புதன், 20 ஜூன், 2018

கள்ளர் பசுபதி கோயில்



கள்ளர்களின் பட்டங்களான பசுபதி, பசும்படியார், பசுபதியார் என்பது சிவனின் (பசு=உயிரினங்கள் + பதி=தலைவன் ) மற்றொரு பெயர் ஆகும். 
மேலும் சங்க இலக்கியங்கள் "பசும்படி " என்பது மனங்கொண்ட ஒரு "இலை" என்று போற்றுகிறது. 

பசும் (பொன்) + படி (உலகம்) + உடையார் = பசும்படியுடையார் (அ)  பசும்படியார். திருக்குறளில்  "படி உடையார் பற்று அமைந்தக் கண்ணும்"  என்பதன் விளக்கமாக நிலம் முழுவதும் ஆண்டாரது செல்வம் தானே வந்து எய்திய இடத்தும்.




பஞ்சநதிசோழன் மரபில் வந்த மன்னன் பசுபோகசோழன். ஆவூர் தேவார சிவதலத்தை உருவாக்கி இராசதானியாகக் கொண்டவன். இவன் பெயர் பசுபதி என்றும் வழங்கலாயிற்று. ஆவடுதுறை, ஆப்பாடி, பசுபதிமங்கை (பசுபதிகோயில்) என்னுமூர்களையும், பசுபோக ஆறுஎன்னும் சிற்றாற்றையும் உண்டாக்கி அரசு புரிந்தான். இவன் மரபினர் பசுபதி, பசும்படி, பசும்பிடி என்னும் பட்டங்களை கொண்டனர் என்று “சூரியகுல கள்ளர் சரித்திரம்” குறிப்பிடுகிறது. பசும்படியார் இன்றும் சோழமண்டலத்தில் சிறப்புடன் வாழ்கின்றனர். தஞ்சாவூர் சாமியப்பா கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் முதல்வர் அன்பு பசும்படியார் ஆவார்.


தஞ்சாவூர் கும்பகோணம் சாலையில் தஞ்சாவூரிலிருந்து 14 கி. மீ. தொலைவில் அய்யம்பேட்டையை அடுத்துள்ள உள்ளது கள்ளர் பசுபதிகோயில்.

புள்ளமங்கை கோயில் உள்ள ஊரின் பெயர் வெள்ளாளப் பசுபதிகோயில், பசுமங்கை கோயில் உள்ள ஊரின் பெயர் கள்ளர் பசுபதிகோயில்.

கள்ளர் மரபினரின் வேங்கிராயர்கள் பங்களிப்பு

சக்கரமங்கை, அரியமங்கை, சூலமங்கை, நந்திமங்கை, பசுமங்கை (பசுபதி கோயில்), தாழமங்கை, புள்ளமங்கை ஆகிய ஏழும் சப்தமாதர்களும், சப்த ரிஷிகளும் வழிபட்ட சப்தஸ்தான தலங்கள் ஆகும்.

மங்கை என்ற தெய்வத்தை ஊரின் மத்தியில் அமைத்து அவ்வூர்களை மங்கலம் என்றபெயரில் அழைத்து தங்களின் முக்கிய ஆட்சி மைய்யங்களாக்கி அதிகாரப் பகிர்வுடந் ஆட்சி நடத்திய களப்பிர அரசர்கள் என்று ஆய்வாளர் உயர்திரு. பத்மாவதி குறிப்பிடுகிறார்.

கோச்செங்கட் சோழரின் திருப்பணிகளுள் ஒன்றாகக் கொள்ளத்தக்க கள்ளர்பசுபதி கோயில் என்றழைக்கப்படும் பசுபதீசுவரர் கோயில் நெடுஞ்சாலையின் வலப்புறத்திலும், புகழ்பெற்ற புள்ளமங்கலத்து ஆலந்துறையார் கோயில் பிரம்மபுரீசுவரர் என்ற புதுப் பெயருடன் நெடுஞ்சாலையின் இடப்புறத்திலும் அமைந்துள்ளன.


கள்ளர்களின் போர்த் தொழிலில் கொற்றத்தைத் தரும் கொற்றவை வழிபாட்டின் தொடர்ச்சியாக இங்குள்ள துர்க்கை - மகிஷாசுரமர்த்தினி உருவம் தனிச் சிறப்புடையதாகத் திகழ்கின்றது. கருங்கல் குடை நிழலில், எருமைத் தலைமீது நின்று, சங்கு சக்கரம் மற்றும் வாள், வில், கதை, சூலம், கேடயம், அங்குசம் முதலிய ஆயுதங்களையும் ஏந்தி இருபுறமும் கலைமானும் சிங்கமும் இருக்க; இருவீரர்கள் கத்தியால் தலையை அரிந்து தருவதுபோலவும், தொடையைக் கிழித்து இரத்த பலி தருவது போலவும் காட்சிதருகிறார். தரிபங்கியாய் ஒரு கையில் வில்லேந்தி, மற்றது அபயகரமாக மோதிர விரல் மடக்கிய முத்திரையுடன் பின்புறம் அம்பறாத்தூணி விளங்க, துர்க்காம்பிகை விளங்கும் கோலம் - இக்கோலம் இக்கோயிலுக்கே தனிச் சிறப்பைத் தருவதாகும்.



தமிழ்நாட்டிலுள்ள கொற்றவைச் சிற்பங்களிலே காலத்தால் முந்தியதாக வல்லம் குடைவரைச் சிற்பத்தினை உரைக்கின்றனர். அதற்கும் முந்நூறு ஆண்டுகள் பிந்தைய புள்ளமங்கைக் கொற்றவையானது நம்மிடமுள்ள சிறந்த கொற்றவைச் சிற்பங்களிலேயொன்று. தலையில் கரண்ட மகுடமும், நெற்றியிலே நெற்றிப் பட்டமும், செவிகளிலே குண்டலங்களும், முதுகின் பின்புறமிரு அம்பறாத்தூணியும், எட்டுக் கைகளிலே ஐந்தினில் வில்லும், கேடயமும், மணியும், வாளும், சூலமும் ஏந்தி எஞ்சியவற்றில் முத்திரை காட்டி, மார்பிலே கச்சிட்டு மேலே முத்துமாலை அணிந்து இடையிலே ஆடை கட்டி, பெரிய எருமைத் தலையின் மேலே இடக்காலை நேர் நிறுத்தி வலக்காலை சற்றொடித்து அலங்காரக் குடையின் கீழே போர்க்கோலம் கொண்டு நிற்கின்றாள் கொற்றவை.



இவ்வன்னையின் பெயரை தொல்காப்பியமும் கலித்தொகையும் பரிபாடலும் உரைப்பினும், சிலப்பதிகாரத்திலே மதுரைக் காண்டத்தில் வரும் வேட்டுவ வரி தான் இவளது உருவை முதன் முதலாக நமக்கு எடுத்துரைக்கிறது. அக்குடிக் காப்பியம் உரைக்கும் கொற்றவையை கற்பனையில் விரித்தால் நாமடையும் உருவம் நம்மை மிரளச் செய்கிறது. சிலம்பு காட்டும் கொற்றவையின் கரண்ட மகுடமானது சிறிய பாம்பின் வடிவம் கொண்ட பொன் நாணால் கட்டப்பட்டு அதன் மேலே வலிய பன்றியின் கொம்பானது பிறை போன்று வைக்கப்பட்டிருக்கும். இங்கவையில்லை. வலிய புலியின் வாயைப் பிளந்து பெற்ற அதன் பற்களால் கோர்க்கப்பட்ட தாலி இங்கில்லை. சிலம்பின் கொற்றவை மார்பின் கச்சையென பாம்பினை முடிந்திருப்பாள். புலித்தோலையும் சிங்கத்தோலையும் இடை ஆடையாக்கி இருப்பாள். அவள் வில்லின் நாணும் வாசுகியாவாள். இங்கவையில்லை. கால மாற்றத்தில் இங்குள்ள கொற்றவையின் முகம் சற்று மங்கியுள்ளது. ஆயினும் தான் கொண்ட போர்க்கோலத்தினால் இச்சிற்பம் நம்மை மிரளச் செய்கிறது.


கொற்றவைக்கு இரு புறமும் தன்னுயிரைக் கொடை அளித்திடும் உயர்ந்தோர் இருவரின் சிற்பங்கள் உள்ளன. இவர்களைப் போன்ற உயர்ந்தோர் புரியும் செயல்களை, கலிங்கத்துப்பரணியில் கோயில் பாடியது எனும் பகுதியிலேயுள்ள


'அடிக் கழுத்தி னுடன் சிரத்தை அரிவராலோ;

அரிந்த சிரம் அணங்கின் கைக் கொடுப்பராலோ;
கொடுத்த சிரம் கொற்றவையைப் பரவுமாலோ;
குறையுடலம் கும்பிட்டு நிற்கு மாலோ.'


என்ற 111 வது பாடல் எடுத்துரைக்கிறது. கோட்டச்சிற்பத்திற்கு வலப்புறம் மயிர்கள் படிந்த தலையும் சுழித்த வாலும் கொண்ட சிங்கமொன்றும் இடப்புறம் குள்ள பூதமும் அதனருகே நீண்ட கொம்புடன் கூடிய மானும் உள்ளன. கோட்டத்தின் மேலுள்ள மகர தோரணத்தில் உமையோடு இறைவன் காட்சி தருகிறார்.


பசுபதிகோயில் பசுபதீஸ்வரர் கோயிலுக்கு எதிரே உள்ள தோப்பில் ஆய்வு செய்த போது கி.பி. 850- 900 ஆம் ஆண்டைச் சேர்ந்த சோழர் காலக் காளாபிடாரி சிற்பம் ஒன்றும் கண்டறியப்பட்டுள்ளது. தஞ்சையை ஒட்டிய பகுதியில் காளாபிடாரி வழிபாடு சிறப்பாக இருந்தது என்பதை நிருபதொங்க பல்லவர் காலத்தைச் சேர்ந்த கண்டியூர் காளாபிடாரி, முத்தரையர் சுவரன் மாறனால் உருவாக்கப்பட்ட நியமத்துக் காளாபிடாரி கோயில்கள் பற்றிக் குறிப்பிடும் கண்டியூர் மற்றும் செந்தலைக் கல்வெட்டுகளால் அறியமுடிகின்றது.

(படத்தில் : ல்வெட்டு ஆய்வாளர் உயர்திரு. ஐயா செல்வராஜ் நாயக்கவடியார்)

இப்பசுபதிகோயில் காளாபிடாரியைப் பற்றிப் புள்ளமங்கை கோயிலில் உள்ள கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன. உத்தம சோழனின் 2ஆம் ஆட்சி ஆண்டுக் கல்வெட்டிலும், சுந்தர சோழனின் மூத்த மகனும், முதலாம் இராஜராஜனின் சகோதரனுமாகிய ஆதித்த கரிகாலனின் 5ஆம் ஆட்சி ஆண்டுக் கல்வெட்டிலும் நடுவிற்சேரி திருமணிமண்டகமுடைய காளாபிடாரி எனக் குறிப்பிடப்படுகின்றது. நடுவிற்சேரி என்ற ஊர் தற்போது நல்லிச்சேரி என வழங்கப்படுகிறது. தற்போது இச்சிற்பம் நல்லிச்சேரிக்கும் புள்ளமங்கைக்கும் இடையில் காணப்படுகிறது. இந்த இடத்தில் கோயில் ஒன்று இருந்து அழிந்திருக்கவேண்டும். இக்கோயிலே மேற்குறித்த கல்வெட்டுகளில் குறிப்பிடப்படும் ‘நடுவிற்சேரி திருமணிமண்டகமாக’ இருக்க வேண்டும். குடிப்பெயர்வு காரணமாகவோ, ஆட்சி மாற்றங்கள் காரணமாகவோ இக்கோயிலில் வழிபாடு முற்றிலும் நின்றுபோய் இக்கோயிலுக்குரிய நிலங்களின் மேலாண்மையும் கைமாறிப்போய் இக்கோயில் முற்றிலும் கைவிடப்பட்டு அழிந்திருக்கவேண்டும். எப்படியோ இந்த அழகிய சிற்பம் அழிவின் விளிம்புவரை சென்று அதிசயமாகத் தப்பிப் பிழைத்துள்ளது.

இச்சிற்பம் நான்கரை அடி உயரத்தில் பத்மபீடத்தில் சுகாசனத்தில் அமர்ந்த நிலையில் உள்ளது. வலது முன்கை உடைந்துள்ளது. இடது முன்கை தொடைமீது வரதஹஸ்தத்தில் உள்ளது. வலது பின்கையில் சூலமும், இடது பின்கையில் கபாலமும் உள்ளன. மார்பினில் குறுக்கே கபாலயக்ஞோபவீதம் (மண்டையோடுகளால் ஆன பூணூல்), ஜடாபாரம், அதில் சர்ப்பமெளலி, காதுகளில் பைதற் பிணக்குழை காட்டப்பட்டுள்ளன. “துளைஎயிற்று உரகக் கச்சுடை முலைச்சி” எனச் சிலப்பதிகாரம் கூறுவதுபோல மார்பினில் பாம்பினைக் கச்சையாக அணிந்துள்ள நிலையில் காளாபிடாரி உள்ளார். சோழர் காலத்தில் காளாபிடாரி வழிபாடு சிறப்பான நிலையில் இருந்தது என்பது இச்சிற்பத்தின் மூலம் தெரியவருகிறது.

காவிரியிலும், அதன் உப நதிகளிலும் அணைகள் உள்ள இக்காலத்திலேயே தஞ்சை டெல்டாவை வெள்ளம் அச்சுறுத்துகிறது. அவைகள் இல்லாத காலத்தில் காவிரி வெள்ளம் புயலால் சீறிப்பாய்ந்து இப்பகுதிகளில் பேரழிவை ஏற்படுத்தியுள்ளன. காவிரி வெள்ளத்திற்கு பலியாகி சுவடழிந்து போன கிராமங்கள் இப்பகுதியில் ஏராளம். இப்படி காவிரி வெள்ளத்திற்கு இப்பகுதி பலியான தகவல்களை இவ்வூருக்கு கிழக்கில் உள்ள திருச்சக்கரப்பள்ளியில் உள்ள சுந்தரசோழன் கல்வெட்டுக்கள் பதிவு செய்துள்ளன. இவ்வூருக்கு வடக்கிலுள்ள திருப்புள்ளமங்கை சிவாலயத்தைக் கட்டிய, முதற்பராந்தக சோழன் (ராஜராஜனின் கொள்ளுதாத்தா) பசுபதீச்சரத்தையும் திருப்பணி செய்துள்ளான். இதற்கு சான்றாக கோயில் கட்டுமானத்தில், சோழர்கால எழுத்தமைதியில் உள்ள கல்வெட்டுத் தூண்களும், தூண்கள், கால்கள், போதிகைகள் போன்ற ஆலய அங்கங்களும், சண்டிகேஸ்வரர், சாமுண்டாதேவி (இவ்வூருக்குக் கிழக்கிலுள்ள மேட்டில்) ஜேஷ்டாதேவி என்னும் மூத்ததேவி, நந்திகேஸ்வரர் போன்ற அரிய சிற்பங்களும் சோழர் கலைப்பாணியில் உள்ளன.


















500 ஆண்டு களுக்கு முன் வடஇந்தியாவை ஆண்ட மாற்றுமத வேந்தர்கள் தென்னகம் நோக்கி படையெடுத்துவந்து காவிரிக்கரை கிராமத்துக் கலைக்கோயில்களை கொள்ளையடித்ததுடன், சிதைத்து சின்னாபின்னமாக்கிச் சென்றார்கள். இவ்வாலயங்கள் விஜயநகர வேந்தர் வீரசும்பண்ண உடையாரால் திருப்பணி செய்யப்பட்டு நிவந்திங்களும் வழங்கப்பட்டன. இம்மன்னரே ஆலயத்தைப் புதுப்பித்ததுடன் 65 அடி உயர ராஜகோபுரமும் 5 நிலைகளுடன் எடுத்தார். இதற்கு சான்றாக கோபுர நிலைக்காலில் ஒரு வரி தெலுங்கு கல்வெட்டு பொறிப்பும், நாயக்கர் கலை பாணியிலான சிற்பங்களும் உள்ளன.

300 ஆண்டுகளுக்கு முன் தஞ்சாவூர் ராஜ்ஜியத்தின் மன்னராக இருந்தவர் மராட்டிய மன்னன் பிரதாப சிம்மன். இவர் ஆற்காடு நவாபிற்கு கப்பம் செலுத்தி வந்தார். ஒருமுறை கப்பம் செலுத்தத் தாமதம் ஆனதால், இருமுறை தஞ்சையின் மீது படையெடுத்துவந்தார். இரண்டாவது முறை ஆற்காடு நவாபு அன்வாருதீன் பெரும்படையுடன் வந்து பசுபதிகோயில் கிராமத்தில் முகாமிட்டு தங்கினார்.

தஞ்சை மன்னனைக் கலவரப்படுத்த இப்பகுதியிலுள்ள கலைக்கருவூலங்களை பீரங்கி குண்டுகளுக்கு இரையாக்கினார். இப்படி அடிமேல் அடியாக, இடிமேல் இடியாக விழுந்து அழிந்த கலைப்பொக்கிஷமான பசுபதீச்சரம் ஆலயம் அதே பிரதாப சிம்மன் காலத்தில் திருப்பணியால் சீரமைக்கப்பட்டது. இப்பொழுதுள்ள ஆலய கட்டுமானத்தில் சோழர், நாயக்கர், மராட்டியர் கலைப்பாணிகள் கலந்து இருப்பதே இதற்கு சான்று. இதுவே இவ்வாலயத்தில் நடைபெற்ற கடைசி திருப்பணி எனலாம்.


கோச்செங்கட்சோழன் என்ற மன்னன் முற்பிறவியில் சிலந்தி பூச்சியாக இருந்து சிவலிங்கத் திருமேனி மேல் வலை பின்னி சிவத்தொண்டு செய்துவந்தது. சிவலிங்கத்தின் மீது இலை தழைகளும், பறவை எச்சமிடுவதையும் தடுக்க சிலந்தி பின்னிய வலையின் நோக்கம் அறியாத யானை பக்தி மேலீட்டால் காவிரி நீரால் அபிஷேகம் செய்யும்போது சிலந்தி வலை அறுபட்டது. இதனால் வெகுண்ட சிலந்தி, யானையின் துதிக்கையில் புகுந்ததில் யானை கலவரமும் பீதியும் அடைந்து துதிக்கையை தரையில் அடித்து புரண்டதில் சிலந்தியும் யானையும் சிவபதம் அடைந்தன.

அச்சிலந்தி வேண்டிய வரத்தின்படி, மறுபிறப்பில் சோழநாட்டு மன்னனாகப் பிறந்தது. இவனே சங்ககால மன்னன் கோச்செங்கட்சோழன். பூர்வ ஜென்ம உள்ளுணர்வால் யானை ஏறமுடியாத கட்டுமலை போன்ற கோயில்களைக் கட்டினான். அவையே மாடக்கோயில்கள் எனப்படுகின்றன. இப்புராணக் கதையையும், கோச்செங்கட்சோழன் கட்டிய மாடக்கோயில் என்பதை உறுதிப்படுத்தவும், கோபுர நிலைக்காலிலும், சுவர்களிலும் சிலந்தியின் வழிபாடு, யானையின் வழிபாடு போன்ற புடைப்பு சிற்பங்கள் சிறிய அளவில் உள்ளன.






நன்றி. கல்வெட்டு ஆய்வாளர் உயர்திரு. ஐயா செல்வராஜ் நாயக்கவடியார்

வரலாற்று பக்கங்கள் - II

வளரி வரலாறு   👈 Click above திருமங்கையாழ்வார் வரலாறு 👈 Click above அம்பலகாரர் / அம்பலம் வரலாறு 👈 Click above வாண்டையார் வரலாறு 👈 Click a...

இந்த வலைப்பதிவில் தேடு

என்னைப் பற்றி

எனது படம்
Contact: info.kallarkulavaralaru@gmail.com, தமிழகத்தில் வாழும் கள்ளர் மரபினர் முக்குலத்தோரில் ஒரு பிரிவினர் ஆவர். கள்ளர், மறவர், அகமுடையார் ஆகிய முக்குலங்களும் போர்த் தொழிலை அடிப்படையாக கொண்டு வாழ்ந்து வந்ததால் இந்த மூன்று சாதியினரும் முக்குலத்தோர் என்று அறியப்படுகின்றனர். இந்த மூன்று குலத்தினரும் "தேவர்" என்ற பொதுவான பெயரோடு அறியப்படுகிறார்கள். கள்ளர் மரபில் அறந்தாங்கி தொண்டைமான், புதுக்கோட்டை பல்லவராயர், புதுக்கோட்டை தொண்டைமான் மற்றும் பல சமீன்தார்களும், பெரு நிலவுரிமையாளர்களும் இருக்கின்றனர். (கள்ளர் படைப்பற்று - கள்ளர் நாடு - கள்ளர்த்தடி). கள்ளர் வரலாறு : வரலாறு என்றால் வந்த வழி என்று பொருள். வந்த வழி தெரியாதவர்களுக்குப் போகும் வழி புரியாது. வரலாற்றை நாம் நினைவு கூர்வதற்குக் காரணம் கடந்து போன ஈகங்களை எண்ணிக் கண்ணீர் விடுவதற்காகவும், நிகழ்த்தி விட்ட வீரங்களைச் சொல்லிப் பெருமை பேசுவதற்காகவும் அல்ல. வருங்காலத்திற்கு வழி சமைப்பதற்கு அந்த ஈகமும் வீரமும் வழிகாட்ட வேண்டும் என்பதற்காகத்தான். கள்ளர்களின் நான்கு முக்கிய பிரிவுகள் - ஈசநாட்டுக்கள்ளர் (திருச்சி, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை) : கிளைவழிக்கள்ளர் (சிவகங்கை) : அம்பல கள்ளர் / நாட்டார் கள்ளர் (சிவகங்கை, மதுரை) : பிறமலை கள்ளர் (மதுரை, உசிலமபட்டி, தேனி, கம்பம், திண்டுக்கல்)

வலைப்பதிவு காப்பகம்

பின்பற்றுபவர்கள்