வெள்ளலூர் நாட்டு அரசனான முதற்சோனை எனப் படுபவன் சிறுகுடி நாட்டு அரசர்களான மூளிநல்லவீரப்பன் , முனையாளி அம்பலம் , முளிச்ச குட்டி அம்பலம் , மூளி குட்டி அம்பலம் , மூத்தண்ண வாகனம் , பெரியட வாகனம் , சின்னட வாகனம் என்னும் எழுவரோடு பிறந்த எழுவக்கா நாச்சியா என்பவளை மணம் செய்து கொண்டான் . திருமணச் சீராகத் தங்களுடைய தங்கைக்கு அந்த ஏழு அண்ணன்மார்களும் சிறிது நிலத்தினைத் தந்தனர் . பின்னர் அத்தம்பதியினர் காராள புறந்த கருத்தவனம் என்ற பெண் குழந்தையையும் பேப்பெருமாள் , சின்னாண்டி என்ற இரட்டை ஆண் குழந்தைகளையும் பெற்றெடுத்தனர் . அத்தகு சூழ்நிலையில் தன் மைத்துனர்கள் தன் மனைவிக்குச் சீதனமாக அளித்த நிலத்தினை உழுது பயிர் செய்ய மன்னவன் முதற் சோனை சென்றான் . எழுவரின் மனைவியரும் அதனை மறுத்துக் கணவன்மாரைத் தூண்டிவிட்டனர் . இளைய மைத்துனனால் முதற்சோனை கொலை செய்யப்பட்டான் , அதனையறிந்த எழுவக்கா நாச்சியாளும் கணவனோடு உயிர் விட்டாள் . காராளபுறந்த கருத்தவனத்தின் தலையில் குடும்பச் சுமை முழுவதும் விழுந்தது . அவள் தன்னுடைய உடன்பிறந்த தம்பியர் இருவரையும் கண்ணும் கருத்துமாக வளர்த்து வந்தாள் . தங்கள் குடும்பம் அழிவதற்குக் காரணமாயிருந்த தங்கள் மாமன் குடும்பத்தோடு சின்னாண்டி பல்வேறு சூழல்களில் போரிட்டு வென்று வந்தான் . இறுதியாக நடந்த போரில் அவனும் அவனுடைய அக்காள் காராள புறந்த கருத்தவனமும் அழகர் கோவில் மலையில் கல்லாகச் சமைந்தனர் . சின்னாண்டி நடத்திய இறுதிப் போரில் சிறுகுடி நாட்டு அரசர்களான எழுவரும் கட்டபொம்மன் , ஊமைத்துரை ஆகியோரின் துணையுடன் சின்னாண்டியுடன் மோதியதாகத் தெரிகிறது. கதையின் இறுதிக் கட்டமாகப் பேப்பெருமாள் தன்னுடைய மாமன் குடும்பத்தை அழித்துத் தன் உடன் பிறந்தவர்களின் அருகிலேயே கல்லாகச் சமைந்ததாகக் கதைப்பாடல் காட்டுகின்ற கதைப்பாடல் பிற விவரங்கள்
இந்தக் கதைப்பாடல் இராமநாதபுரம் மாவட்டம் புத்தேந்தல் எனும் ஊரைச் சேர்ந்த ஆடு, மாடு மேய்த்து வாழும் திரு . சண்முகம் என்பவரால் வாய்மொழி வழக்கில் பாடக் கேட்டுப் பதிப்பானதாகத் தெரிகிறது . இக்கதை உண்மையாக நடந்த நிகழ்வெனவும் கதையைப் பாடியவர் கருத்துத் தெரிவித்ததும் நூலில் கூறப்பட்டுள்ளது . அதற்குச் சான்றாக அழகர்மலையில் காராளபுறந்த கருத்தவனம் , பேப்பெருமாள் , சின்னாண்டி ஆகியோர் சமைந்த இடத்திலுள்ள கல்லிற்கு இன்றும் வழிபாடு நடப்பது சுட்டப்பட்டுள்ளது .
கதை நிகழ்ச்சியுடன் கட்டபொம்மன் , ஊமைத்துரை ஆகியோர் இணைத்துப் பேசப்படுவதால் கி.பி. 18 ஆம் நூற்றாண்டு முதல் இக்கதையானது முழுவடிவம் பெற்று மக்களிடையே வழங்கப்பெற்றிருத்தல் வேண்டும் எனத் தெரிகின்றது .
‘மன்னவன் முதற் சோண கதை என்பது கதைப்பாடலைப் பாடியவர் கூறிய தலைப்பு என அறிய வருகின்றது . மன்னான் சின்னாண்டியினால் இக்கதையின் பெரும்பகுதி இயங்கு வதால் தஞ்சை மாவட்டத்தின் சில இடங்களில் மன்னான் சின்னாண்டி கதை என்றும் பெயர் வழங்குவதும் தெரிகின்றது . மன்னான் என்பது மன்னன் என்பதன் நீட்டிய பேச்சு வழக்கு வடிவாகலாம் . இக்கதைப்பாடல் காட்டும் கட்டுப்பாட்டு மீறல்
இக்கதைப்பாடலின் கதைக்கருவானது அக்காலகட்டச் சமுதாயத்தில் இருந்த பெண்களின் சொத்துரிமையை மையமாகக் கொண்டுள்ளது . சமுதாயத்தில் பெண்ணுக்குச் சொத்துரிமை இல்லாத நிலை இருந்த போதிலும் அப் பெண்ணின் உடன்பிறந்தோர் எழுவரும் தங்கள் சொத்தில் ஒரு சிறுபங்கைத் தங்கள் தங்கைக்கு மனமுவந்து அளித்தனர் . ஆனால் அதனை அந்தக் காலகட்டப்பெண் சமுதாயமே ஏற்கவில்லை, என்பதை அத்தங்கையின் அண்ணிமார்களின் எதிர்ப்பு வெளிப்படுத்துகின்றது. மனைவிக்கு அளிக்கப்பட்ட சொத்துத் தகராறில் கணவன் உயிரே பலிவாங்கப்பட்டது . கணவனாகிய மன்னவன் முதற் சோனையைக் கொலை செய்வதுடன் பெண் சொத்துரிமைப் போராட்டம் நின்று விடவில்லை . அதற்கொடுக்கும் வகையில் அடுத்த தலைமுறையைச் சேர்ந்த காராள புறந்த கருத்தவனத்தின் மூலம் போராட்டம் தொடர்கிறது . இத்தகு சொத்துரிமைப் போராட்டத்தில் எவருக்கும் வெற்றி கிட்டாமல் இரு குடும்பங்களும் அழிந்துவிடுகின்றன . ஆக இவ்வாறாகச் சொத்துரிமைப் போராட்டம்
முடிவு காணப்பெறாத ஒரு தொடர் போராட்டமாக அமைவதைக் கதைப்பாடல் தெளிவுபடுத்துகின்றது .
அண்ணன்மார்கள் தங்கள் தங்கைக்கு நிலம் எழுதி வைக்க வேண்டும் என்று திட்டம் செய்ததைக் கதைப்பாடல் கீழ்க்காணுமாறு கூறுகின்றது .
எல்லாத்துக்கும் இளையவன் சொல்லுவானே அண்ணன்ணேன் நம்ம தங்கச்சிக்கு ஆடுகுடுத்தா அழிஞ்சு போகும் மாடு குடுத்தா அழிஞ்சு
போகும் கனத்த பணங்காசி நகய்கள் குடுத்தா அழிஞ்சுபோகும் - நம் வாணி கருப்பணசுவாமி வல்லடியான் ஈஸ்வரன் கோவிலுக்குத் தென்பாங்கு கூட்டப்புளி ஊரணிக்கு
மேல்பாங்கு அருகுவெத்திப் பிஞ்சையங்கே அம்பது மாகாணி
குறுக்கமும் நம்பதங்கச்சிக்கு செப்புப்பட்டயம் எழுதிக்குடுப்பமுன்னு
(ப . 23)
செப்புப் பட்டயம் எழுதிக் கொடுப்பதாகச் சொன்னது போல் எழுதியும் கொடுத்ததைக் கதைப்பாடல் காட்டுகின்றது .
வாணி கருப்பணசுவாமி வல்லடியான் ஈஸ்வரன் கோவிலுக்குத் தென்பாங்கு கூட்டப்புளி ஊரணிக்கு
மேல்பாங்கு அருகுவெத்தி பிஞ்சையங்கே அந்த அம்பது மாகாணி
குறுக்கமும் அப்ப செப்புப்பட்டயம் எழுதிலங்கே குடுத்தொடனே முதச்சோன வாங்கிகிட்டு வந்திலங்கே வெள்ளலூரு நாடு திலும் பிதான் வந்திலங்கே அதயுந்தானும் இருப்புப் பொட்டி கீழ பூட்டிமுக
வைத்துவிட்டு ( ப . 24
இவ்வாறு நில உரிமையைச் செப்புப்பட்டயத்தில் எழுதிக் கொடுத்தபின்னும் சொத்துரிமை இல்லை என மறுத்துப் பேசும் நிலை இருந்தது . முதற் சோனை தனக்குக் கொடுக்கப்பட்ட நிலத்தை உழுது அதில் எள்ளும் பருத்தியும் விதைத்துக் கொண்டிருப்பதைத் தண்ணீர் எடுக்க வந்த ஏழு அண்ணன் மாரின் மனைவியரும் பார்த்து அதைத் தடுக்குமாறு அண்ணன் மாரை ஏவிவிட்டனர் .
அப்போது சொல்லுவாளே ஏழுநல்ல பேர்களும் போயி உங்களாலே முடியலன்னு சொல்லுங்க நாங்க உடுத்தும் சீலய நீங்க உடுத்தி நாங்க புடிக்கும் அகப்பய நீங்க புடிங்க நாங்கபோயி முதச்சோனய அடிச்சி விரட்டி வாறம் இல்லையின்னு சொன்னாக்கா அவன அடிச்சி விரட்டி
வாங்கன்னு ( ப . 28 ) கணவன்மாரைத் தூண்டிவிட்டனர் என்பது கதைப்பாடல் வரிகளாகும் .
உழுது விதைக்கும் இடத்திற்கு வந்த அண்ணன்மாரின் வஞ்சகத்தை அறியாமல் வெற்றிலை போடுமாறு வேண்டிக் கொள்கிறார் முதற்சோனை .
வெள்ளலூரு வெள்ளப்பாக்க விதம்போல அள்ளிவச்சி கீழூரு வெத்திலய கிழிச்சி மடிச்சிலங்கே
மேலூரு சுண்ணாம்ப மெதுவாலே தான்தடவி ( ப . 29 ) அனைவரும் வெற்றிலையைத் தின்று கொண்டு இருக்கும்போது முதற் சோனையின் அருகே உட்காரச் சொல்லியும் உட்காராமல் நின்று கொண்டிருந்த இளைய மைத்துனன் முதற் சோனையின் தலையை அறுத்துக் கொன்றான் .
சொத்துரிமையை அளித்தவர்களே அவ்வுரிமையை அடைய முடியாமல் தடுத்துக் கொலை செய்தது தெரிய வருகின்றது . இந்த உரிமைப் போராட்டம் அடுத்த தலை முறையிலும் தொடர்கிறது . முதற் சோனையின் கூற்றின் வழி இது வெளிப்படுத்தப்பட்டுள்ளது .
எத்தனை காலமடா என்னுடைய தலய அறுக்க வேணுமுன்னு நினச்சி இருந்தியெ என்னுடையதல ஒருதல போயிருச்சினு கொஞ்சம்
நெஞ்சத்திலே எண்ணாதீர் காணிக்குப் புறந்திருக்கு மாணிக்கக் கன்டுகடா என்று மங்கே சொல்லிலங்கே முதச்சோனக்கிப் பிராணன்
அடங்கிச்சங்கே ( ப . 29 )
மாணிக்கக் கன்றுகள் என்று தன் மகன்களான பேப் பெருமாள் , சின்னாண்டியைக் குறிப்பிட்டான் முதற்சோனை தன் தந்தை கொலைக்குப் பழிவாங்கவும் தங்கள் தாய்க்குத் தரப்பட்ட நில உரிமையைத் திரும்பப்பெறவும் பேப்பெருமாளும் சின்னாண்டியும் மாமன்மாருடன் தொடர்ந்து போராட்டம் நடத்தினர் . மாமன்மார் கயத்தாறு சென்று கட்டபொம்மன் , ஊமைத்துரையிடம் படை உதவி கேட்டனர் .
அப்ப ஏழுதலமக்காரனும் புறப்பட்டானே அப்போதும் கட்டபொம்மன் ஊமத்தொர எடத்திலே கவுத்தாத்துக்குத் தெக்கேயங்கே அப்போது வந்துதானும் ஊமத்தொர எடம் வந்துதானும் எட்டோட எட்டுநாளா காலுலயும் விழுந்துதானும் எங்கள சின்னாண்டி தானுமங்கே வாழவிட மாட்டேன்குறான் எங்களத் தானும் அவன் இருக்க வேணும் இல்லையினா நாங்க இருக்க வேணும் என்றுமங்கே சொல்லிலங்கே இங்கே எட்டுநாளா காலுல விழுந்துமுக கிடந்திலங்கே எட்டாவது நாளுத்தானும் கட்டபொம்மன் ஊமத்தொர
தானும் அப்ப அவுகளுடைய பட்டாளத்த அனுப்பிச்சி வச்சிலங்கே
( ப. 75-76)
என உள்ளது . கட்டபொம்மன் படையுடன் சின்னாண்டி நேருக்கு நேர் மோதாமல் வாணி கருப்பணசுவாமி வல்லடியான் ஈஸ்வரனை வேண்டிக் கொண்டு தங்களுடைய வெள்ளலூரு அரண்மனை இடிந்து தகர்ந்து போகவும் , தான் கல்லாகச் சமையவும் வேண்டிக் கொள்ள அவ்வாறே நடந்ததாகக் கதை அமைந்துள்ளது ( ப . 77 ) . பேப்பெருமாள் மாமன்மார் குடும்பத்தைக் கொலை செய்து பழிதீர்த்துக் கொண்டு தானும் கல்லாகச் சமைந்தார் ( ப . 79 ) .
பெண்ணுக்குச் சொத்துரிமை அளிக்கப்பட்டாலும் அதை அந்தத் தலைமுறையிலேயே அனுபவிக்கவிடாமல் அளித்தவர்களே தடுத்ததும் , அடுத்த தலைமுறையிலும் இப்போராட்டம் தொடர்ந்ததும் இதனால் இரு குடும்பங்களுமே அழிந்ததும் இக்கதைப்பாடலில் காட்டப்பட்டுள்ளன . தன் தாய்க்கு அளிக்கப்பட்ட சொத்துரிமை பறிக்கப்பட்டதுடன் தனால் தன் தந்தை கொலை செய்யப்பட்டதையும் சிறுவர்களான தன் தம்பிகளுக்கு எடுத்துக்கூறி மீண்டும் அச்சொத்துரிமையைப் பெறுவதற்கு அக்கா காராள புறந்த கருத்தவனம் போராடினாள் ( ப . 41) . பெண்ணிய வழியிலான கட்டுப்பாட்டு மீறலை நிகழ்த்தியவளாக இவள் காணப்படு கின்றாள் . தான் நேரடியாகக் களத்தில் இறங்காவிட்டாலும் தன் தம்பிகளைக் கொண்டு பெண்வழிச் சொத்தை அடையப் பாடுபட்டாள் . தன் முயற்சியில் தோல்வியையே அடைந்தாள் எனினும் பெண்ணுக்குச் சொத்துரிமை வேண்டும் என்ற சமூக விழிப்புணர்வு ஏற்பட இவளுடைய வரலாற்றுக்கு முக்கியப் பங்கு உண்டு என்பது குறிப்பிடத்தக்கது .
காராள புறந்த கருத்தவனம் என்ற இவளது பெயரில் உள்ள கருத்தவனம் ” என்பது இயற்பெயராக இருத்தல் வேண்டும் . காராள புறந்த என்பது
இயற்பெயரின் முன் வந்த அடைமொழியாகத் தெரிகின்றது . காராளப் பிறந்த என்பதன் பேச்சு வழக்குச் சொல்லாக இது இருத்தல் வேண்டும் . கார் ஆள்வதற்குப் பிறந்த என்பது இதன் சொற்பிரிப்பாகும் . கார் என்பதற்குக் கார் நெல் , பசுமை எனப் பொருள் கூறுகிறது தமிழகராதி . இவ்வாறு விளை தானியம் மற்றும் வளமையுட தொடர்புடைய இவளது பெயரின் முன் வரும் அடைமொழி இவள் இழந்த நிலத்தை மீட்டும் பெறப் பிறந்தவள் அல்லது போராடியவள் என்பதால் பெற்ற பெயராக இருக்கலாம் . எவ்வாறோ தங்களுக்கென உரிமையாக்கப்பட்ட சொத்தைப் பெற ஒரு பெண் போராடியதை மையக் கருத்தாகக் கொண்டு இக்கதைப்பாடல் திகழ்கிறது என்பது சிறப்பாகக் குறிக்கத்தக்க தாகும் . மன்னான் சின்னாண்டித் தேவர் கதைப்பாடலில் கட்டுப்பாட்டு மீறல்
இந்தக் கதைப்பாடலிலும் பெண் வழியிலான சொத்துரிமையை அடைவதில் நடக்கும் தொடர் போராட்டம் சிறப்புற எடுத்துக்காட்டப்பட்டுள்ளது . தன் அக்காள் அழகம்மாள் வீட்டிற்குச் சென்றிருந்த மன்னான் சின்னாண்டியையு தாய் கருப்பாயம்மாவையும் அக்காள் அழகம்மாள் அவமானப் படுத்தி அனுப்பினாள் . இதற்கு என்ன காரணம் என்பதைக் கதைப்பாடல் தெளிவாக எடுத்துக் கூறவில்லை . இருகாரணங்கள் இருக்கலாம் .
ஒன்று : மன்னான் சின்னாண்டியை இறக்குந் தறுவாயி லிருந்த அவன் தகப்பனார் அழைத்துப் பன்னிரண்டு சீரும் அக்கா அழகம்மாளுக்குப் பாங்குடன் தரவேண்டும் ( ப. 16 ) என்று கூறினார் . இந்தச் சூழலிலிருந்துதான் கதை தொடங்குகிறது . ஆனால் அப்போது ஏழு வயதுச் சிறுவனாக இருந்த மன்னான் சின்னாண்டி தந்தானா ? என்பது பற்றிக் கதைப்பாடலில் குறிப்பு இல்லை . ஒருவேளை தனக்கு உரிய சீரைத் ( சீதனம் ) தன் பெற்றவர்கள் தரவில்லை என்ற கோபம் அழகம்மாளுக்கு இருந்ததால் அவள் தன் வீடு வந்த தாய் , தம்பியை அவமானப்படுத்தியிருக்கலாம் .
இரண்டாவது : தனக்குரிய சீரைப்பெற்று வர மன்னான் சின்னாண்டி தன் அக்கா , மாமா வீடு வந்ததாகக் கதை குறிப்பிடுகிறது . அது என்ன சீர் என்பது தெரியவில்லை. அது ஒருவேளை தன் தாய் வீட்டுச் சீதனமாக இருக்கக்கூடும் . மன்னான் சின்னாண்டியின் மாமன்மார் அவனுடைய தாயின் உடன் பிறந்தாராகலாம் . இக்கருத்தே மன்னான் சின்னாண்டி கதைப் பாடலில் காணப்படுவதால் அதனை இங்கு ஒப்பு நோக்கலாம் . தாய்வீட்டுச் சீதனம் பெற வந்தவனுக்கு அதைத்தர மறுத்து இது தான் உன்சீர் என்று அவர்கள் கொடுத்ததாகக் கதைப்பாடல் கூறுவதாவது : மன்னாஞ் சின்னாண்டி தான்வந்து நம்ம வீட்டுல
ஒக்காந்திருக்கான் அவனுடைய சீரத்தான குடுத்து விடுங்கன்டு சொல்லும்போது என்ன சீரண்டு தன்னுடைய பொண்டாட்டி கேக்கும்போது பன்னிரண்டு வருஷ காலத்துக்கு முன்னவௌஞ்ச பட்ட கேப்பயில் ஒருபடியும் குலுக்கக் கடியில் இருக்கிற குண்டாங் கல்லுல ஒருகல்லும் ஓட்டத் திருகையில் ஒரு
திருகையும் ஓட்ட ஒலமுட்டியில ஒரு ஒல முட்டியும் பச்ச வாழத்தண்டும் பட்டமிளகாயும் குடுத்தா ஓட்டத் திருகையில போட்டு ஒன்னு ரெண்டாக கேப்பயத் திரிச்சு கூழக்காச்சிக் குடிச்சிட்டு அவன் போகட்டுமம்மா போகட்டுமம்மா ( ப . 22-23)














