வியாழன், 12 செப்டம்பர், 2019

எஸ்.டி.சோமசுந்தரம் கோபாலர் (1923 - 2001)



தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை வட்டம் செண்டாங்க்காடு என்ற கிராமத்தில் பிறந்து, பட்டுக்கோட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில் தனது பள்ளி படிப்பைத் தொடர்ந்தார். இவர் படித்த இந்த பள்ளியில் தான் திராவிட இயக்கத்தின் தலைவர்கள் நாவலர் இரா.நெடுஞ்செழியன், இரா.செழியன் ஆகியோரும், முன்னாள் இந்திய குடியரசு தலைவர் ஆர். வெங்கட்ராமனும் படித்தார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.




பள்ளி மாணவராக இருக்கும்போதே அரசியளில்  மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்தவர்.  பள்ளி படிப்பை முடித்த திரு எஸ்.டி.எஸ் அவர்கள், அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பி.இ  பொறியியல் பட்ட படிப்புக்காக சேர்ந்தார்.  தடகள விளையாட்டுகளில் சிறந்து விளங்கினார். 

பள்ளியிலும், அண்ணாமலை பல்கலைகழகத்திலும் ஓட்டபந்தயத்தில் தொடர்ந்து முதல் இடத்தை பெற்றுவந்தார்.


1951-ல் அரசு அலுவலகங்களிலும், கல்வி நிறுவனங்களிலும் வகுப்புவாரிய பிரதிநிதித்துவம் வேண்டும் என்று மாணவப் பருவத்திலேயே போராட்டத்தில் கலந்து கொண்டவர்.1955-ல் தமிழர்கள் வாழும் பகுதியான தேவிகுளம், பீர்மேடு, நெய்யாற்றங்கரை ஆகியவை கேரளாவுடன் இணைக்கப்பட்டதை எதிர்த்து மாணவர்களை திரட்டி போராட்டம் நடத்தியவர். அப்போது இவர் திராவிட மாணவர் முன்னேற்ற கழக பொதுச்செயலாளராக இருந்தார்.


1957-1967 மாவட்ட அளவிலும் மாநில அளவிலும் பல மாநாடுகளை நடத்தி மாணவர்களிடையே இந்தி எதிர்ப்பு உணர்வுகளை ஏற்படுத்தியவர். மாணவர் பருவத்திலேயே பல்வேறு போராட்டங்களின் கலந்து கொண்டு பலமுறை சிறை சென்றவர். 1965-ம் ஆண்டு மாணவர்கள் நடத்திய இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் முக்கிய பொறுப்பு வகித்தவர்.  சிதம்பரம் அண்ணாமலை பல்கலைகழகததில் இளநிலை பொறியியல் பட்டம் பெற்று  தமிழ்நாடு மின்சார வாரியத்தில் இளநிலை பொறியாளராக பணியாற்றியுள்ளார்.


1967-1978 வரை மக்களவை உறுப்பினராக இருந்தார். மூன்று முறை தஞ்சாவூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்டு முறையே முன்னாள் குடியரசு தலைவர் ஆர். வெங்கட்ராமன், மதுக்கூர் ஜமீன்தார் கிருஷ்ணசாமி கோபாலர், திரு. எல்.கணேசன் ஆகியோரை தோற்க்கடித்தார். திராவிட முன்னேற்ற கழகத்தின் முதலாவதாக தேர்ந்த்தேடுக்கப்பட்ட எம்.பியும் இவரேயாவார். 1980 சட்டமன்ற தேர்தலில் பட்டுக்கோட்டை தொகுதியில் போட்டியிட்டு காங்கிரஸ் மூத்த தலைவர் திரு ஏ.ஆர். மாரிமுத்து அவர்களை தோற்க்கடித்தார்.


1972-ல் எம்.ஜி.ஆர் அ.தி.மு.க ஆரம்பித்தபோது, அவருடன் தோளோடு தோள் நின்று அவருக்கு உறுதுணையாக இருந்து ஆலோசனை வழங்கினார். அவரால் கட்சியில் பல்வேறு பொறுப்புகள் கொடுக்கப்பட்டு திறம்பட பணியாற்றியவர். எம்.ஜி.ஆர் அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் ஆரம்பிக்கும் போது அவருக்கு துணை நின்றவர்களுள் குறிப்பிடத்தக்கவர்கள்  எஸ்.டி.சோமசுந்தரம், கே.ஏ.கிருஷ்ணசாமி, முனுஆதி, குழ.செல்லையா, எஸ்.ஆர்.இராதா, கே.சௌந்தரராசன், இரா.மோகனரங்கம்,  என்.எஸ்.இளங்கோ, முசிறிப்புத்தன் ஆகியோர்கள். மற்ற தலைவர்கள் எல்லாம் எம்.ஜி.ஆரின் செல்வாக்கை கண்டு பின்பு தி.மு.கவில் இருந்து விலகி அ.தி.மு.கவில் சேர்ந்தவர்கள்தான் என்பது குறிப்பிடத்தக்கது. 

திரு எஸ்.டி.எஸ் அவர்கள், பாராளுமன்ற, சட்டமன்ற இடைத்தேர்தல்கள், புதுவை மாநில பொதுத் தேர்தல்கள் ஆகியவற்றில் தேர்தல் பணிக்குழு தலைவராக எம்.ஜி.ஆரால் நியமிக்கப்பட்டு திறம்பட பணியாற்றி வெற்றிக்காக பாடுபட்டவர். அப்போதைய ஆளும் கட்சியின் மக்கள் விரோத நடவடிக்கைகளை கண்டித்து ஏற்படுத்தப்பட்ட போராட்ட நடவடிக்கை குழுவுக்கு தலைவராக எம்.ஜி.ஆரால் நியமிக்கப்பட்டவர்.

1973 ஆம் ஆண்டு அக்டோபரில், மாஸ்கோவில் உலக சமாதானக் கழக மாநாடு நிகழவிருந்தது. அதில் கலந்து கொள்ளும்படியும் எம்.ஜி.ஆருக்கு அழைப்பு வந்தது. ஆனால், எம்.ஜி.ஆர் அந்த மாநாட்டுக்குத் தம் பிரதிநிதிகளக எஸ்.டி.சோமசுந்தரம் ,கே.ஏ.கிருஷ்ணசாமி ஆகியோரை அனுப்பி வைத்தார். அ.தி.மு.கவின் பிரச்சார செயலாளராக எம்.ஜி.ஆரால் நியமிக்கப்பட்டார். தந்தை பெரியார் சிலை அமைப்பு குழுவின் தலைவராகவும், பெரியார் சிலை திறப்பு வரவேற்புகுழு தலைவராகவும் எம்.ஜி.ஆரால் நியமிக்கப்பட்டவர்.

1978-1984 வருவாய்த்துறை அமைச்சர்
வருவாய்த்துறை அமைச்சருக்கு என்னை போன்றவர்களின் பாராட்டு மட்டுமே வருவாய் என்று எம்.ஜி.ஆரால் புகழாரம் சூட்டப்பட்டவர்.எதிர்ப்புகளை பொருட்படுத்தாமல் கிராமங்களில் இருந்த மணியகாரர் முறையை ஒழித்து, கிராம நிர்வாக அலுவலர்களை நியமித்து, கிராம முறையை மாற்றி அமைத்து செம்மையாக்கினார். இந்தியாவின் மற்ற மாநில முதல்வர்களின் பாராட்டையும் பெற்றார்.


இலங்கை தமிழர்கள் மீது மிகுந்த பற்றும், பாசமும் கொண்டிருந்தார். இலங்கை தமிழர் பிரச்சனைக்கு அமைதித் தீர்வு ஏற்ப்பட வேண்டும் என்று விரும்பியவர். அப்பிரச்சனையில் அப்போதைய முதல்வர் எம்.ஜி.ஆருக்கு சிறந்த ஆலோசகராக திகழ்ந்தார். இலங்கையில் 1983 இனப்படுகொலை நடந்தபோது மனம் கொதித்து தனது எதிர்ப்பை கருப்பு சட்டை போராட்டங்கள் மூலம் தெரிவித்தவர். 1985-ல் இலங்கைத் தமிழருக்காக மதுரையில் மிகப்பெரிய எழுச்சி பேரணியை நடத்தி இரயில் மறியல் போராட்டத்தின் மூலம் சிறை சென்றவர்.


1983-ல் பட்டுக்கோட்டை பகுதியில் தொழில் நுட்ப கல்லூரியை நிறுவி ஏழைகள் தொழில் கல்வி படிக்கும் வாய்ப்பை ஏற்ப்படுத்தி கொடுத்தார்.1995-ல் எட்டாவது உலகத்தமிழ் மாநாட்டை தஞ்சாவூரில் நடத்திக்காட்டி அனைவரின் பாராட்டுக்கும், போற்றுதலுக்கும் உரியவரானார்.சுற்றுச்சாலை, இரயிவே மேம்பாலம், புதிய பேருந்து நிலையம் போன்றவற்றை தஞ்சாவூருக்கு ஏற்ப்படுத்தி கொடுத்தார்.

ரஷ்யா,ஜப்பான்,ஆஸ்திரேலியா, இந்தோனேசியா, தாய்லாந்து, ஹாங்காங், மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளுக்கு பயணித்துள்ளார்.


எஸ்.டி.எஸ் நூல்கள்  

தமிழின படுகொலை, 

காவேரித் தாய்க்கு கருணாநிதி செய்த கேடுகள், 

இலங்கை இனப்படுகொலை பற்றி இந்திய பிரதமருக்கு எஸ்.டி.எஸ்ஸின் பத்து கோரிக்கைகள், 

மதுவிலக்கு கொள்கையில் தமிழக முதல்வர்கள் 

போன்ற நூல்களை எழுதியுள்ளார். ."போர்வாள்" என்ற இதழின் ஆசிரியராக இருந்தார்.

1984-ல் திருச்சியில் வரலாறு காணாத மக்கள் வெள்ளத்திற்கிடையே நமது கழகம் என்ற கட்சியை தொடக்கி பிரகடனப்படுத்தினார்.

1987-ல் எம்.ஜி.ஆர் அவர்களின் அழைப்பை ஏற்று அ.இ.அ.தி.மு.க வில் தன்னை இணைத்துக்கொண்டார்.
1987-ல் எம்.ஜி.ஆர் மறைவிற்கு பிறகு ஜெயலலிதாவின் தலைமையில் பணியாற்றினார். 

1991 சட்டமன்ற தேர்தலில் தஞ்சாவூர் தொகுதியில் போட்டியிட்டு தி.மு.கவைச் சேர்ந்த அப்போதைய அமைச்சர் திரு எஸ்.என்.எம்.உபயத்துல்லா அவர்களை தோற்க்கடித்தார்.

1991-1996 சட்டப்பேரவை உறுப்பினர், வருவாய்த்துறை அமைச்சர்.

ஆயிரக்கணக்கான சுயமரியாதை தமிழ்த் திருமணங்களை நடத்தி வைத்து சுயமரியாதை சுடராக விளங்கியவர். மிகவும் எளிமையான வாழ்க்கையே வாழ்ந்தார். அமைச்சர் பதவியில் இல்லாதபோது சென்னையில் வாடகை வீட்டில் குடியிருந்தார்.

பொதுமக்கள் மீது மிகுந்த பாசம் கொண்டிருந்ததால் அனைவராலும்"பாசமிகு எஸ்.டி.எஸ்" என்று அழைக்கப்பட்டவர்.அரசியலில் சுடர் விட்டவர்களில் குறிப்பிடத்தக்கவர் எஸ்.டி.சோமசுந்தரம். ஏனோ அவரது மறைவு (06.12.2001) யாருக்கும் தெரியாமல் போய் விட்டது. பாபர் மசூதி இடிக்கப்பட்ட நாளில் இறந்ததாலோ என்னவோ?

இவரது மகன் SDS செல்வம்

ராஜபூசனம் மண்ணையார்


அண்ணாமலை மண்ணையார், கல்யாணி அம்மாளுக்கும் அம்மாப்பேட்டைக்கு அருகில் உள்ள கம்மந்தங்குடி என்னும் கமுகஞ்சேந்தகுடியில் பிறந்தவராவார். தொடக்கக் கல்வியை அம்மாப்பேட்டையில் திண்ணைப் பள்ளியில் ஆரம்பித்தார். பின்னர் அம்மாப்பேட்டை உயர்நிலை பள்ளியில் எஸ்.எஸ்.எல்.சி தேர்வுப்பெற்று குடந்தை அரசினர் கல்லூரியில் பி.எஸ்.சி கணித பாடத்தில் பட்டமும் பெற்றார். சென்னை தலைமை செயலகத்தில் உதவியாளராகவும், மாநிலத் தேர்வாணை தலநல நிதிக் கணக்குத் துறையிலும்,பின்னர் தமிழ்நாட்டு மின்சார வாரியத்தில் உதவியாளராக சேர்ந்து தன் முயற்சியின் மூலம் படிப்படியாக பதவி உயர்வுகள் பலபெற்று துணைச்செயலாளராக பதவி வகித்து 1994ம் ஆண்டில் ஓய்வு பெற்றார். 




ஓய்வுக்குப் பின்னர் இராசராசன் கல்விப்பண்பாட்டுக் கழகத்தில் இனைந்து முக்குலத்துச் சாதனையாளர்களையும், அறிஞர்களையும் நேர்காணல் செய்து கழக செய்தி மலரில் வெளியிட்டும் வந்தார். ஞானகுரு வேணுகோபால சுவாமிகளை தனது குருவாக ஏற்று அவர் வழி பின்பற்றி தம்நேரத்தை தியானம்,ஆன்மீகம்,மெய்ஞ்ஞானம் ஆகியவற்றில் ஈடுபடுத்தி வந்தார். இதனிடையே கள்ளர் குலம்பற்றிய ஒரு நூல் எழுதவேண்டும் என்ற நோக்கில் பல்வேறு குறிபுகள்,புத்தகங்கள், கல்வெட்டு சம்பந்தமான நூல்கள், தொல்பொருள் ஆய்வு நூல்கள் என பல்வேறு நூல்களையும் வாங்கியும், படித்தும் தனது வாழ்க்கையின் இறுதி நாட்களில் கள்ளர் குல வரலாறு என்னும் சீர் மிகு நூலையும் வெளியிட்டுள்ளார்

புதன், 11 செப்டம்பர், 2019

ஆர்.எஸ். மலையப்பன்



       மக்கள் கலெக்டர் மலையப்பன்
இந்தியாவின் வரலாற்றிலேயே குறிப்பிடத்தக்க தான கோர்ட் அவமதிப்பு வழக்கு-கண்ட்டெம்ப்ட் ஆஃப் கோர்ட்- 1957-ல் நடைபெற்றது, என்ன அந்த நீதிமன்ற அவமதிப்பு? திருச்சி மாவட்டத்தில் கலெக்டராக தஞ்சை மாவட்டத்துக் கண்ணந்தங்குடியில்  கள்ளர் வகுப்பில் பிறந்தவர் ஆர். எஸ். மலையப்பன்.

மக்கள் கலெக்டர் மலையப்பனின் மகத்தான வாழ்வும், சாதனைகளும்!











நோட்டின் பின் அட்டையில் மட்டுமல்ல வீட்டின் உள் அறையிலும் தீண்டாமையை நிராகரித்தார். அதனால்தான் ஆந்திராவின் அதிசய மனிதர் கோரா அய்யா மலையப்பனை 'COMMON MAN’S COLLECTOR' என்று வியந்தார்.

வழக்கறிஞர் சதீஷ் பிரபு எழுதி விகடனில் வந்த கவிதை இப்படிக் கேட்டது...

கல்வியாண்டின்

இறுதியில் நடக்கும்

ஆண்டு விழாவின்

மாறுவேடப் போட்டிவரை

காத்திருக்க வேண்டியிருக்கிறது

ஒரு குறவனின் மகனோ

குறத்தியின் மகளோ

மழலையர் பள்ளியில்

நுழைவதற்கு.

இப்படி கசிந்துருகும் மனத்தையே கவிமனம் என்கிறோம். இந்த கவிமனமே ஒரு கலெக்டருக்கு இருந்தால் என்ன நடக்கும்? நாடோடி மக்களுக்கு நிரந்தர வீடு கிடைக்கும். அதனால் முகவரி வரும். அதன்பின் ஆண்டுவிழாவரை காத்திருக்காமல் அந்தப் பிள்ளைகள் பள்ளிக்கு போகமுடியும். இப்படி நிரந்தர குடியிருப்பை அந்த மக்களுக்கு செய்துகொடுத்தவர் கலெக்டர் ஆர்.எஸ்.மலையப்பன்.

தமிழ்நாட்டில் முதன்முறையாக, ஏன் இந்தியாவிலேயே முதல் முறையாக நாடோடி மக்களுக்கு நிரந்தரக் குடியிருப்பை, இவர் திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவராக இருந்தபோதுதான் கட்டிக்கொடுத்தார். சுதந்திரம் பெற்ற இந்தியாவின் 8வது திருச்சி மாவட்ட கலெக்டராக பணியமர்ந்தபோது, திருச்சியிலிருந்து தஞ்சை செல்லும் முக்கிய சாலையில் 20 கி.மீ தொலைவில் திருவறும்பூருக்கு அருகில் உள்ள ‘தேவராயன் ஏரி’ பகுதியில்தான் அவர்களுக்கான நிரந்தரக் குடியிருப்பை கலெக்டர் மலையப்பன் கட்டிக்கொடுத்தார். ஏரிப்பாசனம் உள்ள பகுதியிது.

கண்ணந்தங்குடி மேலையூர்

1955ஆம் ஆண்டு திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவராக ஆர்.எஸ் மலையப்பன் பணியேற்று செயல்பட்ட காலம் திருச்சி மக்களால் மீண்டும் மீண்டும் பேசப்படுகிறது.

எத்தனையோ கவிஞர்கள் திரைப்படத்திற்குச் சிறப்பாக பாட்டெழுதியுள்ள போதும், பட்டுக்கோட்டையாரைத்தான் ‘மக்கள் கவிஞர்’ என்று உலகம் அழைக்கிறது. அதைப்போலத்தான் எத்தனையோ மாவட்ட ஆட்சித் தலைவர்கள் சிறப்பாக பணி செய்திருந்த போதும், ஏனோ அய்யா மலையப்பனைத்தான் வரலாறு 'மக்கள் கலெக்டர்’ என்று பதிவுசெய்துள்ளது.

உரத்தநாடுக்கு அருகிலுள்ள கண்ணந்தங்குடி மேலையூரில், தந்தை ராமசாமிக்கும் தாய் கமலாயிக்கும் 1902 செப்டம்பர் 7-ம் தேதி மலையப்பன் பிறந்தார். எளிமையான ஆனால் வளமையான விவசாயக் குடும்பமது.


கண்ணந்தங்குடி மேலையூர் தொடக்கக் கல்வியை சொந்த ஊரின் பாதிரிப் பள்ளியிலும், பள்ளிப் படிப்பை உரத்தநாட்டில் உள்ள சரபோஜி மன்னனின் காதலி பெயரில் அமைந்த முத்தம்மாள் சத்திரம் பள்ளியிலும் அதைத் தொடர்ந்து திருச்சி தேசியப் பள்ளியிலும் முடித்தார். திருச்சியில் உள்ள எஸ்.பி.ஜி கல்லூரியில் (பிஷப் கல்லூரி) பி.ஏ. பட்டம் பெற்றார். அந்தச் சுற்று வட்டாரத்தில் முதல் பட்டதாரி என்ற பெருமையை 100 ஆண்டுகளுக்கு முன்பே மலையப்பன் பெற அவரது பெரியப்பா கிருஷ்ணசாமிதான் காரணம்.

சிறிதுகாலம் அவர் படித்த பள்ளியிலேயே ஆசிரியப்பணி செய்த மலையப்பன், தன் முயற்சியால் சென்னை தலைமைச் செயலகத்தில் 1927-ல் மேல்நிலை எழுத்தராக பணியமர்ந்தார். தன் கல்விக்கேற்ற வேலை தேடிய மலையப்பன், பப்ளிக் சர்வீஸ் கமிஷனில் தேர்வாகி 1935-ல் 'துணை கலெக்டர்' ஆனார். அடுத்து வந்த 20 ஆண்டுகளில் அவர் செய்த பணியும் அர்பணிப்பும் மக்கள்மீது கொண்ட மாளாக்காதலும்தான் அவரை மக்கள் கலெக்டராக உயர்த்தியது.




முத்தம்மாள் சத்திரம் பள்ளி

தமிழ்நாடு ஆந்திரா எல்லாம் ஒன்றாக இருந்த 'மெட்ராஸ் பிரசிடென்ஸி'தான் அப்போதைய மாநிலம். அதில் ஆந்திராவின் குண்டூருக்கு டெபுடி கலெக்டராக பயிற்சிக்கு அனுப்பப்பட்டார். பயிற்சி முடித்து, முதன்முதலாக 'கோட்ட வருவாய் அதிகாரி'யாக (RDO) மார்க்காபூரில் பொறுப்பேற்றார் மலையப்பன். அப்போது ஒரு பெரும் புயல் அப்பகுதியை தாக்கியது. அதில் ஓங்கோல் மக்கள் சிக்கித் தவித்தனர். மீட்புப்பணியை பார்வையிடவிடாமல் கிருஷ்ணாநதியில் பெருக்கெடுத்த வெள்ளம் தடுத்தது.

துணிந்த மலையப்பன் முதுகில் பனைமட்டைகளை கட்டிக்கொண்டு கிருஷ்ணாவின் வெள்ளத்தை நீந்திக் கடந்தார். ஒரு வகையில் இது அவரது பணிக்காலம் முழுமைக்குமான குறியீடாகவே அமைந்துவிட்டது. 34 வயதில் தொடங்கிய இதே துணிச்சல் அவர் கண் மூடும்வரை அவரது சொத்தாகவே இருந்தது.


விரைந்து முடிவெடுக்கும் அறிவும், ஊழியர்களைக் கையாளும் திறனும் அவரை மாவட்ட ஆட்சித்தலைவராக உயர்த்தியது. கிருஷ்ணா மாவட்ட கலெக்டராக 1947 நவம்பரில் பணியமர்ந்தார். ஒரு சவால் காத்திருந்தது. இந்தியாவோடு இணைவதில் சில சமஸ்தானங்கள் முரண்டுபிடித்தன. அதில் ஐதராபாத்தும் ஒன்று. நிஜாமும் ரசாக்கர் இயக்கமும் இணைப்பை எதிர்த்தனர். பட்டேல் தன் புகழ்பெற்ற POLICE ACTION-க்கு ஆணையிட்டார். ஐதராபாத்தை ஒட்டிய மாவட்டம் கிருஷ்ணா. அதன் ஆட்சித் தலைவர் மலையப்பன். கிருஷ்ணாவின் வழியாகவே உள்நுழையவேண்டும். சாலையில புதைக்கப்பட்ட கண்ணிவெடி அகற்றுவது தொடங்கி, உணவு, வாகனம், கருவிகள் என்று எல்லா பணிகளையும இளைஞர் மலையப்பன் ஒருங்கிணைத்த பாங்கும் பங்கும் நிஜாமை பணியவைத்தது. அரசும் கலெக்டரை மெச்சியது.

நேர்மையும் துணிச்சலும் ஒட்டிப் பிறந்த இரட்டைக் குழந்தைகள். இந்த உண்மையை கலெக்டர் மலையப்பனின் வாழ்க்கை நெடுகிலும் நாம் பார்க்கலாம். 1956-ல் நடந்த 'அரியலூர் ரயில் விபத்து’ நினைவில் வாழும் ஒரு கொடூரம். அப்போது திருச்சியின் கலெக்டர் மலையப்பன்தான். மீட்புப்பணிக்குப் போனவருக்கு ஓர் அதிர்ச்சி தகவல் சொல்லப்பட்டது. பணிக்கு வந்த ஒரு டாக்டர், இறந்த பயணியின் செயினை களவாடிவிட்டதாக.

“மக்கள் வரிப்பணத்தில் படித்துவிட்டு, ஈவு இரக்கம் இல்லையா மேன் உனக்கு” என்ற மலையப்பன் அந்த டாக்டரை அறைந்துவிட்டார்.

இந்த அறச்சீற்றம் மற்றவர்மீது மட்டுமல்ல; அவரது சொந்த வாழ்விலும் காணக்கிடைக்கிறது. ஒரு மாம்பழக்கூடை பரிசாக வீட்டுக்கு வந்தது. இது என்ன புதுவகை லஞ்சம் என்று மலையப்பர் கோபப்பட்டார். பொதுவாக எட்டா பழத்தையே 'புளிப்பதாக' நரி சொன்ன கதை நமக்கு தெரியும். ஆனால் மலையப்பருக்கோ கைக்கு கிட்டே வந்த பழமும் கசந்தது. பழத்தைத் திரும்ப அனுப்பியது மட்டுமல்ல வாங்கி வைத்த பணியாளரை பணிமாற்றம் செய்துவிட்டார்.

















அதுபோலவே, திருச்சியில் பணிசெய்தபோது நிர்ணயிக்கப்பட்ட விலை வரம்பைத் தாண்டி விற்பனை செய்த வணிகர்களையும் பதுக்கலில் ஈடுபட்ட வியாபாரிகளையும் கடுமையாக தண்டித்தார். ஏழை நடுத்தர மக்கள் மனசார அவரை வாழ்த்தினர்.

நெல்லூரில் ஒரு அமைச்சரின் மாமனாரே அரிசி கடத்தினார். அதிகாரிகள் அஞ்சினர். கலெக்டர் மலையப்பன் கடத்தல் லாரியை துப்பாக்கியால் சுட்டு பிடித்தார். ஆந்திரா அதிர்ந்தது. அரசியல் அழுத்தம் வராமலா? வந்தது. பணிமாற்றம் செய்யப்பட்டார். ஆனாலும் மலை குனியுமா என்ன.

அளப்பரிய பணிகள் பல செய்த கலெக்டர் மலையப்பன் சேரிகளுக்கும் தொடர்ந்து சென்று வந்தார். அரசின் நலத்திட்ட உதவிகளை செய்துதரும் அரசு அதிகாரியாக அவர் இயங்கவில்லை. மாறாக, பட்டியலின தலீத் மக்கள்மீது அவருக்கு ஓர் உணர்ச்சி ததும்பும் அன்பும் பரிவும் இருந்தது. அதனால்தான் அவரை ராஜாஜி ஆதிதிராவிட நலத்துறை இயக்குநராக நியமித்தார். பட்டியலினத்தில் பிறக்காத ஒருவரை நியமிக்கலாமா என்ற விமர்சனம் வந்தது.

ராஜாஜி சொன்னார், “ஆதிதிராவிட மக்களுக்கு நான் செய்த பெரிய நன்மையே மலையப்பனை அப்பதவிக்கு நியமித்ததுதான்” என்று. 'சாதிகளைக் கடந்த மானிடன்' என்ற இந்த இடத்தை அடைவது எளிதல்ல. அடைந்தவர் அய்யா மலையப்பன்.

ஒரு நிகழ்ச்சியில் அவரை தாரை தப்பட்டை முழங்க வரவேற்றார்கள். அவரோ, ஒரு ஜாதியோடு இணைத்து தப்பாட்டத்தை பார்க்கும்வரை நீங்கள் அதை அடிக்காதீர்கள் என்று தலித் மக்களிடம் உரையாடினார். அவர்தான் பட்டியலின மக்கள் தங்கி படிப்பதற்கான விடுதிகளின் எண்ணிக்கையையும் இடங்களையும் அதிகப்படுத்தினார். உணவுக்கான மானியத்தை அதிகப்படுத்தி அவர்களை நன்கு சாப்பிடவைத்தார். கல்விக் கட்டணங்களிலிருந்து விலக்கு கொடுத்து படிக்க வழிவகுத்தார். அதுமட்டுமல்ல தன் வீட்டில் உணவு சமைக்க தலித் மக்களை நியமித்தார்.

நோட்டின் பின் அட்டையில் மட்டுமல்ல வீட்டின் உள் அறையிலும் தீண்டாமையை நிராகரித்தார். அதனால்தான் ஆந்திராவின் அதிசய மனிதர் கோரா அய்யா மலையப்பனை 'COMMON MAN’S COLLECTOR' என்று வியந்தார்.


மலைவாழ் மக்கள்மீதும் அவர் காட்டிய பரிவு மகத்தானது. அவர்களின் வாழ்வை ஆய்வு செய்து அவர்களின் துன்பங்கள் தீர வழி சொன்ன நீண்ட அறிக்கை ஒன்றை தயாரித்து அரசுக்கு கொடுத்தார். அதன் பெருமையாலேயே அது அவரின் பெயராலேயே 'மலையப்பன் அறிக்கை' என்று சொல்லப்படுகிறது.

இவர் திருச்சியில் பணிசெய்த காலம் திருச்சியின் பொற்காலம். LOCAL DEVELOPMENT WORKS, NATIONAL EXTENSION SERVICES CHEME, BLOCK DEVELOPMENT SCHEME என்று எல்லா திட்டங்களாலும் கிராம மக்கள் சாலை வசதி முதல் குடிநீர் வசதி வரை எல்லா முன்னேற்றங்களையும் கண்டனர். அதனால்தான் அடித்தட்டு மக்கள் தாங்கள் வாழும் பகுதிகளுக்கு 'மலையப்பன் நகர்', 'மலையப்பபுரம்' என்று பெயர்வைத்து அவரை பெருமைப்படுத்தினர். இன்றும் புள்ளம்பாடி குளமாணிக்கம் பகுதியில் பாய்ந்து அப்பகுதியை செழிப்பாக்கும் நந்தியாறு பாசன வாய்க்கால் 'மலையப்பன் வாய்க்கால்' என்று அவர் பெயரால் பாய்கிறது.

மலை மக்களான இருளர் வாழ்விலும் இவர் ஒளி ஏற்றினார். குன்னூரில பள்ளி அமைத்து இராமசாமி அடிகளை அப்பள்ளியை நடத்தவைத்தார்.

1955-ம் ஆண்டு திருச்சி மாவட்டஆட்சித்தலைவராக மலையப்பன் அமர்ந்தார். நாடோடிகளாக வெயிலில் காய்ந்து மழையில் நனைந்த நாடோடி இனத்தவர் மேல் அவர் பார்வை நிலைத்தது. அவர்களைப்பற்றி சினிமா வந்தது. ஏன் பாடல்கூட வந்தது. ஆனால் குந்த குடிசை மட்டும் வரவில்லை.


பள்ளியில் கலெக்டர் மலையப்பனுக்கு வைக்கப்பட்டிருக்கும் சிலை

மலையப்பனின் இரக்க அருவிகள் நாடோடிகள் மேல் கொட்டிய அழகை எழுத்தாளர் அ.மறைமலையான் 'மக்கள் கலெக்டர் மலையப்பன்' நூலில் விவரிக்கிறார். அந்த நூலை தேடிப்பிடித்து எனக்கு அனுப்பியது நண்பர் ஒரத்தநாடு த.ஜெகநாதன்தான்.

தேவராயன் ஏரி உள்வாயில் 120 ஏக்கர் நிலத்தை கலெக்டர் மலையப்பன் நாடோடியின மக்களுக்காகத் தேர்வுசெய்தார். அது திருச்சி - தஞ்சை முக்கிய சாலையில் உள்ளது. சில ஏக்கரில் நூற்றுக்கும் அதிகமான வீடுகள் கட்டிக்கொடுத்தார். ஒரே இடத்தில் தங்கி பிழைப்பதற்கு மிச்ச இடங்களில் விவசாயம் செய்ய வைத்தார். விவசாயம் செய்வதற்குத் தேவையான உழவு மாடு முதல் ஏர்கலப்பை வரை கிடைக்கச்செய்தார். நாடோடிகளுக்கு நிரந்தர முகவரியும் அதைப் படிப்பதற்கு கல்வியும் கொடுத்தார். அம்மக்களின் குழந்தைகள் தங்கிப்படிக்க காந்திஜி குடில் ஒன்றை திருவெறும்பூரிலும் பிறகு மன்னார்புரத்திலும் ஏற்படுத்தினார். பணி ஓய்வுக்குப்பின்னும் அவர்களுக்கு அவர் தொண்டு தொடரவே செய்த்து.

திருச்சி மாவட்டம் பச்சை மலை அழகான மலைப்பகுதி. அங்கு பள்ளி இல்லை. அந்த மலை மக்கள் படிப்பதற்கு உண்டு உரைவிடப்பள்ளி ஒன்றை அரசிடம் பெற்றுத்தந்தார். இவர்மீது பாசம்கொண்ட மலை மனிதர்கள் 'தோளி' என்னும் தொட்டில்கட்டி இவரை சுமந்து சென்று பள்ளியை இவரையே திறக்கவைத்தனர்.

ஓய்வுபெற்ற பிறகும் ஓயாத பணி அய்யா மலையப்பருக்கு. மனைவி அம்மாக்கண்ணு அம்மையார் காலமான பிறகு திருச்சியை துறந்து தஞ்சை ஏகினார். தஞ்சை கணபதி நகரில் உறவுகளின் துணையோடு தன் வீட்டிலேயே பட்டியலின பிள்ளைகளுக்கும் செல்லங்களுக்கும் தங்கும் விடுதி தந்து பராமரித்தார். அவர்கள் படிக்க இராமகிருஷ்ணா வித்யாலயா மற்றும் வி.பி செல்வராஜ் உயர்நிலைப்பள்ளியையும் உருவாக்கினார். நாடோடியின குழந்தைகள் ஓரிடத்தில் தங்கி பழகாதவர்கள். ஓடிப்போகும் அவர்களைத் தேடிப்பிடித்து உணவளித்து எண்ணெய் தேய்த்து பராமரித்த அவர்தான் அவர்களுக்கு வேண்டியபோது பெய்த மழை.

இவ்வளவு ஈரமான அய்யா மலையப்பனுக்குள் இருந்த இரும்பு மனிதனை எதற்கும் அஞ்சா நெருப்பு நெஞ்சை அவர் திறந்து காட்டியதும் திருச்சியில்தான். இது சுவாரஸ்யமான வரலாற்றுப் பின்னணி கொண்டது.

தமிழின் நவீன கவிஞரும் தீவிர சிந்தனையாளருமான பிரமிள், பெரியார் பற்றி சொன்ன ஒரு கருத்து முக்கியமானது. “சரித்திரத்தின் திருப்புமுனைகள்தோறும், பழைய சுவடுகள்யாவும் கேள்விக்குள்ளாகும். இவ்வித கேள்விகளை இந்தியாவில் எழுப்பியவருள், மிகவும் அதிசயமான ஒருவர் ஈ.வெ.ரா. ஏனெனில், அவரது ஒரே ஆதாரம் மனிதார்த்த மதிப்பீடுகள் சார்ந்த அபாரதீர்க்கமும் உச்சகட்டத் தயக்கமின்மையம் ஆகும்” (லயம் 1995) பிரமிளின் மதிப்பீட்டின்படி பெரியாரின் தனித்த இடம் அவரது 'தாட்சண்யமற்ற தயக்கமின்மை'தான்.


இப்படி தீர்க்கமும் தயக்கமின்மையும் கொண்ட பெரியார் ஒருவரைப்பற்றி சொல்கிற கருத்து முக்கியமானதாக மாறும். கலெக்டர் மலையப்பனைப்பற்றி பெரியார் நீதிமன்றத்தில் சொன்னது நமக்கு முக்கியமானது.

1955-ல் பண்ணையார்களுக்கும் குத்தகைதார்களான குடியானவர்களுக்கும் கூலிபிரச்சினை திருச்சி மாவட்டத்தின் லாலாபேட்டை நங்கவரம் பகுதிகளில் பற்றி எரிந்தது. சமரசம் செய்து, வேளாண்மையை தடையின்றி தொடர மாவட்ட கலெக்டர் மலையப்பன் முயன்றார். ஆனால் பண்ணையார்கள் அவரது சமரசத்தை ஏற்கவில்லை. வயலில் இறங்கி உழுத விவசாயிகளுக்கு கலெக்டர் உத்தரவுப்படி காவல்துறை பாதுகாப்பு கொடுத்தது. அதற்கான அரசாணையை கலெக்டர் வெளியிட்டார். அந்த அரசாணையை எதிர்த்து பண்ணையார்கள் நீதிமன்றம் சென்றனர். கலெக்டர் உத்தரவை செல்லாது என்றது நீதிமன்றம்.

இதில் வேடிக்கை என்னவென்றால், 'பண்ணையாள் குத்தகை பாதுகாப்பு சட்டம் 1955' என்ன சொன்னதோ அதைத்தான் மலையப்பன் உத்தரவும் சொன்னது—சற்று முன்னரே. தீர்ப்பளித்த நீதிபதிகள் வழக்கைத்தாண்டி கலெக்டர் மலையப்பன் இப்பதவிக்கே தகுதியற்றவர் என்று சொன்ன கருத்து பெரிய கொந்தளிப்பை ஏற்படுத்திவிட்டது. பெரியார் தயக்கமில்லாமல் நீதிபதிகளை விமர்சித்தார். நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பெரியார்மேல் பாய்ந்தது. தமிழ்நாடு சந்தித்த முதல் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு அதுதான். அவ்வழக்கில் பெரியாரின் ஸ்டேட்மென்ட் முக்கியமான ஆவணம். அந்த ஸ்டேட்மென்டில் கலெக்டர் மலையப்பன் குறித்து பெரியார் சொன்னதுதான், நமக்கு அய்யா மலையப்பனை புரிந்துகொள்ள உதவும்.

பெரியார் சொன்னார்... “நீதிபதி அவர்களே, கலெக்டருக்கும் எனக்கும் அறிமுகம் இல்லை. சந்திப்பு ஏற்பட்டதும் இல்லை. ஆனால் வெளியே சொல்வார்கள் கலெக்டரைப்பற்றி, நேர்மையும் நாணயமும் உள்ளவறென்று....” அந்த அறிவிக்கைத் தொடர்கிறது.

தட்சண்யம் பார்க்காத தயக்கமின்றி பேசும் பெரியாரே, தனக்கு பழக்கமே இல்லாத கலெக்டர் மலையப்பனை உயர்வாக மதிக்கிறார் என்றால் அவரின் உள்ளத்தூய்மை எப்படிப்பட்டது?! பண்ணையார்களுக்கும் வயலை உழும் குடியானவர்களுக்கும் பிரச்னை வந்தபோது கலெக்டர், சாதியின் பக்கம் நிற்காமல் நீதியின் பக்கம் நின்று உழவர்களைக் காத்தார். இதுதான் கலெக்டரை பதவி இறக்கம் செய்ய நினைத்ததன் நோக்கம். அவர் எப்போதும் அதிகாரமற்றவர் பக்கம் நின்றவர்.


அய்யா மலையப்பன் மனதை பறிகொடுத்த இடம் திருப்பராய்துறை இராமகிருஷ்ண குடில். அங்கு எல்லோருக்கும் அவர் “கலெக்டர் அய்யாதான்”... தேர்தலில் நிற்க காமராஜர் அழைத்தும் மறுத்துவிட்டார். அவர் அப்போதும் ஆதரவற்றவர்களோடே இருந்தார்.

அவரது நினைவைச் சுமந்து பல சாலைகளும் குடிநீர் தொட்டிகளும் நூலகங்களும் திருச்சியில் உள்ளன.


மக்களுக்காக செயல்படுவதை அவர் நிறுத்திக்கொண்ட நாள் - 1971 பிப்ரவரி 10

அவர் பிறந்த ஊரில் அவரின் சிலையை எளிய மக்களே நிறுவியுள்ளனர். அவர் தொடங்கிய பள்ளி இன்றும் இயங்கிவருகிறது.

“வாழ்ந்தவர்கோடி மறைந்தவர்கோடி மக்களின் மனதில் நிற்பவர் யார்...” என்ற கண்ணதாசன் கேள்விக்கு அய்யா மலையப்பனின் வாழ்வுதான் பதில்.


1956-ஆம் ஆண்டு வாக்கில் இப்போதைய ஒருங்கிணைந்த திருச்சி மாவட்டத்தின் ஆட்சியராக இருந்த ஒரு பார்ப்பனரல்லாத தமிழர் திரு. ஆர் .எஸ் .மலையப்பன் என்பவர் மிகச் சிறந்த நிருவாகி எனப் பெயர் பெற்றவர்.

இவர் ஆட்சித் தலைவ ராக இருந்தபோது பெரம்பலூர் அருகில் உள்ள நாராயண மங்கலம் என்ற ஊரில் நரிக்குறவ மக்களுக்கான வீடுகள் கட்டிக் கொடுத்து அவர்களின் வாழ்வா தாரங்களுக்கு உதவிகள் செய்தார். இது போன்ற பல மக்கள் நலப் பணிகளை மேற்கொண்டு மக்கள் ஆட்சியராக விளங்கிய அவர், அரசாங்கத்திற்காக ஒரு தனி நபரின் நிலத்தை எடுப்புச் செய்தது தொடர்பாக அந்த நபரால் நீதி மன்றத்தில்  வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கில் நீதிபதிகள் இருவர் தனி நபருக்குச் சார்பாக ஆணை பிறப்பித்ததோடின்றி நில எடுப்புச் செய்த ஆட்சியரை வரம்பு மீறிக் கண்டித்ததோடு அவர் நாட்டில் எங்கும் உயர் பதவிகளில் இருக்க இலாயக் கற்றவர் என்றும் அதில் குறிப்பிட்டி ருந்தனர்.



30 ஆண்டுகட்கு மேலாக, சீரான நிர்வாகத் திறன் படைத்தவர். குளித்தலை வட்டத்தில் நிலக் குத்தகைத் தகராறில் அவர் வழங்கிய தீர்ப்புக்கு எதிராகப், பாதிக்கப்பட்ட நிலப்பிரபுக்கள், சென்னை உயர்நீதி மன்றத்தில், மேல் முறையீடு செய்தனர். அதனை விசாரித்த இரு பார்ப்பன நீதிபதிகள், கலெக்டர் தமிழர் என்பதால், எவ்வளவு தூரம் தாக்க முடியுமோ தாக்கி, அரசு உடனே இவரை வீட்டுக்கனுப்ப வேண்டுமென்றும் பரிந்துரைத்தனர். இதனை உச்சிமேல் வைத்து மெச்சிக் கொண்டது, "இந்து” ஏடு. திருச்சிவாழ் பொதுமக்களின் ஏகோபித்த அபிமானத்தைப் பெற்றவராதலின், மலையப்பன் மீது தீர்ப்பைக் கண்டித்து, ஒரு லட்சம் பொதுமக்கள் திரண்டெழுந்த கூட்டத்தில், பழனியாண்டி (பிறகு நாடாளுமன்ற உறுப் பினர்) தலைமையில், தீயிட்டுக் கொளுத்தப்பட்டது.


உயர்நீதிமன்றத்தினால் சங்கடப்படுத்தப்பட்டபொழுது, ‘‘இந்து’’ பத்திரிகையில் தலையங்கம் எழுதப்பட்டபொழுது, அதனை எதிர்த்து குரல் கொடுத்த ஒருவர்தான் தந்தை பெரியார். அந்த உரை விடுதலையில் அச்சடிக்கப்பட்டது என்பதன் காரணமாகத்தான், மணியம்மையார் அவர்கள் விடுதலையின் ஆசிரியர் என்கிற முறையில், அவர்கள் சிறைச்சாலைக்குப் போகக்கூடிய தண்டனைக்கு உட்படுத் தப்பட்டார்கள்.

பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் வட்டம் காரை மேற்கு எல்லைக்குட்பட்ட பகுதியில் மலையப்பநகர் உள்ளது. இங்கு நரிக்குறவர் இன மக்கள் மற்றும் கலைகூத்தாடிகள் இன மக்கள் பலர் வசித்து வருகின்றனர். முன்னொரு காலத்தில் அவர்கள் ஊசி, பாசிமணி உள்ளிட்டவற்றை விற்றும், தெருவில் நடனம் ஆடி மக்கள் தரும் வெகுமதியை வைத்து பிழைப்பு நடத்தினார்கள். பின்னர் திருச்சி மாவட்ட கலெக்டராக இருந்த மலையப்பன், நட வடிக்கையின் பேரில் அந்த மக்களின் வாழ்வாதாரத்தை வளர்ச்சியடைய செய்யும் பொருட்டு நிலம் வழங்கப்பட்டது. இதனால் தான் அந்த பகுதிக்கு மலையப்பநகர் என பெயர் வந்தது.

விவசாயம் செய்து வாழ்வில் முன்னேற்றம் அடைய மலையப்பன் ஐ.ஏ.எஸ். தான் காரணகர்த்தாவாக இருந்தார்.

திருச்சியில், வறுமை கோட்டிற்குக் கீழ் இருக்கும் மாணவர்கள் பயிலும் பள்ளியை நிர்வகித்து வரும் நரிக்குறவர் இனத்தைச் சேர்ந்த பெண் ஸ்வேதாவின் தந்தை ஆர்.எஸ்.மலையப்பன் பேருல ஹாஸ்டல் நடத்தி வருகிறார்.


திருப்பரங்குன்றம் கலியத்தேவர்

 

திருப்பரங்குன்றம் கலியத்தேவர்

சுப்ரமணியசுவாமியின் கருவறை கி.பி.773இல் பராந்தக நெடுஞ்சடையன் (765-815) என்ற பாண்டிய மன்னர் காலத்தில் அவரது படைத்தலைவன், சாத்தன் கணபதி என்பவரால் சிவனுக்காக எழுப்பப்பட்ட குகைக்கோவில் என்று கல்வெட்டுச் செய்தி தெரிவிக்கிறது. கள்ளர்கள் பெரும்பான்மையினர் வாழும் பகுதி.


திருப்பரங்குன்றம் கோயில் கணக்கு :

திருப்பரங்குன்றம் கலியத்தேவர் அவர்கள், திருப்பரங்குன்றம் கோயில் தொடர்பாக எழுதி வைத்திருந்த சில கைப்பிரதிகள் கிடைத்தன.

1) திருப்பரங்குன்றம் தோன்றிய வரலாறு,
2) கோயில் திருவிழா மானியங்கள்,,
3) மதுரையை ஆண்ட மன்னர்கள்,
4) திருப்பரங்குன்றம் கோயில் கணக்குகள்
5) கணக்குகளைத் தொடர்ந்து நாயக்க மன்னருடன் எங்களது முன்னோர்களின் பிணக்குகள்,
6) அதைத் தொடர்ந்து சகாப்தம் 1635இல் திருப்பரங்குன்றம் கோயிலானது மதுரைக் கோயிலுடன் சேர்க்கப்பட்ட குறிப்புகளையும் திருப்பரங்குன்றம் கலியத்தேவர் எழுதி வைத்துள்ளார்.

திருப்பரங்குன்றம் அருள்மிகு வீரபாகுத் தேவரை வழிவழியாக தங்கள் குலதெய்வமாக வணங்கி வரும் வம்சாவழியை சேர்ந்த கலியத்தேவர். இவர் எழுதி வைத்ததில், 8 பக்கங்களே கிடைத்தன. இவற்றைப் படிப்பதற்கு மிகவும் சுவாரசியமாக இருந்தாலும், மொத்தத்தில், எழுதிவைத்தது மொத்தமாகக் கிடைக்கவில்லையே என்ற வருத்தமே மிகுகிறது.

திருப்பரங்குன்றம் கலியத்தேவர். இவர் எழுதி வைத்திருந்த திருப்பரங்குன்றம் கோயில் கணக்குகள் சில...., அவரது கைப்பிரதிகளில் இருந்தபடி....

கீழே தட்டச்சு செய்யப்பெற்றுள்ளன.

பக்கம் 6

வேறே கடுதாசியிலிருந்தது.
யாதாஸ்த்து உசூர் ரிக்கார்டிலிருக்கிற 1246 பசலியின் தேவஸ்தானம் சத்திரம் அர்ச்சனை கட்டளை கைபீது வேறு புஸ்தகத்திலிருந்து எடுத்து எழுதியது ----- திருப்பரங்குன்றம் கோவில் சுப்பிரமணிய சுவாமி -------- யில் வாயுபகவானுக்கும் ஆதிசேஷனுக்கும் ----தற்கம் வந்ததில் தேவாதிகள் மகாமேரு பருவதத்தினுடைய சிகரம் ஆதிசேஷனுடைய படத்தினால் மூடிக்
கொள்ளும்படியாயும் வாயுபகவானுக்கு சொல்பம் ஒரு சிகரத்தின் பேரிலிருக்கிற படம் வைத்து எடுக்கும்படியாயும் நிஷ்கரித்த்தில் வாயுபகவான் அஷ்டபலத்தினால் கிராயஞ் செய்ததில் ஒரு சிகரம் பிட்டு பூலோகத்தில் விஸ்தாரகமாகக் கொண்டுவந்து போட்
டார் அதில் --- பங்கு சத்திய பருவத சத்திய கிரிஈஸ்பரர் ஒரு பங்கு அநேக தீர்த்தமும் உற்பத்தியாச்சுது. இப்படி யிருக்கும் போது சூரபத்மாசூரனென்று ஒரு ராக்ஷஸன் பிறபலமாய் தேவாதிகளுக்கு ரெம்ப இம்சை செய்யப் பட்டான். அப்போது தேவாதிகள் பரமேஸ்பரனிடத்தில் போய் விசனப் பட்டார்கள். அப்போது பரமேஸ்பரன் தன்னுடைய குமாரன் சுப்பிரமணிய சுவாமிக்கு போய் சூரபத்மா வென்கிற ராக்ஷஸனுக்கு வதம் செய்து தேவாதிகளுடைய கஷ்ட பரிகாரம் செய்கிறது யென்றும் அனுப்பி விச்சார். அப்போது சுப்பிரமணிய சுவாமி திருப்பரங்குன்றம் என்கிற சத்தியகிரிக்கு வந்து சத்தியகிரீஸ்ரருடைய தருஷணம் (தெரிசனம்) செய்து கொண்டு வீரமஹேந்திர புரத்திலிருந்து சூரபத்மா வென்கிற ராக்ஷஸனுக்கு சம்மாரம் செய்து சத்தியகிரி பருவதத்திற்கு வந்து பார்க்கும்போது மேற்படி பருவதமும் தீர்த்தமும் ரெம்ப ரமனியமாய் இருந்ததினாலே இவிடத்தில் தானே வாசஞ் செய்யலாமென்று இருந்து விட்டார். அப்பால் தேவாதிகள் சகலத்திராளும் ரெம்ப சந்தோஷப்பட்டு தேவேந்திரனுடைய மகள் தேவநாயகியை கல்யாணம் செய்து வைத்தார்கள். தேவதா நிர்மாணஸதலம் 

பக்கம் 7

அபலர்ல ---- சக்கரவர்த்தி ராஜா வானவர் காடு வெட்டி ஆலயம் கட்டினார். சிபி சக்கரவர்த்தி --- நவக்கிரக தோஷம் விமோசினார்த்தமாயி --- க்கு வந்து கங்கா தீர்த்தத்திலிருந்து சிவதீக்ஷிதானை வரவழைத்து அக்கிரகரா பிரதிஷ்டை செய்து பூஜைபடித் தரத்துக்கும் கைங்கரிய வகையறாவுக்கும் பிராமணாளுக்கு சதுர்வேதமங்கலம் என்கிற கிராமம் தானம் செ
ய்து அக்கிரகாரம் கட்டி சுவாமிக்கு பூஜை படித்தரம் நடப்பிவித்து வந்தார் (நடத்தி வந்தார்) அப்பால் சுந்தரபாண்டியன் சிவபிரதிஷ்டை செய்து பூஜை படித்திரத்துக்கு அச்சங்குளம் தருமத்துப்பட்டி உச்சப்பட்டி. 3 கிராமமும் விட்டு பூஜை படித்தரம் நடப்பிவித்து வந்தார். பராக்கிரம பாண்டியன் நாகையில் படித்தரத்துக்கு திருப்பரங்குன்றம் மேலக்குயில்குடி ரெண்டு கிராமும் ஸ்தானீகம் அர்ச்சகாளுக்கு நெடுங்குளம் குருக்கெட்டான் நாயக்கன் பட்டி முயிலாம்பட்டி கிராமம். 4 ஆக முன் உள்பட (10) கிராமம்விட்டு மேற்படி கிராமத்தின் ஆமிசத்தினால் பூசை படித்தரம் நடப்பிவித்து வந்தார்கள். அப்பால் ஆதிவாரணம் ராஜாவானவர் படித்திரத்துக்கு விட்டது கரிசப்பட்டி மேட்டுப்பட்டி (2) மேற்படியார் சமுசாரம் சோலையம்மாள் விட்டது ராயபாளையம் மலையம்மாவிட்ட்டது வேப்பங்குளம் ஆக முன்னுள்பட (14) கிராமத்தின் துகையினாலும் அப்பால் தணநாயக்கன் விட்டது வடிவேல்கரை பெரியவீரப்ப நாயக்கன் விட்டது கிருஷ்ணாபுரம் வெல்லப்பாரப்பாடி (3) அப்பால் விசுவநாத நாயக்கர் விட்டது சூரக்குடி அபிஷேக நல்லூர் அப்பக்காவி.வீரமொடையான் ஆக்கிறாமம் (4) ஆக முன்உள்பட (22) கிராமம் ஜாரியாயிருந்து மேற்படி கிராமத்தினை துகையினாலே படித்தரம் பூஜைவகையறா நடந்து கொண்டிருந்தது.

அப்பால் திருமலைநாயக்கர் ----சாலியவாகன சகாப்தம் (1545---ருத்ரோக்காரி வருஷத்தில் படித்தரத்துக்கு விட்டது ---யுதப் பேரி.1.வீரமுடையான் 1.வேல்லங்குளம் 1.ஆவியூர்.1.ஆக (4) கிராமும் ஸ்தானீகான் வகையறா சிப்பந்திகளுக்கு நிலமானிபமும் சர்வமானியமாக விட்டுப் படித்தரமவகையறா கிராமத்தின் அய்வேசில் எங்களுடைய பெரியோர்கள் பூஜைவகையறா சிலவு நடத்தி

பக்கம் 8

கணக்கு கருவேலத்தில் இருக்குது. வைத்திருக்கிறதாய் முன்னிருந்த யெங்களுடைய பெரி யோர்கள் சொல்லக் கேள்விப்பட்டிருக்றோம் அப்பால் சிவல் மகாராஜாவிட்டது சிவகானப்பட்டிக சேதுப்பிள்ளை அய்யன்விட்டது செம்பக்குடி.1
வெட்டுமாவிலி ராஜா விட்டது. வடபளிஞ்சி. 1. ரெகுநாத சேதுபதி விட்டது தாமரைக்குகை. 1. ஆகமுன் உள்பட கிராமம் (30) அப்பால் குமாருசாமி முதலிகட்னைக்கு விட்டது. உலகாணி சந்நியாசியேந்தல் மூடத்துர் கிராம்ம் (3) முத்தம்பலமுதலி கட்டளைக்கு விட்டது. அபிஷேக நல்லூர். கொங்கர் புளியங்குளம் கிராமம். 2 பல்லவராயகட்டளை விட்டது கழுகெடை..1. சாலியவாகன சகாப்தம் 1610 அக்ஷய வருஷத்தில் திருவேங்கிடநாத நாயக்கர் பூஜைபடித்திரத்துக்கு விட்டது. வேடர்புளியங்குளம்.1. ஆகமுன் விட்டது உள்பட பூஜை படித்தரம் கிராம்ம் 25 கட்டளைக்கு விட்டது கிராமம் 5 நிர்வாக அர்ச்சனாபாகம் கிராமம் 4. சில்லரைத்தொள்ளாழிக்கு கிராமம் 3 ஆகக்கிராமம் (37) ம் விட்டு பூஜை படித்தரம் ஐவேசினால் விஜய ரெங்க சொக்கப்பநாயக்கர் அதிகாரம் வரை எங்களுடைய முன்னோர்கள் மானியமாகி பூஜைவகையறா---நடந்து அப்போதிருந்த அதிகாரிகள் ----கணக்கு ----யெங்க ளுடைய பெரியோர்கள் -----யெங்களுக்குத் தெரியும் சாலியவாகன சகாப்தம் 1621 பிரமாதி
வருஷத்தில் விஜய ரெங்க சொக்கப்ப நாயக்கன் அதிகாரத்தில் கோயில்பூஜை மிச்சம் வைகயறா சர்க்காரில் தாக்கல் செய்ய உத்தரவு கொடுத்தார். அதற்கு யெங்களுடைய பெரியோர்கள் சர்க்காரில் தாக்கல் செய்யக் கூடாதென்று விவகாரஞ் செய்து கேட்டதில் மாமூல்படி படித்திரதில் சேர்த்து நடப்பிவிக்கும்படி உத்தரவு கொத்து திருவிளையாடல் கிருமதத்துக்கு பூஜை மிச்சம் தேவையில்லை யென்றுயிரண்ணியோதகரதாரா பூர்வகம தானம் செய்துசாலிய வாகன சகாப்தம் 1635 விஜயவருஷத்தில் ஆடி மாஸத்தில் மீனாச்சி கோவிலுடன்(பக்கம் 8 முடிவுபெற்றது.)

பக்கம் 9 கிடைக்கப் பெறவில்லை.... 





















அன்பன் காசிசீர், முனைவர், நா.ரா.கி. காளைராசன் தேவர் 

கள்ளர் - கள்ளர்கள் - யார் கள்ளர் சாதியினர் - Who are the Kallars - Who are the Kallar caste

ஆங்கிலேயர்கள்,  கள்ளர்களை  சென்னை மாகாணத்தில் 1911-ம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட குற்றப் பரம்பரைச் சட்டத்தின் கீழ் கொண்டுவந்தனர். ஆனால் இந...

இந்த வலைப்பதிவில் தேடு

என்னைப் பற்றி

எனது படம்
Contact: info.kallarkulavaralaru@gmail.com, தமிழகத்தில் வாழும் கள்ளர் மரபினர் முக்குலத்தோரில் ஒரு பிரிவினர் ஆவர். கள்ளர், மறவர், அகமுடையார் ஆகிய முக்குலங்களும் போர்த் தொழிலை அடிப்படையாக கொண்டு வாழ்ந்து வந்ததால் இந்த மூன்று சாதியினரும் முக்குலத்தோர் என்று அறியப்படுகின்றனர். இந்த மூன்று குலத்தினரும் "தேவர்" என்ற பொதுவான பெயரோடு அறியப்படுகிறார்கள். கள்ளர் மரபில் அறந்தாங்கி தொண்டைமான், புதுக்கோட்டை பல்லவராயர், புதுக்கோட்டை தொண்டைமான் மற்றும் பல சமீன்தார்களும், பெரு நிலவுரிமையாளர்களும் இருக்கின்றனர். (கள்ளர் படைப்பற்று - கள்ளர் நாடு - கள்ளர்த்தடி). கள்ளர் வரலாறு : வரலாறு என்றால் வந்த வழி என்று பொருள். வந்த வழி தெரியாதவர்களுக்குப் போகும் வழி புரியாது. வரலாற்றை நாம் நினைவு கூர்வதற்குக் காரணம் கடந்து போன ஈகங்களை எண்ணிக் கண்ணீர் விடுவதற்காகவும், நிகழ்த்தி விட்ட வீரங்களைச் சொல்லிப் பெருமை பேசுவதற்காகவும் அல்ல. வருங்காலத்திற்கு வழி சமைப்பதற்கு அந்த ஈகமும் வீரமும் வழிகாட்ட வேண்டும் என்பதற்காகத்தான். கள்ளர்களின் நான்கு முக்கிய பிரிவுகள் - ஈசநாட்டுக்கள்ளர் (திருச்சி, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை) : கிளைவழிக்கள்ளர் (சிவகங்கை) : அம்பல கள்ளர் / நாட்டார் கள்ளர் (சிவகங்கை, மதுரை) : பிறமலை கள்ளர் (மதுரை, உசிலமபட்டி, தேனி, கம்பம், திண்டுக்கல்)

வலைப்பதிவு காப்பகம்

பின்பற்றுபவர்கள்