வெள்ளி, 2 ஜூன், 2023

புதுக்கோட்டை மன்னர்கள் வலையர், பறையர், பள்ளர்களுக்கு செய்த சிறப்பு

பறையர்களுக்கு செய்த சிறப்புகள்

தஞ்சை நாயக்க மன்னரால் ஜகன்னாத ஐயங்கார் என்பவருக்கு பெருங்களூர் அருகில் உள்ள வாராப்பூர் பாளையம் அளிக்கப்பட்டது.

விஜய ரகுநாத ராய தொண்டைமான் பதவியேற்றார். புதுக்கோட்டை சமஸ்தானத்தின் எல்லையை விரிவு படுத்த எண்ணிய மன்னர், வாராப்பூர் பாளையத்தை கைப்பற்ற முடிவு செய்தார். கிபி 1735 ஆம் ஆண்டில் வாராப்பூர் பாளையத்தை ராகவ ஐயங்கார் என்பவரின் வசம் இருந்தது. ஐயங்காரை வீழ்த்த ஆதி தமிழ் குடி பறையரை தேர்வு செய்தார் தொண்டைமான் மன்னர். காக்கை திருமன் எனும் பறையனாரை அனுப்பி, வாராப்பூர் பாளையத்தின் தலைவரான ராகவ ஐயங்காரை வெட்டி வீழ்த்த பணித்தார். காக்கை திருமன் மன்னரின் ஆணைப்படியே , வாராப்பூர் பாளைய தலைவரான ராகவ ஐயங்காரை வெட்டி வீழ்த்தினார். வாராப்பூர் பாளையம் புதுக்கோட்டை சமஸ்தானத்துடன் இணைக்கப்பட்டது.

காக்கை திருமனின் வீரத்தை கண்டு வியந்த மன்னர், அவருக்கு என்ன வெகுமதி வேண்டும் எனக் கேட்டார். இதற்கு பதிலளித்த காக்கை திருமன், தொண்டைமான் நாட்டில் பிராமணர்களுக்கு இனாமாக நிலம் அளிக்கும்போது பயன்படும் அளவுகோலுக்கு தனது பாத அளவை பயன்படுத்த வேண்டும் என வேண்டினார்.

தொண்டைமான் நாட்டில் அக்காலத்தில் ஒரு குழி அளவுள்ள நிலம் என்பது 14 சதுர அடிகளை கொண்டதாகும். பிராமணர்களுக்கு நிலம் இனாமாக அளிக்கும்போது, சதுர அடிக்கான அளவுகோலுக்கு காக்கை திருமனின் பாத அளவு கொடுக்க முடிவுசெய்யப்பட்டது. இந்நிலையில் அளவு எடுப்பதற்கு முன், காக்கை திருமன் தனது பாதத்தை வெட்டி காலின் முன்னே வைத்து அதிகமான அளவுகோலை கொடுத்தார். இந்த நில அளவுகோல் வழக்கத்தில் உள்ளதை விட அதிக நீளம் கொண்டதாக இருந்தது. எனினும் காக்கை திருமனின் விருப்பத்தை நிறைவேற்ற எண்ணிய மன்னர் , காக்கை திருமன் கொடுத்த பாத அளவிலேயே பிராமணர்களுக்கான இனாம் நிலங்களை அளிக்க ஆணையிட்டார். காக்கை திருமன் தனது பாதத்தை வெட்டி வைத்து அளவுகோலை அதிகரித்ததால் பிராமணர்கள் அதிக நிலங்களை பெறலாயினர். (Manual of pudukkottai state vol 1)

பிராமணர்களுக்கு அளிக்கப்படும் நிலத்தை, காக்கை திருமன் பறையனாரின் பாத அளவுகோலால் அளக்குமாறு செய்து காக்கை திருமனாருக்கு நிலைத்த பெருமையை உருவாக்கினார் தொண்டைமான். மேலும் காக்கை திருமனாரின் பாத அளவை, சித்தன்னவாசல் மலைப்பகுதியில் கல்வெட்டாக செதுக்கி வைத்தார். பிராமணர்களுக்கு அளிக்க பயன்படும் அளவுகோலை அதிகரிக்க தனது பாதத்தை வெட்டிக்கொண்ட காக்கை திருமனின் பெருந்தன்மையும், தியாகமும் வியக்க வைக்கிறது.

புதுக்கோட்டை மன்னர் காலத்தில் மக்களிடம் வரிவசூல் செய்து கிராமங்களை நிர்வகிக்க மிராசுதார்களை நியமிக்கப்பட்டனர். மிராசுதார்களின் சார்பாக வரிப்பணத்தை வசூலித்து , பாதுகாத்து வைத்திருக்கும் பணியை நோட்டக்காரர்கள் செய்தனர். இவர்கள் பெரும்பாலும் பறையர்களாக இருந்துள்ளனர். இவர்களுக்கு சமஸ்தானத்தில் இருந்து சம்பளம் அளிக்கப்பட்டுள்ளது. இதேபோல வெட்டியார்கள் நில அளவை சமந்தமான பணிகளில் சமஸ்தானத்தினால் பணியமர்த்தப்பட்டிருந்தனர். பறையர்கள் பற்றி குறிப்பிட்டுள்ள புதுக்கோட்டை சமஸ்தான மேனுவல், இவர்களை மிகவும் நம்பிக்கைக்கு உரியவர்கள் என கூறுகிறது.

ஆதி திராவிடர்கள் முன்னேற்றத்தில் புதுக்கோட்டை தொண்டைமான்கள்

1894 ஆம் ஆண்டு மார்த்தாண்ட பைரவ பல்லவராய தொண்டைமான் காலத்தில், ஆதி திராவிடர்களுக்கான சிறப்பு பள்ளிகள் தொடங்கப்பட்டது.

மேலும் ஆதி திராவிடர்களுக்கான நடுநிலைப்பள்ளி உருவாக்கப்பட்டு இலவச கல்வியுடன், மாத உதவித்தொகையும் கொடுக்கப்பட்டு வந்தது. 1921ல் புதுக்கோட்டை சமஸ்தானத்தில் ஆதி திராவிடர்களுக்கென 19 பள்ளிகள் இருந்தது.

1910ல் ஆதி திராவிட நெசவாளர்களின் பிள்ளைகளுக்காக நெசவுப் பள்ளிகள் தொடங்கப்பட்டது.











1914 ஆம் ஆண்டு மார்த்தாண்ட பைரவ பல்லவராய தொண்டைமான் காலத்தில், ஆதி திராவிடர்களுக்காக 12 படுக்கைகள் கொண்ட சிறப்பு மருத்துவமனை உருவாக்கப்பட்டது.

1927 முதல் புதுக்கோட்டை சட்டமன்ற சபையில் ஆதி திராவிடர்களுக்கும் இடம் ஒதுக்கப்பட்டு, ஆதி திராவிடர்களுக்கு அதிகாரம் அளிக்கப்பட்டது.

1935 ல் மன்னர் ராஜகோபால தொண்டைமான் காலத்தில், மன்னர் கல்லூரியின் தங்க விழாவை முன்னிட்டு ஆதிதிராவிடர்கள் தங்கிப் படிக்க இலவச விடுதி தொடங்கப்பட்டது. 1935 முதல் ஆதி திராவிட மாணவர்கள் மற்ற அனைத்து சாதியினரிடமும் ஒரே பள்ளியில் சமமாக கல்வி கற்க வழிவகை செய்யப்பட்டது. ஆதி திராவிடர் பள்ளிகளின் எண்ணிக்கை குறைக்கப்பட்டது.

1936 முதல், உதவித்தொகை பெறுவதில் ஆதி திராவிடர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டது.

31 ஜனவரி 1948 அன்று காந்தி சுட்டுக்கொல்லப்பட்டார். காந்தியின் பன்னிரென்டாம் நாள் காரியத்தன்று, புதுக்கோட்டை மன்னர் ராஜகோபால தொண்டைமான் அனைத்து சாதியினரும் கோயிலுக்குள் நுழைய அனுமதி தந்து ஆணையிட்டார்.

புதுக்கோட்டை சமஸ்தானத்தை ஆட்சி செய்த மன்னர்கள் பறையர்களின் சமூக பொருளாதார வளர்ச்சியில் அதிக கவனம் செலுத்தி வந்துள்ளனர். பறையர் குல வீரர் காக்கை திருமனின் தியாகத்தை நாடே அறியும் வகையில் செய்தனர். சமூக கட்டமைப்பில் பறையர்களுக்கு உயரிய பதவிகளை வழங்கி பெருமை படுத்தியுள்ளனர். புதுக்கோட்டை சட்டமன்ற சபையில் பறையர்களை உறுப்பினராக்கி அழகு சேர்த்துள்ளனர்.


புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியை மையமாக கொண்டு ஆட்சி செய்த கள்ளரின மன்னர்கள் அறந்தாங்கி தொண்டைமான்கள் என வரலாற்றில் அழைக்கப்படுகின்றனர். தொண்டைமண்டலத்தில் இருந்து புதுக்கோட்டை பகுதியில் குடியேறிய தொண்டைமான்கள் புதுக்கோட்டை,  அறந்தாங்கி ஆகிய பகுதிகளில் இருந்து ஆட்சி செய்து வந்துள்ளனர்.  கிபி 15 ஆம் நூற்றாண்டு முதல் கிபி 18 ஆம் நூற்றாண்டை வரை ஆட்சி செய்த அறந்தாங்கி தொண்டைமான்கள், 18 ஆம் நூற்றாண்டின் இறுதியில் பாலையவனம் பகுதியில் ஜமீன் எனும் நிலைக்கு தங்களது அதிகாரத்தை இழந்தனர். பாலையவன ஜமீன் தொண்டைமான்கள் மற்றும் அவர்களின் நெருங்கிய உறவினரான பண்டாரத்தார்கள் ஆகியோரால் ஆளப்பட்டது. அறந்தாங்கி தொண்டைமான்கள் கள்ளர் மரபினர் என்றும் பாலையவன ஜமீன்தார்கள் அறந்தாங்கி தொண்டைமான் வழியினர் என்றும் தமிழக அரசு வெளியீடுகளான அறந்தாங்கி தொண்டைமான்கள்(புலவர் இராசு) மற்றும் புதுக்கோட்டை மாவட்ட வரலாறு ஆகிய நூல்களில் கூறப்பட்டுள்ளது. 

கிபி 1696 ல் ஆண்டவராய வணங்காமுடி தொண்டைமானும்,  பெரிய தம்பி காலிங்கராசரும் சங்குப்பட்டினம் என ஊருக்கு சென்றிருந்தபோது, அவர்களைக் காண நல்லமார்ப்பிள்காவர்களும் , அம்பலக்காரன் எனும் ஒருவரும் வந்திருந்தனர். 

இவர்கள் இருவரும் தொண்டைமானாருக்கு முத்துமாலையை காணிக்கையாக செலுத்தினர். தொண்டைமானார் மகிழ்ந்து அவர்கள் இருவருக்கும் ஆணமச்சி ஆற்றுக்கு வடக்கும், வெள்ளாற்றுக்கு தெற்கும், நெடுந்தாவைக்குக் கிழக்கும் , சமுத்திர பாகத்துக்கு மேற்கும் ஆண்டு அனுபவித்து வருமாறு காணியாக கொடுத்தார்.

அதற்குப்பின் அவர்களை சந்திக்க வந்த வலைச்சிப் பெரியானும்,  பள்ளன் வெகுமானியும் தங்களுக்கும் ஏதாவது கொடுக்க வேண்டுமென்று பணிவுடன் கேட்டனர்.

அவர்களின் வேண்டுதலை ஏற்ற தொண்டைமான் மன்னர், வலைச்சிப் பெரியானுக்கு மஞ்சக்கொள்ளைக்கு கிழக்கும், வெள்ளாற்றுக்கு தெற்கு, நெடுந்தாவைக்கு மேற்கு, மறுசனிமேட்டுக்கு வடக்கு ஆகிய எல்லைகளுக்கு உட்பட்ட பகுதிகளை காணியாக அளித்தார்.

பள்ளன்வெகுமானிக்கு சங்குப்பட்டினம் முதல், சந்தயாப்பட்டணம் வரைக்கும் தரகு, முத்திரைப்பலகை,  களத்துக்கோல், காவல் இவைகளையெல்லாம் அனுபவித்துக்கொள்ளும் உரிமைகளை அளித்து அவர்களை மகிழ்வித்தார்.

இவ்வாறு பெரிய துரை அவர்கள் கூறியப்படி வீரப்பிள்ளை என்பவர் செப்பேட்டை எழுதியுள்ளார். வணங்காமுடி தொண்டைமானார் மற்றும் காலிங்கராச பண்டாரத்தார் ஆகிய இருவரில்  தொண்டைமானாரை பெரிய துரை என குறிப்பிட்டுள்ளனர். 

தமிழ் மன்னர்கள் வள்ளல் தன்மையில் மிகுந்த சிறப்புடன் விளங்கியுள்ளனர் என்பதற்கு இந்த செப்பேடு ஒரு சான்றாக அமைகிறது. 

தொகுப்பு : சியாம் சுந்தர் சம்பட்டியார்


(சங்குப்பட்டணம் காணியாட்சி செப்பேடு/  தொண்டைமான் செப்பேடுகள் - தமிழ் பல்கலைக்கழகம் வெளியீடு)