வியாழன், 6 ஆகஸ்ட், 2020

கேப்டன் பவித்ரா சேதிராயர்


(ஆசிய கபடி விளையாட்டில் பங்கு பெற்ற தஞ்சாவூர் வீராங்கனைக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்)


கபடி, கிராமத்து விளையாட்டுதான். ஆனால், ஒரு கிராமம் முழுக்க கபடி வீரர்களாக, அதுவும் மாநில அளவில், தேசிய அளவில் தடம் பதிக்கும் வீரர்களாக இருந்தால் ஆச்சர்யம் தானே. தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு அருகே இருக்கும் கள்ளர் நாட்டின் தென்னமநாடு கிராமத்தில் நுழைந்தால் எக்கச்சக்க கபடி வீரர்கள். ஆண்களைவிட கபடி வீராங்கனைகள்தான் இந்த ஊரின் சிறப்பு. தமிழ்நாடு பெண்கள் கபடி அணியின் கேப்டன் பவித்ரா சேதிராயர், இந்த ஊர்தான்.

இவர் இந்திய பெண்கள் அணியில் இடம்பிடித்ததுடன், ஈரானில் நடைபெற்ற சர்வதேச போட்டியிலும் சிறப்பாக விளையாடினார். அவர் தென்னமநாடு பற்றியும், சர்வதேச கபடி வாழ்க்கையை பற்றியும் பேசினார்.

‘‘ஊர் வழக்கமும், பள்ளி ஒழுக்கமும் என்னை கபடி பயிற்சிக்கு அழைத்து சென்றது. ஊர் திருவிழா, பள்ளி விழா, விடுமுறை கொண்டாட்டங்கள்... என எல்லா விசே‌ஷ நாட்களிலும் கபடி போட்டிகள் நடத்தப்படும் என்பதால் சிறுவயதிலிருந்தே விளையாட கற்றுக்கொண்டேன். சீனியர் அக்காக் களுக்கு காயம் ஏற்பட்டால் என்னை களம் இறக்கிவிடுவார்கள். இல்லையேல் ஆட்டத்தை வேடிக்கை பார்த்த திருப்தியோடு வீடு திரும்ப வேண்டியதுதான். இப்படி இருந்த கபடி வாழ்க்கை திடீரென வேகம் எடுத்தது. பள்ளி அணியில் சிறப்பாக விளையாடி... மாவட்ட அணிக்கு தேர்வாகினேன். பிறகு தமிழ்நாடு அணியில் விளையாட கிடைத்த வாய்ப்பை சரிவர பயன்படுத்தி கொண்டதால்... இந்திய அணியில் இடம்பிடித்தேன். என்னுடன் பிரகதீஷ்வரி உட்பட பல தோழிகளும் தேசிய கபடி முகாமில் கலந்துகொண்டனர். அதில் எனக்கு மட்டும் இந்திய அணிக்காக விளையாடும் வாய்ப்பு கிடைத்தது. ஈரானில் நடைபெற்ற சர்வதேச போட்டியில் இந்திய அணிக்காக ‘கபடி கானம் பாடினேன். வீரமாக விளையாடியதற்கு புள்ளிகளும் கிடைத்தன. தென்னமநாடு கிராமத்தில் கற்றுக்கொண்ட உள்ளூர் வித்தைகள், சர்வதேச அரங்கில் கைக்கொடுத்தன’’ என்பவருக்கு... தற்போது ரெயில்வே துறையில் வேலை கிடைத்திருக்கிறது.



‘‘2012-ம் ஆண்டு நடந்த தேசிய அளவிலான பெண்கள் கபடி போட்டியில், டெல்லி அணியோடு மோதி தமிழ்நாடு அணி தங்கம் வென்றது. அதில் சிறப்பா விளையாடி தங்கப் பதக்கத்தோடு ஊர் திரும்பிய காவ்யாவை, ஒட்டுமொத்த ஊரே தலையில் தூக்கிவெச்சுக் கொண்டாடியது. உஜ்ஜயினியில் நடந்த போட்டியில், தமிழ்நாடு அணி வெள்ளிக் கோப்பை ஜெயிச்சது. அதுல எங்கள் ஊர்ல இருந்து நானும் பிரகதீஸ்வரியும் விளையாடினோம். கேரளாவில் நடந்த தேசியப் போட்டியில் தமிழ்நாடு அணிக்கு மூன்றாவது இடம். அதுல விளையாடிய நான், கௌசல்யா, ரதிபாரதி, பிரகதீஸ்வரி நாலு பேரும் தென்னமநாடு பெண்கள். சமீபத்தில் சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடந்த முதலமைச்சர் கோப்பை கபடி போட்டியில், தமிழ்நாடு அணி மூன்றாம் பரிசு வென்றது. அதுல கலந்துக்கிட்டவங்கள்ல பத்து பேர் எங்க கிராமத்தைச் சேர்ந்தவங்க. ஒவ்வொருத்தருக்கும் 50 ஆயிரம் ரூபாய் பரிசு கிடைச்சது. அடுத்து, ஈரானில் நடக்கவிருக்கிற ஆசிய அளவிலான போட்டியில் இந்திய அணி சார்பில் விளையாட நானும் பிரகதீஸ்வரியும் தேர்வாகியிருக்கோம்’’ என்று சொல்லும் பவித்ராவின் கண்களில் பெருமிதம் மின்னுகிறது.

கல்லூரிகளில், பல்கலைக்கழகங்களில், காவல் மற்றும் ரயில்வே துறைகளில் உள்ள கபடி அணிகளிலும், இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணைய கபடி அணியிலும் தென்னமநாடு கிராமப் பெண்களின் கொடி பறக்கிறது.

கிராமங்களில் வயதுவந்த பெண்களை விளையாட அனுமதிப்பதே அதிசயம். அதுவும் கபடி போன்ற, உடல் காயங்களும், எலும்பு முறிவும் ஏற்பட வாய்ப்பு உள்ள ஒரு விளையாட்டுக்கு அனுப்புவது அதைவிட ஆச்சர்யம். திருமண வயதில் ஏதேனும் உடல் பிரச்னைகள் ஏற்பட்டால் அது வாழ்க்கையைப் பாதித்துவிடுமே எனத் தயங்காமல், பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை கபடி விளையாட அனுப்பிவைக்கிறார்கள்.

‘‘அப்போ நான் ப்ளஸ் டூ ஸ்டூடன்ட். புதுக்கோட்டையில் நடந்த கபடி போட்டியில, என் கால் மூட்டு ஜவ்வு கிழிஞ்சு, ஆறு மாசம் படுத்த படுக்கையாவும், ஒன்றரை வருஷம் ஓய்விலும் இருந்தேன். அதுக்கெல்லாம் என் அம்மா - அப்பா கலங்கவே இல்லை. எனக்கு கால் சரியானதும் மறுபடியும் கபடி விளையாட அனுப்பிவெச்சாங்க’’ என்கிறார் பொறியியல் மாணவி அகல்யா. தற்போது இவர் கபடி போட்டியில் தேசிய வீராங்கனை.
  
சிறப்பாக விளையாடினால் அரசு வேலை நிச்சயம் என்ற குறிக்கோளும் தென்னமநாடு கிராம பெண்களை கபடி மைதானத்திற்கு அழைத்து வருகிறது. ஏனெனில் இந்த கிராமத்தில் இருக்கும் பெரும்பாலானோர் கபடி விளையாட்டின் மூலம் அரசு அதிகாரிகளாக மாறி உள்ளனர். ராணுவம், காவல்துறை, ரெயில்வே துறை, தபால்துறை... என அரசு துறைகளில் இருக்கும் விளையாட்டு வீரர்களுக்கான ஒதுக்கீட்டை புரிந்துகொண்டு அதற்கேற்ப தங்களை தயார்படுத்திக்கொள்கிறார்கள்.


‘‘நன்றாக படிக்கும் மாணவர்களை விட, விளையாட்டு வீரர்வீராங்கனைகளுக்கே சலுகைகள் அதிகம். ‘ஸ்போர்ட்ஸ் கோட்டாவில் படிப்பதே தனி மரியாதைதான். கல்லூரி படிப்பு முதல் விடுதி கட்டணம் வரை அனைத்துமே இலவசமாக கிடைத்துவிடும். படித்து முடித்த பிறகும் ‘ஸ்போர்ட்ஸ் கோட்டாவை பயன்படுத்தி அரசு வேலைகளில் சேர்ந்துவிடலாம். அரசு அதிகாரியாக பணியாற்ற படிப்பும் அவசியம். விளையாட்டும் அவசியம்.