சனி, 30 ஜூன், 2018

நடிகர் திலகம் "சிவாஜி கணேசன் " மன்றாயர்



“சிவாஜி”




கம்பீரத் தோற்றம், கண்ணியத் தோரணை, கர்வம் கொண்ட கூரிய பார்வை இவற்றின் அடையாளம் ‘சிவாஜி கணேசன்’ என்ற ஏழு எழுத்துக்கள். வி.சி. கணேசன் என்ற துடிப்பான இளைஞன் தனது நடிப்பாற்றலின் திறனால், உலகமெங்கும் வியாபித்திருக்கும் தமிழரின் மனங்களில், செதுக்கிய எழுத்துக்கள்.



























மேல் வரிசை நடிகர் திலகம் சிவாஜி மன்றாயர், காக்கா ராதாகிருஷ்ணன் ஆச்சாரியார், கீழே நடிகவேள் எம் ஆர் ராதா நாயக்கர் 


சிவாஜி கணேசன் அவர்கள், சின்னையா மன்றாயருக்கும், ராஜாமணி அம்மாளுக்கும் மகனாக கள்ளர் குடியில் விழுப்புரத்தில் 1 அக்டோபர் 1927 ஆம் ஆண்டு பிறந்தார். அவரது இயற்பெயர் வேட்டைத்திடல் சின்னையா கணேசமூர்த்தி. ஆனால் விழுப்புரம் சின்னையா கணேசமூர்த்தி என்றே எல்லோராலும் அழைக்கப்படுகிறார்.



சிவாஜி கணேசனின் பூர்வீகம் தஞ்சை மாவட்டத்தில் உள்ள வேட்டைத்திடல் என்ற கிராமம். இது மிகவும் செழிப்பானது. அவருடைய தந்தை சின்னையா மன்றாயரின் குடும்பம் அங்குதான் வசித்தது.

தாயார் பெயர் ராஜாமணி அம்மாள். அவருடைய தகப்பனார் பெயர் சின்னச்சாமி காளிங்கராயர், அவர் ரெயில்வேயில் அதிகாரியாக பதவி வகித்தவர். திருச்சி, மதுரை பகுதியில் ரெயில்பாதை போடப்பட்டபோது, அதற்கு அவர் பொறுப்பாக இருந்தார்.

சின்னச்சாமி காளிங்கராயருக்கு 11-வதாக பிறந்த குழந்தை ராஜாமணி அம்மாள். மகள் மீது காளிங்கராயருக்கு மிகுந்த பாசம். எனவே சிவாஜியின் தந்தை சின்னையா மன்றாயர் அதிகம் படிக்காதவர், ஆயினும் ஒரு மிராசுதார். எனவே, அவருக்கு ராஜாமணியை திருமணம் செய்து கொடுத்து, வீட்டோடு மாப்பிள்ளையாக வைத்துக்கொண்டார்.



சில காலத்துக்குப்பின் சின்னையா மன்றாயர் ரெயில்வேயில் வேலைக்கு சேர்ந்தார். நாகப்பட்டினத்தில் இருந்த ரெயில்வே ஒர்க்ஷாப்பில் வேலை பார்த்தார். மனைவியுடன் அங்கு குடியேறினார்.

சின்னச்சாமி காளிங்கராயர் வீடு விழுப்புரத்தில் இருந்தது. பிரசவத்துக்காக அங்கு ராஜாமணி அம்மாள் சென்றார்.அங்குதான் 1928 அக்டோபர் 1-ந் தேதி சிவாஜிகணேசன் பிறந்தார்.

சிவாஜியின் தந்தை சின்னையா மன்றாயர், சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபாடு கொண்டவர். சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் சிலர், தீவரவாத எண்ணம் கொண்டவர்கள். வெள்ளைக்கார சிப்பாய்கள் செல்லும் ரெயிலுக்கு சின்னையா வெடி வைத்தார். போலீசார் தாக்கி சின்னையா தலையில் பலத்த காயம் அடைந்தார். அவரை வேலூருக்கு கொண்டுபோய், ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். போலீஸ் காவலுடன் சிகிச்சை பெற்றார். அவர் குணம் அடைந்த போதிலும், காது சரியாகக் கேட்கமுடியாமல் போய்விட்டது. சின்னையா மன்றாயர் கைது செய்யப்பட்ட அதே நாளில்தான் சிவாஜி பிறந்தார்.

ரெயிலுக்கு வெடி வைத்ததாக சின்னையா மன்றாயர் மீது வழக்கு தொடரப்பட்டது. அதில் அவருக்கு 7ஆண்டு ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டது. ``மருமகன் ஜெயிலுக்கு போய்விட்டாரே" என்று சிவாஜியின் தாத்தா மனம் நொந்தார். சிலகாலத்துக்குப்பின் அவர் மரணம் அடைந்தார்.

சிவாஜிக்கு திருஞான சம்பந்த மூர்த்தி, கனக சபாநாதன், தங்கவேலன் என்று மூன்று அண்ணன்கள். சிவாஜிக்கு சூட்டப்பட்ட பெயர் கணேசமூர்த்தி. தம்பி சண்முகம், தங்கை பத்மாவதி. சிவாஜியின் தாத்தா இறந்துபோன பிறகு, ராஜாமணியம்மாள் குடும்பத்துடன் திருச்சியில் குடியேறினார்.

திருச்சி அருகே, பொன்மலைக்குப் பக்கத்தில் உள்ள சங்கிலியாண்டபுரத்தில் ராஜாமணி அம்மாள் குடும்பத்துக்கு ஒரு வீடு இருந்தது. அங்கு வசிக்கலானார். சிவாஜிகணேசன் வளர்ந்தது, நாடக நடிகரானது, சினிமா உலகில் புகுந்தது எல்லாமே இந்த வீட்டில் வசித்த போதுதான்.

தந்தையோ இறந்து போய்விட்டார். கணவர் சிறை சென்று விட்டார். பிழைக்க என்ன செய்வது, குழந்தைகளை எப்படி படிக்க வைப்பது என்று யோசித்த ராஜாமணி அம்மாள், பால் வியாபாரம் செய்ய முடிவு செய்தார். கறவை மாடு வாங்கி, பால் விற்கத் தொடங்கினார். நாளடைவில், ராஜாமணி அம்மாள் என்ற பெயர் மறைந்துபோய், ``பால்காரம்மா" என்ற பெயர் நிலைத்து விட்டது.



வீட்டுக்கு அருகே கிறிஸ்தவ பள்ளிக்கூடம் ஒன்று இருந்தது. அங்கு சிவாஜியை சேர்த்துவிட்டார், ராஜாமணி அம்மாள். அப்போது சிவாஜிக்கு 4 வயது. சிறையில் இருந்த சின்னையா மன்றாயர் நன்னடத்தைக்காக, 7 வருட தண்டனை 4 ஆண்டு தண்டனையாகக் குறைக்கப்பட்டு, விடுதலை செய்யப்பட்டார்.



பராசக்தி வெளிவந்த பின், ``யார் இந்த சிவாஜி கணேசன்?" என்ற கேள்வி நான்கு திசைகளிலும் எதிரொலித்தது. அவருடைய வாழ்க்கை வரலாற்றை அறிந்து கொள்ள, ரசிகர்கள் ஆவல் கொண்டனர். இதனால், அவர் வாழ்க்கை வரலாறு புத்தகத்தை பல்வேறு பதிப்பகங்கள் வெளியிட்டன. பத்திரிகைகள் அவரை பேட்டி கண்டு, படங்களுடன் பக்கம் பக்கமாக வெளியிட்டன.

7 வயதில் நாடகக் கம்பெனியில் சேர்ந்தார், சிவாஜி சிவாஜி கணேசன், 7-வது வயதிலேயே நாடகக் கம்பெனியில் சேர்ந்து நடிகரானார். பள்ளிக்கூடத்தில் படிக்கும்போதே, சிவாஜிக்கு நடிப்பதிலும், பாடுவதிலும் ஆர்வம் இருந்தது.



ஒருமுறை, “வீரபாண்டிய கட்டபொம்மன்” நாடகத்தைப் பார்க்க தந்தையுடன் சென்றார். அக்காலத்தில், சின்ன வேடங்களுக்கு ஆட்கள் தேவைப்பட்டால், நாடகத்துக்கு வரும் சிறுவர்களில் சிலரை அழைத்துப் போய், மேடையில் ஏற்றி விடுவார்கள். ``கட்டபொம்மன்" நாடகத்தில், வெள்ளைக்கார சிப்பாய் வேடத்தில் நடிக்க சிலர் தேவைப்பட்டதால்,சிவாஜியை நாடகக்காரர்கள் அழைத்துச் சென்றுவிட்டார்கள்.வெள்ளைக்கார சிப்பாய்கள் அணிவகுத்து வரும் காட்சியில்,அந்த சிப்பாய்களில் ஒருவராக சிவாஜியும் நடந்து வந்தார்.


பூண்டி வாண்டையாருடன்



நாடகம் முடிந்து வீட்டுக்குச் சென்றதும், சிவாஜிக்கு அவர் அப்பாவிடம் உதை கிடைத்தது ஏனென்றால் தேசியவாதியான சின்னையா மன்றாயருக்கு வெள்ளைக்காரர்கள் என்றாலே பிடிக்காது. சிவாஜி, வெள்ளைக்கார சிப்பாய் வேடம் போட்டதால் அடித்தார். இதனால் சிவாஜிக்கு காய்ச்சல் வந்துவிட்டது. படுக்கையில் போய் விழுந்தார். ``நாமும் நடிகனாக வேண்டும். கட்டபொம்மனாக நடிக்க வேண்டும்" என்ற எண்ணம், மனதில் ஆழமாகப் பதிந்தது.

இந்த நேரத்தில், யதார்த்தம் பொன்னுசாமிப்பிள்ளையின் ``மதுரை ஸ்ரீபாலகான சபா" என்ற நாடகக்கம்பெனி திருச்சியில் முகாமிட்டு நாடகங்கள் நடத்தி வந்தது. (யதார்த்தம் பொன்னுசாமிபிள்ளை, என். எஸ்.கிருஷ்ணன் நடித்த பெரும்பாலான படங்களில் அவருடன் நடித்தவர். பிற்காலத்தில் சிவாஜி நடித்த ``தூக்கு தூக்கி"யில், வாத்தியாராக நடித்தவர்.) இந்த நாடகக் குழுவில் சேர்ந்து விடவேண்டும் என்று சிவாஜி விரும்பினார். நாடகக் குழுவினர், திருச்சியில் நாடகங்கள் நடத்தி முடித்துவிட்டு, வெளியூருக்கு செல்ல ஏற்பாடுகள் செய்து கொண்டிருந்தனர். நாடகக் கம்பெனிக்கு சிவாஜி சென்றார். ``எனக்கு பாடத்தெரியும். ஆடத்தெரியும். நான் அப்பா- அம்மா இல்லாத அனாதை. நாடகத்தில் சேர்த்துக் கொள்ளுங்கள்" என்று கூறினார். அப்போது சிவாஜி நன்றாகப் பாடும் அளவுக்கு பயிற்சி பெற்றிருந்தார். அவரை ஒரு பாட்டு பாடச் சொன்னார்கள். ``பழனிவேல் இது தஞ்சம்" என்ற பாடலை சிவாஜி பாடினார். நாடகக் கம்பெனிக்காரர்களுக்குப் பிடித்துவிட்டது. உடனே கம்பெனியில் சேர்த்துக் கொண்டார்கள்.

அப்போது, அந்தக் கம்பெனியில் தி௫ச்சி சங்கிலியாண்டபுரம் காக்கா ராதாகிருஷ்ணனும் நடிகராக இருந்தார். அவர் சிவாஜியின் பக்கத்து வீட்டுக்காரர். நாடகக் கம்பெனி, திருச்சியில் இருந்து திண்டுக் கல்லுக்கு சென்று முகாமிட்டது. அந்த நாடகக் கம்பெனியில், புது நடிகர்களுக்கு பயிற்சி அளிக்கும் வாத்தியாராக சின்ன பொன்னுசாமி படையாச்சி என்பவர் இருந்தார். இவர்தான், சிவாஜி கணேசனுக்கு நடிப்புப் பயிற்சி அளித்தார். சின்ன பொன்னுசாமிதான் என் நாடக குரு"என்று சிவாஜி குறிப்பிட்டுள்ளார்.



சிவாஜி நடித்த முதல் நாடகம் ``ராமாயணம்" அதில் அவர் போட்ட வேடம் சீதை. ``யாரென இந்தப் புருஷனை அறிகிலேன்" என்ற பாட்டைப்பாடி, அதற்கு ஏற்ற மாதிரி ஆட்டம் ஆடி நடித்தார். முதல் நாளே சிறப்பாக நடித்தார், சிவாஜி. வேஷத்தை கலைத்து உள்ளே சென்றபோது, வாத்தியார் பொன்னுசாமி அவர் முதுகில் தட்டிக்கொடுத்து, ``மிகவும் நன்றாக நடித்தாய்" என்று பாராட்டினார். நாட்கள் ஆக ஆக, புதுப்புது வேடங்களை ஏற்று நடித்தார், சிவாஜி. சீதை வேஷம் போட்ட அவர், பிறகு பரதன் வேடம் போட்டார். சூர்ப்பனகை அழகியாக மாறி ராமனை மயக்கும் கட்டத்தில், அந்த அழகு சூர்ப்பனகையாக நடித்தார்.

ராவணனின் மகன் இந்திரஜித் வேடமும் அவருக்கு கிடைத்தது. இப்படி, சிறுவனாக நாடகங்களில் நடித்த போதே, மாறுபட்ட வேடங்களில் நடிக்கும் ஆற்றலைப் பெற்றார்.

பல்வேறு நாடக வசனங்கள் அவருக்கு மனப்பாடம். எனவே, திடீரென்று எந்த வேடத்தையும் கொடுத்து நடிக்கச் சொன்னாலும், அவர் ஏற்று நடித்தார். அந்தக் காலத்தில், நாடகத்தில் நடிக்கும் சிறுவர்கள் வெளியே எங்கேயும் போக முடியாது. கம்பெனியின் வீட்டிலேயே அடைந்து கிடக்க வேண்டும். ``சிறை" வைக்கப்பட்டது மாதிரிதான். ``ஊருக்கு வா"என்று பெற்றோர் கடிதம் எழுதினால், அதை பையன்களிடம் கொடுக்கமாட்டார்கள். கடிதங்களைப்பிரித்து படித்துப்பார்த்துவிட்டு, கொடுக்கக்கூடியதாக இருந்தால் மட்டும் கொடுப்பார்கள்.

ஒரு முறை காக்கா ராதாகிருஷ்ணன் கெஞ்சிக் கூத்தாடி, எப்படியோ அனுமதி பெற்று ஊருக்கு போய்விட்டு வந்தார். ``என்ன ராதாகிருஷ்ணா! என் வீட்டுக்குப் போனாயா? எல்லோரும் சவுக்கியமா?" என்று சிவாஜி விசாரித்தார். உன் அண்ணன் திருஞான சம்பந்தமூர்த்தி இறந்துவிட்டார்"என்று கூறினார், காக்கா ராதாகிருஷ்ணன்.

ஊருக்குப் போய்வர கம்பெனி நிர்வாகிகளிடம் அனுமதி கேட்டார். அவர்கள் அனுதாபம் தெரிவித்தார்களே தவிர, அனுமதி தரவில்லை. சில காலத்துக்குப் பிறகு, சிவாஜியின் இன்னொரு அண்ணன் கனகசபாநாதனும் இறந்துபோனார். அப்போதும் சிவாஜி தன் வீட்டுக்குப் போக முடியவில்லை.முக்கிய வேடங்களில் அவர் நடித்து வந்ததால், ஒரு நாள் கூட விடுமுறை கொடுக்க நாடகக் கம்பெனி நிர்வாகிகள் மறுத்துவிட்டனர்.

5 ஆண்டுகளுக்குப்பின் பெற்றோரை சந்தித்தார், சிவாஜி- எம். ஆர்.ராதா நாடகக்குழுவில் சேர்ந்தார் பொதுவாக, நாடகங்களில் தொடர்ந்து பெண் வேடம் போடும் சிறுவர்கள் நடப்பது,பேசுவது எல்லாம் பெண்கள் போலவே மாறிவிடுவது உண்டு.ஆனால், சிவாஜிகணேசன் பெண் வேடம் மட்டும் அல்லாமல் ஆண் வேடங்களும், மாறுபட்ட வேடங்களும் ஏற்று நடித்தார். அதனால் எதிர்காலத்தில் எந்த வேடம் கொடுத்தாலும், அதை சிறப்பாக செய்யக்கூடிய ஆற்றலைப் பெற்றார். எம்.ஆர்.ராதா சிவாஜி நடித்து வந்த நாடகக் கம்பெனியில், எம்.ஆர்.ராதாவும் நடிகராக சேர்ந்தார். ``பதிபக்தி"நாடகத்தில் சிவாஜி, சரஸ்வதி என்ற பெண் வேடத்தில் நடிப்பார். எம்.ஆர்.ராதா வில்லனாக நடிப்பார்.

சிவாஜிகணேசன் நாடகக் குழுவினர் கோவைக்கு சென்ற போது, அங்கே உள்ள ஸ்டூடியோவில் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் ``சந்திரஹரி" என்ற நகைச்சுவை திரைப்படத்தைத் தயாரித்துக் கொண்டிருந்தார். அதில் என்.எஸ்.கே.யின் மகனாக காமெடி வேடத்தில் நடிப்பதற்கு ஒரு பையன் தேவைப்பட்டான். படக்கம்பெனியைப் சேர்ந்தவர்கள், சிவாஜியையும், காக்கா ராதாகிருஷ்ணனையும் அழைத்துச் சென்றனர். இந்த இருவரில் அவர்கள் தேர்வு செய்தது, காக்கா ராதாகிருஷ்ணனைத்தான். ``காக்கா ராதாகிருஷ்ணனுக்குத்தான், இயற்கையாகவே காமெடியான முகம் இருக்கிறது" என்று அவர்கள் கூறினார்கள். சிவாஜி கணேசனை, நாடகக்கம்பெனியில் கொண்டு போய் விட்டுவிட்டார்கள்.

சிவாஜிக்கு 12 வயதான போது, நாடகக் குழுவினர் கோவையில் இருந்து பொள்ளாச்சிக்கு சென்று முகாமிட்டனர். சிவாஜிக்கு பெற்றோரை பார்க்கவேண்டும் என்று ஆவல் அதிகரித்தது. தீபாவளிக்காவது என்னை ஊருக்கு அனுப்பி வையுங்கள்"என்று கம்பெனி நிர்வாகிகளிடம் கெஞ்சினார். அவர்கள் மனம் இரங்கி, சிவாஜியை அனுப்பி வைத்தனர். வீட்டுக்குப்போனதும், சிவாஜி முதலில் பார்த்தது தம்பி சண்முகத்தையும், தங்கை பத்மாவதியையும்தான். சிவாஜிகணேசன் குடும்பத்தைப் பிரிந்து நாடகக் கம்பெனியில் சேர்ந்தபோது, 3 அண்ணன்கள் மட்டுமே இருந்தனர். அவர்களில் 2 பேர் இறந்து போய்விட்டார்கள். தான் நாடகக்கம்பெனில் சேர்ந்த பிறகு பிறந்த தம்பி சண்முகத்தையும், தங்கை பத்மாவதியையும் அப்போதுதான் முதன் முதலாக சிவாஜி பார்த்தார். அந்த தீபாவளியை பெற்றோருடனும், அண்ணன், தம்பி, தங்கையுடனும் கொண்டாடி மகிழ்ந்தார், சிவாஜி.

பிறகு எம். ஆர்.ராதாவுடன் சென்னைக்குப் புறப்பட்டார், சிவாஜி. அவர் சென்னையைப் பார்ப்பது அதுதான் முதல் தடவை.
சென்னை ஜார்ஜ் டவுனில், தனக்குத் தெரிந்த ஒருவர் வீட்டில் சிவாஜியை தங்க வைத்தார், ராதா. நாடகக் கம்பெனிக்கான உடைகள், சீன்கள் போன்றவற்றை சேகரித்தார். சிவாஜியை ஒரு நாள் ரிக்ஷாவில் ஏற்றி, ஊரைச் சுற்றிப்பார்த் துவிட்டு வருமாறு அனுப்பினார்.

``சரஸ்வதி கான சபா" என்ற பெயரில் நாடகக் கம்பெனியைத் தொடங்க ராதா முடிவு செய்தார். நாடக சாமான்களுடன் ஈரோடு சென்றார். அங்கு ``லட்சுமி காந்தன்", ``விமலா அல்லது விதவையின் கண்ணீர்" ஆகிய நாடகங்களை நடத்தலானார். திராவிட கழகத்தலைவர் ஈ.வெ.ரா. பெரியாரின் வீட்டுக்குப் பக்கத்தில்தான் ராதாவின் நாடகக் கம்பெனி இருந்தது. பெரியார் வீட்டுக்கு பேரறிஞர் அண்ணா, ஈ.வெ.கி.சம்பத் ஆகியோர் அடிக்கடி வருவார்கள். அவர்களுடன் சிவாஜிக்கு அறிமுகம் ஏற்பட்டது. பெரியார் கொள்கைகளில் ஈடுபாடு கொண்டார்.

சிறு வேடங்களில் நடித்து வந்த சிவாஜி, ``மனோகரா" நாடகத்தில் கதாநாயகனாக -மனோகரனாக நடித்தார். இந்த நாடகத்தை கொல்லங்கோடு மகாராஜா ஒரு நாள் பார்த்தார். சிவாஜியின் நடிப்பைப் பாராட்டி, வெள்ளித்தட்டு ஒன்றை பரிசளித்தார்.

சிவாஜிகணேசன் நடித்துக்கொண்டிருந்த ``சரஸ்வதிகான சபா" கொல்லங்கோட்டில் முகாமிட்டிருந்தபோது, குறுகிய காலம் அவர் நாடக உலகைவிட்டு விலகி இருக்க நேர்ந்தது.

சிவாஜிகணேசன் குடும்பத்தை நடத்துவதற்கு பெற்றோர் படும் கஷ்டத்தை நேரில் பார்த்தார். ஏதாவது வேலைக்குப் போனால், அம்மாவுக்கு உதவியாக இருக்குமே என்று நினைத்தார். அப்போது, ``திருச்சி ஸ்ரீரங்கம் டிரான்ஸ்போர்ட்" (டி.எஸ்.டி.) என்ற பஸ் கம்பெனி இருந்தது. நண்பர் ஒருவரின் முயற்சியால், அந்த பஸ் கம்பெனியில் சிவாஜிக்கு மெக்கானிக் வேலை கிடைத்தது.  கார் சர்வீஸ் செய்யும் கம்பெனி பாப்புலர் ஆட்டோ மொபைல்ஸ் என்ற அம்பாசிடர் கார் விற்பனையாளர்களின் நிறுவனம் (திருச்சி தலைமைத் தபால் நிலையத்திற்கும் ஜென்னீஸ் பிளாஸாவிற்கும் இடையில் உள்ளது) வேலை செய்ததாகவும் தகவல் உண்டு. அப்போது சம்பளம் 7 ரூபாய்.

மனம் நாடகத்தைச் சுற்றியே வட்டமிட்டுக் கொண்டிருந்தது. பின் என். எஸ். கிருஷ்ணனின் நாடகக் குழுவில் சேர்ந்து, அவர் லட்சுமிகாந்தன் கொலை வழக்கில் சிறை சென்ற போது எஸ்.கே. நாடகக் குழுவில், அப்போது எஸ்.வி. சகஸ்ர நாமமும், கே. ஆர்.ராமசாமியும் முக்கிய நடிகர்கள். இவர்களில் யாரிடம் நிர்வாகப் பொறுப்பை ஒப்படைப்பது என்று மதுரம் யோசித்தார். முடிவில் சகஸ்ரநாமத்திடம் ஒப்படைக்கத் தீர்மானித்தார். இதனால், கே. ஆர்.ராமசாமி வருத்தம் அடைந்தார். என். எஸ்.கே.நாடக சபாவில் இருந்து விலகி, புது நாடகக் கம்பெனி தொடங்க தீர்மானித்தார். இதைத் தொடர்ந்து, நாடகக் குழு இரண்டாக பிளவுபட்டது. சிலர் சகஸ்ர நாமம் அணியிலும், சிலர் கே. ஆர்.ராமசாமி அணியிலும் சேர்ந்தனர். கே. ஆர்.ராமசாமியுடன் சேர்ந்தவர்களில் சிவாஜிகணேசனும் ஒருவர். பேரறிஞர் அண்ணாவுடன் நெருங்கிய தொடர்பு உடையவர் கே.ஆர்.ராமசாமி. அவர் அண்ணாவை சந்திப்பதற்காக காஞ்சீபுரம் சென்றார். போகும்போது, சிவாஜிகணேசனையும், தன் ஆதரவாளர்களையும் அழைத்துச்சென்றார். அண்ணா அப்போது ``திராவிட நாடு" என்றபத்திரிகையை நடத்தி வந்தார். அந்த பத்திரிகை அலுவலகத்தில், சிவாஜியும், மற்றவர்களும் தங்கினார்கள். சிவாஜிகணேசன் வாழ்க்கையில் திருப்புமுனை திராவிட கழகத்தில் இருந்து தி.மு.கழகம் பிரியாத காலக்கட்டம் அது (1946). சென்னையில் ஏழாவது சுய மரியாதை மாநாட்டை நடத்துவதற்கான ஏற்பாடுகளில், பெரியாரும், அண்ணாவும் தீவிரமாக ஈடுபட்டு இருந்தனர்.



மாநாட்டில் நடிப்பதற்காக ``சிவாஜி கண்ட இந்து ராஜ்யம்" என்ற பெயரில் ஒரு நாடகத்தை அண்ணா எழுதியிருந்தார். இந்த நாடகத்தில், சிவாஜியாக எம்.ஜி.ஆரும், காகப்பட்டர் வேடத்தில் அண்ணாவும், மற்றொரு முக்கிய வேடத்தில் டி.வி.நாராயணசாமியும் நடிப்பது என்று முடிவாகியது. இந்தக் காலக்கட்டத்தில், எம்.ஜி.ஆர். திரைப் படங்களில் சிறுசிறு வேடங்களில் நடித்து வந்தார். காங்கிரஸ் அனுதாபியாகவும், பக்தராகவும் இருந்தார். என்ன காரணத்தினாலோ, எம்.ஜி.ஆர். அந்த நாடகத்தில் நடிக்கவில்லை. நாடகத்துக்குப் பொறுப்பாளராக இருந்த நடிகர் டி.வி.நாராயணசாமி அண்ணாவை சந்தித்து, எம்.ஜி.ஆர். தன்னால் நடிக்க இயலாது என்று கூறிவிட்டதாக தெரிவித்தார்.

``திராவிட நாடு" அலுவலகத்தில் தங்கியிருந்த சிவாஜி கணேசன், இதற்குள் அண்ணாவுடன் நெருங்கிப் பழகியிருந்தார். சிவாஜியின் நடிப்பாற்றல் பற்றி அண்ணாவும் நன்கு அறிந்திருந்தார். எனவே, சிவாஜியை அழைத்து, ``கணேசா! என் நாடகத்தில் நீ சிவாஜி வேடத்தில் நடிக்கிறாயா?" என்று கேட்டார். இதைக்கேட்டு சிவாஜிக்கு இன்ப அதிர்ச்சி!

அவர் சிவாஜியிடம் வசனத்தை கொடுத்தபோது பகல் பதினோரு மணி இருக்கும். அண்ணா வீட்டிற்கு சென்று, மாலை ஆறு மணியளவில் திரும்பி, அலுவலகத்திற்கு வந்தார். ``கணேசா! வசனத்தைப் படித்தாயா?" என்று கேட்டார்.சிவாஜி அவரிடம், ``அண்ணா! நீங்கள் இப்படி உட்காருங்கள்!" என்று கூறி, அவர் எழுதிக்கொடுத்த வசனங்களைப் பேசி, அதற்குத் தகுந்தாற்போல் நடித்துக் காண்பித்தார். அண்ணா சிவாஜியை கட்டித்தழுவி ``கணேசா! நீ இதை ஏழே மணி நேரத்தில் மனப்பாடம் செய்து விட்டாயே! அரிய சாதனை" என்றார்.

அண்ணா எழுதிய 90 பக்க வசனத்தை குறுகிய காலத்தில் படித்து, நடித்துக் காட்டினார் என்றால் அதற்கு சிவாஜியிடம் இருந்த கலை ஆர்வமும், மனப்பாடம் செய்வதில் அவருக்கு இருந்த ஆற்றலும்தான் காரணம்.

திராவிட கழக மாநாட்டில், ``சிவாஜி கண்ட இந்து ராஜ்யம்" நாடகம் நடந்தது. இந்த நாடகத்தில் சிவாஜியாக சிவாஜி கணேசனும், காகபட்டர் வேடத்தில் அண்ணாவும் நடித்தனர்.

3 மணி நேரம் நடந்த நாடகத்தை, கடைசி வரை இருந்து பார்த்தார், பெரியார். ``நான் 10 மாநாடுகளில் சொல்லக்கூடிய கருத்துக்களை இந்த ஒரே நாடகத்தில் சொல்லிவிட்டார், அண்ணா" என்று பாராட்டினார். அத்துடன், ``யாரோ ஒரு சின்னப்பையன் சிவாஜியாக நடித்தானே, அவன் யார்?" என்று கேட்டார். சிவாஜிகணேசனை பெரியார் முன் கொண்டுபோய் நிறுத்தி, ``இந்தப் பையன்தான். பெயர் கணேசன்" என்று அறிமுகம் செய்து வைத்தனர். ``சிவாஜியாக ரொம்ப நன்றாக நடித்தாய்! இன்று முதல் நீ கணேசன் அல்ல; சிவாஜி!" என்று பெரியார் வாழ்த்தினார். பெரியாரின் இந்த வாழ்த்து பெரிய பட்டமாக அமைந்து விட்டது. அதுவரை ``வி.சி.கணேசன்" என்று அழைக்கப்பட்டவர், அன்று முதல் ``சிவாஜி கணேசன்" ஆனார்.

கே.ஆர்.ராமசாமி குழுவில் சிவாஜி நடிகர் கே.ஆர்.ராமசாமி தன் நாடகக் குழுவை தஞ்சாவூரில் தொடங்கினார். இந்த நாடக்குழுவில், சிவாஜி கணேசனும் இடம் பெற்றார். ``மனோகரா" நாடகத்தில் கே.ஆர்.ராமசாமி மனோகரனாக நடித்தார். சிவாஜிகணேசன், மனோகரனின் தாயார் பத்மாவதியாக நடித்தார். இந்த சமயத்தில்தான் கே.ஆர்.ராமசாமிக்காக ``ஓர் இரவு" என்ற நாடகத்தை அண்ணா எழுதினார். ஒரே இரவில் நடைபெறும் சம்பவங்களைக் கொண்டு, கதையை புதுமையாக எழுதியிருந்தார். இந்த நாடகத்தில் சிவாஜி கணேசனும் நடிப்பதாக இருந்தது. ஆனால், நாடகக் குழுவைச் சேர்ந்த ஒருவருடன் ஏற்பட்ட கருத்து வேற்றுமையால், அவர் நாடகத்தில் நடிக்கவில்லை காஞ்சீபுரத்துக்கு சென்று, ``திராவிட நாடு" அலுவலகத்தில் தங்கிக் கொண்டு, அண்ணாவுக்கு உதவியாக இருந்தார். அண்ணா பொதுக்கூட்டங்களுக்குச் செல்லும்போது, சிவாஜியையும் தன்னுடன் அழைத்துச் செல்வார். மேடையில் பேசுவதற்கு பயிற்சி அளிப்பார்.

இந்தக்காலக் கட்டத்தில், ``சக்தி நாடக சபா" என்ற நாடகக் குழுவினர் நாடகங்களை நடத்தி வந்தனர். தங்கவேலுபிள்ளை என்பவர் இந்த நாடகக் கம்பெனியின் உரிமையாளர். எனினும், ``சக்தி" கிருஷ்ணசாமியின் முழுப்பொறுப்பில் நாடக கம்பெனி நடந்து வந்தது.

இந்த கம்பெனியில் முக்கிய நடிகர்களாக இருந்த எம்.என். நம்பியார், எஸ்.வி.சுப்பையா ஆகியோர் ஜுபிடர் பிக்சர்ஸ் தயாரித்த சினிமா படங்களில் நடிப்பதற்காக கோவை சென்று விட்டனர். எனவே, சக்தி நாடக சபைக்கு அனுபவம் மிக்க நடிகர்கள் தேவைப்பட்டனர்.
சிவாஜியின் பால்ய நண்பரான கரந்தை சண்முக வடிவேலு சக்தி நாடகசபை சார்பில் காஞ்சீபுரம் வந்து, அண்ணாவை சந்தித்தார். ``சக்தி நாடக சபாவுக்கு நல்ல நடிகர்கள் தேவைப் படுகிறார்கள். நீங்கள் சிவாஜிகணேசனை அனுப்பி வைத்தால் உதவியாக இருக்கும்" என்று கூறினார்.

அண்ணா சிறிது யோசித்தார். பிறகு சிவாஜி கணேசனை அழைத்து, ``கணேசா!நீ சக்தி நாடக சபாவுக்குப் போ. உன்னை எப்போது திரும்பக் கூப்பிட வேண்டுமோ அப்போது அழைத்துக் கொள்கிறேன்" என்றார். இதனால், அண்ணாவிடம் பிரியா விடை பெற்று சக்தி நாடக சபாவுக்கு சிவாஜி சென்றார். சக்தி நாடக சபை அப்போது திண்டுக்கல்லில் நாடகங்கள் நடத்திக் கொண்டிருந்தது. அந்தக் குழுவினர் சிவாஜிக்கு நல்ல மரியாதை கொடுத்தனர். முக்கிய வேடங்கள் அவருக்குக் கிடைத்தன.





திண்டுக்கல்லில் இருந்து பெங்களூர் சென்றுவிட்டு, வேலூர் சக்தி நாடகசபா முகாமிட்டது. அப்போது ``நூர்ஜஹான்" என்ற நாடகத்தில், நூர்ஜஹானாக சிவாஜி நடித்தார். அந்த நாடகத்தில் சிவாஜிக்கு வேஷப்பொருத்தம் பிரமாதமாக இருக்கும். அசல் நூர்ஜஹான் போலவே இருப்பார்; அழகாக நடனம் ஆடுவார். ``நேஷனல் பிக்சர்ஸ்" பி.ஏ.பெருமாள், இந்த நாடகத்தைப் பார்த்தார். சிவாஜியின் நடிப்பு அவரை வெகுவாகக் கவர்ந்தது. ``எதிர்காலத்தில் மிகப்பெரிய நடிகராக சிவாஜி வருவார்" என்று நினைத்தார்.


இந்த சமயத்தில், தேவி நாடக சபையினர் ``பராசக்தி" என்ற நாடகத்தை நடத்தி வந்தனர். அந்த நாடகத்தை பெருமாள் முதலியார் பார்த்தார். அந்த நாடகத்தின் கதை அவருக்கு மிகவும் பிடித்துப் போய்விட்டது.``பராசக்தி கதையை படமாகத் தயாரிக்க வேண்டும். அதில் சிவாஜி கணேசனை கதாநாயகனாக நடிக்க வைக்க வேண்டும்" என்று தீர்மானித்தார். நினைத்ததை செயலில் காட்டினார்.

இதற்குப் பல வித எதிர்ப்புகள் கிளம்பின. படத்துக்குப் பண உதவி செய்த ஏ.வி.எம். செட்டியாரும், புதுமுகத்தை வைத்துப் படமெடுப்பதை அவ்வளவாக விரும்பவில்லை. மேக்கப் டெஸ்டுக்காகத் திருச்சியிலிருந்து சென்னைக்கு விமானத்தில் அழைத்து வரப்பட்ட கணேசனைப் புகைப்படமெடுத்து வசனம் பேசச் செய்தனர். திரைப்படத்தில் வரும் ‘சக்ஸஸ்!’ என்ற வசனத்தைப் பேசினார் கணேசன். ‘சக்ஸஸ்’ என்பது ‘சத்தத்’ என்று கேட்பதாகப் பலரும் குறை சொல்லிக் கணேசனைப் புறக்கணிக்க நினைத்தனர். ஆனால் பி.ஏ. பெருமாள் முதலியார் மட்டும், தான் படமெடுத்தால் கணேசனை வைத்துத் தான் எடுப்பது என்ற முடிவு செய்து விட்டிருந்தார். அவரின் திடமான தீர்க்க தரிசனத்தால் திரையுலகுக்குக் கிடைத்த ஒரு பொக்கிஷம் தான் நடிகர் திலகம் சிவாஜி கணேசன்.



``பராசக்தி"யில் நடித்துக் கொண்டிருந்தபோதே, சிவாஜி கணேசனுக்குத் திருமணம் நடந்து விட்டது. சொந்த அக்காள் மகள் கமலாவை அவர் மணந்தார். பெரியவர்களால் முடிவு செய்யப்பட்ட இத்திருமணம், சுவாமிமலையில் 1952 மே 1-ந் தேதி நடைபெற்றது. காளிங்கராயர் குல மகள் ராஜாமணி அம்மையார் விருப்பப்படி ஆறுபடைவீட்டில் ஒன்றான சுவாமி மலை முருகப் பெருமானின் சந்நிதியில் சீர்திருத்த முறைப்படி எளிமையாக இத்திருமணம் நடந்தது. திருமணத்துக்கு மு.கருணாநிதி, எம்.ஜி. ஆர்., நேஷனல் பிக்சர்ஸ் அதிபர் பெருமாள் முதலியார், கவிஞர் கண்ணதாசன், அரங்கண்ணல், டி.ஏ. மதுரம், எஸ்.வி. சகஸ்ரநாமம், டைரக்டர்கள் கிருஷ்ணன்.

























திருச்சியில் தமிழாசிரியராக இருந்த ரத்தினம் பிள்ளை, திருக்குறளைப்படித்து திருமணத்தை நடத்தி வைத்தார். கண்ணதாசன் மாலையை எடுத்துக் கொடுக்க அதை மணமகளுக்கு அணிவித்தார், சிவாஜி. பின்னர் தாலி கட்டினார். மணமக்களை கண்ணதாசன் வாழ்த்தி பேசினார். ஓட்டலில் இருந்து எடுத்து வந்த சாப்பாடு அனைவருக்கும் பரிமாறப்பட்டது. கல்யாணச் செலவு 500 ரூபாய்தான் என்று சிவாஜி கூறியுள்ளார்.
இப்படி தான் திருமணம் செய்து கொண்டதால் வருத்தப்பட்ட சிவாஜி தனது தம்பி சண்முகத்தின் திருமணத்திற்கு 100 புரோகிதர்களை வைத்து ஆச்சாரப்படி நடத்தினார்.

திருமணத்துக்குப் பிறகு சென்னை கோடம்பாக்கத்தில் வீடு பார்த்து, மனைவியுடன் குடியேறினார், சிவாஜிகணேசன். சில நாட்கள் கழித்து ராயப்பேட்டை பெசன்ட் ரோட்டுக்கு குடிபோனார். அங்குதான் இப்போது சிவாஜி பிலிம்ஸ் அலுவலகம் இருக்கிறது. ராம்குமார், பிரபு என்ற மகன்களும், சாந்தி, தேன்மொழி என்ற மகள்களும் உள்ளனர்.

`பராசக்தி"யில் சிவாஜிகணேசன் நடித்துக் கொண்டிருந்த போதே வேறு சில படவாய்ப்புகள் வந்தன. தமிழை அவர்போல் உச்சரித்த நடிகர்கள் இதுவரை பிறக்கவில்லை. தமிழ் மொழியில் அவரளவுக்கு அதிகப்படியான எண்ணிக்கையில் தமிழ் வார்த்தைகளைப் பேசி நடித்த நடிகர் வேறு யாருமே இருக்க முடியாது. ஒரு நடிகன் வேஷம் கட்டுவதிலேயே 50 சதவிகித மார்க் வாங்கிவிட வேண்டும் என்று சொல்வார். விதவிதமான வேடம் அணிந்து பார்ப்பதில் அவருக்கு அடங்காத வெறி உண்டு. சரித்திர நாயகர்களாக இருந்தாலும் சரி, புராண வேடங்களாக இருந்தாலும் சரி, சமூகத்தில் காணும் வித்தியாசமான மனிதரின் வேடமாக இருந்தாலும் சரி அவற்றை ஆதாரபூர்வமாகச் செய்து பார்க்க பெரிதும் முயற்சி எடுத்துக் கொள்வார் சிவாஜி.

"கட்டபொம்மன்', "கர்ணன்', "ராஜ ராஜ சோழன்', "அரிச்சந்திரன்', "ஜஹாங்கீர்' என ராஜா வேடம் போடும்போது உடைகள், கீரிடம், முகத்தின் தோற்றம், தாடி, மீசை, புருவம் இவற்றிலும், தலை முடியிலும் மாற்றங்களைத் தெளிவாகக் செய்வார். அதேபோல் ராமன், இராவணன், கிருஷ்ணன், நாரதர் என்று புராண வேடங்களை ஏற்கும்போதும் தேர்ந்த நாடகத்துறை உடையலங்கார நிபுணர்களை வைத்துக்கொண்டு காதில் அணியும் தோடு, ராமர், பரசுராமர், அர்ஜுனன் கையில் உள்ள ஆயுதங்களை எல்லாம சரி பார்ப்பார்.

"பாடி லாங்குவேஜ்' என்று சொல்கிற உடல்மொழி அவருக்கு முதல் படத்திலேயே வந்து விட்டதை "கல்லைத்தான், மண்ணைத்தான், காய்ச்சித்தான், குடிக்கத்தான், கற்பித்தானா' என்று நடிக்கும் ஒரே காட்சியை "பராசக்தி' படத்தில் பார்த்தாலே புரிந்துவிடும்.
"உயர்ந்த மனிதன்' உச்சகட்ட காட்சியில் திருட்டுப் பழி சுமத்தப்பட்ட தன்னை பிரம்பால் அடிக்கும் காட்சியில் பிரம்பு நாலாய் தெரிக்கும் அளவிற்கு விளாசித் தள்ளி விட்டார். அவரைக் கட்டுப்படுத்த செüகார் ஜானகியும், பாரதியும் எவ்வளவோ முயன்று சட்டையை எல்லாம் கிழித்துக் கூச்சல் போட்டனர். இன்றும் அந்தக் காட்சியைப் பார்த்து கலங்காதவர் இருக்க முடியாது. ஜெமினியின் "விளையாட்டுப் பிள்ளை' படத்தில் ஒரு காட்சியில் பத்மினியின் கன்னத்தில் ஒரு அறை விட்டார். காது தோடு கழன்று ஓடி அடுத்த படப்பிடிப்புத் தளத்தில் விழுந்து விட்டது.

உலகின் எந்த ஒரு நடிகனும் ஒரே நாளில் மூன்று வித வேடங்கள் ஏற்று நடித்ததில்லை. "டென் கமாண்ட்மெண்ட்ஸ்', "பென்ஹர்', "லாரன்ஸ் ஆஃப் அரேபியா', "ஓமர் முக்தார்', "சாந்தி' போன்ற எந்தப் படத்து ஹீரோவும் மூன்று ஆண்டுகள், ஐந்து ஆண்டுகள் என்று ஒப்பந்த அடிப்படையில் ஒரு படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டு அந்தப் படம் முடிந்த பின்னரே அடுத்த படம், வேடம் பற்றி சிந்திப்பார்கள். ஆனால் சிவாஜி காலையில் ரிக்ஷாக்காரன் வேடம் போட்டு நரைத்த தாடியும், பரட்டைத் தலையும் கிழிந்த கோட்டுமாய் கைரிக்ஷா இழுத்து நடிப்பார். பிற்பகல் மகாவிஷ்ணு வேடம் போட்டு, பாடல் காட்சியில் நடிப்பார். இரவு அந்த வேடத்தைக் கலைத்துவிட்டு பள பளப்பாக மின்னும் கோட்டும் சூட்டுமாக "சொர்க்கம்' படத்தில் நடிப்பார். ஹாலிவுட்டில் எந்த நடிகரும் இப்படி செய்திருக்க வாய்ப்பில்லை.

தமிழில் தயாரிக்கப்பட்ட முதல் சினிமாஸ்கோப் சித்திரமான "ராஜ ராஜ சோழன்' படத்தில் நடித்த அனுபவத்தை கீழ்க்கண்டவாறு விவரிக்கிறார் சிவாஜி.

""நான் ஒரு சோழன். தஞ்சாவூர்க்காரன். ஆகையால் நான் ராஜ ராஜ சோழனாக நடித்தது எனக்கு மிகப்பெருமை. ஏனென்றால் என்னுடைய தாத்தா பாட்டன் ரோலை நானே நடித்தேன். அந்தப் படத்தை ஆனந்த் தியேட்டர் உரிமையாளர் திரு. உமாபதி எடுத்தார். அந்தப் படத்தை ஏ.பி. நாகராஜன் இயக்கினார். சரித்திர நாடகம், சரித்திரக் கதைகள் எடுக்கும்போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். அதிகம் செலவு செய்து எடுக்க வேண்டும். பிரம்மாண்டமான யுத்தக் காட்சிகளெல்லாம் காண்பிக்க வேண்டும். இப்படியெல்லாம் காண்பித்தால்தான் "ராஜ ராஜ சோழன்' நன்றாக இருக்கும்.



ஒரு சின்ன பாளையரக்காரனான கட்டபொம்மனையே பெரிய சக்ரவர்த்திபோல் காண்பித்தோம் அல்லவா? அப்படியிருக்க சக்ரவர்த்தி ராஜ ராஜ சோழனை எவ்வளவு சிறப்பாக காண்பிக்க வேண்டும்? அதையெல்லாம் அந்தப் படத்தில் சரியாகக் காண்பிக்கவில்லை. "ராஜ ராஜ சோழன்' படத்தை ஒரு குடும்ப நாடகம் போலதான் எடுத்திருந்தார்கள். நாடகம் போடும்போது அது சரியாக இருந்திருக்கலாம். ஆனால் திரைப்படத்திற்கு இந்த பாணி ஒத்து வருமா? இந்தப் பக்கம் மகன், அந்தப் பக்கம் அக்கா, இன்னொரு பக்கம் மனைவி, மற்றொரு பக்கம் மருமகள் என்று குண்டு சட்டிக்குள் குதிரை ஓட்டியதால் படம் அவ்வளவு சிறப்பாக ஓடவில்லை'' என்று "ராஜ ராஜ சோழன்' படம் குறித்து விமர்சித்துள்ளார் சிவாஜி.

இதுதான் அவரது தனி குணம். தான் நடித்து விட்டோம் என்பதற்காக தனது படங்களைப் பற்றி உயர்வாகப் பேசுகின்ற போக்கை சிவாஜி என்றுமே கடைப் பிடித்ததில்லை.

மற்றவர்கள் விமர்சிப்பதற்கு முன்னால் தனது படங்கள் பற்றி அவரே விமர்சித்து விடுவார். தனது பலம் என்ன பலவீனம் என்ன என்பதை பரிபூரணமாக உணர்ந்திருந்ததால்தான் தனது திரையுலகப் பயணத்தில் எந்தத் தடுமாற்றமும் இன்றி அவரால் வெற்றி நடை போட முடிந்தது.

1955 வரை திராவிட இயக்க அரசியலில் ஈடுபாடு கொண்டிருந்த இவர், 1961 முதல், காங்கிரஸ் கட்சியில் இணைந்து செயல்பட்டார். 1982ல் நாடாளுமன்ற மேலவை உறுப்பினர் ஆனார்.

ஒரு முறை பெருந்தலைவர் காமராஜரும். ராஜாராம் நாயுடுவும் கொட்டும் மழையில் சிவாஜி கணேசனின் பிறந்த நாளுக்காக அவரது வீட்டிற்கு வந்தார்கள். காமராஜர் சிவாஜி கணேசனுக்கு இரண்டு ஆள் உயரத்திற்கு மாலை வாங்கி வந்து அணிவித்தார். 'நன்றாக இரு' என்று மனதார வாழ்த்திவிட்டுப் போனார். அதன் பிறகு 'பாட்டும் பரதமும்' படத்தின் படப்பிடிப்புக்குச் சென்றார் சிவாஜிகணேசன். திரைப் படப்பிடிப்பு மும்முரமாக நடந்துக் கொண்டிருக்கிறது. அந்த நேரத்தில் தளபதி ராம்குமார் வந்தார். அவருடன் சிவாஜி கணேசனின் நண்பரான அப்பன்ராஜ் என்பவரும் வந்திருந்தார். சிவாஜி கணேசனை வெளியே அழைத்துச் சென்று பெருந்தலைவர் காமராஜர் இறந்து விட்டார் என்ற செய்தியைத் தெரிவித்தனர்.

பெருந்தலைவர் காமராஜர் மறைவுக்குப் பிறகு அனைவரும் இந்திராகாந்தி அம்மையார் கட்சியில் போய்ச் சேர்ந்தார்கள். சிவாஜி கணேசன் மட்டும் சேரவில்லை. காமராஜர் விட்டுச் சென்ற பணிகள் என்னென்ன இருக்கின்றதோ அவைகளை சொல்லுங்கள். நான் பிரதமராக இருக்கின்றேன். எல்லாவற்றையும் செய்து கொடுக்கிறேன் என்றார் அன்றையப் பிரதமராக இருந்த இந்திராகாந்தி. அதன்பிறகுதான் இந்திரா காங்கிரசில் சிவாஜி கணேசன் சேர்ந்தார்.

இந்திரா காங்கிரஸில் பணியாற்றிக் கொண்டிருந்த சிவாஜி கணேசனை ராஜ்யசபா எம்.பி. ஆக்கினார்கள். ராஜீவ் காந்தியைப் பிரதமராக்குவதற்கு சிவாஜிகணேசன் பாடுபட்டார். அப்போதுதான் காங்கிரஸ் கட்சியில் இருந்து பிரிந்தவர்கள் எல்லோரும் க. காங்கிரஸ், மு. காங்கிரஸ், வ. காங்கிரஸ் என்றெல்லாம் ஆரம்பித்தார்கள்.

1987ல் காங்கிரஸ் கட்சியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளைத் தொடர்ந்து, சிவாஜி கணேசனும் வெளியே வந்து' தமிழக முன்னேற்ற முண்ணனி' என்ற புதிய கட்சியை ஆரம்பித்தார். சிவாஜி ரசிகர் மன்றத்து பிள்ளைகள் அவருக்குப் பின்னணியாக நின்றார்கள். அப்போது சட்டமன்றத்துக்குத் தேர்தல் வந்தது. ஜானகி எம்.ஜி.ஆர் அணியும், சிவாஜியின் தமிழக முன்னேற்ற முன்னணியும் இணைந்து செயல்பட்டது. தேர்தலில் நிற்பதற்கு சிவாஜி கணேசன் கட்சி முயற்சித்த போது 50 சீட் கொடுத்தார்கள். தனது சொந்தப் பணத்தை மற்றும் பாங்கில் வழங்கிய கடன்களையும் வைத்து கட்சிக்காக செலவழித்தார். தேர்தலில் நின்றார். தோல்வியும் அடைந்தார்.

தேர்தல் தோல்விக்குப் பிறகு அவரது மன்றத்துப் பிள்ளைகள் உடன் நின்றார்கள். மற்றவர்கள் ஓடி விட்டார்கள். சிவாஜி கணேசன் அரசியலில் பல நேரங்களில் எடுப்பார் கைப்பிள்ளையாக இருந்திருக்கிறார். அரசியலுக்குள்ளே அரசியல் பண்ணுவது அவருக்கு ஒத்து வரவில்லை இருந்தாலும் தெரிந்தோ தெரியாமலோ தான் அரசியலுக்கு வந்ததைப்பற்றி வருத்தப்பட்டார்.

அரசியலே வேண்டாமென்று ஒதுங்கியிருந்த நடிகர்திலகம் சிவாஜிகணேசனை மீண்டும் அரசியலுக்கு வரவழைத்தவர் முன்னாள் பிரதமர் வி.பி.சிங், தனது ஜனதா தளம் கட்சியின் தலைவராகப் பணியாற்றும்படி சிவாஜி கணேசனைக் கேட்டுக் கொண்டார். முன்னாள் மத்திய மந்திரி ஜாணஜ் பெர்னான்டஸ் சிவாஜி கணேசனின் நண்பராக இருந்து வந்ததால் அவரது வேண்டுகோளின்படியும் சிவாஜி ஜனதா தளம் கட்சிக்கு பணியாற்ற வேண்டியதாயிற்று.



கொஞ்ச நாள் ஜனதா தளத்தில் இருந்த சிவாஜிகணேசன் கொஞ்சம் கொஞ்சமாக அந்தக் கட்சியை விட்டு விலகி வெளியே வந்தார். அதன்பிறகு அரசியலில் தனக்கு ஏற்பட்ட பிரச்னைகளை, அனுபவங்களாகக் கற்றுக் கொண்ட பாடங்களை தனது கலையுலக நண்பர்களுக்குத் தெரிவித்தார். அரசியலிலிருந்து வெளியில் வந்த சிவாஜி கணேசன் மீண்டும் நடிகனாகி வலம் வரத் தொடங்கினார்.
இந்திய அரசு இந்திய நாட்டின் கலைஞர்களுக்கு வழங்கப்படும் விருதுகளில்" தாதா சாகிப் பால்கே" விருது மிகவும் மரியாதைக்குரியது. இந்த விருதை நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்குக் காலம் தாழ்த்தி மிகத் தாமதமாக 1997ஆம் ஆண்டு அப்போதைய இந்திய ஜனாதிபதி மாண்புமிகு சங்கர் தயாள் சர்மா வழங்கினார். இந்த விருதைப் பெற்றதற்காக நடிகர் திலகம் சிவாஜி கணேசனை அண்டை மாநிலங்களான கர்நாடகா, ஆந்திரா, கேரளா போன்ற மாநிலங்களைச் சேர்ந்தவர்களும் அழைத்து விழா நடத்திக் கௌரவித்தார்கள். ஸ்ரீலங்காவிலும் இது போன்ற விழாவை நடத்தினார்கள். இவை எல்லாவற்றுக்கும் மேலாக சிவாஜிகணேசன் அவர்களுக்கு தேசபக்தியுள்ள ஒரு இந்தியன். நாட்டின் நல்ல பிரஜை என்பதற்காக வழங்கப்பட்ட "பத்மஸ்ரீ" 'பத்மபூஷன்' விருதுகளையே மேலான விருதாகக் கருதினார் நடிகர் திலகம் சிவாஜிகணேசன்.
தென்னிந்திய திரைப்படத் துறையில், சிறந்த நடிகராக விளங்கிய சிவாஜி கணேசன் அவர்கள், சுவாசப் பிரச்சினைக் காரணமாக, சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, ஜூலை 21, 2001 ஆம் ஆண்டு தனது 74வது வயதில் மரணமடைந்தார்.

வெளிநாட்டு பயணம்


டென்னிஸ் குக்ஸ் 

சிவாஜி கணேசனுடன் டென்னிஸ் குக்ஸ் என்ற வெளியுறவுத் துறை அதிகாரியும் வேறு இரண்டு நண்பர்களும்தான் அமெரிக்காவைச் சுற்றிவந்தனர். டென்னிஸ் குக்ஸ் சரளமாகத் தமிழ் பேசுபவர். அமெரிக்கத் திரையுலகின் தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள், நடிகர்கள், கதை வசனகர்த்தாக்கள் என்று அனைவருமே எங்கு போவதாக இருந்தாலும் மக்கள் தொடர்பு அதிகாரி, விளம்பரத் தூதர், போட்டியாளர்களை வசைபாடித் தூற்றுபவர் என்று ஐந்தாறு பேர் உள்ள சிறிய படை இல்லாமல் செல்ல மாட்டார்கள்.

சிவாஜி எளிமையாக வந்திருப்பதை வியப்போடு பார்த்தார்கள். இங்கு மட்டுமல்ல, இந்தியாவிலும் தனக்கு இப்படி யாருமில்லை என்றபோது, அவர்களுடைய விழிகள் வியப்பால் விரிந்தன. எனக்கு நானே விளம்பரத் தூதர் என்று சிரித்துக்கொண்டே அவர் சொன்னபோது ஆடிப்போனார்கள்.






சிவாஜி போன இடங்களிலெல்லாம் அனைவரும் கேட்ட கேள்விகள், உங்களுடைய சொந்த வாழ்க்கையை நிருபர்கள் மோப்பம் பிடித்துவிடாமலிருக்கவும், சொந்த விஷயங்கள் வெளியே பேசப்படாமலிருக்கவும் என்ன உத்தியைக் கையாளுகிறீர்கள் என்பவைதான். எங்கள் நாட்டு சினிமா நிருபர்கள், நாங்கள் நடிக்கும் படத்தின் கதை, அதில் எங்களுடைய கதாபாத்திரம் ஆகியவற்றோடு நிறுத்திக்கொள்வார்கள் என்று பதிலளித்திருக்கிறார்.







உங்கள் திரைப்படங்களில் முத்தக் காட்சிகளுக்கு அனுமதி இல்லையாமே, ஆணும் பெண்ணும் அன்பாக இருப்பதைக் காட்ட என்ன செய்வீர்கள் என்று கேட்டுள்ளனர். லேசாகக் கட்டி அணைப்பதன் மூலமும் கைகளைப் பற்றுவதன் மூலமுமே காதலையும் உணர்ச்சிகளையும் வெளிப்படுத்துவோம், அதுவே போதுமானது என்றார். ஆனால், இந்தப் பதில் அமெரிக்கர்களுக்குத் திருப்தி தரவில்லை. அழுத்தமாக ஒரு முத்தம் தருவதைப் போல இதுவெல்லாம் வருமா என்று கேட்டுள்ளனர். இன்னும் சிலர், இந்தியர்கள் பாவம், எல்லா உணர்ச்சிகளையும் அடக்கிக் கொள்பவர்கள்போல இருக்கிறது என்று ஆதங்கப்பட்டுள்ளனர்.

ஹாலிவுட்டின் முன்னணி நடிகர்கள் பிரெடரிக் மார்ச், ஹென்றி ஃபோன்டா, ஷெல்லி விண்டர்ஸ், பர்ட் லங்காஸ்டர் ஆனாலும் சரி, புதிதாக நடிக்க வந்தவர்களானாலும் சரி, எல்லோருடனும் உற்சாகமாகவும் கண்ணியமாகவும் பேசியிருக்கிறார் சிவாஜி.

தொலைக்காட்சியில் நடிக்க வரும் பயிற்சியற்ற கலைஞர்களுக்கான பயிற்சிப் பள்ளிக்கும் சென்றிருக்கிறார். சிறுசிறு வேடங்களை ஏற்று படிப்படியாக முன்னேறி மாபெரும் கலைஞனான அவரைச் சக கலைஞர்கள் மரியாதையோடும் பிரமிப்போடும் பார்த்தார்கள்.

அவர்களுடைய நாடக அரங்க அமைப்புகளையும் காட்சி ஜோடனைகளையும் காட்சிகளை மாற்றும் உத்தியையும் கருவிகளையும் கண்டு வியந்தார் சிவாஜி. ரேடியோ சிட்டி மியூஸிக் ஹால் என்ற அந்த அரங்கத்தைப் போல இந்தியாவிலும் நிறைய உருவாக வேண்டும் என்ற ஆசையை சிவாஜி உரக்க வெளிப்படுத்தினார்.

இந்தியத் திரைப்படங்கள் அமெரிக்காவில் ஓடாது என்று ஒரு விநியோகஸ்தர் கூறியபோது, அதை வன்மையாக மறுத்தார் சிவாஜி. சத்யஜித் ராய் படம் விதிவிலக்கு என்றார் ஒரு அமெரிக்கர். நீங்கள்கூட சத்யஜித் ராய் படத்தில் நடித்ததால்தானே புகழ்பெற்றீர்கள் என்றுகூட ஒருவர் கேட்டார். கேள்வி கேட்டவர்களின் அறியாமையை சிவாஜி பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.

பெருமிதத்தோடு வழியனுப்பிய சென்னை

அமெரிக்க அரசின் அழைப்பின்பேரில், இந்தியாவின் நல்லெண்ணத் தூதராக பிரிட்டன், ஐரோப்பா, அமெரிக்கா, ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு 1962-ல் இரண்டு மாத சுற்றுப் பயணம் மேற்கொண்டார் சிவாஜி. மீனம்பாக்கம் விமான நிலையத்திலிருந்து தனி விமானத்தில் பம்பாய் சென்று, அங்கிருந்து அமெரிக்கா சென்ற அவரை வழியனுப்ப வந்தவர்களின் எண்ணிக்கையும் உற்சாகமும் சென்னை மாநகரம் அதுவரை கண்டிராதது.

இந்தியாவைச் சேர்ந்த ஒரு திரைப்பட நடிகரை அமெரிக்க அரசு கெளரவித்திருப்பது அதுவே முதல் முறை. சாதாரண சுற்றுலாப் பயணி அல்ல; முக்கிய அரசு விருந்தினர் என்ற அந்தஸ்து அவருக்கு. திறந்த ஜீப்பில் சென்னை விமான நிலையத்தைச் சுற்றிவந்த சிவாஜி, தன்னுடைய ரசிகர்களின் வாழ்த்துகளையும் ஆசிகளையும் அன்போடு தலைவணங்கி ஏற்றார்.

புறப்படுவதற்கு 14 நாட்களுக்கு முன்பாகத் தினமும் ஒரு பாராட்டுக் கூட்டம், வழியனுப்பு விழா என்று 34 வயது சிவாஜியை அயரவைத்தனர் பல்வேறு திரையுலக நண்பர்களும் சங்க நிர்வாகிகளும். வருவதற்கு இரண்டு மாதங்களாகும் என்பதால், கையில் இருக்கும் திரைப்படங்களை முடித்துக்கொடுக்க அன்றாடம் 18 மணி நேரம் இடைவிடாமல் உழைத்தார் சிவாஜி. உரிய நேரத்துக்குச் சாப்பாடு, தூக்கம் இல்லாமல் செயல்பட்டதால் வழியனுப்பு நிகழ்ச்சிகளில்கூடக் களைப்போடுதான் காணப்பட்டார். அவசரமான இந்த நேரத்திலும் அவர் வேகமாக நடித்துக்கொடுத்ததுதான் மூன்று வேடப் படமான ‘பலே பாண்டியா’.

இந்த விழாக்களிலேயே முக்கியத்துவம் வாய்ந்தது சர்வதேசத் திரைப்படச் சங்கம் அளித்த வரவேற்பு நிகழ்ச்சி. அமெரிக்கத் துணைத் தூதரகத்தின் அதிகாரி டாக்டர் தாமஸ் டபுள்யு. சைமன்ஸ் தலைமை வகித்தார். நகரின் தனி அடையாளமான மவுன்ட் ரோடு 14 மாடி எல்ஐசி கட்டிடத்தின் புல்தரையில் நிகழ்ச்சி நடந்தது. இந்திய, அமெரிக்கக் கொடிகள் மட்டுமல்லாது பல்வேறு நாடுகளின் தேசியக் கொடிகளும் அந்த இடத்தை அலங்கரித்தன. சிவாஜி கணேசன் இந்தியாவுக்கு மட்டுமே உரியவரல்ல, ‘உலக நாயகன்’ என்று மறைமுகமாகச் சுட்டிக்காட்டின கொடிகள்.

இந்திய, அமெரிக்கத் திரைப்பட நடிகர்கள் பரஸ்பரம் இரு நாடுகளையும் சென்று பார்ப்பதன் மூலம் இரு நாட்டு மக்களிடையே புரிதல்களும் அன்பும் பெருகவும், உறவு வலுப்படவும் உதவும் என்று தூதர் தாமஸ் சைமன்ஸ் சுட்டிக்காட்டினார். சர்வதேசத் திரைப்பட சங்கத்தின் ஹாலிவுட் கிளை நிர்வாகிகள் முதல் முறையாக இந்தியத் திரைப்பட நடிகர் ஒருவரைக் கௌரவிப்பதைப் பூரிப்புடன் அவர் கூறினார். நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கிய தென்னிந்திய திரைப்பட வர்த்தகசபைத் தலைவர் ஏ.எல்.சீனிவாசன், சிவாஜியை வழியனுப்பும் நிகழ்ச்சியில் சர்வதேசத் திரைப்பட சங்கத் தொடக்கமும் அமைவது மிகவும் பொருத்தமானது என்றார்.

சர்வதேசத் திரைப்பட சங்கப் புரவலரும் எல்ஐசி மண்டல மேலாளருமான எச்.பலராம் ராவ், நடிகர் ஜெமினி கணேசன் ஆகியோர் வரவேற்றுப் பேசினர். நடிகை சவுகார் ஜானகி நன்றி கூறினார். எம்.எல்.வசந்தகுமாரியின் இறைவணக்கப் பாடலுடன் நிகழ்ச்சி தொடங்கியது. ‘ஃபாலோ தி சன்’ என்ற பயணக் கதைப் படத் திரையிடலுடன் நிகழ்ச்சி நிறைவுற்றது
.


விருதுகள்:

1962 – சிறப்பு விருந்தினராக அமெரிக்க நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது, நயாகரா மாநகரின் ‘ஒரு நாள் நகரத் தந்தை’ என கௌரவிக்கப்பட்டார்.

ஆப்பிரிக்க - ஆசியத் திரைப்பட விழாவில் (கெய்ரோ,1960), சிறந்த நடிகருக்கான விருது,

கலைமாமணி விருது (1962 - 1963), பத்ம ஸ்ரீ விருது- 1966,

பத்ம பூஷன் விருது- 1984,

செவாலியர் விருது -1995,

ஃபிரெஞ்சு மொழியில் ‘செவாலியே’ என்பதற்கு மாவீரன் என்று பொருள். ஃபிரான்ஸை ஆண்ட மாவீரன் நெப்போலியனால் 1802-ல் செவாலியே விருது வழங்கும் விழா தொடங்கப்பட்டது. சிவாஜிக்கு ‘செவாலியே விருது’ வழங்கும் விழா, 1995 ஏப்ரல் 22-ம் தேதி சேப்பாக்கம் கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நடைபெற்றது. இதில், ரஜினி, கமல், தேவ் ஆனந்த், நாகேஸ்வர ராவ், சிரஞ்சீவி, மம்முட்டி, சத்யராஜ், ஸ்ரீதேவி, பாலச்சந்தர் என திரையுலகப் பிரமுகர்கள் பலரும் பங்கேற்றனர். விழாவின் சிறப்பு விருந்தினர் அன்றைய முதல்வர் ஜெயலலிதா. ‘செவாலியே’ விருதை ஒரு தட்டில் ஏந்தியபடி நடிகை மீனா வந்தார். அதைப் பெற்ற ஃபிரான்ஸ் தூதர் பிலீப் பெடிட், சிவாஜியின் சட்டையில் அந்த விருதை அணிவித்து,  அதற்கான சான்றிதழையும் அளித்தார். “சிவாஜியைத் தவிர இந்த விருதுக்குப் பொருத்தமானவர் வேறு யாரும் இருக்க முடியாது” எனப் புகழாரம் சூட்டினார் பிரான்ஸ் தூதர் பிலீப் பெடிட்,

தாதாசாகெப் பால்கே விருது - 1996 மற்றும் பல திரைப்படம் சார்ந்த விருதுகளை தனது நடிப்பு திறனுக்காக பெற்றிருக்கிறார் நடிகர் திலகம் சிவாஜி.

1) நடிகர் திலகம் முதன்முதலில் போட்ட வேடம் பெண் வேடம் தான். உப்பரிகையில் நின்றுகொண்டு ராமனைப் பார்க்கும் சீதை வேடம்தான் சிவாஜி ஏற்ற முதல் பாத்திரம்.

2) 1952-ல் நேஷனல் பிக்சர்ஸ் தயாரித்த 'பராசக்தி'யில் 'குணசேகரன்' பாத்திரத்தில் சிவாஜியைக் கதாநாயகனாக்க படத் தயாரிப்பாளர் பி.ஏ.பெருமாள் முடிவு செய்தபோது, பலரும் எதிர்ப்புத் தெரிவித்தனர். எதையும் காதில் வாங்கிக்கொள்ளாமல் சிவாஜியை ஹீரோவாக்கிய பெருமை பெருமாளுக்கே உண்டு.



3) எகிப்து அதிபர் கமால் அப்தெல் நாசர் இந்தியாவிற்கு வருகை தந்த போது, அப்போதைய இந்திய பிரதமர், ஜவகர்லால் நேரு அனுமதி வழங்கப்பட்ட தனி நபர் சிவாஜி கணேசன் ஆவார்.

4) கலைஞரை 'மூனா கானா', எம்.ஜி.ஆரை 'அண்ணன்', ஜெயலலிதாவை 'அம்மு' என்றுதான் அழைப்பார்.






5) வீரபாண்டிய கட்டபொம்மன், பாரதியார், வ.உ.சி., பகத்சிங், திருப்பூர் குமரன் போன்ற சுதந்திரப் போராட்ட வீரர்களின் பாத்திரங்கள் அனைத்தையும் ஏற்று நடித்தவர் சிவாஜி ஒருவரே.





6) தன்னை 'பராசக்தி' படத்தில் அறிமுகம் செய்த தயாரிப்பாளர் பி.ஏ.பெருமாள் வீட்டுக்கு ஒவ்வொரு பொங்கல் அன்றும் சென்று, அவரிடம் ஆசி பெறுவதை வழக்கமாகவே வைத்திருந்தார் சிவாஜி.

7) திருப்பதி, திருவானைக்கா, தஞ்சை மாரியம்மன் கோயில்களுக்கு யானைகளைப் பரிசளித்துள்ளார்.

8) தமிழ் சினிமா உலகில் முதன்முதலாக மிகப் பெரிய கட்-அவுட் வைக்கப்பட்டது சிவாஜிக்குத்தான். 1957-ல் வெளிவந்த அந்தப் படம் 'வணங்காமுடி!'.



9) சிவாஜி தனது நடிப்புக்காக வாங்கிய முதல் பரிசு ஒரு வெள்ளித்தட்டு. 'மனோகரா' நாடகத்தைப் பார்த்த கேரளா -கொல்லங்காடு மகாராஜா கொடுத்த பரிசு அது.

10) தனது அண்ணன் தங்கவேலு, தம்பி சண்முகம் போன்றவர்களுடன் ஒரே கூட்டுக் குடும்பமாக இறுதிவரை வாழ்ந்தார். சிவாஜி யின் கால்ஷீட், நிர்வாகம் அனைத்தையும் கவனித்துகொண்டவர் அவரது தம்பி சண்முகம்தான்!.

11) சிவாஜி நடித்த மொத்தப் படங்கள் 301. இதில் தமிழ்ப் படங் கள் 270. தெலுங்கில் 9, ஹிந்தி 2, மலையாளம் 1, கௌரவத் தோற்றம் 19 படங்கள்!.

12) ஒவ்வொரு வருடமும் குடும்பத்துடன் தனது சொந்த ஊரான சூரக்கோட்டையில் பொங்கல் விழா கொண்டாடுவதை வழக்கமாகவே வைத்திருந்தார். அன்றைக்குப் பல சினிமா பிரபலங்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொள்வார்கள்.

13) விநாயகர் மீது மிகுந்த பக்திகொண்டவர் சிவாஜி. சிறுவெள்ளி யிலான பிள்ளையார் விக்கிரகத்தை எப்போதும் கூடவே வைத்திருப்பார்!.

14) சிவாஜிக்கு சிகரெட் பிடிக்கும் பழக்கம் இருந்தது. 'பராசக்தி' படத்தை இயக்கிய, இயக்குநர்கள் கிருஷ்ணன் - பஞ்சு முன்னிலையில் மட்டும் சிகரெட் பிடிக்க மாட்டார்!.

15) 'ரத்தத் திலகம்' படத்தில் இவரது நடிப்பைப் பாராட்டி - சென்னை சினிமா ரசிகர் சங்கம் கொடுத்த பரிசு - ஒரு துப்பாக்கி!

16) படப்பிடிப்பின்போது அவர் சம்பந்தப்பட்ட காட்சிகள் எடுக்காத நேரங்களில் மற்றவர்கள் நடிப்பதை உற்றுக் கவனிப்பார். ஆர்வமாகக் கேட்டால் மற்றவர்களுக்கு டிப்ஸ் கொடுப்பார்!

17) சிவாஜியும் எம்.ஜி.ஆரும் இணைந்து நடித்த ஒரே படம் கூண்டுக்கிளி!

18) விதவிதமான கடிகாரங்களை அணிவதில் இவருக்கு அலாதி பிரியம். ஒமேகா, ரோலக்ஸ் போன்ற வாட்சுகளை ஏராளமாக வாங்கிவைத்திருந்தார்!.

19) தன் தாய் ராஜாமணி அம்மையாருக்கு சிவாஜி கார்டனில் சிலை ஒன்றை அமைத்தார் சிவாஜி. அந்தச் சிலையைத் திறந்துவைத்தவர் எம்.ஜி.ஆர்!

20) 'ஸ்டேனிஸ் லா வோஸ்கி தியரி' என்கிற நடிப்புக் கல்லூரி மாணவர்களுக்கான பாடப் புத்தகத்தில் 64 வகையான முகபாவங்களைப் பிரதிபலிக்கும் திறமை பெற்றவர் என்று குறிப்பிட்டு, சிவாஜியின் புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன!

















21) அவரது தீவிரமான ஆசைகளில் ஒன்று தந்தை பெரியார் வேடத்தில் நடிப்பது. கடைசி வரை அது நிறை வேறவே இல்லை!

22) பிரபல தவில் கலைஞர் வலையப்பட்டி, 'தமிழ் சினிமாவில் நீங்கள்தான் எல்லோருக்கும் ரோல் மாடல்' என்று சிவாஜியிடம் சொன்னபோது, 'டி.எஸ்.பாலையா, எம்.ஆர்.ராதா வரிசையில் மூன்றாவதாகத்தான் நான்' என்றாராம் தன்னடக்கமாக!

23) பெருந்தலைவர் காமராஜரின் மீது அளவிட முடியாத அன்புகொண்டவர் இவர். 'அந்த சிவகாமியின் செல்வனின் அன்புத் தொண்டன் இந்த ராஜாமணியின் மகன்' - என்பதுதான் தன்னைப்பற்றி சிவாஜி செய்துகொள்ளும் அடக்கமான அறிமுகம்!.



24) கிரிக்கெட், கேரம்போர்டு இரண்டும் இவருக்குப் பிடித்தமான விளையாட்டுகள்!



25) எத்தனை உச்சத்தில் இருந்தபோதும் பாத்திரத்தின் தன்மையைத் தன்னுடைய இமேஜூடன் பொருத்திப் பார்த்து போலிப் பகட்டுகள் செய்துகொள்ள அவர் என்றுமே தயாராக இருந்ததில்லை. எத்தனை அவலட்சண மேக்கப்பும் போட்டுக்கொண்டு நடிப்பார். இமேஜ் பற்றிய கவலை அவருக்கு இருந்ததில்லை. அதனால்தான் சிவகுமார் காலில் இருக்கும் கணையாழியை இவர் தரையில் படுத்து வாயால் கழற்ற வேண்டும் என்ற காட்சியை ‘மாற்றி எடுக்கலாம்’ என்று சொன்னபோது சிவாஜி ஒப்புக்கொள்ளவில்லை.தரையில் படுத்து நடித்தார். சிவகுமார் கால்விரல்களிலிருந்த கணையாழியைத் தமது வாயால் கழற்றினார்….. எத்தனை மகத்தான மனிதர் இவர்!.

26) சபாஷ் மீனா படத்தில் சந்திரபாபு சிவாஜியின் கன்னத்தில் அறைய வேண்டிய காட்சி. “அப்படியே எடுங்க” என்று சொல்லிவிட்டார். கன்னத்தில் அறைவது என்று காட்சி இருந்தால் ‘அறைவதுபோல் நடிப்பது’ என்ற வரையறையெல்லாம் சந்திரபாபுவிடம் இருக்காது என்பதையும் நிஜமாகவே அறைவார் என்பதையும் நினைவில் வைத்துக்கொள்ளவேண்டும் நாம்.

27) இதேபோன்று பத்மினியிடம் அடி வாங்குவதுபோல் அமைந்த ஒரு காட்சியிலும் எந்தவித இமேஜையும் பார்க்காமல் நடித்தவர் சிவாஜி என்பதைப் புரிந்துகொண்டால்தான் எந்த நிலையிலும் திரைக்கு வெளியே தமக்கு ஏற்பட்டிருந்த புகழையும் செல்வாக்கையும் அவர் நடிப்புக்குள்ளே கொண்டுவந்து அலட்டிக்கொண்டதில்லை என்பதையும் புரிந்துகொள்ள முடியும்.

28) மதிய உணவுத் திட்டத்துக்கு  முதல் நபராக நன்கொடையாக  ஒரு லட்சம் ரூபாயை  அப்போதைய பிரதமர் ஜவஹர்லால்  நேருவிடம் தந்தார்.

29) சின்சியாரிட்டி, ஒழுங்கு, நேரந் தவறாமைக்கு சிவாஜி ஓர் உதாரணம். ஏழரை மணிக்கு ஷுட்டிங் என்றால், ஆறே முக்கால் மணிக்கே செட்டில் ஆஜராகிவிடுவார். தனது வாழ்நாளில் ஒரு நாள்கூடத் தாமதமாக ஷுட்டிங்குக்குச் சென்றது இல்லை.

30) 1962-ம் ஆண்டில் சென்னையில் வெள்ளம் வந்தபோது உறைவிடத்தையும் உடமைகளையும் இழந்துத்  தவித்த குடிசைவாழ்  மக்களுக்கு உணவுப் பொட்டலங்களும் பண உதவியும் செய்தார்.

31) வீரபாண்டிய கட்டபொம்மன்' நாடகத்தை பல இடங்களில்  மேடையேற்றி  அதில் கிடைத்த 32 லட்சம் ரூபாய்க்கும் மேலான தொகையை பல நல்ல காரியங்களுக்குக் கொடையாக வழங்கினார்.

32) பாகிஸ்தானுடன் எல்லைத் தகராறு  நடந்தபோது எல்லையில் பணியாற்றும்  ராணுவ வீரர்களுக்காக கலை நிகழ்ச்சி நடத்தி,  சுமார் 17 லட்சம் ரூபாயை அரசுக்கு அளித்தார்.

33) இலங்கைத் தமிழர்களுக்கு உதவியாக  1,10,000 ரூபாய்  கொடுத்தார்...

34) தன்னுடைய திறமை என்னவோ அதனை இந்த சமூகம் பயன்பெறுகிற முறையில் தொடர்ச்சியாக செய்துகொண்டிருக்கும் கடமைதான் ஒரு கலைஞனுடையது. இதனைத் தொடர்ந்து செய்துகொண்டிருந்ததோடு மட்டுமின்றி இதற்கு அப்பாற்பட்டுத் தன்னைக் கொண்டாடும் சமூகத்திற்குத் தன்னுடைய கடமைகள் என்ற அளவில் நிறைய பொருளுதவிகளையும் செய்துகொண்டிருந்தவர் சிவாஜி. கயத்தாறில் இருக்கும் கட்டபொம்மன் சிலை சிவாஜியால் அமைக்கப்பட்டதுதான்.
35) பெங்களூரில் நாடகங்களுக்காகவென்று கட்டப்பட்ட ரவீந்திர கலாக்ஷேத்திரம் சிவாஜி நாடகம் நடத்திக்கொடுத்த பணத்தில் கட்டப்பட்டதுதான். சீனப்போரின்போது மிகப்பெரிய தொகையை நிதியாக வழங்கியதுடன் எல்லையோரத்தில் இருக்கும் ஜவான்களை மகிழ்விப்பதற்காக இவர் திரட்டிச்சென்ற கலைக்குழுவும் இன்றைக்கும் பேசப்படும் ஒரு விஷயம்










வணிக வளாகங்களாக மாறிவரும் தியேட்டர்களின் வரிசையில் நடிகர் திலகம் சிவாஜியின் 'சாந்தி'யும் இடம்பெற்றுவிட்டது. அதன்படி நடிகர் சிவாஜிகணேசன் குடும்பத்தினருக்கு சொந்தமான 'சாந்தி தியேட்டர்' நேற்றுடன் தன் பொழுதுபோக்கு பணியை நிறுத்திக்கொண்டது.

1961- ம் ஆண்டு, சென்னை அண்ணாசாலையில் தனது ஆசைப்படியே  ஒரு தியேட்டரை வாங்கினார் சிவாஜிகணேசன். இதன் கூட்டுப்பொறுப்பாளர்களில் ஒருவரான ஆனந்த் தியேட்டர் அதிபரான ஜி.உமாபதிதான், அந்த தியேட்டருக்கு 'சாந்தி' என பெயர் சூட்டியிருந்தார். இந்த தியேட்டரை வாங்கிய சிவாஜியின் மூத்த மகளின் பெயரும் சாந்திதான். எனவே அந்த பெயரை அப்படியே வைத்துக்கொண்டார் சிவாஜி. 1961 ம் ஆண்டு கட்டப்பட்ட இந்த தியேட்டரை திறந்துவைத்தவர் அப்போதைய முதல்வர் காமராஜ். இங்கு திரையிடப்பட்ட முதல்படம், பீம்சிங் இயக்கத்தில், சிவாஜி நடித்து வெளியாகி அக்காலத்தில் சக்கைப் போடு போட்ட 'பாவ மன்னிப்பு'.

பின்னர் இந்த தியேட்டரின் மொத்தப் பங்குகளையும் சிவாஜிகணேசனே வாங்கி, முழு உரிமையாளரானார்.  அன்று முதல் சிவாஜிகணேசன் நடித்த படங்கள் அனைத்தும் சாந்தி திரையரங்கத்திலேயே திரையிடப்பட்டன.
திரையுலகில் எம்.ஜி.ஆர் -சிவாஜி போட்டி நிலவிய காலத்தில்,  சிவாஜி ரசிகர்களுக்கு சாந்தி தியேட்டர் ஒரு வரப்பிரசாதம். சிவாஜி படங்கள் எங்கு திரையிடப்பட்டாலும் சென்னையின் இந்த தியேட்டரில் படத்தை காணவே ரசிகர்கள் பெரிதும் விரும்புவர். சென்னையின் முக்கிய அடையாளமாகவும், சிவாஜிக்கு பெருமையளிக்கும் விஷயங்களில் ஒன்றாகவும் இந்த தியேட்டர் கடந்த காலங்களில் விளங்கியது.

தியேட்டரின் முழுநிர்வாகத்தையும், சிவாஜியின் மருமகன்களில் ஒருவரான வேணுகோபால் கவனித்துக் கொண்டார். பின்னாளில் சிவாஜியின் அறிவுறுத்தலின்படி தியேட்டரின் உள்ளே, திரையுலகிற்கு பெருமை சேர்த்த பிரபலங்களின் புகைப்படங்கள் வைக்கப்பட்டன.  அணிவகுத்து நிற்கும் இந்த புகைப்படங்களையும் ஒரு சினிமாவுக்குரிய ஆர்வத்துடன் நின்று ரசிகர்கள் பார்ப்பார்கள். தனது சகப் போட்டியாளரான எம்.ஜி.ஆ ரின் படத்தையும் இங்கு இடம்பெறச்செய்தவர் சிவாஜி கணேசன்.

இந்த புகைப்பட அணிவகுப்பில் தன் படம் வைக்கப்படவில்லையே என  பிரபல கதாநாயக நடிகர் ஒருவர் ஒருமேடையில் வெளிப்படையாகவே தெரிவித்தார். அங்கு படம் வைக்கப்பட்டால்தான்,  தான் பிரபல நடிகர் என்பதை ஒப்புக்கொள்வேன் எனக் கூறினார். சில ஆண்டுகளில் அவரது படம் அங்கு வைக்கப்பட்டது. இத்தகைய அங்கீகாரத்துக்குரிய இடமாகவும் சாந்தி தியேட்டர் விளங்கியது.

சிவாஜி ரசிகர்களைப் பொறுத்தவரை இந்த தியேட்டர் அவர்களுக்கு வெறும் தியேட்டர் மட்டுமல்ல; அவர்கள் ஒன்று கூடும் திருவிழா ஸ்தலம். திரையுலக போட்டியை தவிர்த்து, எம்.ஜி.ஆருக்கும் பிடித்தமான தியேட்டர் சாந்தி தியேட்டர். சென்னையில் பிரபல தியேட்டர் ஒன்றின் திறப்புவிழாவில் கலந்துகொண்டு பேசிய அப்போதைய முதல்வர் எம்.ஜி.ஆர், " சாந்தி தியேட்டரைப்போல தான் பிறந்த ஊரிலும் தம்பி சிவாஜிகணேசன் ஒரு தியேட்டர் கட்டவேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்” என்று தன் ஆசையை வெளிப்படுத்தினார். " கண்டிப்பாக அண்ணனின் ஆசையை நிறைவேற்றுகிறேன்" என அந்த மேடையில் சிவாஜி தெரிவித்தார்.

2005 ம் ஆண்டு சாந்தி திரையரங்கம் புதுப்பிக்கப்பட்டு சாந்தி, சாய்சாந்தி என இண்டு திரையரங்குகளாக மாற்றப்பட்டது. அங்கு சிவாஜி புரொடக் ஷன்ஸ் தயாரித்து, ரஜினிகாந்த் நடித்த 'சந்திரமுகி' படம் 800 நாட்களை தாண்டி ஓடி சாதனை படைத்தது.
சிவாஜிக்கு சாந்தி அழியாத புகழை அவரது ரசிகர்கள் மத்தியில் வழங்கியது. சுமார் 55 வருடங்கள் சினிமா ரசிகர்களின் குறிப்பாக, சிவாஜி ரசிகர்களின் சொர்க்கபுரியாக விளங்கிய சாந்தி தியேட்டர், நேற்றுடன் தன் பணியை நிறுத்திக்கொண்டது.


கொடை வள்ளல் " சிவாஜி "

சிவாஜி கணேசன் மன்றாயர் எனும் உலகப்புகழ்பெற்ற மகா கலைஞனை நடிகர் திலகமாகவும், சிம்மக்குரலோனாகவும் அனைவரும் அறிவோம். சிவாஜி கணேசனின் கொடைத்தன்மையை பற்றி இந்த தலைமுறையினர் முழுமையாக அறிந்திருக்க வாயப்பில்லை. சிவாஜி கணேசன் திரைப்படத்தில் மட்டும் அல்லாது நிஜ வாழக்கையிலும் கர்ணனாகவே வாழந்தவர். சிவாஜி கணேசனை போல கொடை பண்பில் சிறந்தவர் வேறு யாரும் இலர் எனும் கூறும் அளவுக்கு, எந்த விளம்பரமும் இல்லாமல் இவர் செய்த கொடைகள் பல. இவர் தமிழ் இனத்தின் சொத்து. தமிழ் தாய் ஈன்ற முத்து. சிவாஜி கணேசன் அளித்த கொடைகளில் பொதுவெளியில் பதிவு செய்யப்படாதது பல. வெளி உலகத்திற்கு தெரியவந்தது சில. அவற்றை காண்போம்.

* தமிழக அரசு ஆடும் வைஜெயந்தி மாலாவுக்கு மாதம் ரூ 1000 மும், பாடும் மதுரை சோமுவுக்கு மாதம் ரூ 1000 மும் அளித்துவிட்டு, வறுமையில் வாடிய கக்கன்ஜிக்கு வெறும் ரூ 500 ஐ அளித்தது. அதைக்கண்டு வெகுண்ட சிவாஜி கணேசன் தனது 10 பவுன் தங்க சங்கிலியோடு( இன்றைய மதிப்பில் 2,50,000 ரூ) சேலம் நேரு கலை அரங்கில் " தங்கப் பதக்கம்" நாடகம் நடத்தி கிடைத்த தொகை ரூ 15000 ( இன்றைய மதிப்பு 5 லட்சம்) அளித்தார்.

* பல கோடிகள் மதிப்புள்ள , தனக்கு சொந்தமான கோடம்பாக்கம் நிலத்தை நலிந்த நடிகர் நடிகைகள் வீடு கட்டிக்கொள்ள இலவசமாக அளித்தார்

* கயத்தாரில் கட்டபொம்மன் தூக்கிலப்பட்ட இடத்தை ( 47 சென்ட்) வாங்கி தனது சொந்த செலவில் கட்டபொம்மனுக்கு சிலை வைத்து அது நினைவு சின்னமாக திகழ்கிறது.

* பாண்டிச்சேரி பள்ளிகளுக்கு பகலுணவு நிதியாக ரூ 1 லட்சம்( இன்றைய மதிப்பில் ரூ 51 லட்சம்) அளித்தார்.

* மதுரையில் சரஸ்வதி பள்ளிக்கட்டிடம் இடிந்து விழுந்த பொழுது பாதிக்கப்பட்ட மாணவியருக்கு ரூ 1 லட்சம் அளித்தார்.( இன்றைய மதிப்பு ரூ 50 லட்சம்)

* கோயில் திருப்பணிகளுக்காக கிருபானந்த வாரியாரிடம் பல்லாயிரம் ரூபாய்களை நன்கொடையாக வழங்கினார்.

* தமிழக வெள்ள நிவாரண நிதியாக முதல்வர் எம்ஜிஆரிடம் நாடக வசூல் மூலம் ரூ 1 கோடிக்கு மேல் அளித்தார்.( இன்றைய மதிப்பு :11 கோடிக்கு மேல்)

* சென்னை கோடம்பாக்கம் பவர் ஹவுஸ் பகுதியில் அண்ணல் அம்பேத்காருக்கு சிலை அமைத்தார்.தமிழகத்தில் பல பகுதிகளில் அம்பேத்கார் சிலை அமைய தாராளமாக நிதியுதவி செய்துள்ளார்.

* சென்னை பெசன்ட் நகரிலுள்ள மங்கையர்கரசி மகளிர் மன்றக் கட்டிடத்திற்காக தங்கப்பதக்கம் நாடகத்தின் ஒரு நாள் வசூலை அளித்தார்.

* தேசப்பாதுகாப்பு நிதிக்காக தமிழகத்தின் சார்பில் ரூ 5 லட்சம் வசூலித்து கொடுத்தார்.

* 1965ல் இந்தியாவுடன் பாகிஸ்தான் போரிட்டபோது அன்றைய பிரதமர் லால்பகதூர் சாஸ்திரியிடம், திருமதி. கமலா அம்மையாரின் 400 பவுன் தங்க நகைகளையும், பெங்களூரில் சிவாஜிக்கு பரிசாக கிடைத்த 100 பவுன் தங்க பேனாவையும், மொத்தம் 500 பவுன் இன்றைய மதிப்பு ரூ.1.5 கோடி கொடுத்து தேசத்தையே திரும்பி பார்க்க வைத்தவர்.


* மீண்டும் தமிழகமெங்கும் நாடகங்கள் நடத்தி தன்னுடைய வியர்வையில் விளைந்த வெள்ளிகாசுகளாம் 17 லட்சம் (இன்றைய மதிப்பு 8.5 கோடி) வாரி வழங்கி தேசம் வெற்றிபெற துணை நின்றவர் சிவாஜி.

* 1959ல் அன்றைய பாரத பிரதமர் நேருவிடம் , மதிய உணவு திட்டத்திற்கு ரூபாய் ஒரு லட்சம் (இன்றைய மதிப்பில் 70 லட்சம்) வழங்யுள்ளார்.

* சேலத்தில் தங்கப்பதக்கம் நாடகம் நடத்தி அதன்மூலம் வசூலான தொகையில் சேலம் முள்ளுவாடி கேட் அருகில் உள்ள மாவட்ட காங்கரஸ் கமிட்டி கட்டிடத்தை வாங்கிக் கொடுத்தார்.

* 1962 ல் இந்தியா சீனா போரின் போது பிரதமர் நேருவை சந்தித்து ரூ 40 ஆயிரம் யுத்த நிதியாக கொடுத்த முதல் இந்தியர் சிவாஜிதான்.( இன்றைய மதிப்பு :26 லட்சம்)

* 1962 ல் இந்தியா சீனா போரின் போது டெல்லியில் நடந்த பொதுக்கூட்டத்தில் மீண்டும் ரூ 25000 த்தை( இன்றைய மதிப்பு 16 லட்சம்) போர் நிதியாக கொடுத்தார்.

* 1962ல் சிவாஜி பிலிம்ஸ் தயாரித்து வெளியிட்ட ராக்கி திரைப்படத்தின் அகில இந்திய ஒரு நாள் வசூல் முழுவதையும் யுத்த நிதியாக அளித்தார்.

* 1960 களில் வீரபாண்டிய கட்டபொம்மன் நாடகத்தை 112 முறை தொடர்ந்து நடத்தி அதன் மூலம் வசூலான 32 லட்சத்தை (இன்றைய மதிப்பு 22 கோடி) பல கல்லூரிகளுக்கு வாரி வழங்கி கல்வியின் சிறப்பை உலகிற்கு உணர்த்தினார்.

* பாகிஸ்தான் ஆக்கிரமிப்பின் போது அப்போதைய குடியரசு தலைவர் ஜாகிர் உசேனை சந்தித்து ரூ 50 ஆயிரத்தை(இன்றைய மதிப்பு 21 லட்சம்) யுத்த நிதியாக அளித்தார்.


* பெங்களூர் நாடக அரங்கம் கட்ட" கட்ட பொம்மன்" நாடகம் மூலம் ரூ 2 லட்சம்( இன்றைய மதிப்பு 1.5 கோடி) நன்கொடையாக அளித்தார்.

* பெங்களூர் மக்கள் நலனுக்காக ரூ 15 லட்சம்( இன்றைய மதிப்பு 10 கோடி) நிதியினை வழங்கினார்.

* கம்யூனிஸ்ட் கட்சிக்காக கட்டபொம்மன் நாடகம் நடத்தி தோழர் ஜீவாவிடம் நிதி உதவி அளித்துள்ளார்.

* அண்ணா அறிவாலயத்தில் கலைஞர் கருவூலத்தில் திமுகவை வளர்த்தவர்கள் வரிசையில் சிவாஜி கணேசனின் புகைப்படமும் இடம்பெற்றுள்ளது.

* திமுகவை வளர்க்க பல நாடகங்களை ஒரு பைசா கூட பெறாமல நடத்திக்கொடுத்தவர் சிவாஜி, மற்றும் பல நாடகங்கள் மூலம் நிதி வசூல் செய்து திமுகவிற்கு அளித்தவர் சிவாஜி என கலைஞர் தனது நூலான நெஞ்சுக்கு நீதியில் குறிப்பிட்டுள்ளார்.

* தேசத்தந்தை காந்திக்கு சிலை, நேருவுக்கு சிலை, இந்திரா காந்திக்கு சிலை, பெரியாருக்கு சிலை, கன்னியாகுமரியின் தந்தை ஐயா நேசமணிக்கு சிலை என நாட்டுக்காக உழைத்தவர்களுக்கு சிலை வைத்து அழகு பார்த்தார் சிவாஜி. பெருந்தலைவர் காமராஜருக்கு தமிழகமெங்கும் சிலைகள் வைத்து பெருமை சேர்த்தார்.

* தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர்கள் சங்கம் கட்டிட நிதிக்காக " வியட்நாம் வீடு" நாடகம் மூலம் ரூ 30 ஆயிரம் நிதியை அளித்தார்.( இன்றைய மதிப்பு : 12 லட்சம்)

* வேலூர் பென்லன்ட் மருத்துவமனை கட்டிட நிதிக்காக வியட்நாம் வீடு நாடகத்தின் மூலம் ரூ 2 லட்சம் நிதி அளித்தார்.( இன்றைய மதிப்பு 80 லட்சம்)

* தென்னிந்திய நடிகர் சங்கத்தலைவராக 8 ஆண்டுகள் பணியாற்றினார். அப்போது பெரிய நாடக அரங்கம் ஒன்றினை சங்கரதாஸ் சுவாமி பெயரிலும், திரையரங்கம் ஒன்றினை தேவர் பெயரிலும் கட்டினார்.

* கோயில் நிதி என்றால் ரூ 2 ஆயிரம், வெள்ள நிவாரண நிதி என்றால் ரூ 75 ஆயிரம், பாரதி விழாவிற்கு ரூ 50 ஆயிரம், மருத்துவமனை கட்ட ரூ 50 ஆயிரம், பள்ளிக்கூடம் கட்ட ரூ 25 ஆயிரம், தேச பக்தர்களுக்கு சிலை அமைக்க ரூ 25 ஆயிரம், அறிஞர் பெருமக்களுக்கு பணமுடிப்பு அளிக்க ரூ 10 ஆயிரம் எனவும் அளித்துள்ளார்.

* சென்னையில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் திருமண மண்டபத்தின் கட்டிட நிதிக்காக தங்கப் பதக்கம் நாடகத்தின் ஒரு நாள் வசூலை அளித்தார்.

* நாகை மாவட்டம் அன்னை வேளாங்கண்ணி ஆலயத்திற்கு கோவில் மணி அமைக்கும் முழுச்செலவையும் ஏற்றார்.

*திருச்சி திருவானைக்கால் கோயில், தஞ்சை பெரிய கோயில், தஞ்சை முத்து மாரியம்மன் கோயில், மதுரை மீனாட்சியம்மன் கோயில்களுக்கு யானைகளை வழங்கினார்.

*வல்லக்கோட்டை முருகன் கோயில் திருப்பணிக்காக ரூ 10 ஆயிரம் த்தை கிருபானந்த வாரியாரிடம் அளித்தார்.(இன்றைய மதிப்பில் பல லட்சம்)

* சென்னை கொசப்பேட்டை கந்தசாமி கோயில் தெப்பக்குளத்தில் செய்த திருப்பணி செலவை முழுமையாக ஏற்றார்.

* 1953 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் புயல் நிவாரண நிதிக்காக விருது நகரில் தெருத்தெருவாக சென்று பராசக்தி வசனங்களைப் பேசி ரூ 12 ஆயிரம்( இன்றைய மதிப்பில் 10 லட்சம்) வசூலித்துக் கொடுத்தார்.

* 1957ல் இருந்து 1961 வரை பம்பாயில் நாடகங்கள் நடத்தி குழந்தைகளின் கல்விச் செலவுக்காக ரூ 5 லட்சத்தை ( இன்றைய மதிப்பு 3.5 கோடி) கொடுத்த முதல் இந்திய நடிகர் சிவாஜி கணேசன் தான்.

* 1960ல் தமிழகம் பெரும்புயல் மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட போது, சிவாஜி கணேசன் 1 லட்சம் உணவுப் பொட்டலங்களையும், 800 மூட்டை அரிசியையும் தானமாகக் கொடுத்தார்.

* 1961 ல் பிரதமர் நேருவிடம் கிழக்கு தாம்பரத்தில் காசநோய் மருத்துவமனை கட்டுவதற்கு ரூ 1 லட்சம் கொடையாக அளித்தார். (இன்றைய மதிப்பில் 70 லட்சம்)

* 1964 ல் மகாராஷ்டிரா கொய்னா பூகம்ப நிதியாக அம்மாநில முதல்வர் ஒய் பி சவானை சந்தித்து ரூ 1 லட்சம் கொடுத்த முதல் இந்திய நடிகர் சிவாஜி தான்.( இன்றைய மதிப்பு 60 லட்சம்)

* 1964 ல் விருதுநகர் மாவட்டம் மம்சாபுரத்தில் ஒரு பெரிய கால்நடை மருத்துவமனையை அமைத்துக் கொடுத்து வாயில்லா ஜீவன்கள் மீதான தனது பாசத்தை வெளிப்படுத்தினார்.

* 1965 ல் பிரதமர் நேருஜி நினைவு நிதியாக ரூ 1.5 லட்சம் கொடுத்தார்.
( இன்றைய மதிப்பு 75 லட்சம்)


* 1965 ஆம் ஆண்டு செப்டம்பர் 17-18 தேதிகளில் நீதியின் நிழல், களம் கண்ட கவிஞன் நாடகங்கள் நடத்தி வசூலான ரூ 1 லட்சத்தை யுத்த நிதியாக தமிழக முதல்வர் பக்தவச்சலத்திடம் அளித்தார்.( இன்றைய மதிப்பு 55 லட்சம்)

* 1966 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் சென்னையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டபோது நிதியுதவியாக ரூ 10,000 அளித்தார்.( இன்றைய மதிப்பு :5 லட்சம்)

* 1967 ஆம் ஆண்டு உலக தமிழ் மாநாடு சிறக்க வள்ளுவர் சிலை அமைத்ததுடன் முதலமைச்சர் அண்ணா அவர்களிடம் ரூ 5 லட்சம் வழங்கினார்.( இன்றைய மதிப்பு : 2.5 கோடி)

* 1968 ஆம் ஆண்டு மயிலாப்பூரில் உள்ள விவேகானந்தர் கல்லூரியின் கட்டிட நிதிக்காக ரூ 40,000 அளித்தார்.( இன்றைய மதிப்பு 15 லட்சம்)

* 1968 ஆம் ஆண்டு திருச்சியில் உள்ள ஜமால் முகமது கல்லூரி கட்டிட நிதிக்காக ரூ 1,30,000 அளித்தார்.( இன்றைய மதிப்பில் 50 லட்சம்)



* 1971 ல் இராணுவ வீரர்கள் முகாமில் தானும் தனது மனைவி கமலாவும் இரத்ததானம் செய்து தனது ரசிகர்களிடம் இருந்து பெருந்தொகை வசூலித்துக் கொடுத்தார்.

* 1972 ல் காஷ்மீர் மாநில முதலமைச்சர் மீர்காசிமை சந்திந்து அம்மாநில தாழத்தப்பட்ட மாணவர்கள் கல்விநிதிக்காக ரூ 25 ஆயிரம் அளித்தார்.( இன்றைய மதிப்பு 8.5 லட்சம்)

*1972 ல் ஈரோடு ஸ்தாபன காங்கரஸ் மாநாட்டில் கட்சி நிதியாக ரூ 1.25 லட்சத்தை அளித்தார்.( இன்றைய மதிப்பில் 45 லட்சம்)

* 1972ல் ராஜா திரைப்படத்தின் மூலம் வசூலான ஒரு நாள் தொகையை விமானபடையில் உயிர்நீத்த வீரர்களின் குடும்பங்களுக்கு வழங்கினார் சிவாஜி.

* 1974 ல் சிங்கப்பூர் சிறுநீரக மருத்துவமனைக்கு ரூ 45 ஆயிரம் அளித்தார்.( இன்றைய மதிப்பு 12 லட்சம்)

*1974 ல் கடற்படை வீரர்கள் நிதிக்காக அட்மிரல் குல்கர்னி அவர்களிடம் ரூ 50 ஆயிரம் வழங்கினார்.( இன்றைய மதிப்பு 14 லட்சம்)

 
* 1975 ஆம் ஆண்டு தன் வீட்டிற்கு வந்து ஆசீர்வதித்த காமராஜரிடம் ரூ 1 லட்சம் பொதுநிதியாக அளித்தார்.( இன்றைய மதிப்பு 30 லட்சம்)

* பீகாரில் வெள்ளம் ஏற்பட்டபோது பெரும் நிதியை நிவாரண நிதியாக அளித்தார்.

* 1975 ஆம் ஆண்டு இராமநாதபுரம் மாவட்டத்தில் பெரும் வறட்சி ஏற்பட்டபோது நிதியுதவியாக 1 லட்சம் அளித்தார்.( இன்றைய மதிப்பு 22 லட்சம்)

* 1977ல் தமிழக முதல்வராக எம்ஜிஆர் இருந்தபொழுது கொடி நாளுக்காக 1.2 கோடியை வசூலித்து கொடுத்தார்.

* 1978ல் புயல் நிவாரண நிதியாக மூப்பனாரிடம் ரூ 20 ஆயிரம் அளித்தார்.( இன்றைய மதிப்பு 4.5 லட்சம்)

* 1982 ஆம் ஆண்டு எம்ஜிஆர் அவர்களை இளைய திலகம் பிரபு நேரில் சந்தித்து தன் சார்பில் 25 ஆயிரமும் சிவாஜி கணேசன் சார்பில் ரூ 1 லட்சமும் சத்துணவு திட்டத்திற்கு அளித்தார்.( இன்றைய மதிப்பு 20 லட்சம்)

* 1993 ஆம் ஆண்டு மகாராஷ்டிர மாநிலம் லாட்டூரில் ஏற்பட்ட பூகம்பத்திற்கு ரூ 1 லட்சம் அளித்தார்.( இன்றைய மதிப்பு 10 லட்சம்)



* 1999 ஆம் ஆண்டு கார்கில் போர் நிதியாக கலைஞரிடம் ரூ 1 லட்சம் கொடுத்தார்.( இன்றைய மதிப்பு 6 லட்சம்)

* திருப்பூர் தென்னம்பாளையம் சந்தையில் நடிகர் சிவாஜி, ‘வியட்நாம் வீடு’ நாடகத்தில் நடித்தார். அப்போது கிடைத்த வருவாய் ரூ.1 லட்சத்தை,  திருப்பூர் வீரராகவப் பெருமாள் கோயிலுக்கு கட்டிடம் கட்ட நன்கொடையாக வழங்கினார். அப்போது ரூ.1 லட்சம் என்பது, தற்போது கோடிகளைத் தாண்டும்" என்கிறார் திருப்பூர் மாவட்ட சிவாஜி மன்றத் தலைவர் சத்ருக்கன். காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் நாடு முழுவதும் `சுதேசி கண்காட்சிகள்`  நடைபெறும். இதையொட்டித்தான்,  தென்னம்பாளையம் சந்தையில் `வியட்நாம் வீடு’ நாடகம் அரங்கேறியது.

தன்னை வைத்து முதல் படம் எடுத்த திரு. பெருமாள் முதலியார் அவர்களின் வீட்டிற்கு வருடந்தோறும் பொங்கலன்று சென்று சீர் செய்து அவர்கள் குடும்பத்திற்கு தன் இறுதி மூச்சு உள்ளவரை உதவிவந்தவர் நடிகர் திலகம்.

முத்துராமலிங்கத் தேவருக்கு சிலை அமைத்து தந்துள்ளார்

நடிகர் திலகம் மறைந்த பின்பும், இளைய திலகம் பிரபு குடும்பத்துடன் சென்று வேலூரில் உள்ள பெருமாள் முதலியார் குடும்பத்திற்கு சீர் செய்து நன்றி செலுத்தி வருகிறார்கள் என்பது எத்துனை பேருக்குத் தெரியும்!

சிவாஜி கணேசன் தன் வாழ்நாள் முழுவதும் நாட்டு மக்களுக்காக வாரி வழங்க தவறியதில்லை. ஒரு நடிகர் என்பதையும் தாண்டி சிவாஜி கணேசன் தமிழ் உலகிற்கு செய்த தொண்டுகள் ஏராளம். 













சிவாஜி கணேசனுக்கு ஏன் அரசாங்க செலவில் மணிமண்டபம் கட்ட வேண்டும் என வினவியவர்கள் அவரை பற்றி முழுமையாக அறிந்துக்கொள்வது அவசியம். அவர் தமிழுக்கும் இந்திய தேசத்திற்கும் செய்த தொண்டுகளுக்கு எத்தனை மணிமண்டபங்கள் கட்டினாலும் ஈடாகாது.






















































































































தொகுப்பு : சியாம் சுந்தர் சம்பட்டியார்


(தகவல்கள் : புதுக்கோட்டை மாவட்ட நடிகர் திலகம் சிவாஜி சமூக நலப்பேரவை வெளியீடு:- நடிகர் திலகம் 90 ஆவது பிறந்தநாள் விழா சிறப்பு மலர் 27.01.2019)

வரலாற்று பக்கங்கள் - I

வளரி வரலாறு   👈 Click above திருமங்கையாழ்வார் வரலாறு 👈 Click above அம்பலகாரர் / அம்பலம் வரலாறு 👈 Click above வாண்டையார் வரலாறு 👈 Click a...

இந்த வலைப்பதிவில் தேடு

என்னைப் பற்றி

எனது படம்
Contact: info.kallarkulavaralaru@gmail.com, தமிழகத்தில் வாழும் கள்ளர் மரபினர் முக்குலத்தோரில் ஒரு பிரிவினர் ஆவர். கள்ளர், மறவர், அகமுடையார் ஆகிய முக்குலங்களும் போர்த் தொழிலை அடிப்படையாக கொண்டு வாழ்ந்து வந்ததால் இந்த மூன்று சாதியினரும் முக்குலத்தோர் என்று அறியப்படுகின்றனர். இந்த மூன்று குலத்தினரும் "தேவர்" என்ற பொதுவான பெயரோடு அறியப்படுகிறார்கள். கள்ளர் மரபில் அறந்தாங்கி தொண்டைமான், புதுக்கோட்டை பல்லவராயர், புதுக்கோட்டை தொண்டைமான் மற்றும் பல சமீன்தார்களும், பெரு நிலவுரிமையாளர்களும் இருக்கின்றனர். (கள்ளர் படைப்பற்று - கள்ளர் நாடு - கள்ளர்த்தடி). கள்ளர் வரலாறு : வரலாறு என்றால் வந்த வழி என்று பொருள். வந்த வழி தெரியாதவர்களுக்குப் போகும் வழி புரியாது. வரலாற்றை நாம் நினைவு கூர்வதற்குக் காரணம் கடந்து போன ஈகங்களை எண்ணிக் கண்ணீர் விடுவதற்காகவும், நிகழ்த்தி விட்ட வீரங்களைச் சொல்லிப் பெருமை பேசுவதற்காகவும் அல்ல. வருங்காலத்திற்கு வழி சமைப்பதற்கு அந்த ஈகமும் வீரமும் வழிகாட்ட வேண்டும் என்பதற்காகத்தான். கள்ளர்களின் நான்கு முக்கிய பிரிவுகள் - ஈசநாட்டுக்கள்ளர் (திருச்சி, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை) : கிளைவழிக்கள்ளர் (சிவகங்கை) : அம்பல கள்ளர் / நாட்டார் கள்ளர் (சிவகங்கை, மதுரை) : பிறமலை கள்ளர் (மதுரை, உசிலமபட்டி, தேனி, கம்பம், திண்டுக்கல்)

வலைப்பதிவு காப்பகம்

பின்பற்றுபவர்கள்