வியாழன், 16 ஜனவரி, 2020

தங்கமங்கை ப. அனுராதா உத்தமுண்டார்





அனுராதா உத்தமுண்டார் காமன்வெல்த் பளுதூக்கும் போட்டியில் தங்கபதக்கம் வென்றுக்கொடுத்து தமிழத்திற்கும், புதுக்கோட்டை மண்ணிற்கும் பெருமை சேர்த்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. தஞ்சையில் காவல் ஆய்வாளராக பணி செய்துவருகிறார்.

இரண்டாம் இராசேந்திரசோழன் உத்தங்கொண்டார், உத்தமுண்டார் (யுத்தமுண்டார்) என்னும் கள்ளர் பட்டங்களை கொண்டவர். இவன் வழிவந்த புதுக்கோட்டை மாவட்டம் நெம்மேலிப்பட்டி எனும் கிராமத்தைச் சேர்ந்த மறைந்த ஐயா. பவுன்ராஜ் உத்தமுண்டாரின் மகளும், தஞ்சாவூர் மாவட்டம் தோகூர் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராகப் பணியாற்றி வருபவருமான அனுராதா உத்தமுண்டார் ஆஸ்திரேலியாவை அடுத்த சமோவ் தீவில், காமன்வெல்த்-2019 போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியில், இந்தியாவின் சார்பில் மகளிர் பளுதூக்கும் பிரிவில், 87 கிலோ உடல் எடைப் பிரிவில் கலந்துகொண்டு, ஸ்னாட்ச் முறையில் 100 கிலோவும், கிளீன் அண்டு ஜெர்க் முறையில் 121 கிலோவும் என மொத்தம் 221 கிலோ எடையைத் தூக்கி, தங்கப்பதக்கம் வென்றுள்ளார். அவரின் வெற்றியைத் தொடர்ந்து, அவரது கிராமமே விழாக்கோலம் பூண்டுள்ளது. வெளியிலிருந்தும் அவரைப் பலர் பாராட்டி வருகிறார்கள். கடந்த 2009-ல் நடைபெற்ற காமன்வெல்த் போட்டியில் அனுராதா வெங்கலப்பதக்கம் வென்றார். அடுத்த முயற்சியில், இப்போது தங்கப்பதக்கம் வென்றுள்ளார்.


பதக்கம் வென்ற அனுராதா உத்தமுண்டார், சொந்த ஊருக்குச் செல்வதற்காக விமானம் மூலம் திருச்சி வந்தார். அவரை வரவேற்க புதுக்கோட்டை மற்றும் திருச்சி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஏராளமான விளையாட்டு வீரர்கள், பயிற்சியாளர்கள், அனுராதாவின் குடும்பத்தினர், உறவினர்கள், கிராம பொதுமக்கள் எனப் பலரும் விமான நிலையத்திற்கு வருகைதந்து, தங்க மங்கை அனுராதா உத்தமுண்டாருக்கு பிரமாண்டமான வரவேற்பு அளித்தனர். சால்வை மற்றும் ரோஜாப்பூ மாலை அணிவித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

அதையடுத்து பத்திரிகையாளர்களைச் சந்தித்த அனுராதா உத்தமுண்டார், “காமன்வெல்த் போட்டியில் தங்கப்பதக்கம் வென்றது பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது. இதற்காக, எனக்கு சிறப்பாகப் பயிற்சி அளித்த அனைத்து பயிற்சியாளர்களுக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். பளுதூக்கும் போட்டியில், சீனியர் பிரிவில் தமிழகத்திற்குக் கிடைத்த முதல் தங்கப்பதக்கம் நான் வாங்கியதுதான் என்பதில் பெருமைகொள்கிறேன். விளையாட்டுப் போட்டியில் பலர் பயிற்சிபெற்றிருந்தாலும் அவர்கள் பதக்கம் வெல்ல சரியான வழிகாட்டுதல் இல்லை.


தென்மாவட்டங்களில் பளுதூக்குதல் பயிற்சிபெற வசதி ஏற்படுத்திக்கொடுத்தால், பலரும் பதக்கம் பெறலாம். விவசாயக் குடும்பத்தில் பிறந்து, தந்தை சிறுவயதில் இறந்துவிட்ட நிலையில் தனது சகோதரர் ஊக்கத்தினாலேயே இந்நிலையை எட்டியுள்ளேன். பெண்கள் போட்டியில் பங்கேற்க எதிர்ப்பு வந்தபோதும், என்மீது எனது சகோதரர் வைத்த நம்பிக்கையும், அவர் அளித்த தொடர் உத்வேகமும் என் வெற்றிக்கு வழி வகுத்தது. புதுக்கோட்டையில் பயிற்சிபெற போதிய வசதி இல்லாததால், கடந்த 2014-ல் பட்டியாலா சென்று அங்கு பயிற்சி மற்றும் நுணுக்கங்களைக் கற்றுக்கொண்டேன்.

2015-ம் ஆண்டு, தேசிய அளவிலான போட்டியில் வெற்றி பெற்றதற்காக, மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிடம் 3 லட்ச ரூபாய் ஊக்கத்தொகை பெற்றேன். அதன்பிறகு, காவல்துறையில் உதவி ஆய்வாளர் பணி கிடைத்தது. அடுத்து ஃபெடரேஷன் மற்றும் காவல்துறை மூலம் பல்வேறு உதவிகள், ஊக்கமும் கிடைத்தன. பெண்கள் பளுதூக்கும் போட்டியில் பங்கேற்கக்கூடாது என்ற எண்ணம் பொதுவாகப் பலருக்கும் உள்ளது. அதைத் தவிர்த்து, நம்மால் முடியும் என்ற முனைப்பில் அனைவரும் முயன்று, என்னைப்போல பதக்கங்களைப் பெற வேண்டும் என்பதே எனது வேண்டுகோள். தொடர்ந்து 2024 காமன்வெல்த் போட்டியிலும் தங்கம் வென்று, அதன்மூலம் ஒலிம்பிக்போட்டியில் தகுதிபெற்று இந்தியாவிற்குப் பதக்கம்வெல்வதுதான் எனது லட்சியம்”என்றார்.



அனுராதாவை வரவேற்க வந்த அவரது உறவினர்கள், ”அனுராதாவின் அப்பா ஒரு விபத்தில் இறந்துவிட்டார். அவர் இறக்கும்போது அனுராதா சின்னப்பிள்ளை. அதன்பிறகு அவங்க அம்மா ராணியும் அண்ணன் மாரிமுத்து உத்தமுண்டாரும் ரொம்ப கஷ்டப்பட்டு அனுராதாவை வளர்த்தார்கள். அனுராதாவின் அப்பா இறந்தபிறகு அவரது அம்மா விவசாய வேலை செய்து, அதில் கிடைக்கும் பணத்தில்தான் பிள்ளைகளை வளர்த்தார். அடுத்து, அண்ணன் 12 வயதுக்கு மேல் படிக்காமல் வேலைக்குப் போனார். அம்மாவும் அண்ணனும் சம்பாதித்த பணத்தில் அனுராதாவின் பயிற்சிக்கு கட்டினார்கள். அனுராதா சின்னவயதில் இருந்து விளையாட்டில் சுட்டி. கபடி நல்லா விளையாடும். கபடி வீராங்கனையாக வருவார் என எதிர்பார்த்தோம். அதைவிட பளுதூக்குவதில் அவருக்கு ஆர்வம். எம்.எஸ்சி வரை படித்த அனுராதா, பஞ்சாப் -க்கு சென்று என்.ஐ.எஸ் எனும் படிப்பை படித்தார்.

அவரின் வெற்றிக்காக அவரது அண்ணன் மாரிமுத்து அனுராதா உத்தமுண்டாரும் அம்மா ராணியும் பல கஷ்டங்களைச் சுமந்தார்கள். பெண் பிள்ளைகள் அதிகம் விளையாடக் கூடாதென்று அறிவுரை சொல்வாங்க. அதனை எல்லாம் கண்டுகொள்ளாமல், அனுராதா விருப்பப்படி விளையாட அனுமதித்தார்கள். வறுமையிலும் அனுராதா சாதித்திருக்கா என்றால், அவளின் தன்னம்பிக்கைதான் காரணம். அதுதான் அனுராதா எங்க ஊருக்கு மட்டுமல்லாமல், இந்தியாவுக்கே பெருமை சேர்த்திருக்கு” என்றார்கள் கெத்தாக.


பள்ளிப்படிப்பின்போது கைப்பந்து விளையாட்டில் ஆர்வம் இருந்தது. விளையாட்டுத்துறையில், குழு விளையாட்டில் சாதிப்பதைவிட தனி நபராக முயற்சி செய்தால், அரசு வேலை கிடைக்கும் என அண்ணனின் நண்பர்கள் பரிந்துரைத்தனர். கல்லூரியில் படிக்கும்போது, தமிழக அளவில் பளுதூக்கும் போட்டியில் பங்குபெற வாய்ப்புகள் இருப்பதை அறிந்த நான், முயற்சி செய்துபார்க்கலாம் என சேர்ந்தேன், தமிழக அளவில் வென்று இந்திய அளவில் போட்டியிட தேர்வானேன்,'' என்கிறார் அனுராதா உத்தமுண்டார்.

2009ல் அனுராதா உத்தமுண்டார் முதன்முதலில் இந்திய அளவிலான பளுதூக்கும் போட்டியில் பங்கேற்று 35 கிலோபிரிவில் முதல் இடத்தை வென்றபோது தன்னம்பிக்கை அதிகரித்துள்ளது.

''எங்கள் ஊரில் பயிற்சி மையங்கள் கிடையாது. பளு தூக்கும் விளையாட்டில் பங்கேற்கும் ஆண்களை பார்ப்பது கூட அரிது. எனக்கு பயிற்சி தர ஆசிரியர்கள் இல்லை. முதல்முறை கிடைத்த வெற்றி, நான் மேலும் பளுதூக்கும் போட்டியில் சாதிக்கவேண்டும் என்ற எண்ணத்தை மனதில் பதித்துவிட்டது. பட்டமேற்படிப்பு படிக்கும்போது, தொடர்ந்து இரண்டு ஆண்டுகள் இந்திய அளவிலான கல்லூரி மாணவிகளுக்கான போட்டிகளில் தங்கப்பதக்கம் வென்றேன்,'' என அவரது பதக்க பட்டியலைப் பற்றி பேசினார் அனுராதா உத்தமுண்டார்.

''ஜிம் போக வேண்டும் என முடிவு செய்தபோது மிகவும் தயக்கமாக இருந்தது. எங்கள் ஊரில் பேருந்து வசதி இல்லை. நான்கு கிலோமீட்டர் நடந்து செல்லவேண்டும். ஜிம்மில் பெண்கள் கிடையாது. ஆண்கள் மட்டுமே இருப்பார்கள். தொடக்கத்தில் நான் பயிற்சி முடிக்கும்வரை காத்திருந்து அண்ணன் என்னை அழைத்துச் செல்வார். என் ஊரிலும், வெளியிடங்களிலும் எனக்கு ஏற்படும் தயக்கத்தை நான் துடைத்துவிட்டு முன்னேறவேண்டும் என முடிவுசெய்த பிறகு, என்னை நோக்கி வந்த எல்லா கிண்டல் பேச்சுகளை கையாள தெரிந்துகொண்டேன்,'' என்றார் அனுராதா உத்தமுண்டார்.

உறவினர்கள் பலரும் பளுதூக்கும் போட்டியில் அனுராதா பங்கேற்பதை விமர்சித்தபோதும், அவரது ஊக்கம் குறையவில்லை. ''பளுதூக்கும் போட்டி என்பது ஒரு விளையாட்டு என்ற புரிதல் பலருக்கும் இல்லை. அதிலும் பெண்ணாக இருப்பதால், இதில் பங்கேற்றால், என் உடல் மாறிவிடும் என பலர் குறைகூறுவார்கள். அவர்களின் வார்த்தைகளை சுமப்பதுதான் சில காலம் சிரமமாக இருந்தது. தொடர்ந்து நான் சாதனைகளை குவித்ததால், அவர்கள் மௌனமாகிவிட்டார்கள்,''என்கிறார் அனுராதா உத்தமுண்டார்.

பட்ட மேற்படிப்பை அடுத்து பஞ்சாப் மாநிலத்தில் தேசிய அளவிலான மையத்தில் பளுதூக்கும் போட்டிக்கான பயிற்றுநர் பாடதிட்டத்தை படித்தார். 2017ல் உதவிஆய்வாளர் வேலைக்கான தேர்வு வந்தபோது, அதில் தேர்வாகி வேலைக்கு சென்றால், அண்ணன் மற்றும் தாய் ராணிக்கும் உதவமுடியும் என்பதால், தனது விளையாட்டு ஆர்வத்திற்கு விடுப்பு கொடுத்திருந்தார்.
காவல்துறையில் பணிபுரிவோருக்கான விளையாட்டுப் போட்டியில் பளுதூக்கும் போட்டி இருந்ததால், எனக்கு மிகுந்த மகிழ்ச்சியாக இருந்தது. என் திறமையை கேள்விப்பட்ட மூத்த அதிகாரிகள் தமிழக அளவிலும், தேசிய அளவிலும் நான் பங்கேற்க வாய்ப்பு கொடுத்தார்கள். தேசிய அளவில் தங்க பதக்கம் வென்றதால், கமான்வெல்த் போட்டியில் பங்கேற்க அடுத்த வாய்ப்பு என்னை தேடிவந்தது. அடுத்த இலக்கு ஒலிம்பிக்ஸ்தான்,'' என சொல்லும்போதே அனுராதா உத்தமுண்டார் உறுதி அவரது வார்த்தைகளில் தெரிகிறது.

பெண்கள் விளையாட்டுதுறையில், அதிலும் பளுதூக்கும் போட்டியில் பங்கேற்க குறைவான எண்ணிக்கையில்தான் இருக்கிறார்கள் என்று கூறும் அனுராதா, ''பஞ்சாப்பில் படித்த சமயத்தில் அங்குள்ள பதின்பருவ பெண்கள் ஆர்வத்துடன் பளுதூக்கும் போட்டியில் பங்கேற்பதை பார்த்தபோது ஆச்சரியமாக இருந்ததது. எத்தனை வாய்ப்புகள் உள்ளன, நம் கிராமங்களில் உள்ள ஆயிரக்கணக்கான இளம்பெண்கள் மிகுந்த திறமையுடன் இருந்தாலும், இந்த விளையாட்டை பற்றிய விழிப்புணர்வு இல்லாததால், கிராமங்களில் முடங்கிவிடுகிறார்கள் என்பதை உணர்ந்தேன்,''என்கிறார்.

தற்போது அனுராதாவின் வெற்றிகளை கண்ட அவரது நெம்மேலிப்பட்டி கிராமத்தில் பெண்குழந்தைகளை விளையாட்டுத் துறையில் ஈடுபடுத்த பெற்றோர்கள் தயக்கம் காட்டுவதில்லை என்று கூறும் அவர், ''கல்வி என்பது வெறும் ஏட்டுக்கல்வி அல்ல, விளையாட்டும் சேர்த்துத்தான் என்ற புரிதல் குறைவாக உள்ளது. உடல்நலன் இருந்தால் மட்டுமே எதிர்காலத்தில் ஆரோக்கியத்துடன் இருக்கமுடியும் என்பதை வலியுறுத்தவேண்டும்,''என்கிறார்.


அனுராதா வெற்றிக்காகச் சுமந்தது பளுவை மட்டுமல்ல. வறுமையையும்தான். வறுமை, சாதிக்கத் தடையில்லை என்பதை உணர்த்தியிருக்கிறார் அனுராதா உத்தமுண்டார்.