செவ்வாய், 1 ஆகஸ்ட், 2023

குற்றப்பரம்பரை அல்ல கொற்ற பரம்பரை

கள்ளர், மறவர், அகமுடையார் ஆகிய முக்குலத்தோர் மட்டுமே குற்றப் பரம்பரையினராக அறிவிக்கப்பட்டவர்கள் என்ற எண்ணம் தமிழகத்தில் பரவலாக உள்ளது. அது தவறு. அந்தச் சட்டத்தை எதிர்த்து அதிகம் போராடியவர்கள், அதற்கு அதிக விலை கொடுத்தவர்கள் என்ற முறையில் முக்குலத்தோருக்கு அதிக பாதிப்புகள் இருக்கலாம் ஆனால் அவர்கள் மட்டுமே பாதிக்கப்பட்டு இருக்கவில்லை. 1938ல் தமிழகத்தில் வெளியான ஆங்கில அரசின் அறிக்கையின்படி 90 சாதியினர் குற்றப் பரம்பரையினராக அறிவிக்கப்பட்டனர்.

ஆங்கிலத்தில் ஒரு பழமொழி உண்டு ‘ஒரு நாயை சுட்டுக் கொல்ல வேண்டுமானால், அதற்கு பைத்தியம் என்று முதலில் நிறுவு’ என்று, அதை ஆங்கிலேயர்கள் இந்தியாவில் திறம்படச் செய்தார்கள்.

இந்தியாவில் குற்றப்பழங்குடிகள் – என்ற சொல்லின் வரலாறு பல பொய்களும் மறுப்புகளும் நிறைந்தது. தமிழக வரலாற்றோடு நெருங்கிய தொடர்புடையது.
         
குற்றப் பரம்பரை என்பது குற்றப் பழங்குடிகள் என்பதன் தொடர்ச்சிதான். ’குற்றம் செய்தவர்களின் பரம்பரை’ – என்ற அர்த்தம் இதில் தொனித்தாலும், இதன் உண்மை முகம் வேறு. இன்று தமிழகத்தில் சில குறிப்பிட்ட சாதியினர் இந்தப் பெயரினால் இன்றும் நினைவு கூறப்படுகின்றனர். ஆனால் இந்தப் பெயருக்கும் அந்த சாதிகளுக்கும் அடிப்படையில் எந்தத் தொடர்பும் இல்லை. தமிழக வரலாற்றின் கருப்புப் பக்கங்களில் ஒன்றில் பொறிக்கப்பட்ட குற்றப் பரம்பரை என்ற பெயரின் வரலாறானது உலக சரித்திரத்தோடும், ஆங்கில ஆதிக்கத்தோடும் தொடர்புடையது.

உலகையே வெல்லும் எண்ணத்தோடு உலகெங்கும் போர்களை நடத்திக் கொண்டிருந்த பிரிட்டன் பேரரசு, தனக்குப் போட்டியாக பிரான்ஸ் நாட்டின் மீது ஒரு நூற்றாண்டுக்கும் மேலாகப் பல போர்களைத் தொடுத்தது. இந்தப் போர்கள் பிரிட்டனுக்குக் கை கொடுக்காமல் படுதோல்விகளையே சந்தித்தது. இந்தப் போர்களில் பிரான்ஸ் நாட்டின் நகரங்களில் வாழும் பண்பட்ட மனிதர்களை விடவும், பிரான்ஸின் இராணுவத்தினரை விடவும் பிரிட்டனுக்கு அதிக நெருக்கடியைக் கொடுத்தவர்கள் பிரான்ஸில் வாழ்ந்த பழங்குடி மக்கள். உயிரைக் கொடுத்தாவது தங்கள் மண்னைக் காக்க உறுதிபூண்ட பிரான்ஸின் மண்ணின் மைந்தர்களைப் பார்த்து பிரிட்டன் ராணுவமே கலங்கியது. பழங்குடியினரின் சுய ஆட்சி முறைகளும், புவியியல் அறிவும் பிரிட்டன் ராணுவத்தை சில்லுசில்லாகச் சிதைத்தன.

இதனால் தனது ஆட்சி எங்கெல்லாம் உள்ளதோ அங்கெல்லாம் உள்ள பழங்குடி மக்களைப் பார்த்து பிரிட்டன் அரசு பயப்படத் துவங்கியது. பழங்குடி மக்களின் மண் மீதான பற்றும், சமூக அமைப்பும், தனித்துவ நடைமுறைகளும் அந்நிய ஆட்சி எதிர்ப்பைத் தங்களுக்குள் ஒரு கனலாக் கொண்டிருந்தன. அந்தக் கனல் நெருப்பானால் என்ன ஆகும் என்பது ஏற்கனவே பிரான்ஸில் சூடுபட்டிருந்த பிரிட்டனுக்கு நன்றாகவே தெரிந்திருந்தது. பழங்குடிகளை வெறுக்கும் அரசாக பிரிட்டிஷ் அரசு மாறியது.

இந்த சமயத்தில் வட இந்தியாவில் நடந்த சில வழிப்பறிக் கொள்ளைகள், கொலைகளுக்குப் பின்பாக சில குறிப்பிட்ட பழங்குடியின மக்கள் உள்ளார்கள், அவர்கள் குற்றங்களில் ஈடுபடுவதையே தொழிலாகக் கொண்டிருக்கிறார்கள் –என்ற தகவல் ஆங்கிலேயர்களுக்குக் கிடைத்தது. இவ்வாறு குற்றங்களில் ஈடுபடுபவர்கள் ’தக்கீ’ (thuggee/thug) எனப்பட்ட தனி இன மக்களாக ஆங்கிலேயர்களால் குறிப்பிடப்பட்டனர். வட இந்தியாவில் நடந்த கணக்குத் தெரியாத கொலை கொள்ளைகளை எல்லாம் இவர்கள் செய்தவையாக ஆங்கில அரசு கணக்குக் காட்டியது. இன்றும் கின்னஸ் சாதனை புத்தகத்தில் அதிக கொலைகளை செய்தவர்கள் என்று தக்கீக்கள் பெயர் உள்ளது. தக்கீக்கள் கொன்றதாக கின்னஸ் புத்தகம் கருதும் மக்களின் எண்ணிக்கை 20 லட்சம் அல்லது அதற்கும் மேல். ஆனால் இதற்குச் சான்றுகள் ஏதும் வரலாற்றில் இல்லை!.



‘தக்கீக்களை எவ்வாறு ஒழிப்பது என்பதை ஆய்வு செய்கிறோம்’ – என்று கூறி ஒரு அமைப்பை ஆங்கில அரசு உருவாக்கியது. இதில் கவனிக்க வேண்டிய முதல் செய்தி தக்கீக்களைப் பற்றி ஆராய அமைப்பு எதையும் தோற்றுவிக்காமல், அவர்களை அழிக்க மட்டும் ஒரு அமைப்பு நிறுவப்பட்டது என்பதுதான். வில்லியம் ஸ்லீமன் என்ற ஆங்கில அதிகாரி பின்னர் இந்த அமைப்பில் தலைமைப் பொறுப்புக்கு வந்தார். வில்லியம் ஸ்லீமனை இந்தியாவில் டைனோசர் படிமங்கள் இருப்பதைக் கண்டறிந்த ஆங்கில அதிகாரியாக உங்களுக்குத் தெரிந்திருக்கலாம். ஒரு இந்தியக் குழந்தை ஓநாய் கும்பலால் காட்டுக்குள் தூக்கிச் செல்லப்பட்டு வளர்க்கப்பட்டதை இவர் தற்செயலாகக் கேள்விப்பட்டு பதிவு செய்தார். இந்தப் பதிவு ஆங்கிலேயர்கள் மத்தியில் இவருக்கு ’ஆய்வாளர்’ என்ற பிம்பம் ஏற்பட உதவியது. இந்தப் பதிவை அடிப்படையாகக் கொண்டு பின்னர் ஜங்கிள் புக் என்ற பெயரில் கதை ஒன்றும் எழுதப்பட்டது.

இத்தகைய ஸ்லீமன் தலைமையில் இயங்கத் துவங்கிய ’தக்கீ அண்டு டிகாய்டி டிபார்ட்மெண்ட் (thuggee and decoity department)’ அமைப்பு  தக்கீ இனத்தவர் என்று தாங்கள் கருதிய ஆயிரக்கானவர்களை தூக்கில் போட்டும், நாடு கடத்தியும், ஆயுள் சிறைகளில் அடைத்தும் மிகச் சிலரை முழு நேரக் கண்காணிப்பில் வைத்தும் கொடுமைப்படுத்தியது. இதன் மூலம் கொலை, கொள்ளைகளைக் கட்டுப்படுத்துவதாக வெளியில் கூறிக் கொண்டது. ’தக்கீக்களை ஒடுக்குகிறோம்’ – என்ற பெயரில் ஆங்கிலேயர்கள் இப்படி மேற் கொண்ட நடவடிக்கைகள்தான், பின்னர் ‘குற்றப்பரம்பரைச் சட்டம்’ – உள்ளிட்ட உரிமை மீறல்களை அவர்கள் எளிதாக நடத்தும் தைரியத்தையும், வழிகாட்டுதலையும் அவர்களுக்குக் கொடுத்தது.

ஆங்கிலத்தில் ஒரு பழமொழி உண்டு ‘ஒரு நாயை சுட்டுக் கொல்ல வேண்டுமானால், அதற்கு பைத்தியம் என்று முதலில் நிறுவு’ என்று, அதை ஆங்கிலேயர்கள் இந்தியாவில் திறம்படச் செய்தார்கள்.

உலக வரலாறு கடந்த இரண்டாயிரமாவது ஆண்டு வரையில் “தக்கீக்கள்’ என்பவர்கள் ஒரு குறிப்பிட்ட இனத்தைச் சேர்ந்த உண்மையான  குற்றவாளிகள் என்றுதான் குறிப்பிட்டது. குற்றங்களில் ஈடுபடும் வன்முறையாளர்களைக் குறிக்கும் ‘தக்(thug)’ என்ற ஆங்கிலச் சொல்லே ‘தக்கீ” என்ற மூலத்தில் இருந்து எடுக்கப்பட்டது எனும் போது தக்கீக்கள் மீதான ஆங்கிலேயரின் பார்வை என்ன என்று நீங்களே எளிதில் யூகிக்கலாம். இந்த நிலையில், ஸ்லீமனின் ஆதாரங்களை சமீபத்தில் ஆராய்ந்த சிலர் எழுதிய நூல்கள் மூலம், தக்கீக்கள் ஆங்கிலேயர்களின் கற்பனையில் விஸ்வரூபம் எடுத்த பாமர மக்களே என்ற உண்மை புலனாகி உள்ளது. மைக் டேஷ் (MIKE DASH) எழுதிய ’தக்: தி ட்ரூ ஸ்டோரி ஆஃப் இந்தியாஸ் மர்டர்ஸ் கல்ட் (THUG: THE TRUE STORY OF INDIA’S MURDEROUS CULT)’ என்ற நூலும் பரமா ராய் (PARAMA ROY) எழுதிய ’இந்தியன் டிராஃபிக் (INDIAN TRAFFIC)’ என்ற நூலும் இவற்றில் குறிப்பிடத்தக்கவை. 2005 ஆம் ஆண்டில் ஐரோப்பாவில் வெளியான மைக் டேஷின் புத்தகம் விற்பனையிலும் சாதனை படைத்தது இங்கே குறிப்பிடத்தக்க ஒன்று!.

சில வழிப்பறிக் கொள்ளையர்கள் ஆங்கில ஆட்சியில் இருந்தார்கள் என்ற ஒற்றை உண்மையை வைத்துக் கொண்டு, ‘தக்கீ’ என்ற மூகமூடி அணிவித்து பல இன மக்களையும் ஆங்கில அரசு கொன்று குவித்ததே வரலாற்று உண்மை. இதற்குப் பல சான்றுகள் உள்ளன. சில உங்களுக்காக…

1. கைதானவர்கள் மீது வரம்பில்லா சட்ட அதிகாரத்தை ஆங்கில அரசு பெற்று இருந்தது. மனித உரிமைகள் பற்றிய பேச்சே இல்லை. இன்றும் சட்டரீதியாக உள்ள அடிமையைக் குறிக்க XXX என்ற குறியீடு ஆங்கிலத்தில் குறிக்கப்படுகிறது. இந்தக் குறியீடு ‘ தக்கீ அண்டு டிகாய்டி டிபார்ட்மெண்ட்’டின் சட்டத்தில் உள்ள முப்பதாவது (ரோமன் எழுத்தில் XXX) சட்டத்தைக் குறிக்கக் கூடியது. XXX என்ற பெயரில் சில ஆண்டுகள் முன்பு வெளிவந்த ஆங்கிலப் படவரிசையின் மூலக்கரு இந்தச் சட்டம்தான். ஒரு மனிதனை ஒரு அரசு சட்டபூர்வ அடிமையாக வைத்துக் கொள்வதை ஆதரிப்பதே இந்தச் சட்டத்தின் சாரம்).

2. ’தக்கீகள் அனைவரும் ஒரு குறிப்பிட்ட இனத்தைச் சேர்ந்தவர்கள், பரம்பரைக் கொலைகாரர்கள், அவர்களது வீட்டில் உள்ள அனைவருமே குற்றத்திற்கு துணை செல்பவர்கள்’ - என்பது போன்ற தோற்றத்தை ஆங்கில அரசு உருவாக்கியது. அந்த அடிப்படையில்தான் பிற்காலத்தில் ‘குற்றப் பழங்குடி’ - என்ற சொல்லாடல் தோன்றியது. இது முற்றிலும் தவறு. தக்கீகள் என்று ஆங்கில அரசால் கைது செய்யப்பட்டவர்களில் இசுலாமியர்கள், இந்துக்கள் என்று இரண்டு மதங்களைச் சேர்ந்தவர்களும் இருந்தனர். இந்துக்களில் பிராமணர்கள் கூட தக்கீகள் என்று கைது செய்யப்பட்டனர். ’தக்கீகளின் மன்மதன்’ - என்று அழைக்கப்பட்ட பரீங்கா ராஜபுத்திர இனத்தைச் சேர்ந்த ஒரு பிராமணர் ஆவார். பரீங்கா கைது செய்யப்படும்வரையில் அவரது குடும்பத்தினருக்கு இதுபற்றித் தெரிந்திருக்கவில்லை என்று ஆங்கிலேயரின் ஆவணங்களே கூறுகின்றன. பரீங்கா வழக்கில் அவரோடு தொடர்புடைய குடும்பத்தினர் யாரும் கைது செய்யப்படவில்லை. பரீங்கா அப்ரூவராக மாறிவிட்டார் என்று பரீங்கா கைகாட்டியவர்களை எல்லாம் ஆங்கில அரசு கைது செய்தது.

3. தக்கீக்கள் பரம்பரை பரம்பரையாக வருபவர்கள் - என்று ஆங்கில அரசு சொன்னது. அந்த அடிப்படையில்தான் தக்கீ என்று கைது செய்யப்பட்ட ஒருவரின் குழந்தைகள் கூட ஆங்கிலேயக் காவல்துறையின் அடக்குமுறைகளுக்கு ஆளானார்கள். ஆனால் ஆங்கிலேயர்கள் தக்கீக்களின் வாக்குமூலங்களாகப் பதிவு செய்துள்ள சில தகவல்களில் பிடிபட்ட சிலர் ‘நான் இப்போதுதான் முதல்முறையாக கொள்ளைக்கு வந்தேன். வறுமை காரணமாக இவர்களுடன் சேர்ந்தேன். இதுவரை யாரையும் கொலை செய்யவில்லை. என் குடும்பத்தினருக்கு இது தெரியாது’ - என்று கூறி உள்ளதும் பதிவாகி உள்ளது. இது தக்கீக்கள் என்று ஆங்கிலேயர்கள் உருவாக்கிய பிம்பம் உண்மையில் போலியானது என்பதையும், அவர்கள் வறுமையால் பெருகிய கொள்ளைக்காரர்கள்தான் என்பதையுமே காட்டுகின்றது.

4. ஆங்கிலேயர் ஆட்சிக்கு முன்பு இந்தியாவில் தக்கீக்கள் பற்றிய குறிப்புகள் இல்லை. ஆங்கிலேயர் காலத்தில் ஏற்பட்ட பஞ்சத்தால், உள்ளூர் பணக்காரர்களிடம் திருடப் புறப்பட்ட முதல் தலைமுறைக் குற்றவாளிகளாகவே இவர்களில் பலர் இருந்திருக்கிறார்கள். பஞ்சத்தை மறைக்கவே இவர்களுக்கு ‘காளி வழிபாடு’ என்ற புதிய காரணத்தை ஆங்கில அரசு உருவாக்கியது.

5. இந்திய பெண் கடவுளான காளியை ஆங்கிலேயர்கள் கோரமான, அஞ்சத்தக்க கடவுளாகவே பொதுவாகப் பார்த்தனர். அந்த மனநிலையின் வெளிப்பாடுதான் இது.

6. தக்கீ – என்பதற்கு பொதுவான வரையறை எதுவும் இல்லை.

7. யார் தக்கி? யார் தக்கி இல்லை?- என்று தக்கீ அண்டு டிகாய்டி டிபார்ட்மெண்ட்டுக்கு மட்டுமே தெரியும். அதில் காவல் அதிகாரியும் ஸ்லீமன்தான், நீதிபதியும் ஸ்லீமன்தான். மேல்முறையீடோ, குறுக்குவிசாரணையோ கிடையாது. இதனால் அவர்கள் ஒருவனைக் கைது செய்து தக்கீ என்று முத்திரை குத்தினால் அவன் தக்கீதான். அவன் தனது மாற்று அடையாளத்தை எப்படியும் நிரூபிக்க முடியாது.

8. ஆங்கிலேயரிடம் சிக்கிய தக்கீ(!)க்கு உயிர்பிழைக்க அளிக்கப்பட்ட ஒரே வாய்ப்பு பிற தக்கீக்களைக் காட்டி கொடுப்பதுதான். இப்படி சரணடைந்த ஒரு தக்கீ யாரை எல்லாம் சுட்டிக் காட்டுகிறாரோ அவர்கள் எல்லாமே தக்கீக்கள் என்று கருதப்பட்டனர். அவர்கள் யாருக்கும் தங்களை நிரூபிக்க வாய்ப்பு வழங்கப்படவில்லை.

9. சரணடைந்து, பிற தக்கீக்களை காட்டிக் கொடுத்த ஒருவரை ‘தக்கீ அண்டு டிகாய்டி டிபார்ட்மெண்ட்’டைச் சாராத எவராலும் குறுக்கு விசாரணை செய்ய முடியாது. இதன் அர்த்தம் இந்த தக்கீ அண்டு டிகாய்டி டிபார்ட்மெண்ட் முடிவு செய்துவிட்டால் ஒருவரை சரண்டைந்த தக்கீயாக செட்டப் செய்து இந்தியர்கள் யாரை வேண்டுமானாலும் அவரது கூட்டாளியாகக் காட்டித் தூக்கில் போடமுடியும்.

10. தக்கீ என்று கைது செய்யப்பட்ட ஒருவர் அரசின் அப்ரூவராக மாறிவிட்டால், அவரது நண்பர்கள், உறவினர்கள் அனைவரின் வீடுகளைச் சுற்றியும் காவல் போடப்பட்டது. அவர்கள் பிற தக்கிகளுக்கு தகவல் தரலாம் என்பதற்காக இது செய்யப்பட்டது என ஆங்கில அரசு கூறியது. உண்மையில் ஆங்கில அரசு உருவாக்கிய ‘போலி அப்ரூவர்’ குறித்த உண்மைகள் வெளியே கசியாமல் இருக்கவே இப்படி செய்யப்பட்டது.

11. தக்கீக்கள் வலிமை மிக்க கொலைகார இயக்கத்தினர் என்றால், அவர்கள் ஏன் ஆங்கிலேயர்களோடு சண்டையிட்டு அவர்களைக் கொல்லாமல் நரிகளிடம் ஆட்டுமந்தைகள் சிக்கியதைப் போல மாட்டி இறந்தார்கள்?, ஏன் பழிவாங்க யாரும் புறப்படவில்லை? - என்ற கேள்விகள் நமக்கு எழுகின்றன. தக்கீக்கள் குறிவைத்து ஆங்கிலேய அதிகாரி ஒருவரைக்கூட கொல்லவில்லை - என்று ஆங்கிலேய ஆவணங்களே ஒப்புக்கொள்கின்றன.


12. தக்கீக்கள் என்று ஏற்கும்படி ஆங்கிலேயர்கள் வற்புறுத்தியதனால் பலர் அதனை ஏற்றனர் - என்று கருதத் தக்க பல புள்ளிவிவரங்கள் ஆங்கிலேய ஆவணங்களிலேயே உள்ளன. உதாரணமாக 1840ல் தக்கீ என்று குற்றம் சாட்டப்பட்டு கைதான 3689 பேரின் விவரங்களைக் கூறலாம். அவர்களில் 466 பேர் தூக்கிலிடப்பட்டனர், 1504 பேர் அந்தமான் தீவுச் சிறையில் அடைக்கப்பட்டனர், 933 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது, 81 பேருக்கு சில ஆண்டு கடுங்காவல் தண்டனை வழங்கப்பட்டது, 97 பேர் விடுதலை செய்யப்பட்டனர், 58 பேர் அப்ரூவர்களாக மாற்றப்பட்டார்கள், 12 பேர் சிறையில் இருந்து தப்பினர். இதெல்லாம் ஆங்கிலேய நீதி பரிபாலனத்தின் சாதனைகள் என்றே நாம் ஏற்றுக் கொண்டாலும், மீதமிருந்த 208 பேர் வழக்கு விசாரணையின்போது இறந்தனர் என்று இவர்கள் கூறுவதை என்னவென்று ஏற்பது?. இந்த மரணங்களை ‘இயற்கை மரணங்கள்’ என்று கூசாமல் பதிவு செய்திருக்கின்றன ஆங்கிலேய ஆவணங்கள். வலிமை மிக்க மனிதர்கள் கண்ணியமான விசாரணையைத் தாங்க முடியாமல் ஓராண்டுக்குள் இறந்ததன் பின்னாக உள்ள உண்மை, அவர்கள் சிறைகளில் கொடுமைப்படுத்தப்பட்டனர் என்பதுதான்.

13. தக்கீக்கள் உண்மையில் இல்லவே இல்லை என்று பல ஆங்கில நீதிபதிகளுக்குத் தெரியும். ஒருவர் இதனை நீதிமன்றத்திலேயே சொன்னார். அவருக்கு உடனடியாக இடமாற்றம் வழங்கப்பட்டது.

14. இந்தியா முழுவதிலும் இந்த தக்கீ பிம்பத்தை ஆங்கிலேயர்களால் உருவாக்க முடியவில்லை. தமிழகம், ஆந்திரா, ஒரிசா, வங்காளம், கர்நாடகா - ஆகிய பகுதிகளில் எந்த ஒரு பெரிய கொள்ளையும் கண்டு பிடிக்கப்படவில்லை. ’சேலத்திற்குத் தெற்கே தக்கீக்கள் இல்லை’ - என்று ஸ்லீமனே குறிப்பிடுகிறார், தமிழகத்தில் தக்கீக்கள் இல்லை என்பதே இதன் அர்த்தம். தமிழகத்தில் சேலம் தவிர வேறு எங்கும் தக்கீ நடமாட்டம் கூட ஆங்கிலேயர்களால் பதிவு செய்யப்படவில்லை. ஆனால் தக்கீ ஒழிப்பின் தொடர் விளைவான, குற்றப்பரம்பரைச் சட்டம் இங்கெல்லாம் பின்னாட்களில் கடுமையாக அமலானது.

15. 1856ல் ஸ்லீமன் இறந்தார். அவரது இறப்புக்குப் பின்னர் தக்கீ ஜோடனை வழக்குகள் குறைந்தன. 1904ல் பலனற்று இருந்த தக்கீ ஒழிப்புப் பிரிவு காவல்துறையில் இருந்து அகற்றப்பட்டது. 1932ஆம் ஆண்டில் ஜபல்பூர் பகுதி காவல்துறை கண்காணிப்பாளர் ஸ்லீமனின் பேரனுக்கு (அவர் பெயரும் ஸ்லீமன்தான்) எழுதிய கடிதத்தில், ”அனைத்து இடங்களிலும் இருந்து வரும் தகவல்களில் தக்கீ பற்றிய சிறு குறிப்பு கூட இல்லை” - என்று குறிப்பிடுகிறார். பிறகு இன்று வரை தக்கீக்களை வரலாற்றில் எங்கும் காணவில்லை. தக்கீக்கள் ஒழிப்புப் பிரிவை ஒழித்ததே உண்மையான தக்கீ ஒழிப்பு, ஏனெனில் அவர்கள்தான் தக்கீக்கள் என்ற அதீத கற்பனைக்கு உயிர்ரூட்டியவர்கள், அதற்காக பல்லாயிரம் மக்களின் உயிர்களை எடுத்தவர்கள்.

16. ஆங்கிலேயர்களின் இந்தக் கொலைகள் ஹிட்லரின் கொலைகளுக்குச் சளைத்தவை அல்ல!.

இப்படியாக தக்கீக்கள் பெயரால் செல்லுபடியான இந்த கோரமான நடவடிக்கைகள் நாடு முழுவதும் செல்லுபடியாகும், நாடு முழுவதும் போராடும் மக்களையும் வேண்டாத மக்களையும் ஒழிக்கலாம் என்று ஆங்கிலேயர்கள் நம்பினர்.  தக்கீக்கள் ஒழிப்புச் சட்டத்தைத் தொடர்ந்து அடுத்த கட்டமாக வந்ததுதான் குற்றபரம்பரைச் சட்டம்…


குற்றப்பரம்பரைச் சட்டம்:



பிரிட்டனில் தொடர்ச்சியாகக் குற்றங்களில் ஈடுபடும் குற்றவாளிகளைக் கண்காணிக்க என்று ஏற்கனவே இருந்த ஒரு சட்டத்தை எடுத்து, அதில் சில மாறுதல்களைச் செய்து ‘குற்றப் பழங்குடிகள் சட்டம்’ என்ற ஒரு சட்டத்தை ஆங்கிலேயர்கள் உருவாக்கினர்.

தொடர்ச்சியாகக் குற்றம் செய்வோருக்கு தண்டனை கொடுக்க, அவர்களைக் கட்டுப்படுத்த வேறு காரணங்கள் தேவையில்லை. ஆனால் பழங்குடிகளைக் கட்டுப்படுத்தவும் தண்டிக்கவும் காரணம் வேண்டுமே, அதனால் இந்தச் சட்டங்கள் பழங்குடி மக்கள் அனைவரும் நாகரிகம் அற்றவர்கள், குற்றவாளிகள் என்று சித்தரித்தன. அந்த அடிப்படையில் அவர்களின் உரிமைகளை நசுக்கின.

1871 ஆம் ஆண்டில் இதனைக் கொண்டுவந்த நீதிபதி ஜேம்ஸ் ஸ்டீபன் இந்தச் சட்டத்தைப் பற்றிக் கூறும்போது,

‘கைவினை, தச்சு வேலைகளைப் போல சில மக்களுக்கு திருடுவது குலத் தொழில். அவர்களை ஒழிப்பது மட்டுமே குற்றங்களை குறைக்க ஒரே வழி!’ – என்று சொல்லி இருப்பதே ஆங்கிலேயர்களின் நோக்கத்தைக் கோடிட்டுக் காட்டுவது. காலப்போக்கில் பழங்குடிகள் மட்டுமன்றி பல்வேறு தரப்பினரையும் ஒடுக்கும் விதமாக இந்தச் சட்டத்தில் மாற்றங்கள் கொண்டுவரப்பட்டன. இந்த வரையறையில் 1897, 1911, 1924, 1944 ஆகிய ஆண்டுகளில் அடுத்தடுத்து மாற்றங்கள் வந்தன. உதாரணமாக 1897ல் அரவாணிகளைக் கண்காணிக்க இந்தச் சட்டம் பயன்படுத்தப்பட்டது. 1924ல் இந்தியா முழுவதும் இந்தச் சட்டம் விரிவுபடுத்தப்பட்டது. அதன்படி, ‘இருப்பிடம் அற்றவர்கள், நாடோடிகள், விபச்சாரிகள் ஆகியோர் அபாயகரமானவர்கள், நாகரிகம் அற்றவர்கள்’ – என்று ஆங்கில அரசு அறிவித்தது.

இந்தியாவில் ‘குற்றப் பழங்குடிகள் சட்டம் (criminal tribal act)’ முதன் முதலாக பஞ்சாப், கூர்க் பகுதிகளில்தான் அமல்படுத்தப்பட்டது. ஆண்டு 1871. ஆங்கிலேய எதிர்ப்பு ரத்தத்திலேயே ஊறி இருந்த பஞ்சாபிகளையும், கூர்க் இன மக்களையும் கட்டுப்படுத்த ஆங்கில அரசு இதனைப் பயன்படுத்தியது.

இதன் பின்னர் சுதந்திர எழுச்சி பொங்கிய வங்கத்தில் 1876ஆம் ஆண்டில் இந்த சட்டம் அமலானது.

தமிழகத்தில் குற்றப்பரம்பரைச் சட்டம்:


அப்போதைய சென்னை மாகாணத்திற்கு குற்றப்பரம்பரைச் சட்டம் மிகத் தாமதமாக 1911ல்தான் வந்தது. பின்னர் தமிழகத்தில் குற்றப் பழங்குடிகள் சட்டம் மெல்ல மெல்ல விரிவுபடுத்தப்பட்டது.

இன்று கள்ளர், மறவர், அகமுடையார் ஆகிய முக்குலத்தோர் மட்டுமே குற்றப் பரம்பரையினராக அறிவிக்கப்பட்டவர்கள் என்ற எண்ணம் தமிழகத்தில் பரவலாக உள்ளது. அது தவறு. அந்தச் சட்டத்தை எதிர்த்து அதிகம் போராடியவர்கள், அதற்கு அதிக விலை கொடுத்தவர்கள் என்ற முறையில் முக்குலத்தோருக்கு அதிக பாதிப்புகள் இருக்கலாம் ஆனால் அவர்கள் மட்டுமே பாதிக்கப்பட்டு இருக்கவில்லை. 1938ல் தமிழகத்தில் வெளியான ஆங்கில அரசின் அறிக்கையின்படி 90 சாதியினர் குற்றப் பரம்பரையினராக அறிவிக்கப்பட்டனர். குறவர், வன்னியர், படையாட்சி, அம்பலக்காரர், ஒட்டர், புன்னன் வேட்டுவக் கவுண்டர், தொட்டிய நாயக்கர், தெலுங்கம்பட்டி செட்டியார், பறையர், புலையர் – ஆகியோரும் அந்தப் பட்டியலில் இருந்தனர்.

இந்த அறிவிப்பு இவர்களின் குற்ற நடவடிக்கைகளை அடிப்படையாகக் கொண்டது அல்ல என்பதை நாம் இங்கு உற்று நோக்க வேண்டும். மேலும் இவர்கள் அனைவரும் இனத்தால் ஒன்றுபட்டவர்களோ சமூக, பொருளாதார நிலைகளில் சமமாக இருந்தவர்களோ பழக்க வழக்கங்களால் ஒன்றுபட்டவர்களோ அல்ல. உதாரணமாக தமிழக குற்றப்பழங்குடிகள் சட்டத்தின் படி ‘பன்றி இறைச்சி சாப்பிடுவோர்’ அனைவரும் குற்றப் பரம்பரையினராக அறிவிக்கப்பட்டனர்!. இதன் பின்னணி எதுவும் விளக்கப்படவில்லை.

இன்னொரு பக்கத்தில் வட இந்தியாவில் அரசுக்கு வரி செலுத்தாமல் உப்பு விற்றவர்களும் இந்தச் சட்டத்தால் ஒடுக்கப்பட்டனர். தமிழகத்தின் உப்புக் குரவர்கள் இதனால் குற்றப் பரம்பரையினராயினர். இந்தியாவெங்கும் புரட்சியாளர்கள் பலரும் இந்தச் சட்டத்தின் கீழ் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டனர்.

இப்படிக் குற்றப் பரம்பரையினராக அறிவிக்கப்பட்டவர்களைக் கட்டுப்படுத்தும் முழு அதிகாரமும் காவல்துறையினருக்கு ஆங்கில அரசால் அளிக்கப்பட்டது. காவல்துறையினரின் அடக்குமுறைகள் ஓங்குவதை ஆங்கில அரசு ஊக்குவித்தது.

தமிழகத்தில் குற்றப்பழங்குடிகள் சட்டத்தால் அதிகம் பாதிக்கப்பட்டவர்கள் பிறமலைக் கள்ளர்கள். இவர்களது நீண்ட வரலாற்றில் குற்றப்பரம்பரை என்ற முத்திரையானது ஒரு கருப்பு அத்தியாயம்.

பிறமலைக் கள்ளர்கள் ஆங்கில அரசுக்குக் கட்டுப்படாத ஒரு தனி அரசையே நெடுங்காலமாக நடத்திவந்தனர். 8 நாடுகள் 24 கிராமங்கள் உள்ளடங்கிய அவர்களது அரசுக்கு ‘தன்னரசுக் கள்ளநாடு’ என்று பெயர். கி.பி. 1754ஆம் ஆண்டில் பிறமலைக் கள்ளர்களின் தலைவர்கள் ஒன்றுகூடி ஒரு ஒப்பந்தம் போட்டனர். அதன்படி அவர்கள் ஆங்கிலேயர்களுக்கு நெடுங்காலம் வரிகள் எதையும் செலுத்தவில்லை. ஆங்கில அரசை அவர்கள் பகிரங்கமாகவே எதிர்த்தனர். அதனால் அவர்களை ஆங்கில அரசு அச்சத்தோடே எப்போதும் பார்த்து வந்தது.

ஆங்கிலேயர்கள் 1800 களில் மதுரைப்பகுதியை தங்களது முழுக்கட்டுப்பாட்டில் கொண்டு வந்திருந்தனர். ராணுவத் தன்மை உடைய கள்ளர்கள் இங்கு ஏற்கனவே ஸ்தலக்காவல், தேசக்காவல், பகுதிக்காவல் உரிமைகள் பெற்றிருந்தார்கள். ஆனால், ஆங்கிலேயர்கள் ஆதிக்கம் இங்கே அதிகரிக்கத் தொடங்கியதை அடுத்து, அந்தக் காவல் பணியும் அவர்கள் வசம் சென்றது. கள்ளரினம் தனது பாரம்பரிய கட்டுமானத்தில் விரிசல்கள் கண்டது. 

1870 ஆம் ஆண்டு வரையிலும் பிரிட்டிஷ் போலீஸ் துறையால் தீர்க்கமுடியாத குற்றங்களை சில பிரமலைக்கள்ளர்கள் கண்டுபிடித்து கொடுத்தனர். அதற்காக அவர்கள் பெற்றுக் கொண்ட பரிசிற்கு பெயர்தான் துப்புக்கூலி. கள்ளர்கள் தங்களது பழங்காலமுறை காவல்தொழிலை திறமையான முறையில் நடத்தி வந்தனர். இதனால் ஆங்கிலேய அதிகாரிகள் எரிச்சலுற்றனர். இதனால் பல போலீஸ் சூப்பிரெண்டுகளும், கலெக்டர்களும் பிரமலைக்கள்ளர் சமூகத்தின் மீது காழ்ப்புணர்வு கொண்டனர்.

1906 ஆம் ஆண்டு மதுரைப்பகுதியில் ஏற்பட்ட சில முக்கியமான களவுகளை கண்டுபிடிக்க முடியாத பிரிட்டிஷ் போலீஸ் கையைப்பிசைந்தது. துப்புக்கூலி கொடுத்து உண்மைக்குற்றவாளிகளை கண்டுபிடிக்க அவர்களின் அதிகார மமதை இடம்தரவில்லை.

மதுரையில் இருந்த ஆங்கில அதிகாரி ராபர்சன் துரை என்பவரிடம் பிறமலைக்கள்ளர்கள் காவல் வரி கேட்டதையும் அதற்கு பின் நடந்தேறிய சுவையான சம்பவங்களை " India on march " எனும் புத்தகத்தில் சுவையான தகவல்களுடன் வெள்ளையர்களால் குறிப்பிடப்பட்டுள்ளது.. அவற்றை காண்போம்.

" இந்த தேவன் ( பிறமலை கள்ளர்) மிகவும் உறுதியான உடல் அமைப்பை கொண்டவன். இவர்கள் மதுரையில் நாகமலை பகுதியில் வாழ்கின்றனர். இவர்களின் முக்கிய விளையாட்டு ஜல்லிக்கட்டு. தங்களது நீண்ட கூத்தலுடன் கூர்மையான கத்தியை இணைத்து வைத்திருப்பார்கள்.

பிறமலைக் கள்ளர்கள் தனது குடும்பத்தார் மற்றும் உறவினர்களுடன் ஒரு மரத்தின் அடியில் இருக்கும் கருப்புசாமியை வழிபட செல்வது இயல்பானதாகும்.

ஒரு பிறமலைக்கள்ளர் ராபர்ட்சன் துரை எனும் ஆங்கில அதிகாரியிடம் காவல் வரியாக 5 ரூபாய் கேட்டுள்ளார். ஆனால் அந்த அதிகாரி , வரி செலுத்த மறுத்துவிட்டார். காவல் வரி கேட்டு வீட்டுக்கு வந்த மற்ற கள்ளர்களையும் போலீசில் புகார் செய்து தண்டனை வாங்கிக் கொடுத்தார். காவல் வரி செலுத்த மறுத்த வெள்ளையருக்கு தக்க பாடம் புகட்ட முடிவு செய்தார் அந்த தேவர்.

20 மைலுக்கு அப்பாலுள்ள தங்களது கிராமத்தில் இருந்து 8 கள்ளர்கள் ராபர்ட்சன் பங்களாவை இரவு 2 மணிக்கு அடைந்தனர். உடம்பில் எண்ணை தடவிக்கொண்டு, பங்காவிற்குள் நுழைந்தனர்.





தங்களது சுவாசத்தின் மூலமே ராபர்சன் இருக்கும் அறையை அடைந்தனர். வெள்ளையரின் கைக்கடிகாரம், துப்பாக்கி, டயரி முதலியவற்றை எடுத்துக்கொண்டு அங்கிருந்து கிளம்பினர். தூங்கிய எழுந்த வெள்ளையன் தான் பழிவாங்கப்பட்டதை உணர்ந்து கொதித்து போய் காவல் நிலையத்தை நோக்கி ஒடிப்போனார்.

கள்ளர்களின் வாழ்வாதாரமான காவல் தொழிலை ஒழித்து, பிற்காலத்தில் கள்ளர்களை குற்றப்பரம்பரை என முத்திரை குத்தியது வரலாற்றில் மறைக்கமுடியாத வெள்ளையர்களின் அவலம்.(India on march 1922)

தமிழகத்தில் மாவட்ட வாரியாக குற்றத் தொழிலில் ஈடுபடு வோர் பட்டியலைத் தயாரித்து அனுப்ப, மாவட்ட போலீசாருக்கு 1914-இல் மதராஸ் போலீஸ் தலைமை உத்தரவிட்டது. அதன்படி கொலை, கொள்ளை, திருட்டு போன்ற குற்றங்களில் ஈடு படுவோர் பட்டியலை மாவட்ட போலீசார் தயாரித்து அனுப் பினர். தஞ்சை, மதுரை, ராமநாதபுரம், திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் குற்றத் தொழில் அதிகமாக இருப்பதாகப் புள்ளிவிவரங்கள் தெரிவித்தன.

பிறமலைக் கள்ளர்கள் மீது குற்றப்பழங்குடிகள் சட்டத்தை ஏவ வேண்டும் என்ற முடிவை, இந்தியாவுக்குள் குற்றப் பழங்குடிகள் சட்டம் வந்த 43 ஆண்டுகள் கழித்து 1914 ஏப்ரல் 8ஆம் தேதிதான் ஆங்கில அரசு முடிவு செய்தது. கி.பி.1914 மே 4ஆம் நாள் தன்னரசுக் கள்ளநாட்டின் ஒரு பகுதியான கீழக்குடி கள்ளர்கள் மீது இந்த சட்டம் முதன்முறையாகப் பாய்ந்தது. கள்ளர்கள் குற்றப் பரம்பரையினர் என்று முதன்முதலாக அறிவிக்கப்பட்டது அப்போதுதான்.

பாப்பாநாடு, முதுகுளத்தூர், சேலம் – என தமிழகத்தின் 3 இடங்களில் குற்றப் பழங்குடிகள் சட்டம் அமலுக்கு வந்தது. தன்னரசுக் கள்ளநாடு முழுவதும் இந்தச் சட்டம் பரவலாகப் பயன்படுத்தப்பட்டது. தேவையற்ற வழக்குகள் காவல்துறையினரால் போடப்பட்டன. கி.பி.1923 ஆம் ஆண்டில் மட்டும் 12,925 வழக்குகள் காவல்நிலையங்களுக்கு வந்தன. அவற்றில் பதிவு செய்யப்பட தகுதியாக இருந்தவை 3049 வழக்குகள், நடவடிக்கை எடுக்கப்பட்டவையோ 12 வழக்குகள். 12,913 வழக்குகள் குற்றமற்ற மக்களைத் துன்புறுத்த என்று மட்டும் பயன்படுத்தப்பட்டன.

குற்றப் பழங்குடிகள் சட்டம் ஒரு குற்றவாளி ஒரு கிராமத்தில் நடமாடினார் என்றால் அந்த கிராமத்தில் உள்ள அனைத்து ஆண்களுமே விசாரணைக்கு ஆளாக்கப்பட வழி வகுத்தது. இப்படியாகக் கண்காணிக்கப்படும் கிராமங்களின் பட்டியல் நீண்டுகொண்டே சென்றது. இதனால் சில காலத்திலேயே மதுரையில் இருந்த அனைத்து கிராமங்களும் அரசால் கண்காணிக்கப்படும் கிராமங்களாயின, இதற்கென தனித்த ஒரு அமைப்பையே ஆங்கிலேய அரசு உருவாக்கியது. அரசின் அடக்குமுறைகள் உச்சத்தை அடைந்தன.

கண்காணிப்பில் இருந்த ஒவ்வொரு கிராமத்திலும் 2 பதிவேடுகள் பராமரிக்கப்பட்டன. முதலாவது பதிவேட்டில் பல்வேறு காரணங்களால் (குறிப்பிட்ட கிராமத்தில் வசிப்பதே போதுமான காரணம்) கண்காணிப்பின் கீழ் உள்ளோரின் பெயர், தந்தை பெயர், தொழில், அங்க அடையாளங்கள், கைரேகை – ஆகியவை பதிவு செய்யப்பட்டன.

இரண்டாவது பதிவேடு நீதிமன்றத்தால் ‘குற்றவாளி’ என்று அறிவிக்கப்பட்டவர்களுக்கானது. இதில் முதல் பதிவேட்டின் அதே விவரங்களே பதிவு செய்யப்பட்டன.


முதல் பதிவேட்டில் உள்ளவர்கள் தினமும் காவல்நிலையத்தில் கைநாட்டு வைக்க வேண்டும். வெளியூர் செல்ல வேண்டுமென்றால் அவர்கள் கிராமப் பஞ்சாயத்தின் அனுமதி பெற்று பின்னரே செல்ல வேண்டும். இதனால் ‘கைரேகைச் சட்டம்’ என்று பொதுமக்கள் இந்தச் சட்டத்தை அழைக்கத் துவங்கினர். கைநாட்டுகளை இரவு 11 மணியில் இருந்து காலை 5 மணிக்குள் மக்கள் வைக்கவேண்டும். இதனால் அதிக மக்கள் இருந்த ஊர்களில் மாலை 7 மணி முதலே மக்கள் வரிசைகளில் நிற்கத் துவங்கினர்.

இரண்டாம் பதிவேட்டில் பெயர் உள்ளவர்களின் நிலை இன்னும் மோசம். இவர்கள் அரசு கொடுத்த ‘ராதாரிச் சீட்டு’ (ராத்திரிச் சீட்டு) என்ற அனுமதி அட்டையை எப்போதும் தங்களுடன் வைத்துக் கொள்ள வேண்டும். இந்தச் சீட்டை மறந்து வைத்தால் அந்தக் காரணம் ஒன்றே இவர்கள் கைது செய்யப்படப் போதுமானது. இவர்கள் மாலை 7 மணிமுதல் காவல் நிலையத்திற்கு எதிரே இருந்த திறந்த வெளியில்தான் இருக்க வேண்டும். குளிரோ, மழையோ அங்கேதான் தூங்க வேண்டும். மனைவியின் பிரசவ நாளில் கூட அவர்களுக்கு விலக்குகள் அளிக்கப்படவில்லை. ஒரு ஊரில் எந்தத் திருட்டு நடந்தாலும் உரிய குற்றவாளி கண்டுபிடிக்கப்படும் வரையில் இரண்டாவது பதிவேட்டில் உள்ளவர்களே அந்தக் குற்றத்தைச் செய்தவர்களாகக் கருதப்பட்டனர். முன்னர் அவர்கள் மீது இருந்த குற்றச்சாட்டு எதுவானாலும் உடன் இதுவும் ஒரு குற்றமாக சேர்த்துக் கொள்ளப்பட்டது. இதனால் காவல்துறை நிம்மதியாக இருக்க, ஊர்ப்பெரிய மனிதர்கள் குற்றவாளிகளைத்தேடி அலைந்தனர். இந்த சட்டத்தில் இருந்து விலக்குப் பெற்றவர்களும் உள்ளனர்.

சில ஊர்களில் காவலர்களுக்கு பதிலாக உள்ளூர் பெரிய மனிதர்கள் அடங்கிய குழுக்கள் கையெழுத்து வாங்கும் பணியைச் செய்தன. கள்ளர் பகுதிகளில் இந்தக் குழுக்கள் ‘கள்ளர் பஞ்சாயத்துகள்’ என்று அழைக்கப்பட்டன. விவசாய நிலம் வைத்திருந்த விவசாயிகள், நிலவரி கட்டுபவர்கள், நிரந்தரத் தொழில் செய்வோர், அரசு அலுவலர், நிரந்தரமாக ஒரே இடத்தில் வசிப்போர் – ஆகியோர் பலர் இந்தக் குழுக்கள் மூலம் கைநாட்டு வைப்பதில் இருந்து விலக்குகளையும் பெற்றனர். ஆங்கில ஆதிக்கத்திற்கு எதிராக எந்த நடவடிக்கைகளிலும் ஈடுபடாதவர்களுக்கே இந்த விலக்குகள் அளிக்கப்பட்டன.

பல சாதிய அமைப்புகள் தங்கள் மக்களை இந்தச் சட்டத்தில் இருந்து காப்பாற்றப் போராடின, சில வெற்றியும் பெற்றன. செய்யூர் ஆதிதிராவிடர் பேரவை, வன்னியர்குல சத்திரிய சபா ஆகிய அமைப்புகள் தங்கள் சாதியினரைப் பட்டியலில் இருந்து மீட்டன. ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த கோபாலசாமி ரெகுநாத ராஜாளியார் ஆங்கிலேய அரசின் ஆதிக்க மையங்களில் எல்லாவற்றிலும் போராடி தஞ்சை, திருச்சி பகுதிகளில் இருந்த கள்ளர்களை பட்டியலில் இருந்து மீட்டார். ஆனால் மதுரைக் கள்ளர்கள் மீட்கப்படவில்லை.

ரெகுநாத ராஜாளியார்

அரசின் குற்றப்பரம்பரைச் சட்டத்துக்கு அப்பாவி மக்களிடம் கூட எதிர்ப்பு கிளம்பியது. அதை எதிர்த்து நாடெங்கிலும் முக்குலத்து மக்கள் நடவடிக்கைகளில் இறங்கினர். அதே நேரத்தில், அந்தச் சமுதாயத்தில் செல்வாக்குடனும் வசதியு டனும் இருக்கும் நபர்கள் மீது போலீசாரால் குற்றம் சாட்டமுடியவில்லை. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலுள்ள தேவர் சமுதாயத்தைச் சேர்ந்த செல்வாக்கானவர்கள் ஒன்றுபட்டு, இந்தச் சட்டத்தை அமல்படுத் தக்கூடாது என அரசுக்கு எச்சரிக்கை விடுத்தனர்.

குற்றப் பரம்பரையினராக அறிவிக்கப்பட்டவர்களிடம் இரக்கமே இல்லாமல் நடக்கும் படி ஆங்கிலேய அரசால் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டது. அனைவருமே பாகுபாடின்றி குற்றவாளிகளாகக் கருதப்பட்டனர். குற்றத்தை மறுப்பது தந்திரமாகப் பார்க்கப்பட்டது. பதிலுக்கு ஆங்கில அரசும் சில தந்திரங்களை இவர்களுக்கு எதிராகப் பயன்படுத்தியது. இவர்களின் உறவினர்களை இவர்கள் முன்பாகவே கொடுமைப்படுத்துவது ஆங்கிலேயர்களின் தந்திரங்களில் ஒன்று. லன்லக் என்ற ஆங்கிலேயர் குற்றப்பரம்பரையினருக்கு எதிராக ஆங்கிலேய அரசு அதிகாரிகள் எவ்வகையான தந்திரங்களை எல்லாம் கையாளலாம் என்பது குறித்து தனி அறிக்கை ஒன்றையே தயாரித்துக் கொடுத்தார்.

குற்றப் பரம்பரையினர் நடமாட்டத்தினால் தங்கள் கிராமங்கள் பாதிக்கப்படும் என்ற பயத்தை பிற சாதியினர் இடையே ஆங்கில அரசு தோற்றுவித்தது. அவர்களின் வழக்குகளில் குற்றப்பரம்பரையினரைக் குற்றவாளிகளாகச் சேர்த்து அவர்களைப் பிற சாதியினருக்கு எதிராக ஆங்கில அரசு தூண்டியது.


தஞ்சையில் ராவ்பகதூர் வீரையா வாண்டையார் முயற்சியில் கள்ளர் மகாசன சங்கம் உருவாக்கப்பட்டது. அதன்மூலம் தேவர் சமுதாயக் குழந்தைகளுக்குக் கல்வியும் உணவுவிடுதியும் ஏற்படுத்தித் தந்தனர். இப்படி அந்த சாதியைச் சேர்ந்தவர்களே முன்வந்து சமூக மக்களின் நன்னடத்தையிலும் முன்னேற்றத்திலும் ஆர்வம் காட்டியதை அரசால் நிராகரிக்க முடியவில்லை .

ராவ்பகதூர் வை.பு.வையாபுரி அம்பலம்

மதுரை மாவட்டத்தில் மேலூர் பகுதியில் இந்தச் சட்டம் அமல்படுத்துவதற்கான வேலைகள் ஆரம்பமான நேரத்தில் பெரியாற்றுப் பாசனம் அந்தப் பகுதிக்கு வந்ததையடுத்து மக்கள் விவசாயத்தில் ஈடுபட்டனர். விளைச்சலை அதிகரித் தார்கள். மது அருந்தும் பழக்கம் பலரிடமிருந்து விடைபெற்றது. இதையெல்லாம் பார்த்த அதிகாரிகள் அவர்கள் மீது குற்றப்பரம்பரைச் சட்டத்தை அமல்படுத்திடத் தயங்கினார்கள். அமல்படுத்தியிருந்தாலும் அதை கண்டுகொள்ளாமல் விட்டு விட்டார்கள். அத்தோடு அந்த மக்களை என்ன செய்யலாம் என யோசித்த அதிகாரிகள், மேலூர் கிராம முன்சீப் வையாபுரி அம்பலக்காரருக்கு ராவ்சாகிப் பட்டம் கொடுத்து, அவருடைய கட்டுப்பாட்டில் நாட்டு மக்கள் இருக்கும் வகையில் கலெக்டர் ஏற்பாடு செய்தார்.

சண்முக ராஜேஸ்வர சேதுபதி

சேதுபதி மன்னர் மற்றும் தென் மாவட்ட ஜமீன்தார்கள் ரேகைச் சட்டம் தங்கள் பகுதியில் அமல் செய்ததை ரத்து செய்யவேண்டும் என சென்னை கவர்னருக்கு வேண்டுகோள் வைத்ததோடு நேரில் சந்தித்துக் கோரிக்கை விடுத்தனர். 25.11.1915 அன்று மதுரை மாவட்ட பிரமலைக் கள்ளர் வாழ்ந்த பகுதியில் உரப்பனூரைச் சேர்ந்த சிவனாண்டித் தேவன் என்பவர் பிரபல வழக்கறிஞர் ஜார்ஜ் ஜோசப் மூலம் சென்னை மாகாண ஆளுனருக்கு ஓர் ஆட்சேபணை மனுவை அனுப்பி வைத்தார்.

அதில் 'விவசாயமே எங்கள் வாழ்வாதாரம். சட்டத்தை மதித்து முறையாக நிலவரி செலுத்திக் கண்ணியமாக வாழ்ந்து வருகி றோம். மதுரை திருமலை நாயக்கர், கள்ளர் சமுதாயத்தின் எட்டு நாட்டுக்குத் தலைமை ஏற்கும் ஆட்சிப் பொறுப்பை எம்மிடம் ஒப்படைத்ததற்கான தாமிரப் பட்டயங்கள் உள்ளன. 1860 ஆம் ஆண்டு இந்திய தண்டனைச் சட்டப்படி குற்றவாளிகள் தண்டிக் கப்பட வேண்டுமே தவிர, ஒட்டுமொத்த சமுதாயத்தையும் குற்ற வாளிகள் என விளம்புவது சமூக நீதிக்கு எதிரானது. எனவே, நீதிக்குப் புறம்பான இந்தச் சட்டத்தை நிறுத்தி வையுங்கள்' என அந்த மனுவில் கேட் டிருந்தார். அவரது நியாயமான கோரிக்கை, மனிதாபிமானமற்ற முறையில் அரசால் நிராகரிக்கப்பட்டது.

1915ஆம் ஆண்டு மதுரையிலிருந்து ஒரு தந்தி. கள்ளர் சாதியினர் சார்பில் அரசு அதிகாரிக்குச் சென்றது. அதில் 'மதுரை மாவட்டம் திருமங்கலம் தாலுகா உரப்பனூர் தேவ மார்கள் ரூ. 3500க்கு கிஸ்தி செலுத்தக்கூடிய பட்டாதாரர்கள். இவர்கள் மீது குற்றப்பரம்பரைச் சட்டத்தைப் பிரயோகிக்கும் முன் விசாரணை செய்யவும்' ஒப்பம் வெள்ளையத் தேவர் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.

என்றாலும், ராமநாதபுரம், நெல்லை மாவட்டங்களில் பூலம், ஆப்பநாடு, முதுகுளத்தார் ஆகிய இடங்களில் ரேகைச் சட்டம் அமல் செய்யப்பட்டது. 1915 ஆம் ஆண்டு மதுரை மாவட்ட பிரமலை நாட்டிலும் இந்தச் சட்டத்தை அமல்படுத்துவதற்கான வேலை தொடங்கியது

பிரமலை நாட்டில் ஏற்கெனவே குற்றச் செயல்களில் ஈடுபட்டு தண்டிக்கப்பட்டவர்கள் போலீசாரின் கண்காணிப் புக்குள் வந்தார்கள். இந்தக் கண்காணிப்பு வேலையில் ஈடுபட்ட போலீஸ்காரர் பெயர் ரெங்காச்சாரி. அவரை எல்லோரும் 101 என்று சொல்வார்கள். அது அவரது எண். எப்போதும் குதிரையில் வரும் அவர், கூடவே ஒரு நாயையும் வைத்திருப்பார்.

இவர் அதிகமாக கிராமங்களில் முகாமிட்டு ரவுடிகள் பட்டியலை விரிவுபடுத்தினார். அவரை யாராவது எதிர்த்துக் கேள்வி கேட்டாலோ, பகைத்தாலோ சரி, அந்த நபர் ரவுடி பட்டியலில் இடம் பெற்று விடுவார். அந்தப் பட்டியலில் நந்தக்கண்ணு, மாயாண்டி, அமாவாசை, மொட்டவாயன், காயாம்பு, மொட்ட தவசி என நீண்ட பட்டியலே உண்டு. இந்தக் கண்காணிப்பு 1918 வரை தொடர்ந்தது.

அப்போது மதுரை கலெக்டராக இருந்த நேப்புத் துரைக்கு இந்தச் சட்டத்தை மதுரை மாவட்டத்தில் அமல் செய்வதில் நடைமுறைச் சிக்கல் இருந்தது. எனவே, நிர்வாக வசதிக்காக தனது விருப்பத்தின்படி சட்டத்தை அமல்படுத்திட அரசிடம் அனுமதி கோரியிருந்தார். ஆனால் சென்னை அரசின் முக்கிய செயலாளர் அந்தக் கோரிக் கையை ஏற்றுக்கொள்ள வில்லை . அவர் கலெக்ட ருக்கு எழுதிய கடிதத்தில், 'குற்றவாளிகளை மட்டுமே பதிவு செய்யவேண்டும். கண்காணிக்க வேண்டும்' என கண்டிப்புடன் எழுதி விட்டார். அது கள்ளர் களை குற்றப் பரம்பரையினர் சட்டத்திலிருந்து நீக்கிவிடலாம் என்ற நல் லெண்ணத்தின் காரணமாக அல்ல. குற்றம் செய் யாதவர்களைப் பதிவு செய்ய 1911 ஆம் ஆண்டு சட்டத்தில் இடமில்லை . குற்றப் பரம்பரையினர் சட்டத்தின் மேனு வலைத் திருத்தி னால்தான் முடியும். அதற்காகவே கலெக்டரைக் காத்திருக்க வைத்தார்கள்.

என்றாலும், பிரமலை நாட்டில் குற்றப்பரம்பரைச் சட்டத்தைப் பயன்படுத்துவதற்கான வேலைகள் தொடர்ந்து நடந்து வந்தன. இந்த நிலையில் மேனுவல் திருத்தப்பட்டது. அதன்பிறகு கலெக் டரின் ஆசை நிறைவேறத் தொடங்கியது.

இந்தச் சட்டம் 1914 ஆம் ஆண்டு மதுரை மாவட்டம் கீழக்குடி கிராம கள்ளர் சாதியினரிடையே நடைமுறைப்படுத்தப் பட்டது. மதுரை மாவட்ட உரிமையியல் நீதிபதி க்னப் என்பவர் கள்ளர்கள் பதிவு செய்யப்படுதலை ஆரம்பித்து வைத்தார். ஒட்டு மொத்தமாக கள்ளர்களின் குற்றவியல் தன்மையைச் சுட்டிக்காட்டிய அவர், கள்ளர்களின் ஒரு பிரிவினரான கீழக் குடிக் கள்ளர்களை மட்டுமே பதியப் போவதாக அறிவித்தார்.

கீழக்குடி கிராமத்தின் புள்ளிவிபரப்படி பதிவு செய்யப்பட்ட 321 ஆண்களில் 79 பேர் மட்டுமே தண்டிக்கப்பட்டவர்கள் அல்லது போலீஸ் காவலில் வைக்கப்பட்டவர்கள். நீதிபதி க்னப்பின் பரிந்துரையை அரசு ஏற்றுக்கொண்டு, கீழக்குடிக் கள்ளர்களைக் குற்ற பரம்பரையினராகப் பிரகடனம் செய்தது. அதன் காரணமாக பதினாறு வயதுக்கு மேற்பட்ட கள்ளர் சாதியினர் ஒவ்வொருவரும் தங்களைப் பதிவு செய்துகொள்ள வேண்டும். அவ்வாறு பதிவு செய்துகொண்டவர்கள் தங்கள் இருப்பிட, இருப்பிட மாற்றம் மற்றும் வெளியூர் செல்லுதல் ஆகியவற்றைக் குற்றப்பரம்பரையினர் சட்டப்பிரிவு 10இன் படி அரசுக்குத் தெரிவிக்கவேண்டும்.

கைரேகைச் சட்டப்படி பதிவு செய்யும் வேலை மதுரை திருமங்கலம் தாலுகாவிலும் தொடங்கியது. காளப்பன்பட்டி, போத்தம்பட்டி, பெருங்காமநல்லூர், தும்மக்குண்டு, குமரன் பட்டி ஆகிய ஊர்கள் முதல்கட்டமாகத் தேர்வு செய்யப்பட்டன. கள்ளர் சமுதாயத்தினரைப் பதிவு செய்தல் வேகமாக நடந்து வந்தது என்றாலும், அது அவ்வளவு எளிதானதாக இல்லை . மாவட்ட உரிமையியல் நீதிபதியாக இருந்த ரெய்லி என்பவர், 'திருமங்கலம் தாலுகாவில் 1920 ஜனவரி முதல் தேதி வரை தேர்வு செய்யப்பட்டிருந்த 158 கிராமங்களில் 11இல் மட்டுமே பதிவு முடிக்கப்பட்டிருந்தது. திருமங்கலம் தாலுகாவில் உள்ள கள்ளர் மக்கள் தொகை சுமார் அறுபதாயிரத்தில் பதிவுபெற வேண்டிய வயது வந்த ஆண்கள் சுமார் மூவாயிரம் பேரும் அந்தத் தாலுகாவுக்கு வெளியே ஆயிரம் பேரும் உள்ளனர்' என அரசுக்கு அறிக்கை அனுப்பினார்.

அதிக எண்ணிக்கையிலான கள்ளர்களை பதிவு செய்ய வேண்டியது அவசியமானது' என மாவட்ட காவல் கண் காணிப்பாளர் எலியட் தொடர்ந்து கூறி வந்தார். அதுமட்டு மில்லாமல், 'குற்றப் பரம்பரையினராக பதிவு செய்த ஒவ் வொருவரும் அருகிலுள்ள காவல் நிலையத்திலோ, பரி சோதனை மய்யத்திலோ தன் இருப்பிடத்திலிருந்து அய்ந்து மைல் தொலைவிலுள்ள புறக்காவல் நிலையத்திலோ, பகல் 11 மணியிலிருந்து மாலை நான்கு மணிக்குள் ஆஜராக வேண்டும். அப்படி அய்ந்து மைல்களுக்குள் பரிசோதனை மய்யமோ, காவல்நிலையமோ இல்லாது போனால் அருகிலுள்ள கிராம உரிமையியல் நீதிபதியிடம் குறிப்பிட்ட நேரத்தில் ஆஜராக வேண்டும்' என உத்தரவு பிறப்பித்தார்.

மதுரை மாவட்டம் பிரமலைக் கள்ளர் நாட்டில், அதிகாரிகள் இந்தச் சட்டத்தை வேகமாக அமல்படுத்தி வருகையில், இறுதிக் கட்டமாக பெருங்காமநல்லூர் கிராமத்துக்கு வந்தனர்.


கைரேகைச் சட்டமும் பெருங்காமநல்லூர்க் கலவரமும்: 

தென்னக ஜாலியன் வாலாபாக்'' என்றழைக்கப்படும்  மதுரை மாவட்ட பெருங்காமநல்லுர் கிராமத்தில் நடந்த அநீதி செயல். உரிமைகாக்க பதினாறு பேர் உயிரிழந்த சோக வரலாறு இது

இந்தச் சட்டத்தின் மிகப்பெரிய அழிவு கி.பி.1920ஆம் ஆண்டில் உசிலம்பட்டிக்கு அருகில் உள்ள பெருங்காமநல்லூரில் ஏற்பட்டது. கைரேகைச் சட்டம் பெருங்காம நல்லூரில் அமலாக்கப்பட உள்ளது என்ற தகவல் கி.பி.1920 மார்ச் மாதத்தில் அங்கிருந்த மக்களுக்குத் தெரிய வருகின்றது. அவர்கள் அந்தச் சட்டத்தை எதிர்க்க ஒன்றாகக் கூடி முடிவெடுக்கின்றனர். இது ஆங்கில அரசுக்குத் தெரியவர, கி.பி.1920 ஏப்ரல் 3ஆம் தேதி காவல்துறையினர் கிராமத்தை சுற்றி வளைத்து பின்னர் சட்டத்தை அமல்படுத்த முயற்சி செய்கிறார்கள். முதல் கட்டமாக பதிவேட்டை ஊர் நடுவே வைத்துவிட்டு மக்களைக் கைநாட்டு வைக்கக் கட்டாயப்படுத்துகிறார்கள். மக்கள் மறுத்து வாக்குவாதம் செய்ய, எதிர்த்தவர்கள் சுட்டுத் தள்ளப்படுகிறார்கள். சுட்டுத் தள்ளப்பட்டவர்களுக்கு உதவ வந்தவர்களும் சுடப்படுகிறார்கள். காயம் பட்டவர்களுக்கு நீர் கொடுக்க வந்த மாயக்கா என்ற பெண்ணை அதற்காகவே காவலர்கள் சுட்டுக் கொன்றார்கள்.

பெருங்காம நல்லூரின் 700 மக்கள் கைது செய்யப்பட்டு அங்கிருந்து 20 கி.மீ. தூரத்தில் இருந்த திருமங்கலம் காவல் நிலையத்திற்கு நடத்தி இழுத்துச் செல்லப்பட்டு தண்ணீர் கூட தரப்படாமல் காவலில் வைக்கப்பட்டு பெருங்காம நல்லூரில் இந்தச் சட்டம் அமல்படுத்தப்படுகிறது. இந்த சம்பவம் இந்தியா முழுவதும் பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்துகிறது.

இந்த சம்பவம் பற்றிய முழுத்தகவல் அறிய
இங்கே சொடுக்கவும் (click here)👉 கள்ளர் நாட்டு வீரத்திருமகள் "மாயக்காளும்" கள்ளர் நாட்டு வீரவேங்கைகளும்.
     

கி.பி.1933ஆம் ஆண்டில் அரசியல் சட்ட சீர்திருத்தக்குழு முன்னர் நடந்த விசாரணையில் இந்தச் சட்டத்தின் கொடுமைகளைப் பற்றி டாக்டர்.அம்பேத்கர் ஆங்கில அரசுக்கு எடுத்துரைத்தார். கி.பி.1936ல் ஜவஹர்லால் நேரு ‘சட்ட நூலில் இருந்து இந்தச் சட்டம் நீக்கப்படுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்’ என்றார்.


ப. ஜீவானந்தம், பி.ராமமூர்த்தி, முத்துராமலிங்கத் தேவர், சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி சுப்பராவ், ஹரிஜன சேவாசங்கத் தலைவர் கி.சி.தக்கா ஆகியோர் இந்தச் சட்டத்திற்கு எதிராகத் தொடர்ந்து போராடினர். கேரளாவைச் சேர்ந்தவரும் மதுரையில் தங்கி இருந்தவருமான வழக்கறிஞர் ஜார்ஜ் ஜோசப் என்பவர் கி.பி.1921முதல் கள்ளர் பகுதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்களைத் திரட்டி ‘குற்றப் பழங்குடிகள் சட்ட’த்திற்கு எதிராக மட்டுமே போராடி வந்தார். வைக்கத்திற்கு பெரியாரை அழைத்துச் சென்றவரும் இவர்தான். இவரது நினைவாக மதுரை மக்கள் இன்றும் தங்கள் குழந்தைகளுக்கு ‘ரோசாப்பூ துரை (சோசப்பு துரை)’ என்று பெயர் வைக்கின்றனர்.

       
தள்ளுபடியான கைநாட்டுச் சட்டம்:

கி.பி.1947ல் சுதந்திரத்திற்கு முன்பாகவே காவல்துறை அமைச்சர் பி.சுப்பாராவ் இந்தச் சட்டத்தைத் திரும்பப் பெறுவதற்காக தீர்மானம் கொண்டுவந்தார். அந்த தீர்மானம் வெற்றியும் அடைந்தது. சுதந்திர இந்தியாவில் 1949 ஆகஸ்டில் இந்தச் சட்டம் முழுவதுமாக தள்ளுபடி செய்யப்பட்டது.

இந்தத் தள்ளுபடியால் அதுவரை குற்றப் பரம்பரையினர் என்று ஆங்கிலேயர்களால் அழைக்கப்பட்டவர்கள் சட்டத்தால் ‘குற்ற மரபினர் பட்டியலில் நீக்கப்பட்டவர்’ என்று அழைக்கப்பட்டனர். இன்றைய இந்தியாவில் 313 நாடோடிப் பழங்குடி மக்களும், 1989 பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட சீர் மரபினரும் குற்றப் பழங்குடிகள் சட்டத்தின் வடுக்களைச் சுமந்து வாழ்கின்றனர். குற்றப் பரம்பரையினர் – என்று ஆங்கிலேயர்கள் யாரை அழைத்தார்களோ அவர்கள் மண்ணின் மக்களாகவும், சுதந்திரப் போராளிகளாகவும் இருந்தனர் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.




குற்றப்பரம்பரை சாதிகள் என்று சட்டம் போடப்பட்ட சாதிகள் (தமிழ் நாட்டில் )


தமிழகத்தில் ஆட்சி செய்த சாதியினர் குற்றப்பரம்பரை சட்டத்தில்   

பிரமலைக்கள்ளர்கள்  - தன்னரசு 8 நாடு 24 உப கிராமம் 
பெரிய சூரியூர் கள்ளர்கள்  - புதுக்கோட்டை தொண்டைமான்
செம்பநாடு மறவர்கள்  - பூலித்தேவன், சேதுபதி’ மன்னர்
கொண்டையங்கோட்டை மறவர் - நெல்லைப்பகுதி ஜமீன்கள்
படையாட்சி  - அரியிலூர் மழவராயர் ஜமீன்

தொட்டிய நாயக்கர்கள்  - வெள்ளியங்குன்றம் அரண்மனை அந்த ஜமீன் 


1.ஆத்துர் கீழ்நாடு குறவர்கள்
2.ஆத்தூர் மேல்நாடு குறவர்கள்
3.ஆப்பநாட்டுக் கொண்டையங்கோட்டை மறவர் 
4.அம்பலகாரர் (தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர்)
5.அம்பலக்காரர் (சூரியனூர், திருச்சிராப்பள்ளி மாவட்டம்)
6.போயர்கள்
7.பட்டுதுர்காஸ்
8.சி.கே.குறவர்கள்
9.சக்கலா
10.சங்கயம்பாடி குறவர்கள்
11.செட்டிநாடு வலையர்கள்
12.தொம்பர்கள்
13.தொப்ப குறவர்கள்
14.தொம்மர்கள்
15.தொங்கபோயர்
16.தொங்கஊர் கொறச்சார்கள்
17.தேவகுடி தலையாரிகள்
18.தொப்பை கொறச்சாக்கள்
19.தாபி குறவர்கள்
20.தொங்கதாசரிகள் ,
21.கொரில்லா தோட்ட போயர்
22.குடு தாசரிகள்
23.கந்தர்வ கோட்டை குறவர்கள்
24.கந்தர்வ கோட்டை கள்ளர்கள்
25.இஞ்சிக் குறவர்கள்
26.ஜோகிகள்
27.ஜம்பவனோடை
28.காலாடிகள்
29.கல் ஒட்டர்கள்
30.குறவர்கள்
31.களிஞ்சி தாபி குறவர்கள்
32.கூட்டப்பால் கள்ளர்கள்
33கால குறவர்கள்
34.கலவதிலா போயர்கள்
35.கேப்மாரிகள்
36.மறவர்கள் 
37.மொந்த குறவர்கள்
38.மொந்த கொல்லா
39.முடலகம்பட்டி
40.நோக்கர்கள்
41.நெல்லூர்பேட்டை ஒட்டர்கள்
42.ஒட்டர்கள்
43.பெத்தபோயர்கள்
44.பொன்னை குறவர்கள்
45.பிரமலைக்கள்ளர்கள் 
46.பெரிய சூரியூர் கள்ளர்கள் 
47.படையாட்சி   
48.புன்னன் வேட்டுவ கவுண்டர்
49.சேர்வை
50.சேலம் மேல்நாடு குறவர்கள்
51.சேலம் உப்பு குறவர்கள்
52.சர்க்கரைத்தாமடை குறவர்கள்
53.சாரங்கபள்ளி குறவர்கள்
54.சூரமாரி ஒட்டர்கள்
55.செம்பநாடு மறவர்கள் 
56.தல்லி குறவர்கள்
57.தெலுங்குபட்டி செட்டிகள்
58.தோகமலைக் குறவர்கள் அல்லது கேப்மாரிகள்
59.தொட்டிய நாயக்கர்கள் 
60.உப்பு குறவர்கள் அல்லது செட்டி பள்ளி குறவர்கள்
61.ஊராளிக் கவுண்டர்கள்
62.வயல்பாடு அல்லது நவல்பட்டு கொரசாக்கள்
63.வடுவார்பட்டி குறவர்கள்
64.வலையர்கள்
65.வேட்டைக்காரர்
66.வெட்டா குறவர்கள்
67.வரகநேரி குறவர்கள்
68.வேட்டுவக் கவுண்டர்


நன்றி 
வரலாற்று ஆய்வாளர் மற்றும் எழுத்தாளர் ரா. மன்னர்மன்னன் அவர்களின் "வரலாற்றில் சில திருத்தங்கள் நூலில் உள்ள ஒரு கட்டுரையை" 


வரலாற்று பக்கங்கள் - II

வளரி வரலாறு   👈 Click above திருமங்கையாழ்வார் வரலாறு 👈 Click above அம்பலகாரர் / அம்பலம் வரலாறு 👈 Click above வாண்டையார் வரலாறு 👈 Click a...

இந்த வலைப்பதிவில் தேடு

என்னைப் பற்றி

எனது படம்
Contact: info.kallarkulavaralaru@gmail.com, தமிழகத்தில் வாழும் கள்ளர் மரபினர் முக்குலத்தோரில் ஒரு பிரிவினர் ஆவர். கள்ளர், மறவர், அகமுடையார் ஆகிய முக்குலங்களும் போர்த் தொழிலை அடிப்படையாக கொண்டு வாழ்ந்து வந்ததால் இந்த மூன்று சாதியினரும் முக்குலத்தோர் என்று அறியப்படுகின்றனர். இந்த மூன்று குலத்தினரும் "தேவர்" என்ற பொதுவான பெயரோடு அறியப்படுகிறார்கள். கள்ளர் மரபில் அறந்தாங்கி தொண்டைமான், புதுக்கோட்டை பல்லவராயர், புதுக்கோட்டை தொண்டைமான் மற்றும் பல சமீன்தார்களும், பெரு நிலவுரிமையாளர்களும் இருக்கின்றனர். (கள்ளர் படைப்பற்று - கள்ளர் நாடு - கள்ளர்த்தடி). கள்ளர் வரலாறு : வரலாறு என்றால் வந்த வழி என்று பொருள். வந்த வழி தெரியாதவர்களுக்குப் போகும் வழி புரியாது. வரலாற்றை நாம் நினைவு கூர்வதற்குக் காரணம் கடந்து போன ஈகங்களை எண்ணிக் கண்ணீர் விடுவதற்காகவும், நிகழ்த்தி விட்ட வீரங்களைச் சொல்லிப் பெருமை பேசுவதற்காகவும் அல்ல. வருங்காலத்திற்கு வழி சமைப்பதற்கு அந்த ஈகமும் வீரமும் வழிகாட்ட வேண்டும் என்பதற்காகத்தான். கள்ளர்களின் நான்கு முக்கிய பிரிவுகள் - ஈசநாட்டுக்கள்ளர் (திருச்சி, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை) : கிளைவழிக்கள்ளர் (சிவகங்கை) : அம்பல கள்ளர் / நாட்டார் கள்ளர் (சிவகங்கை, மதுரை) : பிறமலை கள்ளர் (மதுரை, உசிலமபட்டி, தேனி, கம்பம், திண்டுக்கல்)

வலைப்பதிவு காப்பகம்

பின்பற்றுபவர்கள்