வெள்ளி, 11 அக்டோபர், 2019

தமிழ் எங்கள் உயிருக்கு நேர்!’- வாழ்ந்து காட்டும் கள்ளர் ஊர்

ஆனந்தவிகடன் கட்டுரை 

தஞ்சையிலிருந்து நடுக்காவிரி வழியாகப் பயணம் செய்து, `திருக்காட்டுப்பள்ளி’ எனும் பேரூரைக் கடந்தால், சாலைக்கு அந்தப் பக்கம் காவிரி பாய்கிறது. இடப்பக்கம் பிரியும் சாலையின் உட்புறமாகச் சிறிது தூரத்தைக் கடந்தால், ஊரெங்கும் தமிழ்க்கடல் பாய்கிறது.

900 குடும்பங்கள் வாழும் இளங்காடு எனும் சிற்றூரில் நாம் காணும் ஒவ்வொருவரும் தமிழ் பயின்ற, பயிலும், பயிற்றுவிக்கும் பெருமக்களாக இருக்கிறார்கள். இயல், இசை, நாடகம் எனும் முத்தமிழையும் போற்றும் ஊர் தஞ்சை என்றால், நேற்று, இன்று, நாளை என எக்காலமும் மொத்தத் தமிழையும் காக்கும் ஊராக விளங்குகிறது இளங்காடு.

கிட்டத்தட்ட நூறாண்டுகளுக்கும் மேலாகத் தமிழின் பெருமையைப் பறைசாற்றிக்கொண்டிருக்கும் புலவர் பெருமக்கள் வாழ்ந்த ஊர் இது. நான்காம் தமிழ்ச்சங்கம் தொடங்கப்படுவதற்கு இரு தசாப்தங்களுக்கு முன்னரே, ‘நற்றமிழ்ச் சங்கம்’ எனும் பெயரில் தமிழ் வளர்க்கச் சங்கம் தொடங்கப் பட்டிருக்கிறது இந்த ஊரில். ஊர்ப் பெரியவர் பம்பையா சேதுராயரின் முன்னெடுப்பில், 1881-ம் ஆண்டு தொடங்கப்பட்ட நற்றமிழ்ச் சங்கம்தான் இந்த ஊரில் இத்தனை பெரும் தமிழ் ஆளுமைகளை உருவாக்கியிருக்கிறது. 

‘நற்றமிழ்ச் சங்கம்’ 

‘`பாண்டித்துரைத் தேவர் வந்துதான் நற்றமிழ்ச் சங்கத்தைத் தொடங்கிவெச்சாரு. `நான்காம் தமிழ்ச் சங்கம்’ எனும் பெருமரம் எங்க நற்றமிழ்ச் சங்க விதையில முளைச்சதுதான்’’ எனத் தனது ஊரின் பெருமையையும், சங்கத்தின் பெருமையையும் விவரிக்கத் தொடங்குகிறார், 82 வயதான புலவர் ரத்தின மணவாளன்.

``எங்க பெரியப்பா புலவர் இளங்கோவன் இந்தத் தொகுதியில இரண்டு முறை தி.மு.க சட்டமன்ற உறுப்பினராக இருந்திருக்காரு.''
பள்ளிப் படிப்பை முடித்துவிட்டு, நான்காண்டு புலவர் படிப்பு. பிறகு முதுகலைத் தமிழும், ஆசிரியப் பணிக்காக முதுகலை ஆசிரியப் பயிற்சியையும் முடித்திருக்கும் புலவர் ரத்தின மணவாளன் தமிழாசிரியாகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். ஊரில் தற்போது வசிக்கும் பெரும்புலவர்கள் இருவர். அவர்களில் ஒருவர் புலவர் ரத்தின மணவாளன். தனக்குத் தமிழ் ஈர்ப்பு ஏற்படக் காரணகர்த்தா யார் என்பதை நம்முடன் பகிர்ந்து கொண்டார்.

``எங்க அப்பா விவசாயி. ஆனா, எங்க ஊருல பல பேரு தமிழ் படிச்ச புலவர்கள். படிச்சவங்க, படிக்காதவங்கங்கிற பாகுபாடெல்லாம் இல்லை. ஊர்ல எப்போதும் சிலப்பதிகாரம், கம்ப ராமாயணம்னு பெரும் உரையாடல்கள் நடக்கும்.

‘தமிழ் எங்கள் உயிருக்கு நேர்!’- வாழ்ந்து காட்டும் ஊர்

அதையெல்லாம் சிறு வயசுலேருந்து பார்த்து வளர்ந்த எனக்கும், தமிழ்மேல பெரிய ஈர்ப்பு வந்துடுச்சு. ஆனா, தமிழ் படிச்சுப் புலவராகணும்கிற எண்ணம் பெரும் புலவர் ராமசாமி ஐயாவைப் பார்த்த பிறகுதான் ஏற்பட்டுச்சு. படிப்பு மட்டும் இல்லை. தமிழுக்காகக் கல்லக்குடி ரயில் மறியல் போராட்டத்துலேயும் கலைஞர் கருணாநிதிகூட கலந்துக்கிட்டவன் நான். துப்பாக்கிச்சூட்டுல நூலிழையில உயிர் தப்பி, வீடு வந்து சேர்ந்தேன். கோவையில நடந்த செம்மொழி மாநாட்டுலேயும் கலந்துகிட்டு உரை நிகழ்த்தியிருக்கேன்’’ எனத் தன் கடந்தகால நினைவுகளை அசைபோட்டவர், தன் வீட்டின் வாசல்வரை வந்து தன் சக தமிழ் நண்பர்களின் வீடுகளுக்குச் செல்வதற்கான வழிகளையும் நமக்குச் சொன்னார்.

1980-களிலேயே இந்த ஊரைச் சேர்ந்த 60 பேர் பல்வேறு ஊர்களிலுள்ள பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் தமிழாசிரியர்களாக, தமிழ்ப் பேராசிரியர்களாகப் பணியாற்றியிருக்கிறார்கள். அவர்கள் பலருக்கும் முன்னோடியாக இருந்தவர் பெரும் புலவர் ராமசாமி. ஆனால், அவருக்கும் முன்னர், கோவிந்தசாமி சேதுராயர், சிங்காரவேல் சேதுராயர், நற்றமிழ்ச் சங்கத்தின் தோற்றுநர் பம்பையா சேதுராயர் எனப் பல முன்னோடிகள் உண்டு. தி.மு.க-வின் முன்னோடித் தலைவர்களில் ஒருவராக இருந்த நாவலர் நெடுஞ்செழியன், சிங்காரவேல் சேதுராயரின் மாணவர் என்பது குறிப்பிடத்தக்கது.


நம்மாழ்வார் பார்பொரட்டியார், நல்ல சின்னையா 


தற்போது நற்றமிழ்ச் சங்கத்தின் தலைவராக இருப்பவர் பொன்னம்பலம். துணைத் தலைவரும், சங்கத்தின் முன்னோடிகளில் ஒருவருமான ராமசாமியின் மகனும் ஓய்வுபெற்ற தமிழாசிரியருமான இரா.முருகையன், சங்கத்தின் செயல்பாடுகள் குறித்த சில விஷயங்களைப் பகிர்ந்துகொண்டார்.

``ஒவ்வொரு வருஷமும் சித்ரா பௌர்ணமியையொட்டி, மூணு நாள் நற்றமிழ்ச் சங்க விழா நடக்கும். பாரதிதாசன், மறைமலையடிகள், உ.வே.சாமிநாத ஐயர், சோமசுந்தர பாரதி, ஆறுமுக நாவலர், கி.ஆ.பெ. விசுவநாதம்னு எங்க ஊருக்கு வராத தமிழ்ச் சான்றோர்களே இல்லை. இசை மேதைகளுக்குத் திருவையாறு மாதிரி, தமிழ் மேதைகளுக்கு எங்க ஊரு. படிக்காதவங்ககூட பகல்ல விவசாயமும் இரவுல இலக்கியத்தையும் அறுவடை செய்வாங்க. அந்த அளவுக்குத் தமிழ்ப்பித்துப் பிடிச்ச பலர் வாழ்ந்த மண் இது’’ என்றவர் தலைவர்கள் கையொப்பமிட்ட பல ஆவணங்களை நம்மிடம் காண்பித்தார்.

இந்த ஊரைச் சேர்ந்த பலர், கவிஞர்களாக, மேடைப் பேச்சாளர்களாக, கட்டுரையாளர்களாக உலகெங்கும் தமிழ் பரப்பும் பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டுக்கொண்டிருக்கின்றனர். தமிழ்ச் சபைகளை மட்டுமல்ல, தமிழ்நாட்டின் சட்டசபையையும் இந்த ஊரைச் சேர்ந்த புலவர்கள் இருவர் அலங்கரித்திருக்கிறார்கள்.

ரத்தினமணவாளன், ஆறுமுகம்

அறிஞர் அண்ணாவின் தலைமையில் 1967-ம் ஆண்டு அமைந்த சட்டப்பேரவையில், திருவையாற்றுத் தொகுதியிலிருந்து புலவர் முருகையன் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். இவர், மேடைப்பேச்சில் வல்லவர். கம்ப ராமாயணம் குறித்து இவர் நிகழ்த்தும் உரைக்குத் தமிழ்நாடெங்கும் பெரும் ரசிகர் கூட்டம் இருந்தது. இவர் நற்றமிழ்ச் சங்கச் செயலாளராகவும் பண்புரிந்திருக்கிறார்.

அவரின் பேரனும் திருச்சி ஆண்டவர் கலைக்கல்லூரியின் தமிழ்த்துறைப் பேராசிரியரும் நற்றமிழ்ச் சங்கத்தின் தற்போதைய இணைச் செயலாளருமான சின்னதுரை நம்மிடம் பேசினார்.

‘`எங்க தாத்தா கையப் பிடிச்சு வளர்ந்ததால, சின்ன வயசுல இருந்தே தமிழ் படிக்கணும்னு ஆசை. கம்ப ராமாயணத்துல ஆராய்ச்சிப் படிப்பை முடிச்சிருக்கேன். கல்லூரியில வேலை பார்த்தாலும், கம்ப ராமாயணச் சொற்பொழிவுகளுக்கும் போயிட்டு இருக்கேன்’’ என்றவர், நற்றமிழ்ச் சங்கம் இயங்கிவரும் சன்மார்க்க சபைக் கட்டடத்துக்கு அழைத்துச் சென்றார்.

‘`இங்கேதான்  நற்றமிழ்ச் சங்கக் கூட்டம் நடக்கும். பெரியார், அண்ணா, கலைஞர், நெடுஞ்செழியன்னு இங்கே வந்து போன தலைவர்கள் எத்தனையோ பேர். கலைஞரோட தமிழ் ஆசிரியர் முத்துகிருஷ்ண நாட்டார் எங்க ஊர்க்காரர்தான். கலைஞர் ஒருமுறை இங்கே ஒரு கட்டடத் திறப்பு விழாவுக்கு வந்திருந்தார். அப்போ ‘என் கையால இந்தத் தமிழ்ச்சங்கக் கட்டடத்தைத் திறப்பதைவிட என் ஆசிரியர் கையால திறப்பதுதான் சரியா இருக்கும்’னு சொல்லி அவரையே திறக்கவெச்சார். அந்த அளவுக்கு, தலைவர்களுக்குப் பிடிச்ச ஊரா எங்க ஊர் இருந்திருக்கு. எங்க ஊர்ல மட்டும் பத்துக்கும் மேற்பட்ட புலவர் பெருமக்கள் வாழ்ந்திருக்காங்க’’ என்றவர், ஊரில் எதிர்ப்படும் அனைவரிடமும் மிக அன்பாகவும் கனிவாகவும் நலம் விசாரித்தபடியே ஒரு பாழடைந்த வீட்டுக்கு நம்மை அழைத்துச் சென்றார். அங்கு நமக்கு மற்றுமோர் ஆச்சர்யம் காத்திருந்தது.

இளங்காடு, தமிழ் வளர்த்த ஊர் மட்டுமல்ல; பசுமையைக் காக்கத் தன் வாழ்நாளெல்லாம் போராடிய `இயற்கை வேளாண் விஞ்ஞானி’ நம்மாழ்வாரின் சொந்த ஊரும்கூட. 

தற்போது அந்த வீட்டில், நம்மாழ்வாரின் அண்ணன் மகன் பூமிநாதன் பார்பொரட்டியார் வாழ்கிறார். அவரிடம் நம்மை அறிமுகப்படுத்திக்கொண்டோம்.

‘`எங்க அப்பா பொறியாளர் பாலகிருஷ்ணன், சித்தப்பா நம்மாழ்வார் ரெண்டு பேரும் இயற்கை ஆர்வலர்கள். எங்க அப்பாவும் ஊர்ல இயற்கை விவசாயம்தான் பார்த்தாரு. எங்க பெரியப்பா புலவர் இளங்கோவன் இந்தத் தொகுதியில இரண்டு முறை தி.மு.க சட்டமன்ற உறுப்பினராக இருந்திருக்காரு. அவர் கணித ஆசிரியரா இருந்தாலும், தமிழ் மேல தீவிரப் பற்றுள்ளவர். சிலப்பதிகாரம், பாரதிதாசன் கவிதைகளில் எல்லாம் கைதேர்ந்தவர். நற்றமிழ்ச் சங்கப் பொறுப்பிலேயும் இருந்திருக்காரு. நான் எங்க அப்பா, சித்தப்பா வழியில விவசாயம் பார்த்துட்டிருக்கேன். நற்றமிழ்ச் சங்கச் செயல்பாடுகளிலும் கலந்துக்குவேன்’’ என்றார்.

அவரின் இல்லத்திலிருந்து வெளியேற, `பளிச்’ உடையில் நம்மிடையே அறிமுகமானார்கள் கவிஞர் நல்ல சின்னையாவும், பேராசிரியர் ஆறுமுகமும்.

அரசுப் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராகப் பணியாற்றும் நல்ல சின்னையா, இதுவரைக்கும் நான்கு நூல்களையும் எழுதியிருக்கிறார். பள்ளியில் தமிழாசிரியர் விடுமுறை என்றால், மாணவர்கள் கொண்டாட்டமாக இருப்பார்களோ இல்லையோ, நல்ல சின்னையா கொண்டாட்டமாகிவிடுவார். தமிழ் வகுப்பெடுப்பதென்பது அமிழ்தைப் பருகுவது போன்றது. சின்னையா ஒரு பள்ளியிலிருந்து மற்றொரு பள்ளிக்கு மாற்றாலாகிச் செல்கிறார் என்றால் அவர் உடற்கல்வியில் மட்டுமல்ல, தமிழிலும் பட்டையைக் கிளப்புவார் என்கிற செய்தி அவருக்கு முன்பே அந்தப் பள்ளிக்குச் சென்றுவிடும். தான் மட்டுமல்லாமல், தன் மகன் வைரமுத்துவையும் கவிப்புலமையூட்டி வளர்த்துவருகிறார்.


இரா.முருகையன், சின்னதுரை


பேராசிரியர் ஆறுமுகம், திருவெறும்பூர் அரசுக் கலைக் கல்லூரியில் தமிழ்த்துறையில் பணியாற்றுகிறார். நற்றமிழ்ச் சங்கத்தின் செயலாளராகவும் இருக்கிறார். `கல்வெட்டியல் பாடக் குறிப்புகள்’, `இலக்கியக் கல்வியியல்’, `தொல்காப்பியமும் உளவியலும்’, `வேரும் விழுதும்’ என நான்கு புத்தகங்களை எழுதியிருக்கிறார்.

ஊரில் பெரும்பாலானவர்கள் ஒருவருக் கொருவர் உறவினர்கள் என்றாலும், பெரும்பாலும் அவர்களின் உரையாடல்கள் தமிழ் குறித்தே இருக்கின்றன.

25-க்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளைச் சமர்ப்பித்து, பலமுறை `சிறந்த கட்டுரையாளர்’ விருதையும் பெற்றிருக்கிறார்.

`நாங்களும்  சளைத்தவர்கள் அல்லர்’, என ஆண்களுக்குச் சமமாக பேராசிரியைகளும், பள்ளித் தலைமை ஆசிரியைகளும், தமிழ் படித்து அரசு வேலைகளுக்குத் தேர்வெழுதும் பெண்களும் நிரவியிருக்கிறார்கள் இந்த ஊரில். 

இந்த ஊரில் பிறந்த பெண்கள் மட்டுமல்ல; இந்த ஊருக்குத் திருமணமாகி வந்து, பிறகு தமிழ் படித்து ஆசிரியர்களான பெண்களும் பலர் இங்கே இருக்கிறார்கள். அவர்களில் ஒருவரும், இளங்காட்டு ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியின் தலைமையாசிரியருமான அமுதவல்லி நம்மிடம் பேசினார்.

``என் கணவர் முருகேசப்பிரபு, நற்றமிழ்ச் சங்கத்தின் பொருளாளரா இருக்கார். திருமணத்துக்கு முன்பே தமிழ்ப்பற்று இருந்தாலும், ஆசிரியர் பயிற்சி மட்டும்தான் முடிச்சிருந்தேன். திருமணத்துக்குப் பிறகு, என் கணவரோட உந்துதலாலதான் தமிழ் படிச்சேன். இந்த ஊருல அஞ்சு பேருல ஒருவர் தமிழ் படிச்சவங்களா இருப்பாங்க. ஆனா, அஞ்சு பேருமே தமிழைப் பற்றி அறிஞ்சவங்களா இருப்பாங்க. படிக்காதவங்ககூட கம்ப ராமாயண, சிலப்பதிகாரப் பாடல்களை, ஆழ்வார் பாசுரங்களையெல்லாம் சிறப்பாப் பாடுவாங்க. இந்த ஊரோட மகத்துவம் அப்படி...’’

இப்படி ஊரில் நாம் சந்தித்த பெரும்பாலானோர் ஏதோவொரு வகையில் தமிழ்த் தொண்டாற்றி வருகிறார்கள். பல அரிய வகைத் தமிழ் நூல்களையும் கடிதங்களையும் பத்திரமாகப் பாதுகாத்துவருகிறார்கள். டிஜிட்டல் யுகத்துக்கேற்ப நற்றமிழ்ச் சங்கத்தை அடுத்தகட்டத்தை நோக்கி நகர்த்துவதற்கான வேலைகளை எல்லோருமே செய்துவருகிறார்கள்.

தமிழ் படித்ததாலோ என்னவோ, ஊரில் அனைவரும் ஒருவருக்கொருவர் மிகுந்த மரியாதையோடு நடந்துகொள்கிறார்கள். யார், எங்கு, எந்தப் பதவியிலிருந்தாலும், ஊரில் அனைவரும் தமிழ்ப் பிள்ளைகளாக தமிழ்த்தாய்க்கு அருந்தொண்டாற்றி வருகின்றனர். ஊரில் பெரும்பாலானவர்கள் ஒருவருக்கொருவர் உறவினர்கள் என்றாலும், பெரும்பாலும் அவர்களின் உரையாடல்கள் தமிழ் குறித்தே இருக்கின்றன. அந்தளவுக்குத் தமிழ்க்காதலில் திளைத்து, தமிழை என்றும் இளமையோடு பார்த்துக் கொள்கிறது ‘இளங்காடு’ கிராமம்.

மாநிலங்களவை உறுப்பினரும் தி.மு.க-வின் கொள்கைபரப்புச் செயலாளருமான திருச்சி சிவாவின் பூர்வீக ஊரும் இளங்காடுதான். ஊர் குறித்த, தன் அனுபவங்களை நம்மிடம் பகிர்ந்துகொண்டார் அவர்.


திருச்சி சிவா 

``எங்களுக்குப் பூர்வீகம் இளங்காடுதான். எங்க தாத்தா காலத்துக்குப் பிறகு, நாங்க திருச்சிக்குக் குடிபெயர்ந்துட்டோம். ஆனா, எங்க குலதெய்வக் கோயிலுக்குக் குடும்பத்தோடு போவோம். எங்க ஊரோட சிறப்பு என்னன்னா, ஊர்ல இருக்கும் ஆண்கள், பெண்கள் எல்லாருமே சிறப்பாப் பாடுவாங்க. முன்னாள் எம்.எல்.ஏவா இருந்த முருகையன் எல்லா மேடைகளிலேயும் பாட்டு பாடிட்டேதான் பேசுவார். நானும்கூட நல்லாப் பாடுவேன். எங்க ஊரு மக்களுக்கு இயற்கையாகவே கிடைத்த ஞானம் அது.

அதேபோல எங்க ஊர்ல பிறந்த எல்லாருக்கும் தமிழார்வம் அதிகம். நற்றமிழ்ச் சங்கம்தான் அதற்குக் காரணம். பல்வேறு தலைவர்கள் அங்கே வந்திருக்காங்க. அவங்க கையெழுத்தையெல்லாம் நான் பார்த்திருக்கேன். அங்கே கலந்துகிட்டுக் கையெழுத்துப் போடும்போதுதான் வருஷத்தை எழுதும்போது, கடைசி இரண்டு எண்ணை மட்டும் எழுதாம மொத்தமா எழுதணும்னு கத்துக்கிட்டேன். உதாரணமா, 1919-ம் வருஷம் கையெழுத்திட்ட பிரதிகள் அங்கே இருக்கு. நூற்றாண்டுக்குப் பிறகு நான் அதைப் பார்க்கிறேன். வெறும் 19ன்னு எழுதியிருந்தா, அந்த உணர்வு எனக்குக் கடத்தப்பட்டிருக்காது. நான் எழுதும்போது ‘இன்னொரு நூறாண்டுக்குப் பிறகு என் கையெழுத்தை ஒரு தமிழன் பார்ப்பான்’னுதான் கையெழுத்திட்டேன். என்னுடைய தமிழார்வத்துக்கும் இசையார்வத்துக்கும் எங்க பூர்வீகம்தான் காரணமாக இருக்கு’’ எனச் சொல்லிச் சிலிர்க்கிறார் திருச்சி சிவா.


தினமணி கட்டுரை 


"இங்கிலீஷ்ல பேசு இல்லாட்டி நீ தூசுனு' தத்துவம் பேசும் இக்காலத்தில், தமிழ் வழியில் மட்டுமே பயின்று, ஆசிரியர், கவிஞர் என்று பல சிறப்புகளைச் சுமந்தபடி இருக்கிறது இக்கிராமம். இங்கு வீட்டுக்கு ஒருவர் என்று சுமார் 250 பேர் தமிழ் வழியில் கல்வி பயின்று பட்டம் பெற்றவர்கள்.

இக்கிராமத்தில் "நற்றமிழ்' சங்கம் "தமிழ் நாற்றங்கால்கள்' போன்ற சங்கங்கள் செயல்பட்டு வருகிறது தான் இக்கிராமத்தின் சிறப்பு. "நற்றமிழ்' சங்கத்தை பற்றி அவ்வமைப் பின் செயலர் வெங்கடேசனிடம் உரையாடிய திலிருந்து...

இந்த சங்கம் எப்போது தோன்றியது. அதன் சிறப்பு என்ன?

இச்சங்கம் 1881-ம் ஆண்டு ஆரம்பித்து 100 ஆண்டுகளை கடந்து விட்டது. இச்சங்கத்தை ஆரம்பித்தவர் பாண்டித்துரை தேவர். ஆரம்பித்த காலத்தில் உ.வே.சாமிநாத ஐயர், பாரதிதாசன் போன்ற அறிஞர்கள் இங்கு வந்து தமிழ் உரையாற்றிச் சென்றிருக்கிறார்கள். இந்த மண்ணுல செருப்பு படக் கூடாதுன்னு, தான் போட்ட செருப்பை கையில் சுமந்தபடி இந்த ஊருக்குள்ள வந்தார் உ.வே.சாமிநாத ஐயர்.

இச்சங்கம் பற்றி?

இச்சங்கத்தில் படித்தவர்கள் மட்டுமில்லாமல் பாமரர்களும் உறுப்பினராக உள்ளனர். இச்சங்க கூட்டம் மாதத்தில் பௌர்ணமி நாளில் மட்டுமே கூடுவது வழக்கம். இவ்வூரில் உள்ள வாலைவன நாதர் கோயில் முகப்பு மண்டபத்தில் தான் கூட்டம் கூடும். தமிழில் பயின்றவர்களும் சரி, ஆர்வலர்களும் சரி, எந்த ஊரில் இருந்தாலும் இக்கூட்டத்தில் வந்து கூடுவர்.

இச்சங்கத்தில் உறுப்பினராக சேர தகுதி உண்டா?

இதற்கு  தகுதி என்று எதுவுமில்லை. தமிழின் மீது ஆர்வமும், பற்றும் இருந்தால் மட்டுமே போதும். இதில் எங்க ஊரில் உள்ளவர்கள் மட்டுமல்லாமல், மதுரை, திருச்சி போன்ற நகரங்களில் இருந்து தமிழார்வலர்கள் "நற்றமிழ்' சங்கம் கூட்டத்தில் பங்கு பெற்றுள்ளனர்.

இந்த ஊரில் உள்ளவர்கள் தமிழைப் போற்றி பாதுகாத்து வருவதற்கு என்ன காரணம்?

இவ்வூரில் உள்ள திரௌபதி அம்மன் கோயிலில் விழாக் காலங்களில் மகாபாரதம், இராமாயணம் போன்ற இதிகாசங்களின் கதைகளைப் பாடலாகப் பாடி விளக்குவர். இது முற்றிலும் பாமரர்களால் அரங்கேற்றப்படும். அதுமட்டுமில்லாமல் சிலப்பதிகாரத்துக்கு உரை எழுதியவர்களுள் சிங்காரவேல் சேதுராயர், தமிழார்வலர் நா.மு.வேங்கடசாமி நாட்டார், கம்பராமாயண வித்தகர் க.முருகையன் துறவி கோ.இளங்கோவன் இக் கிராமத்தைச் சேர்ந்த வர்கள்தான். அவ்வழியில் பலருக்கு தமிழின் மீது அதீத ஆர்வம் ஏற்படவே அதன் பேரில் உருவாக்கப்பட்டது தான் "நற்றமிழ்' சங்கம் என்ற அமைப்பு. இதில் படித்தவர்கள் என்று அல்லாமல் தமிழ் மீது ஆர்வமும், பற்றும் உள்ளவர்கள் கூட இச்சங்கத்தில் சேர்ந்து தமிழை வளர்க்க உறுதுணையாக இருந்துள்ளனர்.

அதுமட்டுமில்லாமல் இச்சங்கம் ஆரம்பித்த காலத்தில் கூட்டத்தில் கலந்து கொண்ட தமிழார்வலர்கள் பலர் இவ்வூரைப் பற்றி              பாடல்கள் பாடி இருக்கிறார்கள். அந்தப்             பாரம்பர்யம்தான் இந்த ஊர் மக்களிடம் தமிழைப் போற்றும் மரபை உருவாக்கியிருக்கிறது.

""முத்தமிழ் சங்கம் வைத்து உயர்ந்த மா மதுரை தன்னை

வென்றதே இளங்காடு என்று

விழைந்தனர் வேந்தர் அன்றே''

இந்த மாதிரி சிறப்பு வாய்ந்த பாடல்கள் எல்லாம் உண்டு.

இந்த ஊரில் பிறக்கும் குழந்தைகளுக்குத் தூய தமிழில் பெயர் வைப்போம். அந்த அளவுக்கு இங்க உள்ள மக்களுக்குத் தமிழின் மீது பற்றும், அதைப் படிப்பதனால் பெருமையும் உண்டுனு சொன்னவர் அக்கூட்டத்தில் இருந்த கலியமூர்த்தி (49) என்பவரை சுட்டிக்காட்டி இவர் 5-ம் வகுப்பு வரைதான் படிச்சவரு. ஆனா இவருக்கு மகாபாரதம் பாடல்கள் எல்லாமே அத்துப்படி.



இந்த ஊரின் சிறப்பு பற்றி?

எங்க ஊருல இருக்கும் வாலைவன நாதர் கோயிலின் மாதிரி வடிவம்தான் தஞ்சாவூர்ல இருக்கும் பெரியகோயில். அதைப் பற்றி கல்வெட்டு ஆராய்ச்சியாளர் குடவாயல் பாலசுப்பிரமணியன் தம் புத்தகத்தில் குறிப்பிட்டு இருக்கிறார்.

மற்றொரு சங்கமான "தமிழ் நாற்றங்கால்கள்' சங்கத்தின் உறுப்பினராக இருக்கும் வினோதாவிடம் பேசியதிலிருந்து...





இச்சங்கம் உருவாகக் காரணம்?

"நற்றமிழ்' சங்கத்தை தொடர்ந்து உருவாக்கப்பட்டது தான் "தமிழ் நாற்றங்கால்கள்' சங்கம். படித்து முடித்தவுடன் பழைய நேசங்களையும், சிநேகங்களையும் மறப்பவர்கள் நம்மில் ஏராளம். ஆனால் படிப்பையும் சிநேகத்தையும் வளர்ப்பதற்கென்றே படித்தவர்களால் உருவாக்கப்பட்டதுதான் இச்சங்கம்.

இச்சங்கம் எப்போது கூடும்?

இச்சங்கம் அதிகம் கூடுவது கிடையாது. இந்த ஊரில் நல்லது, கெட்டது என்று எது நடந்தாலும் நாங்களே கவிதை எழுதி பாடுவோம். அந்த மாதிரி நேரங்களில்தான் இச்சங்கம் கூடுவது வழக்கம்.

"தமிழ் நாற்றங்கால்கள்' சங்கத்தைச் சேர்ந்தவர்கள் அனைவரும் "நற்றமிழ்' சங்கத்தில் உறுப்பினராக உள்ளவர்கள். அதனால் "நற்றமிழ்' சங்கம்கூடும் போதும் எங்கிருந்தாலும் எல்லாரும் வந்துடுவோம்.

சங்கம் கூடும்போது எதைப் பற்றிய  பேச்சுக்கள் அதிகம் தென்படும்?

மகாபாரதம், இராமாயணம் போன்ற பாடல்களில் இருந்தும், கவிதைகளில் இருந்தும் விவாதங்கள் நடைபெறும். தமிழை போற்றும் விதத்திலும் மேடைப் பேச்சுகள் அதிகம் இடம் பெறும். மாலை 6 மணிக்கு திருக்குறள், இராமாயணம் பாடல் களைப் பாடி அதற்குரிய விளக்கங்களை அவரவர் பாணியில் தெளிவாக விளக்கி கூறுவர். அதைக் கேட்க ஊரில் உள்ளவர்களும், வயற்காட்டில் வேலை பார்த்துட்டு வருகிறவர்களும் இங்கு வந்து விடுவார்கள்.

இதற்கான செலவுகள் பற்றி..?

இச்சங்கம் உருவாகவும், இன்று வரை அது அழியாமல் இருக்கவும் எங்க ஊர்காரங்கதான் பாடுபட்டு இருக்காங்க. மத்தபடி நாங்க அரசாங்கத்திடம் எந்த வித உதவிக்கும் நாடிச் சென்றதில்லை.




திங்கள், 7 அக்டோபர், 2019

வல்லத்தரையர்


தஞ்சை இன்று அதிகம் போற்றப்பட்டாலும் வல்லம் பழமை மிக்க ஊர் என்பது தமிழ்ப் பல்கலைக்கழகம் மேற்கொண்ட அகழாய்வுகளின் முடிவில் தெரியவருகிறது. 1989-93 ஆம் ஆண்டுகளில் தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்துத் தொல்லியல் வல்லுநர்கள் வல்லத்தில் நிகழ்த்திய அகழாய்வுப் பணிகளால் கீ.மு.170, கி.பி .610, கி.பி.830 ஆகிய ஆண்டுகளுக்குரிய வரலாற்றுத் தடையங்கள் பலவற்றை வெளிக்கொண்டுள்ளார். அவற்றில் தொல்பழங்காலத்து எழுத்துக்கள் பொறிக்கப்பெற்ற கருப்பு, சிகப்பு வண்ண பானை ஓடுகளும் அடங்கும்.

ஈராயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட சங்க கால அரசர்களின் கோட்டைகளின் மதில், அரண், அகழி ஆகியவை பற்றி ஆராய முற்படும்போது, தமிழகத்தில் இரண்டு இடங்களில் மட்டுமே அவற்றின் எச்சங்கள் இன்றளவும் காணப்பெறுகின்றன. 


புதுக்கோட்டைக்கு அருகிலுள்ள கள்ளர் குடியின் காங்கேயரின் பொப்பண்ணக்கோட்டை, வட்ட மதிலரண், அகழி ஆகியவற்றுடன் திகழ்கின்றது. அடுத்து தஞ்சாவூருக்கு அருதேயுள்ள வல்லத்தில் மட்டுமே நீள்வட்ட வடிவில் திகழும் பழைய அகழியின் எச்சங்களைக் காணலாம்.

அந்த கோட்டைக்குள் ஒரு பழமையான சிவாலயமும், பிற்காலத்திய விக்கிரம சோழ விண்ணகரம் எனும் திருமால் ஆலயமும், கோட்டைக்கு வடக்கே வடவாயிற்செல்வியான கரிகாற்சோழ மாகாளி என்ற திருநாமமுடைய தேவியின் திருக்கோயிலும் இன்றளவும் பழமைச் சுவடுகளைச் சுமந்தவண்ணம் திகழ்கின்றன.


ஆலயத்தில் தொடரும் கள்ளர் மரபினரின் வல்லத்தரசுகளின் அறப்பணி:-




கள்ளர் மரபினரின் வல்லத்தரசு மற்றும் வல்லத்தரையர்களின் கோட்டை கொத்தளங்கள் இருந்த இடம் மண்மேடாக !!!!



(வல்லம்,தஞ்சை)














தமிழகத்திலுள்ள வரலாற்றுச் சிறப்புடைய பேரூர்களின் குறிப்பிடத்தக்க பெருமைகள் வாய்ந்த பேரூர் தஞ்சாவூருக்கு அருகில் உள்ள வல்லமாகும் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, கடைச் சங்க காலத்தில் நிகழ்ந்த சோழ நாட்டுக் கோநகரங்களான பூம்புகார், உறையூர், ஆரூர், ஆவூர், ஆற்காடு, குடவாயில் எனும் நகரங்களின் வரிசையில் வல்லமும் ஒன்று என்பதனைச் சங்கப் பாடல்கள் வாயிலாகவும் அறிய முடிகிறது.


வல்லபன் என்ற சோழ அரசன் ஆட்சிக்கு வந்தபிறகு இப்பகுதி வல்லம் என்று பெயர் பெற்றதாகவும், ஏரிகளும் குளங்களும் மிகுந்த இவ்வூரை 'ஏரியூர் நாட்டுக் கருவுகுல வல்லம்' என்றும் 'பாண்டிய குலாசனி வள நாடு' என்றும் சோழர் காலத்தில் அழைத்தனர்.


கங்கைக்கொண்ட ராஜேந்திர சோழனின் செப்பேட்டுச் சாசனத்தில், ராஜேந்திர சோழனின் முன்னோர்களைப் பற்றி கூறும் இடத்தில் கரிகாற்சோழனுக்கு முன்னவனாக வல்லப சோழன் என்பான் வல்லபபுரி எனும் வல்லம் நகரத்தைத் தோற்றுவித்து அங்கிருந்தவாறு அரசு மேற்கொண்டான் என்று கூறப்பெற்றுள்ளது.


ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பெற்ற சங்கத்தமிழ் நூல்களில் தஞ்சை பற்றிய குறிப்புக்கள் கிடையாது. கி.பி. ஏழாம் நூற்றாண்டு முதல்தான் தஞ்சாவூர் நகருக்கு வரலாறு தொடங்குகின்றது. ஆனால் 2200ஆண்டுகளுக்கு முன்பிருந்தே வல்லத்தின் பெருமை பேசப்பெறுகின்றது.

அகநாநூற்றின் பாடல் எண்.356 பரணர் எனும் புலவரால் பாடப் பெற்றதாகும். அப்பாடலில்,

"....... நற்றேர்க்
கடும்பகட்டி யானைச் சோழர் மருக
னெடுங் கதிர் நெல்லின் வல்லங்கிழவோ
னல்லடி யுள்ளனாவும் ....."  

என்று குறிப்பிட்டுள்ளார். 

இவ்வடிகள் வாயிலாக நல்ல தேரையும், கொடிய வலிமையுடைய ஆண் யானையையும் உடைய நல்லடி என்பானின் ஊராகிய வல்லம் நல்ல தெற்கதிர்கள் விளையும் ஊராக விளங்கியது என்பதை அறியமுடிகிறது.

வல்லம் எனும் ஊர் வல்லம் கிழவன் நல்லடி போன்ற சோழ மரபியல் ஆளபபெற்ற ஊர் என்பது அது கோநகரமாக விளங்கியதால் பாதுகாப்புமிக்க காவற்காடுகளைப் பெற்றுத் திகழ்ந்தது என்பதும் உறுதி பெறுகின்றது.

தொல்காப்பியம் எனும் சங்க காலத்தமிழ் இலக்கண நூலுக்கு உரை ஏழுதிய நச்சினார்க்கினார் அகத்திணை இயல் 30 ஆம் சூத்திரத்தின் உரையில், 

"சோழ நாட்டுப் பிடவூரும், அழுத்தூரும், நாங்கூரும், கலன்சேரியும் "
பெருஞ்சிக்கலும், வல்லமும், கிழாரும் முதலிய பதியிற் தோன்றி ......"

என்று குறிப்பிடுவதை நோக்கும் போது வல்லம் என்ற ஊரின் பெருமையினையும் முக்கியத்துவத்தையும் உணரமுடிகின்றது.


வல்லம் என்னும் கோட்டை கள்ளரில் ஒரு வகுப்பாருடைய தலை நகரமாகச் சிறந்திருந்தது. வல்லத்தில் இருந்து ஆட்சி செய்தவர்களின் மரபினர் வல்லமாண்டார், வல்லத்தரையர் என்றும் வல்லத்தரசு என்றும் அழைக்கப்பட்டனர். இன்றும் வல்லத்தரசு, வல்லத்தரசர், வல்லத்தரையர், வல்லாண்டார், வல்லக்கோன் வல்லங்கொண்டார், வல்லுண்டார் பட்டமுடைய மரபினர் வல்லத்தில் வாழ்ந்து வருகின்றனர்.

பாச்சிள்வேள் நம்பன் தான் பாடிய பாடலொன்றில் பெரும்பிடுகு முத்தரையனாயின சுவரன்மாறனை "வல்லக்கோன்" என்கிறார்.


வல்லத்தரசு (வல்லத்து+அரசர்) பொருள்படும்.  வல்லாண்டான்பட்டி முழுவதும் வல்லாண்டார் பட்டமுடைய  கள்ளர் மரபினர் வாழ்ந்து வருகின்றனர்.


கள்ளர்நாடுகளில் விசங்கிநாட்டின் உள்நாடான வடமலைநாடு கொப்பம்பட்டி. கள்ளர்களின் வல்லத்தரசு மரபினரே ஊர் அம்பலக்காரர்களாக உள்ளனர்.

புதுக்கோட்டை, விசங்க நாடு கொப்பம்பட்டி அம்பலகாரர்
















ஶ்ரீ ஆண்டியப்ப ஐயனார் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வேடத்தில் வலம்வரும் திருவிழா இங்கு நடைப்பெறும். 


புரட்சியாளர் வ.முத்துசாமி வல்லத்தரசு அவர்கள் கொப்பம்பட்டி வடமலைநாட்டை சேர்ந்தவர். கொப்பம்பட்டி வல்லத்தரசு மரபினருக்கு சந்திவீரன் குலதெய்வமாக உள்ளார்.



ஊராட்சி தலைவர் கண்டியப்ப வல்லத்தரசு 



தஞ்சை நரிய பட்டியின் இரண்டாம் கரைக்கு உரியவர்கள்  வல்லத்தரசு மரபினர் ஆவார்கள்.  


நரிய பட்டி ஊருக்கு மிகப்பெரிய வழி காட்டியாக இருந்தவர்  மிராஸ்தாரர் சுப்பிரமணியண் வல்லத்தரசு.




அருள்மிகு ஸ்ரீ ஏகௌரியம்மன் திருக்கோவில்,  வல்லம்


ஊர்: வல்லம், மகாகாளிவனம்
மூலவர்: ஏகௌரியம்மன்/வல்லத்துக்காளி-8கரங்கள்
பிறசன்னதிகள்: மதுரைவீரன், கருப்புசாமி, முருகன்










கி.பி.850 இல் விஜயாலய சோழன் தஞ்சையைத் தலைமையிடமாகக் கொண்டே பிற்காலச் சோழப் பேரரசை நிறுவினான். கி.பி.1279 வரை தொடர்ந்த சோழராட்சிக் காலம் முழுவதும் வல்லம் அவர்களது கோநகரமாகவே விளங்கியது. முதற்பாரந்தகச் சோழனின் நாற்பதாம் ஆட்சியாண்டில் (கி.பி.947 இல்) அப்பேரரசனின் அலுவலகர்களில் ஒருவனான அனந்தன்காரி எனும் பராந்தக முத்தரையன் வல்லதுப் பட்டராகிக்கு (ஏகௌரி அம்மனுக்கு) வழங்கிய கொடை பற்றிய ஏகௌரி அம்மன் கோயிலிலுள்ள கல்வெட்டொன்று எடுத்துக் கூறுகிறான். ஏகௌரி அம்மன் கோவில் பண்டு "கரிகாற்சோழ மாகாளி கோவில்" எனவும் விஷ்ணு கோவில் "விக்கிரம சோழ விண்ணகரம்" எனவும் அழைக்கப் பெற்றதை அதிருக்கோவில்களில் உள்ள கல்வெட்டுக்கள் மூலம் அறிய முடிகிறது.



வல்லப சோழன் காலத்தில் வழிபடப்பட்டு, கரிகாற் சோழ மன்னனால் கரிகாற் சோழ மாகாளி என்றும், பராந்தக சோழனால் வல்லத்துப் பட்டாரகி என்றும், இராஜ ராஜ சோழனால் காளாபிடாரி கைத்தலைப் பூசல் நங்கை என்றும் அழைக்கப்பட்டு வந்தவள். சோழ மன்னர்கள் அரசு சம்பந்தமான முக்கிய முடிவுகள் எடுக்கும்போதும், வெற்றி வாகை சூட போர்க்களம் செல்லும் போதும் இந்த தேவியிடம் அருள் வாக்கு கேட்டு உத்தரவு பெற்ற பின்னரே செயல்படுத்துவது வழக்கம்.








தஞ்சைப் பெரிய கோவிலிலுள்ள முதலாம் இராஜராஜ சோழனின் கல்வெட்டுக்களில், அம்மன்னன் திருவிளக்கு தானாங்களுக்காக வல்லத்தில் இருந்து இடையர்களிடம் கால்நடைச் செல்வங்களை வழங்கி இருந்தான் என்ற செய்தி கூறப் பெற்றுள்ளது. இதுபோன்றே வல்லம் ஏகௌரி அம்மன் கோயிலுள்ள முதலாம் இராஜ ராஜசோழனின் ஆறாவது ஆண்டு (கி.பி.991) கல்வெட்டில் விண்ணனேரி கைத்தலைப்பூசல் நங்கைக்கு அளித்த நிலக்கொடை பற்றி கூறுகிறது. அப்பேரரசன் காலத்தில் "கைத்தலைப் பூசல் நங்கை " என அழைக்கப் பெற்றவளே தற்போதைய ஏகௌரி (ஏகவீ ரி) அம்மன் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.


வல்லம் மற்றும் ஆலக்குடி வாழ் கள்ளர்களுக்கும் இக்கோவிலில் மரியாதை வழங்கப்படுகிறது.



குலசேகர தேவரின் கல்வெட்டில் முன்பு இவ்வூரில் நிகழாத ஒரு விழாவினை ஆடி மாதந்தோறும் பெருந்திருவிழாவாகக் கொண்டாடவும், இறைவனின் திருவுருவத்தை வீதி உலா கொண்டு வருவதற்கும், மற்ற செலவுகளுக்குமாக அளிக்கப்பட்ட அதற்கொடைப்பற்றி விவரிக்கின்றது. வல்லத்து சிவாலயத்தின் பெயர் குலசேகரமுடைய நயினார் கோவில் என்று கூறப்பெற்றுள்ளது. இப்பெயர் முன்பு இருந்த கோயிலின் பெயரான கரிகாற் சோழீஸ்வரமுடையார் என்பதை மாற்றிவிட்டு பாண்டிய மன்னன் பெயரில் குலசேகரமுடைய நயினார் கோவில் என்ற புதிய பெயர் சுட்டப்பெற்றிருக்க வேண்டும் எனக் கருதமுடிகிறது.


முதல் பராந்தக சோழனின் நாற்பதாம் ஆட்சியாண்டில் (கி.பி. 947ல்) அப்பேரரசனின் அலுவலர்களில் ஒருவனான அனந்தன்காரி எனும் பராந்தக முத்தரையன் வல்லத்து பட்டாரிகைக்கு வழங்கிய கொடை பற்றி கூறப்பெற்றுள்ளது.


செவ்வப்ப நாயக்கர் கி.பி.1535 தஞ்சைக்கு அரசரானார். இவர் அரசாளும் போது இவரது மகன் அச்சுதப்ப நாயக்கரும் இளவரசராக இணைந்து அரசுச் செலுத்தினர். இவர்களுக்குப் பிறகு அச்சுதப்ப நாயக்கரின் மகனான இரகுநாத நாயக்கரும் தொடர்ந்து அவரது மகனான விஜயராகவ நாயக்கரும் கி.பி.1675 வரை ஆட்சி செய்தனர்.


இவர்கள் ஆட்சி முழுவதும் வல்லம் நகரம் மிகப் சிறந்த முக்கியத்துவம் பெற்றுத் திகழ்ந்தது. இவர்களது முக்கிய கோட்டை கருவூலம் மாளிகைகள் ஆகியவை அகழி சூழ்ந்த வல்லம் கோட்டைக்குள்ளேயே இருந்தன. பிஜப்பூர் தளபதிகளான மராத்தியர் சாகஜி, மற்றும் முகம்மதுகான் என்கிற முல்லாவும் தஞ்சையை சூரையாடுகிறார்கள். அப்போது ஆண்ட விஜயராகவ நாயக்கர் காட்டில் சென்று மறைந்து கொள்கிறார்.

அப்போது வல்லம் கோட்டையிலிருந்த கருவூலத்தை கள்ளர்கள் காட்டுப்பகுதியில் வைத்து காக்கின்றனர். இதனால் முல்லாவுக்கு பெருத்த ஏமாற்றம்‌. இவர்கள் சென்ற பிறகு கருவூலத்தை மீண்டும் வல்லம் கோட்டையில் விஜயராகவ நாயக்க மன்னரிடம் அளித்தனர் கள்ளர்கள். (La Mission de Madura c.Vol.3.Pg:119).







தஞ்சை வந்த முகலாய பெரும் படைக்கு அப்போது தஞ்சை ஆண்ட நாயக்கர் படையை விட கள்ளர் படைப்பற்றை பார்த்து அஞ்சி நிலைகுலைந்து போகிறார்கள்.



விசங்கி நாடு புதுக்கோட்டையின் வடக்கில் அமைந்துள்ளது. புதுக்கோட்டை நகரத்தில் இருந்து 10 மைல் வடக்கில் தொடங்கி வடக்கில் வல்லம் மற்றும் செங்கிப்பட்டி வரை நீண்டுள்ளது. விசங்கி நாடு பல உள் நாடுகளை கொண்டது.


ஜல்லிக்கட்டு வல்லத்து மாடுகள் " பசுக்கிடைமாடு" என அழைக்கப்பட்டுள்ளது.








'வல்லத்துக் கோட்டை விழுந்தால் தஞ்சாவூர்க் கோட்டை தானே விழும்' என்று பழமொழிக்கு எற்ப இருக் கோட்டைகளும் ஒருவர் ஆட்சியிலேயே இருந்துள்ளது. சங்க காலம் தொடங்கி இன்று வரை பல வகையில் சிறப்பாக விளங்கியுள்ளது வல்லம். ஆனால் வல்லம் கோட்டையை பற்றி வரைபடங்களோ அல்லது மற்ற குறிப்போ தொல்லியல் தடயங்களாக கிடைக்காதது ஓர் குறையே. வல்லத்துக் கோட்டையை பற்றி ஆங்கிலேயர்கள் 1906ல் எழுதிய குறிப்பின் படி 780 கெஜம் [714 மீட்டர்] நீளமாகமும் 520 கெஜம் [475மீட்டர்] அகலாகமாகவும் கோட்டை முட்டை வடிவில் இருந்ததாகவும், வடகிழக்கில் சிறிய மதில் இருப்பதாகவும் மற்ற இடங்களில் மதில்கள் இல்லை என்றும், அகழி பல இடங்களில் நன்றாக இருப்பதாகவும் தெரிகிறது. கோட்டையிருந்து அழிந்த பகுதியில் தற்போது பெரியார் கல்விக்கூடமுள்ளது.












பழங்கால முருகன் கோவில், இங்கிருந்து வல்லம்கோட்டைக்கு சுரங்கப்பாதை உள்ளதாக கூறுகிறார்கள்.

சுரங்கத்தினுள்ளே இருந்த முருகன் திருவுருவ சிலையை வெளியே எடுத்து பிரதிஷ்டை செய்து வருகிறார்கள்.
சுரங்கத்தையும், சிலையின் வடிவமைப்பையும் காண்கையிலே இதன் பழைமை புலப்படுகிறது.

இடம்:- தச்சன்குறிச்சி,செங்கிப்பட்டி (கொற்கைநாடு







































கள்ளர் - கள்ளர்கள் - யார் கள்ளர் சாதியினர் - Who are the Kallars - Who are the Kallar caste

ஆங்கிலேயர்கள்,  கள்ளர்களை  சென்னை மாகாணத்தில் 1911-ம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட குற்றப் பரம்பரைச் சட்டத்தின் கீழ் கொண்டுவந்தனர். ஆனால் இந...

இந்த வலைப்பதிவில் தேடு

என்னைப் பற்றி

எனது படம்
Contact: info.kallarkulavaralaru@gmail.com, தமிழகத்தில் வாழும் கள்ளர் மரபினர் முக்குலத்தோரில் ஒரு பிரிவினர் ஆவர். கள்ளர், மறவர், அகமுடையார் ஆகிய முக்குலங்களும் போர்த் தொழிலை அடிப்படையாக கொண்டு வாழ்ந்து வந்ததால் இந்த மூன்று சாதியினரும் முக்குலத்தோர் என்று அறியப்படுகின்றனர். இந்த மூன்று குலத்தினரும் "தேவர்" என்ற பொதுவான பெயரோடு அறியப்படுகிறார்கள். கள்ளர் மரபில் அறந்தாங்கி தொண்டைமான், புதுக்கோட்டை பல்லவராயர், புதுக்கோட்டை தொண்டைமான் மற்றும் பல சமீன்தார்களும், பெரு நிலவுரிமையாளர்களும் இருக்கின்றனர். (கள்ளர் படைப்பற்று - கள்ளர் நாடு - கள்ளர்த்தடி). கள்ளர் வரலாறு : வரலாறு என்றால் வந்த வழி என்று பொருள். வந்த வழி தெரியாதவர்களுக்குப் போகும் வழி புரியாது. வரலாற்றை நாம் நினைவு கூர்வதற்குக் காரணம் கடந்து போன ஈகங்களை எண்ணிக் கண்ணீர் விடுவதற்காகவும், நிகழ்த்தி விட்ட வீரங்களைச் சொல்லிப் பெருமை பேசுவதற்காகவும் அல்ல. வருங்காலத்திற்கு வழி சமைப்பதற்கு அந்த ஈகமும் வீரமும் வழிகாட்ட வேண்டும் என்பதற்காகத்தான். கள்ளர்களின் நான்கு முக்கிய பிரிவுகள் - ஈசநாட்டுக்கள்ளர் (திருச்சி, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை) : கிளைவழிக்கள்ளர் (சிவகங்கை) : அம்பல கள்ளர் / நாட்டார் கள்ளர் (சிவகங்கை, மதுரை) : பிறமலை கள்ளர் (மதுரை, உசிலமபட்டி, தேனி, கம்பம், திண்டுக்கல்)

வலைப்பதிவு காப்பகம்

பின்பற்றுபவர்கள்