வெள்ளி, 11 டிசம்பர், 2020

வறண்ட பகுதியைப் பசுமையாக்கிய டி.எஸ்.பி அய்யர்சாமி

 

அய்யர்சாமி
அய்யர்சாமி

சுற்றுச்சூழல்


ரூர் மாவட்டத்தில் காவிரி ஆறு ஓடுகிறது. அமராவதி, நொய்யல் நதிகள் பாய்கின்றன. ஆனால், மாவட்டத்தில் உள்ள 70 சதவிகிதப் பகுதிகள், வறட்சி மிகுந்த, வானம் பார்த்த பூமியாகவே உள்ளன.

சுண்ணாம்பு கலந்த மண்தான் இங்கு அதிகம் என்பதால், மழையையும் ஈர்க்காமல், எப்போதும் வெப்பமே நிலவுகிறது. ‘கரூர் மாவட்டத்தில் வெறும் 2.27 சதவிகிதம்தான் காடுகளின் அளவு உள்ளது. குறைந்தது 32 சதவிகிதம் அளவுக்குக் காடுகள் இருக்கும் இடத்தில்தான் மழை சீராகப் பெய்யும்’ என்று கரூர் மாவட்ட சூழலியல் ஆர்வலர்கள் புள்ளிவிவரத்தோடு, ‘வறட்சி நிலவரம்’ பற்றிக் கவலைப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள்.

கற்றாழை
கற்றாழை

இந்த நிலையில், கரூர் ஆயுதப்படை டி.எஸ்.பியாக உள்ள அய்யர்சாமி, ஆயுதப்படை, எஸ்.பி அலுவலக வளாகங்களில் உள்ள காலியிடங்களில் மியாவாக்கி முறையில் இதுவரை 2,252 மரக்கன்றுகளையும், 1,400 பனைவிதைகளையும் விதைத்து, பசுமையைக் கட்டமைக்கும் முயற்சியில் இறங்கியிருக்கிறார். அதோடு, ஆயுதப்படை வளாகம், மைதானத்தில் பெய்யும் மழைநீரை வீணாக்காமல், மழைநீர்ச் சேகரிப்பு அமைப்புமூலம், பூமிக்குள் சேர்ப்பதால், கடந்த ஒரு வருடத்தில், அந்தப் பகுதியின் நிலத்தடி நீர்மட்டம் கணிசமான அளவு உயர்ந்திருக்கிறது.


மரங்களுக்கு மூடாக்கு
மரங்களுக்கு மூடாக்கு

இவர் இங்கு பணிக்கு வருவதற்கு முன்புவரை வறண்ட பிரதேசமாகக் காட்சியளித்த ஆயுதப்படை வளாகம், இப்போது பசுமையாகக் காட்சியளிக்கிறது. அத்தனை மரக்கன்றுகளுக்கும் சொட்டுநீர்ப் பாசன வசதி செய்திருக்கிறார். மரக்கன்றுகளுக்கு நீர்ப் பாசன அமைப்புகளை ஏற்படுத்திக்கொண்டிருந்த அய்யர்சாமியைச் சந்தித்துப் பேசினோம்.

போர்வெல்லில் மழைநீரைச் சேகரிக்கும் அமைப்பு
போர்வெல்லில் மழைநீரைச் சேகரிக்கும் அமைப்பு

“எனக்குச் சொந்த ஊர் மதுரை பக்கமுள்ள கருமாத்தூர். விவசாயக் குடும்பம்தான். இயல்பாகவே எனக்கு இயற்கை மேல அதிக ஆர்வம். படிக்கிற காலத்திலேயே ஊருக்குள்ள மரக்கன்றுகள் வைக்கிறது, பொதுப்பிரச்னைக்காக மக்கள் பிரதிநிதிகள்கிட்ட மனுக்கொடுக்கிறதுனு செயல்படுவேன். இந்த நிலையிலதான், 1984-ம் வருஷம் போலீஸ் வேலைக்கு வந்தேன். கிடைக்குற ஓய்வுநேரத்தில மரக்கன்றுகளை நடுவேன். 2009-ம், வருஷம் பதவி உயர்வுல கோயமுத்தூர்ல இன்ஸ்பெக்டரா இருந்தேன். அப்ப, பள்ளிகள், காவல் நிலையங்கள், காவலர் குடியிருப்புகள், பொது இடங்கள்னு பல இடங்களுக்குச் சொந்த செலவுல மரக்கன்றுகளை வாங்கிக் கொடுக்க ஆரம்பிச்சேன். ஒரு கட்டத்துல சொந்தமா நர்சரி போட்டு நாங்களே மரக்கன்றுகளை உற்பத்தி பண்ணினோம். அதை இலவசமா தர ஆரம்பிச்சோம். கிட்டத்தட்ட ஒரு லட்சத்துக்கும் அதிகமான மரக்கன்றுகளை இலவசமா கொடுத்தோம். நாங்க மட்டும் நேரடியாக 15,000 மரக்கன்றுகள் நட்டிருப்போம்’’ என்றவர் நடந்துகொண்டே பேசத்தொடங்கினார்.

‘‘ஒன்றரை வருஷத்துக்கு முன்னாடி, கரூர் ஆயுதப்படை பிரிவு டி.எஸ்.பியாகப் பதவி உயர்வு பெற்று, இங்க வந்தேன். வந்து இங்க பார்த்ததும், அதிர்ச்சியாயிட்டேன். காரணம், எங்கப் பார்த்தாலும் வறட்சி. கடுமையான வெப்பம் உடம்பைச் சுட்டெரிச்சது. ஆயுதப்படை வளாகத்தில 500 வேப்பமரங்கள் இருந்தாலும், அனல்காற்று அடிச்சது. ‘இங்க மரக்கன்றுகளை நட்டு, பசுமையைக் கட்டமைக்கவேண்டியது அவசியம்’னு நினைச்சேன். ஆனால், இங்க தண்ணி பிரச்னை. ரெண்டு போர்வெல் இருந்தும், மொத்தம் ஒருமணி நேரம்தான் தண்ணீர் சப்ளை கிடைச்சது. முதல்ல தண்ணிக்கு வழிவகைச் செய்யணும்னு நினைச்சேன். ஆயுதப்படை வளாகம், மைதானத்தில பெய்யுற மழைநீரை அப்படியே சிந்தாம சிதறாம, ரெண்டு போர்வெல் பக்கத்துல போய்ப் பூமிக்குள் சேரும்படி, மழைநீரைச் சேகரிக்கும் அமைப்பை அமைச்சோம். இதனால, நிலத்தடி நீர்மட்டம் மேலே வந்துச்சு. ரெண்டு போர்வெல்களும், அதுக்கு பிறகு தலா நாலுமணி நேரம்வரைக்கும் தண்ணீர் சப்ளை கொடுத்துச்சு.


அய்யர்சாமி
அய்யர்சாமி

‘இனி, மரக்கன்றுகள் வைக்கலாம்’னு நினைச்சேன். ஒரு வருஷத்துக்கு முன்ன, ரெண்டு போர்வெல்களையும் ஒட்டி இருந்த காலி இடத்தில, நெல்லி, மகோகனி, ஆலமரம், மா மரம்னு 370 மரக்கன்றுகளை மியாவாக்கி முறையில நட்டோம். அதுக்கு, போர்வெல்ல இருந்து வாகனம்மூலம் தண்ணிக் கொண்டு வந்து ஊத்தினோம். நாலு மாசத்துக்கு முன்ன, மறுபடியும் 370 மரக்கன்றுகளை நட்டோம். மைதானத்தையொட்டியிருந்த இடத்தில, 327 வேப்ப மரக்கன்றுகளை நட்டோம்.

தொடர்ந்து, மியாவாக்கி முறையில 300 வேப்பமரக்கன்றுகள், எஸ்.பி அலுவலக வளாகத்துல பழ மரங்கள் 285, பின்னாடி புதர் மண்டிக்கிடந்த காலி இடத்தில ‘ப’ வடிவத்துல 400 பனைவிதைகளை விதைச்சோம். இப்ப ஒரு மாசத்துக்கு முன்னாடிக்கூட ஆயுதப்படை வளாகத்தில, வேம்பு, ஆலம், அரசு, புங்கன், புளினு 600 மரக்கன்றுகளை மியாவாக்கி முறையில நட்டோம். இந்த மரக்கன்றுகளை ஒன்று 10 ரூபாய் விலையில வனத்துறையில வாங்குனோம். அது முழுக்க என்னோட சொந்தச் செலவுதான். நாங்க இதுவரைக்கும் நட்ட 2,252 மரக்கன்றுகளுக்கும், 400 பனைவிதைகளுக்கும், ஏற்கெனவே ஆயுதப்படை வளாகத்தில் வளர்ந்து நிக்குற 500 வேப்பமரங்களுக்கும் சேர்த்து, ரூ.1,89,000 செலவுல சொட்டுநீர்ப் பாசனம் அமைப்பை அமைச்சிருக்கோம்.

மரக்கன்றுகள் பராமரிப்புப் பணியில்
மரக்கன்றுகள் பராமரிப்புப் பணியில்



இதுல என்னோட பங்கு 20,000 ரூபாய் கோயமுத்தூர் வேளாண் விஞ்ஞானி மயில்சாமி 50,000 ரூபாய் கொடுத்தார். மீதிபணத்தை, அப்போதைய எஸ்.பி பாண்டியராஜன் சார், பராமரிப்பு நிதியில இருந்து கொடுத்தார். இதுல என்ன விசேஷம்னா, பனைக்கு முதன்முதலாகச் சொட்டு நீர் போட்டது நாங்களாதான் இருக்கும். ஆயுதப்படையில மொத்தம் 308 காவலர்கள் வேலை பார்க்குறாங்க. அதுல, எஸ்.ஐ அசோகன், தலைமை காவலர் அன்பழகன், பாண்டி, சங்கிலி முருகன், பாபுனு பத்துபேர் இதுல என்னோட ஆர்வமா செயல்படுறாங்க.

கடவூர் மலைப்பகுதியில இருக்கத் துப்பாக்கிசுடும் பயிற்சி எடுக்குற இடத்தில, 1,000 பனைவிதைகளை விதைச்சிருக்கிறோம். அதோட, ஆயுதப்படை வளாகத்தில என்னோட அலுவலகத்துக்கு எதிரே மஞ்சள் கரிசாலை, எலுமிச்சம் புல், மருதாணி, ஆடாதொடை, சிறுபீளை, சித்தரத்தை, வசம்பு, துளசி, வல்லாரைனு 35 வகையான மூலிகைச்செடிகளையும் வளர்த்துக்கிட்டு வர்றோம். நான் இங்க வேலையில இருக்குற வரைக்கும் மரக்கன்றுகளை வெச்சு, வளர்த்து, வறண்ட கரூரின் சூழலைப் பசுமையாக்குறதுல அணில் பங்கா இருந்து உதவணும்ங்கிற முடிவுல இருக்கிறேன். ஓய்வுக்குப்பிறகும், பொள்ளாச்சியில செட்டிலாகி, தொடர்ந்து இயற்கை சார்ந்து இயங்கணும்னு நினைச்சுக்கிட்டு இருக்கிறேன்” என்றார் மகிழ்ச்சியாக.

வரலாற்று பக்கங்கள் - II

வளரி வரலாறு   👈 Click above திருமங்கையாழ்வார் வரலாறு 👈 Click above அம்பலகாரர் / அம்பலம் வரலாறு 👈 Click above வாண்டையார் வரலாறு 👈 Click a...

இந்த வலைப்பதிவில் தேடு

என்னைப் பற்றி

எனது படம்
Contact: info.kallarkulavaralaru@gmail.com, தமிழகத்தில் வாழும் கள்ளர் மரபினர் முக்குலத்தோரில் ஒரு பிரிவினர் ஆவர். கள்ளர், மறவர், அகமுடையார் ஆகிய முக்குலங்களும் போர்த் தொழிலை அடிப்படையாக கொண்டு வாழ்ந்து வந்ததால் இந்த மூன்று சாதியினரும் முக்குலத்தோர் என்று அறியப்படுகின்றனர். இந்த மூன்று குலத்தினரும் "தேவர்" என்ற பொதுவான பெயரோடு அறியப்படுகிறார்கள். கள்ளர் மரபில் அறந்தாங்கி தொண்டைமான், புதுக்கோட்டை பல்லவராயர், புதுக்கோட்டை தொண்டைமான் மற்றும் பல சமீன்தார்களும், பெரு நிலவுரிமையாளர்களும் இருக்கின்றனர். (கள்ளர் படைப்பற்று - கள்ளர் நாடு - கள்ளர்த்தடி). கள்ளர் வரலாறு : வரலாறு என்றால் வந்த வழி என்று பொருள். வந்த வழி தெரியாதவர்களுக்குப் போகும் வழி புரியாது. வரலாற்றை நாம் நினைவு கூர்வதற்குக் காரணம் கடந்து போன ஈகங்களை எண்ணிக் கண்ணீர் விடுவதற்காகவும், நிகழ்த்தி விட்ட வீரங்களைச் சொல்லிப் பெருமை பேசுவதற்காகவும் அல்ல. வருங்காலத்திற்கு வழி சமைப்பதற்கு அந்த ஈகமும் வீரமும் வழிகாட்ட வேண்டும் என்பதற்காகத்தான். கள்ளர்களின் நான்கு முக்கிய பிரிவுகள் - ஈசநாட்டுக்கள்ளர் (திருச்சி, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை) : கிளைவழிக்கள்ளர் (சிவகங்கை) : அம்பல கள்ளர் / நாட்டார் கள்ளர் (சிவகங்கை, மதுரை) : பிறமலை கள்ளர் (மதுரை, உசிலமபட்டி, தேனி, கம்பம், திண்டுக்கல்)

வலைப்பதிவு காப்பகம்

பின்பற்றுபவர்கள்