ம் நாள் கட்ட முத்துத் தேவர் – சிவனம்மாள் தம்பதியினருக்கு ஆண் குழந்து ஒன்று பிறந்தது. இதற்கு முன்னால் பிறந்த குழந்தைகள் அனைவரும் இறந்து விட்டதால் இந்தக் குழந்தையும் இறந்து விடுமோ என்ற அச்சம் இந்த தம்பதியினருக்கு இருந்தது.

இந்தக் குழந்தையைப் பாதுகாத்துக் கொள்வதற்காக அந்தப் பகுதியில் தொன்று தொட்டு நிலவி வந்த பழக்கத்தின் அடிப்படையில் ஊராரிடம் பிச்சையாகப் பணம் பெற்று மூக்குத்தி வாங்கி, விழா நடத்தி பிறந்த குழந்தைக்கு மூக்கு குத்தி மூக்கையா எனப் பெயரிட்டனர். இந்தக் குழந்தை மூக்கையா தான் பின்னாளில் தமிழக அரசியலில் தவிர்க்க முடியாத தலைவராக உருவெடுத்த அய்யா பி.கே. மூக்கையாத்தேவர் ஆவார்.







பாப்பாபட்டியில் ஆரம்பக் கல்வியும், உசிலம்பட்டியில் உயர்நிலைக் கல்வியும் பயின்றார். 1940 ஆம் ஆண்டு மதுரைக் கல்லூரியில் சேர்ந்தார். மாணவர் மன்ற செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். உடல் நலம் பாதிக்கப்பட்டதாலும், பொருளாதார நெருக்கடியாலும் கல்லூரிப் படிப்பை தொடர முடியவில்லை.

1949ம் ஆண்டு இராணி அம்மாள் என்ற மறவர்குல மங்கையை மணந்தார். இந்தத் திருமணம் பெற்றோருக்குப் பிடிக்கவில்லை. தனது மனைவி ஆசிரியையாகப் பணிபுரிந்த தெக்கூர் கிராமத்தில் வசிக்கலானார். தனது நண்பர் வி.கே.சி. நடராஜனை சந்தித்து தனது குடும்பச் சிக்கல்கள் குறித்து ஆலோசித்தார். தனது நண்பருடன் மதுரை வந்த பொழுது பார்வர்ட் பிளாக்கின் தலைவர்களான இரகுபதித் தேவரும், காமணத் தேவரும் மூக்கையாத்தேவரை பசும்பொன் தேவர் அவர்களிடம் அறிமுகம் செய்து வைத்தனர். அவரைப் பார்த்தவுடன் இவர்தான் பெரியகுளம் சட்டமன்றத் தொகுதிக்கு பொருத்தமான வேட்பாளர் என்று தேவர் முடிவு செய்துவிட்டார். அவ்வாறு அரசியல் களத்திற்கு வந்தவர் தான் அய்யா மூக்கையாத்தேவர்.


இளம் வயதில் இவர் பார்வார்டு பிளாக் கட்சியில் உறுப்பினரானார். காங்கிரஸ் கட்சியைப் போலவே இந்திய தேசியத்தை உயர்த்திப் பிடிக்கவும், ஆன்மிகமும் அரசியலும் கடவுளுக்கு நிகர் எனும் கோட்பாட்டை வலியுறுத்தவும் இந்தக் கட்சி நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் தலைமையிலும், தமிழகத்தில் உ.முத்துராமலிங்கத் தேவர் தலைமையிலும் வளர்ந்து வந்தது.1952 இல் நடந்த சுதந்திர இந்தியாவின் முதல் பொதுத் தேர்தலில் இவர் பெரியகுளம் தொகுதியிலிருந்து சட்டமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

காமராசர், அண்ணா, கலைஞர், எம்ஜிஆர், செயலலிதா உட்பட யாரும் படைக்க முடியாத வரலாற்றுச் சாதனையைச் செய்தவர் அய்யா மூக்கையாத் தேவர். ஒரே தொகுதியில் போட்டியிட்டு அனைத்து தேர்தல்களிலும் வென்ற பெருமை மூக்கையாத்தேவருக்கு மட்டுமே உண்டு. விதிவிலக்கு பசும்பொன் தேவர் அவர்கள் மட்டுமே! பசும்பொன் தேவர் அவர்களும் 1952 , 57,62 தேர்தல்களில் முதுகுளத்தூர் தொகுதியில் நின்று வெற்றி பெறுகிறார். 

1952 பெரியகுளம் சட்டமன்ற தொகுதி (அப்போது உசிலம்பட்டி தனித் தொகுதி கிடையாது).

1952- பெரியகுளம்
மூக்கையாத்தேவர் - 36,515
என்.ஆர். தியாகராஜன் - 31,188

1957- உசிலம்பட்டி
மூக்கையாத் தேவர் - 31,631
பி.வி.ராஜ் - 11,459

1962- உசிலம்பட்டி
மூக்கையாத்தேவர் - 47,069
தினகரசாமித்தேவர் - 22,992

1967- உசிலம்பட்டி
மூக்கையாத்தேவர் - 44,714
நல்லதம்பித்தேவர் - 16,225

1971 - உசிலம்பட்டி
மூக்கையாத்தேவர் - 42,292
ஆண்டித்தேவர் - 16,909

1977- உசிலம்பட்டி
மூக்கையாத்தேவர் - 35,361
பொன்னையா - 11,422

இவை தவிர 1971ல் இராமநாதபுர நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெறுகிறார். 

1971 - இராமநாதபுரம் - எம்.பி. தேர்தல்
மூக்கையாத்தேவர் - 2,08,431
பாலகிருஷ்ணன் - 1,39,276



மூக்கையாத் தேவர் பெற்ற வாக்குகளையும், வாக்கு வித்தியாசத்தையும் பாருங்கள். தமிழ்நாட்டில் மிக அதிக வாக்குகள் பெற்று தொடர்ச்சியாக வென்ற பெருமை அய்யா மூக்கையாத்தேவருக்கு மட்டுமே உண்டு. 

1967 ல் அண்ணா முதல்வராகப் பதவியேற்ற போது  புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களுக்கு பதவி பிரமாணம் செய்வது வைப்பதற்கும், பேரவை தேர்தலை நடத்தி வைப்பதற்கும் தற்காலிக தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு கலைஞர், நெடுஞ்செழியன் என பேரவை உறுப்பினர்களுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தவர் அய்யா மூக்கையாத்தேவர் அவர்களே.



கௌரி என்பவர் எழுதிய தேவர் தந்த தேவர் என்ற நூலில் அண்ணா அவர்களுக்கும் மூக்கையா தேவரே பதவி பிரமாணம் செய்து வைத்ததாக குறிப்பிட்டுள்ளார். 





கச்சத்தீவிற்காக நாடாளுமன்றத்தில் அவர் எழுப்பிய உரிமைக் குரல் மிக முக்கியமானது. அப்போது அவர் இராமநாதபுரம் எம்.பி.யாக இருந்தார். கச்சத்தீவை இந்தியா இலங்கைக்கு தாரை வார்க்கும் ஒப்பந்தத்தை மூக்கையாத் தேவர் நாடாளுமன்றத்திலே மிகக் கடுமையாக எதிர்த்தார். அப்போது அவர் இராமநாதபுரம் எம்.பி. 26.06.1974 அன்று புதுதில்லியில் இந்திரா காந்தியும் 28.06. 1974 அன்று கொழும்புவில் ஸ்ரீமாவோ பண்டாரநாயகாவும் கையெழுத்திட்டனர். அந்த ஒப்பந்தம் தொடர்பான அறிக்கையொன்றை நாடாளுமன்றத்தில் 2 3.07.1974 அன்று சமர்ப்பிக்க வெளிவிவகாரத்துறை அமைச்சர் ஸ்வரண் சிங் எழுந்த போது மூக்கையாத் தேவர் கொதித்தெழுந்தார். 


"கச்சத் தீவு என் தொகுதியில் உள்ளது. நீங்கள் ஜனநாயகம் பேசிக் கொண்டு சர்வாதிகாரி போல் நடக்கிறீர்கள். பல்லாயிரக்கணக்கான மீனவர்கள் வாழ்வு பாதிக்கப் பட்டுள்ளது. பல ஆயிரம் மீன்பிடி படகுகள் நிறுத்தப்பட்டுள்ளன. இலங்கைப் படை கச்சத்தீவு நோக்கி செல்கிறது. கச்சத்தீவு தமிழ் நாட்டின் பகுதி, இதேபோல் வட பகுதியில் பல பகுதியை அண்டை நாடுகட்குப் பூதானம் செய்து விட்டீர்கள் " என்று கூறும் போது காங்கிரஸார் இடைமறித்தனர். "நீங்கள் துரோகிகள் " என்று கடுமையாக சாடிவிட்டு வெளிநடப்பு செய்தார்.





1977 தமிழக சட்டமன்றத் தேர்தலில் உசிலம்பட்டி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட வேட்பாளரை திரு.எம் ஜி ஆர் அவர்கள் வாபஸ் பெறச் செய்தார். இத்தனைக்கும் வேட்பு மனுத்தாக்கல் செய்த பிறகு வாபஸ் பெறச் செய்தார். அதற்கு எம் ஜி ஆர் கூறிய காரணம் முக்கியமானதாகும். " நீண்ட காலம் பொது வாழ்க்கையில் இருக்கும் பெருந்தலைவரான அய்யா மூக்கையாத்தேவர் அவர்கள் அண்ணாவிற்கே பதவி பிரமாணம் செய்து வைத்தவர். அப்பேர்ப்பட்ட தலைவரை எதிர்த்து என் கட்சி போட்டியிட விருப்பமில்லை" என்று வாபஸ் பெற வைத்தார். 


தமிழக அரசியல் வரலாற்றில் அய்யா மூக்கையாத்தேவர் ஓர் அதிசயம். 1952 முதல் பொதுத் தேர்தலில் இருந்து 1979 இறக்கும் வரை தமிழக சட்டமன்றத் தேர்தல்களில் போட்டியிட்டு தோல்வியே அறியாமல் வெற்றி பெற்ற தலைவர் அய்யா மூக்கையாத் தேவர். அவரது சீடரோ 1952 முதல் 1979 வரை எவரும் அடைய முடியாத வெற்றிகளை ஈட்டுகிறார். 


கள்ளர் இனத்தின் மேம்பாட்டுக்காக ஒரு அமைப்பினை ஏற்படுத்தி பிறமலைக் கள்ளர் இனம் மேம்படுவதற்காக பல முயற்சிகளை மேற்கொண்டார். வீர பரம்பரையினரான கள்ளர்களை, பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் குற்றப் பிரிவினராக அறிவித்து இழிவு படுத்தியிருந்தனர்.சுதந்திரத்துக்குப் பிறகு பிறமலைக் கள்ளர் பாரம்பரிய பெருமைகளை வெளிக் கொணர்ந்து உரிய இடத்தைப் பெற மூக்கையா தேவரின் முயற்சியும், பிறமலைக் கள்ளர் இன மக்களின் உயர்வுக்கு வழிவகுத்தது.

கல்விப் பணியிலும் இவர் அதிகம் நாட்டம்செலுத்தினார். உசிலம்பட்டி, நீலித்தினல்லூர், கமுதி ஆகிய இடங்களில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் கல்லூரிகளை நிறுவினார். இங்கெல்லாம் ஏழை மாணவர்களுக்கு இலவச கல்வி மட்டுமல்லாமல், தங்க இடம், உணவு ஆகியவற்றுக்கும் ஏற்பாடு செய்தார். இந்த சலுகை எல்லா இன, ஜாதி மக்களுக்கும் அளிக்கப்பட்டது என்பதுதான் குறிப்பிடத் தக்கது.


மதுரையில் கோரிப்பாளையத்தில் வைகைக் கரையில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவருக்கு ஒரு சிலை அமைக்க இவர் ஏற்பாடுகளைச் செய்து இன்றும் கம்பீரமாக அங்கு நாம் பார்க்கும் சிலையை நிறுவினார். இவர் "உறங்காப் புலி", அதாவது தூங்காத புலி எனப் பெருமைப் படுத்தி அழைக்கப்பட்டார் .வீரம் மிகுந்த மண்ணின் மைந்தரான மூக்கையாத் தேவர் 1979 செப்டம்பர் 6 இல் காலமானார். இவர் நினைவாக மதுரை அரசரடியில் 1990 இல் ஒரு சிலை அமைத்துத் திறந்து வைக்கப்பட்டுள்ளது.



(உசிலம்பட்டி மூக்கையாத்தேவர் மற்றும் அருப்புக்கோட்டை ஏ ஆர் பெருமாள்தேவர் அவர்கள்)





இன்றைய தொண்டர், நாளைய தலைவர் என்பதற்க்கு எடுத்துக்காட்டு மூக்கையாத்தேவர். பொதுக் கூட்டங்களுக்கான போஸ்டர் ஓட்டுவது அவர்தான்.

பிறகு அந்தக் கூட்டத்தில் தலைவர்களில் ஒருவராக பேசுவதும் அவர்தான் ;அது மட்டுமல்ல ; நேதாஜி ,தேவர் ஆகியோரின் பெயரில் 18 வாசகங்களை போஸ்டர் ஆக்கி ,பட்டி தொட்டிகளில் எல்லாம் கொள்கை முழக்கம் எழுப்பியவரும் இவரே தான். தேவர் தந்த தேவரே தான் மூக்கையாத்தேவர்

மூக்கையாத் தேவர் இறுதிக் காலம் வரை மதுரையில் வாடகை வீட்டில் தான் வசித்து வந்தார். சாகும் போது 60000 கடன் சுமையோடுதான் இறந்தார். எளிமையின் மறு உருவம் அய்யா மூக்கையாத்தேவர். அவரை அடையாளப்படுத்த நாம் தவறிவிட்டோம்.

நவம்பர் 10,1965 ல் தமிழக சட்டமன்றத்தில் உரையாற்றிய மூக்கையாத்தேவர், விவசாயத்திற்கு தண்ணீர் கிடைப்பதற்கு போர்க்கால அடிப்படையில் திட்டங்களை வகுத்து செயல்பட வேண்டும் மற்றும் முல்லைப் பெரியாரின் அணை மட்டத்தை உயர்த்தி தண்ணீரை திருப்பி விடுவதால் தென்மாவட்ட விவசாயிகளின் பெரும் பிரச்சனை தீர்க்கப்படும் என எடுத்துரைத்தார். ( சென்னை சட்டமன்ற உறுப்பினர் விவாதம் தொகுதி xxxii/ பக் 769)

மார்ச் 31, 1969ல் தமிழக சட்டமன்றத்தில் உரையாற்றிய மூக்கையாத்தேவர் கேரள அரசின் ஒப்புதலோடு நிறைவேற்றப்பட்ட பரம்பிக்குளம் – ஆழியாறு திட்டத்தால் கோயம்புத்தூர் முழுவதும் குடிநீர் மற்றும் பாசன வசதியைப் பெறுகிறது. இதைப்போல கிருஷ்ணா நதிநீரை சென்னைக்கு திருப்பிவிடுவதன் மூலம் சென்னையின் குடிநீர் தேவை தீர்க்கப்படும் எனும் வாதத்தை வைத்தார்.

” வட இந்திய அகதிகளுக்காக கோடிக்கணக்கான ரூபாயை மத்திய அரசு வாரி வழங்கும் போது, தமிழகத்தின் பிரச்சனைகளுக்கு மாற்றான் தாய் மனப்பான்மையோடு செயல்படுகிறது, வடபுலத்து அரசினால் தென்பகுதி மக்கள், குறிப்பாக தமிழக மக்கள் பாதிக்கப்படுகிறார்கள் ” என நேரடியாக இந்திய அரசினயனை தாக்கி பேசினார் மூக்கையாத் தேவர். ( சென்னை சட்டமன்ற உறுப்பினர் விவாதம் தொகுதி xx/ பக் 792)

1967க்கு பிறகு இந்திய அரசின் மொழிக்கொள்கை பல விமர்சனங்களையும், குழப்பங்களையும் உருவாக்கியது. தமிழகத்தில் இந்தி எதிர்ப்பு போராட்டம் வலுவடைந்து வந்தது. இக்கால கட்டத்தில் 1968, ஜனவரி 23 அன்று சட்டமன்றத்தில் உரையாற்றிய மூக்கையாத்தேவர், இப்போது நாம் நாட்டை காப்பாற்ற வேண்டிய கடுமையான காலகட்டத்தில் உள்ளோம், ஏனென்றால் பல பிரச்சனைகளை நாம் எதிர்நோக்கியுள்ளோம், நம் நாடு பல மாறுபட்ட மொழி, பண்பாடு, நாகரீக பாரம்பரியங்களைக் கொண்டது, நாம் வேற்றுமையில் ஒற்றுமை காணும் குறிக்கோள் உடையவர்களாக உள்ளோம், ஒரு தாய் பிள்ளைகளைப்போல சுதந்திரத்திற்காக போராடினோம், ஆனால் இந்தி மொழிப் பிரச்சனையால் இந்திய நாட்டின் ஒருமைப்பாடு கேள்விக்குறியாக உள்ளது , இந்தி மொழி இந்தியாவில் எல்லா மக்களாலும் பேசப்படும் மொழி அல்ல, ஒரு குறிப்பிட்ட பகுதி மக்களால் மட்டுமே பேசப்படும் மொழி, இதற்கு மாறாக இருமொழிக் கொள்கையே சிறந்தது, இதன்படி நாம் இரண்டு மொழிகளை ஏற்றுக்கொள்ளலாம் ஒன்று தமிழ் மற்றொன்னு ஆங்கிலம் என வலியுறுத்தினார்.

தொடர்ந்து உரையாற்றிய மூக்கையாத்தேவர், அண்ணாவின் கருத்துப்படி தமிழ் ஆட்சி மொழியாகவும், ஆங்கிலம் நடுவண் அரசு மற்றும் மாநில அரசின் நிர்வாக தொடர்பு மொழியாக இருப்பதே சிறந்தது, தமிழக மக்கள் மீது இந்தித் திணிப்பை இந்திய அரசு நடத்தவில்லையெனில் எந்த வகையான போராட்டத்தையும் கையில் எடுக்க தயங்க போவதில்லை என்றும், நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் வழியில் சாதி சமய வேறுபாடுகளை கடந்து போராட்டங்களை நடத்தப்போவதாக மூக்கையாத்தேவர் அறிவித்தார்( சென்னை சட்டமன்ற உறுப்பினர் விவாதம் தொகுதி vii / பக் 28-34)

நாட்டின் ஒற்றுமைக்கு இரு மொழிக்கொள்கையே சிறந்தது என அப்போதே வாதிட்டார் மூக்கையாத்தேவர். மும்மொழிக் கொள்கைக்கான வலுவான எதிர்ப்பு சட்டமன்றத்தில் மூக்கையாத் தேவரால் பதியப்பட்டது.

மார்ச் 31, 1969 அன்று சட்டமன்றத்தில் உரையாற்றிய மூக்கையாத்தேவர், தமிழகத்தின் மதுரை, இராமநாதபுரம் மற்றும் திருசெல்வேலி பகுதிகள் வறட்சியால் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும், வறட்சியை போக்க மத்திய மாநில அரசுகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார், மேலும் இந்திய நாட்டின் ஆறுகள் அனைத்தையும் நாட்டுடமையாக்கி, மத்திய நீர்வழிப்பாதையை ஏற்படுத்த வேண்டும் என்றும், இதைச் செய்வதன் மூலம் மட்டுமே மாநிலங்களுக்கு இடையேயான நதிநீர் பங்கீடு பிரச்சனைகளை தீர்க்க முடியும் எனும் தனது வாதத்தை வைத்தார்.( சென்னை சட்டமன்ற உறுப்பினர் விவாதம் தொகுதி xx / பக் 788)

சேது சமுத்திர திட்டம் குறித்து….

1975 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம், பாராளுமன்றத்தில் உறையாற்றிய மூக்கையாத் தேவர், புதுக்கோட்டை, இராமநாதபுரம், மதுரை, திருநெல்வேலி பகுதி மக்கள் பஞ்சத்தில் இருந்து மீள முறையான நடவடிக்கைகளை மத்திய மாநில அரசுகள் எடுக்க வேண்டும் என்றும் , கிழக்கு ராமநாதபுரம் மக்களின் பின்தங்கிய நிலையை உயர்த்த, சேது சமுத்திர திட்டத்தை உருவாக்கி செயல்படுத்த வேண்டும் என வலியுறுத்தினார். ( பாராளுமன்ற மக்களவை விவாதம் தொகுதி XLVIII பக் 298-302)


(கவிப்பேரரசு வைரமுத்து எழுதிய கவிதை)





இந்திய அளவில் சோசலிச அரசியலை முன்னெடுத்த அய்யா மூக்கையாத்தேவர். அவர்களின் கொள்கைகளை நெஞ்சில் ஏந்துவோம்.

தொகுப்பு . சியாம் சுந்தர் சம்பட்டியார்
Article by www.sambattiyar.com 

நன்றி . உயர் திரு மருதுபாண்டியன் இரா














வரலாற்று பக்கங்கள் - II

வளரி வரலாறு   👈 Click above திருமங்கையாழ்வார் வரலாறு 👈 Click above அம்பலகாரர் / அம்பலம் வரலாறு 👈 Click above வாண்டையார் வரலாறு 👈 Click a...

இந்த வலைப்பதிவில் தேடு

என்னைப் பற்றி

எனது படம்
Contact: info.kallarkulavaralaru@gmail.com, தமிழகத்தில் வாழும் கள்ளர் மரபினர் முக்குலத்தோரில் ஒரு பிரிவினர் ஆவர். கள்ளர், மறவர், அகமுடையார் ஆகிய முக்குலங்களும் போர்த் தொழிலை அடிப்படையாக கொண்டு வாழ்ந்து வந்ததால் இந்த மூன்று சாதியினரும் முக்குலத்தோர் என்று அறியப்படுகின்றனர். இந்த மூன்று குலத்தினரும் "தேவர்" என்ற பொதுவான பெயரோடு அறியப்படுகிறார்கள். கள்ளர் மரபில் அறந்தாங்கி தொண்டைமான், புதுக்கோட்டை பல்லவராயர், புதுக்கோட்டை தொண்டைமான் மற்றும் பல சமீன்தார்களும், பெரு நிலவுரிமையாளர்களும் இருக்கின்றனர். (கள்ளர் படைப்பற்று - கள்ளர் நாடு - கள்ளர்த்தடி). கள்ளர் வரலாறு : வரலாறு என்றால் வந்த வழி என்று பொருள். வந்த வழி தெரியாதவர்களுக்குப் போகும் வழி புரியாது. வரலாற்றை நாம் நினைவு கூர்வதற்குக் காரணம் கடந்து போன ஈகங்களை எண்ணிக் கண்ணீர் விடுவதற்காகவும், நிகழ்த்தி விட்ட வீரங்களைச் சொல்லிப் பெருமை பேசுவதற்காகவும் அல்ல. வருங்காலத்திற்கு வழி சமைப்பதற்கு அந்த ஈகமும் வீரமும் வழிகாட்ட வேண்டும் என்பதற்காகத்தான். கள்ளர்களின் நான்கு முக்கிய பிரிவுகள் - ஈசநாட்டுக்கள்ளர் (திருச்சி, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை) : கிளைவழிக்கள்ளர் (சிவகங்கை) : அம்பல கள்ளர் / நாட்டார் கள்ளர் (சிவகங்கை, மதுரை) : பிறமலை கள்ளர் (மதுரை, உசிலமபட்டி, தேனி, கம்பம், திண்டுக்கல்)

வலைப்பதிவு காப்பகம்

பின்பற்றுபவர்கள்