உறையூரைத் தலைமை ஊராகக் கொண்டு சோழ அரசின் ஒரு பகுதியை ஆண்டு வந்த சிற்றரசன் அகளங்கன். உறங்காவில்லி முதலியோர் இவனை அண்டிதான் வாழ்ந்தனர். இவர்கள் இராமாநுசரால் ஆட்கொள்ளப்பெற்ற பின்னர் இவர்களின் இயல்புகள் மாறிவருவதைக் கண்டான். இவர்கள் முகத்தில் சாந்தியையும் ஒளியையும் கண்ணுற்றான்.தன்னையும் உடையவரிடம் இட்டுச் செல்லும்படி வேண்ட, வில்லிகளும் அங்ஙனமே இட்டுச் சென்று செய்தியை உடையவரிடம் தெரிவித்தனர். வேடர்களை உகந்து ஆட்கொண்டிருந்த உடையவரின் கருணை வேந்தனையும் உகந்து ஆட்கொண்டது. உடனே அவனுக்குப் பஞ்சசம்ஸ்காரம் செய்வித்து அகளங்க நாட்டாழ்வான் என்ற தாஸ்ய நாமமும் வழங்கினார். இங்ஙனம் ஆட்கொண்டபின் கோயில் கைங்கரியங்களை மேற்பார்வையிடும் அதிகாரியாகவும் நியமித்தார். அரசனுக்குரிய மாட்சியைவிட இந்தப் பணியில் தனக்குக் கிடைந்தத மாட்சியே பெரிது என்று அகமகிழ்ந்தான். அகளங்கன். குலசேகரப் பெருமாளைப்போல வெற்றரசைக் கைவிட்டு வீட்டரசுக்கு வழிவகுத்துக் கொண்டு அரங்கன் பணியில் ஆழங்கால் பட்டுவிட்டான்.