சனி, 21 ஏப்ரல், 2018

கள்ளர் குடியில் பிறந்த இயற்கை வழி வேளாண் அறிஞர் பசுமை போராளி கோ.நம்மாழ்வார் பார்புரட்டியார்








கோ.நம்மாழ்வார் , தஞ்சாவூர் மாவட்டம், திருக்காட்டுப்பள்ளிக்கு அருகேயுள்ள இளங்காடு சிற்றூரில் 06.04.1938 இல் பிறந்தார். தந்தை பெயர் ச.கோவிந்தசாமி பார்புரட்டியார். பார்புரட்டியார் என்றால் நிலத்தையே திருப்பி போடும் மாவீரர்கள் என்று பொருள். பார்புரட்டியார் இன்று பாப்புரெட்டியார் என்று மருவி அழைக்கப்படுகிறது. ஐயா நம்மாழ்வார் பார்புரட்டியார் என்ற பட்டத்திற்கு ஏற்ப நிலத்தையே நேசித்தவர். நம்மாழ்வாரின் மனைவி சாவித்திரி அம்மாள். மகள் மீனா.




தமிழ்நாட்டின் முதன்மை இயற்கை அறிவியலாளர்களில் ஒருவர் ஆவார். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் வேளாண்மை இளங்கலைப் படிப்பை கற்றவர். பசுமைப் புரட்சி, தொழில் மயமாக்கம், சூழல் மாசடைதல் தொடர்பாக காரமான விமர்சனங்களையும் ஆக்கபூர்வமான மாற்றுகளையும் முன்வைத்தவர். தமிழ்நாட்டில் இயற்கை வழி வேளாண்மை முறைகளை ஊக்குவித்தவர். வானகம், குடும்பம் அமைப்பு உட்பட பல அரசு சாரா அமைப்புகளின் அமைப்பாளராக இருந்தார். வேம்பிற்கான காப்புரிமையை அமேரிக்கா ஒரு நிறுவனத்திற்கு வழங்கியதும் அதனை எதிர்த்து இந்திய அரசு தொடர்ந்த வழக்கில் ஐயா நம்மாழ்வார் பங்கு பெற்று அந்த காப்புரிமையை ரத்து செய்ததது.



அவர் ஒரு விவசாயப் பட்டதாரி... பட்டம் முடித்து 1960-ம் ஆண்டு பட்டம் முடித்த கையோடு கோவில்பட்டி மண்டல மழைப்பயிர் ஆய்வகத்தில் உதவி ஆய்வாளராகப் பணியில் சேர்கிறார். சில ஆண்டுகள் கழிகின்றன. வேலையில் ஏதோ தவறு இருப்பதை உணர்ந்து மேலாளரிடம் "வேலையை விட்டுப் போகிறேன்" என்கிறார். அந்தத் தவற்றுக்குக் காரணம், அப்போது விவசாயத்தில் நடந்துகொண்டிருந்த பசுமைப் புரட்சிதான். அதற்கு மேலாளர் "நீங்கள் தொடர்ந்து பணியாற்றுங்கள்" என்று ஊக்கம் கொடுக்கிறார். மேலும் சில காலம் பணி தொடர்கிறது. இம்முறை மீண்டும் வேலை மீது வெறுப்பு வருகிறது. இப்போது அவர் யாரின் பதிலுக்காகவும் காத்திருக்காமல் வேலையை உதறித் தள்ளுகிறார். அவர்தான் நம்மாழ்வார் எனும் விவசாய விடிவெள்ளி.


இயற்கை வேளாண்மை குறித்த விழிப்புஉணர்வைப் பரப்பும் அரிய பணிகளுக்காவும், பசுமைப் புரட்சியின் மோசமான விளைவையும் எடுத்துச் சொல்லும் பணிக்குத் தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர். ஜப்பானிய சிந்தனையாளர் மசானபு புகோகாவின் சிந்தனையால் பெரிதும் நாட்டம் கொண்டவராக விளங்கினார். பல கிராமங்களுக்கு நடைப்பயணம் மேற்கொண்டு இயற்கை விவசாயத்தைப் பற்றிய அவசியத்தை உணர்த்தியவர். இப்படி விவசாயத்திற்காகத் தொடங்கிய பயணம் அவரது இறுதி மூச்சு நிற்கும் வரை தொடர்ந்து கொண்டேதான் இருந்தது. அவரிடமிருந்து விவசாய ஆலோசனைகளைப் பெற்ற விவசாயிகளும், அவருடன் பயணித்த இயற்கை முன்னோடி விவசாயிகளும் பலர் தமிழ்நாட்டில் இருக்கிறார்கள். எல்லோரும் பசுமைப் புரட்சிதான் வளர்ச்சி சொல்லிட்டு இருந்தப்ப, 'இல்லை மரபு விதைகளைக் காப்பதுதான் வளர்ச்சி'ன்னார் நம்மாழ்வார்.


அவர்கள் செல்லும் இடமெல்லாம், நம்மாழ்வாருடைய தொழில்நுட்பங்களை பிறருக்குப் பகிர்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள். இந்தியாவின் விடுதலைக்குப் பின்னர், பசுமைப் புரட்சி என்ற பெயரில் ரசாயன உரங்கள் அள்ளித் தெளிக்கப்பட்டன. அதன் விளைவு கரும்புகை நிரம்பிய அறைக்குள் மாட்டிக்கொண்ட மனிதன்போல மண்ணிலிருந்த நுண்ணுயிர்கள் இறப்பைச் சந்தித்து மண் மலடாகியது. இத்தனைக்கும் காரணம் அதிக மகசூல் கிடைக்கும் என்று விவசாயிகளுக்கு ஆசை வார்த்தை காட்டியதுதான். ரசாயன உரங்களை உபயோகிக்க ஆரம்பித்த காலகட்டங்களில் எந்தப் பின்விளைவுகளும் பெரிதாக ஏற்படவில்லை. அதன் பின்னர், மண் ரசாயன உரங்களை மட்டுமே ஏற்றுக்கொள்ளும் தன்மைக்கு மாறியது. இதன் விளைவு இன்னும் அதிக அளவில் ரசாயன உரங்கள் கொட்டப்பட்டன. இவற்றுக்கெல்லாம் காரணம், விவசாயிகளுக்கு லாபம் அதிக அளவில் கிடைக்கும் என்ற எண்ணத்தை அவர்களின் மனதில் முற்றிலுமாக விதைத்ததுதான். இரசாயன உரங்கள் வந்த பின்னர் பூச்சிகளும் அதிகமாக விவசாய நிலங்களை ஆக்கிரமித்தன. அதன் காரணமாக அதிகமான பூச்சிக் கொல்லி மருந்துகளும் தெளிக்கப்பட்டன. இதனால் தீமை செய்யும் பூச்சிகளுடன் சேர்ந்து நன்மை செய்யும் பூச்சிகளும் அழியத் தொடங்கின. மேற்கண்ட பாதிப்புகளை முன்னரே உணர்ந்திருந்த நம்மாழ்வார், இந்தியாவில் உணவுப் பஞ்சத்தை போக்குவதற்காகக் கொண்டுவரப்பட்ட ’பசுமைப் புரட்சி’யின் பெயரால் நிகழ்த்தப்பட்ட அத்தனை அத்தியாயங்களையும் தன்னுடைய எழுத்து மற்றும் பேச்சு மூலமாக அடித்து நொறுக்கினார். சொன்னவர் சொன்னதோடு நின்றுவிடவில்லை. நேரடியாகக் களத்தில் இறங்கி கிராமந்தோறும் விவசாயிகளைச் சந்தித்துப் பேசினார். விவசாயிகளுக்கும், மக்களுக்கும் ரசாயன உரங்கள் பற்றிய விழிப்புஉணர்வு நிகழ்ச்சிகளையும், மண் மலடாவதைப் பற்றியும் பிரசாரம் செய்தார்.
கம்பெனி விதைகள், பல்கலைக்கழகங்களின் ஒட்டு விதைகளின் வருகையால் அழிவு நிலையில் இருந்த நம்முடைய பாரம்பர்ய விதைநெல் ரகங்களான மாப்பிள்ளை சம்பா, குடவாழை, குழியடிச்சான், கவுனி என நூற்றுக்கணக்கணக்கான விதை நெல் ரகங்களை மீட்டு மீண்டும் விவசாயிகளிடம் சேர்த்த பெருமை நம்மாழ்வாரைத்தான் சேரும். ஐரோப்பிய நாடுகள் முழுக்க பயணம் செய்தவர் நம்மாழ்வார். நம் நாட்டு வேம்புக்கான காப்புரிமையைப் பெற ஜெர்மனியில் உள்ள சர்வதேச நீதிமன்றத்தில் வாதாடி மீட்டு வந்தவர். இதுவரை குடும்பம், லீசா உள்ளிட்ட 250-க்கும் மேலான என்.ஜி.ஓ.க்களை உருவாக்கியுள்ளார்.



இயற்கை மீது ஆர்வமுள்ள இளைஞர்கள், விவசாயிகள் எனப் பலதரப்பினர் இவரின் பின்னால் நடந்தனர். இவர் காட்டிய வழியில் விவசாயம் செய்து வரக்கூடிய ஏராளமானோர் இன்றும் இருக்கத்தான் செய்கிறார்கள். இன்று இயற்கை விவசாயம் வேரூன்றிட முக்கியமான காரணகர்த்தாவாக திகழ்ந்தவர். விவசாயிகளுக்கு சொல்லிக் கொடுக்கும் அறிவியல் தொழில்நுட்பங்கள் விவசாயிகளுக்குப் புரியும்படி இருக்க வேண்டும் என்று கொள்கை உடையவர். அழகான கதை சொல்லி; அதன் முடிவிலும் விவசாயத்தைப் பற்றிய உண்மையை நெற்றிப் பொட்டில் அறையும்படி எடுத்துச் சொன்னவர். இவர் இல்லையெனில் இன்றைக்கு இயற்கை விவசாயம் மீண்டும் உயிர் பெற்றிருக்குமா என்பது சந்தேகம்தான். இன்று நாம் உண்ணும் இயற்கை விவசாய உணவுகளில் நம்மாழ்வார் பெயர் மறைந்துள்ளது என்றாலும் அது மிகையல்ல.

நம்மாழ்வார் வேளாண்மையை மட்டும் பேசவில்லை. பெரியாரிஸ்ட், காந்தியவாதி, மார்க்சிஸ்ட் என எந்த இசங்களிலும் அவரை சுருக்க முடியாது. ஆம். எல்லா இசங்களையும் உள்வாங்கிக் கொண்டு அவருடைய வழியில் அதை வெளிப்படுத்தினார். சத்தியத்தின் பக்கம், நியாயத்தின் பக்கம் நின்றவர் அவர்.

நம்மாழ்வாரால் தொடங்கப்பட்ட குடும்பம் அமைப்பு, புதுக்கோட்டை மாவட்டம், குளத்தூர் தாலுகாவில் உள்ள ஒடுகம்பட்டியில் இயங்கி வருகிறது. அங்கே இயற்கைப் பண்ணை, இயற்கை வாழ்வியல், வயல், பள்ளி என்று அமைத்து, இயற்கை ஆர்வலர்களுக்குப் பயிற்சி அளித்து வருகிறார்கள். 'இயற்கை வேளாண்மை' என்று பேச ஆரம்பித்தாலே, சொல்லி வைத்தாற்போல் எல்லோரும், 'நம்மாழ்வார்'ங்கிற பேரைதான் சொல்கிறார்கள்.

ஆனால், அவர் பற்ற வைத்த இயற்கை குறித்த தேடல் தீ, இயற்கையைக் காக்க நினைக்கும் சக்திகளாலும் இயற்கை மீது எய்யப்படும் பேரிடர்களை தகர்த்தெறியக் கிளம்பும் இளைஞர்களாலும் நாளுக்குநாள் பரபரவென எட்டுத் திக்கும் பரவிக் கொண்டிருக்கிறது. அந்த விழிப்பு உணர்வு ஊசி நம்மாழ்வார் கிழவன் போட்டது.

நம்மாழ்வாரின் மகள் மீனா "அப்பா எப்போதும் பெண்களை மதிப்பார். 'பெண்களுக்கு 33 சதவிகிதம் இடஒதுக்கீடு போதாது. எல்லாவற்றிலும் 50-க்கு 50 என்ற சம உரிமை வேண்டும்'"ன்னு சொல்லுவார். 'பெண்ணே சக்தி; வீரம்'ன்னு முழங்குவார். என்னை,'நேருவுக்கு இந்திராகாந்தி; எனக்கு மீனா'ன்னு சொல்லுவார். அவர் பெண்களுக்கு நினைத்தது 50 சதவிகிதம் இட ஒதுக்கீடு. அது இப்போ நடக்க ஆரம்பிச்சுருக்கு. எல்லா துறைகளிலும் ஆணைத் தாண்டி பெண்கள் ஜொலிக்கிறார்கள். எல்லா ஆண்களின் வெற்றிக்குப் பின்னே பெண்கள் இருக்கிறார்கள் என்பது, இப்போ எல்லா பெண்களின் வெற்றிக்கும் பின்னே ஆண்கள் இருக்கிறார்கள் என்ற நிலையாக உருமாறி இருக்கிறது" என்றார். எல்லோரும் அவரை நக்கல் பண்ணுவார்கள். 'மண்புழு உரம்'ன்னு அவர் சொன்னப்போ, யாருமே அதை ஏத்துக்கலை. 'இதெல்லாம் சுத்த பைத்தியகாரத்தனம்' ன்னாங்க. அதைக் கேட்ட நான், 'ஏம்பா 10 வருஷத்துக்குப் பிறகு நடக்குறதை இப்போ பேசணும். இப்போ நடக்குற விஷயத்தை மட்டும் பேசினால் என்ன?'ன்னு கேட்பேன். 'பத்து வருஷத்துக்குப் பிறகு நடக்குறதை இப்போ உணர்த்துறதுதான் வளர்ச்சி. இதோடு வீரியம் பிற்பாடு தெரியும்'ன்னார். இப்போ தெரிகிறதுதானே?" என்றார்.

நம்மாழ்வார் மனைவி சாவித்திரி அம்மாள் " அவருக்கும் எனக்கும் சண்டையே வந்ததில்லை. நான் கோபப்பட்டாலும், அவர் விட்டுக்கொடுத்துப் போயிடுவார். நம்மாழ்வார் பெண்களை அவ்வளவு மதிப்பார். என்னைத் திருமணம் செய்த நாளில் இருந்து, இறக்கும் வரைக்கும் என்னை, 'வாங்க, போங்க, என்னங்க'ன்னு மரியாதையாகத்தான் பேசுவார். ஆனால், வீட்டில் அதிகம் தங்காமல் அதிகம் வெளியே சுத்திக்கிட்டு இருப்பார். 'என்னடா இப்படி குடும்பத்தைக் கவனிக்காம, ஊருக்காக அலைகிறாரே'ன்னு தோணும். ஆனா, இப்போ அவருக்காக கூடுகிற கூட்டத்தை, அவர் சேர்த்து வைத்திருக்கிற ஆள்களைப் பார்க்கும்போதுதான், 'அவர் வீட்டிலேயே தங்கி இருந்தா இவ்வளவு பேரை சம்பாதிச்சிருக்க முடியுமா?'ன்னு பெருமையா நினைக்கிறேன்.


அவரோடு பல ஊர்களில் தங்க நேர்ந்திருக்கு. 'சோஷியல் ஒர்க்கர்'ன்னு சொன்னால், யாருமே மதிச்சு வாடகைக்கு வீடு தரமாட்டாங்க. ஆனால், இன்னைக்கு அவர்களே தங்கள் வீடுகளில் அவரோட போட்டோவை மாட்டி வச்சுருக்கிறதைப் பார்த்தா, மகிழ்ச்சியா இருக்கு. அதேபோல், இன்னைக்கு 'நம்மாழ்வார் சொன்னதால இயற்கை விவசாயத்துக்கு மாறிட்டோம், நாட்டு வைத்தியத்துக்கு மாறிட்டோம்'ன்னு பலரும் சொல்றாங்க. 'குழந்தைகளை எங்கே படிக்க வைக்கிறீங்க?'ன்னு கேட்டால்,'சி.பி.எஸ்.சி பள்ளியில்'ங்கிறாங்க. இது சரியா?. அரசுப் பள்ளிகளில் குழந்தைகளைப் படிக்க வையுங்கள். கல்வியிலும் மாற்றம் கொண்டு வாருங்கள். அப்போதான் இயற்கையை முழுமையாக உணர்ந்திருக்கிறீர்கள் என்று அர்த்தம்" என்றார்.


# 2007 இல் காந்திகிராம பல்கலைக்கழகம் அறிவியலில் மதிப்புறு முனைவர் பட்டம் தந்தது.

# மீத்தேன் எடுக்க எதிர்ப்பு தெரிவித்து உண்ணாவிரதம் இருந்தார்.

# "தமிழின வாழ்வியல் பல்கலைக்கழகம்' என்ற அமைப்பினைத் தொடங்கி, தமிழ்நாட்டின் கிராமப்புறங்கள் எல்லாவற்றையும் கால்நடையாக எட்டி, அங்கு கருத்தரங்கங்களும், பயிற்சி வகுப்புகளும் நடத்தினார். "பேரிகை' என்றொரு இயற்கை உழவாண்மை வாழ்வியல் மாத இதழை வெளிட்டார்.

# தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம், இவருக்கு சுற்றுச் சூழல் சுடரொளி விருதினை வழங்கியது. திண்டுக்கல்லைச் சேர்ந்த காந்திகிராம கிராமப்புற நிறுவனம் இவருக்கு டாக்டர் பட்டம் வழங்கியது

# தனது வாழ்நாளில் அலோபதி மருத்துவத்தை வேண்டாம் என்று ஒதுக்கியவர், கடந்த மூன்று ஆண்டுகளாக அக்குபஞ்சர் மருத்துவத்தில் ஆர்வம்காட்டினார். அதில் நிறையக் கற்றுக்கொள்ளும் முயற்சிகளிலும் ஈடுபட்டிருந்தார்.

# நம்மாழ்வாருக்கு நல்ல குரல் வளம். வயலில் இறங்கிவிட்டால் பாட்டு தானாக வந்துவிடும். பட்டுக்கோட்டையாரின் தத்துவப் பாடல்கள், பாரதியின் ‘எத்தனை கோடி இன்பம் வைத்தாய்?’ போன்றவை அவர் அடிக்கடி ராகமிட்டுப் பாடும் பாடல்கள்.

# நம்மாழ்வார் பகலில் பெரும்பாலும் உறங்குவது இல்லை. அவர் துயில் எழுந்தால் அது அதிகாலை 4.30 மணி என்று உறுதியாகச் சொல்லலாம். எழுந்ததும் வேப்ப மரப்பட்டையால் பல் துலக்கிவிட்டு, தலைகீழாக நின்று சிரசாசனம் செய்வார். பிறகு, மூச்சுப் பயிற்சி. அதன் பின்தான் அவரது வழக்கமான அலுவல்கள் தொடரும்.

# கடைசி வரை இளைஞர்களை அதிகம் நம்பினார் நம்மாழ்வார். கரூர் மாவட்டத்தில் இருக்கும் அவரது வானகம் பண்ணையில் சுமார் 6,000 இளைஞர்கள் இயற்கை விவசாயப் பயிற்சியை முடித்திருக்கிறார்கள்.

# மேலாடையைத் துறந்தவர் நம்மாழ்வார். கடைசிவரை தனது கொள்கையில் உறுதியாக இருந்தவர், கடும் பனிக்காலத்திலும்கூட சட்டை அணிய மாட்டார்.

# வாழ்நாளின் பெரும்பாலான நாட்களைப் போராட்டங்களிலும் பயணங்களிலுமே செல விட்டார். எங்கு சென்றாலும் பேருந்து, ரயில் என பொதுப் போக்குவரத்தையே பயன்படுத்தினார்; மற்றவர்களுக்கும் அதையே வலியுறுத்தினார். அவரது நண்பர்கள், நலம்விரும்பிகள் அவருக்கு கார் வாங்கித் தர முன்வந்தும் “என்னால முடிஞ்சவரைக்கும் சூழல் கேட்டைக் குறைச்சுக்குறேனே” என்று தவிர்த்துவிட்டார்.

# அவர் தனது வாழ்க்கைத்துணை சாவித்திரியை 50 ஆண்டுகளில் ஒருமுறைகூட ஒருமையில் அழைத்தது கிடையாது. “வாங்க… போங்க” என்று மரியாதையுடன்தான் அழைப்பார்.



# விவசாயம் கற்க வந்த விடுதலைப் புலி!

இயற்கையைப் பற்றி யார் பேசினாலும், அவர்களுக்கு நம்மாழ்வார் நண்பராகி விடுவார். அப்படித்தான் ஒரு முறை நம்மாழ்வாரிடம், ஒருவர், ‘இயற்கை வேளாண்மை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும்’ என்று கேட்டுள்ளார். ‘என்னுடைய குரு பெர்னாடு, அற்புதமாக கற்றுக் கொடுப்பார். அவரை போய் பாருங்கள்’ என்று அனுப்பி வைத்து விட்டார். அந்த நபரும் பெர்னாடு பண்ணைக்கு வந்தார். மறுநாள் காலையில், போலீஸ் அதிகாரிகள் ‘திபுதிபு’வென என் பண்ணைக்கு வந்து, ‘உங்கள் பண்ணையில் தங்கியுள்ள நபர், விடுதலைப்புலிகள் இயக்கத்தைச் சேர்ந்தவர்’ என்று சொல்லி என்னை காவல் நிலையத்துக்கு அழைத்தனர். நம்மாழ்வாரிடம் கேட்டபோது, ‘எனக்கு அவர் யார் என்று தெரியாது. இயற்கை விவசாயம் என்று சொன்னார். அதனால்தான், அனுப்பினேன்’ என்றார். அந்தளவுக்கு இயற்கை மேல் காதல் கொண்டவர், நம்மாழ்வார்.


இந்திய மண்ணுக்குச் சொந்தமான வேம்பு காப்புரிமை வழக்கு ஜெர்மனியில் நடைபெற்றது. வேம்பு காப்புரிமையை மீட்க, அவ்வழக்கில் நம்மாழ்வாரின் பங்கு குறிப்பிடத்தக்கது. அதை, நம்மாழ்வாரின் வார்த்தை களிலேயே சொன்னால்தான் சிறப்பாக இருக்கும்.

# வேப்பிலை காப்புரிமை

கோர்ட்டுக்கு வெளிய பல நாட்டுக்காரனும் நின்னுகிட்டு இருக்கான். நான் கையோட கொண்டுபோன, வேப்பங் குச்சியை எடுத்து, சிறுசா உடைச்சி, வாயில வெச்சி நல்லா கடிச்சேன். எல்லாரும், என்னையே பாக்கிறான். அதுல ஒருத்தன், ‘என்ன பண்ணிக்கிட்டு இருக்கே’னு கேட்டான். ‘பிரஷ் பண்றேன்’னு சொன்னேன். ‘எது பிரஷ்?’னு கேட்டான். வேப்பங்குச்சி முனையைக் காட்டினேன். ‘எங்க பேஸ்ட்?’னான். ‘பிரஷ்குள்ளயே பேஸ்ட் இருக்கு. இதுல இருக்கற கசப்புச் சாறுதான் பேஸ்ட். எங்க பாட்டன், முப்பாட்டன் எல்லாம் இப்படித்தான் பல் விளக்கினான்’னு சொன்னேன். பேய் அறைஞ்ச மாதிரி ஆயிட்டானுங்க.

கோர்ட்டுக்குள்ள, ‘எங்க பாட்டி, அம்மை போட்டா வேப்பிலை அரைச்சித்தான் பூசுவா. அம்மை காணாம போயிடும். எங்க ஊரு விவசாயிங்க வேப்பந்தழையையும், மாட்டுக் கோமியத்தையும் கலந்துதான் பூச்சிவிரட்டியா தெளிக்கிறான். உங்களுக்கு மேரி மாதா மாதிரி, எங்களுக்கு மாரியாத்தா பொம்பள தெய்வம். அவளுக்கு வேப்பந் தழையிலதான் மாலை போடுவோம்’னேன். சங்கப்பாடல் தொடங்கி, கூழ் வார்க்கும்போது பாடும் கும்மிப்பாட்டு வரை பாடி நடிச்சுக் காட்டினேன். அப்புறம் என்ன? ‘வேம்பு இந்தியாவின் சொத்து’னு கோர்ட் சொல்லிடுச்சு.



30 திசம்பர் 2013 அன்று பட்டுக்கோட்டை அருகே அத்திவெட்டியில் (பிச்சினிக்காடு சிற்றூரில்) மீத்தேன் வாயு திட்டத்தை எதிர்த்து போராட்டம் நடத்த சென்றிருந்த போது உடல் நலக்குறைவு ஏற்பட்டு காலமானார்.

கரூர் மாவட்டம், கடவூரில் உள்ள வானகத்தில் இயற்கை குறித்து முன்மாதிரி பண்ணையை உருவாக்க தான் வாங்கிப் போட்ட நிலத்தில் துயில் கொள்கிறார் இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார்.

இப்படி தனது செயலை, இயக்கத்தை இன்று உலகம் முழுக்க பரவலாக்கிவிட்டு, வானகத்தில் அமைதியாக உறங்கிகொண்டிருக்கிறார் அய்யா நம்மாழ்வார். அவர் ஏற்றி வைத்த இயற்கை குறித்த விழிப்பு உணர்வு தீ அணையவே அணையாது".



கோ.நம்மாழ்வார் பார்புரட்டியார் ஊரில் அரங்கனுக்கும், சம்பிரதாயத்திற்கும் பெரும் தொண்டாற்றிய குவளக்குடி சிங்கமய்யங்கார் பாடசாலையும் அதற்குண்டான நிலங்களும் இன்றும் உள்ளன. ஒரு காலத்தில் நாத்திக கோட்டையாக மாறியது.இன்றும் தங்கள் ஆச்சார்யனாக ஸ்ரீகூரத்தாழ்வான் திருவம்சத்தை சேர்ந்த ஸ்ரீபராசர பட்டர் ஸ்வாமிகளை இன்றளவும் கொண்டாடுகின்றனர்.இன்றைய இளைய தலைமுறையினரை மன்னார்குடி ஸ்ரீசெண்டலங்கார ஜீயர் ஸ்வாமிகள் அவர்கள் அந்த ஊருக்கு அடிக்கடி விஜயம் செய்து ஸ்ரீவைணவ கோட்பாட்டில் திளைக்க வழி காட்டி வருகிறார்கள்.

வரலாற்று பக்கங்கள் - II

வளரி வரலாறு   👈 Click above திருமங்கையாழ்வார் வரலாறு 👈 Click above அம்பலகாரர் / அம்பலம் வரலாறு 👈 Click above வாண்டையார் வரலாறு 👈 Click a...

இந்த வலைப்பதிவில் தேடு

என்னைப் பற்றி

எனது படம்
Contact: info.kallarkulavaralaru@gmail.com, தமிழகத்தில் வாழும் கள்ளர் மரபினர் முக்குலத்தோரில் ஒரு பிரிவினர் ஆவர். கள்ளர், மறவர், அகமுடையார் ஆகிய முக்குலங்களும் போர்த் தொழிலை அடிப்படையாக கொண்டு வாழ்ந்து வந்ததால் இந்த மூன்று சாதியினரும் முக்குலத்தோர் என்று அறியப்படுகின்றனர். இந்த மூன்று குலத்தினரும் "தேவர்" என்ற பொதுவான பெயரோடு அறியப்படுகிறார்கள். கள்ளர் மரபில் அறந்தாங்கி தொண்டைமான், புதுக்கோட்டை பல்லவராயர், புதுக்கோட்டை தொண்டைமான் மற்றும் பல சமீன்தார்களும், பெரு நிலவுரிமையாளர்களும் இருக்கின்றனர். (கள்ளர் படைப்பற்று - கள்ளர் நாடு - கள்ளர்த்தடி). கள்ளர் வரலாறு : வரலாறு என்றால் வந்த வழி என்று பொருள். வந்த வழி தெரியாதவர்களுக்குப் போகும் வழி புரியாது. வரலாற்றை நாம் நினைவு கூர்வதற்குக் காரணம் கடந்து போன ஈகங்களை எண்ணிக் கண்ணீர் விடுவதற்காகவும், நிகழ்த்தி விட்ட வீரங்களைச் சொல்லிப் பெருமை பேசுவதற்காகவும் அல்ல. வருங்காலத்திற்கு வழி சமைப்பதற்கு அந்த ஈகமும் வீரமும் வழிகாட்ட வேண்டும் என்பதற்காகத்தான். கள்ளர்களின் நான்கு முக்கிய பிரிவுகள் - ஈசநாட்டுக்கள்ளர் (திருச்சி, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை) : கிளைவழிக்கள்ளர் (சிவகங்கை) : அம்பல கள்ளர் / நாட்டார் கள்ளர் (சிவகங்கை, மதுரை) : பிறமலை கள்ளர் (மதுரை, உசிலமபட்டி, தேனி, கம்பம், திண்டுக்கல்)

வலைப்பதிவு காப்பகம்

பின்பற்றுபவர்கள்