சனி, 21 மே, 2022

ஆம்பலாபட்டு தந்தை வெ.அ.சுப்பையன் முடிபூண்டார்

ஆம்பல் தந்தை வெ.அ.



1962 தமிழ்க சட்டமன்றத் தேர்தல். தஞ்சை -மு கருனாநிதி DMK, பரிசுத்தம் நாடார் INC. மன்னார்குடி -T S சாமிநாத ஒடையார் INC, P நாராயணசாமி ஓந்திரியர் DMK, R தங்கராசு CPI. பட்டுக்கோட்டை– அருனாசல தேவர் DMK, சீனிவாச அய்யர் INC, மாசிலாமணி CPI. அதிராம்பட்டினம்-பாலதண்டாயுதம் INC, AR மாரிமுத்து(sitting MLA) PSP, வெ.அ.சுப்பையா முடிபூண்டார் CPI. இந்த தேர்தலில் தமிழ் நாடு முழுவதும் 68 பேர் CPI சார்பில் களத்தில் இருந்தனர், அதில் வெ.அ வும் ஒருவர். 68பேரில், 2 பேர் மட்டுமே வெற்றி பெற்றனர் கல்யாணசுந்தரம் திருச்சி தொகுதி II, AK சுப்பையா திருத்துரைபூண்டி தொகுதி. DMK 50 இடங்களில் வெற்றிபெற்று எதிர் கட்சியானது. கருணாநிதி வெற்றி அண்ணாதுரை தோல்வி.


62ல் வெ.அ. அவர்களை கட்சியே வழிய வந்து முன்மொழிந்து தேர்தல் களத்தில் 68 ஒருவராக வெ.அ.வை நிருத்தியது என்றால், தமிழ்நாடு முழுவதும் இருந்த மிகமுக்கியமான CPI தலைவர்களில் வெ அ வும் ஒருவராக இருந்திருக்கிறார் என்பது மறுக்கமுடியாத உண்மை. அந்த தலைவனை பற்றி யாம் அறிவோமாக. 


ஆம்பலாபட்டு, மதுக்கூர் ஜெமின் அதிகார வரம்புகுட்பட்ட மேல கோடி கிராமம். மதுக்கூர் ஜெமின் எல்லை முடிவிலிருந்து ஒரு பர்லாங் தொலைவில் பாப்பநாடு ஜெமினின் அரண்மனை.  ஆம்பலாபட்டு மணியாராக வெ.அண்ணாமலை முடிபூண்டார் இருந்தார். இவருடைய மூத்த மகன்தான் வெ.அ.சுப்பையன் முடிபூண்டார் (மணியார் குடும்பத்தார்). இவர் 24.12.1924 ல் இலங்கையில்( அம்மாயி வீடு தொண்டமான் குடும்பம் கொழும்பில் இருந்தது) பிறந்து ஆறு மாத குழந்தையாக ஆம்பல் மண்ணில் வந்து இறங்கினார்.


1940-41ல் தோழர்கள் பி முத்துகாமாட்சி, வெ.அ.சுப்பையன், அல்லாடி அண்ணாமலை மாதுரார், மு அ குழந்தையன் சேனாபதி, புண்ணிய கதிரேச மாதுரார் இவர்கள் தான் முதன் முதலில் கம்னியூஸ்ட் கடசியை ஆம்பலாப்பட்டில் துவக்கியது. கதிரேசன் மாதுரார் முதல் கிளை செயலாளர்.

வெ.அ.தனது 19 வது வயதில்-1944ல் கிராம நீதிபதிக்கான தேர்தலில், ஜமின் சார்பாக நிருத்தபட்ட அவரது தந்தை அண்ணாமலை முடிபூண்டாரை  தோற்கடித்து வெற்றி பெற்றார். தனது 19 வயதில் தொடங்கிய பஞ்சாயத்து பணி சுமார் 60 ஆண்டு காலம் ஊரு ஊராக கூட்டம், பஞ்சாயத்து, கட்சி, என்றே வாழ்ந்த  ஒரு மாமனிதன்.


ஜெமின் ஒழிப்பு வலுப்பதை உணர்ந்த மதுக்கூர் ஜெமின், ஆம்பலில் தனது வசம் இருந்த 700 ஏக்கர் நிலத்தை விற்க முடிவு செய்து விற்றபோது சுமார்  200ஏக்கர் நிலத்தை மணியார் அண்ணாமலை முடிபூண்டார் வாங்குகிறார், இதனை சொந்த மகனான வெ.அ அவர்கள்  தந்தையை எதிர்த்து சண்டையிட்டு, போராடி, வாங்கிய நிலத்தை வேண்ணடாமென்று திரும்ப  ஒப்படைத்துவிடுகிறார். இந்த செயலை பார்த்த தஞ்சை மாவட்டத்தில் இருந்த ஜமீன்தார்கள், யார் இந்த இளைஞன், புரட்சியாளன் என்று எண்ணி வியந்தாரகள். ஒரு வேலை வெ.அ. அப்படி தடுத்து நிறுத்தி 200 ஏக்கர் நிலத்தை திருப்பி கொடுக்காமல் இருந்திருந்தால், தான் ஒரு குட்டி ஜமீனாக வாழ்ந்திருக்ககூடும்.  ஆனால் அவர் எளிமையாகவே வாழ்ந்தார்.


1950-ல் செம்பாளூர் சாம்பசிவ அய்யர் வீட்டு கொள்ளை சம்பவம், அதன் விளைவாக ஆம்பலை சுற்றி மைல் கல்லுக்கு நான்கு போலீஸ் என்று குவிக்கப்பட்ட போலீஸ் படை அவர்களின் கட்டுக்கடங்கா நெருக்கடி அதனை தொடர்ந்து முக்கிய முன்னோடிகளின் தலைமறைவு வாழ்க்கை என ஆம்பலாப்பட்டையே உலுக்கிய கொடூர சம்பவம் ஊரறிந்த ஒன்று. இந்த சமயத்தில் தான் பண்ணையார்களின் கொடூரங்களை எதிர்த்து போராடி, தலைமறைவாக இருந்த  சாம்பவான் ஓடை சிவராமன், வாட்டாகுடி இரனியன், ஆம்பலாபட்டு  ஆறுமுகம் ஆகியோர் போலிஸால் சுட்டுகொல்லபட்டனர். இதனை தொடர்ந்து தலைமறைவாக இருந்த ஆம்பலின் முக்கிய நபர்களுக்கும் சூட்டிங் ஆடர் வரபோகிறது என்ற தகவல் பரவ தொடங்கியது. இதனையடுத்து ஊராரும், உறவினர்களும், கட்சியும் வற்புறுத்தி பலரை போலிஸில் சரண்டைய செய்கிறார்கள். இதில் தலைமறைவாக இருந்த வெ.அ அவர்களையும் சரண்டைய செய்தனர்.  சரண்டையாமல் இருந்திருந்தால் ஆம்பலாபட்டை சார்ந்த 2-3 தோழர்கள் வெ.அ.உட்பட சுட்டு கொல்லபட்டிருப்பார்கள். விசாரனை கைதி காலம் போக சுமார் ஓர் ஆண்டு காலம் சிறைதண்டனை வழங்கப்பட்டது. இது போன்று கட்சி போராட்டங்களில், மறியல்களில் கலந்து கொண்டு எத்தனையோ முறைகள் அய்யா சிறைசென்றிருக்கிறார் என்பதை கட்சி தோழர்கள் அறிவார்கள்.


1954 ஆம் ஆண்டு (ஜில்லா போர்டு) மாவட்ட ஆட்சி மன்ற உறுப்பினருக்கான தேர்தலில் கட்சியின் சார்பாக வெ.அ. தொண்டாராம்பட்டு தொகுதில் போட்டியிட்டார். வெ.அ.அவர்களின் செயல்பாடுகளையும், சமூக உணர்வையும் பார்த்த அன்றைய ஜில்லா போர்டு மற்றும் காங்கிரஸ் கமிட்டி தலைவரான கிருஷ்ணசாமி வாண்டையார் (இன்றைய கிருட்டிணசாமி வாண்டையாரின் தாத்தா) மணியாரை அழைத்து, பையன நம்ம கட்சியில சேர்த்துவிடுங்க, MLA வா ஆக்கி சட்ட சபைக்கு அன்னுப்பி வைப்போம் என்று கூறியுள்ளார். மணியார் காங்கிரஸ்காரர், அவரும் மகனை காங்கிரஸில் சேர்த்துவிடலாம் என முடிந்த அளவு முயற்சி செய்திருக்கிறார். ஆனால் வெ.அ அவர்கள் மசியவில்லை. தான் கொண்ட கட்சியையும் கொள்கையையும்  உயிர் மூச்சு என கடைசி வரை உறுதியாக இருந்த ஒரு உத்தம தலைவன். ஒரு வேலை கட்சி மாறி காங்கிரஸில் சேர்ந்திருந்தால், நாடிமுத்து பிள்ளை, AR மாரிமுத்து, பாலதண்டாயுதம்  R வெங்கட்ராமன் இந்த வரிசையில் வெ.அ. அவர்களும் நிச்சயமாக ஒரு MLA/MLC வாக தமிழக சட்டமன்றத்தில்  இடம் பெற்றிருப்பார். 


அய்யா அவர்கள், ஊரின் வளர்ச்சிக்கும், மேன்பாட்டிற்கும் தன்னை முழுமையாக அற்பணித்தவர். முதல் ஊராட்சி மன்ற தேர்தலில் ஊர் கூடி அய்யாவை முன்மொழிகிறது, யாரும் எதிர்த்து போடியிடவில்லை போட்டியின்றி (unopposed) தேர்ந்தெடுக்கபட்டார். இவர்தான் எங்கள் தலைவர் என்று தேர்தல் அதிகாரிடம் எழுதி தூக்கிபோட்டுவிட்டு, பாப்பநாட்டிலிருந்து ஆம்பல் வரை அய்யாவை தோலில் தூக்கி கொண்டாடினர்.


ஒரத்தநாடு ஒன்றியத்தின் கீழ் உள்ள 63 ஊராட்சிகளில், வெ.அ.மிக முக்கியமான ஊராட்சிமன்ற தலைவராக திகழ்ந்தார். ஒன்றியத்தின் கீழுள்ள ஊராட்சிகள் எதோ ஒரு வகையில் மாநிலத்தில் ஆட்சி செய்த காங்கிரஸ், திமுக, அதிமுக கட்சிகளின் ஆதரவு பெற்ற ஊராட்சிகளாக இருந்தன. ஆனால் அந்த ஊர்களில் இல்லாத அளவுக்கு ஆம்பல் பல வளர்ச்சி திட்டங்களையும், சலுகைகளையும் பெற்று ஒரு நல்ல வளர்ச்சியடைந்த கிராமமாக உருவாக்க முடிந்தது என்றால் அது வெ.அ.அவர்களின் தனிமனித செல்வாக்கும் அவருக்கு ஒன்றியத்தில் இருந்த மதிப்பும் மரியாதையும்தான் காரணம். அடுத்து வந்த ஊராட்சி மன்ற தேர்தலில் வெ.அ. CPI சார்பிலும், கதிரேசன் மாதுரார் CPM சார்பிலும் போட்டியிட்டனர் பலர் CPI-CPM, CPM-CPI என மாறி மாறி இருந்திருக்கிறார்கள். ஆனால் வெ.அ கொண்ட கொள்கையில் உறுதியாக இறுதி வரை இருந்த ஒரு உன்னத தலைவன்.  கதிரேசன் மாதுரார், வெ.அ. வின் உடன்பிறந்த அக்காவின் கணவர், மைத்துனர். அய்யா கட்சி மேலிடம் என்ன சொல்கிறதோ அதை செய்வார். கட்சிக்கு பிறகுதான், மனைவி, மக்கள், சொந்தம், பந்தம், பாசம் எல்லாம். பொது வாழ்வில் அந்தளவுக்கு கொள்கை பிடிப்போடு வாழ்ந்தவர். இந்த தேர்தலினால் அக்கா வாழ்க்கை பாதிக்கபடுமோ என்றெல்லாம் யோசிக்கவில்லை.  மைத்துனரை வென்று மீண்டும் ஊராட்சி தலைவரானார். 


காமராசர் ஆட்சி காலத்தில் தான் தமிழகம் முழுவதும் ஊரெல்லாம் பள்ளிக்கூடங்கள் நிறுவபட்டன எனபது வரலாற்று. ஆனால் ஆம்பலாபட்டிற்கு உயர்நிலை பள்ளி பெறுவதில் பெரும் சிக்கல், செம்பாளூர் சம்பவம், பட்டுக்கோட்டை நாடிமுத்து பிள்ளை வீடு முற்றுகை, காமராசரை வழிமறித்து கோசம் போன்ற சம்பவங்களால் தஞ்சையை சார்ந்த மிக முக்கிய காங்கிரஸ் தலைவர்கள் வாண்டையார் உட்பட ஆம்பலாப்பட்டை நசுக்கி ஒடுக்க முடிவு செய்து ஆம்பலுக்கு எந்த ஒரு சலுகையும், வளர்ச்சி திட்டத்தையும் அளிக்க காங்கிரஸ் ஆட்சி மறுத்துவிட்டது. ஆம்பலாபட்டிற்கு பள்ளி இல்லை என்றும் ஆகிவிட்டது. அனைத்தையும் போரடியே பெற வேண்டிய நிலை ஆம்பலாப்பட்டிற்கு இருந்தது. வெ.அ அவர்கள் விடாமுயற்சியில் இறங்குகினார். கல்வி துறை இயக்குனர் நெ.து.சுந்தரவடிவேலு அவர்களை பார்த்து  ஆம்பலாபட்டிற்கு உயர்நிலை பள்ளி அவசியம் தேவை என்பதை வலியுறுத்தி துறைரீதியாக கோரிக்கை வைத்தார். அன்று 6,7,8வகுப்பு படிக்க பாப்பநாடு செல்லவேண்டும் 9,10,11க்கு பட்டுக்கோட்டை செல்லவேண்டும். ரோடு வசதி வாகன வசதி எதுவும் கிடையாது நடந்துதான் செல்லவேண்டும்.  பத்து பன்னன்டு வயது பையனுக்கு பாப்பநாடு நடந்து போய் வருவது என்பது நாடு விட்டு நாடு போவது போன்றது. இதனால்தான் ஊரில் பெரும்பாலானோர் பாப்பநாடுக்கு நடந்து போய் 6வது 7வது வரை படித்துவிட்டு அதற்கு மேல் நட்டக்க சிறம்பட்டு என்னத்த படிச்சி கிழிச்சி என்று படிப்பை தூக்கி போட்டுவிட்டு 🐐 ஆடு 🐮 மாடு மேய்க்கவும் வயல் காட்டில் வேலை செய்யவும் இறங்கிவிட்டனர். ஒரு சிலர் மட்டுமே 1950-60களில் கல்லூரி வரை சென்று படித்தாரகள். ஆக இந்த அவல நிலைய போக்க உயர்நிலை பள்ளி அவசியம் தேவை எனபதை உணர்ந்து, விடாமுயற்சியாக  கல்வி துறைக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டது. இதனை சமாளிக்க நெ.து சுந்தரவடிவேலு  ஆம்பலாபட்டிற்குத்தானே பள்ளி கிடையாது. வேறொரு பெயரில் வேண்டுமால் முயற்சி செய்து பாருங்கள் என்று ஒரு யோசனை சொல்ல, பிறகு  இலுப்பைதோப்பு என்ற பெயரில் 1964ல் ஆம்பலாப்படிற்கு உயர்நிலைப்பள்ளி பெறபட்டது. 1978ல் பள்ளியில் இருந்த SSLCயையும், கல்லூரியில் இருந்த PUCயையும் ஒன்று சேர்ந்து +1& +2 என உயர்நிலை பள்ளிகளை மேல்நிலை பள்ளிகளாக மாற்றி அமைத்தனர். கிழக்கு வழிசாலையில் வடசேரி, ஆலத்தூர், பட்டுக்கோட்டை மேற்கு வழிச்சாலையில் ஒரத்தநாடு, உரந்தராயன்குடிகாடு, பட்டுக்கோட்டை, இதற்க்கு இடையில் மேல்நிலை பள்ளி கிடையாது. இலுப்பைத்தோப்பில் 78, 79 ல் 10th முடித்தவர்கள் பெரும்பாலோர் ஆலத்தூர் ஒரு சிலர் ப.கோட்டை, உ.காடு, சென்று +2படிக்க நேரிட்டது. இந்த இன்னலை போக்க, அய்யா முயற்சியில் இறங்குகிறார். இப்போது அவர் ஊராட்சி தலைவர் கிடையாது, எந்த பொருப்பும் கிடையாது. இருந்தாலும் அவருடைய ஊரின் வளர்ச்சியை பற்றிய எண்ணம், எப்படியாவது  ஊருக்கு மேல்நிலை பள்ளி பெற்றாக வேண்டும் என்ற உணர்வை தூண்டிவிட்டது. (1960 லிருந்து 1996 வரை, 36 ஆண்டுகளில் 3 அல்லது 4 முறைதான் ஊராட்சி தேர்தல் நடந்தது அனைத்திலும் அய்யா தான் தலைவராக தேர்தெடுக்கப்பட்டார், பல ஆண்டுகள் பஞ்சாயத்து தேர்தலே நடக்கவில்லை இருந்தாலும் அய்யாவே இயல்பாக (by default) ஊராட்சி தலைவராக திகழ்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.)அந்தவகையில் உயர்நிலை பள்ளியை மேல்நிலைபள்ளியாக்க, அன்றைய வருவாய் துறை அமைச்சராக இருந்த SDSயை போய் பார்த்து இரண்டே நாளில் இலுப்பைத்தோப்பு மேல்நிலை பள்ளிகான அரசாணையை பெற்று வந்தார். இலுப்பைத்தோப்பு 1980லிருந்து மேல்நிலை பள்ளி.( SDS அவர்கள் வெ. அ வை தனது  அரசியல் முன்னோடியாக வைத்து மிகுந்த மதிப்பும் மரியாதையும் கொண்டிருப்பார்) ஆம்பலுக்கு பிறகு சில ஆண்டுகள் கழித்து தான் கரம்பயம், பாப்பநாடு,  மேல்நிலை பள்ளிகளானது. இதே போன்று SSLC/10th தேர்வு மையம் இலுப்பைதோப்புக்கு ஆலத்தூர் தான், நமது ஊர் மாணவ மாணவிகள் ஆலத்தூரில் தெரிந்த வீடுகளில் 2 வாரங்கள் தங்கி தேர்வு எழுத வேண்டி நிலை. இதனை மாற்ற 1986ல் இலுப்பைதோப்புக்கு தேர்வுமையம் பெறப்பட்டது. ஆனால் 1990-91ல் தேர்வு மையத்தை நம் ஊருக்கே தெரியாமல் பாப்பநாட்டுக்கு மாற்றி அரசானை போட்டுவிட்டனர். இதனையும் மீட்டெடுக்க அய்யா சென்னை வந்து நாங்கள் இருந்த ரூமில் தங்கி கல்வி இயக்குரகத்துக்கு நடையாய் நடந்தார், நடக்கவில்லை காரியம். போட்ட ஆணையை மாற்ற அரசு மறுத்துவிட்டது. (பாப்பநாட்டுக்கு ஆம்பலினால் பல நன்மைகள் உதாரணம் பேங் ஆஃப் இந்தியா ஆம்பலாப்பட்டு கிளை பாப்பநாட்டில் இருந்தது பிறகு அது பாப்பநாடு கிளையாகவே மாறிவிட்டது.)


கல்விகமிட்டி வைத்து பள்ளியின் வளர்ச்சி மேன்படுத்த பட்டது.  ஆம்பல் பெரிய கோயில் நிலத்தில் ஒரு சிரு பகுதியை கல்விகமிட்டி விவசாயம் செய்தது. அதில் வந்த வருமானத்தை பள்ளி வளர்ச்சிக்கு பயன்படுத்தியது. சுமார் 1500 மாணவ மாணவிகள் படித்த பள்ளி எந்தவித அச்சம்பாவிதமும் இல்லாமல் கட்டுப்பாட்டுடன் மிகசிறப்பாக நிருவாகிக்கபட்டது. உதாரணமாக, விளையாட்டு மைதானம் 10 ஆண்டுகளுக்கு மேல் விளையாட்டு விழாவே நடத்தாமல் புல்லும் புதருமாக கிடந்ததை புல்டோசர், பொக்ளின் கொண்டு பல ஆயிரங்கள் செலவு செய்து சீர்செய்யபட்டது என்று சொல்லபடுகிறது. ஆனால், கல்வி கமிட்டி இருந்தபோது மாட்டுபொங்கல்தோறும் திடல் முழுவதும் இருந்த புல் ஏலம் விடபட்டு அதில் கிடைத்த பணத்தில் பள்ளி கூரைக்கு கீற்று, உபகரணங்கள் வாங்க பயன்படுத்தபட்டது என்பதை குறிப்பிடலாம்.


ஒரத்தநாடு ஒன்றியத்தின் கீழ் இருந்த 63 ஊரட்சிகளில் முதல் கிளை நூலகம் பெற்ற ஊர் ஆம்பலாப்பட்டு என்பதை பெருமிதத்தோடு சொல்லாம். அய்யா தலைவராக இருந்த போது அவரிடம் நுலகமா, சுகாதார நிலையமா எது வேண்டும் விருப்பபடி தேர்வு செய்துகொள்ளுங்கள் என்று முன்வைகபட்டபோது அய்யா நூகத்தை பெற்று வந்தார். சுகாதார நிலையம் தொண்டாராம்பட்டுக்கு ஒதுக்கபட்டது. பிறகு 72-73ல் நம்ம ஊருக்கு சுகாதார நிலையமும் பெறபட்டது. 


இதே காலகட்டத்தில்(1970-75) மாட்டுவண்டி உழங்கைகளும் ஒத்தையடி பாதைகளும் பஞ்சாயத்து ரோடுகளானது. மின்சார கம்பங்கள் நடபட்டு மின்வசதி பெறபட்டது. அரசு பேருந்து ஆம்பலாபட்டிற்கு அனுப்ப தயங்கிய போது, அய்யாவின் சொந்த முயற்சியில் தனியார் பஸ் திருமுருகன்  3 நம்பர் ஊருக்குள் கொண்டுவரப்பட்டது. பிறகுதான் அரசு பேருந்து 19 ஆம்பலை அன்னாந்து பார்த்தது. ஞாயிறன்று வார சந்தை கூடியது.   தேதாடிக்கொல்லைக்கு ஊ.ஒ.தொ.பள்ளி, ஆற்று பாலமும் பெறபட்டது, சோமன் தெருவில் ஊ.ஓ.தொ.பள்ளி என பல வளர்ச்சிகள்.  இப்படி ஊரை சிறிது சிறிதாக செதுக்கி செப்பனிட்ட சிற்பி வெ.அ.அவர்கள்.


ஊரில் 1960,70,80,களில் திருமணம் என்பது இரவு நேரங்களில் அதுவும் பெரும்பாலும் பள்ளிகூடங்களில் தான் நடந்தன. ஊரில் நடைபெற்ற அனைத்து திருமணங்களும் அய்யா தலைமையில் தான் நடைபெறும். ஒரே இரவில் நான்கு ஐந்து திருமணங்களை நடத்தி வைத்திருக்கிறார். முதல் திருமணம் இரவு எட்டு மணிக்கு குடிக்காடு/ கீழக்கோட்டையில் ஆரம்பித்து, ஒவ்வொன்றாக முடித்துகொண்டு இறுதியாக இலுப்பைதோப்பு  வரும்வேலையில் மணமக்கள் உட்பட மண வீட்டார்கள் தூங்கிகொண்டிருப்பாரகள், அவர்களை எழுப்பி மணமக்களை முகம் கழுவ வைத்து  மாலையையும் , மாங்கல்ய்யத்தையும்  அய்யா கையால் எடுத்து கொடுத்து திருமணத்தை நடத்தி வைக்கிறபொழுது மறுநாள் அதிகாலை மணி இரண்டு/ மூன்றை நெருங்கியிரிக்கும். அப்போது ரோடு வசதி 🚗 வாகன வசதி இல்லை சைக்கிள்தான். திருமணம் முடிந்து எல்லோரும் அவரவர் வீட்டுக்கு சென்று விடுவார்கள். அய்யா தலையில் முன்டாசுடன் பைந்தாமரை கரையில் உக்கார்ந்து கல்விகமிட்டி விவசாயநிலத்தில் தண்ணீர் பாய்துகொண்டிருப்பார். இப்படி எத்தனை இரவுகள் இந்த ஊருக்காக தூங்காமல் ஒடி ஒடி உழைத்திருப்பார். வெ.அ.தலமையில் நடந்த திருமண எண்ணிக்கை புள்ளி விவரம் இல்லை, இருந்தால் நிச்சயம் சாதனை புத்தகத்தில் இடம் பெறும். உலகத்தில் எந்த ஒரு தலைவனும் இத்தனை திருமணங்களை நட்டத்தி வைத்திருக்க வாய்ப்பு இல்லை. குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் அல்லது ஒருவரக்காவது அவர் கையால் மாலை, மாங்கல்யம் எடுத்து கொடுத்து திருமணம் நடைபெற்றிருக்கும். இன்றைக்கு அந்த குடும்பத்தின் விழுதுகள் உலகம் முழுவதும் விரிந்து பரவி கிடக்கிறது. அந்த வகையில் நாம் அவருக்கு நன்றிகடன் பட்டிருக்குக்கிறோம். இதை தவிர பக்கத்து கிராமங்கள் குறிப்பாக பட்டுக்கோட்டை, ஒரத்தநாடு தாலுக்காவில் உள்ள பல ஊர்களில் அய்யா தலமையில் பல திருமணங்கள் நடந்துள்ளன. 


ஒரு காலத்தில் ஆம்பலாப்பட்டில் வீடுகள் தோரும் ஈட்டி, சுளுக்கி, வேல்கம்பு, பிச்சுவா கத்தி, வீச்சறுவாள் போன்ற ஆயுதங்கள் இருக்கும். தினமும் எங்காவது ஒரு மூலையில் அடிதடி வெட்டு குத்து விழுந்து கொண்டேயிருக்கும்,  ஓலமும், ஒப்பாரி சத்தமும் கேட்டுகோண்டே இருக்கும் என்று சொல்லலாம். ஒவ்வொரு தெருவும் ஒரு ஊராகவும் மொத்த ஊரும் ஒரு நாடாகவும் இருந்திருக்கிறது. தெருக்களுக்கு இடையே போர் புரிந்துள்ளனர். நாட்டுக்கு படை அவசியம், ஆகவே வீடுதோரும் ஆயுதங்கள். (இதுபற்றி பல பக்கங்கள் எழுதலாம் முகநூலின் இடம் கருதி இத்துடன் நிறுத்துகிறேன்)  வெளியூரிலிருந்து பிரச்சனை வந்தாலும் படையெடுத்து அடித்து நொறுக்கிவிட்டு வருவது.  அப்படிப்பட்ட வீர தீர போர்குணம் கொண்ட ஊரு. (கொழாய திருப்புன தண்ணி வராது ரத்தம் தான் வரும் ஒரு கலவர பூமி) ஆம்பலாப்பட்டு நாலு நாடோ, ஏழு நாடோ  இல்லை. அது மட்டும் ஒரு தனி நாடு காரணம் பெண் எடுப்பு கொடுப்பு உறவு முறையை பார்த்தால் கிட்டத்தட்ட 90-95%உள்ளூர்குளேயேதான். கிழக்கே பல மைல் தூரம் உள்ள ஆவிகோட்டைக்கு பெண் கொடுத்து எடுத்தவன். பக்கத்தில் ஒரு மையில் தொலைவில் உள்ள கன்னுகுடி,ஒரே வாய்க்கால் நீர் பாசனம், ஒரே வரப்பில் குந்தி காலை மாலை கஞ்சி குடிப்போம், (குடிப்போம்). ஆனால் உறவு முறை வைத்திருக்கவில்லை.அதைபோல் மேற்கு கிராமங்களில் உறவு கொண்டாடியதில்லை. காரணம் அவர்கள் வேறு நாடு நாம் வேறு நாடு.(இதே போன்று சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் உள்ள கள்ளர் பகுதிகள் 4, 5 ஊர்கள் சேர்ந்து ஒவ்வொரு நாடாக வைத்துள்ளார்கள் அதற்குள் தான் பெண் எடுத்தல் கொடுத்தல் வழக்கம்). இன்றையதினம், போக்குவரத்து, 🚗 வாகன வசதி, தகவல் தொழில் நுட்பம், கல்வி வளர்ச்சி ஆகியவற்றால் இந்த நாடு என்ற கட்டமைப்பு தகர்க்க பட்டுவிட்டது. 


1940 க்கு பிறகு கட்சி வந்து கொஞ்சம் கொஞ்சமாக ஊர் கட்டுகோப்பாக்கபடுகிறது தெருக்கள் தோரும் சங்கக் கொட்டகைகள் அமைத்து, வெளியிலிருந்து ஆசிரியர்கள் அழைத்து வந்து, ஊரில் உள்ள அனைவருக்கும் எழுத படிக கற்றுகொக்கபட்டது. எல்லோருக்கும் எழுத படிக்க தெரியும் என்ற நிலை உருவானது. தொண்டர் படை வைத்து சமுதாய சேவை மனப்பான்மை ஊட்டபட்டது. ஊர் முற்போக்கு சிந்தனையின் இருப்பிடமானது.


வெ.அ. அவர்களால் தீர்த்து வைக்கபடாத பஞ்சாயத்து வழக்குகளே கிடையாது என சொல்லலாம். கொலை குற்றங்கள் வரை பல நூறு வழக்குகள் காவல் நிலையத்திற்கோ, நீதி மன்றங்களுக்கோ செல்லாமல்  தீர்த்து வைக்கபட்டுள்ளன. இன்றைக்கு அப்படி ஒரு தலைவனை பார்க்க முடியுமா. பட்டுக்கோட்டை நகரத்தில் உள்ள முதலாளிகளின் தீர்க்கபடாத பெரும் சொத்து வழக்குகள், பெரும் பண்ணையார்களின் குடும்ப பிரச்சனை இரு ஊர்களுக்கு இடையே இருந்த ஊர் பிரச்சினை, ஜாதி கலவரங்கள் என்று பல பஞ்சாயத்துக்கள் அய்யா அவர்களின் தலமையில் தீர்த்து வைக்க பட்டுள்ளன. பெரும் பண்ணையார்கள் முதல் ஏழை எளியவர்கள் வரை அய்யாவை நாடிவர காரணம். அவருடைய நேர்மை, வாய்மை. விலைபோகா தூய்மை. இவருடைய  நீதியையும் நேர்மையையும் கண்டு மனுநீதி சோழன் மாலையிட்டு மரியாதை செய்வான், நீதி தேவதை கருப்பு துணியை கழடிவிட்டு புருவம் உயர்த்தி பொறாமைபடுவாள். ஞயாத்திற்கு பெயர்பெற்ற நீதிமான். பட்டுக்கோட்டை வட்டாரத்தில்  ஆபலுகென்று ஒரு அடையாளம் உண்டு. ப.கோட்டையில் கலவரம் என்றால் வெ.அ. தன் கடை கண்ணை உருட்டினால் கலவரம் கப் சிப். நான் ஆம்பலாப்பட்டு என்று சொல்லும் போது நமக்குள் ஒரு பெறுமிதம் ஏற்படுகிறதே அதில் ஒரு சிறு பங்கேனும் வெ.அ. வுக்கு உண்டு என்பதை ஒப்புக்கொள்ள வேண்டும்.


1986 ஊராட்சி மன்ற தேர்தல், 1971-72 க்கு பிறகு நடக்கின்ற தேர்தல், இதில்.அ.தி.மு.க, CPIயை எதிர்த்து களத்தில் பூசைக்கண்ணு சேனாபதி அவர்களை நிறுத்தியது. நான்காவது முறையாக அய்யா வெற்றி பெற்று ஊராட்சி மன்ற தலைவரானார். இந்த வெற்றிக்கான பாராட்டு விழாவில், ஞானபிரகாசம் முடிபூண்டார் (இன்றைய ஒரத்தநாடு ஒன்றிய  குழு உறுப்பினரின் கனவர்)   வெ.அ.அவர்களுக்கு உருவ சிலை வைக்கவேண்டும் என்று பாராட்டுரை வழங்கினார். 87ல் MGR மறைவு, அ.தி.மு.க இரண்டாக, கவர்னர் ஆட்சி ஊராட்சி போனது. பிறகு 1996ல் ஊராட்சி தேர்தல், ஆம்பலாபட்டில் நடந்த வியத்தகு தேர்தல். கட்சி வெ.அ. அவர்களை தனது சொந்த மருமகனை எதிர்த்து களத்தில் இறக்கியது. கட்சி மேலிடம் என்ன முடிவெடுக்கிறதோ, அதை ஏற்று நடப்பவர். அந்த வகையில் தந்தையை எதிர்த்து, மைத்துனரை எதிர்த்து, கடைசியாக மருமகனையும் எதிர்த்து தான் கொண்ட கொள்கைக்கா, கட்சிக்கா, அத்தனை உறவுகளையும் பகைத்துக் கொண்டவர். இந்த தேர்தலில் கட்சியை சார்ந்த முக்கிய நபர்கள் கட்சியின் வேட்பாளர் வெ.அ.வுக்கு எதிராக வேலை செய்தனர். கடசி தோற்றது. 1996 லிருந்து 25 ஆண்டுகளுக்கு மேலாக கட்சி கடுமையாக முயற்சி செய்கிறது விட்ட இடத்தை பிடிப்பதற்கு. மாற்றம் ஒன்றே மாறாதது. 1996லிருந்து ஒரு 10 ஆண்டு காலம், அதே நிமிர்ந்த நடை, நேர் கொண்ட பார்வை, முறுக்கிய மீசை என தொடர்ந்து தன்னால் முடிந்த தொண்டினை வெ.அ செய்து வந்தார். 2006க்கு பிறகு வயது முதுமையினால் செயலில் வேகம் குறைந்தது (83வயது)இளைப்பாற ஒதுக்கினார். கட்சி ஒரேயடியாக ஓரம் கட்டி ஒதுக்கியது.


இந்தியா ஆங்கிலேயரின் ஆட்சியின்கீழ் இருந்தபோது, இந்தியாவில் இந்தமாதம்  விடுதலைபோராட்டத்தில் குண்டடிப்பட்டு இறந்தவர்கள், சிறையில் அடைக்கபட்டவர்கள் இத்தனை பேர், என்று லண்டனுக்கு அறிக்கை அனுப்புவார்களாம்,  அதற்கு சர்ச்சில், மாதா மாதம் இத்தனை பேர் இறந்தனர் என்று சொல்கிறார்கள் ஆனால் இந்த கிழவன் காந்தி மட்டும் எப்படி உயிரோடு இருக்கிறான் என்று ஏலனமாக கேட்பானாம். அறப்போர் நடத்திய வெற்று உடம்பு காரனை பார்த்து வெள்ளை காரன் துப்பாக்கி அஞ்சி நடுங்கியது. “200 வருஷங்கள் கழித்து சமுதாயம் இப்படி ஒரு மனிதன் இந்த பூமியில் எலும்பும் தசையுமாய் நடமாடினான் என்று நிச்சயம் நம்பாது” என்று ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் சொல்கிறான். MGR ருக்காக “புத்தன், ஏசு, காந்தி பிறந்தான்” என்று வாலி காந்தியை கடவுளுக்கு சமமாக வைத்து எழுதினார். அப்பேர்பட்ட காந்தியை இந்தியா சுதந்திரம் பெற்று 168ம் நாள் சுட்டு கொன்றது.  இந்தியாவின் தந்தைக்கே இந்த கதி என்றால் ஆம்பல் தந்தை ….? 


“ஒருமனிதனுக்கு, தான் செய்த தியாகங்களுக்கு பிறதிபலனாக கடைசியில் எஞ்சிநிற்பது வேதனையாகத்தான் இருக்கும்” என்று கீதையில் சொல்லப்படுகிறது. இந்த ஊருக்காக, கட்சிக்கா தனது மனைவி மக்களை எல்லாம் பொருட்படுத்தாமல் அல்லும் பகலும் எத்தனையோ இரவுகள் தூங்காமல், ஓடிய ஓட்டங்கள், அலைந்த அலைச்சல், பட்ட பாடு  இவைகளை எண்ணி எண்ணி மனதில் ஒரு இனம்புரியாத வேதனை. கொஞ்சம் கொஞ்சமாக நினைவாறல் குன்றியது, உடல் நலிவினம், படுத்த படுக்கை, ஆயிரம் எண்ணங்கள் வந்தது போக,  மெதுவாக ஓடிகொண்டிருந்த மூச்சு காற்று 30.11.2011 அன்று நின்றது. ஊரும், கட்சியும் தனது இரண்டு கண்கள் என வாழ்ந்த மாமனிதனின் கண்கள்  இரண்டும் மூடியது.


ஒரு செல்வந்தனாக பிறந்து, தனது 16 வயதில் சமுதாயத்தில் உள்ள ஏழை எளியோரின் பசி பட்டினியை போக்க, தனது தகபனை எதிர்த்து, கையில் செங்கொடியை தூக்கிக்கொண்டு, தெருத்தெருவாக, ஊர்ஊராக,  நடையா நடந்த தலைவன். கிராமங்கள் தோரும் தன் கையால் செங்கொடி ஏற்றி, வீதி வீதியாக, வீடு வீடாக காலனா, எட்டணா என நிதி திரட்டி கட்சியை வளர்த்த தோழன். ஆம்பலாப்பட்டை முற்போக்கு சிந்தனை களமாக, நிய்யங்களுக்கா போராடும் வீர பூமியாக உருவாக்கிய மாமனிதன். அனைவரையும் படிப்பாளி ஆக்கிய கல்விமான். கொண்ட கொள்கைக்கா தனது சொந்த பந்தங்களையும், சுகபோகங்களையும் துறந்த தியாகி. ஒதுக்கப்பட சமுதாய விடியலுக்கும், ஏழை எளிய மக்களின் வளச்சிக்கும் பாடுபட்ட ஏழை பங்காளன். ஊரையும் சமூகத்தையும் அந்த மண்ணுக்கே உரிய வீரத்தையும் யாருக்கும் எட்டமுடியாத உயரத்தில் தூக்கி வைத்த உத்தமன். ஆம்பலாப்பட்டு என்றால் “கம்யூனிஸ்ட்” என்று அர்த்தம், என நாடல்லாம் உணர வைத்த புரட்சியாளன்.


இப்படி ஒரு தன்னலமற்ற தலைவனை ஆம்பல் இனி என்று பெரும். வாழ்க அய்யாவின் பேரும் புகழும்.

நன்றி

இப்படிக்கு

A S ஜெயபாரதி (என்னும்)

சு.தட்சிணாமூர்த்தி 

தேத்தாடிக்கொல்லை

ஆம்பலாப்பட்டு.

நண்பர் இறந்த தகவல் கேட்ட நிமிடமே உயிரைவிட்ட சகநண்பர்!


புதிய தலைமுறை செய்தி கட்டுரை
Published on 

பள்ளி, கல்லூரி, வேலை என எதிலும் இணைபிரியாமல் இருந்த நண்பர்கள், இறப்பிலும் இணைபிரியாமல் ஒருவர் மரணத்தை அறிந்து மற்றொருவரும் உயிரிழந்த நெகிழ்ச்சி சம்பவம் திருவாரூர் மாவட்டத்தில் நிகழ்ந்துள்ளது.

நண்பர்கள் மரணம்
நண்பர்கள் மரணம்C. விஜயகுமார்

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள தலையாமங்கலம் பகுதியை பூர்விகமாக கொண்டவர்கள் சிவராமகிருஷ்ணன் கண்டியர் (80) மற்றும் ராமலிங்கம் நந்தியர்(82). சிவராமகிருஷ்ணனுக்கு மனைவி, இரண்டு மகன், ஒரு மகளும், ராமலிங்கத்திற்கு மனைவி மற்றும் இரண்டு மகன், இரண்டு மகள்களும் உள்ளனர். தற்போது சிவராமகிருஷ்ணன் மன்னார்குடி அருகே உள்ள நாலாம்தெரு பகுதியிலும், ராமலிங்கம் மன்னார்குடி அருகில் உள்ள அசேஷம் பகுதியிலும் வசித்து வருகின்றனர்.


ஒன்றாக பள்ளி, கல்லூரி படிப்பு - ஒரே நேரத்தில் வேலை-ஓய்வு!

சிவராமகிருஷ்ணன் மற்றும் ராமலிங்கம் இருவரும் பால்ய வயதிலிருந்து இணை பிரியாத நண்பர்களாக இருந்து வந்துள்ளனர். மன்னார்குடியில் இருவரும் ஒன்றாக பள்ளி படிப்பை முடித்துள்ளனர். அதனைத் தொடர்ந்து நாகப்பட்டினத்தில் ஒரே அறையில் தங்கி இருவரும் பாலிடெக்னிக் படிப்பை முடித்துள்ளனர்.


அதைத்தொடர்ந்து ஒரே நேரத்தில் மன்னார்குடி அருகே உள்ள பாமணியில் உள்ள மத்திய அரசு நிறுவனத்தில் இருவரும் வேலைக்கு சேர்ந்துள்ளனர். அதேபோன்று ஒரே நாளில் இருவரும் பணி ஓய்வும் பெற்றுள்ளனர். அதுமட்டுமில்லாமல் இவர்களது இரண்டு குடும்பமும் சேர்ந்து சுப நிகழ்சிகளில் பங்கு பெறுவது, சுற்றுலா செல்வது என அதிக அன்போடு அன்யோன்யமாக இருந்து வந்துள்ளனர்.

நண்பர் இறப்பின் செய்தி கேட்டு அதிர்ச்சியில் உயிரைவிட்ட சகநண்பர்!

இதனையடுத்து இருவரும் அருகருகே உள்ள அசேஷம் மற்றும் நாலாம்தெரு பகுதியில் வசித்து வந்த நிலையில், சிவராமகிருஷ்ணன் உடல்நிலை பாதிக்கப்பட்டு இருந்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று காலை உடல்நலக்குறைவால் சிவராமகிருஷ்ணன் உயிரிழந்துள்ளார். அதையறிந்த அவருடைய நண்பர் ராமலிங்கத்தின் மனைவியும், மகனும் சென்று சிவராமகிருஷ்ணன் உடலை பார்த்துவிட்டு வீடு திரும்பி உள்ளனர்.

நண்பர்கள் மரணம்
நண்பர்கள் மரணம்C. விஜயகுமார்


அப்போது வந்த ராமலிங்கம் எங்கு சென்று வருகிறீர்கள் என்று கேட்டபோது, சிவராமகிருஷ்ணனின் இறப்பிற்கு சென்று வருவதாக கூறியுள்ளனர். அதனைகேட்டு மிகுந்த அதிர்ச்சிக்குள்ளான ராமலிங்கம் அந்த நிமிடமே அதே இடத்தில் தன் உயிரையும் விட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து இவர்களது இறுதிச் சடங்கு இன்று நடைபெறவிருக்கிறது.

“நட்புக்காக” படம் போல் நெகிழ வைத்த இரண்டு நண்பர்களின் அன்பு!

பால்ய வயதில் நண்பர்களாகி பள்ளி, கல்லூரி, வேலை என எதிலும் இணைபிரியாமல் உயிருக்குயிராக நண்பர்களாக வாழ்ந்து வந்த இவர்கள். இறப்பிலும் இணைபிரியாமல் ஒருவர் இறந்ததை அறிந்து இன்னொருவரும் உயிரிழந்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இரண்டு சிறந்த நண்பர்கள் ஒன்றாக உயிரிழந்த தகவல் கேட்டு அப்பகுதியில் அதிச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நண்பர்கள் மரணம்
நண்பர்கள் மரணம்C. விஜயகுமார்

மேலும் நட்பிற்கு இலக்கணமாக கூறப்படும் ‘கோப்பெருஞ்சோழன்-பிசிராந்தையார்’ போன்று இறப்பிலும் இணை பிரியாத இந்த நண்பர்களின் உயிரிழப்பு, அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது என்பதில் மாற்றுக் கருத்து இல்ல

மா.பரமத்தேவர்



அகில இந்திய ஃபார்வர்டுபிளாக் மதுரை மாநகர் தலைவர் மா.பரமத்தேவர் ஆவார்.

திருதேவர் ரிக்சா தொழிலாளர் சங்க ஸ்தாபகர் சுமைதூக்கும் தொழிலாளர்களின் காவலர் நகராட்சித் தேர்தலில் இரண்டே இரண்டு ஓட்டுகளில் தோல்வியடைந்தவர்.

சேலத்தில் திகவினர் நடத்திய தெய்வநிந்தனை ஊர்வலத்தை மதுரையிலும் நடத்த முற்பட்டபொது ஊர்வலத்தையே சிதைத்து ஓடவிட்டவர்.

மதுரை திலகர் திடலில் முக்குலத்தோரை இழிவு படுத்திப் பேசிய ஈ.வெ. ராமசாமி நாயக்கரைத் தொடர்ந்து பேசவிடாமல் கூட்டத்தை முடக்கியதால்  சக தோழர்களுடன் காவல் நிலையம் சென்றவர்.

தேவர் ஜெயந்தி ஊர்வலத்தில்
ஈ.வெ.ராமசாமி நாயக்கர் படத்தை செருப்பால் அடித்து வரச் செய்தவர்.

1974 ஆம் ஜனாதிபதி VVகிரி  தலைமையில் நடந்த கோரிப்பாளையம் தேவர் சிலை திறப்பு விழாவில் பரமத்தேவர்




எஸ். முத்துமாயத்தேவர்


அகில இந்திய ஃபார்வர்டுபிளாக் 1968ல் மதுரை மாநகர் தலைவராக இருந்தவர். படிப்படியாக மாநில அமைப்புச் செயலாளராக இருந்தவர் எஸ்.முத்துமாயத்தேவர் .


1980 மதுரை மீனாம்பாள்புரம் பசும்பொன்தேவர் வாசக சாலை நிர்வாகிகளுடன்
எஸ்.முத்துமாயத்தேவர்
யோகானந்தகிரி  ஆகியோர்

மதுரை நகரசபைத்தேர்தலில் 9 வார்டுகளில் போட்டியிட்டு 2 வார்டுகளில் வெற்றி பெற்றனர். அதில் ஒருவர் எஸ்.முத்துமாயத்தேவர்

செல்லூர் மா.பரமத்தேவர் இரண்டே இரண்டு ஓட்டுகளில் தோற்றார். மற்றவர்களும் அது போல 5,6,8,9, களில் தான் தோற்றிருந்தனர்.

1970 மதுரை கல்பாலம் அகலப்படுத்தப்பட்டது. அப்போது வடக்கு நோக்கி இருந்த யானைக்கல்  யானையை தெற்கு நோக்கி வைத்துவிட்டனர். இதை பழையபடி திருப்பி வைக்க வேண்டும் என்று மேயராக இருந்த  திமுக எஸ்.முத்துவிடம்  கூட்டங்கள் தோறும் சொல்லிப்பார்த்தார்.

அவர்கள் கேட்பதாக இல்லை.
தற்போது மீனாட்சிக்கல்லூரி விரிவாக்கப்பகுதியாகவும்
மாநகராட்சி ஒர்க் ஷாப்பாகவும்  இருக்கும் இடம் சிவகங்கை சமஸ்தானத்திற்கு சொந்தமாக இருந்த இடம். அதில் மாநகராட்சி அலுவலகம் இயங்கியது. கூட்டம் நடந்து கொண்டிருந்தபோது மாலை 3,4 மணியளவில் மழைமேகம் ஏதும் இன்றி வெள்ளிடியாக  இடிவிழுந்தது. அபசகுனம் இது என இதை எடுத்துக்கூறி யானையை திருப்பிவைக்கவேண்டும் என்றார் முத்துமாயத்தேவர்.
    
எங்களுக்கு நம்பிக்கை இல்லை என்றார் மேயர் முத்து. உங்களுக்கு நம்பிக்கை இல்லாமல் இருக்கலாம்  ஆனால் எங்களுக்கு பொதுமக்களுக்கு நம்பிக்கை உள்ளது என்றார். விவாதம் சூடாகி  மேயர் முத்து  முத்துமாயத்தேவர் உங்களால் முடிந்தால் யானையை திருப்புங்கள் பார்ப்போம் என்றார். மேயரே வார்த்தை மாறக்கூடாது  என்றார். திருப்பிப்பாருங்கள்  சவால் என்றார்.  சரியாக ஒரு வாரத்தில் உரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டன. நகர் ஃபார்வர்டுபிளாக் தோழர்கள் திரண்டனர்.  இரவோடு இரவாக யானை முறையாக திருப்பிவைக்கப்பட்டது. பூஜைகள் செய்யப்பட்டன. மறுநாள் செய்தித்தாள்களில் "யானை திரும்பியது" என்று தலைப்புச் செய்தி இடம் பெற்றது.

சில நாட்களில் பெருமழை பெய்தது.
வைகையில் நீண்ட காலத்திற்குப் பிறகு பெருவெள்ளம் வந்தது வறட்சி நீங்கியது.

இந்த முத்துமாயத்தேவர் தான் தேவர்சிலை அமைப்புகளை முன்னின்று நடத்தி சாதித்தவர்.

தலைவர் பி.கே.மூக்கையாத்தேவர் சென்னையில் இறந்துவிட்டபோது
அவரது சடலத்தை உசிலை கொண்டுவந்து சேர்த்தவர். அன்றைய கல்லூரி நிர்வாகம் தலைவரை தற்போது இருக்கும் இடத்தில் அடக்கம் செய்யவிரும்பவில்லை. மாணவர்களை தூண்டிவிட்டு எதிர்ப்புக்காட்டியது.
சிவன் கோவில் என்றால் நந்தி இருக்கும், பெருமாள் கோவில் என்றால் கருடன் இருக்கும், முருகன் கோவில் என்றால் மயில் இருக்கும்
இந்தக் கல்லூரியை தெய்வமாகக் கருதிய தலைவரை இந்த இடத்தில் தான் அடக்கம் செய்யவேண்டும் என்றார்.

அன்று முத்துமாயத்தேவருக்கு ஆதரவாக நின்ற பெரியோர்களில்
தோழர் யு.பி.பால்சாமி
கீரீபட்டி அன்னக்கொடித்தேவர்  பசுக்காரன்பட்டி  டிஎஸ் பி. மாயாண்டித்தேவர் போன்றவர்களை மறக்க முடியாது.

தலைவர் நூற்றாண்டுவிழாவில்
அவரது நிழலாக வாழ்ந்த  தொண்டர்
திரு.எஸ்.முத்துமாயத்தேவர்.


மதுரை காமராஜ் பல்கலைக்கழகத்திற்கு  மதுரை பல்கலைக்கழகம்  என்றே பெயர் சூட்டப்பட்டது. பல்கலைக்கழகம் அமைந்துள்ள பகுதிக்கு பசும்பொன் தேவர் நகர் என்று பெயர் வைக்கவேண்டும்என்று திருப்பரங்குன்றம் ஒன்றியத்தில்உள்ள அனைத்து பஞ்சாயத்துகளிலும் தீர்மானம் நிறைவேற்றி அனுப்பப்பட்டது.

1977 ல் தமிழ் நாட்டு முதல்வர் ஆனார் எம.ஜி.ஆர்.  மதுரை மாநகராட்சித் தேர்தலை ஒட்டி  மதுரை பல்கலைக்கழகத்திற்கு  காமராஜ் பல்கலைக்கழகம்  என்று பெயர் மாற்றினார்.  அகில இந்தியபார்வர்டுபிளாக் மாநிலத் தலைவராகஇருந்த எஸ்.ஆண்டித்தேவர் பொதுச்செயலாளர் கரு.காராளன் . கடலாடி சிவத்தவல்லித்தேவர்  மதுரை முத்து மாயத்தேவர் தலைமையில் மிகப்பெரிய போராட்டம் நடந்தது .

எம.ஜி.ஆர்  சுருளியில் நீர் மின்சக்தி நிலையத்தை தொடங்கி வைக்க வந்தார்.  அஇபாபி  கருப்புக் கொடி காட்டும் போராட்டம் அறிவிக்கப்பட்டது . ஆண்டித்தேவர் உள்ளிட்ட பல்லாயிரக்கணக்கானோர் கைது செய்து மதுரை புதுஜெயில் உள்ளிட்ட பல்வேறு சிறைகளில் அடைக்கப்பட்டனர். மதுரை சர்க்யூட் ஹவுஸில் இருந்து சுருளி புறப்பட்ட முதல்வர் எம்.ஜி.ஆர். ஐந்து கார் மாறி மாறி போக வேண்டிய நிலை இருந்தது. வழியெல்லாம் கருப்புக்கொடி  சாணியைக் கரைத்து ஊற்றினர். எம்.ஜி.ஆர். அதிர்ந்து போனார்.  காமராஜ் பெயரை எதிர்ப்பவர்கள்  விரல் விட்டு எண்ணக்கூடிய எண்ணிக்கையிலானவர்கள் என்று அறிக்கை விட்ட பழ.நெடுமாறனுக்கு  மதுரை முத்துமாயத்தேவர் கடும் கண்டன அறிக்கை தந்தார். வாயடைத்துப்போனார் பழ.நெடுமாறன்.

சட்டமன்றக்கூட்டம் கூடியது  அதிமுககூட்டணியில் ஆண்டிபட்டித்தொகுதியில் இந்திய தேசிய பார்வர்டுபிளாக்  எம்எல்ஏ வாக  இருந்த  கே.கந்தசாமி  எம்ஜிஆரை சட்டமன்றத்தில் நேரடியாக எதிர்த்துப் பேசினார் . கருவாட்டுக்காரி கதையைக் கூறினார். ஆட்சிக்கு வந்த பிறகும் சினிமாக்காரர் புத்தியிலேயே இருக்கிறார். அதனால் தான்  புராண வரலாற்றுப் புகழ் பெற்ற மதுரை என்ற பெயரை எடுத்துவிட்டு வேறு பெயர் வைக்கிறார். இதை ஏற்க முடியாது என்றார்.

தம்பி கந்தசாமி  மதுரை என்ற பெயர் வேண்டும் என்று தானே கேட்கிறார். 
மதுரை காமராஜ் பல்கலைக்கழகம்  என்று மாற்றப்படும் என்றார்.


நன்றி : ஐயா நவமணி தேவர்

கருமாத்தூர் அருள்மிகு நல்லகுரும்பன்

எங்கள் குலசாமி பிரம்மாவின் அம்சம்!’ - கருமாத்தூர் அருள்மிகு நல்லகுரும்பன்


இஷ்ட தெய்வமா ஆயிரம் சாமிகளைக் கும்பிட்டாலும் கஷ்ட நேரத்துக்குக் காவல் சாமியா ஓடிவருவது நம்ம குலசாமிதாங்க. அதனாலதான் நம்ம வீட்டுப் பெரியவங்க, தங்கள் மண்ணையும் மக்களையும் காப்பாத்தின தெய்வங்களைக் குலசாமியா கும்பிடச் சொன்னாங்க. ஒவ்வொரு குலத்துக்கும் ஒரு சாமி கட்டாயமா இருக்கும். அது துடியா நின்னு எப்போதும் அந்தக் கூட்டத்தைக் காப்பாத்தும்.


அந்த வகையில், மதுரை மாவட்டத்துல புகழ்பெற்று விளங்கும் கருமாத்தூர் அருள்மிகு நல்லகுரும்பன் சாமிதான் எங்களுக்குக் குலசாமி. தேனி - அல்லிநகரம் சின்ன மாயத்தேவர் வகையறாவைச் சேர்ந்த எங்களுக்கு அடையாளமா இருக்கறதே நல்லகுரும்பன் சாமியோட கோயில்தான். என் அப்பா பெயரே குரும்பன்தான். அதனால சாமியும் அப்பாவும் எனக்கு ஒண்ணுதான்.


எங்கள் ஆன்மிகம்: ‘எங்கள் குலசாமி பிரம்மாவின் அம்சம்!’ - கருமாத்தூர் அருள்மிகு நல்லகுரும்பன்

எங்க பாட்டன் திருப்பதி போயிருக்க மாட்டார், எங்க அப்பா காசிக்குப் போனதில்லை. ஆனா, எங்க குலத்துல எல்லாருமே இந்தக் கோயிலுக்கு வந்திருக்கோம். எனக்குத் தெரிஞ்சு எங்க சீயான், பாட்டன், அப்பா, நான், என் பையன், பேரன்னு ஆறு தலைமுறையா இந்தக் கோயிலுக்குப் போய் வந்துக்கிட்டிருக்கோம். இப்போ எங்க பாட்டன், பூட்டன் எல்லாம் இல்லை. ஆனா, குடும்பத்தோட நாங்க இந்தக் கோயிலுக்குப் போறப்ப, அவங்க எல்லோரும் எங்களைப் பார்க்க வந்திடுறதா ஒரு நம்பிக்கை.


கோயில்ல ஒவ்வோர் இடத்தைப் பார்க்கும்போதும் முன்னோர் எல்லாருடைய ஞாபகமும் வந்து நெகிழ்ச்சியைக் கொடுக்கும். அதுக்கு ஏத்தமாதிரி அவங்க அரூபமா வர்ற மாதிரியான நிமித்தங்கள் கிடைச்சுடும். ஆக, குலசாமி மட்டும் இல்லங்க, எங்க குலமே இங்கேதான் இருக்குதுன்னு சொல்லலாம். அதுதாங்க குலசாமி கோயிலுக்குன்னு இருக்குற ஒரு பெருமை.


எங்கள் ஆன்மிகம்: ‘எங்கள் குலசாமி பிரம்மாவின் அம்சம்!’ - கருமாத்தூர் அருள்மிகு நல்லகுரும்பன்

எங்க பாட்டன்தான் இந்தக் கோயிலை கட்டினார். இப்போ கோயில் பூசாரியா இருக்குற சந்திரசேகர் சாமிகூட எங்க சொந்தம்தான். இன்றைக்கும் இந்தக் கோயிலே எங்களுக்குக் காவல் நிலையமா, நீதி மன்றமா, மருத்துவமனையா இருந்து வருது. எந்த கஷ்டம்னாலும் சரி, `ஐயா... குரும்பா... நல்ல பதில் சொல்லு’ன்னு, அவர் இருக்குற திக்கைப் பார்த்து கையெடுத்துக் கும்பிட்டால் போதும். உடனே ஏதேனும் நிமித்த வடிவில் பதில் சொல்லிடுவார் குரும்பன். கனவு வழியாவோ அல்லது சகுனமாவோ வந்து `நான் இருக்கேன்டா’ன்னு அவர் நம்பிக்கை தந்துடுவார்.


எங்கள் ஆன்மிகம்: ‘எங்கள் குலசாமி பிரம்மாவின் அம்சம்!’ - கருமாத்தூர் அருள்மிகு நல்லகுரும்பன்

தென்னாட்டுல கள்ளர் நாட்டுக் கோயில்களில் பெரிய கோயில்னு சொல்லப்படுறது இந்தக் கருமாத்தூர் நல்லகுரும்பன் கோயில்தான். இங்கே சாதி வித்தியாசமில்லாம சகல சனங்களும் வந்து வழிபட்டுட்டுப் போறாங்க. நல்ல குரும்பன் பிரம்மாவோட அம்சம். படைக்கும் சாமியான அவரு, இங்க துடியா நின்னு நீதியைக் காக்கும் தெய்வமாவும் இருக்காரு.


பஞ்சபூதங்களில் இவர் நிலத்துக்கான சாமி. இந்த மண்ணையும் மக்களையும் காப்பாத்த கருமாத்தூர் பூமியில கண் மூடாம நிலையா நின்னுக்கிட்டு இருக்கார். விருமாண்டியும், பேய்க்காமனும், பேச்சியும் உலாவின இந்த மண்ணுல நல்லகுரும்பன் சாமியா தங்கினதே சிலிர்ப்பான கதை.


விருமன், பேய்க்காமன் இவங்களுக்குள்ள நடந்த சண்டைக்குப் பிறகு மத்தியஸ்தம் செய்ய வந்த பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மூணு பேர்ல பிரம்மா இங்கே சாமியா நின்னுட்டாராம். பிரம்ம சாரியா இருந்து நல்ல விஷயங்களை மக்களுக்குச் சொன்னதால இவரைக் கன்னி கழியாத கடசாரி சாமின்னு கும்பிடுறாங்க. இவரோட வந்த ஏழு கன்னிமார்கள் உள்ளிட்ட தெய்வங்களும் இங்கே தனிச் சந்நிதிகளில் குடிகொண்டு இருக்காங்க.


நல்லவங்களுக்குக் காவலா இருக்கிற நல்லகுரும்பன், கெட்டது செய்றவங்களைக் கிட்ட சேர்க்காம தண்டிச்சுக் கேட்பார்னு ஒரு பயம் இருக்கு. நியாயத்துக்குப் பொறம்பா நடந்துட்டு, இந்தக் குரும்பன்கிட்ட தப்பிக்கவே முடியாது. கெட்டவனுக்குப் புத்தி சொல்ல, தான் கட்டிவளர்த்த நல்ல கரு பாம்பையும், நல்லவங்களுக்கு ஆதரவா, தான் தட்டி வளர்த்த கூழை பாம்பையும் அனுப்பி வைப்பார்னு நம்பிக்கை இருக்கு. அதனால இவர்கிட்ட பொய், புரட்டு எல்லாம் ஆகாது.


எங்கள் ஆன்மிகம்: ‘எங்கள் குலசாமி பிரம்மாவின் அம்சம்!’ - கருமாத்தூர் அருள்மிகு நல்லகுரும்பன்

அந்நியர்கள் வந்து இந்த மண்ணுல அலங்கோலம் செய்தபோது, மீனாட்சியம்மன் சொத்துக்குக் காவலா நின்னவரு நல்லகுரும்பன்னு சொல்லுவாங்க. இவர் சைவ சாமிதான். ஆனாலும், நாங்க இந்தக் கோயிலுக்குப் போனா, வாசல்ல இருக்கிற கருப்பசாமிக்குக் கடா வெட்டி வெளியிலேயே படையல் போட்டு அவரையும் கும்பிடுவோம்.


அன்றாடம் நல்லகுரும்பனுக்கு பூசை, பொங்கல்னு விசேஷம் இருந்தாலும் அமாவாசை, சிவராத்திரி, மாசிப் பச்சைன்னு பல திருவிழா நாள்கள் இவருக்கு உண்டு. எங்க வீட்டுல எந்த நல்லது நடந்தாலும் இவரைப் போய் பார்த்து உத்தரவு வாங்காம செய்ய மாட்டோம். ஆமாம், நல்லகுரும்பன், சாமியா மட்டுமல்ல எங்க வீட்டு மூத்தோனாகவும் இருந்து வர்றார். வருஷா வருஷம் சொந்தபந்தங்களோட வண்டி கட்டிக் கிட்டு இவரு சந்நிதிக்குப் போய், பொங்கல் வெச்சு படையல் போட்டு கொண்டாடினாத்தான் அந்த வருஷம் எங்களுக்கு திருப்தியா இருக்கும்.


எங்கள் ஆன்மிகம்: ‘எங்கள் குலசாமி பிரம்மாவின் அம்சம்!’ - கருமாத்தூர் அருள்மிகு நல்லகுரும்பன்

சாதாரணமா இருந்த என்னை வளர்த்தெடுத்து காத்துக்கிட்டு வர்றது நல்லகுரும்பன்தான். என் பிள்ளைங்க மதுரை, சென்னை, அமெரிக்கான்னு ஆளுக்கொரு திக்குல இருக்காங்க. எங்க எல்லோரையும் ஒண்ணுசேர்க்கிறது இந்தச் சாமிதான். வழிவழியா எங்க குடும்பம் இந்த மண்ணை மறக்காம இருக்கப்போறதும் இந்தச் சாமியாலதான்.


நான் அமெரிக்காவுல இருந்தப்பகூட, `சாமி இருக்குற எல்லையில இல்லாம போய்ட்டேனே’ என்ற கவலைதான் ரொம்ப இருந்துச்சு. ஏன்னா... பிள்ளைங்க எல்லாம் எங்கெங்கோ இருக்க, அவங்க நல்லா இருக்கணும்னு நான் அங்கே இருந்து என் சாமிய கும்பிடறதுதானே நல்லது.


எங்களுக்கு மட்டுமல்ல, இந்த மதுரை மாவட்டம் தாண்டி எல்லா தேசத்துல இருந்தும் இந்தச் சாமிய பார்த்து வணங்க வர்றாங்க. நீதி கேட்டு இங்கே வந்து நின்னால் போதும். யார் பக்கம் நியாயமோ அவங்க பக்கம் நின்னு காத்தருள்வார் எங்க சாமி; குறைன்னு இந்த மண்ணை மிதிச்சாலே போதும். குறைகளைக் களைந்து எங்க நல்லகுரும்பன் நிறைவா கொடுத்துடுவார்.


எங்கள் ஆன்மிகம்: ‘எங்கள் குலசாமி பிரம்மாவின் அம்சம்!’ - கருமாத்தூர் அருள்மிகு நல்லகுரும்பன்

அன்னிக்கும் சரி, இன்னிக்கும் சரி... இந்தக் கோயில்ல நடந்த - நடக்குற அற்புதங்களைச் சொல்லச் சொன்னால் விடிய விடிய சொல்லலாம். கல்லானை கரும்பு தின்னதும்; வெள்ளானை வேதம் சொன்னதும்; தலையறுந்த கோழி சாட்சி சொன்னதும்; தாக்க வந்த அந்நியருக்கு வானுக்கும் பூமிக்குமா நின்னு பாடம் சொன்னதும்னு இந்தச் சாமி செஞ்ச அற்புதங்கள் அநேகம்.


மனசுல நினைச்சாலே கனவுல வந்துடுற கருணையான தெய்வம் இவர். பிள்ளை வரம் கேட்டும், வேலை வாய்ப்பு, வெளிநாட்டு யோகம் கேட்டும், முக்கியமா வம்பு வழக்கு தீரவும் இங்கே வர்றவங்க, சீக்கிரமே நிவர்த்தி பெற்றுப்போவது சகஜமானதுங்க. எங்க குலமும் இந்த மண்ணும் நல்லா இருக்குன்னா, அதுக்குக் காரணம் இந்தச் சாமிதான். இதை நாங்க மறக்காம கொண்டாடுற வரை எங்களுக்கு ஒரு கஷ்டமுமில்லை.


எங்கள் ஆன்மிகம்: ‘எங்கள் குலசாமி பிரம்மாவின் அம்சம்!’ - கருமாத்தூர் அருள்மிகு நல்லகுரும்பன்

உலகமே கொரோனா என்ற நோயால ரொம்ப கஷ்டப்படுது. நிச்சயமா எங்க நல்லகுரும்பன் அருளால சீக்கிரமே மருந்து கண்டுபிடிச்சு எல்லோரும் சுகமா இருக்கணும்னு வேண்டிக்கிறேன். அதுக்கு நல்லகுரும்பன் நல்ல வழி காட்டுவார். மதுரை பக்கம் வர்றவங்க, அப்படியே இந்தக் கோயிலுக்கும் ஒருமுறை வந்துட்டுப் போங்க. உங்க வாழ்க்கையிலே நல்லது நிரம்ப நடக்கும்.

வெள்ளி, 13 மே, 2022

கருமாத்தூர் தேவமார் செப்பேடு •



                      

                         1.     ௳

                                        

                        

                  2.     சிவமயம் 


3.ஸ்ரீ மது மஹாகணம் பொருந்திய கருமாத்தூர் தொட்டையன்கோட்டை கலியுக சிதம்பரேஸ்


4.வரர் வகையறா மும்மூர்த்திகளுடைய சன்னதி முன்பாக கூடிய மேற்படி சன்னதி தனங்


5.களுக்கு ஸ்தானிகராகிய இருபத்தோராவது பட்டக்காரர் தெய்வப் பெருமாள் பூசாரியார் காமத்தேவன் வகையறா இராமனாததேவன் ஆண்டித்தேவன் எழும்பத்தேவன் வகை


6.யறா கழுவத்தேவன் குப்பனத்தேவன் சிளுக்கத்தேவன் கருத்தஞ்செட்டித்தேவன் கொல்லுத்தச்சு வகைக்கு தேவாங்கப் பெருமாள் ஆசாரி இந்த ஒன்பது பேர்களும் கூடி இதற்கு


7.முன் கட்டியிருக்கிற மூலஸ்தான மண்டபம் இரண்டும் போக இப்போது முன் மண் [ட] பம் கட்டுவதற்காகவும் 


8.மேற்படி சன்னதி தனங்களுக்கு முதன்மை தீர்த்தம் திருனூறு நடக்க வேண்டியதற்காகவும் தீர்மானம் எழுதிய ஒப்பந்த கருவேலத்தளை வாசகம் கண்ணனூர் கிராமத்துக்கு கீழ் நாட்டிலிருந்து காவ


9.லுக்கு வந்த காமத்தேவன் எழும்பத்தேவன் இரண்டு பேர்களில் காமத்தேவனுக்கு மூத்த பிள்ளை பரட்டை


10.யாண்டித்தேவனுக்கும் இளையவன் பொத்தையாண்டித்தேவனும் பிறந்திருந்தார்கள் எழும்பத்தேவ


11.னுக்கு கழுவத்தேவன் மூத்த பிள்ளையாகவும் இரண்டாவது குப்பணத்தேவனு மூனாவது சிளுக்கத்தேவனும் பிறந்திருந்தார்கள் கருமாத்தூர் வடக்கம்பட்டி கிராமத்துக்கும் கோவிலுக்கும் பரட்டையாண்டித்தேவன் கா


12.வலாண்டு வந்தான் பொத்தையாண்டித்தேவன் விக்கிரமங்கலம் தொட்டையன் கோட்டை காவலாண்டு வந்தான் கழுவத்தேவன் குப்பனத்தேவன் சிளுக்கத்தேவன் மூணு பேர்களுக்கும் பெருமாள் கோவில் பட்டி கண்ண


13.னூர் புள்ளைநாடி யிந்த மூணுகிராமமும் காவலாண்டு வந்தார்கள் கருமாத்தூருக்கு கீழ் நாட்டிலிருந்து காவலுக்கு வந்த துங்கத்தேவன் தகாத்தேவன் மண்ணுலகந் தேவன் மூணு பேர்களும் காவலாண்டு வரும்போது கிராம


14.னி அய்யர் கட்டுக்கஞ்சி நாயக்கர் பெத்தலை நாயக்கர் மூணுபேரையும் காவல்காரர்கள் கொலை செய்து போ


15.ட்டார்கள் அதற்கா [க] சர்க்காரில் 900 பொன் தெண்டம் போட்டு சர்க்காரிலடைபட்டிருந்தார்கள் சோ


16.லைத்தேவன் பிணைக்கு துட்டு விலக்கி வந்து துங்கத்தேவன் பங்குக்கு சோலைத்தேவ


17.னும் தகாத்தேவன் பங்


18.குக்கு ஆண்டாருத்தேவனும் மண்ணுலகன் பங்குக்கு பரிச்சபுலித்தேவனும் தெண்டம் கட்டி ஆறுபங்


19.காக ஆண்டு வருகிறார்கள் பரட்டையாண்டித்தேவன் வகையறா ஒண்டத்தேவனுக்கும் துங்கத்தேவன் வகையறா ஒய்யாத்தேவனுக்கும் மாட்டுக்காரப்பிள்ளை நிமித்தியம் சண்டையான விரோதத்தால் ஒண்டத்தேவனை ஒய்யாத்தேவன் வகையறா வெட்டிப்போட்டார்கள் ஒண்டத்தேவன் வகையறா இராமனாததேவன் பாப்


20.பாப்பட்டிக்கு பெண் அழைக்கப் போயிருந்தவன் கண்ணனூரில் வந்துருந்தான் பொத்தையாண்டித்தேவன் வகையாரில் 


21.நாயக்கரும் ஆண்டித்தேவனும் மேற்படி சண்டையுள் இறந்துபோனார்கள் மேற்படி குப்பளநாயக்கர் பெண்


22.ஜாதி பொம்மம்மாள் தீக்குழி பாயும்போது ஆண்டித்தேவன் பெண்ஜாதி பாஞ்சாயி கூட விழுந்


23.து விட்டாள் மேற்படி சன்னதி தனங்களுக்கு நடக்க வேண்டிய முதமைத்தீர்த்தம் திருனூறு முந்தி காமத்தே


24.வன் வகையறாவுக்கும் இரண்டாவது எழும்பத்தேவன் வகையறாவுக்கும் மூணாவது கருத்தஞ்செ


25.ட்டிக்கும் நாலாவது சோலைத்தேவனுக்கும் அஞ்சாவது தேவாங்கப் பெருமாள் ஆசாரி வகையறாவுக்கும் த


26.டந்து வர வேண்டியது மேற்படி மகாமண்டபம் வலதுபக்க தூணில் இருபத்தி ஒண்ணாவது பட்டக்காரர் திவ்யப் பெருமாள் பூசாரியையும் இராமனாதத்தேவனையும் வைக்குண்[டு]திருக்கிறது யிடப்புறந்தூ


27.ணில் ஆண்டித்தேவன் குப்பணத்தேவன் கருத்தஞ்செட்டி மூணுபேரையும் வைக்குண்டுதிருக்கிறது மேற்படி வாசல் முகப்பு வலதுபக்கம் முன் தூணில் சிளுக்கத்தேவன் தேவாங்கப்பெருமாள் ஆசாரியையும் வைக்குண்


28.டுருக்கிறது முன்னாடி இடதுபுறந்தூணில் வடிவேல்கரை நல்லாண்டித்தேவன் வகையறாவை வக்குண்டிருக்கிறது வெகுதானிய வருஷம் மாசி மாதம் 27ம் தேதி ஆண்டவர் துணை யிந்தபடிக்கு தெய்வப்பெருமாள் பூசாரியார் ராமனாதத்தேவன் ஆண்டித்தேவன் கழுவத்தேவ


29.ன் குப்பணத்தேவன் சிளுக்கத்தேவன் கருத்த


30.ன் செட்டி சோலைத்தேவன் தேவாங்கப்பெ 


31.ருமாள் ஆசாரி யிது யெழுதினது மேற்படி தேவாங்கப் பெருமாள் ஆசாரி 


                           32.சிவமயம்


33.தொட்டையன் கோட்டையில் கூடியது 


விளக்கம்.


கருமாத்தூர் - தொட்டையன்கோட்டை தேவமார்களுக்குப் பாத்தியப்பட்ட ( பிரமலைக்கள்ளர்) கலியுக சிதம்பரேஸ்வரர் மும்மூர்த்தி கோயிலில் மேற்கண்ட ஊர்த் தேவர்களும், நாயக்கர்களும், ஆசாரிகளும் ஒன்றாகக் கூடி, அக் கோயிலின் ஏற்கனவே கட்டப்பட்ட மண்டபங்களை விடுத்து, புதிதாகக் கட்டவிருக்கும் மண்டபத்தின் பணிக்காகவும் அதில் ஆற்ற வேண்டிய பணிகள் குறித்தும், தேவமார்கள் தமக்குள் காவலுரிமை கொண்டும், பிரிட்டிஷ் சர்க்காரின் சிறையில் அடைபட்டும், தண்டம் கட்டியும் வாழ்ந்த நிகழ்வுகளைக் கூறி, கருமாத்தூர் காவல்காரர்களாக மண்ணுலகந்தேவர், தூங்கத்தேவர், தக்கத்தேவர் ஆகியோர் இருந்த போது, தம்முள் இரண்டு தரப்பில் நடந்த சண்டையில், தம்மில் ஒரு தரப்பினருக்காக கிராமனி ஐயர்- கட்டுக்கஞ்சி நாயக்கர்-  பெத்தலை நாயக்கர் ஆகியோர் கொலை செய்யப்பட்டதை நினைத்தும், 


கருமாத்தூர், வடக்கம்பட்டி கிராமங்களுக்கும் கோவில்களுக்கும் காவல் அதிகாரம் பெற்றிருந்த பரட்டையாண்டித்தேவன் வகையறா மற்றும் விக்கிரமங்கலம்- தொட்டையன் கோட்டை கிராமங்களுக்கும் கோவில்களுக்கும் காவல் அதிகாரம் பெற்றிருந்த பொத்தையாண்டித்தேவன் வகையறாக்களுக்கும் எழுந்த தகறாறில், பரட்டையாண்டித் தேவன் வகையறாக்களில் ஒய்யாத்தேவன் வெட்டிக் கொலை செய்யப்பட்டான், இதற்குப் பழிவாங்கும் வகையாக, நடந்த சண்டையில் பொத்தையாண்டித் தேவனின் வகை ஆதரவாளர்களில் குப்பள நாயக்கரும், ஆண்டித்தேவனும் வெட்டிக் கொல்லப்பட்டார்கள்.  இதனால் குப்பள நாயக்கர் மனைவி பொம்மம்மாளும்  அவளுடன் ஆண்டித்தேவன் மனைவி, பாஞ்சாயி யும் ஆகிய இருவரும் ஒன்றாகத் தீக்குளிக்கின்றனர். ( சதி அல்லது உடன்கட்டை ஏறுதல்) அதையும் நினைத்து,  


மேற்கண்ட அனைத்து தியாகச் சீலர்களுக்கும் புதிதாகக் கட்டும் மண்டபத்தில் தூணுக்கொரு சிலை எடுக்கத் தீர்மானித்தும், அதைப் பராமரிக்கும் பணிகளை வகையறாக்களுக்கு ஒன்றாகக் கொடுத்தும் ஒப்பந்தம் போடப்பட்ட செப்புப்பட்டயம் இது. 


இந்த செப்பேடு, பிரமலைக் கள்ளர்களின் காவலுரிமை, அவர்களுக்குள் காவல் அதிகாரம் தொடர்பாக எழுந்த பிணக்குகள், பிரமலைத் தேவமார்களுக்கும் நாயக்கர் -ஐயர் -ஆசாரி ஆகியோருக்குமிடையே இருந்த நெருக்கமான உறவுகள், ஆகியவைகள் வெளிச்சமாகின்றன. தேவமார்களுக்காக ஐயரும் நாயக்கரும் சண்டையிட்டு மடிந்த நிகழ்வு - நாயக்கர் மற்றும் தேவமார் பெண்கள் இருவரும் தங்கள் கணவர்கள் இறந்த நேரத்தில் ஒரே தீக்குழியில் ஒன்றாகப் பாய்ந்தது ஆகிய நிகழ்வு இரண்டும் உருக்கம் கொள்ளச் செய்வனவாக உள்ளன. இந்த செயல்பாடுகளைக் கௌரவிக்கும் வண்ணம் மேற்படி தேவமார்கள் அனைவருக்கும் சிறப்புகளும் - முதல் மரியாதைகளும் அளித்து  மண்டபமும் சிலைகளும் அமைத்த பாங்கு பாராட்டிற்குரியது. 


மேற்கண்ட பட்டயம் விருமாண்டி என்பவரால் சேகரிக்கப்பட்டு லண்டனில் உள்ள பிரிட்டிஷ் மியூசியத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. 


வாசிப்பு: 


கி.ச.முனிராஜ் வாணாதிராயன்.


குறிப்பு : வெகுதானிய வருஷம் மாசி மாதம் 27 ம்தேதி மட்டுமே குறிப்பிடப்படுகிறது. ஆனாலும் இதன் காலம் 18 ம் நூற்றாண்டாக இருக்கலாம்.

பழனி மடாலய தர்ம சாசனம்.



ஏழூர் நகரத்தார், மோளையத் தேவன் வகையறாவிடம் மனையை வாங்கி,  மடம் கட்டினார்கள். பிள்ளையார் கோயில் வகுப்பு முத்தப்பன் எனும் செட்டிப் பண்டாரம் . பாப்பாபட்டி நாட்டின் மூத்த பங்காளிதான் மோளையத்தேவன் கூட்டம்.

சிவப்பட்டி எனும் ஊரில் இருந்த முருக பக்தன்.  இவன் பழனிக்கு எடுக்கும் காவடியை வீட்டில் வைத்து வெள்ளிக்கிழமை தோறும் பூசித்து வந்தான். அவன் முருகனருள் பெற்று பலருக்கும் குறி சொல்லி அது பலித்துக் கொண்டிருந்தது, 


இதை தொண்டைமான் ராஜா பழனிக்கு அருகில் வேட்டையாட வந்திருந்த நேரத்தில் கேள்விப்பட்டு, அவன் வீட்டிற்கு வந்து, "பழனியாண்டவரிடம் நான் நினைத்த காரியத்தை கேட்டுச் சொல்" - என்றார். 


அதற்கு அவன், ஆண்டவருடைய கிருபையால் இன்றைய தினம் இரண்டு மானும், ஒரு மிருகமும் கிடைக்குமா என்று கேட்க நினைத்திருக்கிறீர்கள்.  இன்று 15 நாழிகைக்குள் மூன்று மிருகங்கள் வரும். அதில் முதலிரண்டு மிருகமும் கிடைக்கும்.  அடுத்தது 2 மான்கள் வரும்.  அதில் ஒன்று குத்துப்பட்டு கிடைக்கும். மற்றொன்று குத்துப்படாமல் கிடைக்கும் என்று கூறினான்.  


அதுபோலவே வேட்டையில் விலங்குகள் கிடைக்கவே ராஜா மகிழ்ச்சி கொண்டு, தனது பல்லாக்கை அனுப்பி முத்தப்பனை அரசவைக்கு வரவழைத்து அவனுக்கு சால்வை அணிவித்து, வளைதடி, குத்தீட்டி கொடுத்து, உனக்கு என்ன வேண்டும் என்று கேட்டார். அதற்கு அவன் எனக்கு கோயில் வீட்டிற்கு தாமிர வேல் வேண்டும். அதை நேமங் கோயில் பழனியப்பன் வேலாயுதத்துடன் சேர்த்து வைத்து பூஜிக்கும் உத்தரவு வேண்டும் என்றான்.  உடனடியாக பழனியப்பனை வரவழைத்து அவனுக்கு மரியாதை அளித்து அந்த வேலை வாங்கி அதனுடன் முத்தப்பனுக்குத் தந்த வேலையும் கொடுத்து, அதைப் பழனி கோயிலில் பூஜிக்க வருஷம் 5 பணம் தந்ததை பழனி மடாலய தர்ம சாசனம் கூறுகிறது. 









 கி.ச.முனிராஜ் வாணாதிராயன்.

வரலாற்று பக்கங்கள் - II

வளரி வரலாறு   👈 Click above திருமங்கையாழ்வார் வரலாறு 👈 Click above அம்பலகாரர் / அம்பலம் வரலாறு 👈 Click above வாண்டையார் வரலாறு 👈 Click a...

இந்த வலைப்பதிவில் தேடு

என்னைப் பற்றி

எனது படம்
Contact: info.kallarkulavaralaru@gmail.com, தமிழகத்தில் வாழும் கள்ளர் மரபினர் முக்குலத்தோரில் ஒரு பிரிவினர் ஆவர். கள்ளர், மறவர், அகமுடையார் ஆகிய முக்குலங்களும் போர்த் தொழிலை அடிப்படையாக கொண்டு வாழ்ந்து வந்ததால் இந்த மூன்று சாதியினரும் முக்குலத்தோர் என்று அறியப்படுகின்றனர். இந்த மூன்று குலத்தினரும் "தேவர்" என்ற பொதுவான பெயரோடு அறியப்படுகிறார்கள். கள்ளர் மரபில் அறந்தாங்கி தொண்டைமான், புதுக்கோட்டை பல்லவராயர், புதுக்கோட்டை தொண்டைமான் மற்றும் பல சமீன்தார்களும், பெரு நிலவுரிமையாளர்களும் இருக்கின்றனர். (கள்ளர் படைப்பற்று - கள்ளர் நாடு - கள்ளர்த்தடி). கள்ளர் வரலாறு : வரலாறு என்றால் வந்த வழி என்று பொருள். வந்த வழி தெரியாதவர்களுக்குப் போகும் வழி புரியாது. வரலாற்றை நாம் நினைவு கூர்வதற்குக் காரணம் கடந்து போன ஈகங்களை எண்ணிக் கண்ணீர் விடுவதற்காகவும், நிகழ்த்தி விட்ட வீரங்களைச் சொல்லிப் பெருமை பேசுவதற்காகவும் அல்ல. வருங்காலத்திற்கு வழி சமைப்பதற்கு அந்த ஈகமும் வீரமும் வழிகாட்ட வேண்டும் என்பதற்காகத்தான். கள்ளர்களின் நான்கு முக்கிய பிரிவுகள் - ஈசநாட்டுக்கள்ளர் (திருச்சி, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை) : கிளைவழிக்கள்ளர் (சிவகங்கை) : அம்பல கள்ளர் / நாட்டார் கள்ளர் (சிவகங்கை, மதுரை) : பிறமலை கள்ளர் (மதுரை, உசிலமபட்டி, தேனி, கம்பம், திண்டுக்கல்)

வலைப்பதிவு காப்பகம்

பின்பற்றுபவர்கள்