புதன், 3 ஏப்ரல், 2019

கள்ளர் நாட்டு வீரத்திருமகள் "மாயக்காளும்" கள்ளர் நாட்டு வீரவேங்கைகளும்.



மக்கள் வரலாற்றில் கடந்த நூற்றாண்டின் ஒரு பதிவு தான் ""தென்னக ஜாலியன் வாலாபாக்'' என்றழைக்கப்படும்  மதுரை மாவட்ட பெருங்காமநல்லுர் கிராமத்தில் நடந்த அநீதி செயல். உரிமைகாக்க பதினாறு பேர் உயிரிழந்த சோக வரலாறு இது. பலர் அறிந்திடா சம்பவமும் கூட.

இந்த சட்டத்தை பற்றி விரிவாக அறிய
இங்கே சொடுக்கவும் (click here)👉 குற்றப்பரம்பரை அல்ல கொற்ற பரம்பரை

கள்ளர்கள் அடக்க நினைத்த வெள்ளைய அரசு, தமிழகத்தில் 6.5.1914-இல் மதுரை கீழக்குடி கள்ளர்களுக்கு எதிராகவும், பின்னர் 5.6.1918-இல் ஒட்டுமொத்த பிறமலைக் கள்ளர்களுக்கு எதிராகவும் குற்றப்பழங்குடி சட்டம் அமல்படுத்தப்பட்டது. இம்மக்கள் சாலையோரம் நின்றாலே கைது செய்து விசாரணையே இல்லாமல் தண்டிக்கப்பட்டனர். வெறும் சந்தேகத்தின் பேரில் பல பேர் தூக்கிலிடப்பட்டனர், நாடு கடத்தப்பட்டனர்.


ஆண்கள் அனைவரும் இரவு முழுவதும் காவல்நிலையங்களில் தங்கியிருக்க வேண்டும். மனித நாகரிகத்திற்கு எதிரான சட்டவிதிகள் நடைமுறைப்படுத்தப்பட்டன. இச்சட்டத்திற்கு முன்பே 1911-இல் 5,456 கள்ளர்களை கப்பலில் இடம் இல்லாததால் கடலில் தள்ளிவிட திட்டமிட்டபோது தென்னார்காடு மாவட்ட ஆட்சியர் ஆஸ்தினின் தலையீட்டால் தப்பினர். அவர்கள் இன்றும் சொந்த மண்ணிலேயே அஸீஸ்நகர், ஒட்டேரி, பம்மல் குடியிருப்புகளில் அகதிகளாக வாழ்ந்து வருகின்றனர்.


இச்சட்டத்தின் கீழ் ரேகை பதிவு செய்தவற்காக மதுரை மாவட்டம் திருமங்கலம் தாலுகாவில் உள்ள காளப்பன்பட்டி, போத்தம்பட்டி, பெருங்காமநல்லூர், தும்மக்குண்டு, குமரம்பட்டி ஆகிய ஊர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டன. அதிகாரிகள் சிந்துபட்டியில் 2.3.1920-இல் முகாமிட்டனர். கள்ளர்நாட்டு தலைவர்கள் 24.3.1920-இல் தும்மக்குண்டு மந்தையில் ஒன்றுகூடி தேவசகாயத் தேவர் தலைமையில் 8 பேர் கொண்ட ரேகை எதிர்ப்பு கமிட்டி அமைத்து ஜார்ஜ் ஜோசபை வழக்குரைஞராக நியமித்தனர்.


மதுரை மாவட்டம் பிரமலைக் கள்ளர் நாட்டில், அதிகாரிகள் இந்தச் சட்டத்தை வேகமாக அமல்படுத்தி வருகையில், இறுதிக் கட்டமாக பெருங்காமநல்லூர் கிராமத்துக்கு வந்தனர். அந்தச் சட்டத்துக்கு அடிபணிய அந்தப் பகுதி மக்கள் மறுத்தனர். 'சத்தியத்துக்கும் தர்மத்துக்கும் உகந்த சட்டங்களுக்கு நாங்கள் கட்டுப்படுவோம். சமூக நீதிக்கு எதிரான சட்டத்துக்குக்கட்டுப்பட முடியாது" எனத் திட்டவட்டமாகத் தெரிவித்தனர். சட்டத்தை அங்கே அமல்படுத்தியே ஆக வேண்டும் என்பதில் மதுரை மாவட்ட ஆட்சியர் தீவிரமாக இருந்தார்.

எனவே, சட்டத்தை மறுப்பது குற்றம்' என அதிகாரிகள், சமூகப் பெரியவர்களிடம் எடுத்துரைத்தனர். 'நாங்கள் செய்த குற்றம் என்ன? அரசுக்கு எதிராகக் கிளர்ச்சியில் ஈடுபட்டோமா, கொலை கொள்ளையில் ஈடுபட்டோமா, சாதி - சமயச் சண்டை யில் ஈடுபட்டோமா? எதற்காக இங்கே இவ்வளவு குதிரைப் படை, ஆயுதப்படையோடு வந்து எங்களை பயமுறுத்து கிறீர்கள்? குற்றவாளி, அப்பாவி என்ற பேத மில்லாமல் ஒட்டு மொத்த கள்ளர் சமுதாயத்தையும் குற்றவாளி என சட்டம் போட்டது தவறு அல்லவா? அந்தச்சட்டத்தைக் கூறி எங் களைப் பயமுறுத்தி, கொடுமைப்படுத்துவது எந்த வகையில் நியாயம்? நாங்கள் கைரேகை பதிக்க மறுப்பது எங்களைப் பொறுத்தவரை தன்மானப் பிரச்சினையாகும். அதைக் குற்றம் என்று நீங்கள் சொல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது...' என சமூகப் பெரியவர்கள் அதிகாரிகளிடம் வாதிட்டனர். ஒவ் வொரு முறையும் இந்த வாக்குவாதம் மணிக்கணக்கில் தொடர்ந்தது. விவாதம் முடிவின்றி இழுபறியாக நீடித்தது.

நாட்கள் நகர்ந்து கொண்டிருந்தன. அதிகாரிகள் ஒரு முடிவுக்கு வந்தார்கள். ரேகைப் பதிவு அதிகாரிகளுடன் போலீசார் 2 மார்ச் 1920 அன்று கிராமங்களில் முகாமிடத் தொடங்கினர். கிராமங்களுக்குள் செல்லும்முன் கிராமத்து பெரிய ஆட்களும் செல்வாக்கானவர்களும் போலீசாரை அணுகி, 'இது பெரிய அநியாயம். கள்ளர்கள் விவசாயிகள். அவர்கள் காட்டுமிராண்டிகள் அல்ல. எனவே நீங்கள் எங்கள் கிராமத்துக்கு வந்து ரேகை பதிவதை ஏற்கமாட்டோம்' என எதிர்ப்புக் குரல் எழுப்பினர்.

அத்தோடு நாங்கள் மதுரை சென்று கலெக்டரைப் போய் பார்த்து பேசிக்கொள்கிறோம் என்றனர். அதையடுத்து அதிகாரிகள் தங்கள் நடவடிக்கையை ஒத்திப் போட்டனர். தேவசகாயத் தேவர், காளப்பன்பட்டி முன்னாள் கிராமமுன்சீப் பட்டியான், கருப்பத் தேவர், பெருங்காமநல்லூர் உடையார் தேவர், சிந்துப்பட்டி முத் திருளாண்டித் தேவர் ஆகியோர் அன்று அதிகாரிகளிடம் ஆவேசமாகப் பேசியவர்கள். சொன்னது போலவே கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.

சிந்துப்பட்டி போலீஸ் சரகம் கள்ளப்பட்டி, கட்டதேவன் பட்டி உட்பட பக்கத்து பனிரெண்டு ஊர் கள்ளர்கள் தும்மக் குண்டு சந்தை மைதானத்தில் 24.3.1920 அன்று பொதுக்கூட்டம், கூட்டினர். அதில், 'இந்தச் சட்டம் பயங்கரமானது. அநியாயமாக அரசு நம்மீது குற்றம் சுமத்துகிறது. தொடர்ந்து மேல் நடவடிக்கை எடுப்பதற்கு கமிட்டி ஒன்று அமைக்கவேண்டும்' எனத் தீர் மானம் நிறைவேற்றினர். அன்றைய கூட்டத்தில் இருநூறு பேர் பங்கேற்றனர்.

அதில், தேவசகாய தேவர், மரியசூசை தேவர், விருமாண்டி தேவர், பட்டியான் கருப்ப தேவர், குடையன் பூசாரி தேவர், முத்துமாய தேவர், உடையார் தேவர், முத்துக்கருப்ப தேவர் ஆகியோர் கொண்ட ரேகை எதிர்ப்புக் குழு அமைக்கப்பட்டது.' அவர்கள் உடனடியாக நடவடிக்கையில் இறங்கினர். அது போலீசிற்கு தெரிய வர, அவர்கள் இன்னும் வேகமெடுத்தனர்.

பெருங்காமநல்லூருக்கு சிந்துப்பட்டி போலீஸ் சப் இன்ஸ் பெக்டர் 28 & மார்ச் 1920 அன்று ஒரு போலீஸ் படையுடன் வந்து கிராமத்தில் வசிக்கும் நாயக்கர் சமுதாயத்தினரிடம், 'நீங்கள் கள்ளர் களுக்கு காவல்கூலி கொடுத்து வருகிறீர்களா? அப்படியானால் அது தொடர்பாக அறிக்கைத் தாருங்கள், அவர்களை கேஸ் போட்டு தண்டிக்கப்போகிறோம்.' என்றார் கள். ஆனால் நாயக்கர்கள் கள்ளர்களுக்கு ஆதரவாகவே சாட்சியம் கொடுத்தார்கள். அது போலீசாருக்கு மேலும் கோபத் தைக் கிளறியது. பெருங்காமநல்லூரில் ரேகைப் பதிவை உடனடியாகச் செய்யவேண்டும் என்பதில் தீவிரமானார்கள்.

'பெருங்காமநல்லூரில் வசிக்கின்ற ஏழு வயதுக்கு மேற்பட்ட கள்ளர் சாதியைச் சேர்ந்தவர்கள் 1920 ஏப்ரல்  & 3ஆம் தேதி காலை பதினொரு மணிக்கு பதிவு செய்வதற்காக போத்தம் பட்டியில் தனித்துணை ஆட்சியர் முன் ஆஜராகவேண்டும்' என மதுரை மாவட்ட உரிமையியல் நீதிபதி 29 மார்ச் 1920 அன்று அறிவித்தார். அந்த அறிவிப்பு கிராம முன்சீப்புகள் மூலம் சுற்றுக்கு விடப் பட்ட து.

29.3.1920 அன்று அனைவரும் போத்தம்பட்டி வந்து ரேகை பதிவு செய்ய வேண்டும் என்று அதிகாரிகள் ஆணை பிறப்பித்தனர். "சர்கார் சட்டத்திற்குப் பணிய வேண்டியது குடிகள் கடமை. அதேபோல் காட்டுமிராண்டி சர்கார் பிரயோகிக்கும் அடக்குமுறைச் சட்டத்தை எதிர்க்க வேண்டியதும் குடிகளின் கடமை' என்று கூறி அங்கு செல்ல மறுத்துவிட்டனர்.


"அடக்குமுறையில் சட்டம் பிறப்பித்து எங்கள் வகுப்பினரை அடிமைப்படுத்தப் பார்க்கிறது அரசு, நீங்களும் உங்கள் ஏகாதிபத்திய வெறிபிடித்த வெள்ளையர் அரசும் அழியும் காலம் தூரத்தில் இல்லை' என்று எச்சரித்தனர்.

காட்டை அழிக்க முடியும் - அலை
கடலைத் தூர்க்கவும் முடியும்
மேட்டை அகழ்த்த முடியும் - விரி
விண்ணை அளக்கவும் முடியும் - உரிமை
எண்ணத்தை ஒடுக்குதல்
எவ்வாறு முடியும் 

என்ற பாரதிதாசன் வரிகளை நெஞ்சில் சுமந்து வாழும் பூர்வகுடி வீரமக்கள் "நாங்கள் நிரபராதிகள், பட்டாதாரர்கள், களவுத்தொழில் செய்யாதவர்கள்' இந்தப் பிராந்தியத்தில் வாழும் சகோதர சமூகத்தினர்களுக்குப் பாதுகாவலர்கள், தோழர்கள், உங்கள் அரசு பிறப்பித்திற்கும் சட்டம் கண் மூடித்தனமானது.

எங்கள் நாட்டின்பால் பற்றுதல் கொண்ட தேசிய உணர்ச்சியை ஒடுக்குவதற்கு முற்படுகிறது வெள்ளையர் சர்க்கார். எங்கள் உயிர் உள்ள மட்டும் ரேகைப் பதிவு செய்யமாட்டோம். மீறிப் பலவந்தப்படுத்தினால் போரிட்டு மடிந்தாலும் மடிவோம், மானம் இழந்து உயிர் வாழ மாட்டோம்' என்று முழங்கினர்.

இந்நிலையில் 1 ஏப்ரல் 1920 அன்று பெருங்காமநல்லூர் மற்றும் பிற கிராமங்களைச் சேர்ந்த கள்ளர்கள் காத்தாண்டம்மன் கோயிலில் கூடினர். ஆயுதத்தைக் கொண்டு நம்மை அடி பணிய வைக்க ஆங்கில அரசு நினைக்கிறது. நிரபராதிகளைக் குற்றவாளிகளாகச் சித்திரித்து, காவல் நிலையத்தில் கைரேகை பதியச் சொல்வது நமக்குப் பெரிய அவமானம். உயிரினும் மானம் பெரிது. அதிகாரிகள் வந்து நெருக்கடி கொடுத்தால், படாங்குவேட்டுப் (அதிர்வேட்டு) போட்டு, பக்கத்து ஊர் மக்களையும் வரவழைத்துப் போராட வேண்டும். அடி பணியக்கூடாது' என முடிவு செய்தனர்.

அதற்கு மறுநாள் (2-ஆம்தேதி) இரவு ஒரு சர்க்கிள் இன்ஸ்பெக்டர், நான்கு தலைமைக்காவலர்கள் மற்றும் சார்ஜன்ட் கீட்ஸ் ஆகியோர் சிந்துப்பட்டியிலிருந்து அரை மைல் தூரத்திலும் இன்னொரு படையினர் திருமங்கலத்திலிருந்து பதினொரு மைல் தூரத்திலுள்ள தும்மக்குண்டுவிலும் வந்து தங்கினர். திருமங்கலத்திலிருந்து வந்த சர்க்கிள் இன்ஸ்பெக்டர், சிந்துப்பட்டியின் சார்பு ஆய்வாளர், தலைமைக் காவலர்கள் சிலருடன் பெருங்காமநல்லூர் நோக்கிப் புறப் பட்டார். ஆயுதப்படைப் பிரிவும் அவர்களுடன் இணைந்து ஏப்ரல் 3 ஆம் தேதி காலை ஆறரை மணிக்கு பெருங்காம நல்லூரை அடைந்தனர்.

போலீஸ் படையினர் வருவதைக் கண்டதும் ஏற்கெனவே திட்டமிட்டபடி இரண்டு அதிர்வேட்டுகள் கிராமத்தினர் தரப்பி லிருந்து வெடிக்கப்பட்டன. உடனே வடகிழக்கே குமரன்பட்டி மற்றும் அல்லிக்குண்டத்திலிருந்தும், தென்கிழக்கே கம்மாளப் பட்டி மற்றும் காளப்பன்பட்டியிலிருந்தும் கம்பு, அரிவாள், ஈட்டிகள் என ஆயுதங்களுடன் கள்ளர் சமுதாயத்தினர் குவிந்தனர். அந்தக் கூட்டத்தைக் கண்ட போலீஸ் படைக்கு கொஞ்சம் அதிர்ச்சி. புறப்பட்ட இடத்திலிருந்து சிறிது தூரத்தில் நின்று விட்டது. கிராமத்தினர் குலவையிட்டனர். ஆரவாரித் தனர். தனி சார்நிலை ஆய்வாளருடைய குதிரைக்கு முன்னால் குதித்த முத்துக்கருப்ப தேவன் என்பவர், 'கிராமத்தினுள் போலீஸை நுழைய விடாதீர்கள் என எங்கள் தெய்வம் எங்களுக்கு ஆணையிட்டிருக்கிறது..' எனக் கூறினார். ஓவாயன் என்பவர் போலீசாரைத் திரும்பிப் போகுமாறு கத்தினார். இல்லையென்றால், அவர்களது குதிரை கர்த் தாண்டம்மன் கோயிலில் பலிகொடுக்கப்படும் என எச்சரித்தார். இந்த நிலையில் தனித்துணைக் கலெக்டரும் சார் நிலை உரிமையியல் நீதிபதியும் அங்கு வந்தனர். பதிவுக்கு இணங்குங்கள் என மிரட்டும் தொனியில் சொன்னார்கள். அப்போது ஓவாயன் தனித்துணைக் கலெக்டரை நெருங்கினார். அவரது ஒரு கையில் கேழ்வரகு ரொட்டியும் இன்னொரு கையில் கல்லும் வைத்திருந்தார். அதாவது, அவர்கள் அமைதியாக திரும்பிப் போவதற்கு அடையாளமாக கேழ்வரகு ரொட்டியை எடுக்கவேண்டும் அல்லது கல்லால் அடிபடுவார் என்பதை சங்கேத மொழியில் சொன்னார்.

அந்த நேரத்தில் தலைவர்களுக்கும் போலீசாருக்கும் வருவாய்த்துறை அதிகாரிகளுக்கும் பேச்சுவார்த்தை நடந்தது. அது பயனற்றுப் போகவே, மக்கள் மேலும் ஆத்திரமடைந்தனர். போலீசாரை அங்கிருந்து அகலுமாறு எச்சரித்தனர். போலீசார் முன் னேற முற்பட்டனர். எனவே கும்பல் போலீசார் மீது கற்களை வீசியது. அதனால் கோபத்தின் உச்சிக்குச் சென்ற துணை கலெக்டர், துப்பாக்கிச்சூடு நடத்த ஆணையிடுமாறு சார்நிலை உரிமையியல் நீதிபதிக்கு ஆலோசனை கூறினார். அவரும் அப்படியே செய்தார். துப்பாக்கிச் சத்தத்தைக் கேட்ட இளைஞர்கள் பயங்கரமான வேகத்தில் விரைந்து வந்து பிரிட்டிஷ் போலீஸ் படையை எதிர்கொண்டனர். கத்திகள், மூங்கில் கழிகள், ஈட்டிகள், கவண்கள் மற்றும் பூமராங் சகிதமாக எதிர்த்தனர். எனினும் துப்பாக்கிக்கு முன் நிற்க முடியவில்லை.

பதினாறு பேர் உயிரிழந்தனர்.

அந்தத் துப்பாக்கிச் சூட்டில்

(1) மாயாண்டித்தேவர் என்ற நொத்தினி மாயாண்டி தேவரின் (வயது 35) வலது மார்பிலும் வயிற்றிலும் - குண்டுகள் பாய்ந்திருந்தன. ஈரலும் குடல்களும் வெளியில் கிடந்தன.

(2) குள்ளன் பெரியகருப்பன்

(3) விரு மாண்டி தேவர்

(4) சிவன் காளை தேவர்

(5) பெரியாண்டி தேவர்

(6) ஓவாயன் என்ற முத்துக் கருப்பன் (வயது 42) நெஞ்சிலும் வயிற்றிலும் பல குண்டுக் காயங்கள்.

(7) மோளை சின்னாத்தேவர் (வயது 50). துப்பாக்கிச்சூடு முடிந்த பிறகு இவரை ஏட்டு காளிமுத்து சேர்வை விரட்டிச் சென்று துப்பாக்கியால் சுட்டு, ஈட்டியால் குத்திக் கொன்றார். மோளை சின்னாத்தேவர் விரல் ரேகை சட்டத்துக்கு எதிராகப் பிரச்சாரம் செய்தவர். இவருக்கும் காளிமுத்து சேர்வைக்கும் முன்விரோதம் இருந்தது. அதைத் தீர்த்துக்கொள்ள காளிமுத்து இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன் படுத்திக்கொண்டார்.

(8) மாயாண்டி தேவர்

(9) முனியாண்டி என்கிற மாயாண்டி தேவர் (வயது 50) இவருக்கு வயிறு நெஞ்சு ஆகியவற்றில் குண்டு காயங்கள். ஆஜானுபாகுவாக இருந்தவர். ரேகை பதிவுசட்டத்துக்கு எதிராகப் போராடியவர். அரசு அதிகாரி களைத் துச்சமாகப் பேசியவர். இவரை ராஜுபிள்ளை என்கிற போலீஸ்காரர் சுட்டுத் தள்ளி, சடலத்தின் மீது ஏறி குதித்தார்.

(10) உடையார் தேவர் , (வயது 35) மண்டை நொறுக்கப்பட்டது. கண்விழிகள் வெளியே வந்துவிழுந்தன. நீண்டநேரம் இவருக்கு உயிர் போகவில்லை. ஏட்டு காளிமுத்து சேர்வை இவரைத் துப்பாக்கியால் பல தடவை குத்தி, பக்கத்து கிணற்றுத் தண்ணீருக்குள் தள்ளிவிட்டார்.

(11) சின்னமாயத்தேவர் (வயது 32) நெஞ்சில் குண்டு பாய்ந்து இறந்தார்.

(12) பெரியகருப்பத் தேவர்

(13) வீரணத்தேவர் சுடப்பட்டும், துப்பாக்கி முனையால் குத்தப்பட்டும் இறந்தார்.

(14) முத்தையா தேவர்

(15) வீரத்தேவர்.

(16) மாயக்காள் (வயது 43) இந்தத் துப்பாக்கிச்சூட்டில் இறந்த ஒரே பெண் இவர். இவரது அடிவயிற்றிலும் மார்பிலும் குண்டுக்காயங்கள். உடம்பில் 'பல பாகங்களிலும் பிறப்புறுப்பிலும் குத்துக்காயங்கள். கலகம் நடந்து கொண்டிருந்தபோது கூடையில் கற்களைக் கொண்டு வந்து கவண் வீசுபவர்களுக்குக் கொடுத்தாராம். மேலும், காயம்பட்ட வர்களுக்குக் குடிதண்ணீர் கொண்டு வந்து கொடுத்துக் கொண்டிருந்தபோது இவரை போலீஸ்காரர் வீராசாமிநாயுடு சுட்டுக் கொன்றார். இரண்டு போலீசார் குத்தித் தள்ளித் தூக்கியெறிந்தனர்.

வீர மரணம் அடைந்த 16 பேர்களின் உடல்களை ஒரு கட்டை வண்டியில் ஏற்றி, உசிலம்பட்டிக்கு அருகில் உள்ள ஆற்றங்கரையில் ஒரே குழியில் புதைத்தனர்.


துப்பாக்கிச் சூட்டில் நிலைகுலைந்து சிதறி ஓடிய மக்களில் சுமார் 200 நிரபராதிகளை அதிகாரிகள் பிடித்து ஒரு கை, ஒரு காலுடன் இணைக்கும் நெடிய சங்கிலியால் விலங்கிட்டு, நடைப்பயணமாக சுமார் 20 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள திருமங்கலத்துக்கு ஆடு, மாடுகளைப் போல் நடத்திச்சென்று நீதிமன்றத்தில் ரிமாண்ட்' செய்தனர். வழக்கறிஞர் ஜார்ஜ் ஜோசப், ரிமாண்டு' செய்யப்பட்ட ஏழைகளுக்கு இலவசமாக வாதாடி, வழக்கிலிருந்து விடுதலை பெற்றுத்தந்தார்.

குற்றப்பரம்பரையினர் சட்ட அமலாக்கத்துக்குக் கள்ளர் சமுதாயத்தினர் காட்டிய கடுமையான எதிர்ப்பும் அவர்களது மரபார்ந்த போர்க்குணங்களும் சேர்ந்து பிரச்சினையை மேலும் சிக்கலாக்கியது. மதுரை காவல்துறை கண்காணிப்பாளர் இ.பி. லவ்லக் சமர்ப்பித்த அறிக்கையில், 'கள்ளர்கள் தெள்ளத்தெளிவாக போலீஸை விஞ்சியுள்ளனர். மற்றும் பல பகுதிகளில் பிரிட்டிஷ் அரசு கள்ளர் ராஜ்ஜியத்துக்கு எதிராக ஆற்றலின்றி இருந்தது' எனக் குறிப்பிடுகிறார்.

நூற்றுக்கணக்கானோர். பிணக்குவியல் புதைக்கப்பட்டது. ஆயுதபலம் வீரத்தை வென்றது. பல உண்மைகள் மறைக்கப்பட்டன. மதுரையில் வழக்குரைஞர் சாமி தலைமையில் 200 கிராம மக்கள் ஒன்று கூடி நீதி விசாரணை கோரினர். விசாரணை மறுக்கப்பட்டது. 

ஜாலியன்வாலாபாக் படுகொலை உலகம் முழுவதும் கண்டிக்கப்பட்டதால், அதைவிட கொடுமையான பெருங்காமநல்லூர் படுகொலைகள் திட்டமிட்டு மறைக்கப்பட்டது.

அரசு 11 பேர் இறந்ததாக கணக்கு காட்டியது. முத்துத்தேவர் நூலில் 17 பேர் மாண்டதாக பட்டியலிட்டுள்ளார். 5.4.1920-இல் மாவட்ட ஆட்சியர் ரீலியின் அறிக்கையில் "இந்த சம்பவம் குறித்து எனக்கு கிடைத்த முதல் தகவல் 3.4.1920 அன்று மதியம் 1 மணியளவில் முத்துமாயத் தேவர் என்பவர் அனுப்பிய தந்திதான். அதில் அவர் குற்றப்பழங்குடி சட்டத்தின் கீழ் பதிவு செய்ய மறுத்ததற்காக 70 பேர் சுடப்பட்டுவிட்டனர் என்று குறிப்பிட்டிருந்தார்' என்று கூறியுள்ளார்.

ஆனால் அங்கு கூடியிருந்தோர் 3,000 பேர் என்றும் 70 துப்பாகியேந்திய ஆயதப்படை வீரர்கள் குண்டுகள் அனைத்தையும் பயன்படுத்திவிட்டனர் என்றும் இந்த சம்பவத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை மிக அதிகம் என்றும் கவர்னர் ஜெனரல் அலுவலக குறிப்பில் உள்ளது.

இந்த சம்பவத்திற்கு உரிய அங்கீகாரம் இன்றும் கிடைக்கவில்லை. இந்த விடுதலை போர் அங்கீகரிக்கப்பட வேண்டும் என்பது மட்டும்தான் இம்மக்களின் ஒரே கோரிக்கை.

பெருங்காமநல்லூர் அப்பாவி மக்கள் மீது நடத்திய துப்பாக்கிச் சூடு சம்பவம் இங்கிலாந்து பாராளுமன்றத்தில் எதிரொலித்தது. எழுத்தறிவற்ற ஏழை, அப்பாவி விவசாயிகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதை ஏற்க இயலாது என்றும், அந்தப் பகுதி மக்களின் கல்வி, சமூக, பொருளாதார மேம்பாட்டுக்கு நிதி ஒதுக்கி நிவாரணம் தேடுங்கள் என்றும் பாராளுமன்றம் அறிவுறுத்தியதின் பேரில், கள்ளர் சமுதாய சீரமைப்புக்கென தனியே ஒரு துறையை உருவாக்கி நலத்திட்டங்கள் நிறைவேற்ற இந்தியாவிலிருந்த ஆங்கில அரசு நடவடிக்கை எடுத்தது. பிரிட்டிஷ் இந்திய அதிகார வர்க்கம் செய்த தவறுக்கு பிரிட்டிஷ் பாராளுமன்றமும், பிரிட்டிஷ் அரசும் தேடிய பிராயச் சித்தம் இது.

அதன் பிறகு வழக்கறிஞர் ஜார்ஜ் ஜோசப் கள்ளர் நாடு முழுமைக்கும் சுற்றுப்பயணம் செய்து, மக்களைத் திரட்டி போராட்டங்களை முன்னெடுத்தார். அவரை அப்பகுதி கள்ளர்கள் அப்போது 'ரோசாப்பு துரை' என்றே அழைத்தனர். அவரது நினைவாக இன்று வரை குழந்தைகளுக்கு ரோசாப்பூ என்று பெயர் சூட்டுகின்றனர்.



இந்த கொடிய சம்பவத்தை மறைப்பதற்காக கள்ளர் சீரமைப்புத் துறையின் கீழ் கல்வி, விவசாயம், தொழில், கூட்டுறவு, வேலைவாய்ப்பு மையம் போன்ற நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. இதனை பற்றி அறிய இங்கே சொடுக்கவும் (click here)👉 கள்ளர் பள்ளி, கள்ளர் பண்டு, கள்ளர் சீரமைப்புத் துறை

அதன்பின் தமிழகத்தில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர், வரதராஜுலு நாயுடு, கே.டி.கே தங்கமணி, ஜீவா, ராமமூர்த்தி போன்றோரின் சீரிய முயற்சியால் ரேகைச் சட்டம் 5.6.1947-இல் நீக்கப்பட்டது. 

ஆனால் அந்த கொடிய சட்டத்தால் சமூகத்தில் அடித்தட்டிற்கு தள்ளப்பட்ட இம்மக்களுக்கு அரசியல் அமைப்புச் சட்டத்தில் எந்தப் பாதுகாப்பும் வழங்கப்படவில்லை. சுதந்திர இந்தியாவில் வெள்ளையர் வழங்கிய நலத்திட்டங்களை பறித்தத்தோடு, 30.7.1979-இல் அரசு ஆணை 1310-இன் மூலம் “பழங்குடி” என்று வழங்கி வந்த சாதிச் சான்றிதழை “சமுதாயம்” என்று மாற்றி, அதுவரை அவர்களுக்கு வழங்கிவந்த இலவச உயர்கல்வி பறிக்கப்பட்டுவிட்டது.

26.7.2016-இல் தமிழகம் வந்த தேசிய டி.என்.டி. ஆணையர், பத்திரிகையாளர்கள் சந்திப்பின்போது மதுரை கீரத்துறை ஓடக்கரையில் வாழுகின்ற டி.என்.டி. மக்கள் நரக வாழ்க்கை வாழ்கின்றனர் என்று கூறியிருந்தார். 

2007-இல் தமிழகத்தில் உருவாக்கிய சீர்மரபினர் நலவாரியத்திற்கு பல ஆண்டுகளாக உறுப்பினர் நியமனம் இல்லாததால் நலத்திட உதவிகள் இம்மக்களுக்கு வழங்கப்படாமல் அத்திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதி பயன்படாமல் உள்ளது.

2014 ஆண்டு முதல் மத்திய அரசு வழங்கும் டி.என்.டி. மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகையும் தமிழகத்திற்கு கிடைக்கவில்லை. 2016-இல் தேசிய டி.என்.டி. ஆணையம் வழங்கிய டி.என்.டி. மக்களுக்கான தனி நிதி நிறுவனம், தனி குறைதீர்க்கும் மையம், தனி அதிகாரி, இலவச வீடு போன்ற இடைக்கால பரிந்துரைகளை மகாராஷ்டிரம், ஆந்திரம், குஜராத் போன்ற மாநிலங்கள் செயல்படுத்தின. ஆனால், தமிழகத்தில் மட்டும் அந்தப் பரிந்துரைகள் செயல்படுத்தவில்லை.

வலிமையான இந்தியாவை உருவாக்க வேண்டுமெனில் வளமான பாரம்பரியத்திற்கு செந்தக்காரர்களான, வரலாற்றால் வஞ்சிக்கப்பட்ட இந்த பூர்வகுடி மக்களுக்கும் உரிய பாதுகப்பு வழங்கி அவர்களையும் சமூகரீதியாக கல்விரீதியாக முன்னேற்ற மத்திய - மாநில அரசுகள் சிறப்புக் கவனம் செலுத்தி திட்டங்களை வகுத்து செயல்படுத்த வேண்டும்.

பெருங்காமநல்லூரின் ஈகம் இன்றைக்கும் பொருத்தப்பாடு உடையது. இன்றைக்கும் அத்தகைய வீரம் தமிழர்களுக்குத் தேவைப்படுகிறது என்பதால் அந்த ஈகியரை நாம் வணங்குகிறோம். இன்றைக்கும் தமிழ்ப் பெண்கள் மாயக்காள் போன்ற வீரப் பெண்களாக இருக்க வேண்டும் என்று நாம் ஆசைப்படுகிறோம். அப்படிப்பட்ட வீரப் பெண்களை நாம் குலதெய்வமாக இன்றும் வணங்குகிறோம்.

1981-ஆம் ஆண்டில், தமிழ்நாட்டில் விவசாயிகள் சங்கத் தலைவராக இருந்த நாராயணசாமி நாயுடு, பெருங்காமநல்லூரில் மனித உரிமைக்காக உயிர்த் தியாகம் புரிந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் முறையைத் தொடங்கிவைத்தார். ஊர் மக்களில் இருவர் நினைவு மண்டபம் எழுப்ப ஆறேமுக்கால் செண்ட் நிலத்தை அன்பளிப்பாக வழங்கினார்கள். அதில் ஒரு நினைவுத் தூணில் உயிர்த்தியாகம் புரிந்த பதினாறு பேர்களின் பெயர்கள் பொறிக்கப்பட்டுள்ளன.









நன்றி : தினமணி நாளிதழ் ( மறுக்கப்படும் சமூகநீதி - எஸ். காசிமாயன்)


பெருங்காமநல்லூர் வீரத் தியாகிகளின் நூறாவது நினைவு நாளை முன்னிட்டு சீர்மரபினர் நலச்சங்கம் சார்பில் வீர திருவிழா 03.04.2019  வெகுசிறப்பாக கொண்டாடபட்டது.






வீரமங்கை மாயக்காள் நலச்சங்கம் கள்ளர்குல நாச்சியார்கள் பெருங்காமநல்லூர் தியாகிகளுக்கு வீர வணக்கம் செலுத்தியனர்.


வரலாற்று பக்கங்கள் - I

          கள்ளர்   மரபினர் Kallar History வரலாற்றை   அறிய   கீழே    உள்ள   தலைப்பின்   மீது   சொடுக்கவும்  (click here)  👇👇👇👇 ✍ ️ வளரி  ...

இந்த வலைப்பதிவில் தேடு

என்னைப் பற்றி

எனது படம்
Contact: info.kallarkulavaralaru@gmail.com, தமிழகத்தில் வாழும் கள்ளர் மரபினர் முக்குலத்தோரில் ஒரு பிரிவினர் ஆவர். கள்ளர், மறவர், அகமுடையார் ஆகிய முக்குலங்களும் போர்த் தொழிலை அடிப்படையாக கொண்டு வாழ்ந்து வந்ததால் இந்த மூன்று சாதியினரும் முக்குலத்தோர் என்று அறியப்படுகின்றனர். இந்த மூன்று குலத்தினரும் "தேவர்" என்ற பொதுவான பெயரோடு அறியப்படுகிறார்கள். கள்ளர் மரபில் அறந்தாங்கி தொண்டைமான், புதுக்கோட்டை பல்லவராயர், புதுக்கோட்டை தொண்டைமான் மற்றும் பல சமீன்தார்களும், பெரு நிலவுரிமையாளர்களும் இருக்கின்றனர். (கள்ளர் படைப்பற்று - கள்ளர் நாடு - கள்ளர்த்தடி). கள்ளர் வரலாறு : வரலாறு என்றால் வந்த வழி என்று பொருள். வந்த வழி தெரியாதவர்களுக்குப் போகும் வழி புரியாது. வரலாற்றை நாம் நினைவு கூர்வதற்குக் காரணம் கடந்து போன ஈகங்களை எண்ணிக் கண்ணீர் விடுவதற்காகவும், நிகழ்த்தி விட்ட வீரங்களைச் சொல்லிப் பெருமை பேசுவதற்காகவும் அல்ல. வருங்காலத்திற்கு வழி சமைப்பதற்கு அந்த ஈகமும் வீரமும் வழிகாட்ட வேண்டும் என்பதற்காகத்தான். கள்ளர்களின் நான்கு முக்கிய பிரிவுகள் - ஈசநாட்டுக்கள்ளர் (திருச்சி, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை) : கிளைவழிக்கள்ளர் (சிவகங்கை) : அம்பல கள்ளர் / நாட்டார் கள்ளர் (சிவகங்கை, மதுரை) : பிறமலை கள்ளர் (மதுரை, உசிலமபட்டி, தேனி, கம்பம், திண்டுக்கல்)

வலைப்பதிவு காப்பகம்

பின்பற்றுபவர்கள்