புதன், 31 ஜூலை, 2019

விடுதலைப் போரில் பங்கு கொண்ட கள்ளச்சிமார்



வீரபாண்டிய கட்டபொம்மன் மற்றும் ஊமைத்துரையின் சகோதரியாகிய முத்துநாச்சி ஆங்கிலேயரை எதிர்த்து சண்டையிட்ட செய்தியை மையமாக வைத்த 892 வரிகளைக் கொண்ட கதைப்பாடல் சுவடி ஒன்று தமிழ்ப் பல்கலைக்கழக ஓலைச்சுவடித்துறையில் காணப்படுகிறது.  இச்சுவடியை ஸ்ரீபுண்ணிய குமாரனாகிய திருமலைக்கொழுந்தா பிள்ளை என்பவர் தாழப்பட்டியில் இருக்கும் வீரமலைப் பிள்ளைக்கு எழுதிக்கொடுத்து இருக்கிறார்.


அதில் பாஞ்சாலங்குறிச்சி, கட்டபொம்மன், ஊமைத்துரை ஆங்கிலேயரை எதிர்த்துப் போரிட்ட செய்திகள் காணப்படுகின்றன.  இத்தகையதொரு இக்கட்டான சூழலில் முத்துநாச்சியும் ஆங்கிலேயரை எதிர்த்துப் போரிட்டுள்ளாள்.  இவள் இரண்டு நாள்கள் ஆங்கிலேயரை எதிர்த்துப் போரிட்டுள்ளாள். ஆங்கிலப் படையில் பெரும் சேதத்தை உண்டு பண்ணி பின்னரே உயிர்விட்டிருக்கிறாள்.  முத்துநாச்சி பற்றி இதுவரை தனி நூல்கள் ஏதும் இல்லாத நிலையில் சுவடி தரும் செய்திகளின் அடிப்படையில் அவளது பிறப்பு, வளர்ப்பு, வீரம் போன்றவற்றை இக்கதைப்பாடலில் நூலாசிரியர் வெளிப்படுத்தியிருக்கின்றார்.

முத்துநாச்சி கி.பி.1760இல் பாஞ்சாலங்குறிச்சியை ஆண்ட ஜெகவீரபாண்டிய கட்டபொம்மனின் மகளாவாள்.  இவளது தாயார் பெயர் ஆறுமுகத்தம்மாள்.  இவள் கட்டபொம்மன், ஊமைத்துரை, வெள்ளையையா எனப்படும் துரைசிங்கம் ஆகியோருக்கு இளையவளாவாள்.  வரலாற்று நூல்களில் முத்துநாச்சி பற்றி இதுவரை குறிப்பிடப்படவில்லை.  எனினும் கட்டபொம்மனுடன் பிறந்தோர் ஊமைத்துரை, துரைசிங்கம் எனும் இரு சகோதரர்களும் ஈசுவரவடிவு, துரைக்கண்ணு எனும் இரு சகோதரிகளும் என்றே குறிப்பிடப்பெற்றுள்ளது.  


பாஞ்சாலங்குறிச்சி போரில் ஆங்கிலேயரை எதிர்த்து நின்ற ஊமைத்துரையும் அவனது வீர்ர் ஆயிரம் பேரும் காயமுற்று பாஞ்சாலங்கோட்டையில் இருக்கின்றனர்.  அச்சமயம் தமக்கு ஏதும் நேர்ந்தால் தம் குலப் பெண்டிர் எதிரிகள் கையில் பட்டு சின்னாபின்னமாகக் கூடுமே, இழிவு ஏற்படுமே எனும் கவலையில் தாமே அவர்களைக் கொன்றுவிடுதல் நலமென நினைத்து அடப்பக்காரனை அனுப்பி தமது சிறியதாயார் நால்வரையும், கட்டபொம்மன் மனைவியர் மூவரையும், கட்டபொம்மன் வைப்பு மற்றும் வெள்ளையையா கட்டிய மூவரையும் ஆக பதினொரு பேர்களைத் தம் குலதெய்வம் சக்காதேவி முன் வைத்து பலியிட்டு விடுகின்றான்.  பிறகு பேறுகாலத்திற்காகத் தகப்பன் வீட்டிற்குச் சென்றிருக்கும் தமது மனைவியை வெட்டப்புகும்போது அவள் தம் வயிற்றில் பட்டத்திற்குரியவன் பிறக்க இருப்பதைக் காட்டி தம்மை விட்டுவிடக் கூற அவளை விடுத்து பின் தங்கை முத்துநாச்சியை வெட்டப் புறப்படுகிறான்.

தம்மை வெட்ட வந்த தமையன் ஊமைத்துரையைப் பார்த்து முத்துநாச்சி வீணே இப்பொழுது வெட்டிப் போடுவதைக் காட்டிலும் போர்க்களத்தில் மாண்டால் மிகுந்த சிறப்பாகும்.  உன் போல புலியின் கூடப்பிறந்த எனக்கு மட்டும் வீரமில்லாது போகுமோ எனப் பலவாறு வாதிடுகிறாள்.  போர்க்களம் போக முடிவெடுத்ததைக் கூற, ஊமைத்துரை அவளை விடுத்து வந்து சேர்கிறான்.

முத்துநாச்சி குலதெய்வமான சக்காதேவி கோவிலுக்குச் செல்கிறாள்.  சக்காதேவியைத் தமக்கு உதவியாக வரும்படி வேண்ட அச்சமயம் சகுனங்கள் மூலமாக தெய்வத்திடமிருந்து உத்தரவு கிடைக்க கோயிலைவிட்டுப் புறப்படுகிறாள் முத்துநாச்சி.

கோயில்விட்டு வந்த முத்துநாச்சி வெள்ளையையாவிடம் செல்ல, வெள்ளையையாவும் மிகுந்த கலக்கத்துடன் தங்கைக்கு விடைகொடுக்கிறான்.  அடுத்து இக்கோலத்துடன் முத்துநாச்சி ஊமைத்துரையைக் கண்டு வணங்கி விடைபெறுகிறாள்.

அடப்பக்காரனை அழைத்து கட்டபொம்மனின் பட்டத்து பட்டாவைக் கொண்டு வரச் செய்து அதனைத் தங்கையிடம் தருகிறான்.  அத்துடன் முன்மடியில் சொருகுவதற்குக் கட்டாரி, பட்டாக்கத்தி, தங்கப் பூப்போட்ட கேடயம் போன்றவற்றைக் கொடுத்து எதிரியை வெட்டி செயங்கொண்டு வா என வாழ்த்தி விடையளிக்கிறான்.


இவ்வாறே முத்துநாச்சி அரண்மனையை விட்டு ஆசாரசாவடி கடந்து கடைவீதி முன்பாக வந்தபோது எதிரில் போரில் இறந்த ஆராயிரம் பேர்களுடைய மனைவிமார்களும், கள்ளச்சிகள் ஏழுபேரும் உடன்கட்டை ஏறி சாவதற்கு முடிவெடுத்து வந்து கொண்டிருப்பதைக் காண்கிறாள்.  எதிரில் வந்த முத்துநாச்சியைப் பார்த்து ஊமைத்துரை, வெள்ளையையா, முத்தையன் இவர்களைவிட துரைமார்கள் இங்கு யாருமில்லையே அப்படி இருக்க நீ யார் என அடையாளம் புரியாமல் வினவுகின்றார்கள்.

அதுகேட்டு லேசாக சிரித்த முத்துநாச்சியை அடையாளம் கண்டுகொண்டு உனக்கெதற்கு போர்க்கோலம் என வினவுகின்றார்கள்.  எனினும் அங்கிருந்த கள்ளச்சிகள் ஏழுபேரும் உடன்கட்டை ஏறி சாவதைவிட போர்க்கோலம் கண்டு போரில் குண்டடிபட்டு சாவது மேலெனக் கூறி முத்துநாச்சியின் பின் வருகின்றனர்.  மேலும் மற்றவர்களிடமும் எடுத்துக் கூறி அவர்களைப் போருக்கு அழைக்க இரண்டாயிரம் பெண்கள் போருக்குத் தயாராகி, உலக்கை, தடிகள் ஆகியவற்றுடன் புறப்பட்டார்கள்.  இதனை,

உடன்கட்டை யேறிச் சாகிறதைப் பார்க்க
உற்றதோர் குண்டுலே மாண்டு போவோம்
இப்படிச் சாகிற குண்டு பட்டுச் செத்தால்
இதுகொண்டு மெத்தச் சேதமில்லை
என்று சொல்லிக் கொண்டு ஏழுபேர் கள்ளச்சி
இச்சினம் பின் ஓடி வந்து
ஒலிமுகம் போயிச் சேருமடி யுற்ற
முத்துனாச்சி பின்னே னாங்கள் வாறோம்
என்றுசொல்லிக் கொண்டு கள்ளச்சி ஏழுபேர்
இச்சினம் வீட்டுக்கு ஓடி வந்து
தலைக்குல்லாவுகள் தானுமிட்டு யின்னம்
தங்க அங்கரக்காயத் தொட்டிறுக்கி
புருசனுடைய யீட்டிகளெடுத்து
புறப்பட்டாளய்யா கள்ளச்சியும்
வாரபோ தங்கனே கள்ளச்சி ஏளுபேர்
வாய்க்கொழுப்பங்கனே சொல்லிக் கொண்டாள்
உம்பளஞ் சம்பளந்தின்கிற முண்டைகள்
ஓடி வாங்களடி சண்டை செய்ய
கட்டமன் தங்கையை பார்க்கவுங்களுக்கு
கனமரியாதைத் தானுமுண்டோ
என்றுசொல்லிப் போட்டு கள்ளச்சிமார் சொல்ல
இச்சினமே யந்த பெண்டுகளும்
அதிலே ரெண்டாயிரம் பேரு குமரிகள்
அச்சினம் வெளியில்ப்பட்டு மங்கே
இந்தக் கட்டுடனே ஊமைச்சாமி னாட்டில்
எத்தினை னாளைக்கி னாமிருப்போம்
பிறாமுக யின்னம் பார்த்த மென்றாலவன்
பிளந்து வைப்பானே துண்டு ரெண்டாய்
இப்படி யிருக்கக் கூடாதடி னாமள்
இறந்து போவது உத்தமந்தான்  (வரி.201-215)

என்றவர்கள் கோட்டைக்கு வாயு வேகத்தில் வந்து முத்துநாச்சியை வணங்கினர்.  அவர்களைப் பார்த்து முத்துநாச்சி ஏன் இங்கு  வந்தீர்கள் என வினவ உனக்குப் போரில் உதவவே வந்தோம் என்கின்றனர்.  இதைக்கேட்டு முத்துநாச்சி இப்படி எல்லோரும் சென்றால் சச்சரன் கண்டு கொள்ளக்கூடும் எனக் கூறிவிட்டு அண்ணனின் அரண்மனைக்கு ஓடி வருகிறாள்.

ஊமைத்துரையைப் பார்த்து அங்கலக்காரணம், கேப்பை மாவு, முறங்கள், சூட்டு அடுப்புகள், நவபாண்டம், விறகு போன்றவை வேண்டும் எனக் கேட்கிறாள்.  ஊமைத்துரை, ஆள் அனுப்பி தங்கை கேட்டவற்றைத் தரும்படி ஆணையிடுகிறான்.  அனைத்தையும் கோட்டைக்கு உடனே கொண்டு போக உத்தரவிடப்பட்டது.

அச்சமயம் ஒட்டப்பிடாரத்தில் உளவு சொல்வோன் கோட்டைக்கு ஓடி வந்து எதிரிப்படைகள் வந்திறங்குவதைப் பதற்றத்துடன் கூறுகிறான்.  அச்சமயம் எட்டமன் ஏணிகள், வைக்கோல் கட்டுகளை வண்டியிலேற்றி வருகிறான்.  கோட்டைக்குப் படைகள் வந்ததை உணர்த்தும் விதமாக மூன்று வேட்டுச் சத்தங்கள் முழங்க அடப்பக்காரனும், உளவு செல்வோனுமாக முத்துநாச்சியைக் கண்டு விவரம் கூறி எச்சரிக்கையாய் இருக்கும்படி கூறுகின்றனர்.

நடுசாம நேரத்தில் பட்டாளம் புறப்படுகிறது.  அச்சமயம் முத்துநாச்சி ஆயிரம் பெண்களைக் கோட்டைக்கு வரவழைத்து அவர்களை எட்டெட்டு பேர்களாகப் பிரித்து நிற்க வைக்கிறாள்.  இச்சமயம்  சச்சரனது பட்டாளம் கட்டபொம்மன் கோட்டையைச் சுற்றி வந்து விட்டது.  அதன்பின் ஏணிகள் வந்து இறங்கின.  இதைக் கண்டதும் முத்துநாச்சி ஆயத்தமாக எழுந்து நிற்கிறாள்.  படைகள் வந்திறங்கியதை மகிழ்ச்சியுடன் பார்த்திருந்தாள்.

விடிய ஒரு சாமம் இருக்கும் வேளையில் முத்தையன், குப்பையாண்டித்தேவன் இவர்கள் கொத்தளத்தில் வைத்து கூழைக் காய்ச்சும்படி கள்ளச்சிகள் ஏழுபேருக்கும் கூறுகிறாள்.  அதுபோல தும்பிச்சி மேட்டில் கொள்ளை வறுத்துக் கொட்டும்படி சொல்கிறாள்.  இவ்வாறு பெண்கள் பாதிபேரிடம் கூழ் காய்ச்சும் படியும் பாதிபேரிடம் கொள் வறுத்துக்கொட்டும் படியும் கூறி ஏனைய ஆயிரம் பெண்களை உலக்கைத்தடி ஏந்தி தலை தெரியாது இருந்தபடி சண்டை செய்யும் படியும் கூறுகிறாள்.

நீங்கள் பெண்கள் என்று கண்டு கொண்டால் பீரங்கி போட்டு விடுவான்.  அதனால் மறைந்து நின்று தாக்குங்கள் என்று கூறுகிறாள்.  மேலும் அவர்களுக்கு தைரியமளிக்கும் வகையில் நாமும் மனிதர்கள், அவர்களும் அவ்வாறே.  அதனால் பயப்பட வேண்டாமெனக் கூறுகிறாள்.

இவ்வாறிருக்கையில் எச்சரிக்கை வேட்டு கிளம்புகிறது.  அனைவரையும் உஷார் நிலையிலிருக்கக் கூறித் தானும் உஷாருடனிருக்க மற்றொரு வேட்டுச் சத்தம் எழுப்பி கோட்டைமேல் ஏணியைச் சாத்துகிறான் சர்சத்துரை.  மற்றுமொரு வேட்டு கிளம்ப கேப்டனும் கோட்டை மேல் ஏறி வந்து விட்டான்.  அதனைக் கண்ட முத்துநாச்சி பெண் தெய்வங்களை வரிசையாக வேண்டியவாறு நிற்க, கேப்டனும் அருகில் வர, தெய்வங்களுக்கு நரபலி எனக் கூறி அவன் தலையை வெட்ட, அது கோட்டைக்குள்ளே விழுகிறது.

அதைத் தொடர்ந்து ஆப்புசேர், நாயக்கமார் என அனைவரும் வர அத்தனை பேரையும் வெட்டி வீழ்த்துகிறாள் முத்துநாச்சி.  பிறகு சுபையதார், கும்மந்தான் இன்னும் பலரும் வெட்டுப்பட சச்சரன் இருவர் இருவராக அனுப்ப அனைவரையும் வெட்டி வெள்ளரிக்காய்களைப் போல வீழ்த்துகிறாள்.  

சச்சரத்துரையும் படைகளை நான்கு வகையாகப் பிரித்து அனுப்பி கோட்டைமேல் ஏறி விட்டான்.  முத்தையன் கொத்தளத்தின் மீது ஏற அச்சமயம் கள்ளச்சிகள் ஏழு பேரும் குத்துச் சண்டையில் ஈடுபட்டனர்.  அதில் சிறிது பட்டாளம் இறந்தது.  தும்பிச்சி மேட்டிலும் கொள்ளை வறுத்துக் கொட்டினர்.  சூட்டு அடுப்புகளையும் தலைமேலெறிந்தனர்.  சாம்பலுடன் தணலை வாரித் தலையில் போட்டனர்.  பட்டாளத்தில் பலர் இறந்தனர்.  தொடர்ந்து கூழ் சட்டிகளும் சிப்பாய்கள் மீது வந்து விழுந்தன.  அதனால் சிப்பாய்கள் கண்கள் ஒழுகி வெள்ளரிப் பழம் விரிவது போல் விரிந்தனர்.

இப்படியாக சண்டை தொடர்ந்தது.  மீதமுள்ள பட்டாளங்களும் வந்து சேர்ந்தன.  இதைக்கண்ட பெண்கள் ஆயிரம் பேரும் உலக்கை தடிகளுடன் ஆயத்தமாகி அவர்களைத் தாக்க சிப்பாய்களின் தலைகள் பருப்புச்சட்டியும் தயிர்ச்சட்டியும் உடைவது போல சிதற நாக்குகள் தள்ள, இரத்தம் சொட்ட இப்படி பலவாறாகத் தாக்கப்பட்டு பட்டாளம் முழுதும் இறந்து போகின்றனர்.  சச்சரனும் உடன் குதிரைக்காரர்கள் ஏழு பேர்களுமே மிஞ்சி கூடாரத்தில் இருக்கின்றனர்.  தப்பித்துப் போக முயற்சித்து குதிரைக்காரனை அழைத்து குதிரையைக் கொண்டு வரப் பணித்தான் சச்சத்துரை.


அச்சமயம் முத்துநாச்சியும் இருளாயி என்பவளை அழைத்து நீலா என்னும் வெள்ளைக் குதிரையை விரைவாகக் கொண்டு வருமாறு பணித்தாள்.  சுற்றிப்போய் குதிரை ஏற நாழியாகும் என்பதால் ஏணி வழியாக இறங்கி வருகிறாள் முத்துநாச்சி.  அவளுடன் கள்ளச்சிகள் ஏழு பேரும் இறங்கி வருகின்றனர்.  முத்துநாச்சி ஏணி வழி இறங்கி குதிரை ஏறச் செல்கிறாள்.  அதற்கு முன்பாக சச்சரனும் குதிரைக்காரர்கள் ஏழு பேரும் ஆக எட்டு பேர்களும் குதிரையேறி வாயு வேகமாக வந்து கொண்டிருக்கிறார்கள்.

அப்பொழுது தாகத்திற்காக இடும்பன் தெப்பக்குளத்தில் எல்லோரும் இறங்கித் தண்ணீர் குடித்துக் கொண்டிருக்க வெட்டில் இறங்கி முத்துநாச்சி சச்சரை வெட்ட கள்ளச்சி குதிரையைக் குத்துகிறாள்.  இவ்வாறாக அனைவரையும் வெட்டி செயங்கொண்டு கத்தியைக் கழுவும் போது ரத்தக்கறைகள் தாக்க மயங்கி விழுகிறாள் முத்துநாச்சி.  அதனைக் கண்ட கள்ளச்சிகள் அவளை எடுத்து மார்போடணைத்து மயக்கம் தெளிவிக்கின்றனர்.  

இச்சமயம் முத்தைய நாயக்கன் 30 பேருடன் முத்துநாச்சியைத் தேடி வருகிறான்.   நீ எனக்கு அத்தை மகன், இப்பொழுது உடன்பிறப்பு, என் மீது இனி எள்ளளவும் ஆசை வேண்டாம்.  எனக்கு பதிலாய் பெரியப்பன் மகள் இருக்கிறாள் என்றாள் முத்துநாச்சி.  ஆசார சாவடிக்கு விரைந்து வருகிறான் முத்தையன். அங்கே அமரக்காரர்களுடன் ஊமைத்துரையும், வெள்ளையையாவும் இருந்தனர்.  அவர்கள் முன்பாக விழுந்து அழுகிறான் முத்தையன்.

விஷயமறிந்த சகோதரர்கள் தானாபதி மகன் மால்பத்திரப் பிள்ளையை அழைத்து தங்கையை அழைத்து வர பல்லக்கும் கள்ளச்சிகள் ஏழுபேருக்குக் குதிரையும் அனுப்ப உத்தரவிடுகிறான்.  தானாபதியும் சோடித்த பல்லக்குடனும், பதினெட்டு மேள வாத்தியங்களுடன் ஒட்டப்பிடாரம் வந்து கொட்டு முழக்குடன் முத்துநாச்சியைக் கூட்டி வருகின்றனர் கோட்டைக்கு.  

அச்சமயம் அங்கிருந்த ஆயிரம் பெண்களும் ஆரத்தி எடுத்து திட்டி கழித்து திலகம் மையணிவிக்க ஆசாரச் சாவடி வந்து அண்ணனை வணங்கி எழ வெள்ளையையா அவளைத் தூக்கி நிறுத்தி எனக்குத் தாயார் சக்காதேவி தங்கை முத்துநாச்சி.  இந்த அளவிற்கு எங்களுக்கு ஊக்கம் கொடுத்து காப்பாற்றினாய் சக்காதேவியே. 

அச்சமயம் வெள்ளையையா சேவகரை அழைத்து பெண்கள் போடும் நகைகளைக் கொண்டு பெட்டியைக் கொண்டுவரச் சொல்.  போரில் வெற்றி பெற்று வந்தவர்களுக்கு வெகுமதி எனக் கொடுக்கிறான்.  அப்பெட்டியில் நெற்றிச் சுட்டிகள், திருவாம்பிரை, கொன்றைமாலை, கொப்புப் பிடிகள், ராக்கடி, சிமிக்கி பவழ வடம், அட்டிகை, கோதுமை மணி, தோள்வளை, பாடகம், தண்டை சிலம்பு காலுக்கு பீலி, ரவிக்கை, சேலை ஒட்டியாணம் என அனைத்தும் இருந்தன.  இதைக் கண்டு வெகு கோபமுற்ற முத்துநாச்சி போர்க்கோலம் கண்ட நான் இனியும் இவற்றையணிவேனோ எனக் கூறி அவற்றை நிராகரித்து நகைகள் மிகுதியாக இருந்தால் அவற்றை நாய்க்குப் போடும் என்று கோபிக்கிறாள்.  

அவளது சீற்றமும் கண்டிப்பும் கண்டு ஊமைத்துரை, ஆண்கள் போடும் நகைகளைக் கொண்டு வரக் கூறி மேலும் முத்தையனிடம் தனது சித்தப்பன் மகளை விவாகம் செய்து தருவதாகக் கூறுகிறான்.  ஊமைத்துரை பிறகு ஆண்களுக்குரிய நகைகளை எடுத்து முத்துநாச்சிக்குப் பூட்டிவிடுகிறான்.  பிறகு முத்துநாச்சிக்கும் கள்ளச்சிகள் ஏழு பேர்களுக்கும் வேண்டிய உணவைச் சமைத்துப் பரிமாறுகிறான்.  மேலும் நீ ஆணாகப் பிறந்திருந்தால் அரசாள்வாய்.  ஆகவே இனி என் பட்டத்தை நீ ஆள்வாய் எனக் கூற அதற்கு அவள் அண்ணா நீ ஆய்கிற பட்டம்மான் இனி எனக்கு ஏற்குமோ?  நானும் மேரக்காரருடன் சேர்ந்து நானும் ஒரு மேல்மரமே எனக் கூறுகிறாள்.  இத்துடன் முதல் நாள் சண்டை முடிவடைகிறது.

முத்துநாச்சியின் வெற்றிச் செய்தியைக் கேட்ட எட்டையபுரத்தான் அதனைக் கடிதம் மூலம் துரைமார்களுக்குத் தெரிவிக்க இனி எத்தனை நாளுக்கு இந்த துக்கம்.  இனி எவ்வாறு ஊமையனை வெற்றி கொள்வது என யோசித்து எட்டு தரைகளுடன் எட்டு பட்டாளம் தம்பூர், புல்லாங்குழல், சாரட் வண்டி, பல்லக்கு குதிரை தளவாடங்கள் போன்றவற்றோடு சீவலப்பதி வந்திறங்கியது.  விடிந்ததும் ஒட்டப்பிடாரத்தில் கூடாரம் பிடித்தார்.  இச்சமயம் உளவு சொல்வோன் ஓடிவந்து பட்டாளங்கள் வந்து இறங்கியதை ஊமைத்துரையிடம் கூறுகிறான்.  இதைக் கேட்டு ஊமைத்துரை சாரி போவதற்காக நகாடிக்கச் சொல்கிறான்.  அச்சத்தம் கேட்டு முத்துநாச்சி மீண்டும் உடனே கள்ளச்சிகளுடன் போருக்கு ஆயத்தமாகிறாள்.  அதைக் கண்டு ஊமைத்துரை எங்கே செல்கிறாய் என வினவ, சாரி போவதாக முத்துநாச்சி பதிலளிக்க ஊமைத்துரை ராணுவத்தினர் 3000 பேரை உதவிக்குப் போகுமாறு கூறினான்.  ராணுவத்தினர் 3000 பேர் ஒரு பிரிவாகவும் செல்கிறார்கள்.  தாக்குதலில் பட்டாளம் முறிந்துவிட்டது.  தேவர்சனத்தில் 25 பேரும் சிப்பாய்களில் இருபது பேரும் இறந்து விட்டனர்.  இறந்த 25 பேரை பாடையிலேற்றி ஊர் வந்து சேர்கிறாள் முத்துநாச்சி.  கானத்துறையில் அவர்களை எரியூட்ட சொல்கிறாள்.  

இச்சமயம் போர் பற்றிய செய்திகள் சென்னைக்குக் கடிதம் வாயிலாகச் செல்ல மேலும் பட்டாளம் வந்திறங்கியது.  இதனை ஊமைத்துரையிடம் உளவு சொல்வோன் வந்து கூற அவ்வேளையில் ஆயிரம் பேரும் காயமாறி இருக்கிறபோது நகாரடிக்கச் சொல்கிறான்.  

அச்சமயம் நித்திரைக்குப் போன முத்துநாச்சி நகாரு சத்தம் கேட்க ஊமையன் சாரி போவதைக் கேள்வியுறுகிறான்.  அதைக்கேட்டு முத்துநாச்சி நிலைகுலைந்த நிலையில் ஊமையன் அங்கு வர முத்துநாச்சி நான் உயிரோடு இருக்க நீ சாரி போவது எப்படி எனக் கேட்க இன்றைக்குச் சண்டைக்குப் போக வேண்டாம் என ஊமைத்துரை பலவாறு தடுத்தும் கேளாமல் முத்துநாச்சி போருக்குப் புறப்படுகிறாள்.  கட்டபொம்மன் குதிரையைக் கொண்டு வரச் செய்து கள்ளச்சிகள் கூட புறப்படுகிறாள்.

வெடிச்சத்தம் கேட்டால் உன்னை முன்னே கொண்டு போய்விடும் என எச்சரித்தும் கேளாமல் புறப்படுகிறாள்.

சூரியோதய வேளையில் போர் மூண்டது.  இச்சமயம் கம்பெனிக்கு உதவியாக எட்டையபுரத்தான் குத்துச்சண்டையில் இறங்கினான்.  இச்சமயம் குபீரென்று குதிரை பாய்ந்து கூடாரம் முன்பாக வந்ததும் முத்துநாச்சியை வேகமாக வீசிட அவளும்கீழே விழுந்துவிட்டாள்.  தாக்குதலில் கள்ளச்சிகள் மாண்டு விட்டனர்.  எதிரிகள் முத்துநாச்சியைக் பிடித்துக் கூடாரம் கொண்டு வந்து சேர்த்தனர்.  அச்சமயம் துரை சாராய மயக்கத்திலிருக்க அவனை இரண்டு துண்டாக வெட்டி பின் கூடாரம் விட்டு வெளியேறுகிறாள்.


வெளியில் பாராக்காரர்களை வெட்டி வீழ்த்துகிறாள்.  அச்சமயம் வக்கப்பட்டி தானாபதி மகன் தனது தந்தையை வெட்டிய பழியைத் தீர்த்துக் கொள்ள வேண்டி ஐநூறு பேருடன் முத்துநாச்சியைச் சுத்தி வளைத்தான்.  சிறிதும் தளராமல் அவனையும் வெட்டி வீழ்த்துகிறாள்.  இப்படி அவள் போராடிக் கொண்டிருக்கும் போது ஈட்டுகளும் வேலும் மார்பில் பாய அவள் உயிர் பிரிந்த்து.  இச்சமயம் அவளது குதிரையும் லாயம் வந்தடைவதைக் கண்டு ஊமைத்துரைக்குச் சேதி வர ஊமைத்துரை ராணுவத்தைத் தயார்படுத்தி முத்தையன் வெள்ளையையாவுடன் ஒட்டப்பிடாரம் வந்து குத்துச் சண்டையில் கலந்து கொண்டான்.  பலரை வெட்டி வீழ்த்திப் பிறகு தங்கையையும் கள்ளச்சிகளையும் வந்து பார்க்கின்றனர்.

தேடினாலும் கிட்டாத அரிய பிறப்பே இனி உன்னை என்றைக்குக் கண்பேனோ என்று அவளது அருமை பெருமைகளை எல்லாம் பேசி தங்கை மேல் விழுந்து முட்டிக் கொண்டழுதனர்.  பிறகு அவளை அலங்கரித்த பல்லக்கில் ஏற்றிக் கொண்டு செல்ல அம்பலக்காரன் சாமையன்மேல் அருள் வந்து ஆட அதன் வாயிலாக தான் இறந்த இடத்திலேயே தம்மை வைத்துக் கும்பிடுமாறு கூற அதன்படி அவளை எரியூட்டி அந்த இடத்தில் எட்டு நாட்களுக்குள் காரைக்கட்டுக் கோவில் கட்டி வைத்தனர்.


கன்னிகழியாத தன்னையும் கள்ளச்சிகளையும் ஒரே இடத்தில் சிலையாக வைக்க வேண்டாம் என அருள்வந்து கூற உள்மண்டபத்தில் முத்துநாச்சி சிலையையும் வெளிமண்டபத்தில் கள்ளச்சிகளின் சிலையையும் வைத்து வழிபடுகின்றனர்.  பிறகு ஊமைத்துரை வெள்ளைஅய்யாவை கோட்டைக்கு அனுப்பிவிட்டு 5000 பேர்களுடன் வக்கப்பட்டியான் மற்றும் பலலையும் வெட்டிச் சாய்த்துவிட்டு கோட்டைக்குத் திரும்பிகிறான்.  இவ்வாறாக முத்துநாச்சி சண்டை முடிவடைகிறது.






ஆய்வு : அன்பன்:கி.ச.முனிராஜ் வாணாதிராயன்.

தஞ்சை ஒக்கூர் கள்ளர்நாடு


தஞ்சை - ஒக்கூர்நாடு - கள்ளர் நாடு - ஒக்கநாடு கீழையூர் - மேலையூர்




நாட்டுக்குள்ளேயும்நாலு நாடு
நலம் பெறும் ஒக்கநாடு
பச்சிலை பறிக்கா நாடு
பைங்கிளி நோகாத நாடு
கள்ளர் மரபு தவறாத நாடு
கடல் தண்ணீயை வாட்டும் நாடு
சொல்லுக்கும் பெரிய நாடு
நிகழத்தால் பதில் சொல்லும்
சுயமரியாதை உடைய நாடு 

ஊர்ப்பெயர்கள்  பல்வேறு கதையாடல்களுக்கு நிலைகளனாக விளங்குகின்றன. ஒக்கூரும் பல தொன்மரபுகளையும் கதையாடல்களையும் கொண்டுள்ளதை மேற்கண்ட பாடல் மூலம் அறியலாம். 

இப்பாடலில் நாட்டுக்குள்ளேயும் நாலு நாடு என்று குறிப்பிடுவது காசவளநாடு, கோணூர்நாடு ,ஒக்கநாடு, பைங்காநாடு  என்னும் ஊர்களாகும். 

10,11 ஆம் நூற்றாண்டுகளில் இது போன்ற அமைப்பு காணப்பட்டுள்ளது. பின்னால் ஒவ்வொரு நாட்டுக்குள் இருந்த ஊர்களும் பிரிந்து உள்ளன. ஒக்காடு என்னும் ஊர் பின்னால் மேலையூர் கீழையூர் என்றும் பிரித்துள்ளது.  

இதில் நிகழத்தால் பதில் சொல்லும் நாடு என்பது பிற ஊர்களில் ஏதேனும் குற்றங்கள் நடந்தால் அது தொடர்பாக பஞ்சாயத்துக் கூட்டச் சொல்லி அனுப்படும் நாட்டோலையைக் குறிக்கும். இந்த ஊரில் நடக்கக் கூடிய வழக்குகளுக்கு மட்டுமல்லாமல் அவ்வூரைச் சுற்றி இருக்க கூடிய மற்ற ஊர்களிலும் வழக்குகள் இருந்தால், தீர்த்து வைக்கும் ஊராகவும் ஒக்கூர் இருந்துள்ளது. இன்றும் அந்நிலை இருப்பதைக் காணமுடிகின்றது. 

இந்த ஊரில் கள்ளரும் வெள்ளாரும் ஒருங்கு இருந்ததாகவும். வெள்ளாளர்கள் கள்ளர்களுக்கு கணக்ப்பிள்ளையாக இருந்துள்ளனர். வெள்ளார் இனத்துப் பெண் ஒருத்தி வேறு சாதிப் பையனை விரும்பியதால் தங்களது இனத்துக்கு பெரிதும் இழுக்கு வந்துவிட்டதாக்க கருதி அந்த ஊரில் இருந்த வெள்ளாளர் இனக் குடிகள் எல்லாம் தீக்குழி வெட்டி, கட்டக்குடி என்னும் ஊர் அருகே தீ பாய்ந்த தாகவும் அத்தீயில் விழப்போனவர்களைக் காப்பாற்ற கள்ளர் இன மக்கள் முயன்றதாகவும் அதற்கு அவர்கள்  வர மறுத்து ஒருவரைமட்டும் விட்டுவிட்டு இவர்உங்களுக்குத் துணையாக இருப்பார் இவருடன் சேர்ந்திருங்கள்  என்றுகூறி தீயில் பாய்ந்துள்ளார்கள் . இவருடன் சேர்ந்து பிழைத்துக் கொள்ளுங்கள் என்று கூறியதால் அக்கள்ளர் மக்களுக்கு சேந்தமுடையார் என்று ஒரு பட்டப்பெயர் வந்ததாகவும் கூறப்படுகின்றது. வெள்ளாளர்கள் தீயில் பாய்ந்த பகுதி கட்டக்குடியில்  தீபாஞ்சகுளம் என்னும் பெயரில் இன்றும் இருக்கின்றது.

அதிலிருந்து ஒக்கூர் பகுதியல் வசித்த  கள்ளருக்கு, சேந்தமுடையார் எனப்பட்டப் பெயர் வழங்கப்பட்டதாகக் கூறப்படுகின்றது. சேந்தமுடையார் பட்டப்பெயரைச் சார்ந்த  பழனி சேந்தமுடையார் என்பவருக்கு இரண்டு பெண் ஒரு ஆண் பிள்ளைகள். தஞ்சைப் பகுதியிலிருந்து மகாதேவபட்டிணக் கோட்டைக்கு காவலுக்குச் சென்ற அண்ணன் தம்பிகளான பெரிய மொத்தி, சின்ன மொத்தி என்னும் இருவரையும் பழனி சேந்தமுடையாரின்  பெண்கள் விரும்பியுள்ளார்கள். 

தமது பெண்களின விருப்பத்தை அறிந்த பழனி சேந்தமுடையார் உடன் பட்டு, திருமணம் செய்து வைக்க சம்மதித்துளார். பெரிய மொத்தி, சின்ன மொத்தி இருவரையும் தன்னுடைய பெண்களைத் திருமணம் செய்துகொள்ள விருப்பமா என்று கேட்டபொழுது,  பெரிய மொத்தி தனக்கு ஏற்கனெவே தஞ்சராயன் மகளுடன் திருமணம் ஆகிவிட்டது என்று கூற, திருமணம் ஆகியிருந்தாலும் பரவாயில்லை என்று கூறி, தன்னுடைய மூத்தப்பெண்ணை பெரிய மொத்திக்கும், சின்ன பொண்ணை சின்ன மொத்திக்கும் திருமணம் செய்து கொடுத்து, ஒக்கூரிலேயே அவர்கள் வாழ்வதற்குரிய வசதிகளைச் செய்துகொடுத்துள்ளார்.

பெரிய மொத்தியின் மூத்த மனைவியான தஞ்சராயர் மகள் நீண்ட நாட்களாக தன் கணவன் திரும்பாமல் இருந்த காரணத்தை அறிந்த பிறகு, தான் தன் கணவன் இருக்கும் இடத்துக்குச் செல்ல வேண்டமெனத் தன் தந்தை வீட்டாரிடம் கூறிய பொழுது, அவர்கள் மறுக்க, பிடிவாதமாக செல்லவேண்டமென்று கூறியுள்ளாள். அவர்கள் வேறு வழியில்லாமல் இங்கிருந்து உனக்கு என்ன தேவையோ அதனை எடுத்துக்கொண்டு செல் என்று கூற, அவள் அங்கிருந்த செல்லியம்மன் சிலை மட்டும் போது எனக் கூறி அதனை மட்டும் தன்னோடு எடுத்துக்கொண்ட்டு ஒக்கூருக்கு வந்து, தன்னுடைய நிலையினைப் பழனி சேந்தமுடையாரிடம் எடுத்துச் சொல்ல அவரும் அவளைத் தன் மகள் போல பாவித்து, அவ்வூரிலேயே அவள் வாழ வழி வகை செய்து கொடுத்தாராம்.

ஒக்கநாடு, ஒக்கநாடு மேலையூர் ஒக்கநாடு கீழையூர் என்று பிரிந்த பிறகு, அங்கு திருவிழா நடத்துவதற்குப் பயன்படுத்திய செல்லியம்மன் சிலையினை மேலையூர் எடுத்துச் சென்றவிட, தஞ்சைராயன் மகள் பெரிய மொத்தியின் மனைவி எடுத்து வந்த செல்லியம்மன் சிலையை வைத்துக்கொண்டு இன்றும் திருவிழா நடத்துவதாக்க கூறப்படுகின்றது. இந்த பெண் இருந்த வரை அத்தெய்வத்தை வைத்துக்கொண்டு வழிபட்டதாகவும், அவள் அத்தெய்வத்திற்காக வெட்டிய குளம் கிழவிக்குளம் எனவும் இன்றும் அழைக்கப்படுகின்றது.


இந்த  ஊரில் நடைபெறும் திருவிழாவை மையப்படுத்தியே,  அனைத்து செய்லபாடுகளும் நடைபெறுகின்றன. திருவிழாவினை அவ்வூரில் வாழும் பிற இனத்தாரின் அனுமதி / பங்கேற்புடன் தலைமை ஏற்று நடத்துவது  பழனி சேந்தமுடையாருடைய குடும்பம், அவர் குடும்பத்துக்கு முதல் மரியாதையும் முடியும் வழங்கப்படும். 

தமது மகளுக்குக் குழந்தை பிறந்த பிறகு தமது  பேரனை (மகள் வயிற்றில் பிறந்தவனை) மடியில் வைத்துக் கொண்டு  திருவிழாவின் போது மரியாதை பெற்றுள்ளார், அப்பொழுது அவர் மடியில் இருந்த பேரன்  கையை நீட்டியுள்ளான், பழனி சேந்முடையார் பேரன் கையிலேயே முடியை வழங்கும் படி  கூறியுள்ளார். அக்குழந்தை பெரியவனாகும் வரை தொடர்ந்துள்ளது. அவன் பெரியவனாக வளர்ந்த பிறகு பழனி சேந்தமுடையார் முதல் மரியாதையும், முடியையும் தானே பெற்றுள்ளார், உடனே இத்தனை நாள் தன் கையில் வாங்கி பழக்கப்பட்ட பேரன்,  தாத்தா இத்தனை நாள் என்னை வாங்க சொல்லி விட்டு இப்பொழுது நீங்கள் வாங்குகிறீர்களே என்று கேட்க,  பெரிய பெண்ணினுடைய வாரிசுக்கு முதல் முடியும், இரண்டாவது பெண்ணு வாரிசுக்கு இரண்டாவது முடியும், பெரிய மொத்தியின் மூத்த மனைவியின்  மகனுக்கு மூன்றாவது முடியும் வழங்க சொல்லிவிட்டு, இறுதியாக அவரும் பெற்றுக்கொண்டாராம். இந்த வழமை மாறாமல் இன்றும் திருவிழாவில் இம்முறை கடைப்பிடிக்கப்படுகின்றது.

குடும்பம் பெரிதாக தொடங்கியவுடன், தெற்கு தெரு மூத்த பெண்ணின் வாரிசுகளுக்கு உடைமைப்பட்டது என்றும், மேலத்தெரு இரண்டாவது பெண்ணின் குடும்ப வாரிசுகளுக்கு என்றும், வடக்குத் தெரு மோத்தியின் முதல் மனைவி வாரிசுக்கு என்றும், கிழத்தெரு தமது வாரிசுகளுக்கும் என பழனி சேந்தமுடையார் பிரித்துக் கொடுத்துள்ளார். இத்தெருக்களில் வசிக்கும் மரபுவழி தோன்றிய வாரிசுகள் தான் பஞ்சாயத்து குடும்பங்கள் என்று அழைக்கப்படுகின்றன. பின்னாள் வேறு பட்டப்பெயர்களைக் கொண்ட குடும்பங்கள் வந்தாலும்,  இவர்கள் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் தான் இன்று வரை மரபு வழியாக பஞ்சாயத்து தலைவர்களாக இருக்கின்றார்கள்.

இவ்வூரில் 18 இனத்தார் இருப்பதாக கூறப்படுகின்றது. இப்பதினெட்டு இனத்தாரின் சம்மதம் பெற்ற பிறகே பஞ்சாயத்தாரால் திருவிழா கூட்டப்படுகின்றது. திருவிழா கூட்டும் பொழுது ஏதேனும் வழக்குகள்/சிக்கல்கள் இருந்தால் சாவடியில் வைத்துப் பேசப்பட்டு தீர்க்கப்படுகின்றன. அதன் பிறகு அங்குள்ள ஆலமரத்தின் கீழ் வேட்டி விரித்து பஞ்சாயத்தார் (மரபு வழியாக வரக்கூடிய பஞ்சாயத்துக் குடும்பத்தை சார்ந்தவர்கள்) கூடி திருவிழாவினைக் கூட்டுகின்றனர். அப்பொழுது யாரும் மறுத்து பேசுவதோ, வழக்குகள் குறித்து  சச்சரவுகளைக் கிளப்புவதோ கிடையாது. அப்படி ஏதேனும் யாராவது மறுத்தோ வழக்கு குறித்தோ பேசினால், அடுத்த திருவிழாவிற்குள் பேசியவருக்கு ஏதேனும் கெடுதல் நேரிடும் என்ற நம்பிக்கை இவ்வூர் மக்களிடம் காணப்படுகின்றது. 

ஆலமரத்துக்கு கீழ்வேட்டி விரித்து திருவிழா கூட்டத் தொடங்கும் பொழுது மறுத்து பேசிய சிலர் அடுத்த ஆண்டு திருவிழாவிற்குள் இறந்துள்ளதாகவும் தெரிவித்தார்கள். இவ்வூரில் 18 இனத்தை சேர்ந்த மக்கள் வசித்தாலும் அவர்களுக்குள் எவ்விதமான கருத்து முரண்பாடுகளும் இன்றி ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து, அடுத்தவர் உணர்வுகளைப் புரிந்துகொண்டு நடக்கின்றனர். திருவிழாவின் போது  எந்த இனத்தாரும் விடுபாடு இன்றி அனைவரும் ஏதேனும் ஒரு வகையில் பங்களிப்பு நிகழ்த்தும் வண்ணம் திருவிழாவின் பணிகள் அமைக்கப்படுகின்றன. திருவிழாவின் போது இவ்வூரில் வசிக்க கூடிய பறையர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகின்றது.


கிராமங்களில் பொதுவாக நிலத் தகராறு, வரப்பு தகராறு, பங்காளி சண்டைகள் பஞ்சாயத்திற்கு வருகின்றன. கிராம சார் மரபு வழி பஞ்சாயத்துகள் கட்டப்பஞ்சாயத்து என்று தடை செய்யப்பட்டு இருந்தாலும், தங்கள் ஊர்களில் இருக்க கூடிய சிறு சிறு சிக்கல்களை அங்குள்ள பஞ்சாயத்தாரின் மூலமே தீரத்துக்கொள்ள, கிராம மக்கள் விழைகின்றனர். பொதுவாக நிலத் தகராறுகளுக்கு பஞ்சாயத்தார் இரு தரப்பினரிடமும் சந்து செய்துவிக்க முயலுகின்றனர். அவரகளும் அதற்கு கட்டுப்படுகின்றனர். 

அது போலவே அண்ணன் தம்பி சொத்து பிரிப்பு  போன்றவை கிராமங்களில் பஞ்சாயத்தார் முன்னிலையில் பாகம் பிரிக்கப்படுகின்றது. சாதி மாறிய காதலர்கள் ஊரை விட்டு ஓடிவிட்டால், முன்பு பஞ்சாயத்தார் எடுத்த முடிவுக்கும், இப்பொழுது எடுக்கும் முடிவுக்கும் வேறுபாடு இருக்கின்றது. இது போன்ற வழக்குகளில் ஏற்படும் சட்ட சிக்கல்களைக் கருத்தில் கொண்டு முடிவுகள் தற்போது எடுக்கப்படுகின்றன.  இப்பொழுது இவ்வூரின் அதிக பச்ச தண்டை அபதாரம் விதிப்பது தான். ஒக்கூர் அவ்வூரில் ஏற்பட்டும் வம்புவழக்குகளுக்கு மட்டுமல்லாமல் சுற்றியுள்ள கிராமங்களில் நிகழக்கூடிய சண்டை, சிக்கல்களுக்கும் பஞ்சாயத்து செய்யக்கூடிய ஊராக இருக்கின்றது.


அசுர நாகரிக வளர்ச்சியின் ஊடே,கிராமங்களும் தங்கள் நிறத்தினை மாற்றிக் கொள்ள தொடங்கினாலும் , சில பழமையான விழாக்களால் கிராமங்கள் இன்னும் தன்னை அடையாளப்படுத்திக் கொண்டுதான் உள்ளது. நாட்டுப்புற வழிபாடுகள் என்பது தொன்மை வாய்ந்தது. இவ்வழிபாடுக்ள மூலமாக பழமைகள் போற்றப்படுகின்றது, காக்கப்படுகின்றது என்றும் கூறலாம்.


வரலாற்றுச் சிறப்பைத் தன்னகத்தே கொண்டு , உலகின் அச்சானியாகத் திகழக் கூடிய உழவுத் தொழிலை மையமாகக் கொண்டு , கலைகளின் பிறப்பிடமாய் திகழக் கூடிய தஞ்சை தரணினியின் ஒரு சிறு பகுதியாக உள்ள இங்கு உழவுத் தொழில் தான் முக்கிய தொழிலாகவுள்ளது. ஆண்டு தோறும் உழைத்துக் களைத்த மக்களுக்கு , அவர்கள் கொண்டாடும் விழாக்களே ஒரு மாற்றாகவுள்ளது. இந்த கிராமத்தில் நாகரிக வளர்ச்சியின் தாக்கம் தலைக்காட்டத் தொடங்கியிருந்தாலும், இன்னும் பழமை மாறாமல் விழாக்களை நடத்திக் கொண்டுள்ளனர். 

கோடைக்காலத்தில் (மே) மாதத்தில் விழாக்கள்நடைபெறுவது வழக்கம்.இந்த ஆண்டும் கடந்த வாரம் காப்புக் கட்டுடன் இங்கு விழாத்தொடங்கியது. இன்னும் இங்கு விழாவினைப் பறையறைந்து அறிவிக்கும் முறைவுள்ளது.விழா அறிவிக்கப்பட்டவுடன் ஒவ்வொரு வீடுக்ளிலும் நவதானியங்களைக் கூட்டி, ஆட்டின் புழுக்கையைக் கொண்டு வந்து , இடித்து, பொடியாக்கி, அதனை பானையை உடைத்து அதன் கழுத்துப் பகுதியில், இல்லை இப்பொழுது வெங்கலத்தில் , முளைப்பாளி இடுவதற்கென வந்துள்ள பாத்திரத்திலோ இட்டு முளைப்பாளியை வளர்ப்பார்கள். தனித்தனியாக வீடுகளில் வளர்க்காமல் நான்கு ,ஐந்து பேர்கள் இணைந்து ஒரு வீட்டில் போடுவார்கள்.

முளைப்பாளி இடும் வீட்டினைத் தினமும் மிகத் தூய்மையாகப் பேணுவார்கள்.முளைப்பாளி நன்றாக வளர வேண்டும் என்பது அனைவருடைய வேண்டுதலாக இருக்கும். காரணம் யாருடைய முளைப்பாளியாவது சரியாக வளரவில்லை என்றால்,அந்த ஆண்டு ,முளைப்பாளி சரியாக வளராதவர்களுடைய வீட்டில் ஏதேனும் கெட்டது நடக்கும் என்பது நம்பிக்கை. அது உண்மையும் கூட,எங்கள் வீட்டில் 1999 இல் திருவிழா நடந்தபோது போட்ட முளைப்பாளி அழுகிவிட்டது, ஏதோ நடக்க போகிறது என்றார்கள்,அ துபோலவே என் தந்தை 2000 இல் இயற்கை எய்திவிட்டார். அதிலிருந்து அதில் கொஞ்சம் நம்பிக்கை உண்டு.


விழா அறிவிக்கப் பட்ட ஏழாம் நாள் கழித்து மூன்று நாள்கள் விழா நடைபெறும் .முதலா நாள் கொழுக்கட்டை திருவிழா.அன்று வெளியூரில் இருக்க கூடிய சொந்த பந்தங்களுக்கு கொழிக்கட்டை சுட்டுக் கொண்டு கொடுத்து விட்டு விழாவிற்கு அழைப்பது வழக்கம். காலையில் இருந்து மாலை வரை ஒரே கொழுக்கட்டை மயமாக இருக்கும். மாலையில் முளைப்பாளி போட்ட வீட்டிலிருந்து அவரவர் வீடுகளுக்கு எடுத்து வந்து, அதற்கு சாமிகும்பிடுவார்கள்.


இரண்டாம் நாள் முமையாக மீன்.எங்கு பார்த்தாலும் மீன் விற்பனை, எல்லார் வீட்டிலும் மீன் குழம்பு மீன் வறுவலாக இருக்கும். மாலையில் முளைப்பாளியினை அலங்கரித்துக்கொண்டு, அனைவரும் ஒரே இடத்தில் குழுமி,திரௌபதி அம்மன் கோயிலுக்கு அருகே உள்ள குளத்தில் கொட்டி விட்டு வருவார்கள். அன்று இரவு முமுதும் 21 காய்கறிகள் ,மீன் குழம்பு கருவாட்டு குழம்பு, மீன் கருவாடு வறுவல் சமையல் நடக்கும்.







மூன்றாம் நாள் தேர் திருவிழா.தேரில் வாரையினைக் கட்டி முன்பு தூக்கிச் செல்வது வழக்கம்,அதனைப் பார்க்கும் போது நன்றாக இருக்கும். ஆனால் இப்போது உள்ளவர்களால் தூக்கமுடியாமல் , சக்கரத்தின் மீது தேரினை வைத்து இழுத்துச் செல்லுகின்றார்கள். அப்போது உடல் வலிமை மிக்கவர்களாக இருந்தார்கள். இன்று இளைஞர்களிடம் உடல் வலிமை எப்படி இருக்கிறது என்பதற்கு இதுவே சாட்சியாகவுள்ளது.


செல்லியம்மன் உள்ள அந்த கோயில்லுக்கு இரவு சமைத்த உணவினை ஊரில் உள்ள அனைவரும் கொண்டு வந்து அங்கு வைத்துக் கும்பிடுவார்கள், வரமுடியாத சிலர் வீட்டில் வைத்தும் கும்பிடுவதும் உண்டு. இதனை சுள்ளுஞ்சோறு படைத்தல் என்று கூறுவார்கள்.


அது முடிந்தவுடன் மதுகாட்டல் என்ற ஒரு நிகழ்ச்சி நடைபெறுகிறது.மதுகாட்டல் என்றால் , அந்த ஊரில் உள்ள பறையர் இன மக்கள் திருவிழா அறிவிக்கப்பட்ட நாள் முதல் நவதானியங்களை ஒன்று சேர்த்து , ஒரு புதுப் பானையில் ஊர வைப்பார்களாம் ,அது ஒரு வாரத்திற்கு நன்கு ஊறுவதால் ,அதிலிருந்து ஒருவகையான மது உற்பத்தி ஆகுமாம்.அதனை அந்த ஆண்டு தேர்ந்தெட்டுக்கப் பட்ட குடும்பம் தான் செய்யும்.திருவிழா அன்று அந்த மதுவினை வடித்து இரண்டு புதுப் பானைகளில் ,அந்த இனத்தை சார்ந்த பெண்கள் எடுத்து வருவார்கள். அவர்கள் எப்படி எடுத்து வருவார்கள் என்றால் இடுப்புக்கு மேல் எவ்வித துணியும் அணியாமல் பூவினை அணிந்து மட்டும்கொண்டும், சிலர் வேண்டுதல் காரணமாக பெண்கள் தங்களுடைய தாலிகளை எல்லாம் கழற்றி இவர்கள் கழுத்தில் அணிந்து கொண்டும் வருவார்கள் . தாலியினை கழற்றி அவர்கள் கழுத்தில் அணிவிப்பதால்அம்மனிடம் வேண்டிய வேண்டுதல் பலிக்கும் என்ற நம்பிக்கை.


இரு பெண்களும் மது உள்ள அந்த கலசத்தை தாரை,தப்பட்டைகள் அதிர எடுத்து வருகிறார்கள்.அவர்களுடன் புதுப்பானையில் கரண்டிபடாமல் சமைத்த உணவு,காய்கறிகள், ஆட்டுக்கறி போன்றவற்றையும் எடுத்து வருகின்றார்கள். எடுத்து வந்து அந்த கோயிலை ஒருமுறை வலம் வந்த பிறகு, அந்த பெண்களை தலையில் இருந்து அந்த கலசம் இறக்கப்பட்டு,அம்மனுக்குப் படையல் இடப்படுகின்றது. அம்மனை அவ்வூர்கார்ர்கள் தூக்கிக் கொண்டு நிற்க,இவர்கள் படையல் இடுகின்றார்கள்.படையல் இடும் போது வாயினைத் துணியைக் கொண்டு கட்டிக்கொண்டும், உணவுகளை கையினாலேயே எடுத்து வைக்கின்றார்கள்.


சாமி கும்பிட்ட பிறகு,தாளம் சொல்லுதல் என்ற ஒரு நிகழ்ச்சி உள்ளது, அவர்கள் ஒவ்வொரு கரை என்று கூறுகிறார்கள் அந்த ஒவ்வொரு கரைக்கும் ஒருவராக வரிசையாக நின்று கொண்டு , தப்போசைக்கு ஏற்ப , அம்மனின் பெருமையைப் பாட்டாக பாடுகின்றார்கள். இந்த பாட்டில் இதனைப் பற்றிய நிகழ்ச்சி காஞ்சிபுத்திலும் ,திருவாரூரிலும் இருப்பதாகக் கூறுகின்றார்கள். எனக்கு சரியாக புரியவில்லை ஆராயப்படவேண்டிய ஒன்று.

தாளம் சொல்லுதல் முடிந்தவுடன், அங்கு படைக்கப்பட்ட மதுவினை அவர்கள் அனைவரும் குடிக்கின்றார்கள், அது அந்த இனத்தைச் சார்ந்தவர்கள் மட்டுமே குடிக்க வேண்டுமாம், பெண்களும் அதனைப் பருகின்றார்கள்.


இதன் பிறகு அம்மன் தேரில் ஏற்றபட்டடு,ஒவ்வொரு தெருவாக கொண்டு செல்வார்கள். நல்ல பெரிய தேராக இருக்கும். இங்கு என்ன சிறப்பு என்றால் புதிதாக வெட்டி மரத்தில் இருந்த உடனே இந்த தேர் செய்யப்படுவது. நல்ல உயரமாக இருக்கும். தேரில் அம்மன் ஏற்றப்பட்டு தெருவுக்குள் நுழையும் போது,பல ஆடுகள் பலியிடப்படும்.முதலில் எங்கள் தெருவுக்குத்தான் வரும். எங்கள் தெருவுக்கு மட்டும் ஒரு பழக்கம் தேர் வந்து சென்ற பிறகுதான் சாப்பிட வேண்டும் என்பது. தேர்வருவதற்கு கால தாமதம் ஏற்பட்டாலும் காத்திருந்துதான் சாப்பிடவேண்டும். ஒரு முறை தேர் எங்கள் தெருவின் பாதியிலேயே நின்று விட்டது அப்போது சாப்பிடாமலேயே இருந்தோம் தேர் சென்ற பிறகு மாலைதான் சாப்பிட்டோம்.




ஒக்கநாடு தான், நடிகர் நவரசத்திலகம் முத்துராமனின் சொந்த ஊர் ஆகும்.

ஆய்வு : முனைவர் கல்பனாசேக்கிழார் , 
அண்ணாமலைப் பல்கலைக்கழகம்





முனைவர் கல்பனா சேக்கிழார் அவர்கள் ஐயா செல்வம் ஈழம்கொண்டார் , திலகவதி  அம்மையார் மகள் ஆவார். கணவர் மருத்துவர் சேக்கிழார் ஆவார்.

புதன், 24 ஜூலை, 2019

சிங்களப் படையெடுப்பும் கள்ளர் தலைவர்களும்



சிங்களர்களின் புனித நூல்களான மகாவம்சம், குலவம்சம் நூல்களில் தாங்கள் யார் யாரிடம் போர்புரிந்தோம், யார் எங்களை எதிர்த்தவர்கள் என்பதை மிகவும் தெளிவாக குறித்துள்ளார்கள். இதில் வரும் ஊர் பெயர்களும், தளபதிகளின் பெயர்களும் சிங்களர்களின் உச்சரிப்பில் இருப்பினும், அதனை முதுபெரும் வரலாற்று நாயகர் கிருஷ்ணசாமி அய்யங்கார் உதவியுடன் குறிப்பிட்டுள்ளேன்.

முதலாம் விக்கிரமபாகு மன்னன் (1111–1132)

பொதுயுகம் 1170-71 காலகட்டத்தில் இருவேறு பாண்டியர்கள் மதுரையின் அரியணைக்காக மோதல்களைத் துவக்கி நடத்திக் கொண்டிருந்தார்கள். அந்தநேரத்தில் ஆண்டுகொண்டிருந்த பராக்கிரம பாண்டியனுக்கு எதிராக குலசேகர பாண்டியன் மதுரையை முற்றுகையிட்டிருந்தார். இந்த முற்றுகையில் குலசேகர பாண்டியன் வலிமையுடன் இருந்தததால் எந்தேநேரத்திலும் தான் ஆட்சியை இழக்க நேரிடலாம் என்று அஞ்சிய பராக்கிரம பாண்டியன் தனக்கு உதவி செய்யுமாறு இலங்கையின் அரசனான பராக்கிரமபாகுவுக்கு வேண்டுகோள் விடுத்தார்.

இலங்கைத் தீவானது சோழர்களின் ஆதிக்கத்தில் இருந்தது. முதலாம் விஜயபாகு (1055–1100) தன்னுடைய படையெடுப்பாலும் சோழர்களை வெற்றிபெற்று இலங்கையை கைப்பற்றினார். முதலாம் விக்கிரமபாகு மன்னன் (1153–1186) தலைநநகரமான அனுராதபுரத்தை கைவிட்டு திட்டமிடப்பட்ட புதிய நகரமான பொலன்னறுவைக்கு தலைநகரை மாற்றிக்கொண்டார்.

இலங்கையின் வரலாறு கூறும் மஹாவம்சத்தின்படி, அரியணை ஏறுவதற்காக பராக்கிரமபாகு ஏறத்தாழ பதினாறு ஆண்டுகள் தொடர்ந்து பல்வேறு எதிரிகளுடன் போரிட்டதாகக் கூறுகிறது. இந்த நேரத்தில் பாண்டிய நாட்டிலிருந்து உதவி கேட்டுவந்த தூதுவர்களின் வேண்டுகோளை ஏற்று உடனடியாக சிங்களப்படைகளை பராக்கிரம் பாண்டியனுக்கு உதவ அனுப்ப முடிவெடுத்தார் பராக்கிரமபாகு.

இந்த உதவி மதுரையை அடைவதற்கு முன்னர் பராக்கிரம பாண்டியன் போரில் தோற்கடிக்கப்பட்டார். அவரும், அவனது மனைவி மற்றும் குழந்தைகள் அனைவரும் கைது செய்யப்பட்டுப் பின்னர் படுகொலை செய்யப்பட்டார்கள். பின்னர் குலசேகர பாண்டியன் மதுரையில் பாண்டிய அரசனாக முடிசூட்டிக் கொண்டார்.


குலசேகர பாண்டியன் முடிசூடியதை அறியாத பராக்கிரமபாகு, புகழ்பெற்ற தனது தளபதியான லங்கபுர தண்டநாதவின் தலைமையில் ஒரு படையை அனுப்ப முடிவெடுக்கிறார். லங்கபுர தலைமையில் தலைநகரிலிருந்து புறப்படும் சிங்களப்படை இலங்கையின் மஹாதிட்ட (மாந்தோட்டம்) என்கிற இடத்தை வந்தடைகையில் குலசேகர பாண்டியன் மதுரையை வென்றதும் பின்னர் பராக்கிரம பாண்டியனுடன் அவனது மனைவி, பிள்ளைகள் கொலையுண்டதுமான செய்து வந்தடைகிறது. இருப்பினும் பராக்கிரமபாகு சிங்களைப்படைகளை மதுரையை நோக்கிச் செல்ல உத்தரவிடுகிறார்.

மஹாதிட்டவிலிருந்து புறப்படும் சிங்களப்படை தலபில்ல என்னும் துறைமுக நகரை வந்தடைந்து அங்கிருந்து கப்பல்களில் ஏறி ஒரு இரவும், ஒரு நாளும் பயணம் செய்து பாண்டியப்பகுதில் இருக்கும் தலபில்ல (புலியடிசாலை) என்னும் இடத்திற்கு வந்து சேருகிறார்கள்.

இந்தச் சூழ்நிலையில் குலசேகர பாண்டியன் படைகளுடன் படையெடுத்து வருகிறார் என அறியும் பராக்கிரமபாகு அவனை எதிர்க்க ஜகத் விஜய என்பவனின் தலைமையில் இன்னொரு படையை பாண்டிய நாட்டுக்கு அனுப்பி வைக்கிறார். அந்தப் படையும் சிங்களத் தளபதி லங்கபுர இருக்கும் ஆனைவிலக்கிற்கு வந்து சேருகிறது. இருவரும் நெட்டூர் மற்றும் ஆனைவிலக்கியில் தங்கள் முகாம்களைத் தனித்தனியாக அமைத்துக் கொள்கிறார்கள்.

தரைவழியாகச் சென்ற படைகளுக்குத் தானே தலைமை தாங்கிச் சென்ற குலசேகரபாண்டியனுக்கும் லங்கபுரவின் படைகளுக்கும் பெரும்போர் நிகழ்கிறது. குலசேகரனின் குதிரை கொல்லப்பட்டதால் அவன் பின்வாங்கிச் செல்கிறான். தோல்வியடைந்த பாண்டியப்படைகளின் நிலைகளைக் கைப்பற்றும் சிங்களப்படை அவற்றைத் தீ வைத்துக் கொளுத்தி அழிக்கிறார்கள். பின்னர் அங்கிருந்து நகர்ந்து ஏற்கனவே கைப்பற்றிய வடலை என்னும் நகரில் நிலைகொள்ளுகிறது சிங்களப்படை.

மாலவச் சக்கரவர்த்தி என்பவர் சிங்களப்படைகளுக்குச் சரணடைய மறுத்து புதுக்கோட்டைக்கு அருகிலிருக்கும் செம்பொன்மாரி என்கிற இடத்திலிருக்கும் கோட்டையில் சென்று பதுங்கிக் கொள்கிறார். வெல்லவே முடியாததாகக் கருதப்பட்ட அந்தக் கோட்டையைச் சோழர்கள் இரண்டு ஆண்டுகாலம் முற்றுகையிட்டும் வெல்ல இயலவில்லை என லங்கபுரவிற்குத் தெரியவருகிறது. எனவே அதனை நோக்கிச் செல்லும் சிங்களப்படைகள் வெறும் அரை நாட்களிலேயே அந்தக் கோட்டையைக் கைப்பற்றி உள்ளே நுழைகிறார்கள். எனினும் சிறிது நேரத்திலேயே பாண்டியப்படைகள் அந்தக் கோட்டையைச் சூழ்ந்து இலங்கைப்படையை முற்றுகையிடுகிறார்கள். பெரும் போருக்குப் பின்னர் அந்த முற்றுகையை உடைக்கின்றன சிங்களைப்படைகள்.

செம்பொன்மாரியை மீண்டும் மாளவச் சக்கரவர்த்திக்கு அளிக்கும் லங்கபுர, திருவேங்கம் மற்றும் கருத்தங்குடி வழியாக மீண்டும் ஆனைவிலக்கிக்குச் சென்று சேர்கிறார்.

பின்னர் அங்கிருந்து மீண்டும் சிறுவயலுக்குச் சென்று ஊர்த்தலைவனான புண்கொண்ட நாடாள்வார் என்பவரையும் அவரது நட்புப் படைகளையும் வென்று, நாடாள்வாரின் இரண்டடுக்கு கொண்ட மாளிகையைத் தீக்கிரையாக்குகிறார். லங்கபுர பின்னர் அங்கிருந்து காளையார் கோவிலுக்குச் சென்றுவிட, இன்னொரு சிங்களத் தளபதியான ஜகத் விஜய மானாமதுரையையும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளையும் பிடித்துவிட்டு மீண்டும் நெட்டூருக்குத் திரும்புகிறார்.

பின்னர் ஒண்றிணைந்த சிங்களப்படைகள் குலசேகரப் பாண்டியனைத் தேடி திருப்பாலூருக்குச் செல்கின்றன. இந்த நேரத்தில் குலசேகரப் பாண்டியன் மற்றும் சிங்களப்படைகளுக்கு இடையே போர் நடக்கிறது. போரில் தோல்வியுறும் குலசேகரப்பாண்டியன் அங்கிருந்து தப்பி தொண்டமான் நாட்டிற்கு (புதுக்கோட்டை) தப்பிச் சென்று தொண்டைமானின் கோட்டைக்குள் அடைக்கலம் ஆனார். அங்கிருந்து சோழர்களின் உதவியைக் கோருகிறார்.

பின்பு சிங்கள தளபதி லங்கப்புராவிற்கு எதிராக தொண்டைமானையும் (அறந்தாங்கி தொண்டைமான்), தன்னுடன் கூட்டணியில் சேர்த்து எதிர்க்க தயாராகினார் குலசேகர பாண்டியனார்.


குலசேகர பாண்டியன் படையும், தொண்டைமானார் படையும் மற்றும் பயமறியாத வீரனான அஞ்சமாதித்தா என்பருடன் சேர்ந்து சிங்களர்கள் கைப்பற்றி வைத்திருந்த மங்கலம்மா என்கிற இடத்திற்கு படையுடன் செல்கின்றனர்.

ஏற்கனவே இந்த இடத்தை சிங்களர்களிடம் போரிட்டு இழந்து மீண்டும் கைப்பற்ற முனைப்புடன் இருந்த மன்னையர் ராயர், தென்கொண்ட ராயர் என்கிற இரு குறு நில மன்னர்களுடன் சேர்ந்து குலசேகர பாண்டியன் சிங்களபடையை விரட்டுகிறார்.

இதனை சற்றும் எதிர்பார சிங்கள தளபதி லங்கப்புரா மிகவும் கோபமுற்று மதுரையிலிருந்து ஒரு பெரும் வலிமைமிக்க படையுடன் மங்கலம் கோட்டைக்கு போரிட வருகிறார். (வல்லுடி வால்மங்கலம், காளையார் கோவிலுக்கும் திருப்பத்தூருக்கும் இடையில் இருப்பதாகத் தெரிகிறது)


ஆனால் லங்கப்புராவிற்கு அங்கு எளிதில் வெற்றி கிடைக்கவில்லை. ஏனென்றால் அந்த கோட்டையை தொண்டைமான் மனைவியின் மூன்று சகோததர்களானா (பங்காளிகள்) முனையத்திரியர், கள்ளர் வேலைக்காரர் , காலிங்கராயர் மூன்று பேரும் அரணாக கத்திபோல் நெஞ்சை நிமிர்த்தி நின்றனர்.

லங்கப்புராவின் சிங்கப்படைக்கும், பாண்டிய தளபதிகளுக்கும் போர் மிகவும் மூர்க்கமாகவும், வீரமாகவும் நடந்தேரியது. இறுதியில் அதிக படையுடன் இருந்த லங்கப்புராவிற்கே வெற்றி கிடைத்தது. மங்கலம் கோட்டை மீண்டும் சிங்களர் வசம் சென்றது.

இந்த வெற்றிக்கு பின்பு ஶ்ரீவில்லிபுத்தூருக்கு சிங்களப்படை நகர்ந்து அங்கேயும் வெற்றி வாகை சூடியது. இந்த நேரத்தில் குலசேகரபாண்டியன் திருநெல்வேலியில் தன்னுடைய படையுடன் போருக்கு தயாராகுகிறார்.

குலசேகரபாண்டியன் தன்னுடைய வடகொங்கு மற்றும் தென்கொங்கு நாட்டில் உள்ள தம்பிகளிடம் படை உதவி கேட்கிறார். இந்த விசயத்தை கேள்வி பட்ட சிங்களத்தளபதி லங்கப்புரா தன்னுடைய பெரும் படையுடனும், ஜெகவிஜயா என்ற இன்னொரு தளபதியுடன் சேர்ந்து குலசேகர பாண்டிய மன்னனின் இன்னொரு மாபெரும் தளபதியான கள்ளர் வேலைக்காரர் முழுமையாக தரைமட்டாக்க திட்டமிடுகின்றனர்.

இந்த நேரத்தில் லங்கப்புரா மிகவும் நேர்த்தியாக குலசேகரபாண்டியன் தன்னுடைய தம்பிகளுடன் சேர்ந்துவிட்டால் தங்களால் சமாளிக்க முடியாது என்பதால், குலசேகரபாண்டியனின் தளபதியான கள்ளர் வேலைக்காரர், லங்கப்புரா வீழ்த்தி அவருடைய ஏராளமான குதிரைகளையும், தமிழர்களையும் போர் கைதிகளாக பிடித்து செல்கின்றனர்.

இரண்டு சிங்களத் தளபதிகளும், லங்கபுர மற்றும் ஜகத் விஜய, குலசேகரனின் இருப்பிடத்தைச் சூழ்ந்து அவனைத் தாக்குகிறார்கள். குலசேகரன் அங்கிருந்த ஒரு பெரிய ஏரியின் கரைகளை இடித்து அவர்களைத் தோற்கடிக்க முயல்கிறான். இருப்பினும் சிங்களத் தளபதிகள் அந்த ஏரியின் கரைகளை விரைவாகச் சரிசெய்து குலசேகரனை அங்கிருந்து விரட்டியடிக்கிறார்கள். சிரிமலக்கா மற்றும் குற்றாலம் பகுதிகள் அவர்களிடம் வீழ்கின்றன.

சிரிமலக்கா என்கிற இடத்தில் வைத்தே குலசேகர பாண்டியன், பராக்கிரம பாண்டியனையும் அவனது மனைவி, குழந்தைகளையும் கொன்றதால் அந்த ஊரில் இருந்த அரண்மனையைத் தீ வைத்து எரிக்க உத்தரவிடுகிறார் லங்கபுர. பின்னர் அங்கிருந்து சென்று சோழகுலந்தகம் என்னும் இடத்தைக் கைப்பற்றுகிறார்.


குலசேகர பாண்டியனுக்கு சோழ நாட்டிலிருந்து படையுதவி கிட்டுகிறது. பல்லவராயரின் கல்வெட்டுக்களின்படி இந்தப் படைகள் புதுக்கோட்டைக்குத் தெற்குப்பகுதியிலிருந்து வந்தவை எனத் தெரிகிறது. அவர்களுடன் இணையும் குலசேகர பாண்டியன் பாண்டு நடுக்கோட்டை மற்றும் உரியேரியைத் (எழுவன்கோட்டை மற்றும் இறகுசரி) தனது தலைமையிடமாகக் கொள்கிறார். இருப்பினும் அவரை அங்கும் தோற்கடிக்கும் இரண்டு சிங்களத்தளபதிகளும் பாளையைம்கோட்டையை அடைந்து அங்கு ஒளிந்திருந்த குலசேகரனை விரட்டுகிறார்கள்.

குலசேகர பாண்டியன் அங்கிருந்து மதுரையை நோக்கிப் படையெடுத்துச் செல்வதாகக் கேள்விப்படும் சிங்கள தளபதிகள் உடனடியாக மதுரையை நோக்கி வர, அங்கிருந்து தப்பும் குலசேகரன் சோழ நாட்டிற்குத் தப்பிச் சென்று சோழர்களின் உதவியை நாடுகிறார். பாடநல்லூரில் ஜகத் விஜயனை நிறுத்திவிட்டு லங்கபுர திருக்கண்ணப்பருக்குச் செல்கிறார். இதே வேளையில் சோழ நாட்டிலிருக்கும் குலசேகர பாண்டியனின் வேண்டுகோளை ஏற்கும் சோழ அரசர் அவருக்கு உதவியாக பல்லவராயரின் தலைமையிலும், பிற சோழ படைத்தளபதிகளின் தலைமையிலும் ஒரு படையைத் தரைவழியாகவும், தொண்டி துறைமுகம் வழியாகவும் அனுப்பி வைக்கிறார்.

இதனைக் கேள்விப்படும் லங்கபுர தனது படையணியில் ஒருபகுதியினரை மதுரையைப் பாதுகாப்பதற்காக வைத்துவிட்டு இன்றைய திருப்பத்தூர் தாலுக்காவிலிருக்கும் கீழாநிலை என்கிற இடத்திற்குச் செல்கிறார். இங்கு நடக்கும் போரில் சோழ, பாண்டிய கூட்டுப்படைகளைத் தோற்கடிக்கும் லங்கபுர, மணமேக்குடி மற்றும் வட மணமேக்குடி என்னும் ஊர்களைக் கைப்பற்றுகிறார். இந்த இடம் வெள்ளாற்றின் முகத்துவாரத்தில் இருகிறது. இந்த இரண்டு ஊர்களையும் தீக்கிரையாக்கிவிட்டு மஞ்சக்குடி என்கிற ஊரையும் எரித்து அழிக்கிறார் லங்கபுர.

குலசேகர பாண்டியனுக்கு உதவிய சோழர்களைப் பழிவாங்கும் பொருட்டு சோழப்பகுதிகளில் ஏழுகாததூரம் நுழையும் சிங்களப்படைகள் அந்தப்பகுதிகளைத் தாக்கி அழிக்கின்றன. பின்னர் குலசேகரனுக்கு உதவச் சென்ற நெடுந்தரையரின் ஊரான வேளாக்குடிக்குச் செல்கின்றன சிங்களப்படைகள். ஆனால் நெடுந்தரையர் வேறுபல தமிழ் சிற்றரசர்கள், தளபதிகளின் உதவிகளைப் பெறுவதில் வெற்றி பெறுகிறார். அவரது படைகளுடன் குலசேகரப்பாண்டியனுடன் வந்த திருநெல்வேலி, கொங்குப் படைகளும் ஒன்று சேர, பொன்னமராவதியில் லங்கபுரவை எதிர்த்து நிற்கிறான் குலசேகரபாண்டியன். அங்கும் அவனைத் தோற்கடித்து விரட்டுகிறார் லங்கபுர.

பாண்டிய நாட்டில் வீரபாண்டியனின் எதிரிகளை வீழ்த்தி விரட்டிவிட்டதாக எண்ணும் லங்கபுர பின்னர் தனது தலைமையகத்திற்குத் திரும்புகிறார். பின்னர் தனது அரசனான இலங்கையின் பராக்கிரமபாகுவை கவுரக்கும் வகையில் பராக்கிரமபாகுவின் படம் பொறித்த இலங்கைப் பணத்தை (கஹபண) பாண்டிய நாட்டில் தயாரிக்க உத்தரவிடுகிறார். வீரபாண்டியனுக்குப் பொறுப்புகளை ஒப்படைத்த பின்னர் பாண்டிய நாட்டில் கைப்பற்றிய கைதிகள், யானைகள், குதிரைகள் போன்றவற்றை இலங்கைக்கு அனுப்பி வைத்துவிட்டுத் தானும் இலங்கை திரும்புகிறார் லங்கபுர.

லங்கபுரவின் மாபெரும் வெற்றியைக் கவுரவிக்கும் பொருட்டு பராக்கிரமபாகுவே நேரில் வந்து அவரை வரவேற்கிறான். அவரது நினைவாக பண்டுவிஜயக என்கிற கிராமம் நிறுவப்பட்டு ஏராளமான பொன்னும், பொருளும் பிராமணர்களுக்குத் தானமாக வழங்கப்படுகிறது.

குறிப்பு :

இங்கு பாண்டியருக்கு துணை நின்ற தலைவர்கள் கள்ளர் மற்றும் மறவரே . இதில் வரும் பட்டங்களை உடைய கள்ளர்கள் மற்றும் மற்றவர்கள் இன்றும் அந்த பகுதியில் வாழ்ந்து வருகின்றனர்.

1) குலசேகர பாண்டிய மன்னனின் இராணுவ தலைமையிடம்:


சிங்களர்கள் தங்களது எதிரிகளான பாண்டிய மன்னனின் இராணுவ தலைமையிடமாக குறித்த இடம் தான் எழுவன்கோட்டை மற்றும் இறகுசரி. இந்த இரண்டு ஊர்களும் குலசேகர பாண்டியனின் உறுதியான கோட்டைகளுடன் மிகவும் வீரமிக்க படைகள் இங்கே இருந்ததாகவும் குறிக்கப்பட்டுள்ளது. இன்றும் இந்த இரண்டு ஊர்களும் மிகவும் உயிர்ப்புடன் உள்ளது.

எழுவன் கோட்டை என்ற ஊர், ஏழுகிளை கள்ளர் நாடுகளில் வலிமைமிக்க நாடுகளில் ஒன்றான தென்னிலை நாட்டின் தலைமை அம்பலமாக 1000வருடங்களாக எழுவன் கோட்டை அம்பலம் திகழ்கிறார். மேலும் புகழ்பெற்ற கண்டதேவி தேரோட்டத்தில் முதல் மரியாதை இந்த தென்னிலை தலைமை அம்பலமான எழுவன் கோட்டை அம்பலமே பெறுகிறார்.

அதேபோல் இறகுசேரியும் எழுகிளை கள்ளர் நாடுகளில் ஒன்றாகும். கண்டதேவி தேரோட்டத்தில் உள்ள நான்கு வடத்தில் நான்காவது வடமும், முதல் மரியாதையும் இறகுசேரி அம்பலத்திற்கே கொடுக்கப்படுகிறது.

மகாவம்சத்தில் குறிப்பிடப்பட்ட செம்பொன்மாரி இன்றும் எழுகிளை கள்ளர் நாடுகளில் ஒன்றாக திகழ்கிறது. சொலையர்கள் என குறிப்பிடப்பட்ட சோலையன் கிளை கள்ளர்கள் இன்றும் வசித்து வருகின்றனர். செம்பொன்மாரி கள்ளர் நாடு: 22.5 கிராமங்கள் உடையது.

2) சிறுவயல் தலைவர் புண்கொண்ட நாடாள்வார் :

மறவர் சீமையின் தலைவர்கள் வடவால திருக்கை நாடாள்வார், குண்டைய முத்தரையர், அஞ்சுகோட்டை நாடாள்வார், அதளையூர் நாடாள்வார், தழை யூர் நாடாள்வார், என பல தலைவர்கள்.


சிவங்கங்கை மன்னர் கௌரி வல்லபத்தேவர் - மாணிக்காத்தாள் தம்பதிக்கு, குழந்தை பாண்டிய தேவர், நமச்சிவாய தேவர், ராமசாமித்தேவர் எனும் மூன்று மகன்கள் இருந்தனர். அவர்களுக்கு சிறுவயல், முடிகண்டம், குருந்தம்பேட்டை ஆகிய கிராமங்கள் அளிக்கப்பட்டது

3 ) மன்னையர்ராயர், தென்கொண்டராயர் :


இந்த நூற்றாண்டில் சிறப்பு பெற்று விளங்கியவர்கள் ஐயா. நடராசன் மன்னையர், மன்னார்குடி தியாகி. கோபால்சாமி தென்கொண்டார்

முனைவர் திரு. ம. நடராஜன்


(தியாகி. கோபால்சாமி தென்கொண்டார்)

4) தொண்டைமான் மனைவியின் மூன்று பங்காளிகள் முனையத்திரியர், கள்ளர் வேலைக்காரர் / களத்துவென்றார் , காலிங்கராயர் குறிப்பிடப்படுகிறார்கள்:



இந்த நூற்றாண்டில் சிறப்பு பெற்று விளங்கியவர்கள் மக்கள்செல்வார் TTV தினகரன் முனையத்திரியர். 1942ல் இலங்கை கண்டி கள்ளர் மகாசபை செலாளர் ராஜமுத்தையா காலிங்கராயர்(மடுல்களை).

கள்ளர் வேலைக்காரர் என்பதை நோக்கும் போது சோழர்களின் வேலைக்கார படை என்று ஒரு தனி படை இருந்தது. 13 ஆம் நூற்றாண்டில் முகமதியரிடம் இருந்தது காத்துக்கொள்ள மக்கள் கள்ளவேலைக்காரர்களிடம் சரணடைந்ததை கல்வெட்டு குறிப்பிடுகிறது. இதை தவிர அதில்குறிப்பிட பெயர் களத்தில்வென்றார் என்பதாகவும் இருக்கலாம்.

தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே நேமம் கிராமத்தில் ஐராவதீஸ்வரர் கோவிலில் அறங்காவலர் பொறுப்பும் மற்றும் முதல் மரியாதை களத்தில்வென்றார் பெறுகிறார்கள்.

5) வீரனான அஞ்சமாதித்தா ((அண்ணுண்டார் / அண்ணுத்திப்பிரியர்) என்ற பட்டமுடையவர்களாகவே இருக்கலாம்


6 ) வேளாக்குடி என்ற ஊர், தஞ்சையில் இருந்து 75 km தொலைவில் உள்ள பேராவூரணி பகுதியில் உள்ளது. மேலும் நெடுந்தரையர் பட்டம் உடைய கள்ளர்கள் இன்றும் வாழ்ந்துவருகின்றனர்.


7 ) கீழாநிலை கோட்டை:






கீழாநிலை முக்கிய கோட்டையாக திகழ்ந்தது. பல்வேறு மன்னர்களின் ஆளுகைக்கின் கீழ் சென்றிருந்தாலும் இறுதியாக தொண்டைமான்களிடம் வந்தது.

ஆய்வு : சோழபாண்டியன்

நன்றி: 
திரு. பி.எஸ். நரேந்திரன்
குலவம்சம் (சிங்கள புனித நூல்)

வரலாற்று பக்கங்கள் - II

வளரி வரலாறு   👈 Click above திருமங்கையாழ்வார் வரலாறு 👈 Click above அம்பலகாரர் / அம்பலம் வரலாறு 👈 Click above வாண்டையார் வரலாறு 👈 Click a...

இந்த வலைப்பதிவில் தேடு

என்னைப் பற்றி

எனது படம்
Contact: info.kallarkulavaralaru@gmail.com, தமிழகத்தில் வாழும் கள்ளர் மரபினர் முக்குலத்தோரில் ஒரு பிரிவினர் ஆவர். கள்ளர், மறவர், அகமுடையார் ஆகிய முக்குலங்களும் போர்த் தொழிலை அடிப்படையாக கொண்டு வாழ்ந்து வந்ததால் இந்த மூன்று சாதியினரும் முக்குலத்தோர் என்று அறியப்படுகின்றனர். இந்த மூன்று குலத்தினரும் "தேவர்" என்ற பொதுவான பெயரோடு அறியப்படுகிறார்கள். கள்ளர் மரபில் அறந்தாங்கி தொண்டைமான், புதுக்கோட்டை பல்லவராயர், புதுக்கோட்டை தொண்டைமான் மற்றும் பல சமீன்தார்களும், பெரு நிலவுரிமையாளர்களும் இருக்கின்றனர். (கள்ளர் படைப்பற்று - கள்ளர் நாடு - கள்ளர்த்தடி). கள்ளர் வரலாறு : வரலாறு என்றால் வந்த வழி என்று பொருள். வந்த வழி தெரியாதவர்களுக்குப் போகும் வழி புரியாது. வரலாற்றை நாம் நினைவு கூர்வதற்குக் காரணம் கடந்து போன ஈகங்களை எண்ணிக் கண்ணீர் விடுவதற்காகவும், நிகழ்த்தி விட்ட வீரங்களைச் சொல்லிப் பெருமை பேசுவதற்காகவும் அல்ல. வருங்காலத்திற்கு வழி சமைப்பதற்கு அந்த ஈகமும் வீரமும் வழிகாட்ட வேண்டும் என்பதற்காகத்தான். கள்ளர்களின் நான்கு முக்கிய பிரிவுகள் - ஈசநாட்டுக்கள்ளர் (திருச்சி, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை) : கிளைவழிக்கள்ளர் (சிவகங்கை) : அம்பல கள்ளர் / நாட்டார் கள்ளர் (சிவகங்கை, மதுரை) : பிறமலை கள்ளர் (மதுரை, உசிலமபட்டி, தேனி, கம்பம், திண்டுக்கல்)

வலைப்பதிவு காப்பகம்

பின்பற்றுபவர்கள்