ஒருஅரசன் தன் பெயருக்கு முன்னர் உள்ள அவனது பெருமை, புகழ் பற்றிக் கூறும் பகுதி மெய்க்கீர்த்தி எனப்படும். முதலாம் இராசராசன் பெயருக்கு முன்பு சிறு சிறு தொடராக இம் மெய்க்கீர்த்திகள் எழுதப்பட்டது.
"மதுரை கொண்ட"
"மதுரையும் ஈழமும் கொண்ட "
"கச்சியும் தஞ்சையும் கொண்ட "
"வீரபாண்டியன் தலை கொண்ட "
"தொண்டை நாடு பாவின".....
என்று சிறு தொடராகக் காணப்பட்ட இம்மெய்க்கீர்த்தி முதலாம் இராசராசன் காலத்தில் பெரிய வடிவம் பெற்றது.
முதல் இராசராசன் மெய்க்கீர்த்தி ‘திருமகள்போல’ என்று தொடங்கும். ஒவ்வொரு அரசருக்கும் தனித்தனித் தொடராக மெய்க்கீர்த்தி தொடங்குவதால் மெய்க்கீர்த்தித் தொடக்கத்தைப் பார்த்து இந்தக் கல்வெட்டு எந்த அரசனுக்குரியது எனக் கண்டு கொள்ளலாம்.
சி. ஆர். சீனிவாசன் என்ற தொல்லியல் ஆய்வாளர் 1970களின் இறுதியில் தாராபுர வட்டம் பொன்னியவாடியில் இரண்டு கல்வெட்டுகளை கண்டறிந்தார். இந்த 2 கல்வெட்டுகளில் முறையே பௌமந் த்யவ்ரத னாகிய கோக்கண்டனிரவி என்றும், சந்த்ராதித்ய குலதிலகன் சார்வ பௌமன் கலிநிருப கள்வனா இன கோக்கண்டனிரவி என்றும் உள்ளன.
அரசன் பெயர் "கோ" என்று சில கல்வெட்டுகளில் தொடங்கும். பிற்காலச்
சோழர் கல்வெட்டுகளில் "திரிபுவனச் சக்ரவர்த்திகள்" என்ற தொடர் அரசன் பெயருக்கு முன்னர் இருக்கும்.
பல்லவர்கள் கல்வெட்டு "பல்லவ குல திலக" என்றும்,
சேரர் கல்வெட்டுகள் "சந்திராதித்ய குல திலக" என்றும் அரசன் பெயருக்கு முன்னர் வெட்டப்பட்டிருக்கும்.
இதேபோன்றுதான் கோக்கண்டன்ரவியும் தன்னை "சந்திராதித்ய குல திலக" என்று தன்னைச்"சேரனாக" அடையாளம் காட்டுகிறான்.
கி.பி.9 ம் நூற்றாண்டில் இறுதிவாக்கில் உள்ள ஒரு கல்வெட்டு கோயமுத்தூர் மாவட்டம் பொன்னிவாடியில் கிடைக்கப்பெற்றது. இக்கல்வெட்டு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது ஆகும். இக்கல்வெட்டின் வாசகம் கீழ்வருமாறு காணப்படுகிறது.
1. ஸ்வஸ்தி ஸ்ரீ சந்த்ராதித்ய குல திலகன் சா
2. ர்வ பௌமன் கலிநிருவ (ப) கள்வனா இன கோ
3. க்கண்டனிரவி அடியாளாக மணியன் சேகெரி (ந)
4. ல்லூர்த் தான் வயக்கின நிலத்திற் பள்ளிப் போ
5. ழி(யி) ற் (நெற்) பெட்டுப் போழியின் வடக்கு மணி
6. யன் வயக்குக்குப் போந்த கவ (ரி) ன் மேக்கு நீர்மிணி வா
7. ய்க்(கா)லின் கிழக்கு செ(ங்)கந்(தி)டர்காக (க்) கவருபோழி உண்ணா
8. ழிகைப் புறமாக அட்டினேன்
9. மணியன் வய............"
இந்த கல்வெட்டில் கொக்கண்டன் ரவி எனும் மன்னன் தன்னை சேரனின் குலத்தவனாக "சந்த்ராதித்ய குல திலகன்" என்று தெளிவாகவே சொல்லிவிட்டான்.
மேலும் "கலிநிருவ கள்வனாயின கோக்கண்டன்ரவி" என்ற தொடரின் மூலம் தன்னை "கள்வர்" குலத்தினன் என்றும் தெரிவிக்கிறான்.
இந்த தொடரை வரலாற்றாய்வாளர் திரு. நடன .காசிநாதன் அவர்கள் " கலிநிருவ" என்ற வார்த்தையை வைத்து களப்பிரர் என்று சொன்னாலும் பழம்பெரும் கல்வெட்டு ஆய்வாளர் திரு. கே.வி.சுப்பிரமணிய ஐயர் அவர்கள் கோக்கண்டன்ரவியை சேரமன்னர்களில் ஒருவர் என்றுதான் சொல்கிறார். {ஆதாரம்☆ ஹிஸ்டோரிக்கல் ஸ்கெட்செஸ் ஆப் அன்சியெண்ட் டெக்கான், தொகுதி. 2}
கொங்கு நாட்டுக் கல்வெட்டுகளில் " கோக்கண்டன்" என்ற பெயரை முன்னொட்டாகக்கொண்ட இரண்டு மன்னர்கள் வருகிறார்கள். அவர்கள் கோக்கண்டன் வீரநாராயணன் மற்றும் கோக்கண்டன்ரவி ஆகியோர் ஆவர். சில கல்வெட்டுகளில் ரவிகண்டன் என்ற பெயரைக்கொண்டு காணமுடிகிறது. இவர்களை சேரமன்னர்கள் என்றுதான் திரு.கே.வி.சுப்பிரமணிய ஐயர் குறிப்பிடுகிறார்.
சோழர்களில் இரண்டு மன்னர்கள் கோக்கண்டன் என்று அழைக்கப்பட்டனர். தில்லைத்தானம் கல்வெட்டில் ஒரு சோழ மன்னர் "கோக்கண்டன்" என அழைக்கப்படுகிறான். இதேபோல இரண்டாம் ராஜராஜன் தக்கயாகப்பரணியில் கோக்கண்டன் என்று அழைக்கப்பெறுகிறான்.
உதாரணமாக சோழர்கள் கோக்கண்டன் என்ற பெயருடன் விளங்கும் ஒரு கல்வெட்டு உங்கள் பார்வைக்கு. ...
" ஸ்வஸ்தி ஸ்ரீ கோ இராஜகேசரிப் பெருவழி திருநிழலு மன்னுயிருஞ் சிறந்த மைப்ப ஒரு நிழல் வேண்டிங்கள் போலோங்கி ஒரு நிழல் போல் வாழியர் கோச்சோழன் வளங் காவிரிநாடன் கோழியர் கோக்கண்டன் குலம்".
இக்கல்வெட்டு சிறிது தமிழ் எழுத்திலும்பெரும்பாலான பகுதி வட்டெழுத்திலும் அமைந்துள்ளது.
இந்தியாவிலேயே தொன்மை வாய்ந்த பெருவழிகளில் ஒன்றாக விளங்கிய "இராஜகேசரிப் பெருவழி கல்வெட்டு " என்பது இதுவே ஆகும்.
இந்த ராஜகேசரிப் பெருவழிப்பாதை கல்வெட்டில் பயின்று வரும் "திரு நிழல்" என்பது ஆட்சி என்று பொருள் கொள்ளலாம் என மூத்த கல்வெட்டு அறிஞர். திரு.ஆர். பூங்குன்றன் ஐயா அவர்கள் சொல்கிறார். அவர் மேலும் இக்கல்வெட்டு பற்றி கூறும்போது.
"ஒரு நிழல் வேண்டிங் கள் போலோங்கி"
எனும் வார்த்தை" ஒப்பற்ற வெண்திங்களைப்போல புகழ் பெற்று விளங்குக".. என்றும்
" சந்திரகுலத்தைப்போல புகழ் பெற்று விளங்குக" என்றும் கூறுகிறார்.
இக்கல்வெட்டு சொல்லும் "நிழல்" என்பது நம்பிக்கைக்குரிய அணுக்கத்தொண்டர்களின் படைக்குழுவாகும்.
இச்சொல், காவல், ரக்ஷை, போன்ற சொற்களுடன் இணைந்து வருவதால் "நிழல்" என்பது பொருளையும் உரிமைகளையும் பாதுகாக்கும் பணியினைச்செய்யும் பெருவழிப்பாதைகளில் பயணம் செய்த வணிகர்களின் பாதுகாப்புப்படை என்பது தெள்ளத்தெளிவு.
இப்படைப்பிரிவு பற்றிய கல்வெட்டு சான்றுகள் கேரளத்தில் மிகுதியாக கிடைக்கின்றன. மேலும் நிழல் என்ற சொல்லுக்கு விளக்கம் தரும் வகையில் கேரள சாசனங்களில் சில சான்றுகள் கிடைத்துள்ளது {எம்.ஜி.எஸ்.நாராயணன். " த ஹண்ட்ரட் குரூப்ஸ் அண்ட் த ரைஸ் ஆப் நாயர் மிலிட்டியா இன் கேரளா" இண்டியன் ஹிஸ்டரி காங்கிரஸ், போர்ட்டி போர்த் செஸன், பர்ட்வென், 1983,பக்கம். 113-19}
இப்பெருவழிக்கல்வெட்டு கி.பி.10 ஆம் நூற்றாண்டின் வட்டெழுத்தில் அமைந்துள்ளதால் இக்கல்வெட்டு சொல்லும் கோக்கண்டன் முதலாம் ஆதித்தனே எனலாம். இதற்கு தஞ்சை மாவட்டம் தில்லைத்தானம் கல்வெட்டு சான்றளிக்கிறது.
அக்கல்வெட்டுத் தொடக்கத்தில்
" பல்யானை கோக் கண்டனாயின தொண்டை நாடு பாவிய ராஜகேசரியாலும் சேரமான் கோத்தாணுரவியாலும் "
என்ற பாடம்அமைந்துள்ளது.
இதிலிருந்து கோக்கண்டன் என்ற பெயருடன் சோழர்கள் மற்றும் சேரர்கள் இருவருக்கு மட்டுமே தொடர்பு உள்ளதென்பதும் களப்பிரர்கட்கு எவ்வித சம்பந்தத்தையும் இந்த கல்வெட்டு தொடர் தரவில்லை என்பதும் தெளிவாகும்.
மேலும் தொண்டை நாடு பாவிய ராஜகேசரி யான முதலாம் ஆதித்தன் மீகொங்கில் ஆட்சி செய்த கோக்கண்டன் என்ற மன்னனை வென்றதால் அப்பெயரை தனக்கு சூட்டியுள்ளான்.
இதுபோக சேரமான் "கோத்தாணு ரவி"தான் " கலிநிருவ கள்வனாயின கோக்கண்டன்ரவி " என்பது தக்க சான்றுகள் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது. மீகொங்கில் சேரர்களும் சோழர்களுமே ஆதிக்கத்தை செலுத்தி வந்துள்ளனரே தவிர அக்கால கட்டத்தில் களப்பிரர் இல்லை.
அங்கே அரசோச்சியவர்களாக
1. கண்டன்
2. கண்டன் வீரநாராயணன்
3. கண்டன் ரவி
4. ரவி கண்டன்
5. ரவிகோதை
6. வரகுண பராந்தகன்
இவர்கள் யாவரும் தம்மை சந்த்ராதித்ய குலத்தவர்கள் என்றுதான் சொல்கிறார்களே தவிர " களபோர குலம் " என்றோ "கலி" என்றோ சொல்லவில்லை.
மேலும் சேரவரையர் (சேர அரசர்) என்பது காலப் போக்கில் உருமாறி சேரர்பிரியர், சேரமுடியர், சேறைமுடியர் என்றும் அழைக்கப்பட்டது, சேரமன்னர்களின் இலச்சினை வில் ஆகும், வில்லவர் என்பது சேரனையும் குறிக்கும், வில்லவரை சோழன் வென்றதனால் வில்லவராயன் என்றும் வில்லவர்க்கு அரசன் என்றும் பொருள் படும்.
வில்லர், வில்லதேவர், வில்லவதரையர், வில்லவதரையனார், வில்லவராயர், வில்வராயர், சேரர்பிரியர், சேரமுடியர், சேறைமுடியர், கண்டன், கண்டராயன், கண்டவராயன் என்ற கள்ளர் பட்டங்கள் சேர மன்னர்களோடு தொடுர்பு உடையனவாக உள்ளன.
ஆய்வு : உயர்திரு. முனிராஜ் வாணாதிராயர்