மன்னார்குடி எம்.ஜி. நடராஜபிள்ளை என்ற எம்.ஜி. நடராஜ தென்கொண்டார்
எத்தனையோ பேருக்கு வாழ்வு கொடுத்தவர் எம்.ஜி.ஆர். ஆனால், சினிமாவில் அவரது முன்னேற்றத்துக்கு தடம் போட்டுத் தந்தவர் மன்னார்குடி எம்.ஜி.நடராஜபிள்ளை என்பது எத்தனை பேருக்குத் தெரியும்?
சினிமாவில் எம்.ஜி.ஆர். கத்திச் சண்டை போடும் அழகே தனி. லாவகமாக அவர் கம்பு சுற்றுவதையும் வாகாய் வாள் வீசுவதையும் ரசிக்காதவர்களே இருக்க முடியாது. இதையெல்லாம் ஏன் சொல்கிறேன் என்றால், இந்தக் கட்டுரைக்கும் எம்.ஜி.ஆரின் கத்திச் சண்டைக்கும் சம்பந்தம் இருக்கிறது.
எம்.ஜி.நடராஜபிள்ளை
திரைத் துறையில் எம்.ஜி.ஆர். அவ்வளவாய் பிரபலமாகாத காலம் அது. அப்போது மன்னார்குடி எம்.ஜி.நடராஜபிள்ளை, நாடகத்திலும் சினிமாவிலும் பிரபலமான நடிகர். ஏராளமான புராண, சமூக நாடகங்களில் நடித்தவர். தனது நடிப்பின் மூலமாக சுதந்திர வேட்கையை ஊட்டிய இவர், விடுதலைப் போராட்டங்களில் பங்கெடுத்ததால் சிறைக் கொட்டடிகளையும் பார்த்த வீரத் தியாகி.
மேடை நாடகங்கள் காலாவதியாகி சினிமாவாக பரிமாணம் பெற்றபோது அங்கேயும் எம்.ஜி.நடராஜ பிள்ளை ஜொலித்தார். சதிசுலோச்சனா, மகாபாரதம், தட்சயஞ்ஞம் ஆகிய படங்களில் நடித்து சினிமாவிலும் பெரும் புகழை அடைந்தார் நடராஜபிள்ளை. ‘தட்சயஞ்ஞம்’ படத்தில் நடித்துக் கொண்டிருந்தபோது, அந்தப் படத்தில் துணை நடிகராக நடித்தார் எம்.ஜி.ஆர்.
மது அருந்த மறுத்தார்
அப்போது, ‘தட்சயஞ்ஞம்’ படத்தின் வெளிப்புறப் படப்பிடிப்புக் காட்சிகள் கொல்கத்தாவில் படமாக்கப்பட்டன. படப்பிடிப்புக்காக நடராஜபிள்ளையும் எம்.ஜி.ஆரும் கொல்கத்தா சென்றனர். அது ஒரு குளிர்காலம். கொல்கத்தாவில் கடும் பனி பெய்தது. அந்த சீதோஷ்ண நிலை நடராஜபிள்ளைக்கு ஒத்துக் கொள்ளவில்லை. சளியால் கடுமையாக உடல்நிலை பாதிக்கப்பட்டார் எம்.ஜி.நடராஜபிள்ளை. அப்போது, அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் பலன் அளிக்கவில்லை. அதனால், ஆபத்துக்கு பாவமில்லை என்று சிறிதளவு மது எடுத்துக் கொண்டால் பிள்ளையைக் குணப்படுத்தலாம் என்று மருத்துவர்கள் சொன்னார்கள்.
ஆனால் நடராஜ பிள்ளையோ, மது அருந்த மறுத்தார். ‘போதை வஸ்துவாக நினைக்காமல் மதுவை மருந்தாக அருந்துவதில் தவறேதும் இல்லையே’ என்று உடன் நடிப்பவர்கள் சமாதானம் சொன்னார்கள். ஆனாலும், ‘மது அருந்தாமையை கொள்கையாக கடைபிடிப்பவன் நான். இப்போது மதுவால் காப்பாற்றப்படும் எனது உயிரை பிறகு எனது மன உறுத்தலே சாகடித்துவிடுமே’ என்று சொல்லி மதுவை குடிக்க மறுந்தார் நடராஜபிள்ளை. அவரது உடல் நிலை குறித்து கவலைப்பட்ட எம்.ஜி.ஆரும் நடராஜ பிள்ளைக்கு ஆறுதலும் தேறுதலும் கூறினார்.
இந்த நிலையில், அடுத்த இரண்டு நாட்களில் ஓரளவுக்கு உடல் நலம் தேறினார் எம்.ஜி.நடராஜபிள்ளை. அப்போது தன்னைப் பார்க்க வந்த எம்.ஜி.ஆரிடம், ‘நான் தோற்றுவிட்டேன்’ என்று சொல்லி புலம்பினார் பிள்ளை. இடைப்பட்ட அந்த இரண்டு நாளில் என்ன நடந்தது என்பது இதுவரை வெளியில் தெரியாத ரகசியம்.
இதைத் தொடர்ந்து, ‘தட்சயஞ்ஞம்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நடந்து முடிந்து, படமும் சக்கைப் போடு போட்டது. இந்த வெற்றியைத் தொடர்ந்து அதே பி.எல்.சுமேகா மெட்ரோ பாலிடன் பிக்சர்ஸ் ‘மாயா மச்சீந்திரா’ என்ற படத்தை எடுக்கத் திட்டமிட்டது. அதில், கதாநாயகன் மச்சீந்திராவாக எம்.கே.ராதாவும், வில்லன் சூரியகேதுவாக எம்.ஜி.நடராஜபிள்ளையும் ஒப்பந்தம் ஆனார்கள். இதில், முதல் காட்சியிலேயே கொலையுண்டு இறக்கும் விசாலாட்ச மகாராஜா கதாபாத்திரம் எம்.ஜி.ஆருக்கு!
ஆனால், இதன் படப்பிடிப்பு தொடங்கும் சமயத்தில் மீண்டும் உடல் நலம் பாதிக்கப்பட்ட எம்.ஜி.நடராஜபிள்ளை (27-06-1938) மரணத்தை தழுவினார். இதனால், மாயா மச்சீந்திராவில் பிள்ளை ஏற்கவிருந்த கதாபாத்திரம் எம்.ஜி.ஆருக்கு தரப்பட்டது. தான் எழுதிய, ‘நான் ஏன் பிறந்தேன்’ சுயசரிதையில் இதையெல்லாம் விவரித்திருக்கும் எம்.ஜி.ஆர், ‘சினிமாவில் கத்திச் சண்டை போட்டு நடிக்க வேண்டும் என்பது எனது நெடுநாளைய கனவு. என் மீது அன்பும் பாசமும் கொண்டிருந்த எம்.ஜி.நடராஜபிள்ளை தனது மரணத்தின் மூலமாக அந்த வாய்ப்பை முதன் முதலில் எனக்குத் தந்தார். அதனால் நான் சினிமா துறையில் புதுவாழ்வு பெற்றேன்’ என்று நெகிழ்ந்து போய் சொல்கிறார்.
எம்.ஜி.ஆருக்கு நூற்றாண்டு விழாக்கள் எடுக்கப்பட்டு வரும் இந்த நேரத்தில் இதையெல்லாம் நினைவுகூர்ந்த எம்.ஜி.நடராஜபிள்ளையின் பேரன் நடராஜன், காங்கிரஸ் ஆட்சியில் மன்னார்குடியில் ஒரு தெருவுக்கு தாத்தாவின் பெயரைச் சூட்டினார்கள். மன்னை நாராயணசாமி அமைச்சராக இருந்தபோது தாத்தாவை கலைமாமணியாக அங்கீகரித்து விருதை எங்களது பாட்டி ஜானகி அம்மாளிடம் கருணாநிதி வழங்கினார்.
சிலை வைக்க வேண்டும்
ஆனால், எம்.ஜி.ஆருக்கு அணுக்கத் தோழராக ஒருவர் இங்கு வாழ்ந்தார் என்பதே எம்.ஜி.ஆர் விசுவாசிகளுக்கு தெரியவில்லை” என்று சொன்னவர், “தாத்தாவின் புகழ் நிலைத்திருக்க அவருக்கு மன்னார்குடியில் அரசு சார்பில் சிலை வைப்பதுடன் எங்கள் தெருவிலுள்ள பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு தாத்தா பெயரை சூட்ட வேண்டும்” என்று சொன்னார்.
மன்னார்குடி நடராஜபிள்ளை தெரு என்று இப்பொழுதும் அவர் நினைவாக உள்ளது.