வெள்ளி, 11 டிசம்பர், 2020

துளசி அய்யா வாண்டையார்

 

துளசி அய்யா வாண்டையார்: உதவ முன் வந்த ஒபாமா.. வியந்த அப்துல்கலாம்! -சோகத்தை ஏற்படுத்திய இழப்பு


துளசி அய்யா வாண்டையார்
துளசி அய்யா வாண்டையார்

காந்தி கொள்கையில் கெட்டியாக இருந்ததால் கடைசி வரை கதர் ஆடை மட்டுமே உடுத்தி வந்தார். காந்தி வெள்ளிக் கிழமையில் சுட்டுக் கொல்லப்பட்டதால் அன்றைய தினம் முழுவதும் மெளன விரதம் இருப்பதை கடைசி வரை கடைபிடித்தவர் உயிழந்த துளசி அய்யா வாண்டையார்.

தஞ்சாவூரின் பாரம்பர்யமிக்க குடும்பத்தை சேர்ந்தவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், தனது கல்லூரி மூலம் கல்வி பயில வைத்து ஏழை மாணவர்களின் வாழ்கையில் ஒளி ஏற்றியவருமான துளசி அய்யா வாண்டையார், வயது முதிர்வு காரணமாக உயிரிழந்திருப்பது டெல்டா மாவட்டங்களில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


உயிரிழந்த துளசி அய்யா வாண்டையார்
உயிரிழந்த துளசி அய்யா வாண்டையார்

தஞ்சாவூர் அருகே உள்ள பூண்டி கிராமத்தை சேர்ந்தவர் துளசி அய்யா வாண்டையார். அவருக்கு வயது 93. பெரும் நிலக்கிழார். ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தில் பாரம்பர்யமிக்க குடும்பமாக இவரது குடும்பம் திகழ்ந்து வருகிறது. இவரது மனைவி பத்மாவதி அம்மாள். இவர்களது மகன் கிருஷ்ணசாமி வாண்டையார் காங்கிரஸ் கட்சியில் தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளராக உள்ளார். மகள் புவனேஸ்வரியை மதுரை அருகே உள்ள காஞ்சரம்பேட்டை பகுதியை சேர்ந்த ஜமீன் குடும்பத்தை சேர்ந்த மலையாண்டி அசோக் என்பவருக்கு திருமணம் செய்து கொடுத்துள்ளனர்.

தன் குடும்பத்தினரால் தொடங்கப்பட்ட பூண்டி புஷ்பம் தன்னாட்சி பெற்ற கல்லூரியின் செயலாளராக இருந்து கடைசி வரை ஒரு பைசா கூட நன்கொடை வாங்காமல் தமிழகத்தின் பல மாவட்டங்களை சேர்ந்த ஏழை மாணவர்கள் கல்வி பயில்வதற்கு வித்திட்டவர். அவரது கல்லூரியில் பயின்ற மாணவர்கள் இன்றைக்கு இந்தியா முழுவதிலும் பல அரசு பதவிகளில் முக்கிய பொறுப்பு வகித்து வருகின்றனர். இதனால் தஞ்சை பகுதியில் துளசி அய்யா வாண்டையாரை `கல்வி காவலர்’ என்றே அழைக்கின்றனர்.


துளசி அய்யா வாண்டையார்
துளசி அய்யா வாண்டையார்

காந்திய கொள்கையை உறுதியாக பற்றி கொண்டு கடைசி வரை கடைபிடித்தவர். உணவு கட்டுப்பாடு, யோகா, தினசரி மூச்சு பயிற்சி என எப்படி வாழ வேண்டும் என்பதற்கு உதாரணமாகவும், கடைசி வரை மருத்துவமனைக்கு பக்கமே எட்டி பார்க்காமல் ஆரோக்கியமாக வாழ்ந்த துளசி அய்யா வாண்டையார் சென்னை வளசரவாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் வயது முதிர்வு காரணமாக இன்று அதிகாலை உயிரிழந்தார். இதையடுத்து அவரது உடல் சென்னையிலிருந்து சொந்த ஊரான தஞ்சை பூண்டிக்கு எடுத்து வரப்பட்டு அஞ்சலிக்காக வைக்கப்பட உள்ளது. தஞ்சாவூர் பகுதியில் அவரது மறைவு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து அவரை நன்கு அறிந்த வட்டாரத்தில் பேசினோம், ``துளசி அய்யா வாண்டையார் தன்னுடைய இளமை கல்வியை ஏற்காடு மான்ஸ்போர்ட் பள்ளியிலும், கல்லூரி படிப்பை சென்னை லயோலாவிலும் படித்தார். பின்னர் தன் குடும்பத்தினரால் தொடங்கப்பட்ட தன்னாட்சி கல்லூரியான பூண்டி புஷ்பம் கல்லூரியின் செயலாளராகவும், தாளாளர் பொறுப்பிலும் இருந்து கல்லூரியினை செயல்படுத்தி வந்தார். இப்போது வரை மாணவர்களிடையே ஒத்த பைசா கூட நன்கொடை வாங்காமல் பல்லாயிரகணக்கான ஏழை மாணவர்கள் கல்வி பயில்வதற்கு உதவியாகவும், உறுதுணையாகவும் இருந்தவர்.


துளசி அய்யா வாண்டையார்: உதவ முன் வந்த ஒபாமா.. வியந்த அப்துல்கலாம்! -சோகத்தை ஏற்படுத்திய இழப்பு

ஏழை மாணவர்கள் 200 பேர் பயன்பெறும் வகையில் தனது சொந்த செலவில் கல்லூரில் இலவச ஹாஸ்டல் ஒன்றை நடத்தி வந்தார். அதனால் கல்லூரியே அவரது அடையாளமானது. கல்வி காவலர் என்ற பெயரும் அவருக்கு வந்தது. காந்தியின் கொள்கையினை கடைசி வரை கடைப்பிடிததவர். காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து பல்வேறு பதவிகளை வகித்து பணியாற்றியதுடன் 1991 முதல் 1996 வரை காங்கிரஸ் கட்சியின் தஞ்சாவூர் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார். காமராசர், வைகோ, கி.வீரமணி உள்ளிட்ட பல தலைவர்களிடம் நல்ல நட்பில் இருந்தவர். காமராசரின் கொள்கைகளை பின்பற்றியவர். நடிகர் சிவாஜிகணேசனுக்கு ஆலோசனைகளை வழங்கியவர்.

எம்.பியாக இருந்த போது ஒரு நாள்கள் கூட விடுப்பு எடுக்காமல் நாடாளுமன்ற கூட்டத்தில் கலந்து கொண்டவர். நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள நூலகத்தில் அதிகம் நேரம் இருந்த எம்பிக்களின் பட்டியலில் இவர் பெயரும் உள்ளது குறிப்பிடதக்கது. தமிழ், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் பத்துக்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதியுள்ளார். வாழ்க்கைக்கு தேவையான குறிப்புகள் கொண்ட இன்ப வாழ்வு என்ற புத்தகத்தை எழுதி ஒரு லட்சம் பிரதிக்கு மேல் அச்சிட்டு மக்களிடத்தில் இலவசமாக கொடுத்து வந்தார்.


துளசி அய்யா வாண்டையார்
துளசி அய்யா வாண்டையார்

தனக்கு யாரேனும் பரிசு கொடுத்தால் அதை விட கூடுதலான பரிசை கொடுத்து அன்பால் திணறடிப்பார். நேரம் தவறாமைக்கு உதாரணமாக இருப்பார். இவரது தலைமையின் கீழ் ஆயிரகணக்கான திருமணங்களை நடத்தி வைத்துள்ளார். ஒரு திருமணத்திற்கு கூட நேரம் தவறி சென்றதே இல்லை. கட்டாயம் ஏதோ ஒரு வெள்ளி பொருளை பரிசாக வழங்குவார். சமஸ்கிருதத்தில் புலமை வாய்ந்தவர். ஓவியர் மணியம் வரைந்த பொன்னியின் செல்வன் ஓவியக் கதையில் வந்தியதேவன் கதாப்பாத்திரத்தின் மாடலாக துளசி அய்யா வாண்டையார் இருந்தார் என்பது பலருக்கு தெரியாத தகவல்.

கல்லூரி
கல்லூரி

பால்மர் ரைட்டிங் முறையில் எழுதுவதில் வல்லமை பெற்றவர். காந்தி கொள்கையில் கெட்டியாக இருந்ததால் கடைசி வரை கதர் ஆடை மட்டுமே உடுத்தி வந்தார். காந்தி வெள்ளிக் கிழமையில் சுட்டுக் கொல்லப்பட்டதால் அன்றைய தினம் முழுவதும் மெளன விரதம் இருப்பதை கடைசி வரை கடைபிடித்து வந்தார். அந்த அளவிற்கு காந்தியின் மீது ஈர்ப்பு கொண்டவர்.

இரண்டாவது முறை நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு தோல்வியை தழுவியவர், அதன் பிறகு தீவிர அரசியலிலிருந்து ஒதுங்கி கொண்டார். அமெரிக்காவின் முன்னாள் அதிபர் பராக் ஒபாமா எழுதிய நூல்களை படித்து விட்டு மெயில் மூலம் தனது கருத்தை அனுப்பி வைத்தார். அதனை படித்து விட்டு ஒபாமா துளசி அய்யா வாண்டையாருக்கு ரிப்ளை அனுப்பினார். அப்போது முதல் மெயில் மூலம் இருவரும் நட்பு பாராட்டி வந்தனர். அவரை பற்றியறிந்த ஒபாமா, `உங்களுக்கோ அல்லது உங்கள் கல்லூரிக்கோ என்ன உதவி வேண்டும் கேளுங்கள் செய்து தருகிறேன்’ என கேட்க, `எனக்கு தேவையானவை கடவுள் புண்ணியத்தால் கிடைத்து விட்டது. அந்த உதவியை ஏழை மாணவர்களுக்கு செய்யுங்கன்னு’ மெலியில் அனுப்பி ஒபாமாவை மெய் சிலிரிக்க வைத்தார். தனது கல்லூரி விழாவுக்கு முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமை அழைத்து வந்த போது கல்லூரியின் நிர்வாகத்தை பார்த்து அப்துல்கலாம் வியந்து பாராட்டினார்.

துளசி அய்யா வாண்டையார்
துளசி அய்யா வாண்டையார்

பல்வேறு விருதுகளை பெற்றிருக்கிறார். அமெரிக்கன் பயோ கிராபிக் என்ற இன்ஸ்டியூட் உலகில் தலைசிறந்த 500 மனிதர்களை தேர்ந்தெடுத்தது. அதில் துளசி அய்யா வாண்டையாரும் இடம் பெற்றார் என்பது சிறப்புகுரியது. பல்வேறு நாடுகளுக்கு சென்று வந்ததை பயணக் கட்டுரையாக எழுதுவதை வாடிக்கையாக கொண்டவர். அவருடைய இழப்பு ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்திற்கு பேரிழப்பாகும். மாணவர்களுக்கும், மக்களுக்கும் தனது கல்லூரியின் மூலம் மட்டுமல்ல உதாரணமாக வாழ்ந்ததன் மூலம் பாடமாகவும் மாறி மறைந்துள்ளார்” என சோகத்துடன் தெரிவித்தனர்.

வரலாற்று பக்கங்கள் - II

வளரி வரலாறு   👈 Click above திருமங்கையாழ்வார் வரலாறு 👈 Click above அம்பலகாரர் / அம்பலம் வரலாறு 👈 Click above வாண்டையார் வரலாறு 👈 Click a...

இந்த வலைப்பதிவில் தேடு

என்னைப் பற்றி

எனது படம்
Contact: info.kallarkulavaralaru@gmail.com, தமிழகத்தில் வாழும் கள்ளர் மரபினர் முக்குலத்தோரில் ஒரு பிரிவினர் ஆவர். கள்ளர், மறவர், அகமுடையார் ஆகிய முக்குலங்களும் போர்த் தொழிலை அடிப்படையாக கொண்டு வாழ்ந்து வந்ததால் இந்த மூன்று சாதியினரும் முக்குலத்தோர் என்று அறியப்படுகின்றனர். இந்த மூன்று குலத்தினரும் "தேவர்" என்ற பொதுவான பெயரோடு அறியப்படுகிறார்கள். கள்ளர் மரபில் அறந்தாங்கி தொண்டைமான், புதுக்கோட்டை பல்லவராயர், புதுக்கோட்டை தொண்டைமான் மற்றும் பல சமீன்தார்களும், பெரு நிலவுரிமையாளர்களும் இருக்கின்றனர். (கள்ளர் படைப்பற்று - கள்ளர் நாடு - கள்ளர்த்தடி). கள்ளர் வரலாறு : வரலாறு என்றால் வந்த வழி என்று பொருள். வந்த வழி தெரியாதவர்களுக்குப் போகும் வழி புரியாது. வரலாற்றை நாம் நினைவு கூர்வதற்குக் காரணம் கடந்து போன ஈகங்களை எண்ணிக் கண்ணீர் விடுவதற்காகவும், நிகழ்த்தி விட்ட வீரங்களைச் சொல்லிப் பெருமை பேசுவதற்காகவும் அல்ல. வருங்காலத்திற்கு வழி சமைப்பதற்கு அந்த ஈகமும் வீரமும் வழிகாட்ட வேண்டும் என்பதற்காகத்தான். கள்ளர்களின் நான்கு முக்கிய பிரிவுகள் - ஈசநாட்டுக்கள்ளர் (திருச்சி, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை) : கிளைவழிக்கள்ளர் (சிவகங்கை) : அம்பல கள்ளர் / நாட்டார் கள்ளர் (சிவகங்கை, மதுரை) : பிறமலை கள்ளர் (மதுரை, உசிலமபட்டி, தேனி, கம்பம், திண்டுக்கல்)

வலைப்பதிவு காப்பகம்

பின்பற்றுபவர்கள்