ஞாயிறு, 11 மார்ச், 2018

பட்டுக்கோட்டை கள்ளர் வளநாடு - பட்டு மழவராயர்

சோழப்பேரரசர்கள் காலத்தில் வளநாடுகள் அனைத்தும் இராசராசன் பெயரிலேயே அமைந்திருந்தன. அதில் பட்டுக்கோட்டை பகுதி வளநாட்டு பரண்டையூர் நாட்டு செல்லூர் என்றும், மூன்றாம் குலோத்துங்க சோழன் பாண்டிய மன்னனைத் தோற்கடித்த நினைவாக "பாண்டியனை வெண்கொண்ட சோழ சதுர்வேத மங்கலம்" என்றும் பெயர் ஏற்பட்டது. பிற்காலத்தில் வளநாடுகள் பெருகின, அப்போது புன்றில் கூற்றம் புன்று என்றும் அழைக்கப்பட்டது.

பட்டுக்கோட்டையில் உள்ள கோட்டையை உருவாக்கியவர் பட்டு மழவராயர் என்கிற மழவராயர் பட்டந்தாங்கிய கள்ளர், அவருடைய கோட்டை இந்த ஊரில் இருந்த காரணத்தால் பட்டு மழவராயர் கோட்டை என்று அழைக்கப்பட்டு, கால போக்கில் பட்டுக்கோட்டை என்று அழைக்கப்படுகிறது என கிராமப்புற வழக்கு. பட்டுக்கோட்டை வட்டதிற்கு உட்பட்ட அத்திவெட்டி கிராமத்தை சேர்ந்த, இந்திய தேசிய விடுதலைக்காக தனது விரல்களை வெட்டிக்கொண்ட தியாகி பெரியதம்பி மழவராயர் இங்கு நினைவுகூரத்தக்கது .



கி.பி.1686 மராத்தியர் கல்வெட்டின்படி பட்டுக்கோட்டை முதல் பாம்பாறு (சர்ப்ப நதி - புதுக்கோட்டை எல்லை) வரை Inhabited by Kallans என்று குறிக்கப்பட்டுள்ளது. 1781 ம் ஆண்டு இக்கோட்டை ஆங்கிலேயர்களால் கைப்பற்றப்பட்டது.



பட்டுக்கோட்டையில் பட்டுவனாச்சி காட்டாறும் ஓடுகிறது. பட்டுராயன், பவட்டுரான் என்னும் பட்டங்களை உடைய கள்ளர்களும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த பகுதியில் உள்ள கள்ளர்களின் பட்டங்கள் சில 

  1. விஜயதேவர்,
  2. கண்டியர்,
  3. வாணாதிராயர்
  4. சேனாதிபதியார் 
  5. சோழகர்,
  6. முதலியார்,
  7. வாண்டையார்,
  8. பணிபூண்டார்,
  9. கொடும்புறார்,
  10. சாளுவர்,
  11. கோபாலர் 











சோழர்காலத்தை சேர்ந்த நின்ற கோலத்தில் ஸ்ரீரங்கநாதசுவாமி அமைந்திருக்கும் ஸ்ரீரங்கநாதசுவாமி கோயில் உள்ளது. மேலும் பட்டுக்கோட்டையில் புகழ்வாய்ந்த ஸ்ரீ நாடியம்மன் ஆலயம் உள்ளது.








கள்ளர் மண்டகப்படி காமதேனு வாகனம்

மராட்டிய மன்னனுக்கு வனாந்திரமாய் இருந்த இடத்தில் பிடாரியம்மன் சிலை தென்பட்டதாம். பட்டுக்கோட்டையின் கோட்டைப் பகுதியில் இருந்த சிவன் கோயில் பூசாரிகளை அழைத்து பிடாரியம்மனுக்கு அது கிடைத்த இடத்திலேயே ஓர் ஆலயம் கட்டி பிரதிஷ்டை செய்ய உத்தரவிட்டான். பங்குனி மாதத்தில் இந்த அம்மனுக்கு காப்புக் கட்டி திருவிழா தொடங்குகிறது, அதில் அருள்மிகு ஸ்ரீ நாடியம்மன் ஆலய முதல் நாள் கள்ளர் மண்டகப்படி காமதேனு வாகனம் நடைபெறும். பண்டைய காலத்தில் கள்ளர்கள் வணங்கிய, பல படையெடுப்பால் வணங்காமல் விடப்பட்ட கொற்றவையே இந்த மராட்டிய மன்னரால் கண்டெடுக்கப்பட்ட பிடாரியம்மனாக இருக்கலாம். ஐந்து நிலை ராஜகோபுரம் மற்றும் அழகிய மண்டபங்களுடன் திகழும் நாடியம்மனின் ஆலயம், 400 ஆண்டுகள் பழைமையானதாம். பட்டுக்கோட்டை பகுதியில் வடக்கு நோக்கி அமைந்திருக்கும் ஓரே ஆலயம் இதுதானாம்

சீனத்துடன் சோழர்கள் தொடர்பு கொண்டிருந்தனர். இத்தொடர்பை உறுதிப்படுத்தும் வண்ணம் பட்டுக்கோட்டை வட்டம் ஒலயக்குன்னம் பகுதியில் சீனக்காசுக் குவியல்கள் கிடைத்துளன. சீனத்தரையரென்ற பட்டம் வணிகத்தின் பொருட்டு சீனநாட்டிற்கு அனுப்பியோருக்கோ, அல்லது அந்த பகுதி வெற்றியோடோ தொடர்புடையதாக இருக்கலாம். இன்றும் கள்ளர்களில் மட்டும் இந்த பட்டம் தங்கியவர்கள் உள்ளனர். இப்பட்டமுடைய கள்ளர் குடியினர் தஞ்சையில் சீனத்தரையனூரில் வாழுகின்றனர்.



கி.மு. 2ஆம் நூற்றாண்டின் சீன நாணயம் தஞ்சாவூரில் கிடைக்கப்பெற்றுள்ளது

பட்டுக்கோட்டைக்கு 12 கி.மீ தொலைவில் ‘பாப்பாநாடு’ எனும் ஊரைத் தலைமையிடமாகக் கொண்டு "விஜயாத்தேவர்" எனும் பட்டம்தாங்கிய கள்ளர் குல அரையர்கள் அப்பகுதியை ஆண்டுவந்தனர். அரையர் விஜயாத்தேவர் தேவரின் சிலை மன்னார்குடி கோவிலில் வணங்கப்பட்டு வருகிறது.

பட்டுக்கோட்டைக்கு பக்கத்தில் உள்ள ‘மதுக்கூர்’ எனும் ஊரைத் தலைமையிடமாகக் கொண்டு "கோபாலர்" எனும் பட்டம்தாங்கிய கள்ளர் குல அரையர்கள் அப்பகுதியை ஆண்டுவந்தனர். 1954ல் இருந்து 1957 வரை பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினராகவும், 1957 முதல் 1967 வரை கந்தர்வக்கோட்டை சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்தவர் மதுக்கூர் அரையர் இரா. கிருஷ்ணசாமி கோபாலர். ராமநாதபும் மன்னர் சேதுபதியின் நெருங்கிய உறவினர்

பட்டுக்கோட்டையில் இருந்து வங்காளவிரிகுடா கடற்கரை 12 கிமீ., தொலைவில் இருக்கிறது. இந்த பகுதில் கடற்கரை ஒட்டியுள்ள சுற்றுலா தளமான மனோரா, சரபோஜி மன்னரால் கட்டப்பட்டது.

பட்டுக்கோட்டை சமீப காலத்தில் பெருநகரமாகவும், தென்னாட்டு சிங்கப்பூர் என்றும், அதன் செல்வச் சிறப்பு காரணமாக அழைக்கப்படுகிறது. சுமார் ஐம்பது, அறுபது ஆண்டுகளுக்கு முன்பாக இவ்வூர் மிகச் சிறிய ஊராக, ஊராட்சியாக, அரசாங்க அதிகாரிகளை தண்டனையாக மாற்றுவதற்குப் பயன்பட்டு வந்த இடம். கல்லணை கால்வாய் வெட்டப்பட்டு இவ்வூர் மிகச் செழிப்பாகவும், வியாபாரத் தொடர்பினாலும் இன்று செல்வச் செழிப்போடு திகழ்கிறது.

பட்டுக்கோட்டை பகுதி வனாந்திரமாக இருந்துள்ளது. காடுகள் அழித்து குடியேற்ற பகுதி காடு என முடியும், காடு கவலுடையவை கோட்டை எனவும் பெயர்களை கொண்டன என்று குறிப்பிடுகின்றனர். சோழமண்டலத்தில் கள்ளர்கள் வாழும் பகுதிகள் அவர்களின் பட்ட பெயர்களை தாங்கியே வரும். அதுப்போல் கோட்டை, காடு, நாடு என்றே முடியும் என்பதை நாம் அறிந்ததே.

பட்டுக்கோட்டை, மதுக்கூர் ஆகிய ஒன்றியங்களை உள்ளடக்கிய தாலுகாவாகவும், பட்டுக்கோட்டை, பேராவூரணி ஆகிய தாலுகாக்களை உள்ளடக்கிய கோட்டமாகவும் செயல்பட்டு வருகிறது. பட்டுக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள குறிப்பிடத்தக்க ஊராட்சிகள்

அணைக்காடு, 
மூள்ளுர்பட்டிக்காடு,
வேப்பங்காடு
கழுகுப்புளிக்காடு, 
மலவேநிர்காடு, 
மலையக்காடு, 
ஒத்தையடிக்காடு, 
சந்தனகாடு, 
டி.மரவக்கடு, 
டி.மேலக்காடு, 
டி.வடகாடு, 
சேந்தன்காடு, 
தொக்களிகாடு, 
வேப்பன்காடு, 
ராசியங்காடு
செண்டாங்காடு.


வெண்டாக்கோட்டை, 
அத்திகோட்டை, 
நடுவிக்கோட்டை, 
மகிழன்கோட்டை, 
பரக்கலக்கோட்டை, 
பொன்னவராயன்கோட்டை,
புதுக்கோட்டை உளூர்,
செண்டாக்கோட்டை, 
தாமரன்கோட்டை வடக்கு,
தாமரன்கோட்டை தெற்கு,
வேந்தக்கோட்டை
கரம்பயம்

பட்டுக்கோட்டையில் இருந்து 20 கி.மீ தொலைவில் உள்ள பேராவூரணி ஸ்ரீ வீரமாகாளியம்மன் கோவிலில் கள்ளர் குடியில் பிறந்த ஸ்ரீ குட்டியப்பர் என்பவர் காவல் தெய்வமாகவுள்ளார்.

அணைக்காடு கிராமத்தை சேர்ந்த தஞ்சை பகுதியின் பகுத்தறிவு சிங்கம் பட்டுக்கோட்டை டேவிஸ் வாணாதிராயர், 

சேண்டக்காடு கிராமத்தை சேர்ந்த சுயமரியாதை சுடரொளி எஸ்.டி.சோமசுந்தரம் கோபாலர், 


ஆம்பலாப்பட்டு கிராமத்தை சேர்ந்த கம்யூனிஸ்டு புரட்சியாளர்கள்  ஆறுமுகம்,  வெ.அ.சுப்பையன் , காசிநாதன், 


பன்னைவயல் கிராமத்தை சேர்ந்த பட்டுக்கோட்டை முன்னாள் நகர மன்ற தலைவர் திரு. விஸ்வநாதன் சேர்வைக்காரர், 


அணைக்காடு ஈன்றெடுத்த கன்னிப்பருவத்திலே படகதாநாயகன் திரு ராஜேஷ், 


தேசிய விருது பெற்ற களவாணி, வாகைசூடவ இயக்குனர் சற்குணம் கண்டியர் போன்றவர்கள் புகழ்பெற்றவர்கள்.

கிபி 1830ல் எழுதப்பட்ட மோடி ஆவணக்குறிப்பில் சோழ நாட்டில் கள்ளர் பாளையங்கள் உருவானது பற்றி கூறப்பட்டுள்ளது. அதன்படி "தஞ்சை மன்னர் பிரதாப் சிங்(1739-1763) காலத்தில் கள்ளர்கள் வாழும் பட்டுகோட்டை சீமையில் கள்ளர்களின் கிளர்ச்சியை தடுக்க அங்கு குதிரை சிப்பாய்களை நிறுத்தி வைத்திருந்தார்.



சேந்தங்குடி அரையர் விஜயத்தேவனை பற்றி புள்ளான் விடுதி நடேசகோனார் அவர்கள் 1951 எழுதிவெளிவந்த சேந்தங்குடி ஜெமீன் விஜயானந்தக்களிப்பு நூலில் விஜயன் பட்டுக்கோட்டை பட்டு மழவராயனுடன் போரிட்ட வரலாறை விமர்சியாக பாடியுள்ளார்.

சேந்தங்குடி கிராமத்தை தலைமையிடமாக கொண்டு சேந்தங்குடிப்பாளையம் உருவாக்கி கி.பி.1486 விஜயத்தேவனை சேந்தங்குடி அரையராக முடி சூட்டினார்கள். விஜயத்தேவனுக்கு ஆலங்காடு, சூரன்விடுதி, கீழாத்தூர் பகுதில் உள்ள தொண்டைமான் பட்டம் உடைய குடும்பத்தில் உள்ள பெண்களை திருமணம் செய்து வைத்தார்கள்.

விஜயத்தேவன் வேட்டை ஆடுவதற்காக பாலைவனம் சுனையக்காட்டு பகுதிக்கு சென்றிருந்தார் அப்போது பட்டுக்கோட்டைப் பகுதியயை ஆண்ட பட்டு மழவராயன் வீராச்சாமி மழவராயன் ஆவுடையார் கோவில் தேர்த்திருவிழா காண சென்றபோது, விஜயத்தேவன் வேட்டைக்கு சென்றுள்ளான் என்பதை அறிந்து கொண்டு அரசர்குளம் அரண்மனையை பிடிக்க முயன்றான். அப்போது விஜயனும் அரசர்மகனும் எதிர்த்து போரிட்டார்கள் .

"ஆங்கரசர் வேட்டைக்கு போன பின்னர்
அம்புக்கோவில் முதலாய் அரசு செய்வோன்
பாங்கான கள்ளர் குல மழ்வராயன்
பண்டு பட்டுக்கோட்டை தனில் அரசு செய்தோன்
நதீங்காக மாதர்கள் மானபங்கம்
செய்ததனால்....

பட்டுக்கோட்டை பட்டு மழவராயன் வீராச்சாமி அரசர்குளம் அரண்மனை அரசியையும் மற்றவர்கலையும் சிறைப் பிடிக்க முயன்றபோது விசயனும் இளவரசனும் பட்டு மழவராயன் படை மீது பாய்ந்து போர் தொடுத்தார்கள் என்று நடேசகோனார் எழுதியுள்ளார்.

ஸ்ரீ குட்டியப்பர் காவல் தெய்வம்.





புதுக்கோட்டை சமஸ்தானத்தை சேர்ந்த ஒரு கிராமத்தில் கள்ளர் குடியில் பிறந்த ஸ்ரீ குட்டியப்பர் வாழ்ந்துவந்தார். அப்போதிருந்த பாலைவனம் அரையர் வணங்காமுடி பண்டாரத்தார் ஆதரவில் ஸ்ரீ குட்டியப்பர் வேல், கம்பு , துப்பாக்கி முதலிய ஆயுதங்களை வைத்துக்கொண்டு ஆங்காங்கு வேட்டைக்கு செல்வது வழக்கம். அப்பொழுது ஆத்தாளுர் (பேராவூரணி ) பக்கத்தில் ஓர் புலி ஆடுமாடுகளையும், மனிதர்களையும் வேட்டையாடி வந்தது. இதனை கேள்வியுற்ற ஸ்ரீ குட்டியப்பர், அவ்விடத்திற்கு வந்து ஸ்ரீ வீரமாகாளியம்மன் ஆத்தாளின் அருள்பெற்று வேட்டையாடிப் புலியை வேலினால் குத்தி கொன்றார். ஸ்ரீ குட்டியப்பரும் இவ்விடத்திலேயே தெய்வமாகி அம்மனுக்கும், மற்றையோருக்கும் காவல் தெய்வமாயிருந்து கத்துவருகிறார். இவருடைய பங்காளிகளால் பெரும் பூஜையும், தினமும் ஒரு காலப்பூஜையும் நடத்தப்படுகிறது.



பகுத்தறிவு சிங்கம் டேவிஸ் வாணாதிராயர்:



தந்தை பெரியாரின் தளபதியாகவும், அஞ்சா நெஞ்சன் பட்டுக்கோட்டை அழகிரி அவர்களின் தோழராகவும், மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அவர்களின் ஆசிரியராகவும் திகழ்ந்தவர்.

சுயமரியாதை சுடரொளி எஸ்.டி.சோமசுந்தரம் கோபாலர்.


S.D.ஸ் என்று அன்பாக அழைக்கப்பட்ட எஸ்.டி.சோமசுந்தரம் கோபாலர், பட்டுக்கோட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில் தனது பள்ளி படிப்பைத் தொடர்ந்தார். 1980 சட்டமன்ற தேர்தலில் பட்டுக்கோட்டை தொகுதியில் போட்டியிட்டு காங்கிரஸ் மூத்த தலைவர் திரு ஏ.ஆர். மாரிமுத்து அவர்களை தோற்க்கடித்தார்.1983-ல் பட்டுக்கோட்டை பகுதியில் தொழில் நுட்ப கல்லூரியை நிறுவி ஏழைகள் தொழில் கல்வி படிக்கும் வாய்ப்பை ஏற்ப்படுத்தி கொடுத்தார்.

அஞ்சாநெஞ்சன் சு. விஸ்வநாதன் சேர்வைக்காரர்



ம.தி.மு.க தணிக்கைக்குழு உறுப்பினராக இருந்த வர், வைகோ அவர்களின் நம்பிக்கைக்குரிய தளபதியாக விளங்கினர். பட்டுக்கோட்டை நகரசபைக்கு இரண்டு முறை தலைவராக பொறுப்பேற்ற இவர், பல நல்ல திட்டங்களை செயல்படுத்தினார். ஒருமுறை இவரின் வேட்புமனு தள்ளுபடி செய்யப்பட்டதால் இவரின் துணைவியார் ஜெயபாரதி விஸ்வநாதனை நிற்கவைத்து நகரசபை தலைவராக வெற்றிபெறவைத்தார். இவரது தனிப்ட்ட செல்வாக்கின் மூலம் ம.தி.மு.க., வும் மிக செல்வாக்குடன் நகராட்சியினை கைப்பற்றி ஆட்சிசெய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

முஸ்லிம்கள் படையெடுப்பால் பாதிக்கப்பட்ட சௌராஷ்டிர இனத்தவர் தெற்குநோக்கி வந்தபோது அவர்களை கள்ளர் அரையர் சாவடி நாயக்கர் அடைக்கலம் குடுத்தது போல், பட்டுக்கோட்டை மழவராயர்களும் அடைக்கலம் கொடுத்ததாக கூறப்படுகிறது. தமிழகத்தின் இரண்டாவது மிகப்பெரிய தேங்காய் உற்பத்தி மையம், காசி விஸ்வநாதர், மல்லிகார்ஜுனேஸ்வரர் ஆகிய சிவாலயங்களும் பிரசித்தி பெற்றவை.

வியாழன், 1 மார்ச், 2018

கள்ளர்கள் குற்றப்பரம்பரையினரா



சோழ பாண்டிய மண்டலத்தில் கள்ளர்கள்





மேற்கத்திய மானிடவியல் ஆய்வாளரும், மனித நேய சேவைக்கும்,மரபு வழி வாழ்வியலை பாதுகாப்பதற்கும் அமெரிக்க அரசாங்கத்தால் தேசிய விருதை பெற்ற ஸ்டுவர்ட் ஹெச். பிளாக்பர்ன் என்ற ஆய்வாளர் குற்றப்பரம்பரை என்கிற வார்த்தையை மறுத்து கட்டுரை வெளியிட்டுள்ளார்.

அவரின் ஆய்வின் கூற்று பின்வருமாறு:-

A Tamil criminal tribe reconsidered by Stuart H. Black burn

கள்ளர் பழங்குடி மக்களை குற்றப்பரம்பரை என்று அழைக்கப்பட்டதை மறு ஆய்வு செய்த போது, அந்த மக்கள் மீதான குற்றப்பரம்பரை என்ற பார்வை சுக்கு நூறாக உடைந்துவிட்டது. அப்படிப்பட்ட குற்றப்பரம்பரை என்கிற நிலை மிகவும் பிற்காலத்தில் பிரிட்டிஸ் இராணுவத்தினருடன் ஏற்பட்ட மோதலால், அம்மக்களை அடக்குவதற்காக கொண்டு வரப்பட்டது.

பின்பு அக்கொடிய சட்டத்தை நிர்வாகத்திற்காக தொடர்ந்து 19ஆம் நூற்றாண்டு வரை பிரிட்டிஸ் அரசு கடைபிடித்துள்ளது.

ஆனால் கள்ளர்களின் வாழ்வியலானது தென்னிந்தியாவில் தங்களுக்கென்று தனி நாட்டமைப்பையும், தனி நிர்வாக அமைப்பும் (அம்பலகாரர் முறை) தனிக் காவல் அமைப்பும் (பழமையான காவல்முறை) கொண்டிருந்துள்ளனர். அதாவது நீதியும்,காவலும் தன்னகத்தே கொண்டிருந்துள்ளனர்.


இன்றை காலகட்டத்தில் கள்ளர் பழங்குடிகள் அரசியல் அதிகாரத்தில் ஆளுமை செலுத்துக் சமூகமாக உள்ளது. அவர்களுடைய வரலாறானது பல புதிரை கொண்டதாக உள்ளது.

கிபி12ஆம் நூற்றாண்டில் உருவான வலங்கை,இடங்கை சாதிகள் உருவாக்கத்தில் கள்ளர் பழங்குடிகள் வலங்கை சாதியிலோ,இடங்கை சாதியிலோ இல்லாதது அவர்களின் பழமையை இங்கு நிறுபிக்கிறது


தஞ்சை :-

சோழமண்டலம் தஞ்சையில் (தஞ்சை, மன்னார்குடி, பட்டுக்கோட்டை, திருவையாறு, கும்பகோணம், திருவாரூர்  ) கள்ளர்கள், தஞ்சையின் பெரும்பகுதியான விவசாய நிலங்களை கைவசம் கொண்டு சீரும் சிறப்புமாக வாழ்கின்றனர். தஞ்சையின் 13 கள்ளர் சிற்றரசுகள் (ஜமீன்கள்) இருந்தன. பெரும் நிலக்கிழார்கள் மற்றும் மிராசுகளில் (ஆண்டை) 70% பேர் கள்ளர்களே. செம்மொழி வளர்த்த ஐந்தாம் தமிழ் சங்கம், கரந்தை தமிழ் சங்கம் உருவாக பேருதவி அளித்து காத்தவர் ஸ்ரீமான் கோபாலசாமி ரகுநாத ராசாளியார், சாதி மதம் பாராமல் கல்வி செல்வத்தை அளித்துவரும், உக்கடை தேவர் எஸ்டேட் குடும்பத்தினரும், கல்வி வள்ளல் பூண்டி வாண்டையார் குடும்பத்தினரும்,  கள்ளர்களே. 

பாப்பாநாடு கள்ளர் அரையர், மன்னர் சாமிநாத விசயத்தேவர் தஞ்சையில் தமிழ் சங்கம் தோற்றுவித்தார். அதைபோல் ரகுநாத ராஜாளியார் தஞ்சையில் ஒரு தமிழ் சங்கம் தோற்றுவித்தார்.








மதுரை :-



மதுரையை சுற்றியுள்ள பெரும்பான்மையான பகுதிகளை தங்களது கட்டுப்பாட்டுக்குள் வைத்து, வெள்ளைக்காரனிடமே சுங்க வரி வசூலித்தவர்கள் பிறமலை கள்ளர்கள். 8 நாடு 24 உபகிராமங்களுக்கு சொந்தக்காரர்கள்.

இந்த வீரம் மிகுந்த மண்ணின் மைந்தரான உறங்காப் புலி மூக்கையாத் தேவர் உசிலம்பட்டி, நீலித்தினல்லூர், கமுதி ஆகிய இடங்களில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் கல்லூரிகளை நிறுவினார். ஏழை மாணவர்களுக்கு இலவச கல்வி மட்டுமல்லாமல், தங்க இடம், உணவு ஆகியவற்றுக்கும் ஏற்பாடு செய்தார்.








புதுக்கோட்டை :-

கள்ளர் குடியில் பிறந்த புதுக்கோட்டையை உருவாக்கி ஆட்சி செய்தவர்கள் தொண்டைமான் மன்னர்கள்.  புதுக்கோட்டை தொண்டைமான் மன்னர்களின் ஆட்சிக்குட்பட்டதனாலும், அங்கு உள்ள 70% விவசாய நிலங்களை கொண்டவர்கள் கள்ளர்கள். 

கள்ளர்கள் 21 கள்ளர் நாடுகளை அமைத்து, படை உதவி அளித்து, புதுக்கோட்டை மன்னரின் ஆட்சிக்கு வலு சேர்த்தனர்.






தேனி : - 


"தேனி கம்பம் சுத்துபத்து கிராமதுல அவுக வைச்சதுதான் சட்டம்" என்ற திரைப்பட வசனத்திற்கு சொந்தக்காரர்கள். 70 % கள்ளர்கள் வாழும் பகுதி. ஆதி தமிழன் வாழ்ந்த பூமி. புலிமான் கோம்பையில் கிடைத்துள்ள சங்கத் தமிழ் எழுத்து பொறித்த கூடலூரில் நடந்த தொறுபூசலில் (ஆநிரை கவர்தலை) உயிர்நீத்த பேடு தீயன் அந்தவனுக்கான எடுக்கப்பெற்ற கல் இதனை குறிக்கும். 




பென்னிகுயிக் நண்பர் அண்ணல் பேயத்தேவர், கொடைக்கானல் முதல் முனிசிபல் சேர்மன் C. A. வெள்ளையன் தேவர், மொழிப்போரின் நாயகன் மா. இராஜாங்கம் தேவர் - MP/MLA, 
இந்த மண்ணில் தோன்றிய கள்ளர் குல மாமணிகள்.



சுபாஷ் சந்திரபோஸின் இந்திய தேசிய ராணுவத்தில் தேனி கள்ளர்கள் கணிச மான அளவில் பங்கெடுத்தார்கள். இங்கு உள்ள நிலங்களுக்கு சொந்தக்காரர்கள். 


சிவகங்கை :-

சிவகங்கை நாட்டார் கள்ளர்கள் சிவகங்கையின் பாதிக்கும்க்மேற்பட்ட விவசாய நிலப்பகுதிகளை கொண்டு சீரும் சிறப்புமாக வாழ்கின்றனர். தன்னரசு நாடுகளை உருவாக்கி சிவகங்கை மன்னர்களுக்கு படை உதவி அளித்து பேர் பெற்றவர்கள். இங்கே உள்ள பாகனேரி நாட்டு அம்பலக்காரர் வாளுக்கு வேலி மற்றும் வல்லத்தராயனும் புகழ் பெற்றவர்கள்.






திருநெல்வேலி :-

திருநெல்வேலி தொண்டைமான் பரம்பரையினர் சிறப்பு பெற்றவர்கள், தமிழுக்கு நெல்லை தந்த கொடை தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான். திருநெல்வேலி கள்ளர் குல மக்களின் தலைவராய் இருந்து, பாஸ்கரத் தொண்டைமான் ஆற்றிய பணிகள் பலபல.

தொண்டைமான் சமுதாயத்துக்காகச் செய்த சேவைகளில் எல்லாம் சிறந்தது, குற்றாலத்து மடத்தைத் தங்களது என்று உரிமை கொண்டாடிய குற்றாலநாதரது தேவஸ்தானத்தாரோடு போராடி, நீதிமன்றம் வரை போய் வாதாடி, மடத்தை மக்களுக்கு மீட்டுத் தந்ததே 1944 க்கு முன்னர் குற்றாலத்து மடம் கழுதைகள் அடைகிற மண்டபமாகத்தான் இருந்தது. கவனிப்பார் இல்லாமையால் பாபநாசம் மடம் எல்லாம் பிறர் கைவசம் போய்விட்டது. திருச்செந்தூர் மடமும் குற்றால மடமும் மட்டும் காப்பாற்றப்பட்டன. குற்றாலம் மடத்தை ஊர் மக்களின் ஒத்துழைப்புடன் ரீரமணாத்தாரணம் செய்து திறப்பு விழாவும் நடத்தி வைத்தார்.


அந்தத் திறப்பு விழாவுக்கு அரசர் பெருமானின் மைத்துனரான, கல்லாக்கோட்டை ஜமீன்தாரார் விஆர்பிஆர் சிங்கப் புலியாரை வரவழைத்து, ரசிகமணி டிகேசி அவர்கள் தலைமையில் ஒரு பெரிய திறப்பு விழாவும் நடத்தி வைத்தார். சூட் தாக்கல் செய்தார்கள். கேசை, முன்சீப் கோர்ட்டிலும், சப் கோர்ட்டிலும், பின்னர் ஹைகோர்ட்டிலும் வாதாடியவர்கள் தொ.மு.பா. அவர்களே. அத்தனைக்கும் தோன்றாத்துணையாயிருந்து உதவியதோடு தீர்வை செலுத்தப்படாமல் மடம் ஏலத்துக்கு வரும் நிலையில் இருந்தபோது, தொமுபா அவர்கள்தான் செக் அனுப்பி, மடம் ஏலம் போகாமல் காப்பாற்றினார்கள். மடத்திலிருந்து பத்து சென்ட் நிலத்தில் கூத்தர் குடில் என்ற குடிலைக் கட்டி, அதில் வரும் வாடகை, வருமானத்தில் இருந்து வருஷா வருஷம் தீர்வையும் அவர்களே கட்டி வந்த தன் காரணமாக, மடம், தேவஸ்தானத்துக்கோ அல்லது மற்றவர்களுக்கோ போய்விடாமல் அரண் செய்து காப்பாற்றினார். அவர்கள் செய்த சமுதாய சேவைகளில் எல்லாம் தலையாயது இதுதான்



திருச்சி : -

திருச்சியில் பெரிய அளவில் நிலபுலங்களை கைவசம் கொண்டு வாழ்கின்றனர் கள்ளர்கள். இதற்கடுத்து பெரிய அளவில் நிலபுலங்களை வைத்திருக்கும் ரெட்டியார் சமூகம், பிள்ளைமார்கள், நாயக்கர்கள் இருக்கிறார்கள். பிராட்டியூர் திருச்சிக்குத் தெற்கில் ஆறு மைல் தொலைவில் உள்ளது. கள்ளர்கள் மிகுதியாக வாழ்ந்த ஊர்.

திண்டுக்கல், தேனி, நெல்லை, இராமநாதபுரம் பகுதிகளில் வாழும் கள்ளர்களும் கணிசமான விவசாய நிலங்களை கொண்டு, தாங்கள் வாழும் பகுதிகளில் செல்வாக்குடன் உள்ளனர்.




சோழ பாண்டிய மண்டலத்தில் கள்ளர் மக்கள் தொகை 



பிரிட்டிஸ் அரசு மதுரையில் கிபி1763ஆம் ஆண்டு மேலூர் தன்னரசு கள்ளர்களை அடக்குவதற்கு கேப்டன் ரூம்லே என்கிற அதிகாரியுடன் கிட்டத்தக்க 10000 சிப்பாய்கள், குதிரைப் படை வீரர்கள்,கனரக பீரங்கிகளுடன் உள்ளே நுழைந்து போரிட்டது, போரில் கள்ளர் நாட்டு தலைவர்கள் உட்பட ஆண்,பெண்,குழந்தைகள் என்று பாராமல் 5000  பேர்கள் தோட்டங்களுக்கு இரையாக்கினான் கேப்டன் ரூம்லே.

இந்த இனப் படுகொலைகளுக்கு பின்பு கேப்டன் ரூம்லேவின் மேற்பார்வையில் மேலூர் தன்னரசு கள்ளர் நாட்டின் நிலங்களை மதுரை பிரிட்டிஸ் கவர்னர் கட்டுப்பாட்டுக்கு கொண்டு வருகிறார். அவ்வாறு அளந்து எடுத்த கள்ளர் நாட்டின் நிலம் எவ்வளவு என்றால்.

நஞ்சை : 400 cheys 
புஞ்சை : 20,000 kurkkam

ஒரு Chey என்பது அரை காணிக்கும் அதிகமானது, ஒரு காணி என்பது 1.25 ஏக்கர் ஆகும்.

ஆக ஒரு Chey என்பது 3/4 ஏக்கர் குறிக்கும்.

அப்போதை மேலூர் தன்னரசு கள்ளர் நாட்டின் நஞ்சை (வயல்) மட்டும் கிட்டத்தட்ட 300ஏக்கர் இருந்துள்ளது.

அதாவது 1.21 சதுர கிலோமீட்டர் இருந்துள்ளது.

அதேபோல் 20,000 kurkam நஞ்சை(காடு) இருந்துள்ளது.

ஒரு kurukkam என்பது ஒரு ஏக்கருக்கும் அதிகமானது.

20,000ஏக்கர் நஞ்சை நிலம் என்பது 80.93 கிட்டத்தட்ட 81சதுர கிலோமீட்டர்🤭 பரப்பளவு கொண்டது.

இரண்டும் சேர்ந்து 82சதுரகிலோமீட்டர் பரப்பளவு கொண்டது.

தற்போதைய மதுரை மாநகராட்சியின் பரப்பளவே 147.97 சதுர கிலோமீட்டர் என்பது கூடுதல் தகவல்.

ஆக மதுரை வட்டாரத்தின் பாதி பகுதிகள் கிபி1763 க்கு முன்னாள் அனைத்தும் மேலூர் தன்னரசு கள்ளர் நாட்டின் நிலங்கள் என்பது ஆனித்தரமான உன்மையாக உள்ளது.

82சதுரகிலோமீட்டர் நிலப்பரப்பளவு என்பது மேலூர் கள்ளர் நாட்டின் நிலம் மட்டுமே.

இதுபோக பிரமலை கள்ளர்களின் 8 நாட்டு நிலங்களையும் சேர்த்தால் மதுரை மீனாட்சியின் பூமி கள்ளர்களின் ஆட்சியில் தன இருந்துள்ளது. சிவகங்கையில் 14 கள்ளர் நாடு உள்ளன என்பது கூடுதல் தகவல்.

புதுக்கோட்டை எனும் ஒரு கள்ளர் மாநிலம் கிபி1947வரை இருந்துள்ளது. தஞ்சையில் 13 கள்ளர் பாளையகர்களின் கீழ்  கம்பீரமாக இருந்துள்ளனர்.






தஞ்சை ஜில்லா 1906

கந்தர்வகோட்டை ஜமீன், கல்லாக்கோட்டை ஜமீன், கோனூர் ஜமீன்







இத்தனை சிறப்பு பெற்றவர்கள் எதற்க்காக குற்றப்பரம்பரை சட்டத்தில் சேர்க்கப்பட்டார்கள் என்பதை வேறு ஒரு கட்டுரையில் பார்ப்போம்.

நன்றி : 
திரு. சியாம் சுந்தர் சம்பட்டியார் 
திரு. சோழபாண்டியன் 

புதன், 7 பிப்ரவரி, 2018

சந்த்ராதித்ய குலதிலகன் கள்வனா இன சேரன் கோக்கண்டனிரவி




ஒருஅரசன் தன் பெயருக்கு முன்னர் உள்ள அவனது பெருமை, புகழ் பற்றிக் கூறும் பகுதி மெய்க்கீர்த்தி எனப்படும். முதலாம் இராசராசன் பெயருக்கு முன்பு சிறு சிறு தொடராக இம் மெய்க்கீர்த்திகள் எழுதப்பட்டது.

"மதுரை கொண்ட"
"மதுரையும் ஈழமும் கொண்ட "
"கச்சியும் தஞ்சையும் கொண்ட "
"வீரபாண்டியன் தலை கொண்ட "
"தொண்டை நாடு பாவின".....


என்று சிறு தொடராகக் காணப்பட்ட இம்மெய்க்கீர்த்தி முதலாம் இராசராசன் காலத்தில் பெரிய வடிவம் பெற்றது.

முதல் இராசராசன் மெய்க்கீர்த்தி ‘திருமகள்போல’ என்று தொடங்கும். ஒவ்வொரு அரசருக்கும் தனித்தனித் தொடராக மெய்க்கீர்த்தி தொடங்குவதால் மெய்க்கீர்த்தித் தொடக்கத்தைப் பார்த்து இந்தக் கல்வெட்டு எந்த அரசனுக்குரியது எனக் கண்டு கொள்ளலாம்.

சி. ஆர். சீனிவாசன் என்ற தொல்லியல் ஆய்வாளர் 1970களின் இறுதியில் தாராபுர வட்டம் பொன்னியவாடியில் இரண்டு கல்வெட்டுகளை கண்டறிந்தார். இந்த 2 கல்வெட்டுகளில் முறையே பௌமந் த்யவ்ரத னாகிய கோக்கண்டனிரவி என்றும், சந்த்ராதித்ய குலதிலகன் சார்வ பௌமன் கலிநிருப கள்வனா இன கோக்கண்டனிரவி என்றும் உள்ளன.

அரசன் பெயர் "கோ" என்று சில கல்வெட்டுகளில் தொடங்கும். பிற்காலச்
சோழர் கல்வெட்டுகளில் "திரிபுவனச் சக்ரவர்த்திகள்" என்ற தொடர் அரசன் பெயருக்கு முன்னர் இருக்கும்.

பல்லவர்கள் கல்வெட்டு "பல்லவ குல திலக" என்றும்,
சேரர் கல்வெட்டுகள் "சந்திராதித்ய குல திலக" என்றும் அரசன் பெயருக்கு முன்னர் வெட்டப்பட்டிருக்கும்.

இதேபோன்றுதான் கோக்கண்டன்ரவியும் தன்னை "சந்திராதித்ய குல திலக" என்று தன்னைச்"சேரனாக" அடையாளம் காட்டுகிறான்.

கி.பி.9 ம் நூற்றாண்டில் இறுதிவாக்கில் உள்ள ஒரு கல்வெட்டு கோயமுத்தூர் மாவட்டம் பொன்னிவாடியில் கிடைக்கப்பெற்றது. இக்கல்வெட்டு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது ஆகும். இக்கல்வெட்டின் வாசகம் கீழ்வருமாறு காணப்படுகிறது.
1. ஸ்வஸ்தி ஸ்ரீ சந்த்ராதித்ய குல திலகன் சா
2. ர்வ பௌமன் கலிநிருவ (ப) கள்வனா இன கோ 
3. க்கண்டனிரவி அடியாளாக மணியன் சேகெரி (ந) 
4. ல்லூர்த் தான் வயக்கின நிலத்திற் பள்ளிப் போ
5. ழி(யி) ற் (நெற்) பெட்டுப் போழியின் வடக்கு மணி 
6. யன் வயக்குக்குப் போந்த கவ (ரி) ன் மேக்கு நீர்மிணி வா
7. ய்க்(கா)லின் கிழக்கு செ(ங்)கந்(தி)டர்காக (க்) கவருபோழி உண்ணா
8. ழிகைப் புறமாக அட்டினேன் 
9. மணியன் வய............"




இந்த கல்வெட்டில் கொக்கண்டன் ரவி எனும் மன்னன் தன்னை சேரனின் குலத்தவனாக "சந்த்ராதித்ய குல திலகன்" என்று தெளிவாகவே சொல்லிவிட்டான்.

மேலும் "கலிநிருவ கள்வனாயின கோக்கண்டன்ரவி" என்ற தொடரின் மூலம் தன்னை "கள்வர்" குலத்தினன் என்றும் தெரிவிக்கிறான்.

இந்த தொடரை வரலாற்றாய்வாளர் திரு. நடன .காசிநாதன் அவர்கள் " கலிநிருவ" என்ற வார்த்தையை வைத்து களப்பிரர் என்று சொன்னாலும் பழம்பெரும் கல்வெட்டு ஆய்வாளர் திரு. கே.வி.சுப்பிரமணிய ஐயர் அவர்கள் கோக்கண்டன்ரவியை சேரமன்னர்களில் ஒருவர் என்றுதான் சொல்கிறார். {ஆதாரம்☆ ஹிஸ்டோரிக்கல் ஸ்கெட்செஸ் ஆப் அன்சியெண்ட் டெக்கான், தொகுதி. 2}


கொங்கு நாட்டுக் கல்வெட்டுகளில் " கோக்கண்டன்" என்ற பெயரை முன்னொட்டாகக்கொண்ட இரண்டு மன்னர்கள் வருகிறார்கள். அவர்கள் கோக்கண்டன் வீரநாராயணன் மற்றும் கோக்கண்டன்ரவி ஆகியோர் ஆவர். சில கல்வெட்டுகளில் ரவிகண்டன் என்ற பெயரைக்கொண்டு காணமுடிகிறது. இவர்களை சேரமன்னர்கள் என்றுதான் திரு.கே.வி.சுப்பிரமணிய ஐயர் குறிப்பிடுகிறார்.

சோழர்களில் இரண்டு மன்னர்கள் கோக்கண்டன் என்று அழைக்கப்பட்டனர். தில்லைத்தானம் கல்வெட்டில் ஒரு சோழ மன்னர் "கோக்கண்டன்" என அழைக்கப்படுகிறான். இதேபோல இரண்டாம் ராஜராஜன் தக்கயாகப்பரணியில் கோக்கண்டன் என்று அழைக்கப்பெறுகிறான்.

உதாரணமாக சோழர்கள் கோக்கண்டன் என்ற பெயருடன் விளங்கும் ஒரு கல்வெட்டு உங்கள் பார்வைக்கு. ...

" ஸ்வஸ்தி ஸ்ரீ கோ இராஜகேசரிப் பெருவழி திருநிழலு மன்னுயிருஞ் சிறந்த மைப்ப ஒரு நிழல் வேண்டிங்கள் போலோங்கி ஒரு நிழல் போல் வாழியர் கோச்சோழன் வளங் காவிரிநாடன் கோழியர் கோக்கண்டன் குலம்".

இக்கல்வெட்டு சிறிது தமிழ் எழுத்திலும்பெரும்பாலான பகுதி வட்டெழுத்திலும் அமைந்துள்ளது.

இந்தியாவிலேயே தொன்மை வாய்ந்த பெருவழிகளில் ஒன்றாக விளங்கிய "இராஜகேசரிப் பெருவழி கல்வெட்டு " என்பது இதுவே ஆகும்.

இந்த ராஜகேசரிப் பெருவழிப்பாதை கல்வெட்டில் பயின்று வரும் "திரு நிழல்" என்பது ஆட்சி என்று பொருள் கொள்ளலாம் என மூத்த கல்வெட்டு அறிஞர். திரு.ஆர். பூங்குன்றன் ஐயா அவர்கள் சொல்கிறார். அவர் மேலும் இக்கல்வெட்டு பற்றி கூறும்போது.

"ஒரு நிழல் வேண்டிங் கள் போலோங்கி"
எனும் வார்த்தை" ஒப்பற்ற வெண்திங்களைப்போல புகழ் பெற்று விளங்குக".. என்றும்


" சந்திரகுலத்தைப்போல புகழ் பெற்று விளங்குக" என்றும் கூறுகிறார்.
இக்கல்வெட்டு சொல்லும் "நிழல்" என்பது நம்பிக்கைக்குரிய அணுக்கத்தொண்டர்களின் படைக்குழுவாகும்.


இச்சொல், காவல், ரக்ஷை, போன்ற சொற்களுடன் இணைந்து வருவதால் "நிழல்" என்பது பொருளையும் உரிமைகளையும் பாதுகாக்கும் பணியினைச்செய்யும் பெருவழிப்பாதைகளில் பயணம் செய்த வணிகர்களின் பாதுகாப்புப்படை என்பது தெள்ளத்தெளிவு.

இப்படைப்பிரிவு பற்றிய கல்வெட்டு சான்றுகள் கேரளத்தில் மிகுதியாக கிடைக்கின்றன. மேலும் நிழல் என்ற சொல்லுக்கு விளக்கம் தரும் வகையில் கேரள சாசனங்களில் சில சான்றுகள் கிடைத்துள்ளது {எம்.ஜி.எஸ்.நாராயணன். " த ஹண்ட்ரட் குரூப்ஸ் அண்ட் த ரைஸ் ஆப் நாயர் மிலிட்டியா இன் கேரளா" இண்டியன் ஹிஸ்டரி காங்கிரஸ், போர்ட்டி போர்த் செஸன், பர்ட்வென், 1983,பக்கம். 113-19}

இப்பெருவழிக்கல்வெட்டு கி.பி.10 ஆம் நூற்றாண்டின் வட்டெழுத்தில் அமைந்துள்ளதால் இக்கல்வெட்டு சொல்லும் கோக்கண்டன் முதலாம் ஆதித்தனே எனலாம். இதற்கு தஞ்சை மாவட்டம் தில்லைத்தானம் கல்வெட்டு சான்றளிக்கிறது.

அக்கல்வெட்டுத் தொடக்கத்தில்

" பல்யானை கோக் கண்டனாயின தொண்டை நாடு பாவிய ராஜகேசரியாலும் சேரமான் கோத்தாணுரவியாலும் "

என்ற பாடம்அமைந்துள்ளது.

இதிலிருந்து கோக்கண்டன் என்ற பெயருடன் சோழர்கள் மற்றும் சேரர்கள் இருவருக்கு மட்டுமே தொடர்பு உள்ளதென்பதும் களப்பிரர்கட்கு எவ்வித சம்பந்தத்தையும் இந்த கல்வெட்டு தொடர் தரவில்லை என்பதும் தெளிவாகும்.

மேலும் தொண்டை நாடு பாவிய ராஜகேசரி யான முதலாம் ஆதித்தன் மீகொங்கில் ஆட்சி செய்த கோக்கண்டன் என்ற மன்னனை வென்றதால் அப்பெயரை தனக்கு சூட்டியுள்ளான்.

இதுபோக சேரமான் "கோத்தாணு ரவி"தான் " கலிநிருவ கள்வனாயின கோக்கண்டன்ரவி " என்பது தக்க சான்றுகள் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது. மீகொங்கில் சேரர்களும் சோழர்களுமே ஆதிக்கத்தை செலுத்தி வந்துள்ளனரே தவிர அக்கால கட்டத்தில் களப்பிரர் இல்லை.

அங்கே அரசோச்சியவர்களாக
1. கண்டன்
2. கண்டன் வீரநாராயணன் 
3. கண்டன் ரவி
4. ரவி கண்டன் 
5. ரவிகோதை 
6. வரகுண பராந்தகன்


இவர்கள் யாவரும் தம்மை சந்த்ராதித்ய குலத்தவர்கள் என்றுதான் சொல்கிறார்களே தவிர " களபோர குலம் " என்றோ "கலி" என்றோ சொல்லவில்லை.

மேலும் சேரவரையர் (சேர அரசர்) என்பது காலப் போக்கில் உருமாறி சேரர்பிரியர், சேரமுடியர், சேறைமுடியர் என்றும் அழைக்கப்பட்டது, சேரமன்னர்களின் இலச்சினை வில் ஆகும், வில்லவர் என்பது சேரனையும் குறிக்கும், வில்லவரை சோழன் வென்றதனால் வில்லவராயன் என்றும் வில்லவர்க்கு அரசன் என்றும் பொருள் படும்.

வில்லர், வில்லதேவர், வில்லவதரையர், வில்லவதரையனார், வில்லவராயர், வில்வராயர், சேரர்பிரியர், சேரமுடியர், சேறைமுடியர், கண்டன், கண்டராயன், கண்டவராயன் என்ற கள்ளர் பட்டங்கள் சேர மன்னர்களோடு தொடுர்பு உடையனவாக உள்ளன.

ஆய்வு : உயர்திரு. முனிராஜ் வாணாதிராயர்







கள்ளர் - கள்ளர்கள் - யார் கள்ளர் சாதியினர் - Who are the Kallars - Who are the Kallar caste

ஆங்கிலேயர்கள்,  கள்ளர்களை  சென்னை மாகாணத்தில் 1911-ம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட குற்றப் பரம்பரைச் சட்டத்தின் கீழ் கொண்டுவந்தனர். ஆனால் இந...

இந்த வலைப்பதிவில் தேடு

என்னைப் பற்றி

எனது படம்
Contact: info.kallarkulavaralaru@gmail.com, தமிழகத்தில் வாழும் கள்ளர் மரபினர் முக்குலத்தோரில் ஒரு பிரிவினர் ஆவர். கள்ளர், மறவர், அகமுடையார் ஆகிய முக்குலங்களும் போர்த் தொழிலை அடிப்படையாக கொண்டு வாழ்ந்து வந்ததால் இந்த மூன்று சாதியினரும் முக்குலத்தோர் என்று அறியப்படுகின்றனர். இந்த மூன்று குலத்தினரும் "தேவர்" என்ற பொதுவான பெயரோடு அறியப்படுகிறார்கள். கள்ளர் மரபில் அறந்தாங்கி தொண்டைமான், புதுக்கோட்டை பல்லவராயர், புதுக்கோட்டை தொண்டைமான் மற்றும் பல சமீன்தார்களும், பெரு நிலவுரிமையாளர்களும் இருக்கின்றனர். (கள்ளர் படைப்பற்று - கள்ளர் நாடு - கள்ளர்த்தடி). கள்ளர் வரலாறு : வரலாறு என்றால் வந்த வழி என்று பொருள். வந்த வழி தெரியாதவர்களுக்குப் போகும் வழி புரியாது. வரலாற்றை நாம் நினைவு கூர்வதற்குக் காரணம் கடந்து போன ஈகங்களை எண்ணிக் கண்ணீர் விடுவதற்காகவும், நிகழ்த்தி விட்ட வீரங்களைச் சொல்லிப் பெருமை பேசுவதற்காகவும் அல்ல. வருங்காலத்திற்கு வழி சமைப்பதற்கு அந்த ஈகமும் வீரமும் வழிகாட்ட வேண்டும் என்பதற்காகத்தான். கள்ளர்களின் நான்கு முக்கிய பிரிவுகள் - ஈசநாட்டுக்கள்ளர் (திருச்சி, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை) : கிளைவழிக்கள்ளர் (சிவகங்கை) : அம்பல கள்ளர் / நாட்டார் கள்ளர் (சிவகங்கை, மதுரை) : பிறமலை கள்ளர் (மதுரை, உசிலமபட்டி, தேனி, கம்பம், திண்டுக்கல்)

வலைப்பதிவு காப்பகம்

பின்பற்றுபவர்கள்