திங்கள், 12 ஜூன், 2023

தொண்டைமான் மன்னர் கட்டிய கடையக்குடி ஸ்ரீ பிரசன்ன. ரெகுநாதர் கோவில் வரலாறு



புதுக்கோட்டை சமஸ்தானத்தை 1825 முதல் 1839 வரை ஆட்சி செய்த மாட்சிமை தாங்கிய. மாமன்னர் பிரகதாம்பாள் தாஸ் H.H இராஜா இரகுநாத தொண்டைமான் அவர்களுக்கு திருமணம் ஆகி நீண்ட காலமாக புத்திரபாக்கியம் இல்லாமல் இருந்தபோது மன்னார்குடி இராஜகோபால ஸ்வாமி திருக்கோவிலின் ஆஸ்தான ஜோதிடர் உயர்திரு. இராமானுஜாச்சாரியார் சுவாமிகள் அவர்களை சந்தித்து விபரத்தை கூறினார்.

சுவாமி அவர்கள் மாமன்னர் அவர்களின் ஜாதகத்தையும் பட்டத்து ராணி அவர்களின் ஜாதகத்தையும் அலசி ஆராய்ந்தபோது புத்திரபாக்கியத்திற்கு வேண்டுமென்றால் சமஸ்தானத்தின் எல்லைக்குள் இரண்டு ஆறுகள் பிரிந்து பிறகு ஒன்றாக இணையும் இடமான தீவு போன்ற நிலப்பரப்பில் இராமர் கோவில் கட்டவேண்டும் என சொன்னார். சுவாமி அவர்களின் சொல்படி உடனே செயல்பட்ட மாட்சிமை தாங்கிய மாமன்னர் அவ்வாறான அமைப்பு கொண்ட இடத்தை தேடியபோது கடையக்குடி கிராமத்தின் நிலப்பரப்பு கிடைத்தது.



அவ்வாறே நகருக்கு வெளியே வெள்ளாறும் அதன் கிளை நதியான குண்டாறும் 4 மைல் தொலைவுக்கு முன்னதாக மேற்கே பிரிந்து ஒன்றாக இணையும் இடமான தீவு போன்ற நிலப்பரப்பு கொண்ட தற்போதைய கடையக்குடியில் கோவில் கட்டும் பணியை தொடங்கினார்.

சுவாமிகளுக்கு அரங்கன் அரிதுயில் கொண்டுள்ள திருவரங்கத்தின் அமைப்பு பற்றிய சிந்தனை தோன்றியிருக்க வேண்டும் திருவரங்கத்திற்கு மேற்கே 10 மைல் தொலைவில் காவேரியின் கிளை நதியான கொள்ளிடம் பிரிந்து திருவரங்கத்திற்கு கிழக்கே அதே 10 மைல் தொலைவில் ஒன்றாக இணையும் தீவு பகுதியில் திருவரங்கம் கோயில் எழுப்பப்பட்டுள்ளது.


இங்கு கட்டப்பட்ட கோவிலில் என்றும் கனிவான நிலையில் காணப்படும் பிரசன்ன. ரெகுநாதர் என்ற பெயர் தாங்கிய இராமரும் அவரது வலப்புறம் சீதாதேவியும் இடது புறம் நிழல் போல நீங்காது உடனிருந்து தொண்டு செய்திடும் இலக்குவனும், அடுத்து காளிங்க்கண்ணனும்,கிழக்கு முகமாக நின்ற கோலத்தில் அனுமன் எம்பிரான் ராமனை நோக்கி தொழுதகையோடு நின்றருளுகிறார்.

இவ்வாறு பிரதான மூர்த்தியாக ராமன் பிரசன்ன. ரகுநாதனாக அருள செய்ததற்கு முக்கிய காரணம் மாமன்னருக்கு அருளாசி வழங்கிய சுவாமி இராமானுஜச்சாரியரின் வழிபாட்டு தெய்வம் இராஜகோபாலன். இரண்டாவது புதுக்கோட்டை சமஸ்தானத்தை ஆட்சி செய்த மாட்சிமை தாங்கிய மாமன்னர்களின் வழிபாட்டு தெய்வமும் இராமன். புதுக்கோட்டை தனியரசை அலங்கரிக்கும் 2 வாள்களில் ஒன்று பெரிய ராமாயணம் மற்றொன்று சிறிய ராமாயணம் என்றும் சிறப்புடன் அழைக்கப்பட்டன.

மன்னார்குடி உயர்திரு. இராமானுஜாச்சாரியார் சுவாமி அருளியபடி கோவிலை எழுப்பி தெய்வத்திருமேனிகளை எழுந்தருள செய்து கோவிலருகே பிராமணர்களுக்கு வீடும் நிலங்களும் தானமாக வழங்கிய மாமன்னர் கி.பி 1828 ம் ஆண்டு ஆலயத்திற்கு குடமுழுக்கை நடத்தினார். 1829 ம் ஆண்டு மன்னரின் பட்டத்து ராணிக்கு ஆண் குழந்தை பிறந்தது. பிரசன்ன ரெகுநாதர் அருளால் மகப்பேறு கிட்டியதால் குழந்தைக்கு இராமச்சந்திர தொண்டைமான் என பெயரிடப்பட்டது.


புத்திரபாக்கியம் இல்லாமல் தவிப்பவருக்கு இத்தலம் மிகப்பெரிய வரபிரசாதம் ஆகும். ஒவ்வொரு மாதம் புனர்பூசம் நட்சத்திரம் அன்று சிறப்பு அபிஷேகம் ஆராதனைகள் நடைபெறும். சித்திரை பெளர்ணமி,, பங்குனி மாதம் ராமநவமி ப்ரம்மோற்சவம் மார்கழி மாதம் வைகுண்ட ஏகாதேசி போன்றவை சிறப்பாக நடைபெறும்.

புதுக்கோட்டையிலிருந்து 6 கி.மீ தூரத்தில் அரிமளம் சாலையில் இத்திருத்தலம் அமைந்துள்ளது.

ஆலய தொடர்புக்கு உயர்திரு ஆராவமுதன் பட்டாச்சாரி மற்றும் உயர்திரு. பார்த்தசாரதி பட்டாச்சாரி ( 91 81 48 60 45 92)