திங்கள், 26 ஜூன், 2023

குளத்தூர் தொண்டைமான்




கி.பி.1685 முதல் 1750 குளத்தூரை ஆட்சி செய்த குளத்தூர் தொண்டைமான்கள்.

இவர்கள் புதுக்கோட்டை தொண்டைமான்களின் வழிவந்தவர்கள் விஜய ரகுநாதராய தொண்டைமானின் சகோதரர்தான் நமணதொண்டைமான் (நமண சமுத்திரம் என்ற ஊர்கூட உள்ளது).

இந்த நமணத்தொண்டைமான்தான் இராமநாதபுரம் அரண்மனையில் மதம்கொண்ட யானையை அடக்கி சேதுபதி முன் நிறுத்தியவராவார் . இதன் மூலம பெரும் உயிர்ச்சேதம் அப்போது தவிரக்கப்பட்டது.

நமணதொண்டைமான் விசங்கிநாட்டுக்கள்ளர்களையும் அடக்கி நாயக்கர்களின் நன்மதிப்பை பெற்றிருந்தார். குளத்தூர் என பெயர்வரக்காரணம் அவ்வூரில் உள்ள பெரிய கண்மாய்.

குளத்தூர் தொண்டைமான் வம்சாவளியை தோற்றுவித்தவர் முதல் நமணத்தொண்டைமான் ஆவார்.

மதுரை நாயக்க மன்னரான ரெங்க கிருஷ்ணா முத்துவீரப்பா (1682_89) வேண்டுகோளை ஏற்று திருநெல்வேலி பகுதியில் உள்ள நாகலாபுரம் பாளையக்காரர், மதுரை மன்னருக்கு வரி செலுத்த மறுத்து தன்னிச்சையாக ஆள முயன்றார். இதனை அடுத்து மதுரை மன்னர் நமண தொண்டைமானின் உதவியை நாடினார். நமண தொண்டைமான் நாகலாபுரத்தில் படையெடுத்து அடங்காத நாயக்கர் பாளையம் மற்றும் மற்ற பாளையங்களை அடக்கி மதுரை மன்னரின் கட்டுப்பாட்டிற்கு கொண்டு வந்தார். திருச்சி நாயக்கரை சந்தித்து போரில் கைப்பற்றிய குதிரைகள், யானைகள் மற்றும் போர் கருவிகளை அளித்தார். 

தொண்டைமானின் வீரத்தை கண்டு மகிழந்த ரங்க கிருஷ்ண முத்து வீரப்ப நாயக்கர், குளத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப்பகுதி நிலங்களை அளித்தார்.

இந்த நிலத்திற்கு தொண்டைமான் எந்த வரியும் செலுத்த தேவையில்லை எனும் சிறப்பு சலுகை அளிக்கப்பட்டது. நமண தொண்டைமானுக்கு 


  1. அம்பாரியுடன் யானை
  2. ஆடல் மகளிர் வைத்துக்கொள்ளும் உரிமை
  3. நரகஜ மேளம் எனும் இசைக்கருவி வைத்துக்கொள்ளும் உரிமை 
  4. கருடக் கொடி
  5. அனுமக் கொடி
  6. பகலிலும் தீப்பந்தம் மற்றும் தோரண விளக்குகளை தன் முன்னால் எடுத்து செல்லும் உரிமை
  7. போர் கருவி
  8. கண்ட பெருண்டா எனும் இசைக்கருவி முதலானவை நாயக்க வழங்கப்பட்டது.



இவற்றின் நமண தொண்டைமான் ஒரு குறுநில மன்னர் அந்தஸ்தை பெற்றார். ரகுநாதராய தொண்டைமான் புதுக்கோட்டையையும், நமண தொண்டைமான் குளத்தூரையும் ஆட்சி செய்தனர். நமண தொண்டைமான் சின்ன தொண்டைமான் என அழைக்கப்பட்டார்.

குளத்தூரில் வரதராஜ பெருமாள் கோயில் நிறுவினார் நமண தொண்டைமான். 300 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட இந்த கோயில் வரலாற்று சுவடுகளை தன்னுள் சுமந்து கொண்டு இன்றும் கம்பீரமாக காட்சி அளிக்கிறது.










அவருடைய மந்திரசபையில் இருந்த நாயக்கரான வரதராஜ வெங்கட் பெயரையே அக்கோவிலுக்கு சூட்டி வரதராஜ பெருமாளாக்கினார்.





விசங்கி நாட்டுக் கள்ளர்கள் புதுக்கோட்டை யின் வடக்கு பகுதியில் மிகுந்து வாழ்கின்றனர். இவர்கள் யாருக்கும் கட்டுப்படாமல் தன்னாட்சி முறையில் வாழ்ந்து வந்தனர். 17 ஆம் நூற்றாண்டில் திருச்சியை ஆண்ட நாயக்க மன்னருக்கு கட்டுப்படாமல் வாழ்ந்தனர். வரி கேட்டு வரும் நாயக்கர்களின் தலையை வெட்டி அனுப்பும் வழக்கத்தை கொண்டிருந்தனர்.

குளத்தூர் நமண தொண்டைமானிடம் மூர்க்கத்தனமான விசங்கி நாட்டுக்கள்ளர்களை கட்டுப்படுத்தும் பொறுப்பை வழங்குகின்றனர் நாயக்கர்கள்.

நமணதொண்டைமான் நேரிடையாக அவர்களை களத்தில் வெற்றிபெற முடியாது என்பதை உணர்ந்திருந்தார்.

புலியூரில் திருவிழாவிற்காக அவர்கள் அனைவரும் கூடியபொழுது அவர்களை வென்று கள்ளர்நாட்டு தலைவர்களையும் சிறைபிடிக்கிறார்.



அப்போது அவர்களின் தலையை வெட்டி சாக்கில் போடுகின்றார். ஒரு சாக்கில் "ஒன்பது" தலைகள் இடப்பட்டு அதனை விசங்கிநாட்டு கள்ளன் மூலமாகவே நாயக்கனிடம் ஓர் செய்தியோடு எடுத்துச்செல்ல வைக்கிறார்.


அந்த செய்தி என்னவெனில் பத்து தலைகள் உள்ளன இதனை "சுமந்துவருபவரையும் சேர்த்து". இந்த கொடூர தாக்குதலை அடுத்து விசங்கி நாட்டு கள்ளர்கள் தொண்டைமானுக்கு தற்காலிகமாக கட்டுப்பட்டு இருந்தனர்.


கிபி 1704ல் ராணி மங்கம்மாள் மதுரையின் பொறுப்புகளை இழந்தார். இதன்பின் விஜய ரங்க சொக்கநாத நாயக்கர் திருச்சியில் ஆட்சி பொறுப்பை ஏற்றார். மங்கம்மாளின் தளபதியாக இருந்த நரசய்யா எனும் பிராமணன் மிகவும் செல்வாக்கு மிக்கவனாக திகழ்ந்தான். நாயக்க மன்னருக்கு கட்டுப்படாமல் தன்னிச்சையாக செயல்பட ஆரம்பித்தான். பிராமணன் சூழ்ச்சிகளில் இருந்து தனது அதிகாரத்தை காப்பாற்ற, நமண தொண்டைமானை தனக்கு துணையாக அழைத்துக்கொண்டார் நாயக்கர்.

நாயக்கருக்கு எதிராக செயல்பட சூழ்ச்சி செய்த, ராசய்யாவை தொண்டைமான் அதிகாரத்தை விட்டு விரட்டினார். நரசய்யாவுக்கு பக்க பலமாக இருந்த கத்தலூர் பெரம்பூர் பாளையக்காரர்களை தோற்கடித்து விரட்டினார். இதனால் மகிழ்ந்த நாயக்க மன்னர், ஆவூர் முதல் கத்தலூர் பெரம்பூர் வரையிலான பாளையங்களை தொண்டைமானுக்கு அளித்தார். இவை அனைத்தும் குளத்தூர் பாளையத்துடன் தொண்டைமானால் இணைக்கப்பட்டது.

கிபி 1711 ல் தொண்டைமான் மிகவும் வலுப்பெற்று மதுரை நாயக்கர்களின் மேலாண்மையை அகற்றினர். விராலிமலை அருகில் உள்ள குமாரவாடி பாளையக்காரர் திருச்சி நாயக்கரின் ஆதரவோடு இருந்தார். ஆனாலும் நமண தொண்டைமான் குமாரவாடி பாளையத்தை தாக்கி, குமாரவாடி முதல் விராலிமலை வரை கைப்பற்றுகிறார். இந்த நிலையில் மருங்காபுரியை ஆண்ட பூச்சி நாயக்கர், திருச்சி நாயக்கருக்கு வரி செலுத்த மறுத்ததால் தொண்டைமானின் உதவியை நாடினார் திருச்சி நாயக்கர். நமண தொண்டைமான் பூச்சி நாயக்கரை தோற்கடித்து, அம்மன்குறிச்சி மற்றும் மருங்காபுரி பகுதிகளை குளத்தூருடன் இணைத்துக்கொண்டார்.

தனது வீரத்தால் குளத்தூர் பாளையத்தை பெற்ற நமண தொண்டைமான் தொடர் போர்கள் மூலம் கத்தலூர், பெரம்பூர், அம்மன்குறிச்சி, குமாரவாடி, விராலிமலை பகுதிகளை இணைத்து குளத்தூரின் எல்லையை விரிவு படுத்தினார்.


புதுக்கோட்டையிலுள்ள குளத்தூர் பகுதியை ஆண்ட சொக்கநாத ராமசாமித்தொண்டைமான்தான் அளித்த கொடைகளையும்தன் முன்னோர் பற்றியும் இச்செப்பேட்டில் பொறித்துள்ளார். புதுக்கோட்டையின் முதல் மன்னரின் தந்தையான ராய தொண்டைமானை பற்றிய குறிப்பும் இச்செக்பேட்டில் உள்ளது.





ராசராசவளநாட்டு பன்றிசூழுநாடு அன்பில் தெற்குலூரிலிருக்கும் இந்திர குல குலோத்பவரான காணியுடைய அரையர் மக்களில்இராயரால் பேர் பெற்ற ஸ்ரீமது ராய தொண்டைமானார்" என குறிக்கப்படுகிறார். (நாஞ்சியூர் செப்பேடு)

அருகில் வலிமை வாய்ந்த தங்கள் சகோதரர்கள் ஆட்சிபுரியும் புதுக்கோட்டை தொண்டைமான்களினால் நமண தொண்டைமானால் தன்னுடைய அரசை விரிவுபடுத்த முடியவில்லை. 

நமண தொண்டைமான் 5 மனைவிகளை கொண்டிருந்தார். 2 மனைவிகள் ராங்கியர் குடும்பத்தையும், 1 மனைவி பன்றிகொண்டார் குடும்பத்தையும்,1 மனைவி சம்பட்டியார் குடும்பத்தையும் சேர்ந்தவராவர்கள். 5 ஆவது மனைவி ரங்கம்மாள் என்பவராவார்.

புதுக்கோட்டை முதல் மன்னரான ரகுநாதராய தொண்டைமானுக்கு உறுதுணையாக இருந்து வாழக்கையின் பெரும்பகுதியை போர்களில் கழித்த நமண தொண்டைமான் கிபி 1713 ல் மரணமடைந்தார்.


ராமசாமி தொண்டைமான்

நமண தொண்டைமானுக்கும் சம்பட்டியார் குடும்ப பெண்ணுக்கும் பிறந்தவர் இராமசாமி தொண்டைமான் . குளத்தூர் தொண்டைமான் வம்சத்தின் ஒரே ஆண் வாரிசாக உதித்தவர் இவர்.....( General history of pudukkottai state 1916 pag 136-137)

நமண தொண்டைமானுக்கு பின் இவரது மகன் ராமசாமி தொண்டைமான் அரசப்பொறுப்பு ஏற்றார். இவர் முத்தழகம்மாள், பெரியநாச்சி ஆயி, பெரியநாயகி ஆயி, பிள்ளை ஆயி ஆகிய நான்கு மனைவிகளை பெற்றிருந்தார். இவரது காலத்தில் போர்கள் ஏதும் இன்றி அமைதியாக கழிந்தது. கிறிஸ்தவ மதத்தினருக்கு பெரும் ஆதரவை அளித்தார்.

குளத்தூர் ராமசாமி தொண்டைமானின் அறப்பணிகள்:-

கிபி 1728 ல் ராமேஸ்வரம் செல்லும் பக்தர்கள் இளைப்பாறும் வண்ணம் களமாவூர் மற்றும் கிபி 1730ல் அம்மாசத்திரம் ஆகிய பகுதிகளில் சத்திரங்களை கட்டினார்.

பிறகு நல்லூரிலும் சத்திரங்கள் கட்டப்பட்டது.

பிராமணர்களுக்கு முத்தழகம்மாள் சத்திரம், சந்தனக்குறிச்சி ஆகிய பகுதிகளில் நிலங்களை அளித்தார்.

கிபி 1734 ல் நாஞ்சூரில் பிராமணர்களுக்கு 50 வீடுகள் கொண்ட அக்கரஹாரத்தை தானமாக அளித்தார்.

அம்மாச்சத்திரத்தில் ஒரு சிவன் கோயில் கட்டினார்.

(அம்மாசத்திரத்தில் ராமசாமி தொண்டைமான் கட்டிய சிவன் கோயிலில் அவரது சிற்பம் உள்ளது, இந்த கோயில் குளத்தூர் துரைக்கோவில் என அழைக்கப்படுகிறது) 


ராமசாமி தொண்டைமான் கிபி 1736ல் மரணமடைந்தார்.



இரண்டாம் நமண தொண்டைமான்


ராமசாமி தொண்டைமானின் மகன் இரண்டாம் நமண தொண்டைமான் என அழைக்கப்பட்டார்.

இந்த காலத்தில் புதுக்கோட்டை சமஸ்தானம் மிகவும் வலுப்பெற்று இருந்தது. நமண தொண்டைமானுக்கு பிறகு ஆட்சி புரிய வந்தவர்கள் வலிமையற்றவர்களாக இருந்ததனாலும், மற்றவர்கள் படையெடுத்து எளிதில் குளத்தூரை கைப்பற்ற வாய்ப்பிருப்பதாகவும் உணர்ந்த புதுக்கோட்டை தொண்டைமான் மீண்டும் குளத்தூரை புதுக்கோட்டை சமஸ்தானத்தோடு இணைத்து உத்தரவிட்டார். 


பச்சை தொண்டைமான் என்பவர் குளத்தூரை ஆண்ட கஇரண்டாம் நமண தொண்டைமானின் சகோதரர், அவர் விஜய ரகுநாத தொண்டைமானை எதிர்க்கிறார்.

ஆவுடையப்ப சேர்வைக்காரரும், இளந்தாரி அம்பலமும் தொண்டைமானை திருக்கோகர்ணத்தில் உள்ள பிரகாதாம்பாள் கோவிலில் அமர வைக்கின்றனர்.

பச்சை தொண்டைமான் தன்னுடைய படைகளை குமார கலியராயன் தலைமையில் குடுமியான் மலையில் நிறுத்தி அங்குள்ள கிராமங்களை கைப்பற்றி விட்டனர்.

விஜய ரகுநாத தொண்டைமான் படையானது இரண்டு தளபதிகள் தலைமையில் பச்சை தொண்டைமான் படைகளை சூரையாடி வென்றது.

பச்சை தொண்டைமான் குடிமியான் மலை கோவிலில் ஒழிந்து கொள்கிறார். மீண்டும் அவரை பிடித்து சிறையில் அடைக்கின்றனர்.

இதில் சிறப்பாக பணியாற்றிய ஆவுடையப்ப சேர்வைக்காரருக்கு "அரசு நிலைநிறுத்திய ஆவுடையப்ப சேர்வைக்காரர்" என்ற பட்டம் வழங்கப்படுகிறது.

கிபி 1750 ல் புதுக்கோட்டை மன்னர் குளத்தூரை கைப்பற்றி புதுக்கோட்டை சமஸ்தானத்துடன் இணைத்தார். இணைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்த இரண்டாம் நமண தொண்டைமான் கைது செய்யப்பட்டு திருமயம் கோட்டை சிறையில் அடைக்கப்பட்டார். 

இரண்டாம் நமண தொண்டைமான் குளத்தூரில் கட்டிய அரண்மனை கண்ணம்பட்டி அரண்மனை என அழைக்கப்படுகிறது. 

இன்றும் கோட்டையின் எஞ்சிய பகுதிகளை காணமுடியும். கிபி 1750 க்கு பிறகு குளத்தூர் தொண்டைமான்கள் பரம்பரை முடிவுக்கு வந்தது. 

குளத்தூரை உருவாக்கிய நமண தொண்டைமான் நினைவாக இன்றும் நமணசமுத்திரம் எனும் ஊர் புதுக்கோட்டை- திருமயம் வழித்தடத்தில் உள்ளது.




குளத்தூர் தொண்டைமான்களின் அறப்பணிகள்:-

நமண தொண்டைமான்

குளத்தூரில் சிவன் மற்றும் விஷ்ணு கோயில்களை கட்டினார்

கிபி 1713 ல் பெரம்பூர் விநாயகர் கோயிலுக்கு நிலக்கொடை அளித்தார்.

விரலூரில் உள்ள வெங்கடேஸ்வர பெருமாள் கோயிலுக்கு நந்தா விளக்கு எரிய கொடை அளித்தார்.

கலிங்குகுளம் என குளத்தை குளத்தூரில் உருவாக்கினார்

உச்சாணி எனும் கிராமத்தில் பிராமணர்களுக்கு சர்வமானியமாக நிலங்களை அளித்தார்.

ஸ்ரீரங்க ஐயங்கார்களுக்கு திருப்பூர் என ஊரை தானமாக அளித்தார்.

ராமசாமி தொண்டைமான்

கிபி 1728 ல் ராமேஸ்வரம் செல்லும் பக்தர்கள் இளைப்பாறும் வண்ணம் களமாவூர் மற்றும் கிபி 1730ல் அம்மாசத்திரம் ஆகிய பகுதிகளில் சத்திரங்களை கட்டினார்.


பிறகு நல்லூரிலும் சத்திரங்கள் கட்டப்பட்டது.

பிராமணர்களுக்கு முத்தழகம்மாள் சத்திரம், சந்தனக்குறிச்சி ஆகிய பகுதிகளில் நிலங்களை அளித்தார்.

கிபி 1734 ல் நாஞ்சூரில் பிராமணர்களுக்கு 50 வீடுகள் கொண்ட அக்கரஹாரத்தை தானமாக அளித்தார்.

அம்மாச்சத்திரத்தில் ஒரு சிவன் கோயில் கட்டினார்.

இரண்டாம் நமண தொண்டைமான்

கிபி 1749ல் வைத்துக்கோவில் கடவுளுக்கு நிலங்களை தானமாக அளித்தார்

ரகுநாத ராய தொண்டைமான் தன்னுடைய புதுக்கோட்டையுடன் குளத்தூர் மட்டுமல்லாமல் ஆலங்குடிதிருமெய்யம் ஆகிய பகுதிகளையும் இணைத்து ஒரு பேரரசாகப் பெருமையோடு ஆட்சியைத் துவக்கினார். இந்த ஒருங்கிணைந்த பகுதிதான் பின்னர் புதுக்கோட்டை சமஸ்தானம் எனப் புகழுடன் விளங்கியது.


ஆனால் நமண தொண்டைமான் வீரருக்கெல்லாம் வீரராக திகழ்ந்தார்.

General history of pudukkottai state 1916(137-141) R aiyar

ஆய்வு. திரு. சியாம் சுந்தர் சம்பட்டியார்