வியாழன், 6 ஆகஸ்ட், 2020

வெங்கண்ணன் சேர்வைகாரன்

புதுக்கோட்டைப் புரட்சியாளன் வெங்கண்ணன் - மீ. மனோகரன் 


புதுக்கோட்டைத் தனியரசின் வரலாற்றை எழுதியுள்ள எந்த ஆசிரியரும் வீரப்பேராற்றல் மிக்க வெங்கண்ணன் தலைமையில் அரசுக்கு எதிராக ஏற்பட்ட எழுச்சியைப் பற்றி சிறிதளவாவது குறிப்பிடத் தவறுவதில்லை. அவ்வெழுச்சியை "வெங்கண்ணன் சேர்வைகாரர் கலகம்' என்று அவ்வரலாற்றாசிரியர்கள் குறித்துள்ளனர். அந்த எழுச்சி எப்போது ஏற்பட்டது? ஏற்படுவதற்குப் பின்னணி யான காரணங்கள் யாவை? யார் அந்த வெங்கண்ணன் சேர்வைகாரர்? அவர் முன்னோர் யார்? - என்றெல்லாம் வினாக்கள் எழத்தான் செய்யும். ஏனெனில் வெங்கண்ணன் சேர்வைகாரர் போன்ற வீரத் தலைவர்கள் மீது வரலாற்று வெளிச்சம் இதுவரை பாய்ச்சப் பட்டதில்லை. அதற்குக் காரணம், வட்டார வரலாறு பற்றி இன்றளவும் நம் நாட்டில் அக்கறை காட்டப்படாதது தான். - புதுக்கோட்டை வட்டார வரலாற்றினை அறிந்து கொண்டாலே வெங்கண்ணர் வெள்ளையர் படையை எதிர்த்துப் புரிந்த வெஞ்சமர் வெறும் கலகம் அல்ல; ஆட்சியாளருக்குக் கலக்கம் தந்த எழுச்சி என்பதைப் புரிந்து கொள்ள முடியும்.

தொண்டைமான் நாடு என வழங்கிய புதுக்கோட்டைப் பகுதி, சோழ நாட்டில் ஒரு பகுதியும் பாண்டிய நாட்டில் ஒரு பகுதியுமாக அமையப் பெற்றது. புதுக்கோட்டை மாவட்டத்தின் ஊடாக ஒடும் வெள்ளாறே சோழ பாண்டிய நாடுகளின் எல்லைக் கோடாக இருந்துள்ளது. - வெள்ளாற்றுக்கு வடக்கில் இருப்பது கோனாடு என்றும் தெற்கில் இருப்பது கானாடு என்றும் பெயர் வழங்கி வந்துள்ளது. கோனாட்டில் பிரான்மலை, பொன்னமராவதி, காரையூர், நெலியமங்கலம், அன்னவாசல் முதலியவை அடங்குவனவாம். கானாட்டில் ஆலங்குடி, திருமெய்யம், விராச்சிலை, காளையார் கோவில் முதலியன அடங்குவனவாம். 

புதுக்கோட்டையை ஆண்ட அரசமரபினர்கள் ஆதியில் தொண்டை மண்டலத்திலிருந்து வந்ததால் தொண்டைமான் என்று தம் பெயரில் சேர்த்துக் கொண்டுள்ளனர். யானையை அடக்குவதில் வல்லவர்களான தொண்டை மண்டலத்துக் கள்ளர் மரபினர் முதலில் திருச்சிக்கு அடுத்த அன்பிலில் வந்து குடியேறினார்கள். சோழ அரசனின் பிரதிநிதியாக ஆண்டிருக்கிறார்கள். அங்கிருந்து புதுக்கோட்டைப் பகுதிக்கு வந்தார்கள். அன்பிலில் இருந்து கள்ளரில் ஒரு பிரிவு அறந்தாங்கியில் குடியேறியது. இந்த அறந்தாங்கித் தொண்டமான்கள் 15ஆம் நூற்றாண்டில் வெங்கடாசலப் பல்லவராயர் தொடங்கி பொன்னமரா வதியைச் செல்வாக்குடன் ஆண்டு வந்திருக்கிறார்கள். இவர்களுள் 50 ஆண்டு காலம் புகழோடு ஆண்ட பொன்னம்பலத் தொண்டமான் குறிப்பிடத்தக்கவர். 

இன்னொரு பிரிவு வைத்துார் வந்து பெருங்களூரில் தங்கி பல்லவ ராயர் என்றும் பல்லவராயத் தொண்டமான் என்றும் பெயர்கொண்டு 14 முதல் 17 ஆம் நூற்றாண்டுவரை ஆட்சி புரிந்தவர்கள். இவர்களே புதுக்கோட்டையைப் புகழுடன், வெள்ளையர் ஆதிக்கம் வருமுன், ஆண்ட பரம்பரையினர். பிரிடீசாரின் ஆளுகையில் தனியரசு ஆண்ட ராயத் தொண்டமான்களுக்கும் இவர்களுக்கும் சம்பந்தமில்லை. முன்னவர் பல்லவராயத் தொண்டமான்கள், பின்னவர் ராயத் தொண்டமான்கள். வைத்துர்ப் பல்லவராயர்கள் பெருங்களூரிலிருந்து முன்னேறி, கவினாடு, குளவாய்ப்பட்டி இங்கெல்லாம் குடியேறி, குடுமியர் மலைக்குப் பரவினார்கள். பின்னர் கலசமங்கலம், சிங்கமங்கலம் என்ற இரண்டு சிறு கிராமங்கள் இருந்த இடத்தில் கோட்டை ஒன்று புதிதாகக் கட்டினார்கள். அதுவே புதுக்கோட்டை எனப் பெயர் பெற்று தலைநகரமாயிற்று. (மானாமதுரைக்கருகில் உள்ள தென்னவராயன் புதுக்கோட்டையினின்றும் வேறுபடுத்திக்காட்ட இவ்வூரைத் தொண்டமான் புதுக்கோட்டை என்பர்). 

புதுக்கோட்டையை நிறுவிய வைத்துர்ப் பல்லவராயரின் முன்னோன் ஒரு சேர்வை என்று நெல்சனைச் சான்று காட்டிவரலாற்று வல்லுநர் இராபர்ட் சியூவெல் (Robert Sewell) குறிப்பிட்டுள்ளார். இந்தப் பல்லவராயருள் தொடக்ககால அரசன் பெயர் திருமலைப்பல்லவராயர். கடைசியாக ஆண்டவர் பெயர் செவந்தெழுந்த பல்லவராயர். "மாதாம் படியுண்டு மெய்சிவந் தான் குழல் வைத்திசைத்துச் சேதாம்ப லங்கனி வாய்சிவந் தான் செம் மலர்த்திருவின் சூதாந் தனந்தைத் துரஞ்சிவந் தானைவர் தூது சென்று பாதாம் புயஞ்சிவந் தான்மல்லைப் பல்லவனே." என்று பாடலொன்றில் சிறப்பிக்கப்படும் இவன் முழுப்பெயர் முகுந்த செவந்தெழுந்த பல்லவராயர் என்பதாகும். 'பாடுந் தமிழ்க்குச் சிவந்தெழுந் தான் மல்லைப் பல்லவர்கோன் காடுஞ் செடியுந் திரியா திரட்டைக்கடுக்கன் செய்து போடும் பொழுதென்ன பூட்டக மோவற்பப் புல்லரைக்கொண் டாடும் பொழுதிரு கன்னத்திலே நின்றடிக்கின்றவே' -எனும் பாடலில் போற்றப்பட்டுள்ளது போலவே செந்தமிழ்ப் புலவர் பலரை ஆதரித்தவன் இச்செவந் தெழுந்தான். புலவர் ஒருவரால் 'சிவந்தெழுந்த பல்லவனுலா என்றொரு சிற்றிலக்கியம் இவர் மீது பாடப்பட்டுள்ளது. 

இவரது ஆளுகைக்குட்பட்ட நம்புகுழி எனும் ஊரில் செட்டிமார் பலர் வசித்து வந்தனர். அவ்வூர்த் தெருக்களில் பிற ஆடவர் அனுமதிக்கப் படுவதில்லை. பெண்கள் கோஷாப் பெண்கள் போல வாழ்ந்து வந்தனர். 'குளக்காவி மலர்த்தொடையான் சிவந்தெழுந்த பல்லவனைக் கூடா நாளில் இளக்கார மோபிரிந்த வாறுகண்டோ நானேழை யென்று தானோ உளக்காத றுண்டுகோல் பனிநீர்நெய்யானுறங்கு மூச னல்ல விளக்காக வெனைத்திரியா விடியுமட்டு மெரித்தனையே வெண்ணிலாவே" என்று விரகதாபத்தால் வெண்ணிலாவைச் சாடும் நாயகியரின் காவிய நாயகனாக வர்ணிக்கப்பட்ட செவந்தெழுந்தான் அவ்வூர் வழியே வேட்டைக்குச் சென்றார். பிற ஆடவரைப் பார்க்க அனுமதிக்கப் படாதிருந்த அப்பெண்கள் அழகிய மன்னரை ஆவலோடு பார்த்ததால் தம் குலத்திற்கு இழுக்கு நேர்ந்து விட்டது எனக்கருதி நம்புகுழி செட்டிகுல ஆடவர் அனைவரும் தம் பெண்டிரை நெருப்புக் குழியில் தள்ளிவிட்டு தாங்கள் நம்பு குழியை விட்டே போய்விட்டனர் என்று 'புதுக்கோட்டை இராஜ்ஜியச் சரித்திரம் தெரிவிக்கிறது. - இந்தச் செவந்தெழுந்த பல்லவராயர் தன்னுடைய சொந்தப்பகுதி யைத் தவிர, கிழவன் சேதுபதி (1974-1710) யின் பிரதிநிதியாக அப்போது சேது நாட்டைச் சேர்ந்திருந்த கீழாநிலை, திருமெய்யம் ஆகியவற்றையும் ஆண்டுவந்தார்.

புதுக்கோட்டையிலிருந்து பல்லவராயர் ஆளுகின்ற காலத்தில் தொண்டைமண்டலத்திலிருந்து கரம்பக்குடியில் வந்து தங்கிய ஒரு கள்ளர் பிரிவு 1650-இல் இருந்து சிறு பகுதியை ஆண்டு வந்தது. பல்லவராயர் கை ஓங்கியிருந்தமட்டும் இவர்களின் பெயர் வெளி உலகுக்குத் தெரியவில்லை. இவர்களின் புகழ் பாடுவது, 1750-இல் வெங்கண்ணா எனும் தெலுங்குக் கவிஞர் எழுதிய 'தொண்டைமான் வம்சாவளி. வரலாற்று அடிப்படையில் அறியப்படும் இந்தப் பிரிவின் முதன் அரசன் ரகுநாத ராயத்தொண்டமான். இந்த இராயத் தொண்டமானும் அவர் தம்பி நமனத் தொண்ட மானும் கிழவன் சேதுபதிக்குப் படை நடத்தி உதவி புரிந்து அவன் அன்பைப் பெற்றிருந்தனர். வேட்டைக்கு வந்த காலத்தில் தொண்ட மானின் தங்கையைக் கண்டு காதல் கொண்ட சேதுபதி அவளை மண முடித்தார் தொண்டமான் மைத்துனரானதன் மூலம் சேதுபதிக்கு இன்னும் நெருக்கமாகி விட்டார். இந்நிலையில், செவந்தெழுந்த பல்லவராயரின் அரசியல் போக்கில் மாறுதல் ஏற்பட்டு வருவதாக வும் அவர் தஞ்சை அரசர் பக்கம் சாய்வதாகவும் சேதுபதி செவிகளுக்கு ஒரு செய்தி எட்டிற்று. அரசியல் குறித்து ஆலோசனை நடத்தத் தம்மை காளையார்கோயிலில் வந்து சந்திக்குமாறு சேதுபதி யிடமிருந்து செவந்தெழுந்த பல்லவராயருக்கு ஒலை பறந்தது.

கிழவன் சேதுபதி காளையார் கோயில் வந்து சேர்ந்தார். ஆனால் செவந்தெழுந்த பல்லவராயரோ இன்னும் வந்தபடில்லை. அவர் வரும் வழியில் கண்டதேவி என்னும் ஊரில் தங்கி ஆலய வழிபாடு செய்ததனால் வரச் சுணங்கி விட்டார். பொறுமையிழந்த சேதுபதி சினந்தெழுந்து 'செவந்தெழுந்தானைக் கட்டிவா என்று தன் மகனுக்கு ஆணை பிறப்பித்தார். சேதுபதி மைந்தனால் இழுத்து வரப்பட்ட செவந்தெழுந்த பல்லவராயரின் அரசு பறிக்கப்பட்டது. அப்பகுதி கிழவன் சேதுபதியால் இரகுநாதராயத் தொண்டமானுக்கு வழங்கப்பட்டது. செவந்தெழுந்தார் சில நாட்களில் உயிர்துறந்தார். ஆக திருமெய்யம் உள்பட புதுக்கோட்டைப் பகுதி முழுமையும் இரகுநாத ராயத் தொண்டைமான் வசமாயிற்று. அவர் முதல் தொடங்கி பத்து தொண்டமான்கள் பிரிட்டீசு அரசில் தனியரசு ஆட்சி செலுத்தியுள்ளனர். ஆட்சி உரிமை இழந்த பல்லவராயரின் வழி வந்தோர் சிலர் ராயத் தொண்டமான்களிடம் படைத்தளபதிகளாக இருந்துள்ளனர். எடுத்துக்காட்டாக வாட்போர்ப்படைப் பிரிவுக்குத் தளபதியாக பெரும் பல்லவராயர் என்பவர் இருந்திருக்கிறார். தொண்டமான்படையில் ஒரு படைப்பிரிவின் தலைவராகப் பணி புரிந்த நம் வெங்கண்ண்ன் சேர்வைக்காரரையும், (பல்லவராயரின் முன்னோர் ஒரு சேர்வை என்பதால்) பல்லவராயர் வழி வந்தவர் என்று கருத இடமுள்ளது. புதுக்கோட்டைத் தொண்டமான் அரசின் படை அமைப்பில் படைத் தளபதியை பவுஜ்தார் (Fauzda) எனவும், படைப் பிரிவுத் தலைவரை சர்தார் (Sardat) அல்லது சேர்வைகாரர் (Servakar) எனவும் படைவீரர்களை அமரக்காரர் (Amarakkar) ersarayib lopp ஊழியர்களை ஊழியக்காரர் (Ullyaka) எனவும் பெயரிட்டிருந்தனர். வெங்கண்ணன் சேர்வைக்காரர் ஆரம்பத்தில் ஒரு சாதாரண ஊழியக்காரர்தான். நாளடைவில் அவரது வீரப் பேராற்றலினால் ஒரு சேர்வைகாரர் அளவுக்குப் பதவி உயர்வு பெற்றார். ராயத்தொண்டமான் வரிசையில் ஆறாமவரான ரகுநாதத் - தொண்டமான் (1825-39) ஆட்சியில் நிலவரி ஒழிக்கப்பட்டது. அவர் 1839-ல் காலமான போது அவரது மைந்தர் இராமச்சந்திரத் தொண்ட மானுக்கு வயது ஒன்பது. அப்போதே அரசுப்பட்டங்கட்டப்பட்டு விட்டபோதிலும் நேரடியாக ஆட்சிப் பொறுப்பேற்றது, 1844-ல் தான். ஏற்கெனவே நிலவரி எடுக்கப்பட்டதாலோ வேறு நிர்வாகக் குறைபாடுகளினாலோ நாட்டுப் பொருளாதார நிலை சீர் கேடடைந்து 1853 அளவில் பயங்கரமான நிலை தலை தூக்கிற்று. நாட்டுமக்கள் மிகுதியும் அதிருப்தியுற்றிருந்தனர். அவர்களுக்கு எதிராக அரசு தன் படைபலத்தை ஏவ முற்பட்டிருந்தது. அப்போது தங்களை வழி நடத்த யாராவது வரமாட்டார்களா என்றிருந்த மக்களுக்கு வெங்கண்ணன் சேர்வைகாரர் ஒரு விடிவெள்ளியாகத் தென்பட்டார். - மக்களின் துயரைப் துடைப்பதற்குப் பதிலாக மக்களை ஒடுக்குவதற்கே அரசு படையைப் பயன்படுத்த முற்பட்டது. வெங்கண்ணன் சேர்வைகாரர் படைப்பிரிவில் தனக்கிருந்த செல்வாக்கைப் பயன்படுத்தி படையினரில் ஒரு பகுதியை, அதிருப்தி யுற்று கிளர்ச்சி செய்யும் மக்களுக்கு, ஆதரவாகத் திருப்பினார். அமரக்காரர்களை படைப்பணிக்குச் செல்லாதபடி தூண்டினார். அவர்களை அரசு ஆணைக்குக் கட்டுப்படாதபடி செய்யுமளவு அவர்களைத் திருப்பினார். 'விவசாயிகளே, அரசுக்கு வரி கொடாதீர் நிலம் என்னவோ அரசுக்குரியதுதான். விளைவிப்பது நீங்களல்லவோ நீங்கள் விளைவிக்கிற நெல்லை நீங்களே எடுத்துச் செல்ல இவர்களென்ன தடை சொல்வது?’ என்று விழிப்பூட்டினார். கிளர்ச்சிக்காரர்கள் தொகை நாளுக்குநாள் அதிகரித்தது. தொண்ட மான் தன் படையினால் இவர்களை அடக்க முடியாது என்று கண்டு கொண்டார். நவீன ஆயுதங்களும் பெரும் படையும் கொண்ட பிரிட்டீசு அரசிற்கு அவசரக் கடிதம் அனுப்பினார். 1854 மத்தியில் பிரிட்டீசு இராணுவம் புதுக்கோட்டையில் வந்து இறங்கிற்று. வெள்ளையர் படைவருகிறது என்றுவெங்கண்ணர் அஞ்சவில்லை. இறுதிவரை போராடினார். கடைசியில் கிளர்ச்சி ஒடுக்கப்பட்டது. எழுச்சி அப்போதைக்கு ஒய்ந்தது. வெங்கண்ணரை அடக்க அந்நியரான வெள்ளையர் படையை புதுக்கோட்டை அரசு அழைத்தது. விளைவு? ஆங்கிலேய இராணுவத்தினர் புதுக்கோட்டையில் தொண்டமான் செலவில் நிரந்தர விருந்தினராக நிறுத்தி வைக்கப்பட்டனர். அது மட்டுமா? தொண்டமான் மன்னரின் அதிகாரங்கள் ஆங்கில அரசால் குறைக்கப் பட்டன. ஆனால் தளபதி வெங்கண்ணர் என்றும் நம் கண்ணில் புகழ் குன்றா வீரராகக் காட்சிதருகிறார். 

ஆதாரங்கள்: 

1) கே. இராமசுவாமி அய்யர் எழுதிய புதுக்கோட்டை இராஜ்ஜியச் சரித்திரம். 

2) பேராசிரியர் மு. இராகவையங்கார் திரட்டிய தனிப்பாடல் களின் தொகுப்பு - "பெருந்தொகை." 

3) கலைக்களஞ்சியம் - தொகுதி 7 

4) Nelson "The Madura Country” X 

5) Robert Sewell, “A Sketch of the Dynasties Southern India” 

6) KR. Venkatarama Ayyar “Manual of Pudukkottai State" | 

7) S. Radha Krishna Ayyar “A General History of the Pudukkottai State.” II &

சேர்வை :


சேர்வை என்பது தஞ்சை, புதுக்கோட்டை, அறந்தாங்கி, சிவகங்கை பகுதியில் கள்ளர் பட்டமாகும். சேர்வை பட்டமுடைய குறிப்பிடத்தக்க சிலரில் மாவீரர் கருவபாண்டியன் சேர்வை, வீரன் துள்ளுக்குட்டி சேர்வை, கலைமாமணி அறந்தை நாராயணன் சேர்வை, பட்டுக்கோட்டை விஸ்வநாதன் சேர்வைக்காரர் போன்றவர்கள் கள்ளர் மரபினர். 

சேர்வைக்காரன்பட்டி : புதுக்கோட்டை குன்றாண்டார் கோயில் வட்டத்தில் சேர்வை பட்டமுடைய கள்ளர்கள் வாழும் சிற்றூர்.

1993 ல் வெளிவந்த Hollow crown ethino history of small kingdom Book ல் மட்டும் அகமுடையார்னு தவறுதலாக உள்ளது. அதற்கு சரியான ஆதாரங்கள் எதுவும், அதில் தராமல் சேர்வை என்பதால் அகமுடையார் என்று குறிப்பிட்டுள்ளார். 

கள்ளர் மரபை சேர்ந்த முத்துசாமி வல்லத்தரசு என்பவர் 1940 ல் புதுக்கோட்டை தொண்டைமான் மன்னர் ஆட்சியை எதிர்த்து புரட்சி செய்தார். இவர் புரட்சி செய்தது போல், இவருக்கு நூறு ஆண்டுகளுக்கு முன்பு அதே போல் கள்ளர் மரபை சேர்ந்த வெங்கண்ணா சேர்வைகாரர், தொண்டைமான் மன்னரின் உறவினர்களான பன்றிகொண்டார், தென்கொண்டார் போன்றவர்களின் ஆதரவோடு, தொண்டைமான் மன்னர் ஆட்சியில் புரட்சி செய்கிறார். அதனால் தன்னுடைய கள்ளர் படையினரை பயன்படுத்தாமல் ஆங்கிலேயேரின் படையினை பயன்படுத்தி, அடக்குகிறார்
.


















கல்வெட்டில் கள்ளரும், கள்ளர் பட்டங்களும்

பொ. ஆ. மு.   4 ஆம் நூற்றாண்டு கால அகநானூறு பாடலில்  "கழல்புனை திருந்தடிக் "கள்வர் கோமான்" மழபுலம் வணக்கிய மாவண் புல்லி" ...

இந்த வலைப்பதிவில் தேடு

என்னைப் பற்றி

எனது படம்
Contact: info.kallarkulavaralaru@gmail.com, தமிழகத்தில் வாழும் கள்ளர் மரபினர் முக்குலத்தோரில் ஒரு பிரிவினர் ஆவர். கள்ளர், மறவர், அகமுடையார் ஆகிய முக்குலங்களும் போர்த் தொழிலை அடிப்படையாக கொண்டு வாழ்ந்து வந்ததால் இந்த மூன்று சாதியினரும் முக்குலத்தோர் என்று அறியப்படுகின்றனர். இந்த மூன்று குலத்தினரும் "தேவர்" என்ற பொதுவான பெயரோடு அறியப்படுகிறார்கள். கள்ளர் மரபில் அறந்தாங்கி தொண்டைமான், புதுக்கோட்டை பல்லவராயர், புதுக்கோட்டை தொண்டைமான் மற்றும் பல சமீன்தார்களும், பெரு நிலவுரிமையாளர்களும் இருக்கின்றனர். (கள்ளர் படைப்பற்று - கள்ளர் நாடு - கள்ளர்த்தடி). கள்ளர் வரலாறு : வரலாறு என்றால் வந்த வழி என்று பொருள். வந்த வழி தெரியாதவர்களுக்குப் போகும் வழி புரியாது. வரலாற்றை நாம் நினைவு கூர்வதற்குக் காரணம் கடந்து போன ஈகங்களை எண்ணிக் கண்ணீர் விடுவதற்காகவும், நிகழ்த்தி விட்ட வீரங்களைச் சொல்லிப் பெருமை பேசுவதற்காகவும் அல்ல. வருங்காலத்திற்கு வழி சமைப்பதற்கு அந்த ஈகமும் வீரமும் வழிகாட்ட வேண்டும் என்பதற்காகத்தான். கள்ளர்களின் நான்கு முக்கிய பிரிவுகள் - ஈசநாட்டுக்கள்ளர் (திருச்சி, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை) : கிளைவழிக்கள்ளர் (சிவகங்கை) : அம்பல கள்ளர் / நாட்டார் கள்ளர் (சிவகங்கை, மதுரை) : பிறமலை கள்ளர் (மதுரை, உசிலமபட்டி, தேனி, கம்பம், திண்டுக்கல்)

வலைப்பதிவு காப்பகம்

பின்பற்றுபவர்கள்