புதன், 31 ஜூலை, 2019

விடுதலைப் போரில் பங்கு கொண்ட கள்ளச்சிமார்



வீரபாண்டிய கட்டபொம்மன் மற்றும் ஊமைத்துரையின் சகோதரியாகிய முத்துநாச்சி ஆங்கிலேயரை எதிர்த்து சண்டையிட்ட செய்தியை மையமாக வைத்த 892 வரிகளைக் கொண்ட கதைப்பாடல் சுவடி ஒன்று தமிழ்ப் பல்கலைக்கழக ஓலைச்சுவடித்துறையில் காணப்படுகிறது.  இச்சுவடியை ஸ்ரீபுண்ணிய குமாரனாகிய திருமலைக்கொழுந்தா பிள்ளை என்பவர் தாழப்பட்டியில் இருக்கும் வீரமலைப் பிள்ளைக்கு எழுதிக்கொடுத்து இருக்கிறார்.


அதில் பாஞ்சாலங்குறிச்சி, கட்டபொம்மன், ஊமைத்துரை ஆங்கிலேயரை எதிர்த்துப் போரிட்ட செய்திகள் காணப்படுகின்றன.  இத்தகையதொரு இக்கட்டான சூழலில் முத்துநாச்சியும் ஆங்கிலேயரை எதிர்த்துப் போரிட்டுள்ளாள்.  இவள் இரண்டு நாள்கள் ஆங்கிலேயரை எதிர்த்துப் போரிட்டுள்ளாள். ஆங்கிலப் படையில் பெரும் சேதத்தை உண்டு பண்ணி பின்னரே உயிர்விட்டிருக்கிறாள்.  முத்துநாச்சி பற்றி இதுவரை தனி நூல்கள் ஏதும் இல்லாத நிலையில் சுவடி தரும் செய்திகளின் அடிப்படையில் அவளது பிறப்பு, வளர்ப்பு, வீரம் போன்றவற்றை இக்கதைப்பாடலில் நூலாசிரியர் வெளிப்படுத்தியிருக்கின்றார்.

முத்துநாச்சி கி.பி.1760இல் பாஞ்சாலங்குறிச்சியை ஆண்ட ஜெகவீரபாண்டிய கட்டபொம்மனின் மகளாவாள்.  இவளது தாயார் பெயர் ஆறுமுகத்தம்மாள்.  இவள் கட்டபொம்மன், ஊமைத்துரை, வெள்ளையையா எனப்படும் துரைசிங்கம் ஆகியோருக்கு இளையவளாவாள்.  வரலாற்று நூல்களில் முத்துநாச்சி பற்றி இதுவரை குறிப்பிடப்படவில்லை.  எனினும் கட்டபொம்மனுடன் பிறந்தோர் ஊமைத்துரை, துரைசிங்கம் எனும் இரு சகோதரர்களும் ஈசுவரவடிவு, துரைக்கண்ணு எனும் இரு சகோதரிகளும் என்றே குறிப்பிடப்பெற்றுள்ளது.  


பாஞ்சாலங்குறிச்சி போரில் ஆங்கிலேயரை எதிர்த்து நின்ற ஊமைத்துரையும் அவனது வீர்ர் ஆயிரம் பேரும் காயமுற்று பாஞ்சாலங்கோட்டையில் இருக்கின்றனர்.  அச்சமயம் தமக்கு ஏதும் நேர்ந்தால் தம் குலப் பெண்டிர் எதிரிகள் கையில் பட்டு சின்னாபின்னமாகக் கூடுமே, இழிவு ஏற்படுமே எனும் கவலையில் தாமே அவர்களைக் கொன்றுவிடுதல் நலமென நினைத்து அடப்பக்காரனை அனுப்பி தமது சிறியதாயார் நால்வரையும், கட்டபொம்மன் மனைவியர் மூவரையும், கட்டபொம்மன் வைப்பு மற்றும் வெள்ளையையா கட்டிய மூவரையும் ஆக பதினொரு பேர்களைத் தம் குலதெய்வம் சக்காதேவி முன் வைத்து பலியிட்டு விடுகின்றான்.  பிறகு பேறுகாலத்திற்காகத் தகப்பன் வீட்டிற்குச் சென்றிருக்கும் தமது மனைவியை வெட்டப்புகும்போது அவள் தம் வயிற்றில் பட்டத்திற்குரியவன் பிறக்க இருப்பதைக் காட்டி தம்மை விட்டுவிடக் கூற அவளை விடுத்து பின் தங்கை முத்துநாச்சியை வெட்டப் புறப்படுகிறான்.

தம்மை வெட்ட வந்த தமையன் ஊமைத்துரையைப் பார்த்து முத்துநாச்சி வீணே இப்பொழுது வெட்டிப் போடுவதைக் காட்டிலும் போர்க்களத்தில் மாண்டால் மிகுந்த சிறப்பாகும்.  உன் போல புலியின் கூடப்பிறந்த எனக்கு மட்டும் வீரமில்லாது போகுமோ எனப் பலவாறு வாதிடுகிறாள்.  போர்க்களம் போக முடிவெடுத்ததைக் கூற, ஊமைத்துரை அவளை விடுத்து வந்து சேர்கிறான்.

முத்துநாச்சி குலதெய்வமான சக்காதேவி கோவிலுக்குச் செல்கிறாள்.  சக்காதேவியைத் தமக்கு உதவியாக வரும்படி வேண்ட அச்சமயம் சகுனங்கள் மூலமாக தெய்வத்திடமிருந்து உத்தரவு கிடைக்க கோயிலைவிட்டுப் புறப்படுகிறாள் முத்துநாச்சி.

கோயில்விட்டு வந்த முத்துநாச்சி வெள்ளையையாவிடம் செல்ல, வெள்ளையையாவும் மிகுந்த கலக்கத்துடன் தங்கைக்கு விடைகொடுக்கிறான்.  அடுத்து இக்கோலத்துடன் முத்துநாச்சி ஊமைத்துரையைக் கண்டு வணங்கி விடைபெறுகிறாள்.

அடப்பக்காரனை அழைத்து கட்டபொம்மனின் பட்டத்து பட்டாவைக் கொண்டு வரச் செய்து அதனைத் தங்கையிடம் தருகிறான்.  அத்துடன் முன்மடியில் சொருகுவதற்குக் கட்டாரி, பட்டாக்கத்தி, தங்கப் பூப்போட்ட கேடயம் போன்றவற்றைக் கொடுத்து எதிரியை வெட்டி செயங்கொண்டு வா என வாழ்த்தி விடையளிக்கிறான்.


இவ்வாறே முத்துநாச்சி அரண்மனையை விட்டு ஆசாரசாவடி கடந்து கடைவீதி முன்பாக வந்தபோது எதிரில் போரில் இறந்த ஆராயிரம் பேர்களுடைய மனைவிமார்களும், கள்ளச்சிகள் ஏழுபேரும் உடன்கட்டை ஏறி சாவதற்கு முடிவெடுத்து வந்து கொண்டிருப்பதைக் காண்கிறாள்.  எதிரில் வந்த முத்துநாச்சியைப் பார்த்து ஊமைத்துரை, வெள்ளையையா, முத்தையன் இவர்களைவிட துரைமார்கள் இங்கு யாருமில்லையே அப்படி இருக்க நீ யார் என அடையாளம் புரியாமல் வினவுகின்றார்கள்.

அதுகேட்டு லேசாக சிரித்த முத்துநாச்சியை அடையாளம் கண்டுகொண்டு உனக்கெதற்கு போர்க்கோலம் என வினவுகின்றார்கள்.  எனினும் அங்கிருந்த கள்ளச்சிகள் ஏழுபேரும் உடன்கட்டை ஏறி சாவதைவிட போர்க்கோலம் கண்டு போரில் குண்டடிபட்டு சாவது மேலெனக் கூறி முத்துநாச்சியின் பின் வருகின்றனர்.  மேலும் மற்றவர்களிடமும் எடுத்துக் கூறி அவர்களைப் போருக்கு அழைக்க இரண்டாயிரம் பெண்கள் போருக்குத் தயாராகி, உலக்கை, தடிகள் ஆகியவற்றுடன் புறப்பட்டார்கள்.  இதனை,

உடன்கட்டை யேறிச் சாகிறதைப் பார்க்க
உற்றதோர் குண்டுலே மாண்டு போவோம்
இப்படிச் சாகிற குண்டு பட்டுச் செத்தால்
இதுகொண்டு மெத்தச் சேதமில்லை
என்று சொல்லிக் கொண்டு ஏழுபேர் கள்ளச்சி
இச்சினம் பின் ஓடி வந்து
ஒலிமுகம் போயிச் சேருமடி யுற்ற
முத்துனாச்சி பின்னே னாங்கள் வாறோம்
என்றுசொல்லிக் கொண்டு கள்ளச்சி ஏழுபேர்
இச்சினம் வீட்டுக்கு ஓடி வந்து
தலைக்குல்லாவுகள் தானுமிட்டு யின்னம்
தங்க அங்கரக்காயத் தொட்டிறுக்கி
புருசனுடைய யீட்டிகளெடுத்து
புறப்பட்டாளய்யா கள்ளச்சியும்
வாரபோ தங்கனே கள்ளச்சி ஏளுபேர்
வாய்க்கொழுப்பங்கனே சொல்லிக் கொண்டாள்
உம்பளஞ் சம்பளந்தின்கிற முண்டைகள்
ஓடி வாங்களடி சண்டை செய்ய
கட்டமன் தங்கையை பார்க்கவுங்களுக்கு
கனமரியாதைத் தானுமுண்டோ
என்றுசொல்லிப் போட்டு கள்ளச்சிமார் சொல்ல
இச்சினமே யந்த பெண்டுகளும்
அதிலே ரெண்டாயிரம் பேரு குமரிகள்
அச்சினம் வெளியில்ப்பட்டு மங்கே
இந்தக் கட்டுடனே ஊமைச்சாமி னாட்டில்
எத்தினை னாளைக்கி னாமிருப்போம்
பிறாமுக யின்னம் பார்த்த மென்றாலவன்
பிளந்து வைப்பானே துண்டு ரெண்டாய்
இப்படி யிருக்கக் கூடாதடி னாமள்
இறந்து போவது உத்தமந்தான்  (வரி.201-215)

என்றவர்கள் கோட்டைக்கு வாயு வேகத்தில் வந்து முத்துநாச்சியை வணங்கினர்.  அவர்களைப் பார்த்து முத்துநாச்சி ஏன் இங்கு  வந்தீர்கள் என வினவ உனக்குப் போரில் உதவவே வந்தோம் என்கின்றனர்.  இதைக்கேட்டு முத்துநாச்சி இப்படி எல்லோரும் சென்றால் சச்சரன் கண்டு கொள்ளக்கூடும் எனக் கூறிவிட்டு அண்ணனின் அரண்மனைக்கு ஓடி வருகிறாள்.

ஊமைத்துரையைப் பார்த்து அங்கலக்காரணம், கேப்பை மாவு, முறங்கள், சூட்டு அடுப்புகள், நவபாண்டம், விறகு போன்றவை வேண்டும் எனக் கேட்கிறாள்.  ஊமைத்துரை, ஆள் அனுப்பி தங்கை கேட்டவற்றைத் தரும்படி ஆணையிடுகிறான்.  அனைத்தையும் கோட்டைக்கு உடனே கொண்டு போக உத்தரவிடப்பட்டது.

அச்சமயம் ஒட்டப்பிடாரத்தில் உளவு சொல்வோன் கோட்டைக்கு ஓடி வந்து எதிரிப்படைகள் வந்திறங்குவதைப் பதற்றத்துடன் கூறுகிறான்.  அச்சமயம் எட்டமன் ஏணிகள், வைக்கோல் கட்டுகளை வண்டியிலேற்றி வருகிறான்.  கோட்டைக்குப் படைகள் வந்ததை உணர்த்தும் விதமாக மூன்று வேட்டுச் சத்தங்கள் முழங்க அடப்பக்காரனும், உளவு செல்வோனுமாக முத்துநாச்சியைக் கண்டு விவரம் கூறி எச்சரிக்கையாய் இருக்கும்படி கூறுகின்றனர்.

நடுசாம நேரத்தில் பட்டாளம் புறப்படுகிறது.  அச்சமயம் முத்துநாச்சி ஆயிரம் பெண்களைக் கோட்டைக்கு வரவழைத்து அவர்களை எட்டெட்டு பேர்களாகப் பிரித்து நிற்க வைக்கிறாள்.  இச்சமயம்  சச்சரனது பட்டாளம் கட்டபொம்மன் கோட்டையைச் சுற்றி வந்து விட்டது.  அதன்பின் ஏணிகள் வந்து இறங்கின.  இதைக் கண்டதும் முத்துநாச்சி ஆயத்தமாக எழுந்து நிற்கிறாள்.  படைகள் வந்திறங்கியதை மகிழ்ச்சியுடன் பார்த்திருந்தாள்.

விடிய ஒரு சாமம் இருக்கும் வேளையில் முத்தையன், குப்பையாண்டித்தேவன் இவர்கள் கொத்தளத்தில் வைத்து கூழைக் காய்ச்சும்படி கள்ளச்சிகள் ஏழுபேருக்கும் கூறுகிறாள்.  அதுபோல தும்பிச்சி மேட்டில் கொள்ளை வறுத்துக் கொட்டும்படி சொல்கிறாள்.  இவ்வாறு பெண்கள் பாதிபேரிடம் கூழ் காய்ச்சும் படியும் பாதிபேரிடம் கொள் வறுத்துக்கொட்டும் படியும் கூறி ஏனைய ஆயிரம் பெண்களை உலக்கைத்தடி ஏந்தி தலை தெரியாது இருந்தபடி சண்டை செய்யும் படியும் கூறுகிறாள்.

நீங்கள் பெண்கள் என்று கண்டு கொண்டால் பீரங்கி போட்டு விடுவான்.  அதனால் மறைந்து நின்று தாக்குங்கள் என்று கூறுகிறாள்.  மேலும் அவர்களுக்கு தைரியமளிக்கும் வகையில் நாமும் மனிதர்கள், அவர்களும் அவ்வாறே.  அதனால் பயப்பட வேண்டாமெனக் கூறுகிறாள்.

இவ்வாறிருக்கையில் எச்சரிக்கை வேட்டு கிளம்புகிறது.  அனைவரையும் உஷார் நிலையிலிருக்கக் கூறித் தானும் உஷாருடனிருக்க மற்றொரு வேட்டுச் சத்தம் எழுப்பி கோட்டைமேல் ஏணியைச் சாத்துகிறான் சர்சத்துரை.  மற்றுமொரு வேட்டு கிளம்ப கேப்டனும் கோட்டை மேல் ஏறி வந்து விட்டான்.  அதனைக் கண்ட முத்துநாச்சி பெண் தெய்வங்களை வரிசையாக வேண்டியவாறு நிற்க, கேப்டனும் அருகில் வர, தெய்வங்களுக்கு நரபலி எனக் கூறி அவன் தலையை வெட்ட, அது கோட்டைக்குள்ளே விழுகிறது.

அதைத் தொடர்ந்து ஆப்புசேர், நாயக்கமார் என அனைவரும் வர அத்தனை பேரையும் வெட்டி வீழ்த்துகிறாள் முத்துநாச்சி.  பிறகு சுபையதார், கும்மந்தான் இன்னும் பலரும் வெட்டுப்பட சச்சரன் இருவர் இருவராக அனுப்ப அனைவரையும் வெட்டி வெள்ளரிக்காய்களைப் போல வீழ்த்துகிறாள்.  

சச்சரத்துரையும் படைகளை நான்கு வகையாகப் பிரித்து அனுப்பி கோட்டைமேல் ஏறி விட்டான்.  முத்தையன் கொத்தளத்தின் மீது ஏற அச்சமயம் கள்ளச்சிகள் ஏழு பேரும் குத்துச் சண்டையில் ஈடுபட்டனர்.  அதில் சிறிது பட்டாளம் இறந்தது.  தும்பிச்சி மேட்டிலும் கொள்ளை வறுத்துக் கொட்டினர்.  சூட்டு அடுப்புகளையும் தலைமேலெறிந்தனர்.  சாம்பலுடன் தணலை வாரித் தலையில் போட்டனர்.  பட்டாளத்தில் பலர் இறந்தனர்.  தொடர்ந்து கூழ் சட்டிகளும் சிப்பாய்கள் மீது வந்து விழுந்தன.  அதனால் சிப்பாய்கள் கண்கள் ஒழுகி வெள்ளரிப் பழம் விரிவது போல் விரிந்தனர்.

இப்படியாக சண்டை தொடர்ந்தது.  மீதமுள்ள பட்டாளங்களும் வந்து சேர்ந்தன.  இதைக்கண்ட பெண்கள் ஆயிரம் பேரும் உலக்கை தடிகளுடன் ஆயத்தமாகி அவர்களைத் தாக்க சிப்பாய்களின் தலைகள் பருப்புச்சட்டியும் தயிர்ச்சட்டியும் உடைவது போல சிதற நாக்குகள் தள்ள, இரத்தம் சொட்ட இப்படி பலவாறாகத் தாக்கப்பட்டு பட்டாளம் முழுதும் இறந்து போகின்றனர்.  சச்சரனும் உடன் குதிரைக்காரர்கள் ஏழு பேர்களுமே மிஞ்சி கூடாரத்தில் இருக்கின்றனர்.  தப்பித்துப் போக முயற்சித்து குதிரைக்காரனை அழைத்து குதிரையைக் கொண்டு வரப் பணித்தான் சச்சத்துரை.


அச்சமயம் முத்துநாச்சியும் இருளாயி என்பவளை அழைத்து நீலா என்னும் வெள்ளைக் குதிரையை விரைவாகக் கொண்டு வருமாறு பணித்தாள்.  சுற்றிப்போய் குதிரை ஏற நாழியாகும் என்பதால் ஏணி வழியாக இறங்கி வருகிறாள் முத்துநாச்சி.  அவளுடன் கள்ளச்சிகள் ஏழு பேரும் இறங்கி வருகின்றனர்.  முத்துநாச்சி ஏணி வழி இறங்கி குதிரை ஏறச் செல்கிறாள்.  அதற்கு முன்பாக சச்சரனும் குதிரைக்காரர்கள் ஏழு பேரும் ஆக எட்டு பேர்களும் குதிரையேறி வாயு வேகமாக வந்து கொண்டிருக்கிறார்கள்.

அப்பொழுது தாகத்திற்காக இடும்பன் தெப்பக்குளத்தில் எல்லோரும் இறங்கித் தண்ணீர் குடித்துக் கொண்டிருக்க வெட்டில் இறங்கி முத்துநாச்சி சச்சரை வெட்ட கள்ளச்சி குதிரையைக் குத்துகிறாள்.  இவ்வாறாக அனைவரையும் வெட்டி செயங்கொண்டு கத்தியைக் கழுவும் போது ரத்தக்கறைகள் தாக்க மயங்கி விழுகிறாள் முத்துநாச்சி.  அதனைக் கண்ட கள்ளச்சிகள் அவளை எடுத்து மார்போடணைத்து மயக்கம் தெளிவிக்கின்றனர்.  

இச்சமயம் முத்தைய நாயக்கன் 30 பேருடன் முத்துநாச்சியைத் தேடி வருகிறான்.   நீ எனக்கு அத்தை மகன், இப்பொழுது உடன்பிறப்பு, என் மீது இனி எள்ளளவும் ஆசை வேண்டாம்.  எனக்கு பதிலாய் பெரியப்பன் மகள் இருக்கிறாள் என்றாள் முத்துநாச்சி.  ஆசார சாவடிக்கு விரைந்து வருகிறான் முத்தையன். அங்கே அமரக்காரர்களுடன் ஊமைத்துரையும், வெள்ளையையாவும் இருந்தனர்.  அவர்கள் முன்பாக விழுந்து அழுகிறான் முத்தையன்.

விஷயமறிந்த சகோதரர்கள் தானாபதி மகன் மால்பத்திரப் பிள்ளையை அழைத்து தங்கையை அழைத்து வர பல்லக்கும் கள்ளச்சிகள் ஏழுபேருக்குக் குதிரையும் அனுப்ப உத்தரவிடுகிறான்.  தானாபதியும் சோடித்த பல்லக்குடனும், பதினெட்டு மேள வாத்தியங்களுடன் ஒட்டப்பிடாரம் வந்து கொட்டு முழக்குடன் முத்துநாச்சியைக் கூட்டி வருகின்றனர் கோட்டைக்கு.  

அச்சமயம் அங்கிருந்த ஆயிரம் பெண்களும் ஆரத்தி எடுத்து திட்டி கழித்து திலகம் மையணிவிக்க ஆசாரச் சாவடி வந்து அண்ணனை வணங்கி எழ வெள்ளையையா அவளைத் தூக்கி நிறுத்தி எனக்குத் தாயார் சக்காதேவி தங்கை முத்துநாச்சி.  இந்த அளவிற்கு எங்களுக்கு ஊக்கம் கொடுத்து காப்பாற்றினாய் சக்காதேவியே. 

அச்சமயம் வெள்ளையையா சேவகரை அழைத்து பெண்கள் போடும் நகைகளைக் கொண்டு பெட்டியைக் கொண்டுவரச் சொல்.  போரில் வெற்றி பெற்று வந்தவர்களுக்கு வெகுமதி எனக் கொடுக்கிறான்.  அப்பெட்டியில் நெற்றிச் சுட்டிகள், திருவாம்பிரை, கொன்றைமாலை, கொப்புப் பிடிகள், ராக்கடி, சிமிக்கி பவழ வடம், அட்டிகை, கோதுமை மணி, தோள்வளை, பாடகம், தண்டை சிலம்பு காலுக்கு பீலி, ரவிக்கை, சேலை ஒட்டியாணம் என அனைத்தும் இருந்தன.  இதைக் கண்டு வெகு கோபமுற்ற முத்துநாச்சி போர்க்கோலம் கண்ட நான் இனியும் இவற்றையணிவேனோ எனக் கூறி அவற்றை நிராகரித்து நகைகள் மிகுதியாக இருந்தால் அவற்றை நாய்க்குப் போடும் என்று கோபிக்கிறாள்.  

அவளது சீற்றமும் கண்டிப்பும் கண்டு ஊமைத்துரை, ஆண்கள் போடும் நகைகளைக் கொண்டு வரக் கூறி மேலும் முத்தையனிடம் தனது சித்தப்பன் மகளை விவாகம் செய்து தருவதாகக் கூறுகிறான்.  ஊமைத்துரை பிறகு ஆண்களுக்குரிய நகைகளை எடுத்து முத்துநாச்சிக்குப் பூட்டிவிடுகிறான்.  பிறகு முத்துநாச்சிக்கும் கள்ளச்சிகள் ஏழு பேர்களுக்கும் வேண்டிய உணவைச் சமைத்துப் பரிமாறுகிறான்.  மேலும் நீ ஆணாகப் பிறந்திருந்தால் அரசாள்வாய்.  ஆகவே இனி என் பட்டத்தை நீ ஆள்வாய் எனக் கூற அதற்கு அவள் அண்ணா நீ ஆய்கிற பட்டம்மான் இனி எனக்கு ஏற்குமோ?  நானும் மேரக்காரருடன் சேர்ந்து நானும் ஒரு மேல்மரமே எனக் கூறுகிறாள்.  இத்துடன் முதல் நாள் சண்டை முடிவடைகிறது.

முத்துநாச்சியின் வெற்றிச் செய்தியைக் கேட்ட எட்டையபுரத்தான் அதனைக் கடிதம் மூலம் துரைமார்களுக்குத் தெரிவிக்க இனி எத்தனை நாளுக்கு இந்த துக்கம்.  இனி எவ்வாறு ஊமையனை வெற்றி கொள்வது என யோசித்து எட்டு தரைகளுடன் எட்டு பட்டாளம் தம்பூர், புல்லாங்குழல், சாரட் வண்டி, பல்லக்கு குதிரை தளவாடங்கள் போன்றவற்றோடு சீவலப்பதி வந்திறங்கியது.  விடிந்ததும் ஒட்டப்பிடாரத்தில் கூடாரம் பிடித்தார்.  இச்சமயம் உளவு சொல்வோன் ஓடிவந்து பட்டாளங்கள் வந்து இறங்கியதை ஊமைத்துரையிடம் கூறுகிறான்.  இதைக் கேட்டு ஊமைத்துரை சாரி போவதற்காக நகாடிக்கச் சொல்கிறான்.  அச்சத்தம் கேட்டு முத்துநாச்சி மீண்டும் உடனே கள்ளச்சிகளுடன் போருக்கு ஆயத்தமாகிறாள்.  அதைக் கண்டு ஊமைத்துரை எங்கே செல்கிறாய் என வினவ, சாரி போவதாக முத்துநாச்சி பதிலளிக்க ஊமைத்துரை ராணுவத்தினர் 3000 பேரை உதவிக்குப் போகுமாறு கூறினான்.  ராணுவத்தினர் 3000 பேர் ஒரு பிரிவாகவும் செல்கிறார்கள்.  தாக்குதலில் பட்டாளம் முறிந்துவிட்டது.  தேவர்சனத்தில் 25 பேரும் சிப்பாய்களில் இருபது பேரும் இறந்து விட்டனர்.  இறந்த 25 பேரை பாடையிலேற்றி ஊர் வந்து சேர்கிறாள் முத்துநாச்சி.  கானத்துறையில் அவர்களை எரியூட்ட சொல்கிறாள்.  

இச்சமயம் போர் பற்றிய செய்திகள் சென்னைக்குக் கடிதம் வாயிலாகச் செல்ல மேலும் பட்டாளம் வந்திறங்கியது.  இதனை ஊமைத்துரையிடம் உளவு சொல்வோன் வந்து கூற அவ்வேளையில் ஆயிரம் பேரும் காயமாறி இருக்கிறபோது நகாரடிக்கச் சொல்கிறான்.  

அச்சமயம் நித்திரைக்குப் போன முத்துநாச்சி நகாரு சத்தம் கேட்க ஊமையன் சாரி போவதைக் கேள்வியுறுகிறான்.  அதைக்கேட்டு முத்துநாச்சி நிலைகுலைந்த நிலையில் ஊமையன் அங்கு வர முத்துநாச்சி நான் உயிரோடு இருக்க நீ சாரி போவது எப்படி எனக் கேட்க இன்றைக்குச் சண்டைக்குப் போக வேண்டாம் என ஊமைத்துரை பலவாறு தடுத்தும் கேளாமல் முத்துநாச்சி போருக்குப் புறப்படுகிறாள்.  கட்டபொம்மன் குதிரையைக் கொண்டு வரச் செய்து கள்ளச்சிகள் கூட புறப்படுகிறாள்.

வெடிச்சத்தம் கேட்டால் உன்னை முன்னே கொண்டு போய்விடும் என எச்சரித்தும் கேளாமல் புறப்படுகிறாள்.

சூரியோதய வேளையில் போர் மூண்டது.  இச்சமயம் கம்பெனிக்கு உதவியாக எட்டையபுரத்தான் குத்துச்சண்டையில் இறங்கினான்.  இச்சமயம் குபீரென்று குதிரை பாய்ந்து கூடாரம் முன்பாக வந்ததும் முத்துநாச்சியை வேகமாக வீசிட அவளும்கீழே விழுந்துவிட்டாள்.  தாக்குதலில் கள்ளச்சிகள் மாண்டு விட்டனர்.  எதிரிகள் முத்துநாச்சியைக் பிடித்துக் கூடாரம் கொண்டு வந்து சேர்த்தனர்.  அச்சமயம் துரை சாராய மயக்கத்திலிருக்க அவனை இரண்டு துண்டாக வெட்டி பின் கூடாரம் விட்டு வெளியேறுகிறாள்.


வெளியில் பாராக்காரர்களை வெட்டி வீழ்த்துகிறாள்.  அச்சமயம் வக்கப்பட்டி தானாபதி மகன் தனது தந்தையை வெட்டிய பழியைத் தீர்த்துக் கொள்ள வேண்டி ஐநூறு பேருடன் முத்துநாச்சியைச் சுத்தி வளைத்தான்.  சிறிதும் தளராமல் அவனையும் வெட்டி வீழ்த்துகிறாள்.  இப்படி அவள் போராடிக் கொண்டிருக்கும் போது ஈட்டுகளும் வேலும் மார்பில் பாய அவள் உயிர் பிரிந்த்து.  இச்சமயம் அவளது குதிரையும் லாயம் வந்தடைவதைக் கண்டு ஊமைத்துரைக்குச் சேதி வர ஊமைத்துரை ராணுவத்தைத் தயார்படுத்தி முத்தையன் வெள்ளையையாவுடன் ஒட்டப்பிடாரம் வந்து குத்துச் சண்டையில் கலந்து கொண்டான்.  பலரை வெட்டி வீழ்த்திப் பிறகு தங்கையையும் கள்ளச்சிகளையும் வந்து பார்க்கின்றனர்.

தேடினாலும் கிட்டாத அரிய பிறப்பே இனி உன்னை என்றைக்குக் கண்பேனோ என்று அவளது அருமை பெருமைகளை எல்லாம் பேசி தங்கை மேல் விழுந்து முட்டிக் கொண்டழுதனர்.  பிறகு அவளை அலங்கரித்த பல்லக்கில் ஏற்றிக் கொண்டு செல்ல அம்பலக்காரன் சாமையன்மேல் அருள் வந்து ஆட அதன் வாயிலாக தான் இறந்த இடத்திலேயே தம்மை வைத்துக் கும்பிடுமாறு கூற அதன்படி அவளை எரியூட்டி அந்த இடத்தில் எட்டு நாட்களுக்குள் காரைக்கட்டுக் கோவில் கட்டி வைத்தனர்.


கன்னிகழியாத தன்னையும் கள்ளச்சிகளையும் ஒரே இடத்தில் சிலையாக வைக்க வேண்டாம் என அருள்வந்து கூற உள்மண்டபத்தில் முத்துநாச்சி சிலையையும் வெளிமண்டபத்தில் கள்ளச்சிகளின் சிலையையும் வைத்து வழிபடுகின்றனர்.  பிறகு ஊமைத்துரை வெள்ளைஅய்யாவை கோட்டைக்கு அனுப்பிவிட்டு 5000 பேர்களுடன் வக்கப்பட்டியான் மற்றும் பலலையும் வெட்டிச் சாய்த்துவிட்டு கோட்டைக்குத் திரும்பிகிறான்.  இவ்வாறாக முத்துநாச்சி சண்டை முடிவடைகிறது.






ஆய்வு : அன்பன்:கி.ச.முனிராஜ் வாணாதிராயன்.

வரலாற்று பக்கங்கள் - II

வளரி வரலாறு   👈 Click above திருமங்கையாழ்வார் வரலாறு 👈 Click above அம்பலகாரர் / அம்பலம் வரலாறு 👈 Click above வாண்டையார் வரலாறு 👈 Click a...

இந்த வலைப்பதிவில் தேடு

என்னைப் பற்றி

எனது படம்
Contact: info.kallarkulavaralaru@gmail.com, தமிழகத்தில் வாழும் கள்ளர் மரபினர் முக்குலத்தோரில் ஒரு பிரிவினர் ஆவர். கள்ளர், மறவர், அகமுடையார் ஆகிய முக்குலங்களும் போர்த் தொழிலை அடிப்படையாக கொண்டு வாழ்ந்து வந்ததால் இந்த மூன்று சாதியினரும் முக்குலத்தோர் என்று அறியப்படுகின்றனர். இந்த மூன்று குலத்தினரும் "தேவர்" என்ற பொதுவான பெயரோடு அறியப்படுகிறார்கள். கள்ளர் மரபில் அறந்தாங்கி தொண்டைமான், புதுக்கோட்டை பல்லவராயர், புதுக்கோட்டை தொண்டைமான் மற்றும் பல சமீன்தார்களும், பெரு நிலவுரிமையாளர்களும் இருக்கின்றனர். (கள்ளர் படைப்பற்று - கள்ளர் நாடு - கள்ளர்த்தடி). கள்ளர் வரலாறு : வரலாறு என்றால் வந்த வழி என்று பொருள். வந்த வழி தெரியாதவர்களுக்குப் போகும் வழி புரியாது. வரலாற்றை நாம் நினைவு கூர்வதற்குக் காரணம் கடந்து போன ஈகங்களை எண்ணிக் கண்ணீர் விடுவதற்காகவும், நிகழ்த்தி விட்ட வீரங்களைச் சொல்லிப் பெருமை பேசுவதற்காகவும் அல்ல. வருங்காலத்திற்கு வழி சமைப்பதற்கு அந்த ஈகமும் வீரமும் வழிகாட்ட வேண்டும் என்பதற்காகத்தான். கள்ளர்களின் நான்கு முக்கிய பிரிவுகள் - ஈசநாட்டுக்கள்ளர் (திருச்சி, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை) : கிளைவழிக்கள்ளர் (சிவகங்கை) : அம்பல கள்ளர் / நாட்டார் கள்ளர் (சிவகங்கை, மதுரை) : பிறமலை கள்ளர் (மதுரை, உசிலமபட்டி, தேனி, கம்பம், திண்டுக்கல்)

வலைப்பதிவு காப்பகம்

பின்பற்றுபவர்கள்