பாண்டி நாட்டிற்குற்பட்ட மதுரை மாவட்டத்தில் செக்கானூரணி அருகாமையில் சொரிக்கநாயக்கன்பட்டி. தற்பொழுது சொரிக்காம்பட்டி என மாறியது. செக்காணுரணியிலிருந்து திருமங்கலம் செல்லும் வழியில் அமைந்துள்ளது இந்த சொரிக்காம்பட்டி.
கடந்த 400 ஆண்டுகளுக்கு முன்பு சொரிக்காம்பட்டி கிராமத்தில் கள்ளர் குடியில் கருத்தமாயன் தேவர் என்ற பெரிய செல்வந்தர் வாழ்ந்து வந்தார். அவருக்கு ஏராளமான நிலபுலன்கள் இருந்தது. அவருக்கு நான்கு ஆண் பிள்ளைகள், அதில் கடைசி மகன் அழகாத் தேவன்.
அவன் கட்டழகனாகவும் ஜல்லிக்கட்டு போன்ற வீரவிளையாட்டுகளில் மிகவும் கெட்டிக்காரனாகவும் இருந்து வந்தான். பணக்கார குடும்பத்தில் பிறந்திருந்ததனாலும், கடைசிப் பிள்ளையாக இருந்ததினாலும் பொறுப்பற்றவனாக விளையாட்டுத் தனமாக சுற்றிக்கொண்டிருந்தான். அவன் தனது நண்பன் தோட்டி மாயாண்டியுடன் சேர்ந்து ஊர் ஊராகச் சென்று மாடு பிடிப்பதிலும், சேவல் சண்டை போடுவதிலுமே தனது பெரும் பங்கு நேரத்தைக் கழித்து வந்தான்.
தனது கடைசிப்பிள்ளை இப்படி பொறுப்பற்றவனாகச் சுற்றிக் கொண்டிருப்பதைப் பார்த்து வருத்தமடைந்த கருத்தமாயன் தேவர் அவனுக்கு ஒரு திருமணம் செய்துவிட்டால் திருந்திவிடுவான் என நினைத்து அவனுக்கு பெண் பார்க்க விரும்பினார். அக்காலத்தில் தனக்கு நிகரான செல்வந்தனாக இருந்த கீழக்கோயில்குடி கருத்தமலை தேவர்க்கு ஒய்யம்மா என்ற பெண் இருப்பதை கேள்விப்பட்டு அந்த வீட்டில் சென்று பெண் கேட்பது என முடிவு செய்கிறார். அதற்காக ஏழு வண்டி மாடுகளைப் பூட்டி அதில் வாழைத்தார்களையும், வெற்றிலைகளையும், தென்னங்காய்களையும் மூட்டை, மூட்டையாக எடுத்துக் கொண்டு தனது மகனையும் அழைத்துக் கொண்டு கீழக்கோயில்குடி செல்கிறார்.
பெரிய செல்வந்தராகக் கருதப்பட்ட சொரிக்காம்பட்டி கருத்தமாயன் தேவர் தனது வீட்டிற்குப் பெண் கேட்டு வருகிறார் என்பதை அறிந்து மகிழ்ச்சியடைந்து கருத்தமலை தேவர் வருகின்றவர்களைக் அக்கால முறைப்படி கொட்டுமேளத்துடன் வரவேற்று எல்லோருக்கும் வெற்றிலை பாக்கு கொடுத்து உபசரிக்கிறார்.
பிறகு எல்லோரும் சமுக்காளம் விரித்து அமர்ந்து ஒருவருக்கொருவர் வெற்றிலை வைத்துப் பறிமாறிக் கொள்கின்றனர்.
வந்திருக்கின்ற மாமன் மைத்துணர்களுக்கெல்லாம் வணக்கம். உங்கள் வீட்டில் சம்பந்தம் செய்வதில் எனக்கு முழுச் சந்தோசம். இப்படி நாம் விருப்பப்பட்டாலும் வாழப்போகின்ற சின்னஞ்சிறுசுகளை கேட்கவேண்டும் என கருத்தமலை தேவர் கூறியுள்ளார் மேலும் தன்னுடைய மகள் சம்மதித்தா எனக்கு எந்த திருமணத்தில் எவ்வித ஆட்சேபனையும் இல்லை என்கிறார்.
கருத்தமாயன் தேவர் தனது மகள் அழகாத்தேவனைப் பார்க்கிறான். அதற்கு அவன், தான் பெண்ணை ஒருமுறை பார்த்துவிட்டுச் செல்கிறேன் என்கிறான். பெண்ணைச் சபைக்கு அழைக்கின்றார்கள். அப்பெண்ணைப் பார்த்தவுடன் அந்த அழகில் மயங்கிவிடுகிறான் அழகாத்தேவன். தனக்கு விருப்பம் உள்ளது எனக்கூறாமல் ஒரு புன்சிரிப்பை மட்டும் பார்த்துவிட்டு தன்னுடைய சம்மதத்தை தெரிவிக்கிறான். தன் மகனுக்கு பெண் பிடித்துப் போய்விட்டது என்பதை உணர்ந்து கொண்ட கருத்தமாயன் தேவர் எங்களுக்கு பூரண சம்மதம், பெண்ணை ஒரு வார்த்தை கேட்டுங்கப்பா என்கிறார்கள்.
அதனைக் கேட்டதும் ஒய்யம்மாள் சபையைப் பார்த்து அய்யா பெரியோர்களே எங்கப்பன் கழுதையை கட்டச்சொன்னாலும் கட்டிக்கிடுவேன். ஆனால் எனக்கு கணவனாக அமையவேண்டும் என்றால் எங்க வீட்டில் ஏழு காளைகள் வளர்த்து வருகிறோம். அந்தக்காளையை யார் அடக்குகிறார்களோ அவனைத்தான் திருமணம் செய்வேன் எனக்கூறியுள்ளார் ஒய்யாரம்மாள். அதே வேளையில் அந்தக்காளையை அடக்காவிட்டால் அதாவது தோல்வி அடைந்தால் அக்காலமுறைப்படி காலமெல்லாம் பண்ணை அடிமையாக எங்க வீட்டில் பண்ணைக்கு இருக்கனும் எனச் சபையோரைப் பார்த்துக் கூறுகிறாள். இதைக்கேட்டு சபையோர் அதிர்ச்சி அடைகின்றனர். ஒய்யாரம்மாள் அழகில் மயங்கிய அழகாத்தேவன் அந்தச்சவாலை ஏற்றுக்கொள்கிறான்.
வருடந்தோறும் கீழக்கோயில்குடி, செக்காணூரணி, அலங்காநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் ஜல்லிக்கட்டு நடைபெறுவது வழக்கம். அந்த ஜல்லிக்கட்டிற்குரிய நாள் வருகிறது. அப்போது அழகாத்தேவன் ஜல்லிக்கட்டுகளை அடக்குவதற்கு தயாராகின்றான். அவனுடன் அவனுடைய நண்பன் தோட்டியையும் அழைத்து வாடிவாசலை நோக்கிச்செல்கிறான். செல்லும் முன் தான் பெற்ற தாயிடம் விடைபெற்றுக்கொண்டு அழகாத்தேவன் புறப்படும் போது தாய் ஒரு வார்த்தை கூறுகிறாள். நீ பிடித்த மாட்டை மறுபடியும் திருப்பிப் பிடிக்காதே என எச்சரிக்கை விடுத்து நெற்றியில் திலகமிட்டு வழியனுப்புகிறாள். தன் தாயைப் பார்த்து அழகாத்தேவன், தாயே நான் ஏழு காளைகளையும் அணைத்து விடுவேன். ஒரு வேளை எனக்கு மரணம் நேர்ந்தாலும் நேரலாம். அதனால் எனக்கு வாய்க்கரிசி போட்டு அனுப்பி வை என்றான். அவன் தாய் அவனுக்குக் கும்பாவில் வாய்க்கரிசி எடுத்து வாய்க்கரிசி கொடுத்து வழியனுப்புகிறாள்.
அழகாத்தேவனும், அவனது நண்பன் தோட்டி மாயாண்டியும மஞ்சள் ஆடை தரித்து வாடிவாசல் முன்பு நிற்கின்றனர். ஊர் சனங்களை மட்டுமல்லாமல் எட்டு நாட்டு சனங்களும் கூடி இருக்கின்றனர். முதல் காளை வாடிவாசலில் இருந்துது சீறிப்பாய்கிறது. அழகாத்தேவன் வாடிவாசலின் வடக்குப் பக்கத்திலிருந்து தாவி அதன் திமில் மீது விழுந்து அதனைப் பற்றி அமுக்குகிறான். அவனது நண்பன் தோட்டி மாயாண்டி வாடி வாசலின் தெற்குப் பக்கமிருந்து தாவி அதன் வாலை பற்றி இழுக்கிறான். இவ்வாறு ஆறு காளைகளையும் அழகாத்தேவன் அடக்கிவிடுகிறான்.
கடைசியாக ஏழாவது காளை சீறிப் பாய்கிறது. அதேபோல் அழகாத்தேவன் அதன் திமில் மீது விட்டு வாடிவாசலைத்த தாண்டி அருகிலுள்ள வயக்காட்டிற்குள் சென்றுவிடுகிறது. அழகாத்தேவன் அதனை விரட்டிச் சென்று அடக்க முயலும்பொது அது கொம்பினால் முட்டி அவனது வயிற்றைக் கிழித்து விடுகின்றது. அவன் குடல் சரிந்து வெளியே வருகிறது. சரிந்த குடலை உள்ளே தள்ளி விட்டு ஒரு கையால் தனது வயிற்றைப் பிடித்து அதனை அடக்கி விடுகிறான். இவ்வாறு நிபந்தனைப்படி எல்லாக்காளைகளையும் அவன் அடக்கவிட்டதனால் அவனுக்கு பெண் கொடுக்க சம்மதிக்கின்றனர்.
கொம்பு பட்டு காயம் அடைந்துள்ளதால் அக்காயங்களுக்கு மருந்து போட்டு அதன் பின்னர் திருமணத்தை முடிக்க முடிவு செய்கின்றனர்.
இதற்கிடையில் ஒய்யம்மாளின் சகோதர்கள் தங்களது காளைகளை அணைந்து ஒருவன் தங்கள் தங்கையை மணந்து கொண்டு செல்வதா எனப் பொறாமை அடைந்து அவனது புண்ணிற்கு மருந்து கட்டும் மருத்துவச்சியிடம் பணத்தைக்கொடுத்து மருந்திற்கு பதிலாக விஷத்தை வைத்து கட்டிவிடச் சொல்கின்றனர். அவளும் விஷச்செடியை அரைத்து மருந்து எனச்சொல்லி கட்டிவிடுகிறாள். அதனால் புண் புரையோடி சலம் கட்டி மிகவும் பெரிதாக வீங்கி விடுகிறது.
தனக்கு ஏதோ நேரப் போகிறது என்பதனை உணர்ந்து கொண்ட அழகாத்தேவன் தன்னுடன் உடன்பிறந்த சகோதர்களை அழைத்து நான் இறந்துவிடுவேன். அதனால் என்னுடைய நினைவாக எனக்கு கல்லில் சாமிசிலை வடித்து என்னை வணங்குங்கள் எனக்கூறி இறந்து விடுகிறார்.
பிறகு காலம் செல்ல செல்ல அழகாத்தேவன் விஷம் வைத்து கொல்லப்பட்டதாக ஒய்யம்மாளுக்கு தகவல் தெரியவரவே, அவளும் அக்கால வழக்கப்படி உடன்கட்டை ஏறி தன்னுயிரை மாய்த்துக்கொள்கிறாள்.
அழகாத்தேவன் இறந்ததும் அவன் புகழ் பட்டி தொட்டி எல்லாம் பரவுகிறது. விக்கிரமங்கலம் ஜல்லிக்கட்டில் அழகாத்தேவனுக்கும் தோட்டி மாயாண்டிக்கும் சிலை செய்து வைத்துவிட்டுத்தான் ஜல்லிக்கட்டு ஆரம்பிக்கின்றனர்.
அழகாத்தேவன் நினைவாக அவனது பரம்பரையில் வந்தோர், மதுரை மாவட்டம் செக்கணூரணிக்கு அருகிலுள்ள சொரிக்காம்பட்டியில் 1952 ஆம் ஆண்டு ஊர் மக்கள் எல்லாம் ஒன்று கூடி அவனுக்கு ஒரு தனிக்கோயில் கட்டி வணங்கி வருகின்றனர்.
கருவறையில் காளையோடு அழகாத்தேவன் நிற்க... அக்கோயிலுக்கு வெளியே அமைக்கப்படட நினைவு வளைவில் நண்பன் தோட்டி மாயாண்டிக்கும் சிலை எழுப்பியுள்ளனர். இன்றும் நாம் காணலாம்.
கீழக்குயில்குடிக்காரர்களிடம் சொரிக்காம்பட்டிக்காரர்கள் எந்தவித மண உறவோ, கொடுக்கல் வாங்கலோ இப்போதும் வைத்துக்கொள்வதில்லை. இந்த மரபு காலங்காலமாகத் தொடர்கிறது.
மதுரை மாவட்டத்தில் எங்கு ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டாலும், குறிப்பாக அலங்காநல்லூர், பாலமேடு மற்றும் அவனியாபுரம் பகுதிகளில் சாமி மாடு என்று முதலாவாக ஒன்றை அவிழ்த்து ஓடவிடுவார்கள்.
அதை யாரும் பிடிக்கக்கூடாது என்பது ஆண்டாண்டு கால மரபு. அந்த மாடு அழகாத்தேவன் நினைவாகவே அவிழ்த்துவிடப்படுகிறது என்பதுதான் கூடுதல் செய்தி.
பாட்டையா கோயில்
கோயில் பூசாரியாக இருக்கும் அழகு, இதைப் பற்றி நம்மிடம், 'சொரிக்காம்பட்டி கருத்தமாயத் தேவருக்கு நாலு ஆம்பளப்புள்ளைக. நாலாவதாப் பொறந்தவர்தான் அழகுத் தேவர். 'எந்த ஊரு ஜல்லிக்கட்டுலயும் அடங்காத மாடு இது... தைரியம் இருந்தாப் பிடிங்கடா’னு சொல்லி, சவால் விட்டு அவுத்து விடுற மாடுகளை மட்டும்தான் பிடிச்சு அடக்குவாரு.
அவர் நினைவாதான் கல்லறை கட்டி கும்பிடறோம். மாட்டுப்பொங்கல் அன்னிக்கு ஊர்ல உள்ள எல்லா மாடுகளையும் இந்தக்கோவிலுக்குக் கூட்டிட்டு வந்து குளிப்பாட்டி, பொங்கல் வெச்சு கும்பிடுவோம். அழகுத்தேவர் எங்க பாட்டனாருங்கறதால 'பாட்டையா கோவில்’னுதான் சொல்லுறோம். ஊருல பிறக்குற குழந்தை ஆண் குழந்தைனா... அழகு, அழகப்பன், அழகன்னும்; பெண் குழந்தைனா... அழகம்மாள், அழகின்னுதான் பேரு வைப்போம்'' என்றார்.
நானூறு ஆண்டுகால காதல் வரலாற்றை மதுரை மாவட்ட ஜல்லிக்கட்டு போட்டிகள் இன்றும் தழும்பாய் சுமந்து கொண்டிருக்கின்றன...
சொரிக்காம்பட்டி கிராம எல்லையில்...
தோட்டி மாயாண்டி காவல் நிற்க...
அழகாத்தேவன் கருவறையில் காளையோடு அருள்பாலித்துக் கொண்டிருக்கிறான்...
ஒய்யம்மாள் எங்கோ காற்றோடு காற்றாய்
இடம் - சொரிக்காம்பட்டி
கடவுள்கள் - காளை,
அழகாத்தேவன் மற்றும் தோட்டி மாயாண்டி
" விபூதி கிடைக்காது, ஆனால் வீர உணர்வுகள் தரும், கருவறையிலுள்ள எங்கள் ஜல்லிக்கட்டு சாமிகள்!