விடுதலைக்காகப் போராடிய எத்தனையோ வீரர்கள் வெளியுலகத்திற்கு தெரியாமலேயே மறைந்துவிட்டனர். இவர்களில் ஏ.வி.ஆர். என்கிற ஏ.வி. ராமசாமியும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவரை தஞ்சையின் தியாக சொத்து என்று கூறலாம்.
தஞ்சாவூர் மாவட்டம் அரித்துவாரமங்கலம் கிராமத்தில் கடந்த 1923ம் ஆண்டு வீரையா ராசாளியார்- காத்தாயி அம்மாள் தம்பதிக்கு பிறந்தவர் ஏ.வி. ராமசாமி. தஞ்சை அருகே ஒரத்தநாடு முத்தம்பாள் சத்திர மாணவர் விடுதியில் தங்கி எஸ்.எஸ்.எல்.சி. வரை படித்தவர். சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் வலங்கைமான் வட்டத்தைச் சேர்ந்தவர்கள் அதிகம். அதன் தாக்கம் ஏ.வி. ராமசாமிக்கும் இருந்தது. சிறு வயது முதல் விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டார். இக்காலம் போல் அப்போது தகவல் தொடர்பு சாதனம் கிடையாது.
இருப்பினும் அரித்துவாரமங்கலம் உட்பட வலங்கைமான் பகுதியில் உள்ள கிராமங்களைச் சேர்ந்த சுதந்திரப் போராட்டத் தியாகிகளிடம் தகவல் பரிமாற்றத்தை ஏற்படுத்தியவர்களில் ராமசாமிக்கு மிக முக்கிய பங்கு உண்டு. சிறு வயது பையனாக இருந்த இவர் மீது காவல் துறையினருக்கு சந்தேகம் எழாததால் விறுவிறுவென தகவல்களைக் கொண்டு சேர்த்து சுதந்திரப் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்ல பெரும் பங்காற்றியுள்ளார். சைக்கிளிலும், நடந்தும் பல கிராமங்களுக்குச் சென்று போராட்டத்துக்கு ஆட்களை திரட்டினார். 1941 ம் ஆண்டில் சர்தார் வேதரத்தினம் பிள்ளை தலைமையில் அரித்துவாரமங்கலத்தில் நடந்த சத்தியாகிரக முகாமில் கலந்து கொண்டார். பின்னர் 1942ம் ஆண்டில் நடைபெற்ற வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் பங்கேற்று மறியல் போராட்டத்தில் ஈடுபட்டார். அப்போது ஆங்கிலேயர்களால் கைது செய்யப்பட்டு ராமசாமி சிறையில் அடைக்கப்பட்டார். அப்போது அவருக்கு வயது 18க்குள்தான் இருக்கும்.
வயதைக் குறைவாகச் சொன்னால் சிறையில் அடைப்பதைத் தவிர்த்துவிடுவார்கள் என்று கருதி தனக்கு 20 வயது என கூறி சிறைக்குச் சென்றார். ஆறு மாத கால சிறை தண்டனை பெற்ற இவருக்கு இடையில் அதிகாரிகளால் நடந்த கொடுமைகள் அதிகம். இதனால், பாதியிலேயே சிறையிலிருந்து குழுவாக இணைந்து சுவரில் துளையிட்டு தப்பித்தார். அப்போது சிறைக் காவலர்களிடம் சிக்கிக் கொண்டு கடுமையான தாக்குதலுக்கு உள்ளான இவர் உயிருக்கு ஆபத்தான நிலைக்குச் சென்று மீண்டு வந்தார்.
இக்கொடுமைகளை எல்லாம் அனுபவித்துவிட்டு, சிறையிலிருந்து வெளியே வந்த இவர் சுதந்திரப் போராட்டத்தில் முன்பை விட வீரியமாக ஈடுபட்டார். பல போராட்ட களங்கள் கண்டு காங்கிரஸ் இயக்கத்தில் காந்திய வழியில் போராடிய இவர் சுதந்திரத்துக்கு பிறகு 1950 ஆம் ஆண்டில் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்தார்.
1954 ஆம் ஆண்டில் மேடைத் திருமணம் செய்து கொண்டார். அப்போது மேடைத் திருமணம் பதிவு செய்யப்படாத ஒன்று என்பதும் குறிப்பிடத்தக்கது. இருப்பினும் சட்ட அங்கீகாரம் கிடையாது என்ற நிலையிலும் துணிச்சலாக செய்து கொண்டவர். கடந்த 1968 ஆம் ஆண்டில் மார்க்சியம் படிப்பதற்காக ரஷ்ய நாட்டின் தலைநகரான மாஸ்கோவுக்கு சென்றார். ஐந்து ஆண்டு காலத்தில் இரு முறை மாஸ்கோவில் தங்கிப் பயின்றார்.
ப்ராக்ரஸ் நூல்களை ஆங்கிலத்திலிருந்து தமிழில் மொழிபெயர்க்கும் பொறுப்பை மேற்கொண்டு வந்தார். நியு செஞ்சுரி புக் ஹவுஸ்-ல் பணியாற்று உயர் பொறுப்புகளையும் வகித்தார். கம்யூனிஸ்ட் கட்சியில் பல்வேறு பொறுப்புகளை வகித்து வந்த இவர் கடைசிக் காலத்தில் சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்றதற்காக மத்திய, மாநில அரசுகளின் ஓய்வூதியத்தைப் பெற்று வந்தார். இவர் 1995ம் ஆண்டு நவம்பர் 29ம் தேதி உடல் நலக் குறைவால் தனது 72ம் வயதில் காலமானார்.
இவரைப் போன்றவர்களின் தியாகத்தால் சுதந்திரக் காற்றை எவ்வித தடையுமின்றி சுவாசிக்கிறோம். இவர் தஞ்சையின் சொத்து ஏன் ஸ்பெஷல்தானே.