வியாழன், 29 மார்ச், 2018

பெரியம்பலகாரர் சே.சேவுகன் அம்பலக்காரர் விதித்த தீபாவளி தடை.


"தகுதி எனவொன்று நன்றே பகுதியால் 
பாற்பட்டு ஒழுகப் பெறின்" 

என்ற வள்ளுவரின் வாக்குக்கு ஏற்ப நடுவுநிலைமையோடு வாழ்ந்த மயில்ராயன்கோட்டை நாட்டின்  மாம்பட்டி பெரியம்பலகாரர் சே.சேவுகன் அம்பலக்காரர் விதித்த தீபாவளி தடை.

தமிழர் பண்டிகை பொங்கல் திருநாள் என்றாலும், தீபாவளி என்றால், குதூகலம், கொண்டாட்டத்திற்கு எல்லை இல்லை. சிறுவர் முதல் பெரியவர் வரை, ஒரு மாதத்திற்கு முன்பே, எதிர்பார்ப்புகள் ஏங்க வைக்கும். ஆனால், தீபாவளி கொண்டாடாத கிராமங்களும் உண்டு. அது சிவகங்கை மாவட்டம், மயில்ராயன்கோட்டை நாட்டின் எஸ்.மாம்பட்டி உள்ளிட்ட கிராமங்களில், 50 ஆண்டுகளாக தீபாவளி இல்லை. வறட்சி, பஞ்சம், கடன் சுமை ஆகியவை பதித்த கோரச்சுவடுகள் தான் இதற்கு காரணம். 

இதன் பின்னணி:

சிவகங்கை மாவட்டத்தில், "நாடு' என்ற கிராம அமைப்பு, மன்னர் காலத்தில் இருந்து நடைமுறையில் உள்ளது. அன்று நிர்வாக வசதிக்காக சிறு, சிறு நாடுகளாக பிரிக்கப்பட்டவை, இன்றளவும் மாறவில்லை. மயில்ராயன்கோட்டை நாட்டில் மாம்பட்டி, ஒப்பிலான்பட்டி, தும்பைப்பட்டி, எருமப்பட்டி என பல கிராமங்கள் உள்ளன. இதில் மாம்பட்டி முதன்மை கிராமம். இதன் "அம்பலக்காரர்' சேவுகன், விதித்த தீபாவளி தடை இன்றும் மீறப்படவில்லை.

வறுமை: கடும் வறட்சி நிலவிய நேரத்தில் விவசாயிகள், வட்டிக்கு கடன் வாங்கி தீபாவளியை கொண்டாடினர். வட்டியாக நெல் மூட்டை தரும் வழக்கம் இருந்தது. கடனை அடைக்க, கழனியில் கடுமையாக உழைத்தும் இயலாத நிலையே இருந்தது. பெரு விவசாயிகள் நெல், தானியங்களை அடகு வைத்து, நெல்லுக்கு நல்ல விலை வரும் போது, கடனை அடைத்தனர். காலப்போக்கில் ஏழை விவசாயிகள், தீபாவளியை மறந்தனர். வசதி படைத்தவர்கள் தீபாவளி கொண்டாடும் போது, எளியோர் ஏங்கித் தவிக்கும் சூழல் நிலவியது. கிராமத்திற்குள் நிலவிய இந்த வேற்றுமை உணர்வு, உறவுகளை பாதித்தது.


இதனால் கிராமத்தினரை ஒன்று கூட்டி, தீபாவளியை புறக்கணிப்பது என அறிவித்தார் சேவுகன் அம்பலம். அன்று முதல் இங்கு தீபாவளி இல்லை; வெளியூர்களில் வசிக்கும் இக்கிராமத்தினரும் தீபாவளி கொண்டாடுவதில்லை. அன்று வெளியூர் செல்வதைக்கூட தவிர்க்கின்றனர். புதுமண தம்பதியருக்கு "தலைத்தீபாவளி' சம்பிரதாயமும் இல்லை.
தடை விதித்த சேவுகன் அம்பலம் மகன் சபாபதி அம்பலம் கூறுகையில்,""இங்கு பெண் எடுத்தவர்கள், பெண் கொடுத்தவர்களும் ஊர் கட்டுப்பாட்டுக்கு மதிப்பளிக்கின்றனர். பல ஆண்டுகள் கடந்தும், கொடுத்த வாக்கை மதிக்கிறோம். தைப்பொங்கல் அன்று, புது ஆடை அணிந்து குதூகலமாக கொண்டாடுவோம்,'' என்றார்.