1034 ஆவது சதய விழாவில் தமிழக அரசின் சதயவிழாக்குழுவின் "மாமன்னன் இராசராச சோழன்" விருதுபெற்ற சோழர்களின் வழி தோன்றல் ஐயா N.செல்வராஜ் நாயக்கவாடியார் மற்றும் ஐயா S.ராஜேந்திரன் தஞ்சிராயர் அவர்களை, உலகத் தமிழர்கள் சார்பாக வணங்குகிறோம்.
ஐயா N.செல்வராஜ் நாயக்கவாடியார் மற்றும் சத்திரபதி சிவாஜி மகாராஜ் வாரிசுதாரர் தஞ்சை மராட்டிய இளவரசர் அவர்கள் தம்பியுடன்
மாமன்னர் ஸ்ரீ...ஸ்ரீ... ராஜராஜ.....சிவபாத சேகரன்... சதயத்திற்கு சமர்ப்பணம்.
ஆயிரம் வருடங்களுக்கு முன்...
இராஜராஜீஸ்வரத்தில் நடைபெற்ற திருவிழாக்கள்:-
1. திருச்சதயத்திருநாள் : ஒவ்வொரு மாதமும் சதய நட்சத்திரம் அன்று விழா நடைபெற்றது. ஆக, வருடத்தின் 12 சதய நாட்களிலும் இராஜராஜீஸ்வரம் புதுமணம் காணும் மங்கையெனத் திருவிழாக்கோலம் பூண்டது.
2. ஸ்ரீஇராஜஜேஸ்வரமுடையார் ஆட்டை பெரிய திருவிழா : இது வருடம் ஓரு முறை நடக்கும் உற்சவம். (ஆட்டை - ஆண்டு). கொடியேற்றத்துடன் 10 நாட்கள் நடைபெற்றது.
3. சங்கிரமம் அல்லது சங்கிராந்தி : சூரியன் ஓரு இராசியிலிருந்து மற்றொரு இராசிக்குப் பிரவேசிப்பதே சங்கிராந்தி (மாதப்பிறப்பு) எனப்பட்டது. ஆக, 12 மாதப்பிறப்பும் வெகுவிமரிசையாகக் கொண்டாடப்பட்டன.
4. கார்த்திகைத் திருவிழா : கார்த்திகை மாதம் திருக்கார்த்திகை நட்சத்திரம் அன்று, ஓரு நாள் உற்சவமாக இவ்விழா நடைபெற்றது.
இவ்விழாக்கள் நடக்கும் நாட்களில் உற்சவத் திருமேனிகளுக்கு, ஒரு நாளில் மூன்றுமுறை திருமஞ்சனம் பாங்குடன் நடைபெற்றது. பெரிய செண்பக மொட்டுக்கள், ஏலவரிசிகள் (ஏலக்காய்) மற்றும் இலாமிச்சை (ஓரு வகையான வாசனை வேர்) வேர்கள் ஆக மூன்று வாசனையூட்டும் பொருட்களால் திருமஞ்சன நீர் சுகந்த மணமூட்டபட்டது.
இந்நீர் கொண்டு உற்சவத் திருமேனிகளுக்குத் திருமஞ்சனம் நடைபெற்றது. முற்றிலும் இயற்கை வேதிக்கூறுகளைக் கொண்ட பொருட்கள். இவை மிகுந்த சுகந்த நறுமணம் தரக்கூடியவை.
திருமஞ்சனநீரை வாசனையூட்ட வேண்டிய மூன்று பொருட்களையும் பெறுவதற்கு நிவந்தங்கள் வழங்கப்பட்டன. சிறுதனத்துப் பணிமகன் அருமொழிதேவவளநாட்டுப் புலியூர்நாட்டு முருகநல்லூருடையான் காடன்கணவதி உடையார் 56 காசு பொலிசையூட்டாகத் (வைப்புநிதி போன்றது) தஞ்சாவூர்க் கூற்றத்துப் புறம்படி திரிபுவனமாதேவி பேரங்காடி வணிகர்கள் சமூகத்திடம் வழங்கியுள்ளார்.
அவ்வணிகர்கள் 7 காசை வட்டியாகத் தரவேண்டும். வருடந்தோறும் இந்த 7 காசைக் கொண்டு செண்பகமொட்டுக்கள், ஏலவரிசிகள் திருமஞ்சனநீருக்குப் பெறப்பட்டன. மேலும், வடகரை ராஜேந்திரசிங்கவளநாட்டு மிறைக்கூற்றத்துப் பிரம்மதேய இராமனூர் சபையார் 29வது ஆட்சியாண்டு முதல் 30 காசைப் பொலிசையூட்டாகப் பெற்றுக்கொண்டு, வட்டியாகத் தரும் மூணேமுக்கால் காசிற்கு இலாமிச்சைவேருக்கு ஆன செலவுகளைச் செய்யவேண்டும் என்று நிவந்தம் அளிக்கப்பட்டது.
திருவிழா என்றால் மேளதாளம் இல்லாமலா? அதற்கும் நிவந்தம் அளிக்கப்பட்டது.
இராஜேந்திரசிங்கவளநாட்டு மண்ணிநாட்டு நாட்டார்மங்கலத்துக் கடிகையான், உடையார் ஸ்ரீராஜராஜேஸ்வர உடையார்க்குத் திருவாய்க்கேள்வி செய்யும் ராஜகேசரி கோதண்டராமனான ஜெயங்கொண்ட சோழகடிகைமாராயன் 29வது ஆண்டுவரை பொலிசையூட்டுக்காக 40 காசு வழங்கியுள்ளார். ஸ்ரீவீரநாராயண சதுர்வேதிமங்கலத்துச் சபையார் 40 காசினை வருடந்தோறும் செலுத்தவேண்டும். அதில் அரைக்காசு வீதம், திருப்பறை அடிக்கும் கடிகையார் ஐவர் ஆட்டைதிருவிழா கொடியேற்று நாளில் பறை கொட்டுவதற்கு கூலியாகப் பெற்றுக்கொண்டனர்.
மேலும், ஆடவல்லான் திருச்சுற்று வைபவத்தின் போதும் பறைகொட்டுவதற்கு அரைக்காசு வீதம் 5 மேளக்காரர்களும் பெற்றுக்கொண்டனர். ஒருவேளை, முந்தைய ஆட்டைத் திருவிழாவின்போது பறைகொட்டியவர் கிடைக்கவில்லை என்றால், வேறு ஒருவர் இரு உற்சவங்களின்போதும் பறைகொட்டி ஒருகாசு வீதம் பெற்றுக் கொள்ளலாம் என்று நிவந்தமளிக்கப்பட்டது.
அன்னமிடல் என்பது அந்நாளில் இயல்பாய் நடைபெற்ற ஒரு தர்மவழக்கமாக இருந்துள்ளது.
இராஜராஜீஸ்வரத்தில் மாதாந்திர சதயவிழாவின் போதும், வருடாந்திர ஆட்டைத் திருவிழாவின் போதும், சிவயோகிகள் பதின்மரும் உடையார் சாலையிலே உண்ணக்கடவர் என்று பெயர் குறிப்பிடயியலாத ஒரு பெருமகனார் நிவந்தமளித்துள்ளார். 25 கலம் நெல் ஒரு வருடத்திற்குத் தேவைப்பட்டது. ஒரு குறுணியும், 2 நாழி நெல்லும், ஆடவல்லான் என்னும் அளவையால் அளந்து சிவயோகிகளுக்கு ஒரு வேளை உணவிற்காகக் கொடுக்கப்பட்டது.
திருவிழா நடந்த அத்தனை நாட்களிலும் 240 சிவயோகிகள் வயிறார உண்ண உணவளிக்கப்பட்டது.
பொலிசையூட்டாக 100 காசுகள் இதற்காகப் பெற்றுகொண்டவர்கள் நித்தவினோத வளநாட்டு வெண்ணிக்கூற்றத்துப் பிரம்மதேயத்துப் பெருநங்கைமங்கலத்துச் சபையார். பெற்றுக்கொண்ட பொலிசையூட்டுப் பணத்திற்கு அவர்கள் வட்டிவிகிதமாய் ஒரு காசிற்கு மூன்று குறுணி நெல் வருடந்தோறும் அளிக்க கட்டளையானது.
சூரியன் இருக்கும் திசைநோக்கி முகம் திருப்பும் சூரியகாந்தி மலரெனப் பல பெருந்தனத்து அதிகாரிகள் அன்று செயல்பட்டுள்ளனர்.
யதா ராஜக: ததா சேவக: என அவர்களில் ஒருவர் தான் ஸ்ரீராஜராஜேஸ்வரமுடையாருக்கு ஸ்ரீகாரியம் செய்த பொய்கை நாடுகிழவன் ஆதித்தன்சூரியனான தென்னவன் மூவேந்தவேளான். இவர் திருவிழாக்களின்போது இறைத்திருமேனிகளுக்குத் திருவமுது படைப்பதற்கான நிவந்தம் அளித்துள்ளார். பொலிசையூட்டாக 78 காசுகள் கொடுத்துள்ளார். இக்காசு ஒன்றுக்கு வட்டியாக மூன்று குறுணி நெல் வருடந்தோறும் தஞ்சைப் பெரிய பண்டாரத்தில் சேர்க்க வேண்டும்.
என்னென்ன திருவமுது
படைத்தார்கள் என்றால்,
அப்பக்காய்க் கறியமுது, கைக்கறியமுது (பழங்களால் ஆனது), பொரிக்கறியமுது, புளியங்கறியமுது ஆகியன. இவற்றைச் சமைக்கத் தேவையான போனகபழவரிசி, பூரிநெல்லு, பருப்பு, மிளகு, கடுகு, சர்க்கரை, ஜீரகம், கொள்ளு, நெய், தயிர், உப்பு, புளியங்காய்கள், பழம் எனப் பலதும் வட்டி நெல்லிற்கு இணையாகப் பெறப்பட்டன. அமுதைப் படைப்பதற்கான வாழைக்குருத்து இலைகள், அடையக்காய் (பாக்கு), வெள்ளியிலை (வெற்றிலை) எல்லாம் பெறப்பட்டன. திருவமுது சமைப்பதற்கான விறகுக்கட்டைகள் பெறவும் வட்டிநெல் நிவந்தமளிக்கப்பட்டுள்ளது.
வழிபாட்டின்போது தூபமேற்ற உரியுஞ்சிதாரி எனப்பட்ட தோலுடைய தூபப்பண்டம் உபயோகிக்கப்பட்டது. அதைப் பெறுவதற்கும் ஒரு நாழிநெல் ஒரு காசிற்கு வட்டியாகப் பண்டாரத்தில் வைக்கப்பட்டது.
திருவிழாக்களின்போது ஸ்ரீஇராஜராஜீஸ்வரமுடையாருக்கும், தட்சிணமேரு விடங்கருக்கும் விளக்கேற்றவும், தூபமிடவும் வேண்டுமல்லவா? தீபமேற்றக் கற்பூரங்களே உபயோகிக்கப்பட்டன.
தீபம், தூபம் ஏற்றவும், திருவமுது படைக்கவும் மொத்தம் 94 காசுகள் தஞ்சைப் பண்டாரத்தில் பெருமகனார் ஆதித்தசூரியனால் பொலிசையூட்டாக வைக்கப்பட்டன. இப்பொலிசையூட்டுப் பணத்தைப் பெற்றுக் கொண்ட நித்தவினோத வளநாட்டு வெண்ணிக் கூற்றத்துப் பிரம்மதேயப் பெருநங்கைமங்கலத்துச் சபையார், வட்டியாக நெல்லும் காசும் வருடந்தோறும் கொடுக்கக் கட்டளையானது.
இவ்வாறாக, அன்று ....
ஸ்ரீஇராஜராஜீஸ்வரத்தில் மாதாந்திர, வருடாந்திரத் திருவிழாக்கள் களைகட்டின. அன்றுமுதல், இன்றுவரை திருச்சதயவிழா தவறாமல் நடைபெற்று வருகிறது.
(என்ன, பல வேறுபாடுகள் உள்ளன.)
சந்திர ஆதித்தவர் உள்ளவரை இந்தத் தர்மம் நடக்கக்கடவது என்று கல்லில் வெட்டிச் சென்றுள்ளர்கள்.
ஆதலால், சந்திர ஆதித்தவர் உள்ளவரை திருசதயத் திருநாள் இன்றும், என்றென்றும் கொண்டாடப்படும்.
பல்லாண்டு, பல்லாண்டு, பல்லாயிரத்தாண்டு, பலகோடி நூறாயிரத்தாண்டு இராஜராஜ சோழனின் புகழ் நிலைக்க வேண்டும்.
தமிழ் உள்ளவரை, தமிழ்மண் உள்ளவரை.
நிலவு உள்ளவரை, பிரபஞ்சம் உள்ளவரை.
ஆதித்தன் உள்ளவரை, பொதிகைத் தென்றல் உள்ளவரை.
நன்றி. செல்வி அருண்குமார் , திருச்சி