திங்கள், 26 ஜூன், 2023

மேஜர் வில்லியம் பிளாக்பர்ன் எனும் தொண்டைமான்களின் விசுவாசி


மன்னராட்சியில்  எதிரிநாட்டின் மீது ஆயுதமேந்தி போர்தொடுத்து வெற்றி பெறுவது ஒருபுறம் என்றாலும் உள்நாட்டு மக்களுக்கு தேவையான நீதி,நிர்வாகம், நிதி இவற்றை அளித்தால்தான் மக்கள் செழிப்போடு வாழ இயலும்.இதைச்செய்த மன்னர்களே பிற்காலத்தில் பொற்கால ஆட்சி வழங்கியதாக வரலாற்றில் சிறப்பானதொரு இடத்தை பெற்றுள்ளனர். போருக்கு வீரம் செறிந்த தளபதிகள் எவ்வளவு முக்கியமோ அதைவிட முக்கியமானது நிர்வாகத்தை நடத்த ஆளுமையும், திறமையும், நேர்மையும் நிறைந்த, மக்களின் மனநிலையும் அறிந்த நிர்வாக அதிகாரிகள் அப்படியானவரைப்பற்றி காண்போம்.



ராஜா விஜயரகுநாதராய தொண்டைமான் (1807-1825):

விஜயரகுநாதராய தொண்டைமான் 10 வயதாக இருக்கும்பொழுது தொண்டைமான் புதுக்கோட்டையின் மன்னரானார். அரசு காரியங்களை மேல் அரண்மனை ஜாகீர்தார் (மன்னரின் சித்தப்பா) விஜயரகுநாத தொண்டைமான் கவனித்து வந்தார். மன்னர் இளம் பிராயத்தினராக இருந்ததால் புதுக்கோட்டை சமஸ்தானத்தின் நிர்வாகத்தையும், நலன்களையும், கவனித்துக்கொள்ள தஞ்சாவூர் ரெசிடன்ட் ஆக இருந்த மேஜர் வில்லியம் பிளாக்பர்ன் ஆங்கிலேய அரசால் நியமிக்கப்பட்டார். அதன்படி கிபி-1807 பிப்ரவரி முதல் புதுக்கோட்டையின் ரெசிடண்டாக (ஆட்சியாளராக) பிளாக்பர்ன் பொறுப்பேற்றார். 

மேஜர் பிளாக்பர்ன் புதுக்கோட்டை அரச குடும்பத்தினருக்கு நன்கு அறிமுகமானவர் பாளையக்கார போரின்போது அவர் புதுக்கோட்டைக்கு பலமுறை வந்திருக்கிறார்.எனவே அவர் சமஸ்தானத்தின் நிர்வாக பொறுப்புகளை கவனித்துக்கொள்ள நியமிக்கப்பட்டதில் அரச குடும்பத்தினருக்கும்,புதுக்கோட்டை மக்களுக்கும் பெரும் மகிழ்ச்சி.

இளம் பிராயத்தில் இருந்த மன்னர் மற்றும் அவரது சகோதரர் இருவரும் பிளாக்பர்னியம் மிகுந்த பாசப்பிணைப்பு கொண்டிருந்தனர்.
மன்னருக்கு சமஸ்கிருதம்,மராத்தி,தெலுங்கு, தமிழ், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் கல்வியும், சண்டைபயிற்சி மற்றும் குதிரையேற்றம்,போர்யானைப்பழக்குதல் போன்ற பயிற்சிகள் அளிக்க பிளாக்பர்ன் ஏற்பாடு செய்தார்.



புதுக்கோட்டை தொண்டைமான் சமஸ்தானத்தில் பிளாக்பர்ன் மேற்கொண்ட சீர்திருத்தங்கள்:-

இதற்கு முன்பு தொண்டைமான் சமஸ்தானத்தின் மன்னராக திகழ்ந்த ராஜா விஜய ரகுநாத தொண்டைமான் (1789-1807)

இம்மன்னரின் ஆட்சிக்காலம் முழுவதும் போர்மேகங்களால் சூழப்பட்டிருந்தது எனலாம். விஜயரகுநாத தொண்டைமான் இறக்கும்போது 60,400/-பகோடா கடன்சுமையை அரசுக்கு விட்டுச்சென்றார்(ஒரு பகோடா என்பது 8கிராம் அளவுள்ள தங்கக்காசு) 
(Statistical Acc... Puthukottai).

முன்னாள் மன்னர் இறந்தபிறகு அரண்மனை நிர்வாகம் மிகவும் சீர்குலைந்திருந்தது. அரசின் நிர்வாக நடவடிக்கைகளை கவனிக்க இரண்டு மேனேஜர்கள் நியக்கப்பட்டனர். மேனஜர்களாக காலஞ்சென்ற மன்னரின் உறவினர்களான மாப்பிள்ளை பல்லவராயர் மற்றும் திருமலை தொண்டைமான் ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.சிர்க்கிள் என்ற பதவியும் ஏற்படுத்தப்பட்டது (தற்போதைய முதல்வர் பதவிக்கு சமம் எனலாம்).

மேஜர் பிளாக்பர்ன் தஞ்சாவூர்க்கும், புதுக்கோட்டைக்கும் ரெசிடண்டாக இருந்ததால் அவர் தஞ்சாவூரிலேயே தங்க வேண்டி இருந்தது. கிபி-1808ல் குடிவாரம் (விவசாயியின் பங்கு) நஞ்சைக்கு 25 முதல் 40 சதவீதமாகவும்,புஞ்சைக்கு 50 % இருந்தது.அமானி நிலமென்பது அரசிற்கு சொந்தமானது விவசாயிகள் குத்தகைதாரர்களாக மட்டுமே இருக்க முடியும். மொத்தவிளைச்சலில் 10-ல் ஒரு பங்கு கிராம கோவில்கள், காவலர்கள், தச்சர், கொல்லர், வண்ணார், நாவிதர், குயவர்,
தண்டல்காரர் ஆகியோருக்கு வழங்குவதற்கு ஒதுக்கப்பட்டிருந்தது. 

அமானி முறையில் இருந்த குறைபாடுகளை களையும் வண்ணம் விளைபொருளில் ஒரே சீராக அரசின் பங்கை நிர்ணயம் செய்து ப்ளாக்பர்ன் ஆணைபிறப்பித்தார் (Statistical Acc.. of Pkt).

புதுக்கோட்டை சமஸ்தானத்திற்கென தலைமை நீதிமன்றம் இருந்தது.அதன் தீர்ப்புகள் தமிழில் எழுதப்பட்டன.நிதிவழுவும் நீதிபதிகள் கடுமையாக தண்டிக்கப்பட்டனர் என குறித்துள்ளார் பிளாக்பர்ன் (நீதிவழுவும் நீதிபதிகளை மாட்டின்மீது ஏற்றி,தாரை, தம்பட்டங்களுடன், ஊர்வலமாக புதுக்கோட்டை நகருக்குள் அழைத்துச்சென்று மீண்டும் புதுக்கோட்டைக்குள் வர தடைவிதிக்கப்பட்டது).

கிபி-1812 ல் புதுக்கோட்டைக்குள் பெரும் தீ விபத்து ஏற்பட்டு நகரில் பெருத்த சேதம் ஏற்பட்டது. இதனை வாய்ப்பாக கருதிய பிளாக்பர்ன் புதிய முறையில் நகரை சீரமைக்க எண்ணினார். இதன்படி அகலமான நேரான சாலைகளும்,கூரை வீடுகளுக்கு பதிலாக ஓட்டு வீடுகளும் ஏற்படுத்த திட்டமிடப்பட்டது.வசதி படைத்தவர்கள் தாமாகவே தங்கள் வீடுகளை புதுப்பித்து கொள்ளவும்படி கேட்டுக்கொள்ளப்பட்டனர். 

ஏழைகளுக்கு தேவையான பண உதவிகளும் செய்யப்பட்டன. அரண்மனைக்கும் புதிய கட்டடங்கள் கட்ட திட்டமிடப்பட்டது. இத்திட்டத்தின் பயனாக புதிய "புதுக்கோட்டை" நகரம் உருவாகியது. தற்போதைய பழைய அரண்மனையை மையமாக வைத்து கிழக்கு, மேற்காக எட்டு வீதிகளும், வடக்கு தெற்காக எட்டு வீதிகளும் நேர்,நேராக அமைக்கப்பட்டன.

பிரான்மலையை அடுத்து உள்ள சில இடங்களில் உரிமை குறித்து சிவகங்கைக்கும்,புதுக்கோட்டைக்கும் சர்ச்சை இருந்து வந்தது.பிளாக்பர்ன் இதில் தலையிட்டு அப்பகுதியை இரண்டாக பிரித்து இருதரப்பாருக்கும் அளித்தார்.

முந்தைய மன்னர் ராஜா விஜயரகுநாத தொண்டைமான் காலத்தில் நடைபெற்ற நாலாவது மைசூர் போரில் புதுக்கோட்டை படைவீரர்கள் காட்டிய வீரத்தை பாராட்டி,அப்போர் வீரர்களுக்கு பரிசாக 4452 ஸ்டார் பகோடாவை ஆங்கிலேய அரசு அளித்து இருந்தது.இதை மன்னருக்கு அனுப்பபட்ட நசார் என அப்போது நிர்வாகத்தில் இருந்த மாப்பிள்ளை பல்லவராயரும், திருமலை தொண்டைமானும் முடக்கி வைத்துவிட்டனர். பிளாக்பர்ன் முயற்சியால் இத்தொகை போரில் பங்குபெற்ற வீரர்களுக்கு பிரித்து கொடுக்கப்பட்டது.

புதுக்கோட்டையின் சில இடங்களில் (உப்பிளியக்குடி) இருந்து கிடைக்கும் நிலத்தடி நீரில் இருந்து உப்பு காய்ச்சி எடுக்கப்பட்டு வந்தது. இந்த உப்பிற்கு நல்ல விலையும் கிடைத்தது.இந்த உப்பு அருகில் உள்ள மாவட்டங்களுக்கும் கடத்தப்படும் சூழ்நிலை நிலவியது. இந்த உப்புக்காய்ச்சும் தொழிலை தடை செய்யுமாறு கிபி  1813ல் அப்போதைய தஞ்சை ஜில்லா கலெக்டர் ஆணை பிறப்பித்தார். இது புதுக்கோட்டையின் பொருளாதாரத்தை வெகுவாக பாதிக்கும் என்றும் ஆங்கிலேய அரசின் மீது மக்கள் கொண்டுள்ள அபிமானத்திற்கும் தீங்கு ஏற்படும் என்றும் ஆங்கிலேய அரசுடன் வாதாடி இந்த ஆணையை ரத்து செய்ய பிளாக்பர்ன் ஆவணம் செய்தார்.

பிளாக்பர்ன் ஆட்சியராக இருந்தபொழுதுதான் சமஸ்தான நிலங்கள் அனைத்தும் தரம் பிரிக்கப்பட்டன. சமஸ்தான பகுதியில் உள்ள மலைகள், மரம்,செடி, கொடிகள், நிலங்கள் அவற்றில் விளையும் பொருட்கள், தன்மை, குளங்கள், கோவில்கள், ஏற்றுமதி, இறக்குமதி, செய்தொழில்கள், வியாபாரம் போன்ற பல விவரங்களும் குறித்து வைக்கப்பட்டுள்ளன (இந்த விவரங்கள் அடங்கிய ஓலைச்சுவடியே இன்றும்புதுக்கோட்டை, திருக்கோகர்ணம் அருங்காட்சியகத்தில் காட்சிபடுத்தப்பட்டுள்ளது).

மக்கள் அறியாமையில் இருந்து விடுபட பல இடங்களில் இலவச பள்ளிகள் அமைக்க பிளாக் பர்ன் முயற்சி செய்தார் மாட்சீமை தாங்கிய மன்னரின் ஒத்துழைப்போடு. இவ்வாறாக கல்வி அறிவூட்டும் இயக்கம் சமஸ்தானத்தில் துவங்கப்பட்டது.

வானம் பார்த்து விவசாயம் செய்து வந்த புதுக்கோட்டையில் தொழிற்சாலைகள் ஏற்படுத்த பிளாக்பர்ன் விரும்பினார்.
அதன்படி அப்போதிருந்த சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து கறம்பக்குடியில் தனியார் துறையில் நீல சாய (இண்டிகோ) தொழிற்சாலையை ஏற்படுத்த திட்டமிட்டார். பிளாக்பர்னின் சகோதரர் ஜான் பிளாக்பர்னும்,புதுக்கோட்டை மன்னரும் கூட்டாக சேர்ந்து இந்த சாய தொழிற்சாலையை ஆரம்பித்தனர்.

இது 1814ம் ஆண்டில் வெற்றிகரமாக துவங்கப்பட்டது.அவுரி எனப்படும் செடியில் இருந்து எடுக்கப்பட்ட இந்த நீல நிற சாயத்திற்கு இங்கிலாந்தில் நல்ல வரவேற்பும்,விலையும் கிடைத்தது.சில ஆண்டுகள் கழித்து புதுக்கோட்டைக்கு அருகில் உள்ள காரைத்தோப்பிலும் இதுபோன்றதொரு தொழிற்சாலை அமைக்கப்பட்டது.1841-ம் ஆண்டு வரை இத்தொழிற்சாலைகள் இயங்கி வந்துள்ளன. இத்தொழிற்சாலைகள் இயங்கிவந்ததற்கான அடையாளங்களை இன்றும் கறம்பக்குடியில் (அம்புநாடு)காணலாம்.

மண்ணின்மைந்தர்கள் தொண்டைமான்கள்:-

கிபி 1822-ல் தஞ்சையை ஆண்ட மராத்திய மன்னர் சரபோஜி புதுக்கோட்டை தொண்டைமான் ஒரு ஜமீன்தார் நிலையிலேயே இருப்பதாகவும் ஆகவே அவர் சிர்க்கிள் போன்ற பதவிகளை வைத்துக்கொள்ள தகுதி இல்லை என்றும் ஆங்கிலேய அரசிற்கு தெரிவித்திருந்தார். இந்த தவறான அனுகுமுறையை தவிர்க்க எண்ணிய பிளாக்பர்ன் தஞ்சாவூர் மன்னருக்கு 31-12-1822ல் எழுதிய கடிதத்தில் "புதுக்கோட்டை மன்னர் ஆங்கிலேய அரசின் ஆதரவுடன் ஆட்சி நடத்தும் ஒரு சுதேச மன்னர் என்றும், அவரது உள்நாட்டு நீதி,நிதி,இதர நிர்வாக விஷயங்களில் அவருக்கு பூரண உரிமை உண்டு எனவும் அவரை ஒரு ஜமீன்தார் என்று சொல்லாகாது எனவும் தஞ்சாவூர் மன்னர் அவருக்கு உரிய மரியாதைகளை அளிக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்". 

கிபி 1823ல் பிளாக்பர்ன் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு இங்கிலாந்துக்கு பயணமானார் தொண்டைமானின் நலனில் மிகுந்த அக்கறை கொண்ட அவர் இங்கிலாந்து செல்லும் முன்பு புதுக்கோட்டை சமஸ்தான நிர்வாகத்தில் திறமைவாய்ந்த அலுவலர்களையும், ஆலோசகர்களையும் நியமித்துவிட்டுச்சென்றார். அவரது சகோதரரும் அவருடன் செல்ல வேண்டி இருந்ததால் சாய தொழிற்சாலைகளின் முழு பொறுப்பும் மன்னரிடமே ஒப்படைக்கப்பட்டன.
இப்படி புதுக்கோட்டை மன்னர்களின் உரிமைகளையும், அந்தஸ்தையும், உயர்த்த பிளாக்பர்ன் பெரும் முயற்சி மேற்கொண்டார் என்பதை அறிகிறோம்.

தான் பிறந்தது இங்கிலாந்து என்றாலும் தொண்டைமான் சீமை மன்னர்களின் மீதும், பாமர மக்கள் மீதும் அளவற்ற அன்புபூண்டு மொழிகடந்து, இனம் கடந்து தொண்டைமான் தேசத்திற்கு ஒரு இடர்பாடும் நேர்ந்திடாது உள்நாட்டு நிதி, அண்டைநாட்டு உறவுகள், எல்லைப்பிரச்சினைகள், தொண்டைமான்களின் சுயாட்சி உரிமை, நிர்வாகம், நீதி,உட்கட்டமைப்பு, விவசாயிகள் நலன் என எல்லாவற்றிலும் தொண்டைமான் தேசத்தை தன் தாய்நாட்டை விட மேலாக நேசித்து தொண்டைமான் தேசத்திலிருந்து பிரியாவிடை கொடுத்துள்ளார். மக்களும் கண்ணீர் மல்க வழியனுப்பிவைத்துள்ளனர்.

மாட்சீமை தாங்கிய மன்னர் விஜயரகுநாதராய தொண்டைமானும் மேஜர் பிளாக்பர்னை தன் தந்தைக்கு நிகராக மதித்துள்ளார். இம் மண்ணின் மீதும் மக்களின் மீதும் அளவற்ற அன்பை கடல்கடந்து பதித்துச்சென்றுள்ளார்.

"யாதும் ஊரே யாவரும் கேளீர்" கணியன் பூங்குன்றனாரின் வைர வரிகள்தான் ஞாபகத்திற்கு வருகின்றன.