வியாழன், 30 மார்ச், 2023

கடம்பன்குடி அம்மன் / சோழகர் வரலாறு



சோற்றுபாறை, சொக்கப்பட்டியிலிருந்து, தஞ்சை பகுதி வந்து சோழகர் பங்களிகள் செங்கிபட்டி அருகேயுள்ள ஊரில் குடியேறி அந்த ஊருக்கு சோழகம்பட்டி என்று பெயர் தந்து, மற்றொரு சோழகர் பங்காளிகள் பூதலூர் அருகேயுள்ள சோழகம் பட்டியிலும் கோட்டைகட்டி வாழ்ந்திருக்கிறார்கள். அங்குள்ள சுற்றுப்புற கிராமங்களின் காவல் பொறுப்பு ஏற்றுள்ளனர். காவல் பொறுப்பில் அண்ணணைவிட தம்பிக்கு செல்வாக்கு ஏற்பட்டதால் அண்ணண் தம்பியை கொலை செய்ய முய்ற்சிசெய்கிறார். தம்பி அங்கிருந்து தப்பி இன்று அன்பதுமேல்நகரம் என அழைக்கப்படும் ஊரில் தஞ்சமடைகிறார். 

அன்பை நாட்டாரின் ஓரே மகளை மணந்து கடம்பன்சோழன் பெயரில் இன்றுவழங்கும் கடம்பன்குடியை உருவாக்கி 150 வேலி நிலத்துடன் வாழ்ந்து வரும்போது தம்பியில்லாததால் சோழகம்பட்டிமீது தொண்டராயன்பாடி கோட்டையிலிருந்து படையெடுத்து வந்தவர்களால் கோட்டை அழிவுபெறுகிறது. தம்பி சிறப்புற்று வாழ்வதை அறிந்து அண்ணன் தம்பியிடம் அடைக்கலமாகிறான். 

தம்பி அண்ணனை ஏற்று, ஒரு பசுமாட்டில் முதுகில் பொதியை சுமத்தி அந்த மாடு காலையில் புறப்பட்டு மாலையில் வீடு திரும்பும்வரை எந்தபகுதிவரை மேய்கிறதோ அந்நிலங்களை தருவதாக கூறி அதன்படிகிட்டதட்ட நாற்பது வேலிகளை அண்ணணுக்கு அளிப்பதுடன் அரண்மணை போல வீட்டைகட்டித்தருகிறான். தம்பிக்கு இரண்டு ஆண்வாரிசு. ஒருபிள்ளை தாய்வீட்டு வாரிசாகவைத்துவிட்டு ஒருமகனுடன் கடம்பன்குடியில் வாழ்ந்து வந்தான். 

அண்ணணுக்கு நான்கு பிள்ளைகள், அண்ணண் இங்கு வந்தும் ஒருபிள்ளையை கொன்றுவிட்டால் மொத்த சொத்தும் கைகொள்ள எத்தனித்தான். இது பங்காளி பகையாகவே பல நூற்றாண்டு இருந்தது. இன்றைய நூற்றாண்டில் நடைபெறும் உள்ளாச்சி தேர்தல் அதை வளர்த்து கொண்டு வந்தது. சில வருடங்களாக படித்தவர்கள் பெருகியதால், பகை சுருங்கி ஒற்றுமையாக வாழ்ந்து வருகிறோம். நான் தம்பி வகையறா. ஊரில் அனைவரும் சோழகர்கள். வீட்டுமாப்பிள்ளையாக, வந்த மழவராயர், நாட்டார், கன்டியர் இருகிறார்கள் என்று என். எம். சோழக்கோ என்ற மதி சோழகர் கூறுகிறார்.

கடம்பன்குடி அண்ணா காமாட்சி அம்மன் வரலாறு:



நடுக்காவேரி கிராமத்தின் குடமுருட்டி ஆற்றங்கரயில் வீற்றிருக்கும் பிரம்ம ஐய்யனார் கோவிலை கடந்து அதன் வழியே காவிரியாற்றில் 12கம்மா என்றழைக்கப்படும் இடத்தில் சிப்பிக்குல் முத்து போல் ஆபரண பெட்டிக்குல் நாகத்தின் பாதுகாப்பில் கண்ணை பறிக்கும் ஒளியாய் நீரில் மிதந்தவண்ணம் பிறர் கண் படும் படியாக காட்சியளித்து எங்கள் முன்னோரிடம் கண்டெடுத்த முத்தாக கிடைத்தவள் தான் கடம்பன்குடி அருள்மிகு அண்ணகாமாட்சி அம்மன்.


எங்களின் முன்னோர்களுடன் நடுக்காவேரி கிராமத்தைச் சார்ந்தவர்களும் இருந்துள்ளனர் அப்போது ஒவ்வொருவரும் கண்டெடுத்த முத்தான அம்மனை தனக்கு வேண்டும் என்று கேட்க அவர்களுக்குள் சலசலப்பை ஏற்படுத்த சுதாரித்துக் கொண்ட எங்களுடைய முன்னோர்கள் இது யாருக்கு சொந்தம் மென்று உடுக்கையடித்து கேட்களாம் என சொல்ல மற்றவர்களும் ஏற்றனராம்.உடுக்கை அடித்ததும் தான் அம்மன் எனவும் தான் இருக்கபோகும் இடத்திற்கு செல்லவே இங்கே வந்ததாகவும் கூறி அருள்வாக்கை தொடங்கினாள்.

சப்பாத்தி கலி நிறைந்த கடழிச்ச கடம்பன்குடியில் (கடம்பங்குடி, கடமன்குடி) பணை மரத்தின் அடியில் எனக்கு ஆலையம் (கோவில்) நிறுவி என்னை அங்கேயே தங்கவைக்க வேண்டுமென கூற’” அம்மனை அவர்கள் அம்மன் உத்தரவு படி கூறினார்கள் என்று காலம் தொட்டு எங்களுக்கு எங்களின் முன்னோர்கள் கூறிய வரலாறு ஆகும். நான் அறிந்த வகையில் எழுதியுள்ளேன்.

அப்படி வந்த எங்கள் காமாட்சி அம்மன் பாலநூற்றாண்டு காலமாக கடம்பன்குடி மக்களின் காவல் தெய்வமாக விளங்கி இன்றளவும் கோவிலின் பல்வேறு கட்டிடங்கள் மாறிய நிலையிலும் செவ்விதழ்வாய் மலர்ந்து ஐம்பொன் மேனியாள் எங்களையெல்லாம் காத்து காட்சியளித்து வருகிறாள் அண்ணகாமு காமாட்சி அம்மன்.

கோவிலின் எதிரே உள்ள குலத்தில் நீராடி வீற்றிருக்கும் செந்தாமரையின் அழகையும் தாண்டி தாமரையை தோற்கடிக்கும் மேனியாய் குழந்தையின் உறுவாய் காட்சிளிப்பாள். இவளை காண வரும் பக்தர்கள் கூட்டம் குறைந்த பாடில்லை அவர்களுக்கு காட்சியளிக்க மறுப்பதுமில்லை.

எங்களின் சிறு கிராம மக்களின் சிறப்பை சுற்றியுள்ள கிராமம் மான நடுக்காவேரி, குழிமாத்தூர், அந்திளி, அம்பதுமேல்நகரம், அரசகுடி, அள்ளூர், தென்பெரம்பூர் மற்றும் வெள்ளாம்பெரம்பூர் ஆகிய கிராமங்கள் போற்ற எங்களுக்கு துணையாய் நின்றவள் எங்கள் கடம்பன்குடி அண்ண காமாட்சி அம்மன் தான். இங்கே உள்ள மக்கள் கல்வி, செல்வம், வீரம் மற்றும் அனைத்து துறைகளிலும் முதன்மையாக விளங்கவும். குடும்ப வாரிசுகள் வழங்கவும் அம்மன் தவறியதில்லை.

தனது குழந்தையின் கனவில் வருவாள், கோவில் புறத்தில் குழந்தையாக வருவாள். இரவில் ஊரைக்காக்கவும் வருவாள் காமாட்சி. தனது மக்களை கொடிய காலத்திலும் காத்து நிற்பவள் கடம்பன்குடி அண்ண காமாட்சி அம்மன் தான்.

தை திருநாளில் இவள் கோவிலில் பொங்கல் வைத்த பிறகே இவளின் குழந்தைகளின் இல்லங்களில் பொங்கல் வைக்க வேண்டும், அன்றைய தினம் அனைவரும் அம்மனுக்கு அர்ச்சனை செய்து வழிபடுவார்கள். அடுத்த நாள் மாட்டுக்கு பொங்கல் ஊட்டிய பிறகு அம்மனை வழிபட்டு பின் இல்லம் செல்வார்கள். முதல் மாடும் இங்கு விட்ட பின்பு தான் மனைக்கட்டு வாரியாக மாடலை அவிழ்த்து விடுவார்கள். இவளுக்காக வேண்டிவிடப்பட்ட காளைகள் ஏராளம்.

மாசி மாதத்தில் வரும் மகாசிவராத்திரி விழா வெகு விமரிசையாக நடைபெறும். அன்று நள்ளிரவு காவிரியில் அழங்கரித்து நாக கிரகமாக பக்தர்கள் இல்லம் தேடிவந்து அருள்பாலிப்பாள். அடுத்த நாள் நன்றி கடனாக தனது வாரிசுகளுக்கு அம்மன் கோவில் வளாகத்தில் மொட்டை அடிப்பார்கள்.

பங்குனி மாதத்தில் வீரசிங்கம்பேட்டை மாரியம்மன் கோவிலின் பூச்செறிதல் விழாவிற்கு இவளின் சன்னதியிலிருந்து தான் புறப்படும்.

சித்திரை மாத தமிழ் வருடப்பிறப்பு அன்று பஞ்சாயத்தார்கள் முன்னிலையில் அம்மனை வணங்கி அந்த வருடத்திற்கான பஞ்சாங்கம் பார்க்கப்படும்.

ஆடி மாதத்தில் ஆடி விளக்கு பூசை சிறப்பாக நடைபெறும். கார்த்திகை மாத சோமவர பூசைகள் நடைபெறும். கார்த்திகை மாதத்தில் ஐயப்பன் பக்தர்கள் அம்மனை வழிபட்டு கோவிலில் தங்கி கொள்வார்கள். மார்கழி மாதத்தில் கோவிலில் பக்தி பாடல்கள் ஒலித்துகொண்டே இருக்கும்.


கோவில் பூசாரியாக காத்துப்பிள்ளை அவர்கள் இருந்தார்கள்,அவரை தொடர்ந்து காமாட்சிப்பிள்ளை,பாலா பிள்ளை மற்றும் சந்தோஷ் காமாட்சி என தொடர்ந்து வாரிசுகள் அம்மனுக்கு தினம் தினம் பூசைகள் செய்து வருகிறார்கள்.இவர்கள் தான் மகாசிவராத்திரி தினம் அன்று காமாட்சி அம்மன் கரகத்தை சுமந்து வருவார்கள்.

மாமன்னன் இராஜராஜன்சோழன் நிர்வாகம் போன்று கடம்பன்குடி கிராமத்திலும் தொன்று தொட்டு நடைபெறும் முறைகள் நம்மை வியக்க செய்யும். ஆம், கடம்பன்குடி கிராமத்தில் வடக்கு தெரு ,நடுத்தெரு, கீழத்தெரு, மந்தைத் தெரு, தெற்கு தெரு ஆகிய தெருக்களில் இந்து கள்ளர் பிரிவினர்களான சோழகர், நாட்டார், மழவராயர், கண்டியர், காங்கேயர் மற்றும் வாண்டையார் என்கிற பட்டைபெயர்களுடன் வாழும் கோவில் நிர்வாகமானது தலைகட்டுகளின் படியாக ஏழு வயராக்களாக பிரித்து அதில் வயராக்களில் ஒருவர் வீதம் மொத்தம் ஏழு பஞ்சாயத்து தலைவர்களை தேர்தெடுத்து அவர்களிடம் கோவில் நிர்வாகம் (கிராம நிர்வாகம்) ஒப்படைக்கப் படுகிறது.

கோவிலுக்கு சொந்தமான 2 ஏக்கர் நிலம், 2 மா குலம், கிட்டத்தட்ட 1000 பணை மரங்கள், சமார் 4 புளியமரம் என இவைகளையும் குத்தகைக்கு விட்டும் , கிராம மக்களின் சுமார் 65 வேலி நிலங்களில் உள்ள புல்லையும், அந்த 65 வேலி வயலுக்கு பாதுகாப்பாக ஆடு, மாடுகளை பாதுகாக்க கொண்டி குத்தவையும் விட்டும்.


நெல் வியாபாரிகளிடம் மூட்டைக்கு 1 ரூபாய் வீதமும், வாத்து மற்றும் ஆடுமேய்க்கும் வெளியூர்காரர்களிடமும் உறியடி தொகை வசூலிக்கப்படும்.

வசூலிக்கப்படும் தொகைகள் மற்றும் வருடத்திற்கு ஒருமுறை விடப்படும் குத்தகை தொகை அனைத்தும் வங்கியில் வைப்பு நிதியாக வைக்கப்பட்டு மின்சாரக் கட்டணம், கோவில் பூசை மற்றும் அபிஷேக பொருட்கள் வாங்க பூசாரி சம்பளம்,வி ழாக்காலத்தின் போது ஏற்படும் செலவுகள் அனைத்தும் இந்த பஞ்சாயத்தார்கள் முறையாக செய்யவேண்டும்.

மகாசிவராத்திரி அன்று வரவு செலவுகள் பற்றிய விவரத்தை பொது மக்களுக்கு தெரிவிக்க வேண்டும். தற்போது இந்த வரவு செலவு விவரங்களை எழுத்து வடிவமாக பஞ்சாயத்தாரில் ஒருவரான க.இரா.பா. இளம் வழுதி சோழகர் அவர்கள் அறிமுகப்படுத்தினார். இன்று வரை இந்த முறை பயன்படுத்தப்படுகிறது.

மகாசிவராத்திரி மறுதினம் கோவில் உண்டியல் திறக்கப்பட்டு ஒரு வருடமாக சேகரித்த பக்தர்களின் காணிக்கைகள் கிராம வைப்பு நிதியில் சேர்க்கப்படுகிறது.

கோவில் குடமுழுக்கு விழா

1990 க்கு பிறகு இந்த ஆண்டான 2017 க்கு இடைப்பட்ட காலத்தில் கோவில் புதுப்பிக்கப்பட்டும், புதிய கட்டிடம் கோவில் கட்டியும் இரண்டு முறை அருள்மிகு கடம்பன்குடி காமாட்சி அம்மன் கோவிலுக்கும் சித்திவிநாயகர் கோவிலுக்கும் குடமுழுக்கு விழா மிகவும் விமரிசையாகவும் சிறப்பாகவும் நடைபெற்றது.

துள்ளிவரும் வேல்எனினும் 
துவளாது எதிர்கொள்ளும்
வீரமரபினர் கணக்கற்றோர் 
வாழுகின்ற கடம்பன்குடி
தன்னில் அருள்பாளிக்கும் 
அண்ண காமாட்சியே!!!என கட்டுரையில் தொடங்கிய இந்த கவிதை எனது தந்தை யார் காமாட்சி எழுதியது அதைத் தான் பயன்படுத்திக் கொண்டேன். வரலாறு என்றும் அழியாமல் போற்றி பாதுகாக்க அருள்மிகு காமாட்சியை வணங்குகிறேன்.

நான் கடம்பன்குடி நினைவில் வாழும் முப்பாட்டன் பேச்சிமுத்து சோழகரின் வாரிசான பாட்டன் பே.கந்து சோழகர் வாரிசு தாத்தா க. இராமையா சோழகர் மகனான புலவர் இரா.பாலசுப்பிரமணியன் சோழகர் - செல்வநாயகி அம்மாள் இவர்களுக்கு பிறந்த ஒன்பது பிள்ளைகளில் எட்டு ஆண் பிள்ளைகளில் ஐந்தாவது மகனான நான் பொறியாளர் ஆவேன். 

பொறியியலில் முதல் வகுப்பில் முதுநிலைப் பட்டம் பெற்று கல்லூரியில் உதவி பேராசிரியராகவும் துறைத்தலைவராகவும் இருந்தவன் நான். தற்போது அரசியல்வாதியாக தஞ்சை தெற்கு மாவட்ட கழக பொறியாளர் அணி துணை அமைப்பாளராக பணியாற்றுகிறேன். என்றும் அன்புடன். புலவர் மகன், பொறியாளர். கே.ஆர்.பி.சீனிவாசன் M.Tech., நடுத்தெரு,கடம்பன்குடி, அம்பதுமேல்நகரம் அஞ்சல், நடுக்காவேரி வழி, திருவையாறு தாலுக்கா,தஞ்சை மாவட்டம் 613101,