நீதிபதி ஆர் சுரேஷ்குமார் மாளுசுத்தியார் அவர்களுக்கும் கம்பனுக்குமான தொடர்பு கல்லூரி நாளில் தொடங்கிவிட்டது. இவரது தந்தையார் சி ராமச்சந்திரன் மாளுசுத்தியார் புதுக்கோட்டை கம்பன் கழகத்தின் துணைத் தலைவராகவும் நீண்டகாலம் இருந்தவர். காங்கிரஸவாதியான இவரது தந்தை வல்லத்திராக்கோட்டை ஊராட்சிமன்ற தலைவராக அரைநூற்றாண்டு காலம் இருந்தவர். தற்போது புதுக்கோட்டை கம்பன் கழகத்தின் செயலாளராக இருக்கும் இரா சம்பத்குமார் மாளுசுத்தியார் இவரது சகோதரர். இவர் கம்பர் ஒரு சித்தர் என்பதில் அசைக்கமுடியாத நம்பிக்கை உள்ளவர். கம்பன் புகழ் பாடி தமிழ் வளர்க்கும் இவரை போன்றவர்களால் தான் தமிழ்க்கும் தமிழ் இனத்திற்கும் பாதுகாப்பு.
நீதிபதி ஆர்.சுரேஷ்குமார் அவர்கள் கூற்று
ஆங்கிலம் பிழைப்புக்கான மொழி. ஆங்கில மொழியை தவிர்த்துவிட்டு பிழைப்பு நடந்த முடியாத அளவுக்கு ஆங்கிலம் நம் வாழ்வுடன் இரண்டறக் கலந்துவிட்டது. பிழைப்பு என்ற விஷயத்தை தாண்டி பிறப்பு, வளர்ப்பு, வாழ்க்கை, முகவரி என வரும்போது நமக்கு துணை வருவது தமிழ் தான்.
நமக்கு முகவரியாகவும், முகமாகவும் இருக்கும் தமிழ் மொழியை கற்க வேண்டும். அதற்காக தமிழில் புலமை பெற வேண்டிய அவசியம் இல்லை. எண்ணிலடங்கா தமிழ் இலக்கியத்தில் எதாவது ஒரு இலக்கியத்தை படித்துவிட்டாலே பிறந்த பலனை அடைந்ததாக அர்த்தம்.
தமிழ் செம்மொழி. பல செம்மொழிகளில் இருந்து எடுக்கப்பட்ட சொற்களை வைத்து தான் ஆங்கில மொழி உருவாக்கப்பட்டுள்ளது. அந்த ஆங்கில மொழி உலகளவில் ஆட்சிமொழியாக மாறி உலகை ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கிறது. சீனா, ஜப்பான் உட்பட பல்வேறு ஐரோப்பிய நாடுகளில் ஆங்கிலம் பேச்சு வழக்கு, எழுத்து மொழியாக இல்லை. அவர்களின் மொழி தான் ஆட்சி செய்கிறது.
வெள்ளைக்காரன் ஆங்கிலத்தை கல்வியில் புகுத்தியதால் வழிவழியாக ஆங்கிலத்தை கற்று வருகிறோம். அனைத்து சட்டங்களும் ஆங்கிலத்தில் தான் உள்ளது. அனைத்து நீதிமன்றங்களிலும் வழக்காடு மொழியாகவும் ஆங்கிலம் தான் உள்ளது. தற்போது வழக்காடு மொழியாக தமிழ் வர வேண்டும் என கோரிக்கை வைக்கிறோம்.
தற்போது நம்மால் முழுமையாக தமிழில் எழுதி வழக்கு தாக்கல் செய்ய முடியுமா? முழுமையாக தமிழில் வாதாட முடியுமா? அந்தளவுக்கு தமிழ் நூல்கள் உள்ளதா? இருக்கும் ஒன்றிரண்டு தமிழ் நூல்களை படித்திருக்கிறீர்களா? என பல்வேறு கேள்விகள் எழுகின்றன. இது தான் நம் நிலை.
இதை கொஞ்சம் கொஞ்மாக மாற்ற தமிழ் மீது பார்வை, நாட்டம், ஈர்ப்பு வர வேண்டும். இன்றைய தொலைக்காட்சி, பத்திரிகைகள், மேடை பேச்சாளர்களை நம்பி தமிழ் மீது நாட்டம் கொள்ள முடியுமா? அவர்கள் பேசுவது முழுவதும் தமிழ் அல்ல. முழுக்க முழுக்க தமிழில் பேசுவது, உரையாடுவது, அலுவல் பணி தவிர அனைத்து செயல்களையும் தமிழில் செய்வதும், தமிழை பரப்புவதும் இலங்கையை சேர்ந்த யாழ்ப்பாண தமிழர்கள் தான். யாழ்ப்பாண தமிழர்களை போல் தமிழ் மண்ணில் பிறந்தவர்கள் தமிழை நேசிக்கவில்லை, கொண்டாடவில்லை.
இந்த நிலை மாற பொதுக் கருத்தை உருவாக்க வேண்டும். அந்த பொறுப்பு வழக்கறிஞர்களுக்கு உள்ளது. வழக்கறிஞர்கள் தான் அனைத்து துறைகளிலும் கோலோச்ச முடியும். பல பரிமாணங்களில் இருப்பவர்கள் வழக்கறிஞர்கள் மட்டுமே. சமூகத்தை வழிநடத்தும் வல்லமை கொண்டவர்கள் வழக்கறிஞர்கள். அப்படிப்பட்ட வழக்கறிஞர்கள் தாய் மொழி மீதான நாட்டததை முன்னெடுத்து செல்ல வேண்டும். தமிழை உள்வாங்கவும், ஈடுபாடு கொள்ளவும் வேண்டும்.
தமிழ் இலக்கியங்களை படிக்க வேண்டும். திருக்குறளை படித்தால் கொஞ்சம் கொஞ்சமாக தமிழ் மீது பற்றும், ஈர்ப்பும் வரும்.
தமிழ் பல்கலைக்கழகத்துக்கு ராஜராஜசோழன் பெயரை சூட்ட வேண்டும்: நீதிபதி ஆர்.சுரேஷ்குமார் மாலுசுத்தியார்
தமிழ் மண்ணில் பல மன்னர்கள் ஆட்சி புரிந்துள்ளனர். ஆனால், சோழ வம்சத்தில் ஆட்சிபுரிந்த ராஜராஜ சோழனை மட்டும் ஏன் பெருமன்னன் என அழைக்கிறோம்? முற்கால சோழர்கள் ஆட்சியின் போது ஏற்பட்ட போர் முறையால் ஆட்சியை களப்பிரர்களிடம் இழந்த சோழர்கள் மீண்டும் பல நூற்றாண்டுகளுக்குப் பிறகு அரியணை ஏறினர். இதையடுத்து சோழ மன்னர்களில் ஒருவரான விஜயாலய சோழனின் நிர்வாகத்தை தொடர்ந்து ஆட்சிக்கு வந்த ராஜராஜ சோழன், முன்னோர்களை காட்டிலும் சிறந்த ஆட்சி நிர்வாகத்தை கொண்டு வந்தார்.
அதைத் தொடர்ந்து தஞ்சாவூரைச் சுற்றிலும் மக்கள் வாழ முக்கியத் தேவையான உணவு உற்பத்தியை தொடங்கினர். ராஜராஜ சோழன் காலத்தில் விவசாயம் செழித்தோங்கியது. விவசாயம் நன்றாக இருந்தாலும், தன்னுடைய நாட்டு மக்கள் அமைதியாக வாழ வேண்டும், அருகில் உள்ள அரசர்களின் படையெடுப்புகள் இல்லாமல் இருக்க வேண்டும் என்பதற்காக தெற்கே குமரியில் தொடங்கி, வடக்கே துங்கபத்ரா நதி வரையுள்ள அரசர்கள் மீது போர் தொடுத்து, தன்னுடைய ஆட்சியின் கீழ் கொண்டு வந்தார் ராஜராஜசோழன்.
தன்னுடைய ஆட்சியின் எல்லையை விரிவுபடுத்திய பின்னர் ராஜராஜசோழன் சமயத்தையும், தமிழையும் வளர்க்கும் பணியில் ஈடுபடத் தொடங்கினார். அப்போது பல்லவர்கள் காலத்தில் காஞ்சியில் கட்டிய சில கோயில்களை பார்த்துவிட்டு, அதை விட நாம் சிறந்த கோயிலைக் கட்ட வேண்டும் எனக் கருதி 1006 -ம் ஆண்டு கட்டத் தொடங்கி, 1010-ல் கட்டி முடித்தது தான் இந்த தஞ்சாவூர் பெரிய கோயில். பின்னர் 1010-ம் ஆண்டு இந்த கோயிலுக்கு குடமுழுக்கு நடத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் பல கோயில்கள் உள்ளன. தமிழ் மக்கள் வாழும் இந்த தெய்வபூமியில் பிறந்தவர்கள் இயற்கையிலேயே புண்ணியம் செய்தவர்கள். இயற்கையிலேயே இறைவனுடைய அருளைப் பெற்றவர்கள். இயற்கையிலேயே ஒரு பண்பட்ட வாழ்க்கையை வாழ்கிறவர்கள். இந்த தெய்வ பூமியிலேயே தெய்வ வழிபாட்டுக்கு மாற்றாக, இறை உணர்வுக்கு மாற்றாக, எவர் ஒருவர் பேசினாலும், எவர் ஒருவர் சித்தாந்தம் பேசினாலும், அதற்கான கோட்பாடுகளை கொண்டு வந்தாலும், இந்த தமிழ் மண்ணில் எடுபடாது என்பதற்கு இந்த மக்கள் தான் சாட்சி.
திருவள்ளுவருடைய வழியை உள்வாங்கிக் கொண்ட ராஜராஜசோழன், பசியும், நோயும், பகையும் இல்லாத நாடாக உருவாக்கினார். இந்த மூன்றையும் உள்ளடக்கிய நாடாக எது நடக்கிறதோ, அது மன்னனாக இருந்தாலும், மக்களாட்சியாக இருந்தாலும், அந்த நாட்டை வழி நடத்தக்கூடியவனாக இருந்தாலும் அவன் தான் இந்த நாட்டை ஆளக்கூடிய தகுதி படைத்தவன். அப்படிப்பட்டவனின் நாடு தான், ஒரு வளநாடு என்பதை உணர்ந்ததால் ராஜராஜசோழன், வள்ளுவன் வழியில் இறை நம்பிக்கையோடு ஆட்சி புரிந்தார்.
இந்த கோயில் ஆயிரம் ஆண்டுகளையும் கடந்து கம்பீரமாக நிற்கிறது என்றால், ராஜராஜசோழன் மட்டுமல்லாமல், இந்த கோயில் உள்ளே வீற்றிருக்கும் பெருவுடையாரின் சக்தியும் ஒரு காரணம். இது போன்று இறைவனுக்கு மிகப்பிரம்மாண்டமான கோயில்களை அமைத்தவர்கள் தான் தமிழ் மன்னர்கள். அதைத் தாண்டி தன்னுடைய காதலிக்கு கட்டிடம் கட்டியவர்கள் எல்லாம் மன்னர்கள் அல்ல, அப்படிப்பட்ட மன்னர்கள் தமிழ் மண்ணிலே இல்லை. ராஜராஜசோழனின் புகழ் இந்த உலகம் உள்ளளவும் நிலைத்து நிற்கும்.
அப்படிபட்ட ராஜராஜன் என்ற பெரு மன்னனுக்கு தமிழக அரசு இன்று அரசு விழா நடத்துகிறது. இந்த நேரத்தில் இன்னொன்றையும் நான் சொல்கிறேன். இந்த தஞ்சை மண்ணிலே இருக்கக்கூடிய தமிழுக்கு தொண்டாற்றக்கூடிய, தமிழுக்காக உருவாக்கப்பட்டுள்ள தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்துக்கு, ராஜராஜ சோழன் பெயரை தமிழ்நாடு அரசு சூட்ட வேண்டும். அவ்வாறு செய்தால் அது பெருமன்னன் ராஜராஜனுக்கு செய்கிற சிறப்பாக இருக்கும்.
ராமலிங்கர் பணி மன்றம், ஏவிஎம் அறக்கட்டளை சார்பில் 56-வது ஆண்டு அருட்பிரகாச வள்ளலார் - மகாத்மா காந்தி விழா சென்னையில் தொடங்கியது. இதில், மாரியம்மாள் மகாலிங்கம் நினைவு குறுநாவல் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு உயர் நீதிமன்ற நீதிபதி சுரேஷ்குமார் பரிசு வழங்கினார். உடன் ராமலிங்கர் பணி மன்ற தலைவர் மாணிக்கம், சிற்பி பாலசுப்பிரமணியன், திருப்பூர் கிருஷ்ணன், சிவசக்தி வடிவேல் ஆகியோர். படம்: எஸ்.சத்தியசீலன்