திங்கள், 23 ஜூலை, 2018

அஜீஸ்நகர் ஒரு வரலாறு


உளுந்தூர்பேட்டை அஜீஸ் நகர் (செட்டில்மென்ட்) ஶ்ரீமாரியம்மன் ஆலய திருவிழாவில்  தலைவர் திரு G.M.ஶ்ரீதர் வாண்டையார்





ஓர் ஊர் ஆரம்பித்து நூறு வருடங்கள் ஆகிறது. அதற்கு ஒரு பிரம்மாண்டமான விழா என்றால் யாருக்கும் அந்த ஊரைப்பார்க்க ஆவல் வரும்! .அப்படியான ஊர் உளுந்தூர்பேட்டை அருகில் உள்ள "அஜீஸ் நகர்"! இங்கு குற்றப்பரம்பரையினர் என்று பழிவாங்கப்பட்ட 200 குடும்பங்கள் இருக்கின்றன. 100 ஆண்டுகளுக்கு முன்பு மதுரையில் இருந்து ஆங்கிலேய கலெக்டர் மார்டின் வின்ஸ்லோவால் மதுரையில் இருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டவர்கள்.


1911 ஆம் ஆண்டு, மதுரையிலிருந்து கால்நடையாக 400 கி.மீ. அழைத்துச் சென்று அப்போதைய தென்னார்க்காடு மாவட்ட கலெக்டர் அஜீஸ்தீனிடம் மதுரை மாவட்ட வெள்ளையர் விசுவாசி காவலர்கள் ஒப்படைத்தனர். விருத்தாசலம் தாலுகா, கம்மாபுரத்தில் 1377 ஏக்கர் வனத்துறை நிலத்தில் இவர்கள் குடியமர்த்தப்பட்டனர். இது மதுரைப்பகுதியில் இவர்கள் வைத்திருந்த நிலத்தில் பத்தில் ஒரு பங்கு கூட கிடையாது. இவர்களிடம் இருந்து நகைகளையும்,மதுரைக்காவல் உரிமையையும் பெற்றுக்கொண்டு அதற்கு பரிசாக (?) குடிசைவீடுகளை அந்த வனத்தில் கட்டிக்கொடுத்தனர். ஊரைச்சுற்றி முள்வேலி, ஒவ்வொருவருக்கும் சிறிது விவசாய நிலம், இப்படி ஓரிடத்தில் திறந்தவெளி சிறைச்சாலைபோல அடைக்கப்பட்டனர் அம்மக்கள். இவ்வாறு இவர்களின் குடியேற்றப்பகுதிகள் 5இடங்களில் உருவாக்கப்பட்டன. ஆந்திராவில் 2இடங்களும், தமிழகத்தில் ஓட்டேரி, பம்மல், மற்றும் நெய்வேலி அருகில் கம்மாபுரத்திலும் குடியமர்த்தப்பட்டனர்.
தங்கள் சொந்த மண்ணில் இருந்து வேரோடு பிடுங்கி எறியப்பட்டவர்கள், தங்கள் மண்ணிலேயே அகதிகளைப் போல குடியமர்த்தப்பட்ட ஏழு நகர்களில் 'அஜீஸ்நகரும்' ஒன்று. கம்மாபுரம் குடியிருப்புதான் நெய்வேலி நிலக்கரி தொழிற்சாலை தொடக்கத்திற்குபின் உளுந்தூர்பேட்டை அருகில் உள்ள அஜீஸ்நகருக்கு மாற்றப்பட்டது.

காலங்காலமாக துணிச்சலையும், அடுத்தவர்களுக்கு உதவுதலையும் தலையாய அறமாகக்கொண்ட மதுரைபிரமலைக்கள்ளர்கள். இரவுநேரத்தில் கண்துஞ்சாது அடைக்கலம் கொடுக்கப்பட்ட பொருட்களை பாதுகாத்த காவற்கூட்டம். சேர சோழ பாண்டியர் காலத்தில் உயர்ந்த அந்தஸ்திலும், தான் சார்ந்த அரசனைச்சுற்றி பாதுகாக்கும் தற்கொலைப்படையாகவும் இருந்து வந்த உன்னத சமூகத்தின் நிலை காலச்சக்கரத்தின் சுழற்சியில் தடுமாற்றம் கண்டது.

யார் இந்த குற்றப்பரம்பரையினர்? அவர்கள் மட்டும் இந்த நாட்டில் என்ன குற்றம் செய்தார்கள்? இந்த மண்ணின் மக்களின் வாழ்வுமுறை அறியாத ஆங்கிலேய ஏகாதிபத்தியம் சுமத்திய குற்றப்பரம்பரை என்னும் அடையாளம் ஏன் ஏற்பட்டது? சுதந்திரம் அடைந்து 69 ஆண்டுகளுக்கு பிறகும் இந்த மக்கள் தங்கள் சொந்த சாதி சனங்களை விட்டு ஏன் வாழ்கிறார்கள்? போன்ற கேள்விகள் ஒவ்வொருவருக்குள்ளும் எழுவது இயல்பு.

ஆங்கிலேயரும் மதுரையும் !

ஆங்கிலேயர்கள் 1800 களில் மதுரைப்பகுதியை தங்களது முழுக்கட்டுப்பாட்டில் கொண்டு வந்தனர். தங்கள் சொல்லை ஏன்? எதற்கு? நியாயம், அநியாயம் என்று சிந்தனை செய்யாத கிளிப்பிள்ளை காவல்துறையை அப்போது பிரிட்டிஷ் அரசு ஏற்படுத்தியது. அதுவரை ஸ்தலக்காவல், தேசக்காவல், பகுதிக்காவல் உரிமைகள் பெற்றிருந்த ஓரினம் தனது பாரம்பரிய கட்டுமானத்தில் விரிசல்கள் கண்டது. 1870 ஆம் ஆண்டு வரையிலும் பிரிட்டிஷ் போலீஸ் துறையால் தீர்க்கமுடியாத குற்றங்களை சில பிரமலைக்கள்ளர்கள் கண்டுபிடித்து கொடுத்தனர். அதற்காக அவர்கள் பெற்றுக் கொண்ட பரிசிற்கு பெயர்தான் துப்புக்கூலி.

1870 ஆண்டு வாக்கில் பிரிட்டிஷ் ஏகாதிபத்திய அதிகாரம் பெற்று விட்ட நவீன ஏவல் துறை. (காவல்துறை?)குற்றம் நடந்தால் கண்டுபிடிக்க திணறியது. இதனால் குற்றவாளிகள் அல்லாத நிரபராதிகள் குற்றம் சுமத்தப்பட்டு சிறைகளில் அடைபட்டனர். பின்னர் அவர்கள் குற்றம் புரியவில்லை என விடுவிக்கப்பட்டனர். இப்படி தடுமாறிய நேரத்தில்தான் தமிழர்கள் தங்களது பழங்காலமுறை காவல்தொழிலை திறமையான முறையில் நடத்தி வந்தனர். இதனால் ஆங்கிலேய அதிகாரிகள் எரிச்சலுற்றனர். இதனால் பல போலீஸ் சூப்பிரெண்டுகளும், கலெக்டர்களும் பிரமலைக்கள்ளர் சமூகத்தின் மீது காழ்ப்புணர்வு கொண்டனர்.

இந்த நேரத்தில்தான் இந்தியா முழுவதும் ஆங்கிலேயர் திட்டமிட்டு ஒரு செயலை அரங்கேற்றினர். கோள்சொல்லிகளின் மூலமாக தங்களுக்கு கிடைத்த தகவல்களைவைத்து 1871ல் குற்றப்பரம்பரை சட்டம் என்று ஓர் சட்டத்தை கொண்டுவந்தனர். இதில் 167 இனங்களின் மேல் நடவடிக்கை எடுத்தனர். ஒருங்கிணைந்த இந்தியா, பர்மா,இலங்கை, பகுதிகளில் வாழ்ந்த இந்த இனங்களை "குற்றப்பரம்பரையினர்" என ஆங்கிலேயர்கள் அறிவித்தனர். சட்டத்தை இயற்றிவிட்டு பல ஆண்டுகளுக்கு அமைதிகாத்தனர்.

1906 ஆம் ஆண்டு மதுரைப்பகுதியில் ஏற்பட்ட சில முக்கியமான களவுகளை கண்டுபிடிக்க முடியாத பிரிட்டிஷ் போலீஸ் கையைப்பிசைந்தது. துப்புக்கூலி கொடுத்து உண்மைக்குற்றவாளிகளை கண்டுபிடிக்க அவர்களின் அதிகார மமதை இடம்தரவில்லை. மாவட்ட காவல் கண்காணிப்பாளர். ஜி.இ.பாட்ரீஸிடம் பிரமலைக்கள்ளர் பற்றி கோள் மூட்டப்பட்டது. அவர் கலெக்டரிடம் பிரச்சினைக்கு தீர்வு காணவேண்டும். என கேட்டுக்கொண்டார்.1871ல் உருவாக்கப்பட்டு 34 ஆண்டுகளாக ரிக்கார்டு தூண்களில் தூங்கிய சட்டப்புத்தகத்தை அன்றைய மதுரை கலெக்டர் மார்டின் வின்ஸ்லோ தூசிதட்டி எடுத்தார்.

அதுவரை குற்றப்பரம்பரை என்றால் என்ன என்பது தெரியாத காலங்காலமாக பிரமலைக்கள்ளர்கள் சமூகத்தினோடு வாழ்ந்து வந்த, பிராமணர்கள், முதலியார்கள், பிள்ளைமார்கள், ஆதிதிராவிடர்கள் போன்ற பிற சாதியினர் பிரமலைக்கள்ளர்களை குற்றப்பரம்பரையினர் என்று சொல்லவில்லை. ஆனால் 200 ஆண்டுகளாக வாணிபம் செய்ய வந்து இந்தியாவைக்கொள்ளையடித்த ஆங்கிலேயர் சில சமூகங்களுக்கு குற்றப்பரம்பரை என பட்டம் கட்டியதுதான் கொடுமை. எந்த விசாரணையும் இன்றி விளக்கமும் இன்றி 250 குடும்பங்கள் திருமங்கலம் தாலுகாவிலிருந்து வெளியேற ஆங்கிலேய கலெக்டர் மார்டின் வின்ஸ்லோ உத்தரவிட்டார்.

எங்கே போகிறோம் என்று தெரியாது!... பினாங்கா? அந்தமானா? என்று மருகிய 250 குடும்பங்கள் பச்சிளம் குழந்தைகளோடும், தமது குழந்தைகளைப் போல நேசித்த கால்நடைகளோடும், தங்கள் எதிர்காலம் என்னவென்று அறியாமல் கதிகலக்கத்தோடு பிரிட்டிஷ் ஏவல் துறையால் பலத்த பாதுகாப்போடு மதுரையில் இருந்து வடக்கு திசையை நோக்கி பயணத்தை ஆரம்பித்தது. புறப்படும்முன் பலர் தத்தம் குலதெய்வம் பிடிமண்ணையும், சிலர் குலதெய்வம் சிலையையும், கையில் எடுத்துக்கொண்டனர். ஆனால் அந்த குலதெய்வம் மட்டுமே இனி அவர்களுக்கும் மதுரைக்கும் இருக்கும் பந்தம் என்பதை அவர்கள் அறிந்திருக்கவில்லை.அவர்களுக்கு தத்தம் குதிரைகளையோ, வண்டிகளையோ பயணத்திற்கு பயன்படுத்த ஆங்கிலேயர் அனுமதி மறுத்தனர்.

தென்னார்க்காடு கலெக்டர் அஜீஸ்தீனிடம் மதுரை கலெக்டர் மார்டின் வின்ஸ்லோ தான் அனுப்பிய குடும்பங்கள் பற்றிய தகவல்களை அளித்தார். அனைத்தையும் இழந்து வறண்டு போய் வந்திருந்த மக்களுக்கு அவர்கள் இனி வாழப்போகும் பகுதியாவது அதிக ஈரமானதாக இருக்கட்டும் என்று நிலத்தினின்று பீறிட்டு வருகிற ஆர்ட்டீசியன் நீரூற்றுகளைக் கொண்ட பகுதியை இம்மக்களுக்கு வாழிடங்களாக அளித்தார், பிரிட்டிஷ் கலெக்டர். அஜீஸ்தீன். ஆங்கிலேய அதிகாரி ஏடன் இவர்களுக்கான பொறுப்பாளராக நியமனம் செய்யப்பட்டார்.

கிறிஸ்தவ பிரிட்டிஷ் மதபோதகர்களால் இவர்களுக்கான கல்வி அளிக்கப்பட்டது. கல்வியுடன் இவர்கள் கட்டாய மதமாற்றத்திற்கும் சிலர் உள்ளாயினர். மதம்மாற மறுத்தவர்களின் நிலை பரிதாபமாக இருந்தது. இந்த நிலை அவர்களுக்கு திருவேங்கடாச்சாரி எனும் பொருப்பாளர் வரும்வரை தொடர்ந்தது. திருவேங்கடாச்சாரி பொறுப்பாளராக பதவியேற்றதும் மதமாற்றத்தை தடுத்து நிறுத்தினார். இது அவர்களை இந்துக்களாக தொடர வழிவகுத்தது. பின்னாளில் இவர்கள் இருக்கும் இடம் நிலக்கரி கொண்ட பெரும் புதையல் என்று கண்டறிந்து அவர்களிடம் அந்நிலம் நெய்வேலி நிலக்கரி தொழிற்சாலை அமைய கையகப்படுத்தப்பட்டது. இவர்களுக்கான புதிய "அஜீஸ்நகர் " ஒன்றும் தோற்றுவிக்கப்பட்டது. நெய்வேலி நிலக்கரி தொழிற்சாலை அமைய நிலம் கொடுத்ததால் இவர்களுக்கு அந்நிறுவனத்தில் பணியாற்றும் வாய்ப்பு கிட்டியது. சோகத்திலும் உருவான ஒரே மகிழ்ச்சிகரமான விடயம் இது மட்டுமே. இன்றைக்கு ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு இம்மக்கள் தமது நூற்றாண்டை கொண்டாடினர். இவர்கள் தமது இருப்பிடங்களில் ஆங்கிலேயர்களால் அனுபவித்த கொடுமைகளை இந்த ஒரே பதிவில் சொல்லிவிட முடியாது.

இம்மக்கள் தமது செட்டில்மெண்ட் பகுதிகளான மற்ற ஆறுபகுதிகளில் பெண் கொடுக்க எடுக்க செய்கின்றனர். தம் முன்னோர்கள் வாழ்ந்த மதுரை பூமியை மனதிற்குள் நினைத்து புழுங்கிக்கொண்டே மாறாத வடுக்களுடன் வாழ்கிறார்கள்.


நன்றி:

அன்பன்: கி.ச.முனிராஜ் வாணாதிராயன்.






சால்வேசன் ஆர்மி (Salvation Army) என்ற தன்னார்வு அமைப்பு

குற்ற பழங்குடியினரை நல்வழி படுத்த 3 செட்டில்மெண்ட்க்கு வந்த ரட்சனியப்படை என்ற சால்வேசன் ஆர்மி (Salvation Army) என்ற தன்னார்வு அமைப்பு.

1865-ம் ஆண்டு லண்டனில் ஜெனரல் வில்லியம் பூத் எனபவரால் ரட்சனியப்படை என்ற சால்வேசன் ஆர்மி (Salvation Army) என்ற தன்னார்வு அமைப்பு நிறுவப்பட்ட து.


இந்தியாவில் 1882-ல், முதல் ஜெனரல் வில்லியம் பூத் என்பவரால் ரட்சினியப் படையை நிறுவினார், 1908 - ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட செட்டில்மெண்ட் குடியிருப்பு சட்டத்தின் படி, இந்த சால்வேசன் ஆர்மி, அஜீஸ்நகர், பிரிசிலிநகர், பம்பல் பசும்பொன் நகர் ஆகிய மூன்று செட்டில்மெண்ட் குடியிருப்பை பார்வையிட்டது.

இந்த சால்வேசன் ஆர்மி, மிலிட்டரி போன்று சீருடை, கொடி, பதவிகளைக் கடைப்பிடித்து வில்லியம் பூத், ஜெனரல் என்று தன்னை அழைத்துக் கொண்டு, மிடுக்கான சீருடை அணிந்து கொள்வார். இவரது மனைவி கேத்தரினுக்கு மிலிட்டரி அம்மா (Army Mother) என்ற பதவி. இவரது மூத்த மகன் வில்லியம் பிராம்வெலுக்கு (William Bramwell) சால்வேசன் ஆர்மியில் முக்கிய பதவி. இந்த படையில் கேப்டன், மேஜர், ஜெனரல், சீப் செகரட்டரி, கமிஷனர் என்ற பதவிகள். பெண்களும் பதவியில் இருந்தனர் என்பது குறிப்பிட தக்கது.

அஜீஸ்நகர் செட்டில்மெண்ட்டில் 1916-1919 -ம் ஆண்டுகள் வரை வில்லியம் பிராட்வெல்பூத் உத்தரவால் அனுப்பட்ட சால்வேசன் ஆர்மி, குற்றப்பரம்பரை குடியிருப்பில் தங்கி குறிப்பாக அங்குள்ள மக்களையும், குழந்தைகளை கடுமையான ஒழுக்கம்,கல்வி,தொழிற் கல்வி, பேண்டு வாசிக்கவும் கற்றுக் கொடுத்தனர். அந்த கால கட்டத்தில் அஜீஸ்நகர் பேண்டு, கவர்னர் மற்றும் உயர் அதிகாரிகள் வருகையின் போதும் குறிப்பாக அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் நடைபெறும் முக்கிய நிகழ்ச்சியில் இந்த பேண்டு வாத்தியம் மேற்கிந்திய இசையில் வாசிப்பது மிக,மிக சிறப்பு பெற்றது என்பது குறிப்பிட தக்கது.


அதேபோல் சென்னை பல்லாவரத்தில் உள்ள பம்பல்(பசும்பொன் நகர்) செட்டில்மெண்ட், சென்னை ஓட்டேரி அருகே உள்ள பிரிசிலிநகர் செட்டில்மெண்ட்டிலும் சால்வேசன் ஆர்மி படை சென்னை தலைமையிடத்திலிருந்து, அடிக்கடி வந்து பார்வையிட்டு கடுமையான ஒழுக்கம்,கல்வி, தொழிற்கல்விக்கு முக்கியத்துவம் அளித்தனர். மேலும் மதமாற்றதிலும் ஈடுப்பட்டனர்.

பிரிசிலிநகர் செட்டில்மெண்ட் மற்றும் பம்பல்(பசும்பொன் நகர்) செட்டில்மெ ண்ட்டை சேர்ந்தவர்கள், சால்வேசன் ஆர்மியிடம் நம்பிக்கைக்கு உரியவராகவும் அன்புக்கு பாத்திரமானவர்களாகவும் இருந்த காரணத்தால், சென்னை வேப்பேரி அருகே உள்ள பழைய டவுட்டனில் Salvation Army அலுவலகத்தில் ஆண் பணியாளராகவும் மற்றும் பெண் பணியாளராகவும் பணிபுரிந்து வந்தனர்.

அதற்கு ஆதாரமாக 1941- ம் ஆண்டு சால்வேசன் ஆர்மியில் பணிபுரிந்த ஆண், பெண் அதிகாரிகள் கொண்ட குழுவினர்களுடன்,பிரிசிலிநகர், பம்பல் பசும்பொன் நகர் செட்டில்மெண்ட்டை சேர்ந்த பணியாளர் எடுத்துக் கொண்ட புகைப்படம்.

*புகைப்படத்தில் நிற்பவர்கள் தாயார் அம்மாள், சந்திரசேகரன்,தங்கவேலு, ராஜம்பாள். கீழே அமர்ந்து இருப்பவர்கள் அம்மாகண்ணு,பூங்காவனம், ஜெபமணி, நல்லம்மாள்.

இந்த வரலாற்று புகைப்படத்தை வழங்கியவர் பிரிசிலிநகர் செட்டில்மெண்ட் அண்ணன் R. அண்ணாதுரை, முன்னாள் தலைவர், பொதுநலச்சங்கம் மற்றும் சென்னை தி.நகர் பசும்பொன் நுண்கலைக் கழகம் முன்னாள் செயலாளர் மற்றும் இந்நாள் இணை செயலாளர் அவர்கள்.*

தொகுப்பு.

பி.கே.துரைமணி,
சமூக ஆர்வலர்
அஜீஸ்நகர் செட்டில்மெண்ட்
விழுப்புரம் மாவட்டம்.




வரலாற்று பக்கங்கள் - II

வளரி வரலாறு   👈 Click above திருமங்கையாழ்வார் வரலாறு 👈 Click above அம்பலகாரர் / அம்பலம் வரலாறு 👈 Click above வாண்டையார் வரலாறு 👈 Click a...

இந்த வலைப்பதிவில் தேடு

என்னைப் பற்றி

எனது படம்
Contact: info.kallarkulavaralaru@gmail.com, தமிழகத்தில் வாழும் கள்ளர் மரபினர் முக்குலத்தோரில் ஒரு பிரிவினர் ஆவர். கள்ளர், மறவர், அகமுடையார் ஆகிய முக்குலங்களும் போர்த் தொழிலை அடிப்படையாக கொண்டு வாழ்ந்து வந்ததால் இந்த மூன்று சாதியினரும் முக்குலத்தோர் என்று அறியப்படுகின்றனர். இந்த மூன்று குலத்தினரும் "தேவர்" என்ற பொதுவான பெயரோடு அறியப்படுகிறார்கள். கள்ளர் மரபில் அறந்தாங்கி தொண்டைமான், புதுக்கோட்டை பல்லவராயர், புதுக்கோட்டை தொண்டைமான் மற்றும் பல சமீன்தார்களும், பெரு நிலவுரிமையாளர்களும் இருக்கின்றனர். (கள்ளர் படைப்பற்று - கள்ளர் நாடு - கள்ளர்த்தடி). கள்ளர் வரலாறு : வரலாறு என்றால் வந்த வழி என்று பொருள். வந்த வழி தெரியாதவர்களுக்குப் போகும் வழி புரியாது. வரலாற்றை நாம் நினைவு கூர்வதற்குக் காரணம் கடந்து போன ஈகங்களை எண்ணிக் கண்ணீர் விடுவதற்காகவும், நிகழ்த்தி விட்ட வீரங்களைச் சொல்லிப் பெருமை பேசுவதற்காகவும் அல்ல. வருங்காலத்திற்கு வழி சமைப்பதற்கு அந்த ஈகமும் வீரமும் வழிகாட்ட வேண்டும் என்பதற்காகத்தான். கள்ளர்களின் நான்கு முக்கிய பிரிவுகள் - ஈசநாட்டுக்கள்ளர் (திருச்சி, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை) : கிளைவழிக்கள்ளர் (சிவகங்கை) : அம்பல கள்ளர் / நாட்டார் கள்ளர் (சிவகங்கை, மதுரை) : பிறமலை கள்ளர் (மதுரை, உசிலமபட்டி, தேனி, கம்பம், திண்டுக்கல்)

வலைப்பதிவு காப்பகம்

பின்பற்றுபவர்கள்