திங்கள், 26 ஜூன், 2023

தொண்டைமான் மன்னர்களின் குல தெய்வம் திருக்கோகர்ணத்தின் அரைக்காசு அம்மன் என்ற பிரகதாம்பாள்



ஆடி மாதம் என்றாலே சக்தி வழிபாடுதான். அதிலும் குறிப்பாக தொண்டைமான் மன்னரின் நாட்டில் சக்தி வழிபாடு சிறப்பாக நடைபெறும்.

தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சமஸ்தானம் புதுக்கோட்டை சமஸ்தானம். இந்த சமஸ்தான மன்னர்களின் குலதெய்வமாக இருப்பவள் திருக்கோகர்ணத்தின் அம்பாள் பிரகதாம்பாள். அருள்மழை பொழியும் இவளை எண்ணிய பிறகே எந்த ஒரு காரியத்தையும் புதுக்கோட்டை மன்னர் குடும்பத்தினர் செய்வர்.

புதுக்கோட்டை மன்னர், தன்னையும் தன் குலத்தையும் தேசத்தையும் காக்கிற ஸ்ரீபிரகதாம்பாளின் திருவுருவத்தைப் பொறித்து, நாணயம் வடிப்பது என முடிவு செய்தார். அதன்படி, அம்மனின் திருவுருவத்துடன் நாணயம் வெளியானது


அந்நாளில் இந்த அன்னைக்கு நவராத்திரி விழாவினை மன்னர்கள் விமரிசையாகக் கொண்டாடுவார்கள். அப்போது அன்றைய தினத்திற்கு மட்டுமல்லாமல் பல நாட்களுக்கும் அன்னம் கிடைக்க வேண்டும் என்பதற்காக அரிசி, வெல்லம் போன்ற பொருட்களையும், அம்மன் பொறிக்கப்பட்ட அக்காலத்தில் புழக்கத்தில் இருந்த அரைக்காசு ஒன்றையும் சேர்த்து மக்களுக்கு அவர்கள் தானம் செய்து வந்தனர்.

விரதமிருந்து இந்த அன்னையை புதுக்கோட்டை மக்கள் எல்லோரும் கொண்டாடுவர்.

ஒருமுறை புதுக்கோட்டை மன்னரின் பாரம்பரிய நகை ஒன்று காணாமல் போய்விட்டது. அன்னையை வணங்கி தொலைந்து போன நகை திரும்ப கிடைக்குமாறு வேண்டினர். என்ன ஆச்சர்யம். தொலைந்த பொருள் உடனேயே கிடைத்தது. இதனால் மகிழ்ந்து போன அரச குடும்பத்தினர் இந்த அன்னைக்கு விசேஷ பூஜை செய்து மகிழ்ந்தனர். இந்தத் தகவல் எங்கும் பரவி, அன்றிலிருந்து இன்றுவரை அரைக்காசு அம்மன், 'தொலைந்து போன பொருட்களை தேடித்தரும் விசேஷ தேவியானார்.

மன்னர்கள், இந்த அன்னைக்கு பிரசாதமாக வெல்லத்தை வைத்து உண்பர். அதுவே இன்றுவரை விசேஷமாக உள்ளது. எலுமிச்சை மாலை அணிவித்து இவளை வணங்கினால் தொலைத்த பொருள் மட்டுமல்ல, நமக்கு வரவேண்டிய பொருளும்கூட எளிதாகக் கிட்டி விடும் என்பது மக்களின் நம்பிக்கை. அரைக்காசு அம்மனுக்கு என்று தனிக்கோயில் எதுவுமே தமிழ்நாட்டில் இல்லை. ஆனால், பல சக்தி ஆலயங்களில் இவள் தனிச் சந்நிதி கொண்டு அருள் செய்து வருகிறாள்.


இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய பழைமை கொண்டது திருக்கோகர்ண ஆலயம். இந்த ஆலயத்தில் ஈசனோடு இருந்து அருள் செய்பவளே பிரகதாம்பாள். பிரகதாம்பாள்தான் மக்களால் அரைக்காசு அம்மனாக உருமாறி நமக்கு அருள்புரிந்து கொண்டு இருக்கிறாள். இவளின் உருவம் பொறித்த காசினை பூஜை அறையில் வைத்து வழிபட்டால் செல்வ வளம் கிட்டும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. 500 வருடங்களுக்கு மேலாக மக்களால் விரும்பி வணங்கப்படும் இந்த தேவி, நம்பியவரைக் காப்பவள். நலன்கள் பல அளிப்பவள். வேண்டியதை அருள்வாள்.

மகேந்திரவா்ம பல்லவா் காலத்தில் கட்டப்பட்ட மலை குகை கோவில் திருக்கோகரணீஸ்வரா் கோவில் ஆகும். இங்குள்ள மூலவா் கோகரணீஸ்வரா் தேவியா் பிரகதாம்பாள், தொண்டைமான் வம்சத்தினா் ஆட்சியின் போது இங்கு சித்திரை பெருவிழா, ஆடிபூரம் மற்றும் நவராத்திரி விழா ஆகியவை மிகவும் சிறப்பாக நடைபெறும். நாடகம், நாட்டியம் மற்றும் இசை ஆகியவை இங்கு சிறப்புற்று விளங்கியது. பிற்காலத்தில் பாண்டியர் சோழா்கள் மற்றும் தொண்டைமான் அரச வம்சங்களும் சில பகுதிகளை கட்டமைத்து பெரிய கோவிலாக பரிமளிக்க செய்துள்ளனா்.


பல்லவராயர்கள் வம்சத்தவரால் உருவாக்கப்பட்ட பிள்ளையார், பள்ளி கொண்ட பெருமாள், நரசிம்மர், மகாலெட்சுமி, ஆஞ்சநேயர் போன்ற திருவுருவங்களையும், வேறுபல சிற்பங்களையும் தூண்களில் புடைப்பு சிற்பங்களாய்க் காணலாம்.

எந்தக் கோயிலிலும் இல்லாத ஒரு வியப்பாக, திருகோகர்ணம் திருக்கோயிலில்தான் மாடிப்பகுதி என்ற மேல் தளத்திலும் தெய்வத் திருமேனிகள் இடம் பெற்றுள்ளன. இந்த மாடிப் பகுதியில் பரகேசரி முதலாம் ராஜேந்திரச் சோழன் காலக் கல்வெட்டு ஒன்றும் காணப்படுகிறது.

ராஜகோபுர வாயிலைக் கடந்தவுடன் ராயத் தொண்டைமான் காலத்தில் எடுப்பிக்கப்பட்ட சிற்ப மண்டபம் உள்ளது. இதன் விதானப் பகுதியில் பன்னிரண்டு ராசிகளும் வடிக்கப்பட்டிருப்பதைக் காணலாம். இதனால் சிற்ப மண்டபத்தை ராசி மண்டபம் எனவும் வழங்குவர். சிற்ப மண்டபம் ஓர் அருமையானகலைக் கருவூலமாய்த் திகழ்ந்திருக்க வேண்டும். இப்போது பெரும்பகுதி சேதப்படுத்தப்பட்ட நிலையிலும் அழகைக் கண்டு மனம் பறிகொடுக்க முடிகிறது.





வீரபத்திரர், ரதி மன்மதன், அருச்சுனன், காளி நடனம், ஊர்த்துவ தாண்டவர், கர்ணன், இராமர், யாளிகள், குதிரை வீரர்கள் - என்று தூண்களில் அணிவகுக்கும் கலையழகை நிதானமாகக் கண்டு மகிழ வேண்டும். சிற்ப மண்டபத்தின் இடப்புறத்தில் கல்யாண மண்டபம் உள்ளது. இங்குதான் நவராத்திரி விழாவின் போது பத்து நாட்களும், அம்பிகைக்கு விதம் விதமான அவதார ஒப்பனைகள் செய்து வைத்திருப்பார்கள். மண்டபத்தின் இருபுறமும் பொம்மைக் கொலுவும் அழகாக இடம் பெறும். மகிஷாசுர வதம் போன்ற அச்சுறுத்தும் ஒப்பனைகளிலும் அம்பிகை காட்சியளிப்பார். இந்த மண்டபத்தில் தான் ஆடிப்பூரத் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக அம்மன் திருக்கல்யாணம் நிகழும்.


சிற்ப மண்டபத்தின் வலப்புறத்தில் ஊஞ்சல் மண்டபம் உள்ளது. இதுவும் பதினாறு கால்கள் கொண்ட அமைப்பு. புடைப்புச் சிற்பங்களாக நிறையக் கலை வடிவங்களைக் காணலாம். திருக்கல்யாணத்தன்று இறைவனும் இறைவியும் இங்கு ஊஞ்சலில் எழுந்தருளுவார்கள். சிற்ப மண்டபத்தைக் கடந்து நேரே நடந்தால் பிரதான மண்டபத்தை அடையலாம். இடப்புறம் திரும்பினால் நீளமான மேடையில் அறுபத்து மூவர் திருமேனிகள் அணிவகுக்கின்றன. அங்கு திரும்பாமல் சற்று நேரே வந்து இடப்புறம் திரும்பினால் அருள்மிகு பிரகதாம்பாளின் கருவறைக்குள் நுழையலாம். அம்பிகையின் நின்ற திருக்கோலம், அரக்கர்களின் விதம் விதமான ஒப்பனைகளால் பக்தர்களைக் கட்டி இழுக்கும். குறிப்பாக சந்தனக்காப்பு, வெள்ளிக் கவசங்கள், உள்ளங்கையில் மரகதக் கற்கள் உட்படப் பூரண ஒப்பனைகளில் அம்பிகையை தரிசிப்பது வாழ்வின் மிகப் பெரும் பேறு.


அம்மன் சந்நிதிக்கு நேரே கையில் விளக்கேந்தி நிற்கும் ஒரு பெண்ணின் திருமேனி கொள்ளை அழகுடன் உலோக வார்ப்பில் நின்று கொண்டிருக்கிறது. பாவை விளக்கு என்று வழங்கப்படும் இச்சிற்ப சௌந்தர்யம் வெகு நுட்பமான அணிகலன்கள் ஆடை வேலைப்பாடுகளுடன் உயிர் வடிவமாய்க் காட்சி தருகிறது. மேற்குபுறம் படியேறினால் அன்னை பிரகதாம்பிகையின் சந்நிதி. அம்பிகை தனிக் கருவறையில் அருள் பாலித்துக் கொண்டிருக்கிறார்.

புதுக்கோட்டை மன்னர் ஒருவர் கடற்பணயம் மேற்கொண்டிருந்த போது, கப்பலின் ஒரு பகுதியில் தீப்பற்றியதாகவும், அப்போது சின்னஞ்சிறு பெண் ஒருத்தி உறக்கத்திலிருந்த மன்னரை தூங்குகிறாயே எழுந்திரு... கப்பலில் தீப் பற்றிவிட்டது என்ற எச்சரித்ததாகவும் சொல்வார்கள். தம்மை உறக்கம் கலைத்துக் காப்பாற்றிய சின்னஞ்சிறு பெண் அன்னை பிரகதாம்பாளே என்று உணர்ந்தார் மன்னர்.

இந்த நிகழ்வின் நன்றி வெளிப்பாடாக அம்மன் சந்நிதியில் அணையா விளக்கு ஒன்று எப்போதும் சுடர் விட்டு எரிந்து கொண்டிருக்கிறது. இதற்க வெள்ளியாலான கூண்டு ஒன்றும் வைத்து மூடியிருக்கிறார்கள். ஏறக்குறைய நூறாண்டுகள் பழைமையானது இந்த நந்தா விளக்கு. வெள்ளிக் கூண்டின் மேல் பகுதியில் 1912.... மார்த்தாண்ட பைரவத் தொண்டைமான்... என்று பொறிக்கப்பட்டிருக்கிறது.

அம்பிகையின் மீது இத்தனை ஈடுபாடும் பக்தியும் அந்த மாமன்னர், தம்முடைய வாழ்வின் பிற்பகுதியில் இத்திருக்கோயிலுக்கு வந்து வழிபட முடியாமல் போனது ஒரு சோகம். இவர் மோலிஃபிங்க் என்னும் ஆஸ்திரேலியப் பெண்மணியை காதலித்து மணந்து கொண்டதே காரணமாயிருக்கலாம்.

அன்னை பிரகதாம்பாள் கருவறைக்க முன்னால் தென்புறம் விநாயகரும், வடபுறத்தில் பள்ளியறையும் உள்ளன. பள்ளியறைத் திருமேனிகள் சிறிய உருவங்களாயினும் கொள்ளை அழகோடு விளங்குகின்றன. அன்னையின் எதிரில் வெண்கலத்தாலான நந்தி இருப்பது புதுமையும் அரிதான சிற்பச் சிறப்பும் உடையது. வெள்ளிக் கிழமை, சிறப்பான நாட்களில் முழுமையான அலங்கார அணிமணிகளோடு அம்பிகையின் அருட்தோற்றம் பேசும் திருமேனியாகக் காட்சி தரும். சந்நிதியின் எதிரில் புடைப்புச் சிற்ப வேலைப்பாடுகளுடன் உலோகத் தகடுகள் போர்த்தப்பட்ட அழகான கொடி மரமும், அதற்கு அப்பால் தலவிருட்சம் உள்ளன.



கோயிலின் கிழக்கே மங்களதீர்த்தம், மங்கள தீர்த்த மண்டபம், குதிரை வீரர்களின் சிற்பத் திருமேனிகள் எல்லாவற்றையும் காணலாம். மங்கள தீர்த்தத்துக்குப் போகும் வழியைக் கீழைவாசல் என்பார்கள். இந்த மண்டபம் பாண்டிய மன்னர்களாலும், தொண்டைமான் மன்னர்களாலும் உருவாக்கப்பட்டிருக்கிறது. மண்டபத்தின் தென் பகுதியில் அன்னை பிரகதாம்பிகையின் சந்நிதிக்கு எதிரே, கோபுரத்தோடு கூடிய நுழைவாயில் ஒன்று உருவாக்கப் பட்டுள்ளது.

மங்களாம்பிகை சந்நிதிக்கு கீழே, விசாலமான மண்டபம் ஒன்ற அழகான சிற்ப வேலைப்பாடுகளுடன் விளங்குகிறது. இது குலசேகர பாண்டியன் காலத்துத் திருப்பணி என்கிறார்கள். புதுக்கோட்டை பகுதியை தொண்டைமான்களுக்கு முன்னால் ஆண்ட பல்லவராயர்களின் சிலைகள் மண்டபத் தூண்களில் காணப்படுகின்றன. தவிர யாளிகள், துர்க்கை போன்ற சிற்பத் திருமேனிகளையும் காணலாம்.

இம்மண்டபத்தின் மேற்குக் கோடியில் இத்தலத்தின் ஆதிமூர்த்தியாக விளங்கியிருக்கக் கூடிய வகுளவனேசுவரரின் லிங்கத் திருமேனி உள்ளது. பசு வடிவில் வந்து பிறப்பெடுத்த காமதேனுவின் குளம்புத்தடம் இத்திருமேனியில் பதிந்திருப்பதாய்ச் சொல்வார்கள். எதிரே நந்தி ஒன்று, செவ்வக வடிவிலான தொட்டிக்குள் அமைக்கப் பட்டிருக்கிறது. வறட்சிக் காலங்களில், இந்த நந்தி மூழ்கும்படி தொட்டியில் தண்ணீர் நிரப்பினால் மழை பெய்யும் என்னும் நம்பிக்கை உண்டு.





இந்த கோவில் நித்யோசவம் என்று சொல்லக்கூடிய மிக பெரிய சிறப்புடையதாக இருந்தது. நித்யோசவம் என்றால் தினந்தோறும் திருவிழா நடத்துவதாக ஐதீகம். சமீப காலத்தில் 12 மாதமும் திருவிழாக்கள் நடந்த கோவில் முந்தய காலத்தில் 20 நாட்களுக்கு உள்ளேயே சுவாமி புறப்பாடும் 10 நாட்களுக்கு வெளியிலேயே திருவிழா என்று சொல்லப்படும்.

நன்றி
பாரதி இலக்கியப் பயிலகம்
திரு. செல்வமணி