7 ஆம் நூற்றாண்டு
திண்டிவனத்தில் உள்ளஉள்களத்தை சேர்ந்த கள்ளர் உழுத்திர சயியாறு என்பவர் செய்த விநாயகர் சிற்பம்
வரலாற்று ஆய்வாளர் ஐயா. மா.மாரிராஜன் ஆய்வில்
தமிழ்நாட்டில் கண்டுபிடிக்கப்பட்ட 2 ஆம் நூற்றாண்டு விநாயகர் முதல் தற்போதைய வரலாற்று தகவல்களை அழகாக விளக்கம் தருகிறார்.
' பிள்ளையார் சதுர்த்தி "
பிள்ளை.. யார்..?
இவரது தோற்றம் என்ன , வரலாறு என்ன, கதை காரணம் போன்ற ஆய்வுகளை சற்று புறந்தள்ளி பார்க்கும்போது பிள்ளையாருக்கும் தமிழ்நாட்டு மக்களுக்கும் காலத்தை வென்ற ஒரு தொடர்பு இருக்கத்தான் செய்கிறது. வேறு எந்த ஒரு கடவுளாரிடமும் இல்லாத ஒரு நெருக்கமும் அணுக்கமும் உரிமையும் பிள்ளையாரிடம் மட்டும் இருக்கிறது.ஏதோ ஒரு ஈர்ப்பு மிகுந்த கடவுளாகவே உள்ளார்.
மூலப்பொருள் என்பார்கள். அனைத்திற்கும் முதல்வன் என்பார்கள். உண்மைதான். கோவில் இல்லாத ஊர்கள் கூட உண்டு. ஆனால் பிள்ளையார் இல்லாத ஊர் இருப்பது மிக அரிது. கிராமத்து குளக்கரை, ஆற்றங்கரை என்று ஆரம்பித்து பெரும் நகர நவீன தொழிற்சாலைகள், மருத்துவமனை வாசல் வரை இடம் பிடித்தவர் பிள்ளையார் மட்டுமே.
இன்னும் ஒரு சில மரங்கள் வெட்டப்படாமல் இருக்கும் காரணம் அம்மரத்தடியில் பிள்ளையார் இருப்பதால்தான்.
வெகு எளிய மக்களின் பிரியத்திற்குரிய கடவுள். ஒரு தோழனாக, குருவாக நமக்குத் தேவையான. எந்த ஒரு அவதாரமும் பிள்ளையார் எடுப்பார். நெருக்கமாகச் சென்று நாம் உரிமையுடன் வேண்டுவது பிள்ளையாரிடம் மட்டுமே.. "நான் கேட்டது மட்டும் நடக்கலை" என்று அவருக்கு எச்சரிக்கை கூட விடுக்கலாம்.கோபித்துக் கொள்ளமாட்டார். எந்த நேரமாக இருந்தாலும் மரத்தடிப் பிள்ளையாரை நாம் சந்திக்கலாம். காத்திருப்போ கதவடைப்போ இவரிடம் இல்லை. 24 × 7 மணி நேர தொடர்சேவை தரும் கடவுளார் இவர்.
இவரை வணங்குவதற்கு எந்த ஒரு ஆகம விதியோ சாத்திர சுலோகங்களோ இருப்பதாகத் தெரியவில்லை. அப்படியே இருந்தாலும் அது தேவைப்படவும் இல்லை நாமே நமது கரங்களால் ஒரு குடம் நீரால் அபிசேகம் செய்து அவரது திருமேனியை தொட்டுத் தேய்த்து குளிப்பாட்டி, ஒரே ஒரு அருகம்புல் மாலை அணிவித்து பிள்ளையாரப்பா என்று அழைத்தால் வழிபாடு நிறைவுற்றது. வேறு எதையும் அவர் நம்மிடம் எதிர்பார்ப்பது இல்லை.
கடும் விரதம் , பாதயாத்திரை, பூக்குழி இறங்கி, அலகு குத்தி போன்ற வழிபாடெல்லாம் பிள்ளையாருக்கு அறவே பிடிக்காது. எந்த ஆர்ப்பாட்டங்களையும் விரும்பாதவர்.
எல்லோருக்கும் பிடித்தமான கடவுள் இவர்.
எளிய தோற்றம், சாந்தமான முகம் கொண்டு அனைவரையும் ஆசிர்வதிக்க காத்திருப்பார். ஆங்கார அரூப சொரூபமெல்லாம் மரத்தடி பிள்ளையாருக்கு கிடையாது.
அதற்காக கீர்த்தியில் சற்றும் குறைந்தவர் அல்ல.. இவரும் பல அரும்பெரும் வித்தைகள் செய்தவர்தான்.
நீண்ட வரிசை, சிறப்புக்கட்டணம் , சேவைக் கட்டணம், கால பூஜைக்கட்டணம் இன்னும் ஏதேதோ கட்டணங்கள் அனைத்தையும் தவிர்த்த கடவுள். அருள் பாலிப்பது கடவுளின் கடமை. அதை காசாக்குவது அல்ல என்ற நியதியை இன்று வரை கடைபிடிப்பது
கணபதி ஒருவரே.
மற்ற கடவுளார் போல் நகை நட்டு, நிலம் புலம் போன்ற பெருஞ்சொத்துக்கு அதிபதியான பெருந் தனவான் அல்ல இவர். இவர்மீது மக்கள் கொண்டிருக்கும் நம்பிக்கையும் அணுக்கமும் மட்டுமே பிள்ளையாரின் பெருஞ்சொத்து.
பிள்ளையாரை வணங்குவது மட்டுமல்ல, அவரது உருவத்தை செய்வதுகூட வெகு எளிது. கைப்பிடி மஞ்சள் தூள் அல்லது களிமண் போதும். உருண்டையாகப் பிடித்து சந்தனம் குங்கும் வைத்தால் போதும் பிள்ளையார் தயார். படையலாக நம்மால் எது முடியுமோ அதுவே பிள்ளையாருக்குப் பிடித்தம். பொரிகடலை முதல் நாம் படைக்கும் எதையும் ஏற்றுக்கொள்வார்.
இருந்தும் , பிள்ளையாருக்கு மிகவும் பிடித்தமானது கொழுக்கட்டை மட்டுமே.
பிள்ளையாரைப் போலவே கொழுக்கட்டையும் அனைவருக்கும் பிடிக்கும். குழந்தைகள் முதல் பெரியோர்கள்வரை அனைவருக்கும் பிடித்தமான ஒன்று. விரும்பி உண்பார்கள்.
அது என்னவோ தெரியவில்லை கொழுக்கட்டை பிள்ளையாருக்கு மட்டுமே படைக்கப்படுகிறது.வேறு யாருக்கும் அதை விட்டுத்தர பிள்ளையாருக்கு
விருப்பமில்லை போலும்.
வேண்டுதல் நிறைவேற அவருக்கு செலுத்தும் காணிக்கையும் மிக எளிது.
ஒரே ஒரு சிதறு தேங்காய் போதும்.
அதுவும் முடியவில்லை என்றால் ஒரு பத்து தோப்புக்கரணம் போடலாம்.
( தோப்புக்கரணம் போடுவது நல்லதொரு உடற்பயிற்சி என்கிறார்கள் மருத்துவ ஆய்வாளர்கள்.)
மக்களின் வாழ்வியலுடன் மிக நெருக்கமான கடவுள் பிள்ளையார் மட்டுமே.
நிச்சயமாய் ஒரு ஊர் தெருவுக்கு ஒருவர் கணேசன் என்று பெயருள்ளவர் இருப்பார்.
எந்த ஒரு செயலைத் தொடங்கும் போதும் நம்மிடம் இருந்து வெளிப்படும் வார்த்தை
" என்ன, பிள்ளையார் சுழி போட்டாச்சா.? "
என்பதுதான்.
இவரை வணங்காமல் எந்த ஒரு செயலும் வெற்றியடையாது என்பது அனைவரின் முழுமையான நம்பிக்கை.
எவ்வித வேறுபாடுகளும் இன்றி எந்த ஒரு சம்பிரதாயத்திற்கும் இடம் கொடுக்காமல் நம் வாழ்வியலோடு கலந்த ஒரு தெய்வம்.
களத்துமேட்டுப் பெண்களின் கவலையை நீக்கி பள்ளிக் குழந்தைகளை தேர்வில் வெற்றி பெற ஆசிர்வதித்து, விதைப்பிற்கு வாழ்த்து அறுவடைக்கு வரவேற்பு வியாபாரத்தில் இலாபம் வழக்குகளில் தீர்ப்பு இன்னும் பல பரிமானங்களில் பிள்ளையார் நம்முடன் கலந்துள்ளார்..
பிள்ளையார் எல்லோருக்கும் சொந்தம்.
எல்லோரும் பிள்ளையாருக்கு சொந்தம்
என்ற தத்துவத்துவத்துக்குரியவர்.
களத்து மேட்டு பிள்ளையார், முக்குறுனி பிள்ளையார், நடுத்தெரு பிள்ளையார், என்று பல்லாயிரம் பெயர்களில் பல ஆயிரம் பிள்ளையார்கள் பரந்து விரிந்து இருப்பது தமிழகத்தில் மட்டுமே. குக்கிராமங்கள் முதல் பெருநகரங்கள் வரை பிள்ளையார் இல்லாத இடமே இல்லை. அந்த அனைத்து இடங்களிலும் பிள்ளையார் பிறந்தநாள் கொண்டாடுவதே பிள்ளையாருக்குக் கிடைத்த மிகப்பெரும் அங்கிகாரம்.
" பிள்ளையார் சதுர்த்தி "
இந்தியாவிலேயே காலத்தால் மிக மூத்த பிள்ளையார் உருவம்
தமிழ்நாட்டில்தான் கிடைத்துள்ளது.
பாண்டிச்சேரி - அரிக்கமேடு.
1945 ஆம் ஆண்டு நடந்த அகழாய்வின் போது பிள்ளையார் சிற்பம் ஒன்று கிடைத்தது. தொல்லியல் ஆய்வாளர் திரு.வீலர் கண்டுபிடித்த சிற்பம் இது. சிற்பத்தின் காலமாக கி.பி. 2 ஆம் நூற்றாண்டு என வரையறை செய்யப்படுகிறது.
இந்தியாவிலேயே எண்ணிக்கையில் அதிகமாக பிள்ளையார் சிற்பங்கள் இருப்பது தமிழகத்தில் மட்டுமே.
வடக்கிருந்தோ வாதாபியிலிருந்தோ முதன்முதலாக பிள்ளையார் தமிழகம் வந்தார் என்பது முற்றிலும் தவறான செய்தி. நரசிம்மவர்மன் காலத்திற்கு முன்பே தமிழ்நாட்டில் பிள்ளையார் வழிபாடு உண்டு. நரசிம்மவர்மனின் தந்தை மகேந்திரவர்மன் காலத்தில் எடுத்த குடவரைக்கோவிலில் பிள்ளையார் உண்டு.
புத்தர் தலையை எடுத்து யானைத்தலை ஒட்டப்பட்ட கதை ரூம்போட்டு யோசித்தது.
19 ஆம் நூற்றாண்டு கதை இது. மரத்தடியில் புத்தர் சிற்பம் இருந்ததாம். புத்தாரின் தலையை வெட்டிவிட்டு யானைத்தலையை பொருத்தி பிள்ளையார் உருவெடுத்தாராம்..
புத்தர் எப்படி இருப்பார்.?
பிள்ளையார் எப்படி இருப்பார்.?
இந்தத் தலை அந்த உடலோடு எப்படிப் பொருந்தும் ? புத்தருக்கோ ஒட்டிய வயிறு.
பிள்ளையாருக்கோ பெருத்த வயிறு. புத்தருக்கோ நீண்ட கை மற்றும் கால். பிள்ளையாருக்கோ கை கால் இரண்டும் குட்டை. புத்தருக்கு இரண்டு கை. பிள்ளையாருக்கு நான்கு கை.
பிள்ளையாருக்கும் புத்தருக்கும் ஆறு அல்ல அறுபது வித்தியாசம் உண்டு.
இது எப்படி அதுவாகும்.?
தமிழ்நாட்டில் பிள்ளையார் வழிபாடு குறித்த ஏராளமான தொல்லியல் தரவுகளும் நூற்றுக்கும் மேற்பட்ட கல்வெட்டு செய்திகளும் உண்டு.
சங்க இலக்கியங்களில் பிள்ளையார் வழிபாடு இல்லை என்பது உண்மைதான்.
சங்க இலக்கியம் என்பது வழிபாடுகளுக்கான அளவுகோல் அல்ல.
சங்க காலத்தைச் சேர்ந்ததாக அரிக்கமேடு அகழாய்வில் பிள்ளையார் சிற்பம் கண்டறியப்பட்டது.
பிள்ளையார் பற்றிய அழுக்குருண்டை கதை பிற்காலத்தில் சொல்லப்பட்டது.
இந்த அழுக்குருண்டை கதை
16 ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட சிவ மகாபுராணம் என்னும் வடமொழி நூலில் உள்ளது. இதை திருமலைநாதர் என்பவர் தமிழில் மொழியில் பெயர்த்தார்.
இக்கதை சொல்லப்பட்ட காலத்திற்கு 600 ஆண்டுகளுக்கு முன்பே பிள்ளையார் வழிபாடு தமிழகத்தில் 1500 ஆண்டுகளாக தொடர்ந்து வந்துள்ளது.
விழுப்புரம் அருகே ஆலக்கிராமம் என்னும் ஊரில் உள்ள பிள்ளையார் சிற்பத்தின் காலம் கி.பி. 5 ஆம் நூற்றாண்டு.
ஆகவே 1500 வருடத்துக்கு முன்பே இங்கே பிள்ளையார் வழிபாட்டில் இருந்துள்ளார் என்பது வரலாற்றுச் சான்றாகும்.
தமிழ்நாட்டில் உள்ள மொத்த பிள்ளையார் சிற்பங்களின் எண்ணிக்கை என்பது கடற்கரை மணலை எண்ணுவது போலாகும்.
அனைத்து ஊர், கிராமம் நகரம், ஆற்றங்கரை, குளக்கரை,வாய்க்கா வரப்பு மரத்தடி என்று எங்கும் பிள்ளையார் இருக்கிறார். அனைத்துக் கோவில்களிலும் இடம்பெற்று உள்ளார்.
ஒரு பழமைக்குச் சான்றாக
தமிழ் நாட்டில் ஆரம்ப கால கோவில் வழிபாடு என்பது குடவரைகள்தான்.
பாறைகளைக் குடைந்து செய்யப்பட்ட குடவரைகளில் உள்ள பிள்ளையார் உருவங்களை வகைப்பாடு செய்தால்...
தமிழகத்தில் உள்ள பழமையான பிள்ளையார் சிற்பங்களின் பட்டியல்..
கோவில்களுக்கு முந்தைய காலம் குடவரைகள். குடவரைகளில் உள்ள
காலத்தால் முற்பட்ட பிள்ளையார் சிற்பங்கள் -
தமிழகக் குடைவரைகளில் காணக் கிடைக்கும் பிள்ளையார் சிற்பங்கள் அரச மரபினர் வாரியாக....
1. பாண்டியர்: 21
2. முத்தரையர்: 3
3.பல்லவர்கள்: 4
மொத்தம் : 28
பாண்டியர் குடைவரைகளில் பிள்ளையார் சிற்பம்:
1. பிள்ளையார்பட்டி
2. செவல்பட்டி
3. திருக்கோளக்குடி
4. மலையக்கோயில்
5. தேவர்மலை
6. அரிட்டாப்பட்டி
7. திருமலைப்புரம்
8. குன்றக்குடி கிழக்கு
குடவரை.
9.திருக்கோகர்ணம் குடைவரை
அர்த்த மண்டபம்
10. திருக்கோகர்ணம் அன்னையர்
எழுவர் தொகுதி
11. குன்னத்தூர் நீலகண்டேஸ்வரர்
12. குன்னத்தூர் உதயகிரி
13. குடுமியான்மலை
14. வட பரங்குன்றம்
15. மூவரை வென்றான்.
16. மகிபாலன்பட்டி .
17. வீரசிகாமணி
18. ஆண்டிச்சிப்பாறை
19. அரளிப்பட்டி
20.குறத்தியறை
21.குன்றக்குடி இரண்டாம் குடைவரை
முத்தரையர் குடைவரைகளில் பிள்ளையார் சிற்பம்:..
22. மலையடிப்பட்டி - ஆலத்தூர் தளி.
23. குன்றாண்டார் கோயில்
24. பூவாளைக்குடி
பல்லவர் கால குடைவரைகளில் பிள்ளையார் சிற்பம் : 4
25. வல்லம் முதல் குடைவரை
26. வல்லம் இரண்டாம் குடைவரை
27. சிராப்பள்ளிக் கீழ்க் குடைவரை .
28. சிரப்பள்ளி வடஜம்புனாதர்
பல்லவர் காலக் கற்றளிகளில் .
29.காஞ்சி இராஜசிம்மேசுவரம் .
30.திருத்தனி வீரட்டானேசுவரம்.
31.தக்கோலம் ஜலநாதீசுவரம் .
குடவரையில் உள்ள குடைவரைக் காலத்திற்குப் பின் அமைக்கபெற்ற பிள்ளையார்..
32.தென்பரங்குன்றம்.
33.குடுமியான்மலை.
34. சிகாரிப் பல்லவேசுவரம் ..
------------------------------ -------------------
ஆக..
தமிழகத்தின் பழம்பெரும் வழிபாடுகளில் கணபதி வழிபாடும் மிகவும் சிறப்பாகவே இருந்தது என்பதை வரலாற்றுத் தரவுகள் மூலம் உறுதிசெய்யலாம்.
அன்புடன்.
மா.மாரிராஜன்.
(REFERENCE :
வழிபாடு தோற்றமும் வளர்ச்சியும் -
ஆய்வு நூல்
இரா.கலைக்கோவன், மு.நளினி.)
புகைப்படங்கள்..
R.k. Lakshmi மேடம்..
கலையின் கோவில்...
மற்றும்..
தஞ்சை ஆ.மாதவன்.)
வரலாற்று ஆய்வாளர் திரு. திருச்சி பார்த்தி அவர்களின் ஆய்வில்
விநாயகருக்கென தனிக்கற்றளி
தமிழகத்தின் முதல் குடைவரையாய் பிள்ளையார்பட்டி திகழ்கிறது. அதன்பின் குடைவரைகளில் ஆங்காங்கே விநாயகருக்கென தனிப்புடைப்புச் சிற்பங்கள் உண்டு. இதற்கடுத்த வளர்ச்சியாக சிவன் கோவில் தென்புற கோட்டங்களில் விநாயகருக்கென கோட்டங்களும், கோவிலின் முழுமுதற் கடவுளராக முன்னர் வைத்து வழிபடும் வழமை உண்டாகியது. வைணவக் கோவில்களில் தும்பிக்கையாழ்வார் என விநாயகருக்கு ஓர் இடமும் அளித்துள்ளனர். மற்றபடி விநாயகருக்கென தனித்ததொரு கோவில்கள் கிராமம் தோறும் உண்டு. இக்கோவில்கள் காலம் 50-100 ஆண்டுகள் மட்டுமே. வெகுசில கோவில்கள் 200 வயது வரையிலும் உண்டு.
ஆனால் புதுக்கோட்டை மாவட்டம் ஆய்ங்குடி அருகே பிற்கால பாண்டியரான மாறவர்மன் வீரபாண்டியன் காலத்தில் விநாயகரை மூலவராய்க் கொண்டு விளங்கும் தனித்ததொரு கற்றளி காணப்படுவது அரிதான ஒன்று.