கவிஞானி டாக்டர் அ. மறைமலையான் தஞ்சாவூர் மாவட்டம் உரத்தநாடு , கண்ணன்தன்குடியில் 08 .07 .1932 ஆண்டு ஐயா சு.து. அய்யாசாமி மண்கொண்டார், முத்தம்மாள் அம்மையாருக்கு மகனாக பிறந்தார் .
இவர் 1953 ஆண்டு முதல் தனது எழுதுகோல் பயணத்தை தொடங்கினார். தமிழக அரசின் பாவேந்தர் விருது பெற்ற பாவலர். பேரறிஞர் அண்ணா விருது, கலைமாமணி விருது பெற்றவர்.
இவர் எழுதிய நூல்கள் 50 க்கு மேலே. இவர் தமிழக அரசிடம் இருந்து 'ஒரு தமிழ் பூ தவிக்கிறது" , அண்ணாவின் பெருவாழ்வு என்ற நூல்களுக்கு பரிசும், காட்டு மல்லிகை என்ற நூலிற்கு அனைத்திந்திய வானொலி நாடக போட்டியில் பரிசும் பெற்றுள்ளார்.
நிலவில் பூத்த நெருப்பு என்ற அறிவியல் புதினம், அன்னை தெரசா வாழ்கை வரலாறு, 'ஒரு தமிழ் பூ தவிக்கிறது' காவியம் கல்லூரி, பள்ளி மாணவர்க்கு பாட நூல்களாக உள்ளது.
போர் வாள், போல்ட் இந்தியா, நவமணி நாளிதழ்கள் தலையங்க ஆசிரியர், Guiding Light ஆங்கில இதழின் ஆசிரியர், மக்கள் பாதை மலர்கிறது என்ற மாத இதழின் ஆசிரியராக இருந்தார்.
தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் 1988 இல் நடைபெற்ற உலக கவிஞர் மாநாட்டில் தாம் ஆங்கிலத்தில் எழுதிய 'TREES ARE MY TEACH " என்னும் கவிதைக்கு பாராட்டுப்பெற்றவர்.
உலக தமிழ் எழுத்தாளர் பேரவை, மக்களாட்சி பாதுகாப்பு இயக்கம் போன்ற அமைப்புகளின் தலைவர். மலேசியா, சிங்கப்பூர், தாய்லாந்து, இலங்கை நாடுகளுக்கு இலக்கிய பயணம் மேற்கொண்டு ஆய்வுகள் செய்தவர்.
பாவேந்தர் விருதுப் பாவலர் அ.மறைமலையான் ஒரு நிகழ்வில் பேசும்போது - கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் தான் முதல் புரட்சி நடிகர் என்றார். அப்பொழுது எம்ஜிஆர் பற்றாளர்கள் அதனை எதிர்த்துக் கேள்வி கேட்ட வேளையில் - உங்கள் எம்ஜிஆர் மூன்றாவது புரட்சி நடிகர் - எனப் பட்டென்று பதிலளித்தார். அப்படியானால் இரண்டாவது புரட்சி நடிகர் யார் - என ஆவலோடு கேட்டனர். எம்ஆர்இராதா தான் என்றவுடன் ஆவேசப்பட்டவர்கள் ஆமோதித்தபடி அமைதியாகி விட்டனர்.