புதன், 29 நவம்பர், 2017

கள்ளர்கள் மன்னர்களா / கள்ளன் மன்னரா



மன்னர்கள் எப்படி திருடர்களாக இருப்பார்கள் என்றும், கள்ளர் என்றாலே திருடர்கள் தான் என்று சிலர் அறியாமையிலும் சிலர் காழ்புணர்ச்சியிலும் கேட்கின்றனர். கள்ளர் , கள்வர் என்பது வெட்சி மறவன், கிருஷ்ணன், அரசன், இறைவன், மறைதல், கருமை என்று பல பொருள் கொண்ட ஒரே சொல் என்பதை சங்க இலக்கியத்திலும் கல்வெட்டுகளின் மூலமும் நாம் அறிந்ததே.

சரி அவர்கள் கூற்றின் படி மன்னர்கள் எப்படி திருடர்களாக இருப்பார்கள் என்றால் சங்க இலக்கியம் மற்றும் கல்வெட்டுகள், நம் மன்னர்கள் பற்றி என்ன கூறுகிறது என்று பார்ப்போம்.



சங்க இலக்கியங்களில் போர் முறைகள் ஆநிரை கவர்தல் - ஆநிரை மீட்டல், எயில் காத்தல் - எயில் வளைத்தல் முதலியன போரின் வகைகளாம்.



படைத்தொழில் வலிமையுடைய கள்ளர்களே இதில் ஈடுபடுவர். ஆநிரை கவர்தல் , மீட்டல் என இரண்டிலும் இடைப்பட்டதாக நடுகலில் "கள்ளர்" என்ற பெயர்களே காணப்படுகின்றன. 


1) " ஆகொள் மூதூர்க் கள்வர் பெருமகன்”: பசுக்களைக் கவர்ந்து வரும் கள்வர்கட்கு முதல்வன் ஆகிய பாண்டியன்.

2) " புனிற்றான் தரவின் இளையர் பெருமகன்
தொகுபோர்ச் சோழன் பொருண்மலி பாக்கது"
பசுக்களைக் கவர்ந்து வரும் வெட்சி வீரர்களுக்குத் தலைவனான சோழன்.

3) " முனையூர்ப் பல்லா நெடுதிரை வில்லின் ஒய்யும்
தேர்வண் மலையன்" ஊர் முனையிலுள்ள பல நெடிய ஆனிரைகளை விற்போரால் வென்று செலுத்திக்கொண்டு வருகின்ற மலையமான்.




மேலும்

படை இயங்கு அரவம் : போய் ஆநிரைகளைக் கவர்ந்து வருக என அரசன் படை வீரர்கள் ஒன்று சேர்ந்து உற்சாகமாய் எழுப்பும் ஒலி

வேய்ப்புறம் முற்றின் ஆகிய புறத்து இறை : ஊரை சுற்றி முற்றுகை இடல்.

முற்றிய ஊர் கொலை : போர் முற்றியபின் பகைவர் ஊரை அழித்தல்.

ஆ கோள் : ஊரின் பசுக்கூட்டத்தை கவர்தல்

பூசல் மாற்றே : கொஞ்சம் தாமதமாக விடயம் அறிந்து பாதுகாப்பிற்கு வந்து தாக்கும் பகைவரை எதிர்த்து போரிடல்.

எரி பரந்து எடுத்தல் : பகைவரின் ஊர்களைத் தீ வைத்து எரித்தல்.

அடுத்து ஊர்ந்து அட்ட கொற்றம் : பகைவரை வென்று அழித்த வெற்றியில் மகிழ்தல்.

பொருளின்று உய்த்த பேராண் பக்கம் : பகைவரை ஒரு பொருட்டாக நினையாது அவர்களை அடக்கிய பேராண்மை பேசப்படுதல்.

சோழன் கரிகாற் பெருவளத்தான்“

சோழன் கரிகாலன் சோழநாட்டின் வளத்துக்கும் பெருமைக்கும்
முதற்காரணமானவன். சோழநாட்டின் தலைநகராகிய உறையூரோடு காவிரிப்பூம்பட்டினத்தையும் தலைநகராக்கிச் சிறப்புற்றவன். சான்றோர்களால் பட்டினப்பாலை பாடப்பெற்றவன்.

இப்பாட்டினைப் பாடிய கருங்குழலாதனார்

“மாமறுத்த மலர்மார்பின்
தோல்பெயரிய வெறுழ் முன்பின்
எல்லையு மிரவு மெண்ணாய் பகைவர்
ஊர்சுடு விளக்கத் தழுவிளிக் கம்பலைக்
கொள்ளை மேவலை யாகலின் நல்ல “

இப்பாட்டின்கண் பகைவரின் நாடுகள் புதுவருவாய் நிரம்பிப்பயன் பல திகழ்வனவும், அகன்ற பரப்புடையனவுமாம். “நீயோ இரவும்
பகலும் அந்நாட்டரசர்களான பகைவரைப் பொருதழிக்கக் கருதி, அவரதம் ஊர்களைச் சுட்டெரித்தலால் நாட்டுமக்கள் அழுது புலம்பும்
ஆரவாரக் கொள்ளையை விரும்புகின்றாய்; அதனால் அந்நாடுகள் நலமிழந்து கெட்டன காண்.

சோழன் இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளி

பாடியவர் - பாண்டரங்க கண்ணனார்

"விளை வயல் கவர்பூட்டி “
“எல்லுப் பட இட்ட சுடு தீ விளக்கம்”
கரும்பு அல்லது காடு அறியாப்
பெருந் தண் பணை பாழ் ஆக,
ஏம நல் நாடு ஒள் எரி ஊட்டினை,
நாம நல் அமர் செய்ய,
ஓராங்கு மலைந்தன, பெரும! நின் களிறே"

கிள்ளியிடத்தே ஆற்றல் மிக்க பெரும்படை ஒன்று இருந்தது. பகைவர் நாட்டை விரைந்து குதிரை மேற்சென்று வென்று அவர்தம் நெல் விளையும் கழனியைக் கொள்ளையிட்டு, வீடுகளை இடித்து எரியூட்டி, காவற் குளங்களில் யானைகளை இறக்கி அழித்து கொடும் போர்புரியும் திறம் மிகுந்தது அப்படை. அது சென்ற பகைவர் நாடு சுடு நெருப்பால் வெந்து செக்கர் வானைப் போல செந்தீ ஒளிப்பரப்பிக் கொண்டிருக்கும். துணை வேண்டாது தனித்தேப் போரிடும் பெரிய படையினது வலுவும், புலால் நாற்றம் நாறும் கொலை வாளும், பூசிப் புலர்ந்த சாந்தும், முருகனைப் போன்ற வெஞ்சினமும் உடைய அச்சம் ஊட்டுந் தலைவனே.

“இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய பாண்டியன் நன்மாறன்“ :

இப்பாண்டிவேந்தன், ஒருகால் பகைவர் மேற் போர் குறித்துச் செல்லலுற்றானாக, அவனைக் காணப் போந்திருந்த காவிரிப்பூம் பட்டினத்துக்காரிக்கண்ணனார், அவனுடைய போர்வன்மையை நன்குணர்ந்தவராதலால், “வேந்தே, நின் வீரர் பகைவர் நாட்டு வயல்களைக் கொள்ளை கொள்ளின் கொள்க; ஊர்களைத் தீக்கிரை யாக்கினும் ஆக்குக; நின் வேல் அப் பகைவரை அழிப்பினும் அழிக்க; “என்கிறார்.

“பாண்டியன் நெடுஞ்செழியன்” :

தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியன் நாள்தோறும் பல கொடிய வினைகளைப் புரிந்தான். பகைவர் நாட்டிலிருந்த நன்றாகத் தொழிலமையைக் கட்டப்பட்ட உயர்ந்த இல்லங்களை எரியூட்டினான். பகைநாட்டில் உள்ள விளைந்த வயல்களையும், சோலைகளையும் நகப்புறங்களையும் எரியூட்டியதால் அதன் ஓசையும் அதனால் எழுந்த அவலக்குரலும் எங்கும் கேட்டது. மக்கள் சமைக்கும் நெருப்பைப் பெருநெருப்பு அழித்ததால், சமையல் தொழிலும் அந்நாட்டில் ஒழிந்தது. கொல்லப்பட்ட மன்னனின் மனைவியும் அவர்தம் மக்களும் உயிர் வாழ்வதற்காக வேளைக்கீரையைக் பறித்து உண்டனர். அம்மன்னனின் ஆட்சிமுடிவிற்கு வந்தது என்பதை மக்களுக்குத் தெரிவிக்கும் பொருட்டுக் காவற்காட்டிலுள்ள காவல் மரங்கள் கூரான கோடாரியால் பிளக்கப்பட்டு விறகாக்கப்பட்டன.

“சேரன் செங்குட்டுவன்” :

கடல்பிறக் கோட்டிய செங்குட்டுவன் பகைவர் ஊர்களை எரியூட்டியதைப் பார்வையிட்டான்.. அப்போது அவன் அணிந்திருந்த மாலையின் இதழ்கள் ஊரையெறியூட்டியதால் ஏற்பட்ட வெப்பம் தாங்காமல் கருகிப்போயின. அவன் மார்பில் பூசிய சந்தனம் உலர்ந்து விழுந்தது (பதி. 48/ 10-12)

பெருஞ்சேரவிரும் பொறை சிந்தெழுந்து சென்று வைத்த போர் எரி பகைவர் ஊரைக் கவர்ந்து அடுதலால் எழுந்த புகை திசையை மறைத்தது (பதி. 71/9,10)

சேரனின் படை எரி நிகழ்ந்தன்ன நிறுத்தற்கரிய சீற்றத்தையுடையது (பதி. தி. 1-7)

இமையவரம்பன் நெடுஞ்சேரலாதன் தான் அழிக்கக் கருதிய நாட்டிற்குச் சென்று அங்கேயே தங்கி பகைவர் நாட்டை எரியூட்டினான். (பதி. 15/ 1,2)

"நரசிம்மவர்மன்" :

மகேந்த்ரவர்மனின் மகன் நரசிம்மவர்மன் கி.பி.642ல் வாதாபி நகர் மீது படையெடுத்தான். இப்படையில் ஒரு லட்சம் காலாட்வீரர்களும் ,ஐம்பதாயிரம் குதிரை வீரர்களும் ,பன்னிரெண்டாயிரம் யானைகளும் இருந்ததாக கல்வெட்டுகளிலும் இலக்கியங்களிலும் கூறப்படுகின்றன. இம்மாபெரும் படையெடுப்பை படைத்தளபதி பரஞ்சோதி முன் நின்று நடத்தி வாதாபி நகரை எரித்து அங்கு உள்ள மொத்த செல்வங்களையும் கொள்ளையடித்தனர்.

சிறுத்தொண்டர் என்னும் பரஞ்சோதியார் நரசிம்மவர்மப் பல்லவனின் படைத்தலைவர் தொன்னகரைத் துகளாக்கி, அங்கிருந்த கணபதியைக் கொண்டு வந்து தாம் வழிபட்ட திருச்செங்காட்டங்குடியில் நிறுவினார். இவருக்கு வாதாபி கணபதி என்று பெயர்.

இராஜராஜ சோழன்

922ம் ஆண்டிற்குப் பிறகு சில ஆண்டுகளில் இரண்டாம் தைலப்பன் இறந்தான். அதன் பின்னர் அவனுடைய மகன் சத்தியாசிரயன் சாளுக்கிய மன்னனானான். சத்தியாசிரயனை எதிர்த்துப் போர் புரிந்து வெற்றியடைந்து, அவனிடமிருந்த செல்வத்தில் ஒரு பங்கைத் தஞ்சை பெரிய கோயிலுக்கு என்று இராஜராஜன் ஆட்சியின் பிற்பாதிக் கல்வெட்டுகளில் காணப்படுகிறது.


"இராசேந்திர சோழன்" :

இராஜராஜனின் தமிழ் மெய்க்கீர்த்தி மிக விரிவாகச் சொல்கிறது.

"அலை நிறைந்த கடலின் நடுவே பல கப்பல்களை இராஜேந்திரன் அனுப்பினான்; கடாரத்தை ஆண்ட சங்கிராம விஜயோத்துங்க வர்மனையும், புகழ் படைத்த அவனுடைய படையில் இருந்த யானைகளையும் பிடித்துக் கொண்டான். நியாயமான வழியில் அந்த அரசன் சேமித்து வைத்திருந்த எண்ணற்ற செல்வங்களையெல்லாம் இவன் எடுத்துக் கொண்டான்;

தார்வார் மாவட்டம் ஹொட்டூரில் கி.பி 1007ம் ஆண்டைச் சேர்ந்த(929) சத்தியாசிரயனின் கல்வெட்டு ஒன்று, சோழ குலத்திற்கு அணியாக விளங்கியவனும் இராஜராஜ நித்தியாவிநோதனின் மகனுமாகிய, நூர்மடிச் சோழ இராஜேந்திர வித்தியாதரன் என்பவன், ஒன்பது லட்சம் வீரர்கள் அடங்கிய பெரும்படையுடன் பீஜப்பூர் மாவட்டத்திலுள்ள தோனூர் வரையில் வந்து, பெரும்போர் புரிந்து நாட்டைச் சூறையாடிப் பாழ்படுத்தியும் நகரங்களைக் கொளுத்தியும், இளங்குழவிகள், அந்தணர் என்றும் பாராமல் அவர்களைக் கொன்றும், கன்னியரைக் கைப்பற்றி மனைவியராக்கியும், அந்தச் சாதியை அழித்தும் அளவற்ற பொருள்களைக் கவர்ந்து கொண்டு தன்நாட்டுக்குத் திரும்பிச் சென்றான் என்று இக்கல்வெட்டு கூறுகிறது. இதன் பிறகு, தமிழரைக் கொன்று (திருள-மாரி) சத்தியாசிரயன் சோழரை விரட்டியடித்து, அவரிடமிருந்து தன் வஸ்து-வாகனத்தை மீட்டு தென் பகுதியையும் கைப்பற்றினான் என்று இதே கல்வெட்டு மேலும் கூறுகிறது.

கி.பி. 1017-18இல் இவன் நடத்திய ஈழப் போரில் ஈழ மன்னனை இவன் வெற்றி கண்டு கைப்பற்றிய பொருள் குறித்து இவன் வெளியிட்ட கரந்தைச் செப்பேடு (செய்யுள் 58-59) பின்வருமாறு குறிப்பிடுகிறது.

"அவனுடைய நாட்டையும், அவனுடைய முடியையும், அவனுடைய அரச பத்தினியையும், அவளுடைய முடியையும், அவனுடைய மகளையும், மற்றப் பொருட் குவியல்களையும் . . . கைப்பற்றினான். "

சிங்கள நூலான மகாவம்சம் சிங்கள மன்னன் காட்டுக்குள் ஓடிப்போனதாகவும், உடன்பாடு செய்து கொள்ளுவதாகச் சொல்லிய சோழப்படை அவனை உயிரோடு பிடித்துக் கொண்டு, மேற்கொண்ட செயல்களை பின்வருமாறு குறிப்பிடுகிறது.

"தாங்கள் பிடித்த அரசனையும் தங்கள் கைக்குள் சிக்கிய கருவூலங்களையும் உடனே சோழ மன்னனுக்கு அனுப்பி வைத்தனர். பாதுகாப்பாக பல இடங்களில் இலங்கை முழுவதும் வைக்கப்பட்டிருந்த நினைவுச் சின்ன அறைகளை உடைத்து அவற்றிலிருந்த பொன்னாலான உருவங்களை அவர்கள் எடுத்துச் சென்றனர்.

அவர்கள் கண்பட்ட இடங்களிலெல்லாம் பெளத்த சமயத்து மடங்களை அழித்து இரத்தத்தை உறிஞ்சும் அரக்கர்களைப் போல் இலங்கையின் செல்வங்கள் அனைத்தையும் கொள்ளையடித்தனர்" (சாஸ்திரி, 1989: 272).

வங்காள தேசத்து மன்னன் மகிபாலனை வென்று யானைகள், பெண்கள், செல்லம் எல்லாவற்றையும் கைப்பற்றிக் கொண்டான் (மேலது: 281).

சாளுக்கியர்களின் பழமையான நகரான கல்யாணபுரத்தைக் கைப்பற்றி அதை இடித்துத் தரைமட்டமாக்கி அங்கிருந்த ஒரு தூவாரபாலகர் உருவத்தைக் கொண்டு வந்தான். தஞ்சை மாவட்டம் தாராசுரம் கோவில் இடம்பெற்ற அப்படிமத்தின் பீடத்தில் "ஸ்ரீ விஜய ராஜேந்திரத் தேவர் கல்யாணபுரம் எரித்து கொண்டு வந்த துவார பாலர்" என்று குறிக்கப்பட்டுள்ளது

ராஜாதிராஜன் (1018- 1054)

இலங்கையின் மீது படையெடுத்து, வீரசாலமேகன் என்ற சிங்கள மன்னனை வென்றான்.

சிங்கள மன்னன் ஓடி ஒளிய அவனது தமக்கையையும், மனைவியையும் சிறை பிடித்ததுடன் அவனது தாயின் மூக்கை அறுத்தான் (ளு11 111; 5056).

ராஜாதிராஜன் சாளுக்கியர்களுடன் 1048 இல் நிகழ்த்திய போரில் கிருஷ்ணா ஆற்றங்கரையில் உள்ள பூண்டூர் என்ற ஊரில் குறுநில மன்னர்களுடன் எண்ணற்ற பெண்களும் சிறைபிடிக்கப்பட்டனர்.

பூண்டூர் நகர் அழித்துத் தரைமட்டமாக்கப்பட்டது. கழுதைகள் பூட்டிய ஏரால் உழுது வரகு விதைக்கப்பட்டது. மாளிகை தீக்கிரையாக்கப்பட்டது. 

முதல் குலோத்துங்கச் சோழன் (1070---1120)

 இரண்டாம் கலிங்கப் போரில் (கி.பி. 1110) வென்று குதிரைகள், யானைகள், ஒட்டகங்கள் மற்றும் செல்வங்களுடன் மகளிரையும் கைப்பற்றி வந்தான். மூன்றாம் குலோத்துங்கன் (கி.பி. 1178- 1218) மதுரையின் மீது படையெடுத்து வென்ற பின்னர் அவன் செய்த செயல்களாக அவனது மெய்கீர்த்திகள் பின்வருபவனற்றைக் குறிப்பிடுகின்றன.

1. பெண்கள் அடிமைகளாகக் கொண்டு செல்லப்பட்டனர்.
2. தோற்றவர்களின் மூக்கு அறுக்கப்பட்டது.
3. பாண்டியனின் கூட மண்டபத்தை (முடி சூட்டும் மண்டபம்) இடித்து கழுதை ஏரைப் பூட்டி உழுதனர்.

திருவாரூர்த் தலைவனாக இருந்த கங்கை கொண்டான் உத்தம சோழராயனின் படையதிகாரியான கூத்தன் கணபதி என்பவனை "பகைவர்களின் மனைவியர்க்குக் கணவன்" என்று ஒரு கல்வெட்டு குறிப்பிடுகிறது (ARE 1913 ப. 97).

முதல் மாறவர்மன் சுந்தரபாண்டியன்

கி.பி. 1219 இல் சோழ நாட்டின் மீது படையெடுத்த முதல் மாறவர்மன் சுந்தரபாண்டியன் (1216 -1238) தனது வீரச்செயல்களை, செய்யுள் வடிவிலான மெய்கீர்த்தியாக கல்வெட்டில் பொறித்துள்ளான் (I.P.S; 290, 323) புதுக்கோட்டை மாவட்டம் குடுமியான் மலையில் உள்ள அக்கல்வெட்டின் உரைநடை வடிவம் வருமாறு:
கொடுங் கோபமுடைய குதிரைகளையும், யானைகளையும் செலுத்திச் சென்று சோழர்களின் தஞ்சை நகரையும் செந்தழலிட்டுக் கொளுத்தினான்.

அழகிய குவளை மலர்களும், நீல மலர்களும் தம் அழகை இழக்கும்படி குளங்களையும் ஆறுகளையும் கலக்கினான்.

கூடம், மதில், கோபுரம், ஆடல் நிகழும் அரங்கங்கள், மாட மாளிகைகள், கருவூலங்கள் ஆகியனவற்றை இடித்துத் தள்ளினான்.

தன்னை வந்து அடிபணியாத பகை மன்னர்களின் மனைவியர்கள் அழுத கண்ணீர் ஆறாக ஓடும்படிச் செய்தான்.

பகைவரது நிலத்தை, கழுதை பூட்டிய ஏர் கொண்டு உழுது வெள்வரகை விதைத்தான்.

சோழர் தலைநகராக விளங்கிய முடிகொண்ட சோழபுரம் சென்று "விஜயாபிஷேகம்" எனனும் சடங்கை இவன் செய்தான். அதன் பொருட்டு சோழ அரசியும், அந்தப்புரத்துப் பெண்களும் தண்ணீர்க்குடம் முதலிய மங்கலப் பொருள்களை சுமந்து வரும்படி கட்டாயப்படுத்தப்பட்டனர் (சாஸ்திரி, மேலது, 579).

இரண்டாம் ராஜேந்திர சோழன்

கர்நாடக மாநிலம் கோலாரில் காணப்படும் ஒரு கல்வெட்டு கூறும் செய்தியின் சாரம் இது:
"கோப்பரிகேசரிவர்மன் எனும் ராஜேந்திர தேவரின் 3ஆம் ஆண்டு ஆட்சிக் காலத்தில், இரட்டபாடி நாட்டை வென்றதைக் குறிக்கும் விதமாக கொல்லாபுரம் எனுமிடத்தில் எழுப்பப்பட்ட வெற்றித் தூணில் ஆதவமல்லனை புகழ்மிக்க ஆற்றங்கரையில் கொப்பம் எனுமிடத்தில் வீழ்த்தியதையும், அவனுடைய யானைகள், குதிரைகள் பலவற்றைக் கவர்ந்து கொண்டதையும், பெண்களையும் ஏராளமான செல்வங்களையும் அபகரித்துக் கொண்டதையும் அந்தப் போரில் மாபெரும் வெற்றி பெற்றதைக் கொண்டாடும் விதத்தில் வெற்றிச் சிம்மாதனத்தில் அமரவைத்து எழுதப்பட்டது." என்று போகிறது அந்தக் கல்வெட்டு.

மூன்றாம் இராஜேந்திரன்

இராஜேந்திரன் பாண்டிய நாட்டைக் கொள்ளையடித்ததாயும் சொல்லப்பட்டிருக்கிறது. 

மூன்றாம் இராஜேந்திரன் சில வெற்றிகளை அடைந்தான். சோழ மன்னனுக்கு அவன் அணிவித்த இரண்டாம் முடி பாண்டியனுடைய முடியே. பாண்டியர்கள் இருபதாண்டு காலத்தில் இரண்டு முறை சோழ நாட்டில் படையெடுத்தும் தீவைத்தும் உள்ளனர்.


இரண்டாம் இராசாதிராச சோழன் 

சோழநாட்டை ஆண்டு வந்தவன் இராசாதிராசன் ஆவன். அவனுக்குப் பேருதவியாக இருந்தவன் திருச்சிற்றம்பலம் உடையானான பெருமான் நம்பிப் பல்லவராயன் என்பவன். அப் பெருந்தகை திரண்ட படைகளுடன் பாண்டியன் நாட்டை அடைந்தான். அவனுக்கு உதவியாகச் சென்ற மற்றொரு தலைவன் நரசிங்க வர்ம ராயன் என்பவன். அதுகாறும் பாண்டிய நாட்டுக் கோவில்களை இடித்துக் கொள்ளை-கொலைகளால் குடிகளைத் துன்புறுத்திவந்த ஈழப்படைகளைத் தாக்கின. திருக்கானப்பேர், தொண்டி, பாசிபொன் அமராவதி, மணமேற்குடி, மஞ்சக்குடி, என்னும் இடங்களில் போர் நடந்தது, இறுதியில் ஈழப்படை தோற்று ஒழிந்தது

இராசராச சோழனுலா

“சோழன் பரிசார்ந்தே சூழ வருஞ்சக்ர
வாள கிரியர மங்கையரும் - தோளிணையால் “

கிழக்குத் திக்கில் உதயமலைவரை சென்று வென்று வந்த சோழன் கவர்ந்து கொண்டது வரையர மகளிர் சிலர். குபேரனுடைய அளகையை வென்று அந்நகரில் உள்ள பல மகளிரை அவர்க்குரிய மனையோடும் செல்வத்தோடும் கவர்ந்துகொண்டு வந்தான் ஒரு சோழன் எனவும் அவனாற் கொள்ளப்பட்டமகளிர் சிலர் என்க. அரம்பையர் வானுலக மங்கையர். வரையர மகளிர் - மலையில் வாழ் தெய்வ மகளிர், நீரரமகளிர் - நீருக்குள் வாழும் தெய்வமகளிர், நாககன்னியர் - பாம்புலகில் வாழும் தெய்வமகளிர். சோழர் குலந்தோன்றிய காலமுதல் அம் மரபிற் பிறந்த சிறந்த மன்னர்களாற் காதலாலும் வீரத்தாலும் கவர்ந்துகொண்டு வரப்பட்ட பல்வேறு குலமங்கையர் என்க.

கருணாகரத் தொண்டைமான்

கலிங்க அரசன் அனந்தவர்மன் என்பவன். அவன் சோழனை மதியாது திறை கட்டாதிருந்தான். அதனால் சோழன் தன் படைத்தலைவனான கருணாகரத் தொண்டைமான் என்பவனைப் பெரும்படையுடன் அனுப்பினான். அத்தலைவனுடன் சென்ற படை பாலாறு, பொன்முகரி, பழவாறு. கொல்லியாறு, வட பெண்ணை, வயலாறு, மண்ணாறு, குன்றியாறு, ஆகியவற்றைக் கடந்து கிருஷ்ணையையும் தாண்டியது; பிறகு கோதாவரி, பம்பையாறு, கோதமை ஆறுகளைக் கடந்து கலிங்க நாட்டை அடைந்தது; அங்குச் சில நகரங்களில் எரி கொளுவிச் சில ஊர்களைச் சூறை ஆடியது. படையெடுப்பைக் கேட்ட கலிங்க அரசன் சினந்து, தன் படைகளைத் திரட்டினான். அப்பொழுது எங்கராயன் என்னும் அமைச்சன், சோழன் படை வலிமையைப் பல சான்றுகளால் விளக்கிச் சந்து செய்துகொள்ளும்படி அறிவுறுத்தினான். அரசன் கேட்டானில்லை. இறுதியில் போர் நடந்தது. கலிங்க அரசன் தோற்றோடினான். அவனைக் கருணாகரத் தொண்டைமான் தேடிப் பிடிக்க முடியாது, பெரும் பொருளோடு சோணாடு மீண்டான்.



"கோப்பெருஞ்சிங்கன்":

கோப்பெருஞ்சிங்கன் என்னும் சிற்றரசன் மூன்றாம் ராச ராச சோழனுக்கு அடி பணியாமல் ராச ராசனை சிறை எடுத்தான். சோழனுக்கு அடி பணியாமல் ஆட்சி புரிந்து வந்த சிற்றரசன் கோப்பெருஞ்சிங்கன், தக்க சமையம் அறிந்து கப்பம் கட்டு வதை நிறுத்தினான். சோழனை சிறைப் படுத்தினான், சோழனின் செல்வங்களை கொள்ளை அடித்தான். இவனது அடாவடி செயல்களை அறிந்த போசள மன்னன், படை எடுத்து வந்தான். வீர நரசிம்மன் திருவயிந்திபுரம் வரைச் சென்று கோப்பெருஞ்சிங்கனின் செல்வங்களைக் கைப் பற்றினான், அவனது செல்வம், மக்கள், பெண்கள் ஆகியவற்றை அழித்து கைப் பற்றினான். வீர நரசிம்மனின் வருகையை அறிந்த கோப்பெருஞ்சிங்கன் மூன்றாம் ராச ராசச் சோழனைச் சிறையிலிருந்து விடுதலை செய்தான்.


சோழர் படையெடுப்பின் மறுபக்கம்

 Great Cholas : 


ஆதித்த கரிகாலன்:

ஒரு மன்னர் (அ) இளவரசர் எதிரிகள் மீது அதீத கோபம் கொண்டாலும் போர்தர்மங்களுக்கு உட்பட்டு செய்யக்கூடாத செயல்கள் என்று சில உண்டு. எதிரியை செருக்களத்தில் நேருக்கு நேர் சிரச்சேதம் செய்வது தவறல்ல. ஆனால் ஆதித்த கரிகாலரோ வெட்டிய வீரபாண்டியர் தலையைத் தஞ்சைநகர் வாயில்மரத்தில் நட்டு வைத்தார் என்பதற்கு

திருவாலங்காட்டுச்_செப்பேட்டில் வரும் 68 ஆம் வடமொழி ஸ்லோகமும் எசாலம்_செப்பேட்டில் வரும் 14 ஆம் வடமொழி ஸ்லோகமும் நேரடிச் சான்று.


முதலாம்_ராஜராஜர்

இவரது மெய்கீர்த்தியில் வன்முறை விளைவிக்கும் வரிகள் இல்லையென்றாலும் இவரது சமகாலத்தில் வாழ்ந்த மேலைச் சாளுக்கிய மன்னரான சத்யாஸ்ரயரின்

ஹோட்டூர்க்_கல்வெட்டில் ராஜேந்திர சோழர் 9 லட்சம் வீரர்களுடன் படையெடுத்து வந்து செய்த அட்டூழியங்கள் தெளிவாக விளக்கப்பட்டுள்ளன.(இதைச் செய்தது ராஜேந்திரர் அல்ல ராஜராஜர் தான் என்று குடவாயில் பாலசுப்ரமணியன் ஐயா தனது புதிய ஆராய்ச்சி நூலான ராஜேந்திரசோழனில் சான்றுகளோடு குறிப்பிட்டுள்ளார்).

பெண்கள், குழந்தைகள் & மறையவர்களை கொலை செய்து பெண்டிர் பண்டாரம் கவர்ந்து சென்றது சொல்லப்பட்டுள்ளது.சோழர்கள் பெண்களைக் கவர்ந்த முதல் நேரடிக் குறிப்பு அநேகமாக Rajaraja The Great காலத்தில் இருந்துதான் கிடைக்க ஆரம்பிக்கிறது.
(Epigraphia indica vol.16,Page No.75)

முதலாம்_ராஜேந்திரர்

சோழ வரலாற்றில் முதன்முதலாக பெண்டிர்_பண்டாரம் என்ற வார்த்தை வருவது இவரது மெய்கீர்த்தியில் தான்.

கரந்தைச்_செப்பேட்டில் உள்ள 58 ஆவது வடமொழி ஸ்லோகத்தில் வருவதுபோல் ஈழத்தரசரின் மொத்த குடும்பத்தையும் இம்மன்னர் கவர்ந்து கொண்டார் (சிறை வைத்தார்). ஈழத்தரசரும் 12 ஆண்டுகள் சோணாட்டில் கைதியாகவே இருந்து மாண்டுபோனார்(மகாவம்சம்). ஜெயங்கொண்ட மூவேந்தவேளார் என்ற சோழத்தளபதி தான் ஐந்தாம் மகிந்தரை சிறைப்பிடித்து சோணாட்டிற்கு அனுப்பி வைத்தார் என்ற கல்வெட்டை ஏற்கனவே நான் முகநூலில் பதிவிட்டுள்ளேன்.

கங்கைப்_படையெடுப்பில் பாலவம்சத்துப் பேரரசர் மகிபாலனோடு நடந்த யுத்தத்திலும் ராஜேந்திரர் பெண்டிர் பண்டாரம் கவர்ந்துள்ளார் (மகிபாலனை வெஞ்சமர் விளாகத்து அஞ்சுவித்தருளி ஒண்டிறல் யானையும் பெண்டிர் பண்டாரமும்....) அவரது திருமன்னிவளர என்ற மெய்கீர்த்தியே சான்று பகர்கிறது.

முதலாம்_ராஜாதிராஜர்

கன்னியாகுப்ஜம்(கன்னக்குச்சி) Kannauj district in U.P வேந்தனாகிய வீரசலாமேகன் என்பவர் தன்னாட்டை வீட்டு ஈழத்தைக் கைப்பற்றி ஆண்டபோது ராஜாதிராஜருடன் ஏற்பட்ட போரில் தோற்றோட உடனே ராஜாதிராஜர் அந்த மன்னரின் மனைவி,தாய் மற்றும் தமக்கையைப் பிடித்து அதில் தாயை_மூக்கரிந்தார் (S.i.vol 5,No.978) என்று திருவெண்காட்டுச் சாசனம் கூறுகிறது.

சாளுக்கியர்களுடனான மூன்றாம் போரில் பூண்டூர் என்னுமிடத்தில் தெலுங்க விச்சையன் என்ற சாளுக்கிய படைத்தலைவரின் தந்தை & தாய் மற்றும் #எண்ணற்ற_மகளிரையும் சிறைகொண்டார்.
(S.I.Vol 5 No.520&641)

பின்னர் மேலைச் சாளுக்கிய மன்னர் ஆகமவல்லனின் ஒற்றர்களைப்_பிடித்து அன்னோர் மார்பில் "ஆகமவல்லன் யாங்கணும் அஞ்சினன்" என்றெழுதி அவமானப்படுத்தி துரத்தினார்.
(கூழமந்தல் சாசனம்) S.I.Vol.7 No.1046

பின்னர் திருக்கழுக்குன்றம் கல்வெட்டில், ஆகமவல்லரின் இரு_ஒற்றர்களைப்_பிடித்து ஒருவனுக்கு குடுமி வைத்து ஆகமவல்லன் என்று பெயரிட்டும் மற்றவனுக்குப் பெண்ணுடை தரிப்பித்து ஆகமவல்லி என்று பெயரிட்டும் அவமானப்படுத்தி திருப்பியனுப்பினார் (S.I.Vol 5 No.465)

ராஜராஜரது ஒற்றரை சேரமன்னர் பாஸ்கர ரவிவர்மன் பிடித்துச் சிறையிலிட்ட குற்றத்திற்கு சேரநாடு ராஜராஜரால் எரிகொளுவிச் சூறையாடப்பட்டது என்பதை சோழரது நான்கு உலாக்களும் புகழ்பாடும்.

மேலைச் சாளுக்கியரின் தலைநகரமான கல்யாணபுரத்தை எரித்து அங்கிருந்து ஒரு துவாரபாலகரை வெற்றிச்சின்னமாக கொணர்ந்தவர்.

இரண்டாம்_ராஜேந்திரர்

கொப்பம்_போரில் மேலைச் சாளுக்கிய மன்னர் ஆகமவல்லரின் சத்தியவ்வை சாங்கப்பை என்ற இரண்டு மனைவிகளையும் & பெண்டிர் பண்டாரமும் கைக்கொண்டார் (S.I.Vol 5 No.644)

ராஜமகேந்திரர்

இந்த இளவரசர் (சோழபாண்டியன்) கர்நாடகத்து பெள்வோலா நாட்டில் இரண்டாம் பூதுகர் நினைவாக எழுப்பப்பட்ட ஜைனகோயில்களை_எரித்த காரணத்தால் ஆகமவல்லரால் போரில் கொல்லப்பட்டவர் என்று இரண்டாம் சோமேஸ்வரர் கல்வெட்டு கூறுகிறது (E.I.Vol 15,No.23)

சண்டாளசோழன் & மகாபாதகன் போன்ற வசைச்சொற்களுக்கு ஆளானவர்.
(இது முதலாம் ராஜாதிராஜர் என்று சதாசிவ பண்டாரத்தார் சொன்னாலும் குடந்தை என்.சேதுராமன் ஐயா ராஜமகேந்திரராக இருக்கலாம் என்கிறார்)

வீரராஜேந்திரர்

வேங்கை_நாட்டில் நடந்த போரில் மேலைச் சாளுக்கிய தளபதி சாமுண்டராயர் தலை கொய்யப்பட்டு அவரது மகள் நாகலை என்பவர் மூக்கரியப்பட்டார்.

கூடல்சங்கமத்துப்_போரில் ஆகமவல்லரின் மனைவியோடும் வஸ்து வாகனங்களைக் கைக்கொண்டவர்.

சக்கரக்கோட்டத்துப்_போரில் தேவநாதன் முதலிய சாளுக்கிய தளபதிகளின் மனைவிகளைக் கவர்ந்தவர் & பெண்டிர் பண்டாரமும் கொண்டவர்(அரிவையர் குழாம்)

ஈழத்துப்_போரில் மன்னர் முதலாம் விஜயபாகுவின் மனைவியைக் கவர்ந்தவர்.

கொண்டை என்னுமிடத்தில் மேலைச் சாளுக்கியரோடு நடந்த போரில் பெண்டிர் பண்டாரம் கொண்டவர்
(தோகையர் ஈட்டம்)

மேற்கூறிய ஐந்தும் (E.I.Vol No.21,Inscription No.38)-ல் உள்ளது.

பின்வந்த சோழ வேந்தர்களும் பெண்டிர் பண்டாரங்கள் கொண்டவர் தாம்.

மேலே உள்ள அனைத்து மன்னர்களும் பிற நாட்டில் உள்ள செல்வங்களை கைப்பற்றி கொண்டு வருவதையே பெருமையாக நினைத்துள்ளனர். இதன் மூலம் இங்கு களவும், காவலும் பெருமையாக கொண்டாடப்பட்டது என்பதற்கு இந்த சான்றுகள் போதுமானது.

வரலாற்று பக்கங்கள் - I

வளரி வரலாறு   👈 Click above திருமங்கையாழ்வார் வரலாறு 👈 Click above அம்பலகாரர் / அம்பலம் வரலாறு 👈 Click above வாண்டையார் வரலாறு 👈 Click a...

இந்த வலைப்பதிவில் தேடு

என்னைப் பற்றி

எனது படம்
Contact: info.kallarkulavaralaru@gmail.com, தமிழகத்தில் வாழும் கள்ளர் மரபினர் முக்குலத்தோரில் ஒரு பிரிவினர் ஆவர். கள்ளர், மறவர், அகமுடையார் ஆகிய முக்குலங்களும் போர்த் தொழிலை அடிப்படையாக கொண்டு வாழ்ந்து வந்ததால் இந்த மூன்று சாதியினரும் முக்குலத்தோர் என்று அறியப்படுகின்றனர். இந்த மூன்று குலத்தினரும் "தேவர்" என்ற பொதுவான பெயரோடு அறியப்படுகிறார்கள். கள்ளர் மரபில் அறந்தாங்கி தொண்டைமான், புதுக்கோட்டை பல்லவராயர், புதுக்கோட்டை தொண்டைமான் மற்றும் பல சமீன்தார்களும், பெரு நிலவுரிமையாளர்களும் இருக்கின்றனர். (கள்ளர் படைப்பற்று - கள்ளர் நாடு - கள்ளர்த்தடி). கள்ளர் வரலாறு : வரலாறு என்றால் வந்த வழி என்று பொருள். வந்த வழி தெரியாதவர்களுக்குப் போகும் வழி புரியாது. வரலாற்றை நாம் நினைவு கூர்வதற்குக் காரணம் கடந்து போன ஈகங்களை எண்ணிக் கண்ணீர் விடுவதற்காகவும், நிகழ்த்தி விட்ட வீரங்களைச் சொல்லிப் பெருமை பேசுவதற்காகவும் அல்ல. வருங்காலத்திற்கு வழி சமைப்பதற்கு அந்த ஈகமும் வீரமும் வழிகாட்ட வேண்டும் என்பதற்காகத்தான். கள்ளர்களின் நான்கு முக்கிய பிரிவுகள் - ஈசநாட்டுக்கள்ளர் (திருச்சி, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை) : கிளைவழிக்கள்ளர் (சிவகங்கை) : அம்பல கள்ளர் / நாட்டார் கள்ளர் (சிவகங்கை, மதுரை) : பிறமலை கள்ளர் (மதுரை, உசிலமபட்டி, தேனி, கம்பம், திண்டுக்கல்)

வலைப்பதிவு காப்பகம்

பின்பற்றுபவர்கள்