ஞாயிறு, 19 மார்ச், 2023

பராந்தக சோழனின் தளபதி ஊர் சங்கரநாதர் குடிகாடு / சங்கரனார் குடிகாடு



சங்கரநாதர் குடிகாடு என்பது பாப்பானாடு கள்ளர் நாட்டை சேர்ந்த ஊர் ஆகும். இங்கு விஜயதேவர், சோழகர், பல்லவராயர், முதலியார், ஏத்தியப்பிரியர், மதுரார்  பட்டம் உடைய கள்ளர்கள் வாழ்கின்றனர். 

சங்கரநாதர் குடிகாடு என்ற அழகியதோர் சிற்றூர் உள்ளது. ஊரின் நடுவே ஆயிரத்து நூறு ஆண்டுகால பழமையான சிவாலயம் ஒன்று திருமதில், பரிவாராலயங்கள் சூழ இடிபாடுகளுடன் அண்மைக்காலம் வரை காட்சியளித்தது. 


ஊருக்கு நாயகமாக விளங்கும் பழம் பெருமையுடைய இச்சிவாலயத்தைப் புதுப்பிக்க ஊர் மக்கள் முனைப்புடன் இறங்கினர். சங்கரநாத ராம் மூலவர் சிவலிங்கத்தையும், சோழர்காலத்துத் திருமேனிகளான அம்மன், கணபதி, சண்டீசர், பைரவர், இடபம், வள்ளி தேவசேனா சகிதரான முருகப்பெருமான் விக்கிரகங்களையும் இடிபாடுற்ற கோயிலிலிருந்து அகற்றி பாலாலயம் அமைத்தனர்.

புதியதோர் ஆலயம் அமைக்க எல்லா ஏற்பாடுகளையும் செய்து புனிதத் திருப்பணியைச் செய்து வருகின்றனர். மூலவர் திருக்கோயிலின் அர்த்த மண்டபப் பகுதியில் கறையான் புற்றுகள் எழுந்து அங்கி ருந்த கருங்கல் தூண்களை மூடி நின்றன. திருப்பணிக்காக இடிபாடுகளையும் புற்றுகளையும் ஊர் மக்கள் அகற்றியபோது அங்கிருந்த நான்கு தூண் களிலும் பராந்தக சோழன் காலத்துக் கல்வெட்டுகள் இருப்பதைக் கண்டு, அந்தத் தூண்களை வெளியே பாதுகாப்பாக எடுத்து வைத்தனர். அக்கல் வெட்டுச் சாசனங்களை தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்து கல்வெட்டுத் துறையினர் படி எழுத்துப் பதிவும் செய்தனர்.

அத்தூண் கல்வெட்டுகளில் பராந்தக சோழனின் நான்காம் ஆட்சியாண்டு குறிக்கப் பெற்றுள்ளது. அவ்வாண்டு கி. பி. 901ம் ஆண்டைக் குறிப்பதாகும். மிகச் சரியாக ஆயிரத்து நூற்றுபதிமூன்று ஆண்டுகளுக்கு முன்பு கல்லில் பதிவு செய்யப்பெற்ற சாசனமாகும். அதில் சோழநாட்டுப் பொய்யிற்கூற்றத்து சிறுகுளத்தூர் என அவ்வூரின் பெயர் குறிக்கப் பெற்றுள்ளது. சிறுகுளத்தூர் என்னும் அவ்வூரின் பழம்பெயர் காலப்போக்கில் மருவி அவ்வூரில் விளங்கும் ஈசனாரின் பெயரான சங்கரநாதர் பெயரில் சங்கரநாதர் குடிகாடு என அழைக்கப்படலாயிற்று.

பாப்பாக்குடி நாட்டை விஜயதேவர் பட்டம் உடைய கள்ளர்களால் ஆட்சி செய்யப்பட்ட பகுதி ஆகும். அறிய இங்கே சொடுக்கவும் (click here)👉 பாப்பாநாட்டினை ஆட்சி செய்த "விஜயாத்தேவர்" கள்

"ராஜேந்திரசோழவளநாடு பொய்யூர் கூற்றத்துப் பாப்பாக்குடி நாடு, சிறுநெல்லிக்கோட்டை நென்மேலி வாடியிலிருக்கும் நல்லவன் விசையாத்தேவரவர்கள் குமாரர் ராமலிங்க விசையாத்தேவரவர்கள் பாப்பானாட்டவர்களுக்கு காணியாக இருக்கும் செயங்கொண்டநாத சுவாமி" என்ற கல்வெட்டு இதனை உணர்த்தும்.

அவ்வாலயத்துக் கல்வெட்டுச் சாசனம் பொய்யிற்கூற்றத்து சிறுகுளத்தூர் ஊர்ச்சபையினர் அவ்வூர் அரசு அலுவலரான மதுராந்த கப் பல்லவரையன் என்பவரிடமிருந்து நானூற்று இருபத்தெட்டு ஈழப்பொற்காசுகளைக் கடனாகப் பெற்றுக்கொண்டு அம்முதலீட்டின் வட்டித் தொகைக்காக சிறுகுளத்தூரின் வயல்களுக்குப் பாசனம் அளிக்கின்ற பெரிய குளத்தை (ஏரியை) ஆண்டுதோறும் தூர்வாரி பராமரிக்க ஒப்புக் கொண்டு எழுதித் தந்ததை விவரிக்கின்றது.

இச்சாசனத்தில் ஒழுகம்புத்தானம் (அரசு பதவி) மதுராந்தகப் பல்லவரையன், சிறுகுளத்தூருடையான் விளவன் ஸ்ரீகண்டன், சிறுகுளத்தூருடையான் மாறன் என்பவர்கள் கையொப்பம் இட்டுள்ளனர் என்பதும் குறிக்கப் பெற்றுள்ளன. வரலாற்றுச் சிறப் புடைய இக்கல்வெட்டு சாசனத்தால் இவ்வூரின் பழம்பெயர் சிறுகுளத்தூர் என்பதும், அவ்வூர் சோழ நாட்டு பொய்யிற்கூற்றத்தில் திகழ்ந்தது என்பதும் அறிகிறோம். மேலும் பராந்தக சோழன் ஒவ்வொரு ஊரின் ஏரி பாசனத்திற்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுத்து அதனை ஆண்டுதோறும் பராமரிக்க அரசு அலுவலகர்கள் மூலம் வழிவகை செய்தான் என்பதையும் அறிகிறோம்.

அதே நேரத்தில் ஊருக்கு ஒரு நிரந்தர முதலீட்டை வைப்புத் தொகையாக வைத்து அதன் வட்டிக்காக ஊர் மக்களே அப்பணியை மேற்கொள்ளவும் வகை செய்ததும் குறிப்பிடத்தக்கதாகும். வீராணம் ஏரியிலிருந்து சிறுகுளத்தூரின் பெருங்குளம் வரை சோழ நாடு முழுவதும் இருந்த பல்லாயிரக்கணக்கான ஏரிகளை அப்பேரரசன் பராமரித்தான் என்பது வரலாற்று உண்மையாகும்.

தஞ்சாவூரில் உள்ள பெருவுடையார் ஆலயம் என்னும் இராராஜேச்வரத்தை எழுப்பிய முதலாம் இராஜராஜசோழன் தஞ்சை கோயிலில் பல்லாயிரக்கணக்கான திருவிளக்குகள் எரிய ஆட்டுப் பண்ணைகளையும், பசுப் பண்ணைகளையும் எருமைப் பண்ணைகளையும் நிரந்தர முதலீடாக பல்வேறு ஊர்களில் அமைத்து பல்லாயிரக்கணக்கானவர்களின் வாழ்வுக்கு வழிசெய்ததோடு, அவ்விளக்குகள் எரிய தேவைப்படும் நெய்யை மட்டும் அப்பண்ணையை பராமரிப்பவர்கள் அளிக்க வகையும் செய்தான்.

தான் அளித்த ஆவினங்களின் எண்ணிக்கை, அந்தப் பண்ணையில் என்றென்றும் குறையக்கூடாது. நோய் காரணமாகவோ அல்லது வயதானதாலோ ஆடு அல்லது பசு இறந்துபோ குமானால், அதற்கு பதிலாக இன்னொரு ஆட்டையோ பசுவையோ பண்ணையைப் பராமரிப்பவர்கள் ஈடு செய்ய வேண்டும். இந்த எண்ணிக்கையை அவ்வப்போது அரசு அதிகாரிகள் வந்து ஆய்வு செய்து அறிக்கையை அரசனுக்கு சமர்ப்பிப்பார்கள். அவ்வாறு அமைக்கப்பட்ட பண்ணைகள் சந்திரன் சூரியன் உள்ளளவும் அழியாமல் செயல்பட வேண்டும் என்பதே அவன் நோக்கம்.




அதற்காக அளிக்கப்பட்ட ஆடுகளையும், பசுக்களையும் சாவா மூவா பேராடுகள் என்றும், சாவா மூவா பெரும் பசுக்கள் என்றும் குறிப்பிட்டுள்ளான். தஞ்சைக் கோயிலில் அவன் வைத்த ஒரு விளக்கிற்காக பலன் தரும் 48 பசுக்களை சிறுகுளத்தூரில் இருந்த புளியன் சூற்றி என்பவனிடம் ஒப்படைத்தான் என்று தஞ்சைக் கல்வெட்டு குறிப்பிடுகின்றது. எனவே தஞ்சைப் பெரிய கோயிலில் ஒரு திருவிளக்கு எரிய வேண்டும் என்பதற்காக சிறுகுளத்தூரில் ஒரு பசுப் பண்ணை இயங்கியது என்பதறிகிறோம்.

சோழ நாட்டை பல வளநாடுகளாகவும், நாடுகளாகவும், கூற்றங்களாகவும் பிரித்த இராஜராஜ சோழன் அவை பற்றிய விவரங்களைத் தஞ்சைக் கோயிலில் பதிவு செய்துள்ளான். அதில் சிறுகுளத்தூர் என்னும் இவ்வூர் சோழ மண்டலத்து இராஜராஜ வளநாட்டில் பொய்யில் கூற்றத்தில் திகழ்ந்ததாகக் குறிப்பிடப்பெற்றுள்ளது. கி. பி. 907லிருந்து கி.பி. 953 வரை சோழ நாட்டை ஆட்சி செய்த முதலாம் பராந்தக சோழன் காலத்திலேயே சிறுகுளத்தூரில் ஒரு அழகான சிவாலயமும், அவன் காலத்து கல்வெட்டுச் சாசனங்களும் இருப்பதற்கு ஒரு முக்கிய காரணம் உண்டு.

பராந்தக சோழனின் படைத்தளபதிகளில் ஒருவரான மாறன் பரமேஸ்வரன் என்பவர் பொய்யிற் கூற்றத்து இந்த சிறுகுளத்தூரைச் சார்ந்தவர் என்பதுதான். சிறு குளத்தூருடையான் மாறன் பரமேஸ்வரனின் வீர தீர செயல்களுக்காக பராந்தக சோழன் அவருக்கு செம்பியன் சோழிய வரையன் என்ற பட்டத்தை அளித்து கௌரவித்தான். இந்த மாவீரனின் சாதனைகள் மற்றும் அவர் அளித்த கொடைகள் பற்றிய குறிப்புகள் சென்னை - திருவொற்றியூர் சிவாலயத்தில் உள்ள பராந்தக சோழனின் 34ம் ஆட்சியாண்டு கல்வெட்டு சாசனங்களில் குறிக்கப்பெற்றுள்ளன.

மாறன் பரமேஸ்வரன் என்ற இந்த போர்ப்படைத் தளபதி சாளுக்கிய மன்னன் இரண்டாம் பீமனைப் போரில் தோற்கச் செய்து அவனுடைய சீட்டிலி நாடு, நெல்லூர் நாடு ஆகியவற்றை வென்று பெருஞ்செல்வங்களை கைப்பற்றினான் என்பதைத் திருவொற்றியூர் சாசனம் குறிப்பிடுகின்றது. வெற்றிக் களிப்புடன் ஆந்திர நாட்டிலிருந்து தஞ்சைக்கு அத்தளபதி தன் படையுடன் திரும்பியபோது திருவொற்றியூர் கோயிலுக்கு வந்து அங்கு அருள்பாலிக்கும் திருவொற்றியூர் மகாதேவரை வழிபட்டதோடு அவர் முன்பு தன் பெயரில் ஒரு நந்தா விளக்கு எரிப்பதற்காக 96 சாவா மூவா ஆடுகளையும் வழங்கினான் என்றும் அச்சாசனம் குறிக்கின்றது.

ஒரு போர்ப்படைத் தளபதியை தந்த பெருமையுடைய சிறுகுளத்தூர் என்னும் தற்காலத்திய சங்கரநாதர் குடிக்காட்டில் திகழும் பழம்பெருமையுடைய சிவாலயம் மீண்டும் புதுப்பொலிவு பெறும் என்பதில் ஐயமில்லை. சிறுகுளத்தூர் சிற்றூராகத் திகழ்ந்தாலும் வரலாற்றுப் பெருமைகளாலும், சங்கரநாதர் திருக்கோயிலின் சிறப்புகளாலும் அது பேரூர்தான்.


அருள்மிகு முத்துப்பெரமையனார் திருக்கோவில்
















நன்றி : முனைவர் குடவாயில் பாலசுப்ரமணியன்